திங்கள், 28 மார்ச், 2016

02.04.2016 அன்று கோவை கௌமார மடாலயத்தில் பக்தமான்மிய சொற்பொழிவு

                                      தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள்
கோவை கௌமார மடாலயத்தில் 02.04.2016 சனிக்கிழைமை அன்று தவத்திரு கந்தசாமி சுவாமிகள் இயற்றிய வைணவ அடியார்களின் வரலாற்றை விளக்கும் பக்தமான்மிய சொற்பொழிவு அருந்தமிழ் வேள்வி சிரவையாதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற உள்ளது. நமது கௌமாரபயணம் வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு தமிழமுதையும் பக்தமான்மியப் பெருமையையும் சுவைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அழைப்பிதழ்

அனைவரும் வருக!!! அருள் பெருக!!! ஆனந்தம் அடைக!!! 
                                            சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

வியாழன், 17 மார்ச், 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-46

நீதியின் தத்துவமாகி, சிறந்த ஒழுக்கத்தின் துணையாகி, பூதங்களாகிய உயிர்களின் மேல் தயவாகிய அன்பைத் தந்தருள்வாயே.  நாதமாகிய ஒலியும் தொனியாகிய ஓசையுமாக இருப்பவனே, ஞானக் கடலோனே, கோது என்று சொல்லக்கூடிய குற்றமேதுமில்லாத அமுதோனே, கூடற் பெருமாளே என்று நமது கௌமார அகச்சந்தான குருநாதர் அருணகிரிநாத சுவாமிகள் மதுரையம்பதி மீது பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத் திருப்புகழாகும்.
மதுரை திருப்புகழ்
நீதத் துவமாகி நேமத் துணையாகிப்
பூதத் தயவான போதைத் தருவாயே
நாதத் தொனியோனே ஞானக்கடலோனே
கோதற் றமுதானே கூடற் பெருமாளே.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்

கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
                                     ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                           சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

புதன், 16 மார்ச், 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-45

                                      
விலைமாதர்களுடைய மார்பகங்களிலும், வேலின் கூர்மையான பகுதிக்கு ஒப்ப இருக்கும் கண்களிலும்,  அவர்களோடு உறவாடி உழலாமல், எனது  ஊர் போல் திகழும் உனது திருப்பாதங்களைத் தந்து அருள் புரிவாயே.  நீராகி  கடல் போல் இருக்கும் இந்த உலகத்தை வலமாக  மயிலின் மேல் பறந்து வருகின்ற முருகப்பெருமானே 
                                                
சூடு நிறைந்த ஒரு ஜோதி மலையில், திருவண்ணாமலையில் இருக்கும், சோணாடு என்று சொல்லக்கூடிய சோழ நாட்டார் புகழுகின்ற தேவர்களின் பெருமாளே. என்று திருவண்ணாமலை மீது நமது கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகளால் பாடப்பட்ட திருப்புகழே இன்றைய பாராயணத்திருப்புகழாகும்.
திருவருணைத் திருப்புகழ்
கோடான மடவார்கள் முலைமீதே
கூர்வேலை யிணையான விழியூடே
ஊடாடி யவரோடு முழலாதே
ஊராகத் திகழ்பாத மருள்வாயே
நீடாழி சுழல்தேசம் வலமாக
நீடோடி மயில்மீது   வருவோனே
சூடான தொருசோதி மலைமேவு
சோணாடு புகழ்தேவர் பெருமாளே.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்

 கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

                        ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                      சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

