வெள்ளி, 22 செப்டம்பர், 2017

காகபுசுண்டர் நாடியில் தண்டபாணி சுவாமிகளின் பூர்வ அவதாரம்

 காகபுசுண்டர் நாடியில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பூர்வ அவதாரம் எழுதப்பட்டுள்ளது. இந்த விவரம் சிரவையாதீனம் இரண்டாம் குரு மகா சந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்களால் இயற்றப்பட்டுள்ள வண்ணக்கவி எனும் நூலில் ஸ்ரீதண்டபாணி சுவாமிகளது பூர்வ அவதார சரித்திரச் சுருக்கம் எனும் பகுதியில் இடம் பெற்றுள்ளது. தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள் கவி பாடுவதில் வல்லவராகி கொங்கு நாட்டு கச்சியப்பர் என அனைவரும் மெச்சும்படி வாழ்ந்தவர். வைணவ அடியார்களின் பெருமைகளை விளக்கும் பக்த மான்மியம் எனும் நூல் சுவாமிகள் எழுதிய பாடல்களில் மணிமகுடம். சுவாமிகள் பாடிய இன்னுமொரு நூலான மருதமலை அலங்காரம் முருகனது அடியார்கள் அனைவரும் ஓத வேண்டிய பதிகமாகும். இப்படி 15000க்கும் அதிகமான பாடல்களைப் பாடி உள்ளார்கள். தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்களின் பாடல்களையெல்லாம் ஆய்வு செய்து சிரவை நான்காம் சந்நிதானம் எமது ஞானதேசிகர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள் முனைவர் பட்டம் பெற்று பெருமை சேர்த்துள்ளது இப்போது நினைத்து போற்றப்பட வேண்டிய ஒன்றாம். இவ்வளவு பெருமை மிக்க தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள் தமது பரம குருவாகிய தாத்தா சுவாமிகள் என்று நமது சுவாமிகளால் அழைக்கப்படும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பூர்வ அவதாரத்தை காகபுசுண்டர் நாடி மூலம் ஆதாரம் எடுத்து கூறி உள்ளது நமக்கெல்லாம் கிடைத்த பொக்கிஷமாகும். இதில் இருந்து உண்மையான நாடிகள் சித்தர்கள் மூலம் கிடைத்து அதன் மூலம் பல ரகசியங்கள் வெளிவந்துள்ளது நிரூபணமாகின்றது. இப்போது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பூர்வ அவதாரம் எழுதப்பட்டுள்ள புசுண்டர் நாடிக்கவியைப் பார்ப்போம்.
புசுண்டர் நாடிக்கவி
இவனுடைய பெருமைசொல்லற் கெளிதோவில்லை
 என்னிலிருந் திவன்முதலா மவதாரந்தான்
உவகைநர னாகியிலக் குவனாகிப்பின்
 உலவும்பற் குனனாகித் திண்ணனாகித்
தவஞ்செறிகீ ரன்மெய்சொல் புலவனாகித்
 தானருனை யாய்க்கிளியாய்ச் சார்ந்துவந்த
இவனாகும் சங்கரலிங் கப்பேராதி
 யிலங்கியபின் னேமுருக தாசனாகி
பொருள்:
காகபுசுண்டரின் முதலவதாரமாக நரன், பின்பு இலக்குவன், பின்பு பற்குணன் எனும் அருச்சுணன், அடுத்து திண்ணனாகிய கண்ணப்ப நாயனார், பின்பு நக்கீரன், அடுத்து மெய்சொல் புலவனாகிய பொய்யா மொழிப்புலவர், அருணையில் அவதரித்த அருணகிரிநாதராய் பின்பு கிளியாய் அவதரித்து வந்த இவனாகும் சங்கரலிங்கம் எனும் பெயர் முதலில் பெற்று பின் முருகதாசன் எனும் பெயர் பெற்றார்.
விளக்கம்:
வண்ணாச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பூர்வ அவதாரம்:
  1. காக புசுண்டர் முதல் அவதாரமாக நர நாரயணர் அவதரித்தபோது நரனாக அவதரித்தார்.
  2. பின் ராம லட்சுமண அவதாரத்தில் லட்சுமணனாக அவதரித்தார்.
  3. பின் கிருஷ்ண அவதாரத்தில் அர்ச்சுணனாக விளங்கினார்.
  4. பின் கண்ணப்ப நாயனாராக அவதரித்தார்.
  5. பின் நக்கீரராக அவதரித்தார்
  6. பின் பொய்யாமொழிப் புலவராக வந்தார்.
  7. பின் அருணகிரிநாதராக அவதரித்தார். கிளியாக வந்தார்.
  8. பின் சங்கரலிங்கம் எனும் பெயருடன் விளங்கி அதன் பின் முருகதாசனாகி விளங்கினார். (நாளடைவில் சுவாமிகள் பாடும் கவிகளைப் பார்த்தும் சுவாமிகள் முருகனைப் போல் எப்போதும் தண்டம் ஏந்தி இருந்ததைப் பார்த்தும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என அனைவராலும் அன்புடன் அழைத்து புகழ் விளங்கப்பெற்றார்.)
பூர்வ ஜென்மத்தில் அருணகிரி நாதராக இருந்ததன் சான்றாக சுவாமிகள் பாடிய சந்தக்கவிகளைக் கூறலாம். தமிழ்ப்புலமையின் அதீதமாக சுவாமிகள் அறுவகை இலக்கணம் எனும் புதிய தமிழ் இலக்கண நூலை இயற்றி தமிழ்க்கடவுள் முருகனது வம்சம் என நிரூபணம் செய்துள்ளார்கள்.
கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.
 நன்றி: சிரவையாதீனம் இரண்டாம் சந்நிதானம் தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் அவர்கள்
                         
 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                  
 இணையதளம்:  www.kaumaramutt.com
            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!! 

வியாழன், 21 செப்டம்பர், 2017

சிந்தையில் துன்பு இலையே முருகா !


