திங்கள், 29 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-41

 தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்
என்பது அப்பர் சுவாமிகள் அருளிய தேவாரமாகும். 
                                   
கயிலைமலையில் தனது கால் பட்டு ஏறிச்சென்று இறைவனைக் காணக் கூடாது என்று கருதிய காரைக்கால் அம்மையார் அவர்கள் தன் தலையாலேயே ஏறிச் சென்றார் என்கின்றது தொண்டர் புராணம். 
அப்படித் தன்னுடைய தலையைக் கொண்டு முருகனைப் பணியாமல் இருக்கும் அடியேன் உலக மக்களின் பாசங்களில் நோக்கம் செலுத்தாமல் இருக்கும்படியாக என்னை வருத்திக் கொள்கின்றேன், முருகப்பெருமானே உனக்கு நிகர் வேறு யார்..... உனக்கு வேறு நிகர் இல்லாத மலர் போன்ற உன்னுடைய திருவடிகளில் என்னைச் சேர்த்து, ஏமாற்றுக்காரனாகிய என்னை ஆண்டருள்வாயாக. நடன கோலம் கொள்கின்ற இறைவனே, அடியவர்கள் மீது பிரியம் வைப்பவனே, யார் உனை அன்போடு நினைக்கின்றார்களோ அவர்களது உள்ளத்தில் நீங்காது நிறைந்து இருப்பவனே, ஜீவன் முக்தர்களுக்கு உனது திருவடிகளை அருள்பவனே திருக்காளத்திப் பெருமானே என்று நமது கௌமார குரு நாதர் அருணகிரி நாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத்திருப்புகழாகும்.
காளஹஸ்தி திருப்புகழ்
சிரத்தா னத்திற் பணியாதே
     செகத்தோர் பற்றைக் குறியாதே
வருத்தா மற்றொப் பிலதான
     மலர்த்தாள் வைத்தெத் தனையாள்வாய்
நிருத்தா கர்த்தத்  துவநேசா
     நினைத்தார் சித்தத் துறைவோனே
திருத்தாள் முத்தர்க்  கருள்வோனே
     திருக்கா ளத்திப்  பெருமாளே.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்


கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்,
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

சனி, 27 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-40

                                                       
 சுவாமிமலை திருப்புகழ்
நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்க ளுறவாமோ
உனதிரு வடியினி யருள்வாயே
மறைபயி லரிதிரு மருகோனே
மருவல ரசுரர்கள் குலகாலா
குறமகள் தனைமண மருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே!.

குருமலை மீது இருக்கும் முருகப்பெருமானே, குறமகள் வள்ளியை மணம் செய்தவரே, மறைகள் தேடி பயில்கின்ற ஹரியின் மருமகனே, அசுரர்களுக்கு காலனாக வந்தவரே,சந்திரன் போன்ற முகத்தையும், கணைகள் போன்ற விழிகளுமுடைய மகளிரோடு சேராமல் உன்னுடைய திருவடியை இனி அருள்வாயே என்று அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயண திருப்புகழாகும். குரு மலை என்பது சுவாமிமலையைக் குறிக்கும்.
                        
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்,
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-16

மாங்கல்யம் 
  • முருகப்பெருமான் ஜீவ நாடி உரைப்பதை நிறுத்தக்கூடாது என்றும் தெய்வ இரகசியங்களை இனிமேல் உரைக்கக்கூடாது என்றும் ஜீவ நாடியிலேயே ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு வாக்குரைத்தார். அதன் பின்பு சிறுக சிறுக மீண்டும் ஜீவ நாடியை மக்களுக்கு அருள்வாக்காக உரைக்கத் தொடங்கினார்கள் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்.
                                                          
