- என்று சுவாமி மலையில் நின்று பாடிக் கொண்டிருந்த அருணகிரிநாதரின் மனக்கண் முன் பழநியாண்டவன் தோன்றினான் போலிருக்கிறது, உடனே, ‘‘அதிசயம் அனேகமுற்ற பழநிமலை மீதுதித்த அழக! திருவேரகத்தின் முருகோனே...’’ - என்று அப்பாடலை நிறைவு செய்கிறார். இதைப் படிக்கும்பொழுது ‘பழநி அதிசயங்கள் என்னென்னவாக இருக்கலாம் என்ற கேள்வி எழுவது இயல்பே. அருணகிரிநாதர் காலத்திற்கு முன்னரும், பின்னரும், ஏன் இன்றுவரையிலும் பழநியில் உற்ற அநேக அதிசயங்கள்தான் என்னென்ன?
முருகப்பெருமானுக்குகந்த வாசஸ்தலங்கள் ஆறு. அவை: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்ச்சோலை. இந்த ஆறும் மலைத் தலங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. திருச்செந்தூரும் கடற்கரையில் அமைந்த மலைத்தலமாவே இருந்தது. சந்தன மலையாக இருந்த பாறைகளைக் குடைந்தே தற்போதைய செந்திலாண்டவர் கோயில் கட்டப்பட்டது. ‘‘சந்தனத்தின் பைம்பொழில் தண் செந்திலில் தங்கும் பெருமாளே’’ “உயர் சந்தனாடவியினும் உறை குறமகள்’’ என்பது அருணகிரியார் வாக்கு.
முருகனை உல்லாச, நிராகுல, யோக, இத, சல்லாப, விநோத மூர்த்தியாகக் காணும் அருணகிரியார், இவற்றுள் மூன்றாவதான யோக மூர்த்தியாகப் பழநி ஆண்டவனைக் குறிப்பிடுகிறார். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்களுள் மூன்றாவதாக விளங்கும் மணிபூரகத்திற்குரிய திருத்தலம்தான் பழநி என்பார் வாரியார் சுவாமிகள். தாழக்கோயில் எனப்படும் திருஆவினன் குடி என்பதே ஊரின் பெயர் என்றும், ‘பழநி’யை மலையின் பெயர் என்றும் கூறுவார் உண்டு.
பழங்காலத்தில் ஆவியர் குலத்தில் பிறந்த குறுநில மன்னர்கள் இவ்விடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். ஆவியருடைய நல்ல குடி ஆதலின் ஆவிநன்குடி என்று பெயர் வந்ததாகக் கருத்து உண்டு. ஆ(காமதேனு), இனன்(சூரியன்), கு(பூமி) டி(அக்னி) ஆகியோர் பூஜித்த தலமாதலால் ஆவினன்குடி என்று அழைக்கப்படுவதாகவும் கூறுவர். பழங்காலத்தில் பழநி மலையைப் ‘பொதினி’ என்றும் அழைத்தனர்.
ஆவினன்குடியைப் போலவே பொதினியாகிய பெருங்கல்லிலும் முருகன் இருந்து மக்களைக் காத்தான் என்பதற்குரிய குறிப்புகள் சங்ககால நூல்களில் உள்ளன என்கிறார் வகீச கலாநிதி கி.வா.ஜகன்னாதன் அவர்கள். அது மலைத் தொடரும் அன்று, சிறு குன்றும் அன்று என்பதால் ‘பெருங்கல்’ எனப்பட்டது. ஆவினன்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கடையேழு வள்ளல்களுள் ஒருவனான பேகனை, ‘பெருங்கல் நாடன் பேகன்’ என்று பாடுகிறார் புலவர் பெருஞ்சித்திரனார்.