திருக்கோவலூர் ஞானியார் சுவாமிகள் அருளிய இன்னுமொரு பாடலைப் பார்ப்போம்.
பாடல்:
மந்திரம் ஆறும் மனக்குடியா வைத்து வாழ்பவர்கள்
சிந்தியில் துன்பு இலையே முருகா செனனங்கள் தொறும்
வந்து அமர் ஆடிய மால் இலையே; மனவாசிதனைச்
சந்ததம் சாரி நடாத்த என்றாலும் தடையில்லையே.
பொருள்:
ஆறெழுத்து மந்திரத்தை அகத்தில் வைத்தவர்களுக்கு என்றும் துன்பம் இல்லை. பிறவிகள்தோறும் வந்து போராடச் செய்த அறியாமையும் இல்லை. மனமாகிய குதிரையில் எப்போதும் நினை நோக்கிச் சவாரி செய்யவும் தடை இல்லை என்பது பாடலின் கருத்து.

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                    
படம்: பவானி கூடுதுறை காவிரி புஷ்கர விழாவில் சிரவை ஆதீனம் மற்றும் பேரூர் ஆதீனம்
 இணையதளம்:  www.kaumaramutt.com
            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

புதன், 20 செப்டம்பர், 2017

சனியே தவிர்த்த நின் தண்ணளி

                                            
முருகப்பெருமானை உள்ளன்போடு பக்தியாய் வழிபாடு செய்து வருபவர்களுக்கு கிரக தோஷங்கள் பாதிப்பதில்லை என பல்வேறு ஞானிகளின் பாடலால் அறிய முடிகின்றது. நாள் என் செய்யும் வினை தான் என் செய்யும் என்பார் அருணகிரிநாத சுவாமிகள். திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே என்று கூறுகின்றது. நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்பது சஷ்டிக்கவசம். கோளும் குறுகப் பயப்படும், கூற்றமும் கும்பிடுவான், வேளும் மகிழ்ந்து அருள் செய்வான், நமது வினை அனைத்தும் மாளும் என்பார் திருக்கோவலூர் ஞானியார் சுவாமிகள். திருக்கோவலூர் ஞானியார் சுவாமிகள் அவர்கள் சனியின் தோசத்தை தவிர்த்த தண்ணளியே என்று முருகன் மீது பாடியுள்ள படலை இன்று படித்துப் பாடி இன்புறுவொம்.
பாடல்:
இனியேது எனக்கு உன்னருள் வருமோ?  என்று
  இன்று ஏங்கி நின்றேன்
முனியேல் என உவந்து ஆட்கொள்ளும்
  முக்கண்ணி மோந்து எடுக்கும்
கனியே! இனிய கற்கண்டே! இங்கு
  என்னைக் கருதிவரும்
சனியே தவிர்த்த நின் தண்ணளி
  ஏது என்று சாற்றுவதே
                    -ஞானயார் சுவாமிகள்
கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்கும் போது எல்லோருக்குமே ஒருவித பயம் ஏற்படுகின்றது. சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி என எந்த பெயர்ச்சி வந்தாலும் உடனே என்ன பரிகாரம் என்று மக்கள் தேட ஆரம்பித்து விடுகின்றார்கள். நவ கிரகங்களை வணங்குவது, நவ கிரகங்கள் வழிபட்ட தலங்களைத் தரிசனம் செய்வது என வழிபாடுகள் தமக்கு ஏதேனும் கெடுதல் வந்துவிடுமோ என்ற பயத்தில் நடந்து வருகின்றது. இறைவனை மறந்து நமது உடலே உண்மை என்று கருதி ஆன்மாவைப் பற்றியும் ஆன்மா அழியாது உடல் அழியும் என்பது பற்றியும், நாம் இறைவனை மறந்ததால்தால்தான் துன்பப்படுகின்றோம் என்பதை அறியாது மன திருப்திக்காக பரிகாரம் செய்து நிம்மதி அடைகின்றோம். ஆனால் கிரகங்கள் நமது பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களுக்கேட்பவே பலன் தருவதாலும் ஆன்மாவையும் இறவனையும் அறிந்து கொள்ளும் பொருட்டுமே கிரகங்கள் சோதனை செய்து நம்மை புடமிடும் தங்கம்போல் உருவாக்குகின்றன. ஆனால் அடியவர்கள் கிரகங்களையும் கூற்றுவனையும் கண்டு அஞ்சுவதே இல்லை. கார்மா மிசைக் காலன் வரிற் கலபத் தேர்மா மிசை வந்து எதிரப்படுவாய் என்பது கந்தரனுபூதி. மேகத்தின் மீது காலன் வரும்போது மயில்மீது வந்து எதிர்கொண்டு முருகா நீ வருவாய் என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள். கண்டாயடா அந்தகா வந்து பார் சற்று என் கைக்கு எட்டவே என்பதும் அருணகிரி நாதரின் வாக்கு. அந்த நிலையை உணர வைக்கவே கிரகங்கள் வேலை செய்கின்றன. ஒரு குருவைச் சரணடைந்து முருகனது ஆறெழுத்தை விடாமல் ஓதி, தியான நிலை கைவரப்பெற்றால் தவத்திரு ஞானியார் சுவாமிகள் பாடியது போல் அடியார்களை சனி பிடிக்க வரும்போது அதைத் தவிர்த்து கிரக தோஷங்களில் இருந்து முருகப்பெருமான் நம்மைக்  காப்பார் என்பது திண்ணம். எனவே முருக வழிபாட்டை ஞானியர்கள் காட்டிய நெறியில் கடைபிடிக்க நிச்சயம் முருகன் நம்மை எல்லாவற்றிலும் இருந்து காத்து அனுகூலம் புரிவார்.

