வியாழன், 23 ஜூலை, 2015

ஜீவ நாடி ரகசியம் - குரு பௌர்ணமி!




ஆடி மாதத்தில் வருகின்ற பௌர்ணமியை குரு பௌர்ணமி என்பர். அந்த வகையில் வருகின்ற 30.07.2015 அன்று வியாழன் இரவு முதல் 31.07.2015 வெள்ளி  இரவு வரை பௌர்ணமி இருக்கிறது. அதில் வியாழக்கிழைமை குருவிற்கு உகந்த தினமாதலால் பௌர்ணமியும் வியாழன் இரவு தங்குவதால் இந்த நாள் குருவை வழிபட உகந்த நாளாகிறது. உங்களுக்கு யாரெல்லாம் குருவாக இருக்கிறார்களோ அவர்களிடம் வஸ்திரம் கொடுத்து ஆசி வாங்கினால் இந்த ஆண்டு முழுதுமே குரு பகவானால் பல நல்ல செயல்கள் நடக்கும் என்கிறது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடி.


குரு பூர்ணிமா , ஆடி மாதத்தில் (ஜூ ன் - ஜூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.



மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதைஅருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.

சப்தரிஷிகள் என அழைக்கப்படும் ஏழு பேர் சிவனிடமிருந்து பெற்ற சில யோகப் பயிற்சிகளை 84 வருடங்கள் தொடர்ந்து செய்தனர். அந்த 84 வருடங்களும் சிவன் அவர்களை பார்க்கவில்லை,

அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவன் மனமிரங்கி, உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்ட தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியன்று தெற்கு நோக்கி அமர்ந்து, அவர்களுக்கு முறையான போதனைகளை வழங்கினார். சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால் அந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. சிவன் தெற்கு நோக்கி அமர்ந்ததால் சிவன் அன்று முதல் தக்ஷிணாமூர்த்தி என்றும் அறியப்பட்டார்.

ஆன்மீக சாதகர்கள் அனைவரும் அன்று தங்கள் குருவிற்கு குருபூஜை செய்து, அடுத்துவரும் 6 மாதங்களுக்கு ஆன்மீகப் பயிற்சிகள் தீவிரமாக செய்து வந்தால் அப்பயிற்சியின் பலன்கள் அடுத்த 6 மாதங்களில் பலனளிக்கக் துவங்கும்.கௌமாரப் பயணம் வாசகர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

புதன், 15 ஜூலை, 2015

ஓர் இந்துவின் வாழ்க்கை குருவை சந்தித்த பிறகு தான் பூரணமடைகிறது!



ஓர் இந்துவின் வாழ்க்கை குருவை சந்தித்த பிறகு தான் பூரணமடைகிறது. தான் யார்? தனது உண்மைத் தன்மை என்ன? போன்ற எதுவும் தெரியாத நிலையில், அறியாமையுடன், காலம் கொண்டு செல்கின்ற விதத்தில், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்கின்ற ஓர் இந்து, தான் நம்புகின்ற பூர்வஜென்மப் புண்ணிய வசத்தினால் தன் குருவைச் சந்திக்கிறான். 


அந்தச் சந்திப்பு இறையருளால் தான் நிகழ்கின்றது. குருவும் தானுமாக சந்திக்கின்ற அந்த நிகழ்வு அவனுக்கு வாழ்க்கையின் திருப்பமாக அமைகின்றது. இறைவனே தன் விருப்பத்தால் குருவாக அவதரித்துத் தன் படைப்பாகிய மனிதனைத் தன்னிடத்தில் சேர்க்கின்ற முயற்சியில் ஈடுபடுகின்றான். இது ஒன்றும் ஒரு சாதாரணமான செயல் அல்ல. ஒரு பூ மலர்வதைப் போல், ஒரு விதை முளைவிடுவதைப் போல், ஒரு குழந்தை பூமியில் ஜனிப்பதைப்போல் அற்புதமான ஓர் இணைவு இது.

இவ்வகையில் யாராயிருந்தாலும் ஒருவனுக்குக் குரு மிக மிக அவசியமாகின்றார். பிற மதத்தினரை விட ஓர் இந்துவிற்குத்தான் இந்தத் தேடல் எளிதில் வாய்க்கின்றது. குரு கிடைப்பதும் அவனது வாழ்க்கைப் போக்கில் தான் சுலபமாக அமைகின்றது. ஏனெனில் அவனது வாழ்க்கையே அந்தப் போக்கில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது.

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!




வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!