அதன் உச்சியிலே அருந்திறற் கடவுள் நின்று காக்கிறது என்று கூறப்படுவதால் அது பழநியைக் குறிப்பதாகவே கொள்ளலாம். பழநி எனும் பெயரைக் கேட்டதுமே விபூதி, பஞ்சாமிர்தம், மலையின் மலைக்க வைக்கும் அழகு, வேலாண்டியாக ஞான தண்டத்துடன் மேற்கு திசை நோக்கிக் குடி கொண்டிருக்கும் பழநி ஆண்டவன், விநாயகருக்கும், முருகனுக்கும் இடையே நாரதர் நடத்தி வைத்த மாதுளங்கனித் திருவிளையாடல், நவபாஷாணத்தாலான ஒப்பற்ற முருகன் திருவுருவம் எல்லாம் நினைவுக்கு வரும். சித்தன் வாழ்வு, பொதினி, பழனாபுரி, சிவகிரி போன்ற பல பெயர்களை உடையது பழநி.
ஊர் பெயரும் மலையின் பெயரும் ஒன்றாக அமைந்த பல திருத்தலங்களுள் ஒன்று இது. பிற உதாரணங்கள்: சுவாமிமலை, திருச்செங்கோடு, சென்னிமலை, திருவண்ணாமலை. பழநியைச் சிறப்பித்து, ‘‘காசியின் மீறிய பழநி’’, ‘‘பிரகாசம் பழனாபுரி’’, “பதினாலுலகோர் புகழ் பழநி’’ என்றெல்லாம் பாடும் அ ருணகிரிநாதர், 97 பாடல்களை ‘திருப்பழநி வகுப்பு’ என்ற ஒரு தனி தொகுப்பையும் பாடியுள்ளார்.
திருமுருகனின் தந்தை இருப்பது கயிலைமலை, திரிபுரம் எரிக்க அவர் எடுத்தது மேருமலை, பார்வதியை அவருக்களித்தது இமயமலை, மாமன் ஆயரைக் காக்க குடையாய்ப் பிடித்தது கோவர்த்தனமலை, அவரது வேல் பிளந்தது கிரௌஞ்சமலை, விரும்பிச் சென்றமர்ந்தது பழநிமலை, தெய்வயானையைத் தந்தது பரங்குன்றம், வள்ளியை அளித்தது வள்ளிமலை - இவ்வாறு சுவைபடக் கூறுகிறார் புலவர். சே.த. ராமலிங்கம் பிள்ளையவர்கள். எனவேதான் ‘குறிஞ்சிக் கிழவன்’ என்று குவலயம் ஓதுகின்ற முருகப் பெருமானை ‘மலைக்கு நாயக’, ‘சிலோச்சிய’, ‘குறிஞ்சி மகிழ் அயிலா’ என்றெல்லாம் அருணகிரியார் விளிக்கிறார் போலும்!
‘‘கோமின் ஐயன் வில் என்பதும் குன்றமே
மாமன் வெண்குடை என்பதும் குன்றமே
நீ மண்ணும் தென் நிகேதனம் குன்றமே
பூமின் நின் அயில் போந்ததும் குன்றமே’’
-என்று பாடுகிறார் பாம்பன் சுவாமிகள். மலைகளின் அழகும் இயற்கை வளமும் நம்மை மலைக்க வைப்பவனவாக உள்ளன. மலைகளில் மூலிகை நிறைந்திருப்பதால் ஓய்வெடுக்கவும், நோய் தீரவும் ஆண்டாண்டு காலமாக மக்கள் மலைத்தலங்களுக்கு விரும்பிச் செல்கிறார்கள். இத்தகு பெருமையுடைய மலைகளை ‘கிரிராஜகுமாரிமகன்’ விரும்பித் தன் இருப்பிடமாகக் கொள்கிறான் என்பது சாலப் பொருத்தமே. அருணகிரிநாதருக்கு அதிசயங்கள் அநேகம் காட்டிக் கொடுத்த பழநி மலை எவ்வாறு தோன்றியது?
கயிலை மலையில் நாள்தோறும் சிவபெரு மானைக் குறித்துப் பூஜை செய்து வந்தார் அகத்திய முனிவர். அவரைத் தென்னாட்டிலுள்ள பொதிய மலைச்சாரலில் சென்று தவம் புரியுமாறு கூறினார் சிவபெருமான். அகத்தியரது தனி பூஜைக்காகத் தமது அம்சமாகிய சிவகிரி, சக்தியின் அம்சமாகிய சக்திகிரி ஆகிய இரு மலைகளை அளித்து, தமிழ் மொழி அறிவையும் வழங்கினார். இறைவனருளால் பந்து போல லேசாகத் தோன்றிய இரு மலைகளையும் சுமந்த வண்ணம் நடக்க ஆரம்பித்தார் அகத்திய முனிவர்.