  •          ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் உறவினர் ஒருவருக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க ஜீவ நாடி உரைத்து அது அப்படியே 100% பலித்ததை அறிந்த இன்னொருவர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் தனது தோட்டத்தில் ஆழ்துளைக்கிணறு அமைக்க வேண்டி ஜீவ நாடி கேட்க வந்தார். ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் உங்களது தோட்டத்திற்கு வருணசாபம் உண்டு என்றும் அங்கு ஆழ்துளைக்கிணறு அமைக்க வாய்ப்பில்லை என்றும் அப்படியே முயற்சித்தாலும் தண்ணீர் கிடைக்காது என்றும் ஜீவ நாடியில் முருகன் உரைத்ததை ஒளிவு மறைவில்லாமல் உரைத்தார்கள். ஆனாலும் ஒரு முயற்சி எடுத்துப் பார்க்கின்றேன் என்று கூறி தனது தோட்டத்தில் எட்டு இடங்களில் போர் போட்டும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்பதே ஆச்சரியமான செய்தி. இந்த தகவலும்  நீண்ட நாட்கள் அனைவராலும் பேசப்பட்டது.
  •          ஒருவர் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் அதற்கு தங்கள் ஆசி வேண்டும் என்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களைப் பணிந்தார். ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் முருகனை வணங்கி ஜீவ நாடியைப் பார்த்தார்கள். ஓலைச்சுவடியில் இரண்டு மாங்கல்யங்கள் காட்சி கொடுத்தன. இதைக் கண்டு அதிர்ந்த ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் இறை இரகசியத்தை அறிவிக்கக்கூடாது எனும் முருகனின் கட்டளையால் ஜாதகத்தில் 8மிடத்தில் கேது இருப்பதால் மாங்கல்ய தோஷம் இருக்கிறது என்று மட்டும் உரைத்து அதற்கு என சில பரிகாரங்களை உரைத்து அனுப்பி வைத்தார்கள். ஜீவ நாடியில் வந்தது போலவே அந்த பெண்ணின் கழுத்தில் ஒருவன் கட்டாயத் தாலி கட்டிவிட காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் தந்தை அந்த கயிற்றை அறுக்க, மீண்டும் அந்த பெண்ணிற்கு மணவாழ்க்கை அமைந்து ஜீவ நாடியில் வந்தது போலவே இரு மாங்கல்யம் அமைந்துவிட்டது அதிசயமாக இருந்தது எனலாம்.
  •          இப்படி படிக்கும் காலங்களில் விடுப்பு கிடைக்கும்போதெல்லாம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் பூஜை செய்வதும், தனது குரு தவத்திரு.வேலுச்சாமி அடிகளார் அவர்களைச் சந்திப்பதும், ஆன்மீக ஈடுபாடு கொள்வதும், நூல்களைப் படிப்பதும் என தனது வாழ்வை இறையருளோடு அமைத்துக் கொண்டார்கள். எனவே மக்கள் அனைவரும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களை சுவாமி என்றே அழைத்து மகிழ்ந்தார்கள். வயதில் சிறியனவாக இருந்தாலும் பெரிய பெரிய மனிதர்களெல்லாம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் ஆலோசனை கேட்டு அது அப்படியே 100% தங்கள் வாழ்வில் நடப்பது கண்டு பெரும்பாலோர் முருக பக்தர்களாக மாறினார்கள் எனலாம்.
                                                                                                                                 தொடரும்....

          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-39


தமிழ் மொழி என்றும் இளமை மாறாத மொழி. எம்பெருமான் முருகன் என்றும் அகலாத இளமையுடய பரம்பொருள்..தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, முருகப் பெருமானின் தோள்கள் பன்னிரெண்டு. முருகனுக்குத் திருமுகம் ஒவ்வொன்றிலும் மூன்று கண்களாக மொத்தம் பதினெட்டுக் கண்கள். தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு. முருகனின் முகங்கள் ஆறு. வீடுகள் ஆறு. மந்திர எழுத்து ஆறு தமிழில் இன எழுத்துக்கள் ஆறு. வல்லினம், மெல்லினம்,இடையினம் ஆகியவை ஆறு ஆறு எழுக்கள். முருகனின் ஆயுதம் வேல். இது எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிநிலை ஆயுதமாகும். வேலாயுதத்திற்கு மேலாயுதமில்லை என்பது பழமொழி.தமிழில் ஆயுத எழுத்து(ஃ) தனிநிலை. அதுமட்டுமல்ல, ஆயுதஎழுத்தின் மூன்று புள்ளிகளையும் பாருங்கள், வேல் வடிவில் அமைந்து இருக்கும்.இந்த ஆய்த எழுத்து போல் தனிநிலை எழுத்து வேறெந்த மொழியிலும் இல்லை. முருகன் என்றாலே அழகன். தமிழ் என்றாலும் அழகுதான். 
                                               
எனவே, முருகப்பெருமான் வேறு, தமிழ் வேறு அல்ல, முருகனே தமிழ், தமிழே முருகன்.. எனவேதான் முத்தமிழால் வைதாரையும் வாழவைப்போன் என்றார் அருணகிரிநாத சுவாமிகள். அப்படி தமிழே முருகனாகவும், முருகனே தமிழாகவும் இருப்பதால் நமது கௌமார குரு அருணகிரிநாத சுவாமிகள் இரவு பகல் மட்டுமில்லாமல் எல்லா காலங்களிலும் இயல் இசை நாடகம் எனும் முத்தமிழ்கூறி முருகா உன்னை வழிபடும் திறனைத்தந்தருள்வாயாக! பரம கருணாநிதியாகியவரே, பரசிவ தத்துவ ஞான சிவபெருமானின் புதல்வனே அருணகிரியாகிய அண்ணாமலையில் அருளும் பெருமாளே என்று தமிழ் பாட அருள்தர வேண்டி அருணகிரிநாத சுவாமிகள் அருணகிரி முருகப்பெருமானிடம் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத் திருப்புகழ்.
திருவண்ணாமலை திருப்புகழ்
இரவுபகல் பலகாலும் இயலிசைமுத் தமிழ்கூறித்
திறமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் துவஞான
அரனருள்சத் புதல்வோனே அருணகிரிப் பெருமாளே!