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்

படம்: காவிரி புஷ்கரத்தில் சிரவையாதீனம் அவர்கள்
நன்றி: தினமலர் நாளிதழ்
 இணையதளம்:  www.kaumaramutt.com
            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

திங்கள், 18 செப்டம்பர், 2017

ஆறெழுத்தலங்காரம் பகுதி-2

பாடல்:
ஓங்காரம்பெற்ற வெழுகோடிமந்திரத் துள்ளுயர்ந்த
பாங்காருமாறெழுத் தேவடிவாகிய பண்ணவனை
ஏங்காதுவாழவைக் குங்குருநாதெனென் றெண்ணினார்க்கே
நீங்காச்சுகந்தரும் மாதவப்பேறு நிலைநிற்குமே

ஓம் எனும் பிரணவம் பெற்ற எழு கோடி மந்திரத்துள் உயர்ந்த பாங்குடைய ஆறெழுத்தே வடிவாகிய முருகப்பெருமானை நம்மை எதிலும் ஏங்கித் தவிக்காது வாழ வைக்கும் குரு நாதன் என்று எண்ணியவர்க்கு நீங்காத சுகம் தரும் மாதவப்பேறு நிலை நிற்கும் என்று ஆறெழுத்தின் பயனைப் பாடுகின்றார் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள். முருகனது திருப்பெயர் வேறு முருகன் வேறு அல்ல என்பதை  முருகனின் ஆறேழுத்து மந்திர வடிவாகிய பண்ணவன் என்று சுவாமிகள் பாடுகின்றார். முருகனது ஆறெழுத்தை எப்போதும் உச்சரித்து வருபவர்கள் முருகனது அருள் வடிவைத் தாங்கி மந்திரத்திருமேனி உடையவர்களாக இருப்பார்கள் எனெலாம். முறையாக குரு உபதேசம் பெற்று மந்திர ஜபம் செய்வதே சாலச்சிறந்தது என்பர். அதிலும் முருகனது வம்சத்திலே வந்த குருவிடம் உபதேசம் பெறுவது முருகனிடமே உபதேசம் பெறுவது போன்றாம். ஆறெழுத்து மந்திரத்தை ஓத ஓத முருகன் அருள் கூடி முருகனது திருக்காட்சியும் கிட்டும் என்பது மெய்.

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
படம்: சென்னை சைவாகமத்திருமுறை கருத்தரங்க விழா
 இணையதளம்:  www.kaumaramutt.com

கவிதை:
உருவிலே மின்னும் பொன்னாய் நிற்கும்
குருநாதர் வந்ததோர் கவுமார வம்சம்
திருவேஎனப் பலர் போற்றி மாலையிடும்
குருவிற்கு கூப்பினேன் கரம்

ஆறெழுத்து அருமறையை அன்பாய் ஓத
பேறுதந்த குருநாதர் குமர குருபரரின்
வீறு கொண்ட செயல்கள் வெற்றிபெற்று
நூறாண்டுவாழ கூப்பினேன் கரம்

சிரவை நான்காம் சந்நிதானம் தன்னின்
வரவை நாடி நாளும் நின்றேன்
கறவைப் பசுவின் கன்றுபோல் நின்று
உறவாய்க் கூப்பினேன் கரம்

பொன்போல் மின்னும் திருமேனி கண்டேன்
இன்முகம் காட்டும் இனிமையும் கண்டேன்
பொன்னாடை மாலை பொலிவும் கண்டேன்
இன்னும் கூப்பினேன் கரம்


                           -ஸ்ரீஸ்கந்த உபாசகர்

            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கௌமார மடாலயத்தில் எழுத்தாணிப்பால் விழா

அழைப்பிதழ்
                                           சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!

கோவை கீரநத்தம் தவத்திரு மருதாசல சுவாமிகள் 60 வது குரு பூஜை விழா

                                                                  அழைப்பிதழ்

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!

சனி, 16 செப்டம்பர், 2017

சூன்யமுதல் வினையெலாம் எள்ளளவும் நிற்காமல் காக்கும் அதிகாரன்

                
பழனிமலை வடிவேலர் பதிகத்தில் இன்னும் ஒரு பாடலைப் பார்ப்போம்.
பாடல்:
”சாகினி கறுப்பனிரு ளன்கூளி வேதாளி
 தாடகைமூ லாடவீரன்
  சந்திரவீரன்குறளி யந்திரவீரன்சண்டி
   தடிவீரன் வல்லரக்கி
மோகினிகள்லாகினிகளிருடி குட்டிச்சாத்தி
 முன்னடி யன்வடுகன் சடா
  முனிவன் வெட்டுணிகுத் தூணிகாட்டேறி சா
   முண்டிபா வாடையப்பன்
சோகிபூ தப்பிரம்ம ராட்சசிகூஷ் மாண்டாதி
 துர்க்கைவைப் பேவல்பில்லி
  சூன்யமுதல் வினையெலாம் எள்ளளவும் நிற்காது
   தொலைத்துனது திருவடி மலர்ப்
பாகமதில் வைத்தவன் பருக்கெலாம் மேலான
 பதவிதரு மதிகாரனே”