1. ஆறுமுகம்:ஈசானம், தத்புருஷம்,
வாமதேவம், அகோரம், சத்யோஜாதம்
என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
4. முருகன்: முருகு அழகு என்று பொருள்,
எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
5. குருபரன் : கு - அஞ்ஞான இருள்,
ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும்,
அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
6. காங்கேயன்:கங்கையின் மைந்தன்.
7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன்ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன்ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
10. சரவணபவன் : சரம் - நாணல்,
வனம் - காடு, பவன் - தோன்றியவன்,
நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்குமட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
12. சுரேஷன் :தேவர் தலைவன் சுரேசன்.
13. செவ்வேள் :செந்நிறமுடையவன்,
ஞானச் செம்மை உடையவன்.
14. சேந்தன் :செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்;சத்து - சிவம்,
சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
20. சுப்ரமணியன் :சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து,நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
21. வள்ளற்பெருமான் : முருகன்,
மண்ணுலகில் அவதரித்தவள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியாசக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மைநலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
22. ஆறுபடை வீடுடையோன்:
மூலாதாரம், சுவாதிஷ்டானம்,மணிபூரகம்,
அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
23. மயில்வாகனன் : மயில் - ஆணவம்,
யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
24. தமிழ் என்றால் முருகன்: முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்கமுடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பதுமுருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்துஎன்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.
இந்தவேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல
சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

புதன், 1 ஜூலை, 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 32 !

 சென்ற பதிவின் தொடர்ச்சி




இவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில்நடந்து, சுமார் 8 மணி நேர பயணத்தில்  அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம்.

அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம்.

மீண்டும் அடுத்த நாள் 16.4.2015 வியாழக்கிழைமை அன்று  சுமார் 2 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடைந்தோம். பின்பு தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைந்தோம்.

  இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை "பொங்காலைப்பாறை' என்று கூறுகின்றனர். கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது. இச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.

இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப்பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது. இச்சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியேதுன்பத்தைப் பொருள்படுத்தாது, காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி,
நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடைந்து அளவிலாத ஆனந்தம் அடைந்தோம் .

 அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை எங்களுக்கு ஏற்பட்டது.

படம்:3 பொதிகைமலை உச்சியில் உள்ள அகத்தியர் அருகில் நமது ஜீவ நாடி சுவடி

  இந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்பட்டு ஒருவிதமான பயம் கலந்த பக்தியை தந்தது

இப்படி ஆனந்த அனுபவத்துடன், நாங்கள்  கொண்டு சென்ற பூஜைப் பொருள்களால், குரு முனிவருக்கு அபிஷேக, ஆராதனை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்து. அகத்தியர் மீது விபூதி அபிஷேகம் செய்த பின்பு அந்த விபூதியை எடுத்து எங்கள் நெற்றியில் பூசுமாறு ஒருவர் கேட்க முருகா!!! அகத்தீசா என நான் உரக்கக் கூறி வந்திருந்த அனைவர் நெற்றியிலும்
அபிஷேக விபூதியைப் பூசி விட்டேன். மின்சார சக்தி தங்களது உடலில் பாய்ந்ததாக அனைவரும் ஆனந்தம் அடைந்தனர்.


பின்பு கூட்டு வழிபாடு நடைபெற்று அங்கேயே பொதிகை மலை உச்சியில் தென்றல் தவழ ஜீவ நாடி படிக்கப் பட்டது.திடீரன மழை அதிகமாகி நீர் பெருக்கெடுக்கத் தொடங்கியதால் தொடர்ந்து மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, ஐந்து மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடைந்து அங்கு உணவருந்தி விட்டு, தூங்கி விட்டோம். அடுத்த நாள் 17.4.2015 காலையில் பொதிகை சிகரத்தை வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 7 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெற்றது.

”ஆசிரெனவாதம் உண்டு

அகத்தியன் ஆசியும் உண்டு

அற்புதமும் நடக்கும்

பொதிகைமலை செல்லவும் கூடும்

அதற்கு முன்பு சதுரகிரி செல்லு

முன் சேந்தமங்கலம் தரிசனம்

அவசியமாமே கந்தன் கூற்று கச்சிதம்

ஆசி! ஆசி! ஆசி! ”

என்று முருகப் பெருமான் நாடியில் உரைத்தவாறே சேந்தமங்கலம் மற்றும் சதுரகிரி சென்ற பின்பு எந்த வித பெரிய முயற்சிகள் ஏதும் இல்லாமலேயே பொதிகை மலைப் பயணம் எளிமையாக அமைந்தது எனலாம். ஏற்கனவே பொதிகை மலை சென்று வந்தவர்களுக்கே அதன் கடினம் புரியும். அவ்வளவு எளிதானதல்ல என்பதை நான் இப்போதும் உண்ர்கிறேன். ஜீவ நாடியில்
சொன்னபடி கந்தன் கூற்று கச்சிதம் என்பதை என்னுடன் வந்த அனைவரும் உணர்ந்து ஆச்சரியப் பட்டனர் எனலாம்.

(தொடரும்...)

                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!