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

                             ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                       சிரவையதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

திங்கள், 22 பிப்ரவரி, 2016

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-15

                                                      
  •    முருகப்பெருமான் ஸ்ரீஸ்கந்த உபாசகர் மூலம் உரைத்தது அப்படியே 100% பலித்ததால் அந்த உறவினர் முருக பக்தராக மாறினார். அதன் பலனால் முருகப்பெருமான் மயில் வாகனம் செய்து வைக்குமாறு வேறு ஒரு அருள்வாக்கு சொல்லும் அம்மையார் மூலம் உரைக்க அப்படியே அவர் மயில் செய்து வைக்க ஆயத்தமானார். ஆனால் லிங்க வடிவில் அருவமாக முருகப்பெருமான் இருந்ததால் முருகனுக்கு என ஒரு உருவமும் செய்தால் நலம் என்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் விரும்பினார்கள். குருவின் விரும்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று மயிலுடன் பால முருகன் விக்கிரகமும் ஒரு பலி பீடமும் செய்து ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களே அதைப் பிரதிஷ்டை செய்து தாமே அனைத்துவிதமான வேள்விகளையும் வடமொழிப்படி செய்து குடமுழுக்கை நடத்தினார்கள். ஒரு சிறு மேடையில் சிறியதாக ஒரு கருவறை மட்டும் கட்டப்பட்டு பால முருகனை ஸ்தாபித்து, அதன் எதிரே மயில் பீடமும், பலி பீடமும் ஸ்தாபித்து, மூங்கிலால் ஆன ஒரு கொடி மரமும் நட்டு வைத்து சிறப்பாக ஸ்ரீஸ்கந்த உபாசகர் பூஜை செய்து வந்தார்கள்.
                         
  •         முருகனுக்கு மயில் வாகனம் செய்தால் உனக்கு ஒரு வீடு கட்டும் யோகம் வரும் என்று அந்த உறவினருக்கு வாக்கு வந்ததால் மயில் வைத்து பாலமுருகனுக்கு குடமுழுக்கு கண்ட உடனேயே அந்த உறவினர் ஒரு மாடி வீடு கட்டும் பாக்கியம் பெற்றார். எப்போதே இந்த பூமியை விட்டு இவர்கள் சென்றிருக்க வேண்டும் ஆனால் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் குருவருளாலும், ஞானஸ்கந்த மூர்த்தியின் திருவருளாலும் அவர்கள் இங்கு ஒரு வீடு கட்டினார்கள் என்று பலர் பேசி மகிழ்ந்தார்கள்.
                              
  •         இவ்விதம் பால முருகப்பெருமானும் மயிலும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தது.ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி விவசாய பூமியின் நடுவில் சின்ன கருவறையில் சிறிய மூர்த்தியாக இருந்தாலும் அவர் கீர்த்தியில் சிறந்து விளங்கி மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.
  •          ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் ஒரு பெண்மணி தனது மகள் மற்றும் மருமகனின் ஜாதகத்தைக் காண்பித்து ஆசியை வேண்டி நின்றார். அந்த இருவர் ஜாதகத்தைப் பார்த்து விட்டு சிறிது நேரம் தியானம் செய்ய ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் உள் மனதில் முருகப்பெருமான் ஒரு அதிர்ச்சி தகவலைத்தந்தார். என்ன அது? அந்த அம்மையாரின் பெண் விரைவில் இறந்துவிடும் என்பதாகும். ஸ்கந்த உபாசகருக்கு அப்போது 22 வயதே என்பதால் அவரும் சற்று தடுமாறிவிட்டார் என்றே சொல்லவேண்டும். இதை எப்படி உரைப்பது என யோசித்த ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் தனது ஜோதிட அறிவைப் பயன்படுத்தி அனைத்துவிதமான கணக்குகளையும் போட்டுப் பார்த்தும் பலன் மாற்றம் இல்லை. சரி என்று மறைமுகமாக நடக்கும் நிகழ்ச்சிகளை உரைத்தார். அந்த அம்மையாரும் புரிந்து கொண்டார். சரியாக ஒரு மாதம் கழித்து ஒரு அமாவாஸை தினத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் உரைத்தது போலவே அந்த அம்மையின் மகள் இறந்துவிட்டார். இந்த சம்பவம் ஸ்ரீஸ்கந்த உபாசகரையும் சற்று பாதிப்படையவே செய்தது. இவர் சொன்னது அப்படியே நடந்தது என்று அந்த பெண்மணி அனைவரிடமும் கூறினார். இதில் பெருமை ஏதுமில்லை என நினைத்த ஸ்ரீஸ்கந்த உபாச்கர் அவர்கள் அதுமுதல் சில மாதங்கள் யாருக்கும் வாக்கு உரைப்பதை விரும்பவில்லை. யார் கேட்டாலும் அடுத்த மாதம் பார்க்கலாம் என்று கூறி தனது படிப்பைக் கவனிக்க நேரம் இல்லை என்றும் கூறி வந்தார்கள்.
  •   ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் மனம் இளைமை காலம் முதலே இறையருளை நாடினாலும் தான் படித்த கல்வியில் ஒரு தாளில் கூட தோல்வி என்பதை அடையவே இல்லை. வெற்றி வேலன் அருளால் கல்வியை சிறப்பாகவே முடித்து அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் நல்ல தேர்ச்சியைப் பெற்று ஜடக் கல்வியையும் பெற்றார்கள் என்பதே உண்மை. தொடரும்....

கோவாவில் சிரவையாதீனம்!