கேதாரத்தை அடுத்த பூர்ச்சவனத்தை அடைந்த தும் அந்த இரு மலைகளும் கனக்கத் தொடங்கின. தொடர்ந்து அவற்றைச் சுமக்க முடியாததால், அந்த மலைகளை அங்கேயே விட்டு விட்டுச் சென்றார் அகத்தியர். நெடுந்தொலைவு சென்றபோது எதிரே உயர்ந்த தோற்றமும், பரந்த மார்பும், அசுர உருவமும் கொண்ட ஒருவன், ஒரு பெண்ணுடன் நடந்து வருவதைக் கண்டார். அவனது தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத வகையில் நெற்றியில் பளிச்சென்று திருநீறு துலங்கியது. தன்னைக் கண்டு வணங்கிய அவனிடம், ‘‘நீ யாரப்பா?’’ என்று அன்புடன் வினவினார் அகத்தியர்.
‘‘என் பெயர் இடும்பன்; இவள் என் மனைவி இடும்பி, நான் சூரபத்மாதியர்களுக்கு வில் லாசிரியனாக விளங்கியவன். முருகப் பெருமானது கருணைக்கோலம் கண்டு அவனது பக்தனாகி இப்புறம் வந்து விட்டேன். அடியேனுக்குத் தாங்கள் இடும் பணி எதுவாக இருந்தாலும் சிரமேற்கொண்டு செய்வேன்’’ என்று கூறி முனிவரை வணங்கினான் இடும்பன். பூர்ச்சவனத்தில் தாம் விட்டுவந்த மலைகளைச் சுமந்து கொண்டு வரும் பணியைச் செய்யக்கூடிய வல்லமை உடையவன் இவனே என்றெண்ணிய அகத்தியர், நடந்தவற்றை இடும்பனிடம் விவரித்தார்.
பூர்ச்சவனம் செல்லும் வழியை விளக்கி அத்துடன் ‘ஷடாக்ஷர’ மந்திரத்தையும் உபதேசித்து அவனை வழியனுப்பி வைத்தார். அகத்தியர் காட்டிய பாதையில், கந்தனைக் கருத்திலும் அவன் நாமத்தை நாவிலும் வைத்து மனைவியுடன் பூர்ச்சவனத்தை நோக்கிச் செல்லலானான் இடும்பன். காடும், நதியும், மலையும் கடந்து பூர்ச்சவனம் சென்றடைந்தபோது, இறைவன், இறைவியின் அருளே திரண்டாற்போல் நின்ற சிவகிரி-சக்திகிரி எனும் அப்புண்ணிய மலைகளைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தான் இடும்பன்.
அவற்றை மனமாற வணங்கி மனைவியுடன் வலம் வந்து ஷடாக்ஷர மந்திரத்தை ஜபித்த வண்ணம் இருந்தான். கந்தபிரானருளால் பூமி பிளக்க, அப்பிளவிலிருந்து எட்டு பாம்புகள் தோன்றின. வானத் திலிருந்து பிரம்ம தண்டு ஒன்றும் வந்தது. பாம்புகளைப் பக்கத்திற்கு நாலாகப் பிரித்து உறிபோல் ஆக்கி இரு மலைகளையும் உறியில் வைத்து, பிரம்ம தண்டத்தால் அவற்றை இணைத்தான் இடும்பன். மலைகளைத் தூக்கி, காவடி போல் தோளில் வைத்து நடக்கத் தொடங்கினான்.
கணவனுக்கு மலைகளின் பாரம் தெரியாமலிருக்க இடும்பியும் இடைவிடாது ஆறெழுத்து மந்திரத்தை ஜெபித்த வண்ணம் அவனைப் பின் தொடர்ந்தாள்.
