செவ்வாய், 11 ஏப்ரல், 2017

மருதமலைப் படிவிழா-சில படங்கள்







                              ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

ஜீவ நாடி அதிசயம்-உண்மைச்சம்பவம்

முழுமையாக 100% முருகன் மீது நம்பிக்கை வைத்து ஜீவ நாடி கேட்க வருபவர்களுக்கு மிகப்பெரிய அதிசய மாற்றங்கள் நடந்து வருவதை அனுபவத்தில் பார்த்து வருகின்றோம். நாடி ஜோதிடம் என்றாலே ஏமாற்று வேலை என்பது பலரின் கசப்பான அனுபவம். ஆனால் ஜீவ நாடியை தாங்கள் பார்த்து சலித்துப் போன நாடி சோதிடத்தோடு ஒப்பிட்டு  தவறாக நினைக்காமல் முருகனே உரைக்கும் வாக்கு என்று நினைப்பவர்கள் மிக மிகக் குறைவுதான். கலியுகத்தில் இறைவன் உண்டு என்று ஏற்றுக் கொள்வதே அபூர்வமாகும் போது ஜீவ நாடியில் இறைவன் வாக்கா? நிச்சயம் இருக்கவே இருக்காது என்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். அப்படி அவ நம்பிக்கையோடு ஜீவ நாடி பார்க்க வருவது தேவையில்லாத கால விரையம். இன்னும் சிலர் அவ நம்பிக்கையோடு வந்து வாக்கு கேட்டுவிட்டு முருகப்பெருமான் உரைத்த வாக்குகள் பலிக்கத் துவங்கியவுடன் நம்பிக்கை கைவரப்பெறுகின்றார்கள். அப்படி ஒரு சம்பவத்தையே இப்போது நாம் பார்க்கப்போகின்றோம்.
ஒரு பெண்மணி ஜீவ நாடி கேட்க வந்து அமர்ந்தார். அவருக்குப் பின்வருமறு ஜீவ நாடியில் முருகப்பெருமான் அருள்வாக்கு உரைத்தார்.

ஜீவ நாடி: கட்டிடங்கள் பல கட்டிய மங்கை
பெண்: ஆம் சுவாமி
ஜீவ நாடி: கட்டிடக் குடக்கூலியாலே ஜீவனம்
பெண்: ஆம் சுவாமி. கட்டிட வாடகைதான் எனக்கு ஜீவனம்
ஜீவ நாடி: குடியிருக்கும் வீட்டில் ஒரு அம்மன் உண்டு
பெண்: ஆம் சுவாமி சமயபுரம் மாரியம்மன்.
ஜீவ நாடி: அந்த அம்மனின் பக்தை இன்னவள்
பெண்: உண்மை
ஜீவ நாடி: மகள் ஒருவள் உண்டு ஆனால் அன்னவளே இன்று எதிரி
பெண்: சத்யமான உண்மை சுவாமி
ஜீவ நாடி: மகளோடு சண்டை சொத்து பிரிவினை உண்டே
பெண்: ஏற்கனவே பிரித்துக் கொடுத்துவிட்டேன் சுவாமி
ஜீவ நாடி: குடியிருக்கும் வீட்டில் விவசாயம் செய்யும் அளவு தண்ணீர் உண்டு
பெண்: ஆம் சுவாமி ஏராளமான தண்ணீர் இருக்கின்றது. தேவைக்கு மேல்
ஜீவ நாடி: ஆனால் குடக்கூலி கட்டிடத்தில் தண்ணீர் பஞ்சம்
பெண்: ஆம் சுவாமி
ஜீவ நாடி: புதிய கிணறு அமைக்க (போர்வெல்) சித்தமா?
பெண்: அதற்கு உத்தரவு கேட்கதான் வந்துள்ளேன் சுவாமி
ஜீவ நாடி: வாகனங்கள் நிறுத்துமிடம் சதுரம், சதுரத்தின் மையத்தில் கிழக்கும் மேற்கும் நீர் உண்டு
பெண்: 100% சரி அங்குதான் நீரோட்டம் பார்ப்பவர்கள் அச்சு அடித்துள்ளார்கள் சுவாமி அங்கு போர் போடலாமா?
ஜீவ நாடி: போடலாம்…ஆனால் நேரம் சரியில்லை…தண்ணீர் வரும்…தடையும் வரும்…
பெண்: நான் என்ன செய்வது சுவாமி
ஜீவ நாடி: வழக்கமாக நீ வழிபடும் அம்மனிடம் பூ கேட்பாயே இதற்கு கேட்கவில்லையா?
பெண்: இல்லை சுவாமி
ஜீவ நாடி: சரி அந்த அம்மன் சொல்கின்றார் உத்தரவு இல்லை என்று. எனவே அந்த அம்மனை வணங்கி பூ உத்தரவு கேட்டு கிணறு அமைத்துக் கொள்…
பெண்: சரி
ஜீவ நாடி: உத்தரவு இல்லை என்பதால் தடை வரும் காவல்துறை மூலம் வரலாம், தண்ணீர் ஆகாமல் போகலாம் அப்படியே ஆனாலும் கிணறு அமைக்க வரும் வண்டி பழுதாகலாம்…மொத்தத்தில் சிக்கல் உண்டு…கவனம்.
பெண்: சரி
ஜீவ நாடி: உடல் நிலையும் சரியில்லையே…இதயத்தில் மூன்று இடத்தில் அடைப்பு உண்டு…
பெண்: 100% உண்மை சுவாமி
ஜீவ நாடி: மருந்து எடு ஆயுள் உண்டு பயமில்லை ஆனால் கீறல் வேண்டாம்
பெண்: ஆம் சுவாமி..மருந்து எடுத்து வருகின்றேன்…மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள் எனக்கு விருப்பம் இல்லை..
ஜீவ நாடி: மிகவும் நல்லது கீறல் செய்தால் உனக்கு ஆயுள் பங்கம் வரலாம் எனவே வேண்டாம்…
பெண்: அப்படித்தான் மருத்துவர்களும் சொல்கின்றார்கள் சுவாமி. எப்படியோ எனக்கு நீயே துணை இருக்க வேண்டும்.
ஜீவ நாடி: நிச்சயம் ஆசிர்வாதம்…