கோவாவில் அகில இந்திய இந்து தர்ம ஆச்சாரிய சபாவின் 6ம் ஆண்டு சாதுக்கள் பேரவைக் கூட்டம் 19.2.2016 முதல்  21.2.2016  வரை சிறப்பாக நடந்தது. இந்தியா முழுவதும் பல்வேறு சாதுக்கள், மடாதிபதிகள், துறவியர்கள், சந்நியாசிகள் விழாவில் கலந்து கொண்டார்கள். அந்த விழாவில் சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் கலந்து கொண்டு நம் தமிழகத்திற்கும் கௌமார சமயத்திற்கும் நம் தண்டமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். அதன் படங்களில் சில நமது கௌமார பயணம் வாசகர்களுக்காக இங்கு வெளியிடப்படுகின்றது.



சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கௌமார மடாலய மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ்

மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ்


தினம் ஒரு திருப்புகழ் பகுதி-38


கல்லுதல் என்ற சொல்லுக்குத் தோண்டுதல் என்று பொருள். ஒருவன் தனது அறியாமையை நீக்கிக் கொள்ள சிறந்த கல்வி தேவைப்படுகின்றது. ஆனால் கல்வி கற்ற பின்பு பலரை எதிர்த்துப் பேசியும், தேவையில்லாமல் தாக்கியும், வாதம் விவாதம் செய்யவல்ல நூல்களைக் கற்று எப்போதுமே தர்க்கத்தில் ஈடுபடுகின்றவர்களும் ,
                                                
  இந்த உலகில் வாழ நிச்சயம் பொருள் வேண்டும், பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. ஆனால் அந்தப் பொருளைத் தேடிவைத்து ஒருவருக்கும் கொடுக்காமல் வாழ்க்கை நடத்துபவர்களும்
                              
மாதொருபாகன் சிவபெருமானின் செல்வமே என்று முருகா உன்னை நினைந்து உள்ளம் உருகாதவர்களும்
                               
தர்மநெறி மாறாத பெரும் யமன் இருக்கும் ஊரில் புகுந்து பிறந்து அலைச்சல் உறுவார்களாக இருப்பார்கள்.  நாத ரூபமாகிய இசையின் ஒட்டுமொத்த உருவமாக இருப்பவனே, மகாதேவராகிய சிவபெருமானின் திருவுள்ளத்தில் வீற்றிருப்போனே, சுவர்க்க லோகம் முதலிய பதினான்கு உலகங்களுக்கும் உரிமைக்காரனாக விளங்குவோனே, தீமையே செய்யாத வேல் வீரனே, சேவலைக் கொடியாக உடையவனே, தேவ தேவனே, தேவாதி தேவர்களுக்கெல்லாம் பெருமாளாக இருப்பவனே என்று நம் கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகள் இந்தத் திருப்புகழில் பாடியுள்ளார். இதோ அந்த பொது திருப்புகழ்.
திருப்புகழ் பொதுப்பாடல்
காதி மோதி வாதாடு நூல்கற்   றிடுவோருங்
காசு தேடி யீயாமல் வாழப்  பெறுவோரும்
மாதுபாகர் வாழ்வே யெனாநெக்  குருகாரும்
மாறி லாத மாகால னூர்புக் கலைவாரே
நாத ரூப மாநாத ராகத்       துறைவோனே
நாக லோக மீரேழு பாருக்  குரியோனே
தீதி லாத வேல்வீர சேவற்      கொடியோனே
தேவ தேவ தேவாதி தேவப்  பெருமாளே.

எனவே கல்வி அறிவு உடையவர்கள் தேவையில்லாமல் வீண் வாதங்களில் ஈடுபடாது குரு சொல்லும் மொழிகளைக் காதால் அடிக்கடி கேட்டு உள்வாங்கி உள் மனதில் அதை நிலை நிறுத்திக் கடைபிடித்து வரவேண்டும். அதேபோல் நல்ல செல்வ வளம் உடையவர்கள் தங்களது செல்வத்தின் ஒரு பகுதியை கௌமார நெறியாகிய குரு சேவைக்கு என ஒதுக்கி குரு புகழ் பாடியும், முருகப்பெருமானின் ஆலயங்களுக்கும், முருகனை பரம்பொருளாகக் கொண்டாடும் கௌமார சமயத்தார்களுக்கும் தேவையான சேவைகளைச் செய்து நல்ல நிலையை அடையலாம். சிவபெருமானே தனது செல்வமென நினைப்பவர் முருகப்பெருமான். எனவே எந்த நேரமும் முருகா...முருகா..எனும் இறை நாமத்தை ஓதி ஓதி உள்ளம் குழைந்து நெக்குறுகி முருகனை மனதால் வழிபட்டுக்கொண்டே இருக்க வேண்டும். எவர் ஒருவர் குருவை வழிபடுகின்றாரோ அவர் குகனாகிய முருகனை வழிபடுகின்றார் என்கின்றது சாத்திரம். 
                                 