சனி, 5 மார்ச், 2016

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி-37

                                     காசி சுவாமிகளுடன் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்
சென்ற இதழில் அவிநாசி மற்றும் திருமுருகன் பூண்டி ஆகிய திருத்தலங்களில் காசி சுவாமிகள் மூலம் ஜீவ நாடியில் சொல்லிய வாக்கின்படி முருகப்பெருமான் நடத்திய திருவிளையாடல்களப் பார்த்தோம். அதில் எமது ஞானதேசிகர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களின் குரு நாதர் தவத்திரு.கஜ பூஜை சுந்தர சுவாமிகளின் படம் வெளியானது பெரிய அதிசய நிகழ்வாக அமைந்து விட்டது. காரணம் சுந்தர சுவாமிகளின் படத்தை நானும் கொடுக்கவில்லை ஆசிரியரும் கொடுக்கவில்லை. ஆனாலும் பத்திரிக்கையை வடிவமைத்தவர் நமது kaumarapayanam.blogspot.in எனும் நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தின் பிளாக்கில் இருந்து தேவாரம் பாடிய சுந்தரர் இவர்தான் எனக்கருதி  நமது பரமகுரு நாதரின் படத்தைப் போட்டுவிட்டார். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இந்த செய்தியை தென்சேரிமலை ஆதீனம் தவத்திரு.முத்துசிவராமி அடிகளார் அவர்களிடம் தெரிவித்தபோது அவிநாசி திருத்தலத்திற்கு முதல் திருப்பணி செய்தவர் சுந்தர பாண்டியன் எனும் மன்னன் என்றும், தேவாரம் பாடியவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் என்றும் அவினாசித் தேர் எரிந்தபின்பு சுமார் 50 லட்சம் செலவு செய்து உடனே இருந்து தேர்ப்பணிகள் செய்து குடமுழக்கை நடத்தியவர் நம் சுந்தர சுவாமிகள் என்றும் அந்த அவினாசி பற்றிய தகவல்கள் வெளிவரும் கட்டுரையில் இயல்பாகவே சுந்தர சுவாமிகள் படம் வந்துள்ளது அந்த அவினாசியப்பரின் திருவருள் என்றும் என்னிடம் தெரிவித்து மகிழ்ந்தார்கள். மேலும் இந்த செய்திகள் அனைத்தையும் எமது ஞானதேசிகர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களிடம் தெரிவித்தேன் அவர்களும் மனம் மகிழ்ந்து அவிநாசிக்கு தமது குரு நாதர் செய்த திருப்பணி விவரங்களை என்னிடம் கூறினார்கள். இப்படி ஒரு அதிசயம் நடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கண்ட கௌமார தரிசனம் பற்றி இதுவரை நாம் பல இடங்களில் பார்த்து வந்தோம். அதாவது சமய, சமரச, சமயாதீத தத்துவமே அது என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். இதைப்பற்றிய கூடுதல் மெய்ஞானத் தகவல்கள் அடங்கிய பொக்கிஷமான புத்தகங்கள் கோவை கௌமார மடாலயத்தில் இருக்கின்றது. தண்டபாணி சுவாமிகளின் பாடல்கள் அனைத்தும் அடங்கிய ஓலைச்சுவடிகள் கௌமார மடாலயத்தில் இருக்கின்றது. அந்தப் பாடல்களை சுவடியில் இருந்து எடுத்து எழுதி அதைப் பொருளோடு எமது ஞானதேசிகர் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் அவர்களின் ஆசியோடு புத்தகவடிவில் எழுதிவருகின்றார் பழுத்த தமிழ் ஞானியான சிரவைஆதீனப் பெரும் புலவர் திரு. ப.வெ.நாகராஜன் ஐயா அவர்கள். புலவர் அவர்கள்  நம் சுவாமிகளின் குருநாதர் தவத்திரு.கஜ பூஜை சுந்தர சுவாமிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்து பல்வேறு தமிழ்ச்சேவைகளைச் செய்தவர்.  வாசகர்கள் அனைவரும் கௌமார மடாலத்தில் வெளியிடப்படும் அனைத்து நூல்களையும் படிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கின்றேன். தமிழை ஆய்வு செய்பவர்களுக்கு என ஒரு பெரிய நூலகமே கௌமார மடாலயத்தில் இயங்கி வருகின்றது. தண்டமிழ்க்கடவுள் முருகனுக்கு தமிழையே போற்றி பெரும் சேவை செய்து வருகின்றார் எமது ஞானதேசிகர் அவர்கள். புலவர் அவர்கள் எழுதிய சீர்மிகு சிரவை ஆதீனம் எனும் கௌமார மடாலய வரலாற்று நூலே அன்னை மீனாட்சி நாடியில் உரைத்த எனது முன் ஜென்ம தொடர்பிற்கு பெரும் விளக்கத்தை எனக்கு அளித்தது. 