இந்தப் பாடலில் பழனிமலை முருகனை வணங்கினால் தீயவை செய்யும் தேவதைகளான சாகினி டாகினி காட்டேறி இருளன் போன்றவையும், தீயோர்களால் ஏவப்படும் ஏவல் வைப்பு வஞ்சனை பில்லி சூன்யங்கள் போன்ற தீவினைகளெல்லாம் நிற்காது நம்மைப் பாதிக்காது காப்பாற்றி அந்த தீயவைகளையெல்லாம் தொலைத்து தனது மலர் போன்ற திருவடியில் வைத்து நமக்கு மேலான பதவி தரும் அதிகாரன் முருகப்பெருமான் என்று சொல்லப்படுகின்றது. எனவே தீய எண்ணங்களோ, துர் தேவதைகளோ, சூன்யம் செய்வினைகளோ முருகனது அடியார்களை ஒன்றும் செய்யாது. முருகனது அருள் இருப்பின் நிச்சயம் எந்தவித பாதிப்புகளும் நம்மை அண்டாது. சங்க காலத்தில் கூட வேலன் வெறியாட்டு எனும் நிகழ்ச்சிகள் நடந்ததாக தமிழ் நூல்கள் கூறுகின்றன. யாராவது ஒருவருக்கு துர்தேவதையின் தாக்கம் இருப்பின் வேனலாகிய பூசாரி கையில் வேல் வைத்துக் கொண்டு ஆவேசமாக பாடிக்கொண்டே ஆடி அந்த மன நோயை நீக்கியதாக வரலாறு. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வெறியாட்டு பெருவழக்காகவிருந்தது.
‘‘வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
    வெறியாட் டயர்ந்த காந்தளும்’’ (தொல். பொருள்., நூற்பா, 60)
‘‘வேலன் புனைந்த வெறிஅயர் களம் தொறும்
    செந்நெல் வான்பொரி சிதறி அன்ன’’ (குறுந்தொகை, பா.., 58)
அப்படி மனதிலே வரும் எண்ணங்கள் அடுத்தவர்களை செய்வினை வைத்து பாதிப்படையச் செய்ய வேண்டும் என்று சிலர் தவறாக பாவங்களைச் சம்பாதித்துக் கொள்கின்றனர். ஆனால் முருகனை வணங்கி அந்த செய்வினை நீக்கப்படும்போது வைத்தவர்களுக்கே அந்த வினை 100 மடங்கு வலிமையாக திருப்பித் தாக்கிவிடுகின்றது. இந்தப் பிறவி எடுத்ததே துன்பப்படவே எனும் போது நமது வினைகளைக் குறைத்து குருவை நாடி சேவை செய்து இறைவனது மந்திரங்களை உச்சரித்து ஆலய வழிபாடுகள் செய்து மக்களுக்கு நன்மைகள் செய்து நல்லபடியாக அடுத்த பிறவியாவது அமையவேண்டும் என்று எண்ண வேண்டும். முருகனை வணங்குபவர்களுக்கு முக்தி தேடி வருகின்றது. அப்படி நாம் நன்மை செய்ய முடியாவிட்டாலும் கூட அடுத்தவர்களுக்கு கனவிலும் தீமையை நினைக்கக் கூடாது. கனவிலேயே நினைக்கக்கூடாது எனும் போது அடுத்தவர்களுக்கு செய்வினை வைத்தால் நிலமை என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். செய்வினை உண்மையா? பொய்யா? என்பது ஆராய்ச்சிக்குறியது என்றாலும் இந்தப்பாடலின்படி செய்வினை என்ற ஒன்று இருந்தாலும் முருகன் ஒரு நொடிப்பொழுதில் அதை நீக்கி நம்மைக் காத்து உயர் பதவியும் தருவார் என்பது நிரூபணமாகின்றது. இப்படி ஒரு நொடியில் நம்மைக் காத்தருளும் முருகப்பெருமானை குன்றுதோறும் வைத்துக் கொண்டாடினால் போதாது. வீடுகள் தோறும் முருகனது படம் வைத்து தினசரி தீபம் ஏற்றி மலர் சூடி பூசிப்பது குறிப்பாக தமிழர்களின் கடமையாகும். பேசுகின்ற மொழியே முருகன். முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்போன் என்பார் அருணகிநாத சுவாமிகள். தமிழை தாய் மொழி என்கிறோம் அந்த தமிழ்த்தாயை நமக்களித்த முருகனை நாம் மறக்கலாமா? அப்படி மறந்தவர்களுக்குத்தான் துர் தேவதைகளும், சூன்யங்களும் பயம் கொடுக்கும். எப்போதும் நன்றி மறவாமல் முருகனை வணங்கி வந்தால் சூனியமும், துர் தேவதைகளும் நம்மை என்ன செய்யும். அப்படியே விதி வசத்தால் துர் தேவதையாலும் செய்வினையாலும் பாதிக்கப்பட்டால் சூன்யமுதல் வினையெலாம் எள்ளளவும் நிற்காது தொலைத்து மேலான பதவிதரும் அதிகாரனாகிய முருகப்பெருமான் நம்மைக் காக்காமல் விடுவாரா என்ன? காக்க காக்க கனக வேல் காக்க ! நோக்க நோக்க நொடியினில் நோக்க! தாக்க தாக்க தடையறத் தாக்க ! பார்க்க பார்க்க பாவம் பொடிபட ! பில்லி சூன்யம் பெரும் பகை அகல என்பது பாலதேவராய சுவாமிகள் அருளிய சஷ்டிக்கவசம்.

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
 படம்: காவிரி மஹா புஷ்கரம் விழாவில் சிரவையாதீனம்  அவர்கள்
 இணையதளம்:  www.kaumaramutt.com
            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

வினையெலாம் பருதி முன் பனிபோல் பறித்தெறியும் அதிகாரன்

                                       
பழனிமலையைப் புகழாதவர்கள் இருக்க முடியாது. படிக்கின்றிலை பழனித்திரு நாமம், பழனிமலை எனும் ஊரைச் சேவித்து அறியேனே, அதிசயம் அனேகமுற்ற பழனி என்பார் அருணகிரிநாத சுவாமிகள். பழனியில்தான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் கோவை கௌமார மடாலய முதல்வர் திருப்பெருந்திரு இராமானந்த சுவாமிகள் அவர்கள் ஞான உபதேசம் பெற்றார்கள். அதனால் சிரவையாதீனம் ஒவ்வொரு சந்நிதானங்களும் பழனியில் அருளாட்சி ஏற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் பழனியில்தான் சமாதி கொண்டுள்ளார்கள். அதை கௌமார மடமே தற்போது நிர்வாகித்து வருகின்றது இன்னும் சிறப்பாகும். பழனியில் 8,9-12-2001ல் சிரவையாதீனமாக பொறுப்பேற்று ஏழு ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி பாரம்பரியமாக பழனியில் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் அருளாட்சி ஏற்றார்கள். அந்த அருளாட்சி விழா மலரில் வடிவேலர் பதிகம் குறித்த ஒரு செய்தியைக் கண்டேன். அதை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். பழனிமலை வடிவேலர் பதிகம் எனும் நூலில் உள்ள பாடல் இது. பழனிமலை முருகனை நாம் வணங்கினால் என்னென்ன நோய்கள் தீரும் என்று இந்தப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தினசரி ஏதேனும் உடல் தொல்லையால் அனைவருமே அவதிப்படுவது இயற்கை. இந்தப்பாடலில் சொல்லியுள்ளபடி நமது நோயெல்லாம் தீர்க்கும் அதிகாரன் முருகப்பெருமான். எனவே முருகனது அருள் இருந்தால் எல்லா வினைகளும் சூரியன் முன் பனி போல் விரைவில் நீங்கி விடும். எனவே தான் வினையெலாம் பருதி முன் பனிபோலே பறிதெறியும் அதிகாரனே என்று பாடியுள்ளார். இந்த நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
பாடல்:
”வயிற்றுவலி சோகைவிப் புருதிநீரிழிவுகா
 மாலைவெண் குட்டமிருமல்
  வாதகுன் மம்பெரு வியாதிபக் கப்பிளவை
   வண்டுகடி யண்டவாதஞ்
சயித்தியம் மகோதரம் பிரமியம் சூலைகா
 சங்கிராணி பாண்டு ரோகந்
  தலைவலி கருங்குட்ட மீளைதுடை வாழைபடு
   தாமரை கிரந்தி படுவன்
முயற்பிணி பவுத்திரம் நடுக்கலெழு ஞாயிறு
 முறைக்காய்ச்சல் மாரடைப்பு
  முகசன்னி சுகசன்னி குலைவலி பெரும்பாடு
   மூலங்கபால வாய்வுபயித்தியம்
(பயில்) வினை யெலாம்பருதி முன்பனிப் போலப்
 பறித்தெறியு மதிகாரனே”