இப்படி முருகப்பெருமான் ஜீவ நாடியிலும் அந்த பெண்மணியும் உரையாடல் செய்தார்கள். அதன் பின்பு அந்தப் பெண்மணி விடைபெற்றார். சில நாட்கள் கழித்து தான் வாடகைக்கு விட்டிருக்கும் கட்டிடத்தில் தண்னீர் பஞ்சம் அதிகரிக்கவே உடன் இருப்பவர்கள் அவசரப்படுத்தவும் அம்மனிடம் உத்தரவு கேட்காமலும் முருகப்பெருமான் உரைத்ததை மறந்தும் போர் போட ஆயத்தம் ஆனார் அந்தப் பெண்மணி. ஒரு வார காலம் முயற்சி செய்தும் போர் வண்டி வரவே இல்லை. ஒரு வழியாய் பெரும் முயற்சியின் பின் வண்டி வந்து சேர்ந்தது. சரி போர் போட்டுவிடலாம் என்று முயற்சி செய்கையில் காவல்துறை மூலம் சில தடைகள் வந்தது. அந்த தடைகளையும் முறியடித்து பின் போர் போட ஆரம்பம் செய்யப்பட்டது. நல்ல தண்னீரும் வந்தது. மிகுந்த மகிழ்ச்சியில்  இன்னும் ஆழம் போடலாம் என்று வண்டிக்காரர் சொல்ல மீண்டும் ஆழமாகத் துளையிட துளையிட வந்த தண்னீர் நான்கு கட்டிடம் தள்ளி இருக்கும் பக்கத்து கட்டிடத்தின் போர்வெல்லில் நீர் சென்றுவிட்டது. அதிர்ச்சியடைந்த பெண்மணி வண்டிக்காரரிடம் சண்டையிட்டார். ஏதோ சமாளித்த வண்டிக்காரர் ஒரு லட்சம் ரொக்கம் பெற்றுக் கொண்டு மேற்கொண்டு மோட்டார் போட்டால் ஒரு இஞ்ச் தண்ணீர் நிச்சயம் வரும் என்றார். அதையும் நம்பி மேற்கொண்டு சில லட்சம் செலவு செய்து மோட்டர் போட்டு சுவிட்சைப் போட தண்ணீர் வரவில்லை வெறும் காற்றுதான் வந்தது. முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்தபடி அப்படியே 100% பலித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி கண்ணீர் விட்டு அழுதார். இது போல் முதன் முதலாக ஜீவ நாடி கேட்க வருபவர்கள் பெரும்பாலும் ஒரு சாதாரண நிலையிலேயே அனுகுகின்றார்கள். முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்து அது அனைத்தும் தனது வாழ் நாளில் நடக்கும் போதுதான் உண்மையை உணர்கின்றார்கள். பின்பு நிரந்தர பக்தர்களாக மாறி ஜீவ நாடியில் உத்தரவு கேட்காமல் எதையும் செய்வதில்லை எனும் நிலைக்கு வந்து இறுதியில் முருக பக்தர்களாகவே மாறிவிடுகின்றார்கள். அந்த அளவு முருகப்பெருமானும் சித்தர்களும் கடந்த இருபது ஆண்டுகளாக பல்வேறு திருவிளையாடல்களை நடத்தி வருகின்றார்கள் என்பது 100% சத்தியமாகும்.
                                                                  