வெகு தொலைவு சென்றபின், வழி இரண்டாகப் பிரிந்தது கண்டு சற்று மயங்கி நின்றான் இடும்பன். அடியார்க்கு நல்ல பெருமாளாகிய முருகன், காற்றிலும் கடுகிச் செல்லும் குதிரை மீதேறி வேட்டைக்குச் செல்லும் அரசகுமாரன் போல் வேடந்தாங்கி, இடும்பன் எதிரே வந்தான்.
இடும்பனுக்குச் சரியான பாதையைக் காட்டிக் கொடுத்தான், பின் மாயமாய் மறைந்தான். இதே போன்ற ஒரு நிகழ்ச்சி பிற்காலத்தில் அருணகிரிநாதர் வாழ்விலும் நடந்தது. வயலூரிலிருந்து விராலிமலை செல்லும் வழி தெரியாமல் நின்ற அவருக்கு, முருகப்பெருமான் வேடன் உருவில் வந்து வழிகாட்டிப் பின் மறைந்து போனான். இந்நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து,
‘‘வாதனை தவிர்த்த குருநாதனும், வெளிப்பட மகா
அடவியில் நிற்பதோர் சகாயக்காரனும்’’
திருவேளைக்காரன் வகுப்பு- என்றார் அவர். இடும்பனும், வந்தவன் முருகன் என்றுணராமல் இளவரசன் காட்டிய பாதையில் நடந்தான். தொடர்ந்து செல்லமுடியாதபடி, பசியும், பாரமும் அவனைத் தளர்த்தின. மலைகளை ஓரிடத்தில் இறக்கி வைத்துவிட்டு, மனைவி பறித்து வந்த கனிகளை உண்டு இளைப்பாறினான். இடும்பி, அந்த மலைச்சாரலின் அழகை அனுபவித்த வண்ணம் சற்று தொலைவு தனியாக நடந்து சென்றாள்.
உறங்கிக் கண் விழித்த இடும்பன், ‘முனிவர் காத்திரு ப்பாரே, காலதாமதம் ஆகிவிட்டதே’ என்று எண்ணி பரபரப்புடன் எழுந்தான். மலைகளைத் தூக்க முயன்றான். அவை முன்பைவிட அதிகமாக கனத்தன. மலைகளை உற்றுப் பார்த்த போது, சிவகிரி மேல் ஒரு புதிய குரா மரம் தெரிவதைக் கண்டான். அது மட்டுமா, அந்த மரத்தடியில்,
‘‘பிடர்பு இழந்த புன் குஞ்சியும், பெருகிய
கருணைக்கடல் அலம்பு கண்களும், கவின் ஒழுகிய
முகமும், வடிவு நூல் மார்பும், கை ஒண் கோலும்
வயங்க நெடிய கோவண உடையுடன்’’
ஒரு சிறுவன் மரத்தடியில் நிற்கக் கண்டான். (பாலசுப்ரமண்யக் கவிராயரின் பழநித் திருத்தல புராணம்) இடும்பன் சிறுவனை நோக்கி, ‘‘சிறுவ! நீ ஏன் இங்கு தனியாக நிற்கிறாய்? வழி தவறி வந்துவிட்டாயோ?’’ என்று கேட்டான். பதில் ஏதும் கூறாமல் புன்னகை பூத்த சிறுவன் மீது கோபம் கொண்டான் இடும்பன். அசுர குணம் தலை தூக்கியது. ‘‘சிறுவ! நீ இம்மலையை விட்டு இறங்கு; நான் ஒரு கொலைகாரன்; நினைவிருக்கட்டும்; என்று கர்ஜித்தான். ‘‘ஒரு பெரிய மலையைத் தூக்கும் வலிமை உடைய உனக்கு நான் ஒரு பாரமா?