எனவே தங்கள் குருவிற்கு உற்ற சேவைகளைச் செய்கின்ற வாய்ப்பை எதிர் நோக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.இப்படி இருப்பவர்கள் எமன் ஊர் புகமாட்டார்கள். மாறாக கந்தன் ஊர் புகுவார்கள் என்பது திண்ணம். முருகப்பெருமான ஈரேழு பதினான்கு உலகங்களும் புகழும் தெய்வம் என்பதால் நிச்சயம் இகபர சௌபாக்யம் அடைவது உறுதி.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்,
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

சனி, 20 பிப்ரவரி, 2016

கும்பகோணம் மகா மக விழாவில் சிரவையாதீனம்!

                                                           மகா மக குளம்
சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் கும்பகோணம் மகாமக விழாவிற்குச் சென்றுள்ளார்கள். அவர் நீராடச் சென்றிருப்பதை நினைத்த உடனேயே அவர் நீராடும் காட்சி ஸ்ரீஸ்கந்தஉபாசகரின் மனக்கண்ணில் தெரிகின்றது. உடனே பின்வரும் கவிதை பிறந்தது. எந்த ஒரு சம்பவத்தையும் நினைத்த உடனேயே ஒரு கவிதை சொல்லும் பழக்கம் நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு உண்டு. தனது குரு நீராடுகின்ற காட்சி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் மனக்கண் முன் தெரிகின்றது. அதன் பின் ஒரு நிமிடத்திற்கு ஒரு கவிதையாய் ஐந்து கவிதைகள் ஐந்து நிமிடத்தில் பிறக்கின்றது. அதை அப்படியே அவர் அனுபவித்த அற்புதத்தை அவரின் அபிமானிகள் அனைவரும் அனுபவிக்க வேண்டுமென்று நமது கௌமார பயணத்தில் வெளியிடுகின்றோம்.
                         
      கும்பகோணம் துறவியர் மாநாட்டில் சிரவையாதீனம் அவர்கள்
காட்சி 1
முதலிலே தனது ஞானதேசிகரின் பாதத்தை சிரமேல் வைத்து தமது ஞானதேசிகரை மனதிலே நினைக்கின்றார் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள். உடனே நீராடியபோது குருவின் பாதங்களில் உள்ள நீர் ஸ்ரீஸ்கந்த உபாசகரின் சிரத்தை ஈரமாக்குகின்றது. குருவிற்கு உடல் முழுதும் நீர் பட்ட உடனேயே ஸ்ரீஸ்கந்த உபாசகரின் உள்ளத்தில் குருவின் உருவம் எப்போதும் இருப்பதால் அவரது உள்ளம் குளிர்கின்றது. அதை விளக்கும் கவிதை இதோ:
கவிதை 1
மகத்து தினத்தில் குளத்து நீரில்
குளிக்க நினைத்து திருவடி பதிந்தனை
என் சிரம் நனைந்து என் உள்ளம் குளிர்ந்ததே
உம் திருவடி எம் சிரத்திலும்
உம் உருவம் என் உள்ளத்திலும்
உள்ளதால் அன்றோ!
காட்சி 2
                                    
குடந்தை குளத்தில் தனது குருநாதர் குளிக்க வருகின்றார் என்று செய்தியைக் கேள்விப்பட்டு காவிரி, கோதாவரி, சிந்து எனும் பல நதிகள் குளித்து மகிழ குளத்தை நோக்கி வருகின்றதாம். என் குரு குளிக்கும் செய்தியை அந்த நதிகளுக்குச் சொன்னது யார்? என நினைத்து ஸ்ரீஸ்கந்த உபாசகர் எழுதிய கவிதை இதோ
கவிதை 2
காவிரியும் கோதாவரியும் சிந்துவென பல நதிகளும்
குடந்தைக் குளத்தில் குளிக்க வருமாம்
சேதி சொன்னதாரடி.....
எம் ஞானதேசிகர் குளத்தில் குளிக்கும்
சேதி சொன்னதாரடி.....ஞானப்பெண்ணே
சேதி சொன்னதாரடி......
 காட்சி 3
                                         
மாசி மாதம் மகம்  நட்சத்திரம் பௌர்ணமியை ஒட்டி அமையும் என்பதால் வானத்தில் முழு நிலவு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. தனது குருவின் முகமும் அந்த முழு நிலவு போல் குளத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. இரு நிலவு உள்ளதே என்று மக்கள் அனைவரும் குழப்பம் அடைகின்றார்கள்.  அந்த எண்ணத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசக்ருக்கு பிறந்த கவிதை இதோ...
கவிதை 3
மகத்து நாளில் முழு நிலாக் காட்சியது ஞானப்பெண்ணே
முழு நிலாக் காட்சியது....
எம் ஞான ஆசான் முகத்தைப்பார்த்து
குழப்பமடைவர் இரு நிலா காட்சியென்று
ஞானப்பெண்ணே இரு நிலாக் காட்சியென்று
 காட்சி 4
                                      