இப்படி முருகனையே பாடிப் பாடி தமது உடல் மன ஆன்ம நோய்கள் நீங்கிக் கொண்டவர்கள் ஏராளம். அவசர யுகத்தில் இது போன்ற இறையருள் பாடல்கள் எல்லாம் மறக்கப்பட்டு விட்டு மருத்துவமனை சென்றும் நோய் தீராத நிலையில் பலர் அவதிப்படுவதைப் பார்க்கின்றோம். முருகனுக்காக விரதம் பூண்டு முருகனையே துதித்து வரும்போது நமது உடல் நல்ல ஆரோக்கியம் பெறுவதோடு மனமும் உறுதி பெற்று பிணிகள் நீங்குகின்றன. நமக்குத் தெரிந்து முருகனது திருநீறு பல நோய்களைத்தீர்த்துள்ளது. முருகு என்றால் இயற்கை, அழகு, கடவுள்தன்மை என்று பெயர். முருகனை வணங்கினால் இயற்கையாகிய தன்மையில் நமது உடல் சரிசெய்யப்பட்டு அழகாக மாறி முருகாகிய கடவுள்தன்மையையும் நாம் அடைவோம் என்பதே மறைமொழியாம். எனவே நமது பாரம்பரிய வழிபாடாகிய முருக வழிபாட்டைக் கைவிடாது கருத்தில் இருத்தி கந்த வேலே நம் சொந்த வேல் என்று போற்றுவோம்.


கவிதை:
அருளாட்சி விழா மலர் தன்னில்
பொருளாட்சி  மிக்க நூல் கண்டேன்
மருளாட்சி மனப்பகையும் நீங்கிடவே – அவன்
அருளால் பதித்தேன் இங்கு !

குருவிற்கு அருளாட்சி குவலயத்தில் பெருங்காட்சி
திருவுக்கு பணி செய்ய என்குருவை
பெருமைபட பலர் வாழ்த்த என்குருவை
கருவிலே படைத்தான் கந்தன் !

வினையெலாம் தீர்க்கும் அதிகாரனே வேலா
பனைபோல் வளர்ந்த பாவம் களைவாய்
தினைமாவு பிரியனே திருப்பம் தாராய்
மனைபோட்டு என்மனம் தங்கே !

பயமெலாம் போக்கி பரிசுத்தமாக்குவாய் என்றும்
செயமெல்லாம் தருவாய் வணங்குநீ என்றும்
இயம்பினோர் முன்னோர் சொல் வீணோ?
இயங்குவாய்என் மனத் தகத்தே !

என்செயும் நாளும்கோளும் வினையும் கூற்றும்
என்றுரைத்த அருணகிரி பாடல் மெய்யே
அன்றுரைத்த பாடலை மறு மெய்யாக்க
இன்று என்னகத்தே தங்கே !

வந்தனை செய்தாய் வழிபட்டாய் பூசித்தாய்
சிந்தனை செய்தாய் சிறப்பு என்றாய்
கந்தனை தொழுதால் கஷ்டம் நீங்குமோஎன்று
நிந்தனை மற்றோர் செய்யக் கேட்டேன்
வந்து நீ வாழ்விப்பாய் வழி செய்வாய்
நிந்தனைக்கு கந்தனையே கூப்பிட்டேன் வேறறியேன்
சொந்தமெனெ என்னகத்தே தங்கே !

                                  -ஸ்ரீஸ்கந்த உபாசகர்

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                                   
படம்: பழனியில் அருளாட்சி ஏற்கும் சிரவையாதீனம் அவர்கள்
 இணையதளம்:  www.kaumaramutt.com
                சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

வியாழன், 14 செப்டம்பர், 2017

பக்தி இலக்கியங்களே வாழ்வை நெறிப்படுத்தும் சிரவையாதீனம் அருளுரை


                                             சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
 நன்றி: தினமலர்

பழனி பட்டணம் சுவாமிகள் அருளிய ஸ்ரீவாரி ஜெபமாலை

                     
பட்டணம் மாரிமுத்து சுவாமிகளுக்கு அம்பிகை காட்சியளித்த போது அவர் பாடிய ஸ்ரீ வாரி ஜெபமாலை இங்கு கொடுக்கப்பப்பட்டுள்ளது. இதை ஆதரவோடு கற்போர், கேட்போர் அனைவருக்கும் எல்லா நலன்களும் பெருகி பேரானந்த பெருவாழ்வு பெறுவார்கள் என்பது சர்வ நிச்சயம்.