          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள்

முருகப்பெருமான் ஜீவ நாடி மூலம் நடத்தி வரும் அதிசயங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். அதில் கோவையில் இருந்து வரும் அடியவர் பண்பாளர், முருக பக்தர் திரு.பாலச்சந்திரன் என்பவருக்கு முருகப்பெருமான் மருதமலையின் பெருமைகளை எடுத்துரைத்து மகிமைமிக்க மருதமலைக்கு ஒரு படி விழாவை ஏற்பாடு செய் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு பற்றி கோவை கௌமார மடாலயம் சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களிடம் கூற மகிச்சியடைந்த சுவாமிகள் கடந்த பல ஆண்டுகளாக மருதமலை படித்திருவிழா நடக்காமல் நின்றுவிட்டது என்றும் அன்றைய நாட்களில் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் பாடல்களைப் பாடிக்கொண்டே மருதமலைப் படிகளில் ஏற மற்ற அடியவர்கள் படி பூஜை செய்து கொண்டே மருதமலை ஏறி மருதாசல மூர்த்தியைக் கண்டு வணங்கி மகிழ்வார்கள் என்றும் அப்படி பல காலமாக நின்று போன இந்த பூஜையை செய்ய வந்துள்ள உத்தரவு மிகவும் அருள் நிறைந்தது என்றும், ஒவ்வொரு வருடமும் தை மாதம் 1ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று இந்த பூஜை நடந்ததால் நீங்களும் அப்படியே செய்யலாம் என்றும் ஒரு நல்ல ஆலோசனை வழங்கி ஆசி கூறினார்கள்.
கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வாய்ந்தது மருதமலை முருகன் கோவில். அறு படை வீடுகளைக் கொண்டு குன்று தோறும் குமரன் எழுந்தருளி இருக்கும் இந்த மருதமலை 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றி வணங்கப்படுகின்றதுஎழில் கொஞ்சும் இயற்கையான சூழலில் அமைந்திருக்கும் மருதமலை, அதன் மூன்று புறங்களிலும் மலை அரண்களால் சூழப்பட்டு உள்ளது. கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலைகளின் இயற்கை அமைப்போடு சேர்த்து பார்க்கும் போது மயில் தோகை விரித்தாற்போல் காட்சி அளிக்கிறது. இதனால் முருகன் மயில் மீது அமர்ந்த தோற்றம் தெரிகின்றது. மருத மரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என வழங்கப்படுகிறது. மேலும் மருதமால்வரை, மருதவரை, மருதவெற்பு, மருதக்குன்று, மருதலோங்கல், கமற்பிறங்கு, மருதாச்சலம், வேள்வரை என்றெல்லாம் பேரூர் புராணத்தில் கூறப்படுகிறதுஎனவே மருதமரங்கள் அடர்ந்த மலை என்ற பொருளில் மருதாச்சலம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த மலைச் சாரலில் 3 கற்கள் மாறுபட்ட நிறத்துடன் இருப்பதை காணலாம். அதாவது இந்த மூன்று கற்களும் சிலையாகி போன திருடர்கள் என்பார்கள். ஒரு முறை முருகன் அடியார்கள் கோவில் திருப்பணி நடந்த போது பொன், பொருளை உண்டியலில் போட்டனர்இதைக் கண்ட 3 திருடர்கள் ஒரு நாள் இரவில் வந்து உண்டியலை உடைத்து பொன்னையும், பொருளையும் திருடி மலைச்சரிவு வழியாக சென்றனர் அப்போது முருகப் பெருமான் குதிரைவீரனைப் போல் சென்று அவர்களைப் பிடித்து 'நீங்கள் கற்சிலைகளாக மாறுவீர்' என சபித்தாராம். இதனால் அந்த திருடர்கள் 3 பேரும் கற்சிலைகளாக நிற்பதாக செவிவழிச் செய்தி கூறுகிறது.   அருணகிரிநாத சுவாமிகள் பாடிய கந்தர் அலங்காரம், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடிய தமிழ் அலங்காரம், வேல் அலங்காரம் போல் மருத மலை மீது நமது சிரவையாதீனம் இரண்டாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள் மருதமலை அலங்காரம் எனும் பாடல்களைப் பாடி உள்ளார்கள்.