மாசி மகா மகத்தில் குடந்தைக் குளத்தில் நீராடினால் மக்கள் பாவம் போய்விடும் என்று அனைவரும் நீராட வருகின்றார்கள். அந்தக் குளத்தின் பாவத்தைப் போக்குவது யார்? தனது குருவின் திருவடி பதிவதால் பாவம் போய்விடும் என்று கருதும் ஸ்ரீஸ்கந்த உபாசகருக்குப் பிறந்த கவிதை இதோ....
கவிதை 4
மகத்து குளத்தில் மக்கள் கூட்டம் பாவம் தீரவே
ஞானப்பெண்ணே..... தங்கள் பாவம் தீரவே
குளத்தின் பாவம் தீர ........என்ன செய்வதோ
ஞானப்பெண்ணே என்ன செய்வதோ
எம்ஞானதேசிகர் பாதம் பட்டால்
பாவம் தீருமே......... ஞானப்பெண்ணே பாவம் தீருமே!
காட்சி 5
                          
குளத்தில் தமது ஞானதேசிகர் குளிக்கின்ற இடத்தை நோக்கி தண்ணீரானது முந்திக் கொண்டு நாம் போய் அவர் குளிக்கும் நீராவோம் எனக்கருதி போட்டி போட்டுக்கொண்டு செல்வதால் அலை அடிக்கும் காட்சி ஸ்ரீஸ்கந்த உபாசகருக்குத் தெரிகின்றது. அதோ அந்த கவிதை....
கவிதை 5
குளத்து நீரில் குளிக்கும்போது அலை அடித்ததடி
ஞானப்பெண்ணே அலை அடித்ததடி
என் ஞான ஆசான் பாதம் தொடவே அலை அடித்ததடி
ஞானப்பெண்ணே நீர் அலை அடித்ததடி
                   
ஒரு நிமிடம்

குருவே பரம்பொருள் என்பது கௌமார நெறியாகும். குருவே சிவன் எனக்கூறினான்  நந்தி என்பது திருமந்திரம். அந்த வகையில் குருவை இறைவனாகவே ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் பாவித்து இந்தக் கவிதையை எழுதியிருக்கின்றார் என்று சொல்வதை விட இறைவன் மொழியை இவருக்குள் வந்த வார்த்தைகளை அப்படியே கவிதையாக்கியுள்ளார்கள் என்பதே பொருந்தும்.
                       
மகாமகக் குளம் சென்று நீராட முடியாதவர்கள் இந்த கவிதையையும் காட்சிகளையும் சிரவையாதீன குருவையும் ஒரு முறை நினைத்தாலே போதும் நமது பாவமெல்லாம் சூரியன் கண்ட பனிபோல் நீங்கிவிடும் என்கிறார் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள். 
                          
             ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                  சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-37

                           
பழமுதிர்ச்சோலை திருப்புகழ்
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி  அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி  வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி  வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம  முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.
                                                                


எங்கு எரிந்த கல்லும் வந்து இந்தப் பூமியில் எப்படி விழுந்திடுமோ அப்படி அவரவர் எப்படி எத்தன்மையில் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அவர்களுக்குச் சென்று அருள்வது ஒரே பரம்பொருள்தான் என்பது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கௌமார கூற்றாகும். அதேபோல் ஆரம்ப நிலையில் எந்த தெய்வத்தை ஒருவன் வழிபடுகின்றானோ அதே தெய்வமே அனைத்து தெய்வமாக அவதாரம் செய்து அருள்கின்றது என்று அந்த பக்தன் எண்ணுவதே சமய, சமரசக் கொள்கை என்பதும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கௌமார கூற்றாகும். அந்த சமய, சமரச உணர்வில் நின்று அருணகிரிநாத சுவாமிகள் இந்தத் திருப்புகழைப் பாடியுள்ளார்.அதனால்தான் அனைத்துமாக நின்று அருள்வது முருகனேதான் என்று பாடுகின்றார். தொடர்ந்து படியுங்கள் இந்தத் தத்துவங்கள் புரியும்.
   எழுத்துக்களில்
எனும் எழுத்து முதலில் இருப்பது. வள்ளுவரும் அகர முதல எழுத்தெல்லாம் என்கிறார். அந்த எழுத்து போல எப்பொருளுக்கும் முதன்மையாகி எல்லாவற்றிற்கும் தலைவனாகி எல்லோருக்கும் மேம்பட்டவனாகி  யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி பிரமன் என்னும் படைக்கும் கடவுளாகி  திருமால் என்னும் காக்கும் கடவுளாகி சிவன் என்னும் அழிக்கும் கடவுளாகி அந்த மும்மூர்த்திகளுக்கும் மேலான பொருளாகி இங்குள்ள பொருட்கள் அனைத்துமாகி  எங்கெங்கும் உள்ள பொருட்களுமாகி இனிமை தரும் பொருளாகி வருகின்ற முருகப்பெருமானே!
                             
    மிகவும் பிரமாண்டமான இந்த பெரிய  நிலத்தில்  எளியவனாகிய இந்த அடியேனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும், யாகங்களுக்குத் தலைவனாக விளங்கும் வலாசுரப் பகைவனாகிய இந்திரன் மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும் அழகிய வடிவம் கொண்டவனே, 
                           
முருகனது வேலுக்குப் பெருமை தன்னால்தான் என்று அகந்தை கொண்ட பிரமனை முருகன் சபிக்க, பிரமன் அந்திமான் என்ற வேடனாக இலங்கையில் பிறந்தான். தான் கொல்ல முயன்ற பிப்பலாத முனிவரால் அந்திமான் ஞானம் பெற்று கதிர்காமத்தில் உள்ள முருகப்பெருமானை கிருத்திகை விரதம் இருந்து வழிபட்டு வணங்கி, அருள் பெற்ற காட்டில் வசித்த வேடன் அந்திமான் செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற கதிர்காமம் உடையோனே 
                                
ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே செல்வங்கள் அனைத்தும் நிறைந்த பழமுதிர்ச்சோலை மலையின்மீது வீற்றிருக்கும் பெருமாளே. 
                                  