விருத்தம்
ஆதியெனும் பராபரியே யருளே தாயே 
ஆனந்தி புவனை வாலை யம்பிகையே நீ
சோதியே யச்சுதனே யயனே வாணி
சோடசமே திரிபுரையே சொரூபலக்ஷ்மி
நீதிதரு மருமுகனே நீச தெய்வானை
நித்தியனே வள்ளியணை மயிலும் வேலா
வாதிகளை யதஞ்செய்யும் அனுமான் பாதம்
வணங்கி சாமளி பாடல் வழுக்கிக் காப்பே
சித்தர்கள் துதி
ஸப்தரிஷி மாமுனிவ ரடிகள் போற்றி
தாரணியைத் தாங்கு மகத்தியன் போற்றி
சித்தர்களும் பதிணெண்மர் தாள்கள் போற்றி
ஜெயந்தருகும் புஜூண்டர் சீரடிகள் போற்றி
முத்தன் கபீர் கமால் திருவடிகள் போற்றி
மூர்த்தி மத்தான் சங்கிலி முத்தனடிகள் போற்றி
நித்தியமும் நிருவாண தேசிகன் தாள்கள் போற்றி
நிரந்தரியைப் பாட முத்தர் திருத்தாள் காப்பே

ஸ்ரீ பாலாம்பிகை ஜபமாலை

1.   ஓங்கார ரூபவடி யுத்தமியே பத்தினியே
ஹரீங்கா சனத்தில் நிலைத்தவளே - பாங்காய்

2.   அறிவானந்த குருவே யருளொளியே யம்பிகையே
பெரியானந்தந் தரும் பேரொளியே – நெறியான

3.   அகரமொடு வுகரமுநீ யானதொரு மகரமுநீ
சிகரமொடு விந்து நாதத் தேவியுநீ – பகரவருள்

4.   பொற்பாதந் தந்தருளும் பூரணியே காரணியே
சிற்பாதத் தாண்டவியே ஸ்ரீங்காரி – சொற்போத

5.   ஓரெழுத்தா யிரண்டாயுற்றுணரு மூன்றெழுத்தாய்
ஆறெழுத்து ளஞ்சா யஷ்டா க்ஷரமாய் – சீரெழுத்தாய்

6.   அம்பதோ ரக்ஷரமா யானசடா க்ஷரமாய்
தும்பத் தரவுதித்த தூய பீஜாக்ஷரமாய் – எண்பத்தோர்

7.   எழுகோடி மந்திரமா யெந்திரமாய் தந்திரமாய்
முழுகாடி நின்ற முச்சுடரே தொழுதாடும்

8.   சீரான் முக்கோணச் செழுஞ்சுடரே நல்ல
பேரான் வைங்கோணப் பெம்மானே – நேரான

9.   ஆறுமுகமாய் சட்கோண வம்பிகையாய் நின்ற
பெறுமுகமா யெண்கோட்டின் பேச்சியே – திருமுகமே

10.  நவகோண சக்கரத்துள் நாதபரை ஸ்ரீங்காரி
நவரசத்தின் ஞானம் நல்குவாய் – பவநீக்கும்

11. சோடசமாய் நிற்குத் துரியமணிச்சுடரே
நாடவருளாளிக்கும் நட்பே – கூடவரும்

12. நாப்பத்தி முக்கோண நாயகியே நலந்தருவாய்
கார்பதுனது கடன் கட்டழகி – சீர்பூத்த

13.  மூலாதாரத் தொளியாய் மூச்சுடரி னுச்சியுமாய்
மேலாதாரத் திருந்த வெண்மதியாய்ப் – பாலூரப்

14. பண்ணுஞ் சிவயோகப் பராபரியே ஞானக்
கண்ணே கருணைக் கற்பகமே – எண்ணுங்

15. காமக் குரோதிபதி கள்வர்களை நீ நசிப்பாய்
வாமதேவியே வந்தருள் வாய் – தாமதஞ் செய்

16. அந்தக் கரணமா யைம்புலனா யைம்பொரியாய்
பந்தநிறை தத்துவத்தின் பண்மையின் – விந்தையர

17. அனைவர்களும் போற்றுமாருயிரே நினதடியின்
வினையறிந்தோர் நெஞ்சின் விளக்கே – தனையர்களில்

18. மத்தான் குருவாக்கு மகமேராய் நிகழ்த்துகின்ற
வித்தாரமே யருளும் மெய்ப்பொருளே  - மத்தகத்தின்

19. முடிவில் நின்ற பூரணியே முத்தொழிலும் படைக்க
வடிவுடைய காரணியே யண்டம்வர – நொடியில்

20. முக்குணமாய் முப்பொருளாய் முச்சுடராய் மும்மலமாய்
திக்குணமாய் பஞ்சதிசை வடிவாய் அக்கணமே

21. பிஞ்ஞகனாய் மாலாய் பேசரிய ருத்திரனாய்த்
தஞ்சம் யேச்வரனாய் சதாசிவனாய் – பஞ்சவினை

22. சிருட்டி திதிலயமாய் தெளிந்த திரோபவமாய்
தெருட்டி யனுக்கிரகமாய்த் தெளிவுரவே – சுருட்டி

23. மெஞ்ஞான நாட்டமாய் மேவுகந்த முனைநடுவே
அஞ்ஞானமே யகற்று மம்மையே – மெஞ்ஞான

24. வாலை புவனை மணோண்மணியே யம்மை
தூலநக்ம காரணியே சுதந்தரியே – காலை

25. இடைபிங்கலையாய் இரண்டுக்கும் மேல்நடுவாய்
கடையிற் சுழுமுனைமேற் காண்பாய் – திடம்பெறவே

26. சரஸ்வதியாய் லக்ஷ்மியாய் சங்கரியா யின்னம்
பரஸ்பர மனோன்மணியாய் பராசக்தி – சிரஸ்கதியாய்

27. அஷ்டலக்ஷ்மி  சோடசத்தை யம்பிகையே யானவில
இஷ்டமாய் என்னாவி லிருந்தருளும்… கஷ்டமெல்லாம்