அடுத்து முருகப்பெருமானின் இன்னுமொரு உத்தரவும் வந்தது அதுதான் மருதமலை அலங்காரம் எனும் நூல் பாராயணம். சிரவையாதீனம் இரண்டாம் குருமகா சந்நிதானமாக இருந்து அருளாட்சி செய்தவர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள். சுமார் 15000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கொங்கு நாட்டுக் கச்சியப்பர் எனும் பெருமையைப் பெற்றவர். பல்வேறு பாடல்களைப் பாடிய தவத்திரு.கந்தசாமி சுவாமிகள் மருதமலை மீது 100 பாடல்களைப் பாடினார்கள். அந்த நூலே மருதமலை அலங்காரம் என்பதாகும். எல்லோரும் காப்புச் செய்யுளில் கடவுளை வைத்துப் பாடி நூல் இயற்றுவார்கள் ஆனால் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் தனது ஞானதேசிகர் தவத்திரு இராமானந்த சுவாமிகளைக் காப்பாக வைத்து ”மருதவரைக் குகன்தன் அலங்காரம் நல்கும் இராமானந்தன் பொன் அடித்துணையே” என்று இந்த மருதமலை அலங்கார நூலைப் பாடி இருப்பது குருவருள் மீது சுவாமிகள் கொண்ட கௌமார நெறியைப் பறைசாற்றுகின்றது எனலாம். அந்த மருதமலை அலங்காரத்தில் இருந்து ஒரு இரண்டு பாடல்களை மட்டும் இங்கு பார்ப்போம்.
பாடல்:
பகடேறி வந்ததட் டுங்கொடுங் கூற்றனும் பாவையர்த
மகடே றிடப்புரி மாரனும் வேதனு மான்றதையிற்
சகடே றிடுமரு தாசலன் றாளன்றிச் சாற்றுமண்ட
முகடேறி னாலும் விடார்மன மேசற்றுண் முன்னுதியே
விளக்கம்: எருமை வாகனத்தின் மீது வந்து அதட்டும் கொடும் கூற்றனாகிய எமதர்மனும்(இறப்பு), காமத்தை உருவாக்கும் மன்மதனும் (இருப்பு), படைக்கும் பிரம்மாவும்(பிறப்பு) விண்ணின் முகடு ஏறினாலும் விடமாட்டார்கள் மனமே ஆதலால் தை மாதத்தில் தேரில் ஏறி வரும் மருதாசலன் திருத்தாள்களே இந்த மூன்றையும் வெல்லும் சக்தியைத் தரும் ஆதலால் மருதாசலன் திருப்பாதங்களை மனதில் இருத்துவாயாக.
பாடல்:
திருவளிக் கும்பெருங் கல்வியு நல்கிடுஞ் சேணுலகார்
தருவளிக் கும்பத ம்யாவையு மீந்திடுந் தன்னனைய
வுருவளிக் குந்தொண்ட ரெண்ணிய யாவு முடனளிக்கு
மருவளிக் கும்பொழில் சூழ்மரு தாசலன் வண்பதமே. 
விளக்கம்:
செல்வம் அளிக்கும், பெரும் கல்வியைத் தரும், இந்திரலோகத்தில் உள்ள கற்பகத்தரு அளிக்கும் பதங்கள் எல்லாவற்றையும் ஈந்திடும், முருகப்பெருமான் போன்றே உரு அளிக்கும், தொண்டர்கள் எண்ணிய யாவும் உடனே அளிக்கும் இயற்கை எழில் சூழ்ந்து இருக்கும் மருதாசலனின் திருத்தாள்களே.