என்று பழமுதிர்சோலை முருகன் மீது அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத் திருப்புகழ். இந்த திருப்புகழை சதா காலமும் ஓதுகின்றவர்கள் நாவிற்கு அடிக்கடி அறுசுவை உணவு கிட்டும் என்றும் எப்போதுமே அவர்கள் கையில் பணம் புரளும் என்றும் அந்த அளவு லட்சுமி கடாட்சத்தைத் தரவல்லது இந்தத் திருப்புகழ் என்று சொல்லப்படுவதால் வாசகர்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இது போன்ற திருப்புகழை மனப்பாடம் செய்து கொண்டு மனதில் ஜபித்து வர முயற்சி எடுக்கலாம். ஒரு சில நல்ல நிகழ்ச்சிகள் நடக்கத் துவங்கியவுடன் நீங்களே இதன் மகிமையை அறிந்து கொண்டு செயல் புரியத் துவங்குவீர்கள்.
நன்றி:சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                              
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்,
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
   ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
    சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-14

      
  •   ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஆரம்பகாலத்தில் பெரிய அளவில் இறை நம்பிக்கை இல்லாமல் இருந்தார். அவரது சொத்து முழுவதும் பறிபோய்விடும் நிலையில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களை வந்து சந்தித்தார். அப்போது இன்னும் மூன்று ஆண்டுகள் பொறுமையாக இருந்தால் நல்ல செல்வ நிலை அடைவாய் என்றும், பூமி பிரச்சினை நீங்கும் என்றும், பூமியை விற்க முடியாது என்றும், மூன்றாண்டு கழித்து படிப்படியாக வாழ்வு வளமடையத் துவங்கும் என்றும் ஸ்ரீஸ்கந்த உபாசகர்கள் அவர்கள் உரைத்து ஆசியிட்டு விபூதி கொடுத்து அனுப்பி வைத்தார்கள். அப்போது இந்த உறவினருக்குப் பெரிய அளவில்  நம்பிக்கை இல்லை என்பதால் பூமியை விற்பதற்கு எவ்வளவோ முயற்சி எடுத்தார். முடியவில்லை. மூன்று ஆண்டுகளும் படாத சிரமங்களை அனுபவித்தார். மூன்று ஆண்டுகள் முடிந்தது மீண்டும் ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் வந்தார். அப்போது உனது தோட்டத்திற்கு தண்ணீர் பெறும் யோகம் வந்துவிட்டது உடனே ஒரு குறிப்பிட்ட நாளில் போர் போடு என்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் உரைத்தார்கள். கையில் பணம் இல்லையே என்றார் உறவினர். ஐம்பது சதவீதம் போதும் என்று பதில் உரைத்தார்கள் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள். அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை.
  •          ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் உரைத்தது போலவே மூன்று ஆண்டுகள் இருந்தது கண்டு உறவினருக்கு ஓரளவு நம்பிக்கை வரத்துவங்கியது. எனவே ஆழ்துளைக் கிணறு போட வண்டி வந்துவிட்டது. ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களும் நேரிலேயே சென்று அங்கேயே இருந்தார்கள். குறிப்பிட்ட அளவு போர் போட்டும் ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை. அனைவரும் சற்று நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். ஆனால் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் நம்பிக்கையூட்டி சில நேரம் முயற்சி செய்யச் சொன்னார்கள். ஒரு பெரிய பாறாங்கல்லின்மீது மோதி போர் போடும் துளைக்கும் எந்திரம் உடைந்து விட்டது. அனைவருக்கும் இன்னும் நம்பிக்கை போனது. எவ்வளவு முயன்றும் அந்த துளைக்கும் கருவியை எடுக்க முடியவில்லை.
                                               
  •          ஆனால் நடந்தது அதிசயம். சில நேரத்தில் பெரிய அளவில் நீர் வரத் துவங்கியது. அனைவரும் மகிழந்தனர். நீர் இன்னும் அதிகமானது. சுமார் 10 ஏக்கர் அளவு பாய்ச்சுகின்ற நீரானது வந்தது. ஐம்பது சதவீதம் என்று உரைத்த ஸ்ரீஸ்கந்த உபாசகரின் வாக்கு அப்படியே பலித்தது. அதாவது பாறையில் சிக்கியதால் இருவருக்குமே இழப்பு என்பதால் போர் வண்டியின் உரிமையாளர் பாதி பணம் மட்டுமே பெற்றுக்கொண்டார். அதேபோல் முழுப்பாறையும் ஒழுங்காக உடைந்திருந்தால் முழு அளவு தண்ணீர் வந்திருக்கும். பாதி பாறை உடைந்ததால் பாதியளவான 50% தண்ணீர் மட்டுமே வந்தது. இந்த சம்பவம் ஸ்ரீஸ்கந்த உபாசகரின் 22ம் வயதில் நடந்ததாகும்.
                                             
  •     இந்த சம்பவம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் வாக்குப் பலித சக்தியையும் ஜீவ நாடியில் உரைக்கும் முருகனின் அதிசயத்தையும் அனைவரையும் உணர வைத்தது.
  •          அதன்பின்பு அந்த உறவினர் ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கும் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்திக்கும் பக்தராக மாறி இன்று வரை சிறப்பாக பல்வேறு சேவைகளை செய்து வருகின்றார்.