28. நசித்திடவே வந்த நாரணியே காரணியே
வசித்திடமாய் வாழ்க வரமரளும் – நிசத்திடமே

29. ஐயுங் கிலியம் ஸௌவுமாய் நின்ற
மெய்ய மடிநடுவு மேல்முடியாய் – துய்ய

30. தாயேநீ ஸ்ரீயும் அவ்வு முவ்வு மவ்வுமாய்த்
தோயேநீ வவ்சிங் பவ்யல்வுமாய்  - நீயே

31. நம நம சிவ சிவ ரா ரா ரா ரா
நமசிவய ஸ்ரீங் ஹரீங் கென்றும் அமையுமே

32. ஹரீம் ஸ்ரீம் ரக்ஷி நிரந்தரியே நீ
ஸ்ரீம் ஓம் பகவதி சிற்சக்தி – பாங்காண

33. நாதவிந்து நாரணியே நலமுடனே யுன்னடியைப்
போதச்சிர முடிமேற் போற்றியே – நீதமாய்

34. ஸ்ரீம் ஓம் சுவாமியே சிவசக்தி யுடலுரும்
சீமலிங் சிங்வங் கென்று நான்றுதிக்கப் – பெரிய

35. தாயு நீ தந்தையு நீ தாரமு நீ பிள்ளையு நீ
ஆயு நீ சோடத்தை யருளீவாய் – நீயும்

36. ஆங் ஹரீங் ஸ்ரீங் அம்பிகையே யுனைத்துதிக்கப்
பாங்குடனே சௌபாக்கியம் படைக்குநீ – தாங்கும்

37. ஓம் நம ஸ்ரீம் பராசக்தி வாவென்று
நாம் ஜெபிக்க நல்வாக்கிய நல்குநீ – தாம்

38. ஹரிஹி ஓம் ஆம் உம் வாரஹியம்மா வாலை
அறிஞர்களை இகழ்வோரை யதஞ்செய்ய – வருவாய்

39. பூமளியே ஓம் ஹரீம் ஸ்ரீம் ஒவ்வும் நல்வும் புலனை
வாமளியே திரிபுரையே வருவாய் – சாமளியே

40. உள்ள வங் சிங் அங் உங் மங் காணாய் நீ
கள்ளமிலா வங்குஷாய வென்று வாழ்த்த – தெள்ளமுதே

41. அன்பாய் அங்சங் ஹயீம் உங் பங் கென்றே
தென்பாக வாலை வங் திங் ரீங் மங் – கின்பாய்

42. உத்தமியே பத்தினியே ஓம் ஹரீமென்று
நித்தியமும் நினைவளிப்பாய் நெஞ்சகத்தே – நத்தியே

43. ஓம் ஹீரீம் மசிவசி யென்றுற்ற வாளை நினைக்க
பாங்குடனே அஷ்டபாக்கியம் பண்பவளவாய் - ஓம்

44. ஹரீம் அம்மெனவே நேரில் நில்லா நரி பாம்பு திருடரெல்லாம்
ஓம் ஹரீம் வசியென்றால் உலகமெல்லாம் வழிபடுமே – நாம்

45. மந்திர வாளைச் சிந்தை மாகரத்திற் றாங்கிடவே
இந்திரசலா – மீஸ்வரியே யெனக்களிப்பாய் – சிந்தைமலம்

46. அறுத்தென்னை யாட்கொள்ளும் அம்பிகையே நாட்டம்
திருந்திடுவாய் நிருவிகேற்ப நீ நிதமும் – பெருத்த

47. அண்டமுதீந் யருளநீ யாதியுநீ சேதியுநீ
பிண்டமுநீ டிபராணணுநீ பிரியமுந் – தொண்டர்

48. துதித்தேற்று நாயவிதி தூய வெளி யொளியு நீ
பதித்தோர்க்கு அநேக சித்தி படைப்புநீ – உதித்பூ
49. யானைமுத லெண்பத்து நாலுலக்ஷபேத
சேனையாய்ச் சேதனரைச் சிருட்டித்த – தேனே

50. கௌணசித்தி ஞானக்கேடிலா மெய்த்தவமே
மௌன சித்தி தந்தருளு மாமணியே – சௌரன் முதல்

51. சனகாதி புசுண்டர் சித்தர் ஸரஸ்வதி யுனைத்துதிக்க
கனகாதி கற்பகமே கடையேன் புருவமையம் – முனைஜோதி

52. அங்கங்குந் தானாய் யமர்ந்தருளும் பூரணியே
இங்கு வந்தேழையிட ரருப்பாய் – துங்க

53. தாயி பரி பூரணியே சௌந்தரியே மீனாக்ஷி
ஆயிமஹா மாரிமுத்தம் பிகையே – பேய்

54. பில்லி சூனிய முதலாய் புதை மருந்து வைப்பு
சல்லியம் வொட்டிய வித்தை தான் நசிக்கும் – மெல்லியே

55. உனை நினைக்க வாதமுடன் பித்த சிலேத்துமமும்
வினை நசிக்கு மீஸ்வரியே விரைவில்லா – தனையே

56. சிந்தை செய் பிரம்ம சாபந்திரும் சித்தர் சாபமெல்லாம்
விந்தை நவ நாயகர்கள் மெய்யுணர்வாம் – நிந்தை

57. எழியேனை செய்யு மூடரின் பமது
மங்கிடவே விழியே துட்ட சம்மார வித்தகியே  - ஒழிய

58. திருவை யெனுந் திருநீற்றால் திரிசூலினியே
மருவை யெனு மகுட சங்காரி நீ -  குருவாய்

59. சரியையெனு மூர்த்தி சண்முகியே வைணவியே
கிரியையெனு மந்திரத்தின் கிருபா நிதியே – நெரிகை

60. யோக மெனுஞ் சராசர உச்சிவழி யூடுருவ
யேகமா யிருவிழியும் மேற்சுழியில் – வேகமாய்
61. இமையாது நாட மெழிலுருவாய் நிற்பாய்
அமையாத பூரணமு மமைக்கு நீ – உமையே

62. நாலு வேதப் பொருளாய் ஞானம் பிறப்பிடமாய்
சால பிரக்ஞானம் பிரமுமாய் – மேலாம்

63. தானகம் பிரம்மாஸ்மி யுமாய்தத்தும் மசியாயாண்ட
மோன வறிதானந்த முத்தியுமாய்த் – தானே