    இந்த திருவளிக்கும் எனும் பாடல் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்டதாகும். அப்போதே தீர்க்க தரிசனமாக கோவை எப்படி இருக்கும் என்று பாடியிருப்பது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். இன்று இந்த பாடலின்படி கோவை விளங்குவது குறிப்பிடத்தக்கது. தொழில், கல்விச்சாலைகள், பெரும் தனவந்தர்கள் என இன்றைய கோவை விளங்குகின்றது. முருக பக்தர்கள் அனைவரும் போற்றிப் பாராயணம் புரியவேண்டியது இந்த மருதமலை அலங்காரம் நூலாகும். நமது ஜீவ நாடியில் பலருக்கு இந்த நூலைப் பாராயணம் செய்யச் சொல்லி வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 101 வது பாடலாகிய நூற்பயனில் “திருவினை நல்கும் சற்குருவாகிய குமரேசன் நாள்தோறும் நடமாடும் மருதமலை மீது பாடப்பட்ட அலங்காரம் எனும் புகழ் மிக்க வளப்பம் மிகுந்த இப்பிரபந்தத்தில் உள்ள நூறு பாடல்களையும் ஓதும் ஊக்கம் உடைய அடியார்கள் மணம் வீசும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன்(பிறப்பு), இயமன்(இறப்பு), மன்மதன்(இருப்பு) ஆகிய மூவராலும் பற்றப்படமாட்டார்கள்.” என்று சொல்லப்பட்டுள்ளதை வைத்தே இந்த நூலின் பெருமையை உணரலாம். முருகப்பெருமானே மிகவும் விரும்பி ஜீவ நாடியில் இந்த நூலைப் பாராயணம் செய்து கொண்டே மலை மீது இருக்கும் என்னை வந்து தரிசியுங்கள் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்று சொல்லி இருப்பது பொற்குடத்திற்கு மாணிக்கப் பொட்டு வைத்தாற்போல இன்னும் சிறப்பாம்.
கோவில்களை நாடி இறைவனைத் தரிசிக்க நாம் படியேறித்தான் போக வேண்டும். நமது இறைதரிசனத்திற்கு உந்து கோளாய் இருப்பது படிக்கட்டுகளாகும். படியின் பெருமையை உணர திருமலை வேங்கடவா படியாய்க் கிடக்க அருள்புரிவாய் என்று குலசேகராழ்வார் வேண்டுதல் வைக்கின்றார். அடியார்கள், தேவர்கள், அரம்பையர்களாகிய தேவலோக மங்கைகள் போன்றோர் கோயில் வாசல் படியாய் இருப்பதாகவும் அவர்களுடன் தானும் படியாய்க் கிடந்து உன் பவழ வாய் காண்பேண் என்கின்றார். இதோ அந்தப் பாசுரம்
 ”செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
  நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
  அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
  படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே
 இந்த இரு கருத்துக்களையும் செவிமடுத்து ஆமோதித்த சிரவையாதீனம் நான்காம் சந்நிதானம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் கௌமார மடாலயம் சார்பாகவும் அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடமாகிய நமது பீடத்தின் சார்பாகவும் மருதமலைப்படி விழா ஜீவ நாடியில் வந்த வண்ணம் பங்குனி மாதம் 1ம் தேதி 14.3.2017 அன்று மிகவும் சிறப்பாக நடந்தது. இந்த விழாவில்,

சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் தவத்திரு.முத்துசிவராமசாமி அடிகளார் ஆகியோருடன் அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்த பீடம் முருக பக்தர்கள் அடியார்கள் மற்றும் தென்சேரிமலை தவத்திரு.மாரிமுத்து அடிகளார் மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியப்பெருமக்கள் ஆகியோர் சுமார் 500 பேர் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள். முருகப்பெருமான் ஜீவ நாடியில் உத்தரவு கொடுத்ததோடு மட்டுமில்லாமல் உடன் இருந்தே இந்த விழாவை நடத்திக் கொடுத்தது போன்ற உணர்வும் ஏராளமான திருவிளையாடல்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!