                                                       தொடரும்...


           ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-36

       
 சூரியனிடம் இருந்து வருகின்ற ஒளிக்கதிர்களைக் கூர்ந்து நோக்கினால் அது ஓம் எனும் சப்தத்தோடு வெளிவந்து கொண்டிருப்பதைக் காண முடிகின்றது என்றும், இந்த பூமி சுற்றும்போது ஓம்.... ஓம்.... ஓம்... எனும் பிரணவத்தின் ஒலியோடு சுற்றி வருகின்றது என்றும்
                           
 திருநள்ளாற்றின் பகுதிகளில் சனிக் கிரகத்தின் நீல நிறக் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதால் சில விநாடிகள் செயற்கைக்கோள்கள் ஸ்தம்பிக்கின்றது என்றும் பழனி மலை மீது செவ்வாய் கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது என்றும், விண்மீண்களின் கீச்சுக் குரல்களைக் கேட்க முடியும் என்றும் இன்றைய அறிவியல் ஆய்வு செய்து பார்த்துவிட்டுக் கூறுகின்றது. நாசா சொன்னால்தான் நம்புவேன் என்பவர்கள் இதையெல்லாம் சொன்னது நாசாதான் என்பதால் சற்று மெய்ஞானத்தின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. ஆன்மீகம் என்றாலே மூட நம்பிக்கைகளை வளர்ப்பது எனும் ஒரு தவறான கொள்கை மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்ட இந்த நேரத்தில் இந்த செய்திகளெல்லாம் ஆன்மிகம் என்பது எல்லாவற்றிற்கும் அப்பால் பட்டது அது மனிதனுக்கு அவசியத் தேவை என்பதை உணரவைக்க ஒரு வாய்ப்பை வழ்ங்கியுள்ளது எனலாம். இதைத் தான் அருணகிரிநாத சுவாமிகள் ஓரெழுத்திக் ஆறெழுத்தை ஓதி வைத்த பெருமாளே என்று பாடியுள்ளார். பிரணவத்தின் இரகசியம் இன்னும் பல கோடிகள் இருந்தாலும் இப்போது நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓம் கார ஒலியின் இரகசியம் நிச்சயம் அந்த பிரவணத்தின் பொருளில் ஒரு சிறு துளிதான் என்பது திண்ணமாகும். 
வேதங்களே மலையாகி நின்று இருக்க்கூடிய திருக்கழுக்குன்றத்திலும்,
                             
வள்ளிமலையில் உள்ள தினைப்புனத்திலும் விரும்பி இருக்கும் பேரழகு உடையவனே, 
                             
வேடர் மகளாகிய வேடுவச்சி எனப்படும் வள்ளியின் பாதத் தாமரையின் மீது வெட்சி மாலை அணிந்த உன் திருமுடி படும்படியாக காதலித்து,
                                                      
   ஆட்கொள்ளும் வேளை இது என்று சமயத்தில் தினைப்புனத்துக்குள் புகுந்த பன்னிரு தோள்களை உடைய நண்பனே
                                     
மிகுந்த ஆர்வத்துடன் நான் உன்னை அன்புடன் வழிபாடு செய்ய உரிய அறிவை உபதேச மொழியாகச் சொல்லி அருள்வாயாக. வெகுண்டு வந்த வீரபத்திரரின் துணைவியான காளி வெட்கம் அடையும்படி தமது கிரீடத்தை வானில் முட்டும்படி உயரமாக வீசி விட்டு ஊர்த்துவ தாண்டவம் ஆடிய பாதத்தை உடைய பரமசிவன், 
                         
பக்தியுள்ள தேவர்களுக்கு கற்பித்த நாதராகிய சிவபெருமான், உன்னிடம் பாடம் கேட்கவும், சிவனால் ஓதுவிக்கப்பட்ட பிரமன் வெட்கமடையவும்,  ஓரெழுத்தாகிய ஒப்பற்ற ஓம்கார ப்ரணவ மந்திரத்தில், ஆறெழுத்தை விளக்கி அந்தச் சிவனுக்கே உபதேசித்த பெருமாளே.
                              
எனவே இந்த சிந்தனையோடு இன்றைய திருப்புகழைப் பாராயணம் செய்யுங்கள்.
திருக்கழுக்குன்றம் திருப்புகழ்
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு  மபிராம
     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை  முடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி  புயநேய
     ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி  புகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்க மகுடாமா
     காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி  யிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்த முநிநாண
     ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த  பெருமாளே.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
                     ஓம்ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                         சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!