64. அயமாத்மா பிரம்ம மளித்திடுவாய் நீயே
தயவோ டெனையாண்ட தற்பரியே – ஜெயந்

65. தருவாயில் வேளை சாயுச்ய நீண்ட
குருவாய் கைவல்யங் கூடிடவுந் – திருவே

66. விதேக கைவல்ய வித்தகமே வாலை
ஸ்தானந்தத் தருஞ்சற் குனியே – இதேயகுள்

67. நாடாது நாட நன்கெனக்கு நியருள்வாய்
கூடாமற் கூடும் குருபறையே – வாடா

68. வகையெனக் கருள்புரிவாய் வாலை மனோண்மணியே
ஜெகந்தனிலே யுன்பாடல் சீர்பெருக – இகந்தனிலே

69. எத்தனையோ கோடிபிழை யெத்தனையேழை செயினும்
பத்தினியே நீ பொருத்துன்பதமருள்வாய் – நித்தியமும்

70. அருள் லக்ஷ்மி போற்றின் னபூரணி போற்றி
பொருள் லக்ஷ்மி போற்றி போற்றியே – இருளருக்கும்

71. ஏகாஷரி போற்றி ஈஸ்வரியே போற்றி
யேகாஷரி போற்றி யென்னுளத்தில் – வேகமே

72. உற்பனமே போற்றி ஓங்காரி போற்றி
சிற்பரியே போற்றி ஸ்ரீங்காரி  - கற்பகமே

73. காரணியே போற்றி காமதேனுவே போற்றி
பூரணியே போற்றி போதம் போற்றி – சீரணியே

74. நாரணியே போற்றி நாதவொளி போற்றி
தாரணி லெனையாண்ட தாய் போற்றி – பேரணியே

75. சிவகாமி போற்றி சிற்றம்பலம் போற்றி
பல மருத்தாண்ட பரை போற்றி – தவகாமி

76. அம்பிகையே போற்றி யருள்வாலை போற்றி
வம்பனையே ஆண்ட வள்ளல் போற்றி – அம்பரியே

77. வாணியே போற்றி யருள் போற்றி போற்றி
காணவருள் போற்றி கண்மணியே போற்றி தோணியாய்

78. கரைபோற்றியாண்ட காதலியே போற்றி
உரையாய்ப் புகண்டனுயிர் போற்றி விரைவே

79. விஷாலாக்ஷி போற்றி விற்பனியே போற்றி
திசைமுகனை யீன்ற திருபோற்றி – நசையறவே

80. அன்பளிக்கப் போற்றி ஆனந்தி போற்றி
தென்பாய் காமாஷி செயல் போற்றி – பொன்பாதம்

81. மீனாக்ஷி போற்றி மேருமகள் போற்றி
தானாக்ஷி தேவர் துதி தாய் போற்றி – பூனாக்ஷி

82. மனோண்மணி போற்றி மாமணியே போற்றி
சினமருத்தாள் போற்றி சின்மயம் போற்றி – தினமே

83. பாக்கிய லக்ஷ்மி போற்றி பக்தரக்ஷிகி போற்றி
யோக்ய லக்ஷ்மி போற்றி யுலகெலாம் – ஆக்கியே

84. ஆண்ட நாயகி போற்றி ஐவரைமீன்ற
நீண்ட நாயகி போற்றி நிமலியே – தாண்டவியே

85. நார்பத்து முக்கோண நாயகியே போற்றி
சீர்ப்பத்தி ஞான சேவடி போற்றி – காப்பாய்

86. பிறகு முனி மரபும் பெரும்சுண்டன்தாயுநீ
தருஞ் சாந்த னுத்தம சுகமுனிவன் – பெருக

87. காசி க்ஷேத்திர வாசி கபீர் கமால் மத்தான் குரு
தேசிகள் திருவடியைச் சென்னிமிசை ஆசையுடன்

88. பாச வினையறுத்த பண்ணவ நற்சங்கிலியின்
வாச வடிக் கமலம் வாழ்பெறவே – நேசமாய்

89. நிரந்தரமாய் நின்றகுரு நிருவாண தேசிகனை
சிரந்தாண்ட மாலை தேவியு நீ – வரந்தருவாய்

90. ஆசோடு மதுரம் சித்திரம் வித்தாராமாயறிந்தோர்
பேசிகின்ற நல்வாக்குப் பெருவே – நேசமாய்

91. அருளெனக் களிப்பாய் ஆனந்தி பூரணியே
பொருளெனக் கறிவானந்த போதமாய் – திருவளிக்கும்

92. பக்தர்கள் வாழ்தளவை நகர் பரவுகின்ற – திருமடத்துள்
பத்தினியே நின்றெளிக்கும் பாக்கியமே – முக்தர்நிதி

93. வைகுந்தன் தன் மரபும் வாழ்விக்கும் வைணவியே
மெய்யுகந்து வாழ்க மெய்த்தவந்தா – துய்ய

94. வாலையருள் வாழி மனோண்மணியே வாழி
சீல மயேஸ்வரி வழி திருவாழி – சாலவுமே

95. மாரி முத்துப்பாலன் வாக்கின்றுதி வாழி
தேரித்துதிப் போர்கள் செழிந்தோங்கி – வாழியவே

96. மூலமெனும் பிரணவத்தின் முடியோ உத்தரம்
உத்தமியாள் பாதமது வோங்குந் தெற்கு
சீலமதாய் கீழ்மேற்கின் இடவலத்தின் புஜமாய்
சிறந்த தியக்கரத்தின் கேவல ஜாக்கிறமாய்
மாலருளும் சொப்பனமும் மயங்கு சுழுத்தியதாய்
மயக்க மருந்துரிய வடிவாகிய வதீத
வாலை குரு நாகியாள் வளர்தரு ஸ்ரீங்கார
வட்ட முனை சார்ந்திடுவார் அற்புதராவாரே
                
                                          பழனி பட்டணம் மாரிமுத்து சுவாமிகள்
  நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
           இணையதளம்:  www.kaumaramutt.com
            
             சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!