முடியுமானால் என்னையும் சேர்த்துத் தூக்கு’’ என்று புன்முறுவலுடன் கூடிய சிறுவன் மேல் திடீரென்று பாய்ந்தான் இடும்பன். அடுத்த வினாடியே பெரிய அலறலுடன் கீழே விழுந்து மாண்டான். இடும்பனின் அலறலைக் கேட்டு ஓடி வந்தாள் இடும்பி. கணவனின் கோலம் கண்டு கதறி அழுதாள். அவள் கண்களுக்குக் குரா வடிவேலன் காட்சியளித்தான். தன் கணவன் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்தருளி அவனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்குமாறு வேண்டி நின்றாள். சற்று நேரத்தில் இடும்பனும் கண் விழித்து எழுந்தான்.
குராவடிக் குமரனிடம் பிழை பொறுத்தருளுமாறு வேண்டினான். இடும்பனை நோக்கி குகன் கூறினான்: ‘‘இம்மலை இங்கேயே இருக்கட்டும். இதில் நான் விரும்பி அமர்வேன். என்னுடன் நீயும் தங்கு வாயாக! என்னைக் காண வரும் பக்தர்களும் தங்கள் நிவேதனப் பொருட்களைக் காவடி கட்டி சுமந்து கொண்டு வந்து உன்னை தரிசித்தபின் என்னைக் காண வரவேண்டும்’’ என்று கூறி ஆசி கூறினான்.
இதற்குள் பிரம்ம தண்டமும் பாம்புகளும் அகத்தியரிடம் செய்தியைத் தெரிவிக்க, உடனே அங்கு வந்த அகத்தியர் முருகவேலை வணங்கி ‘‘நீ எழுந்தருள விருப்பமுடையதாயின் இம்மலை இங்கேயே இருக்கட்டும்’’ என்று கூறினார். இதையே அருணகிரிநாதர்,
‘‘பரகிரி உலாவு, செந்தி மலையினுடனே, இடும்பன்
பழநிதனிலே இருந்த குமரேசா’’
- என்று கதிர்காமத்தில் பாடுகிறார். பழநியில் சிவகிரியும் சக்திகிரியும் அடுத்தடுத்து இருந்தாலும் முருகப்பெருமான் சிவகிரி மீதமர்ந்து இடும்பனுக்கு அருள்புரிந்தமையால் அச்சிறப்புப் பெயரே மலைக்கு வழங்கலாயிற்று. ‘‘பழநிச் சிவகிரி மீதினில் வளர் பெருமாள்’’ (கலக்கயல் திருப்புகழ்); ‘‘அருள்சேர் பழநிச் சிவகிரி வாழ் ஐயா வருக வருகவே’’ (பழநிப் பிள்ளைத்தமிழ்); ‘‘பழநிச் சிவகிரிதனிலுறை கந்தப் பெருமாளே’’ (புடவிக்கணி திரு ப்புகழ்)
இவை தவிரவும் அத்வைத சாஸ்திரத்தின் சாரத்தைப் பிழிந்து கொடுக்கும் ‘குககீதை’ என்ற நூல், அகஸ்தியரின் வேண்டுகோளின்படி ‘குகனே பிக்ஷு வடிவில் வந்து இடும்பனுக்கு உபதேசித்தான்’ என்கிறது. இவ்வரிய உபதேசம் பெற்ற இடும்பன், ஷண்முகனைப் பரமேஸ்வர ரூபம் காட்டி அருள வேண்டிய போது, யுத்தகளத்தில் சூரனுக்கும் வீரவாகுவிற்கும் காட்டிய விசுவரூப தரிசனத்தை இடும்பனுக்கும் காட்டியருளினான் என்ற குறிப்பு அந்நூலில் வருகிறது.
இவ்வாறு இடும்பனைத் தடுத்தாட்கொண்ட குராவடி வேலவனையும், இடும்பனையும் பழநிமலைப் படிகளில் ஏறிச் செல் லும்போது காணலாம். பெரும்பான்மையான முருகன் கோயில்களில் தனி இடும்பன் சந்நதியைக் காண்கிறோம். பழநியில் இடும்பனுக்கு, கள்ளும் சுருட்டும் நைவேத்தியம் செய்வதாகக் கேள்விப்படுகிறோம். அசுரனாயிற்றே, அதனால்தான் போலிருக்கிறது!