2500 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது திருவண்ணாமலை மீனாட்சி நாடி எனும் ஓலைச்சுவடி. அதில் காடை குலத்தில் வேளாளர் வம்சத்தில் கொங்கு நாட்டில் இவன் ஒரு மடம் சமைத்து கௌமார சேவை செய்வான் என்றும் அதே காடை குலத்தில் வேளாளர் வம்சத்தில் கொங்கு நாட்டில் தோன்றிய கௌமார மடாலயத்தில் முன் ஜென்ம தொடர்புடையவன் இன்னவன் என்பதால் அங்கு உபதேசம் பெறுவான் என்று அடியேனைப் பற்றி எழுதப்பட்ட குறிப்பு அன்னை மீனாட்சி நாடியில் இருக்கின்றது. அந்தியூர் எனும் பெயர்கூட இருந்தது ஆச்சரியம். இதை என்னிடம் நெருக்கமாக இருக்கின்ற சில அடியார்கள் மட்டுமே அறிவார்கள். நீண்ட காலமாக ஒரு விடை கிடைக்காமல் அலைந்து வரும்போது கௌமார மடாலய வரலாற்று நூலான சீர்மிகு சிரவை ஆதீனம் எனும் நூலைப் படிக்க நேரிட்டது. அந்த நூலில் கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை கௌமார மடலாயம் கொங்கு வெள்ளாளர் வம்சத்தில் காடை குலத்தில் அவதாரம் செய்து கௌமார மடாலயம் ஸ்தாபித்த வரலாற்றையும் காண நேர்ந்தது. நாடியில் எழுதப்பட்டது 100% மிகச்சரியாக இருப்பது கண்டு ஏற்கனவே 13 வயதில் முருகனின் ஆறெழுத்து மந்திரத்தை தவத்திரு. வேலுச்சாமி அடிகளார் வந்தாலும் மீனாட்சி நாடி உரைத்த முன் ஜென்ம குரு பீடமாகிய கௌமார மடாலயத்தில் மஹா சந்நிதானம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் அவர்களிடம் உபதேசம் பெற்றேன். உபதேசம் கொடுத்த உடனேயே ஒரு ஆச்சரியம் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. என்ன அது? 20 ஆண்டுகளுக்கு முன்பு தவத்திரு. வேலுச்சாமி அடிகளார் என்ன மந்திரத்தை உபதேசம் செய்தார்களோ அதே மந்திரத்தை எமது ஞான தேசிகர் எனக்கு உபதேசம் செய்ததுதான் அந்த ஆச்சரியம். இது பூர்வஜென்மத்தை உறுதி செய்வதற்கு ஆதாரமாக அமைந்தது.இதையெல்லாம் எதற்காக எழுதுகின்றேன் என்றால் தெய்வ நம்பிக்கையும் குருபக்தியும் இருந்தால் எல்லாமே நம்மைத் தேடி வரும் என்பதற்குத்தான் என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்கே.       மற்ற படி இது சுய விளம்பரமாகாது என்பதும் கண்கூடு. நமது முன்னோர்கள் பலர் தாம் கண்ட தெய்வீகக் காட்சிகளை அவர்களுக்குள்ளேயே மறைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். எனவே இளைஞர்கள் அந்த இறையருள் சுவையை உணராமல் நாத்திகவாத்தில் சிக்கி வயது போன பின்பு சங்கரா...சங்கரா... என்கின்றனர். எனவே என்னைப் பொறுத்தவரையில் எந்த ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிவிடுவது வழக்கம். இது ஒரு மனிதனையாவது குருபக்தியில் ஆழ்த்திவிட்டால் போதும். மற்றவை தானாக நடக்கும். இப்படி எனது முன் ஜென்ம கண்ணைத் திறந்தது மீனாட்சி நாடிதான் என்றாலும் அதற்கு வழிகாட்டியது பெரும்புலவர்.ப.வெ.நா ஐயா அவர்கள் எழுதிய சீர்மிகு சிரவை ஆதீனம் எனும் புத்தகமே. முதன் முதலாக எமது ஞானதேசிகரைச் சந்தித்த போது  நமது பாரம்பரிய முருக பக்தியைக் கைவிட்டுச் செல்லும் மக்களை மீண்டும் முருக வழிபாட்டின் அமுதத்தைத் சுவைக்க வைக்க வேண்டும் என்று உபதேசம் செய்தார்கள். அப்போதே நாம் அந்த வழியில்தான் இருக்கின்றோம் எனும் ஒரு பெருமிதம் ஏற்பட்டது. அதன்பின்பு நமது ஞானஸ்கந்தாஸ்ரமம் அமைத்து மூன்று ஆண்டுகள் கழித்த பின்பு எமது ஞானதேசிகர் அவர்கள் நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்திற்கு திருக்கல்யாண உற்சவத்திற்கு எழுந்தருளினார்கள். திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்கள் பழனியில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்களிடம் உபதேசம் பெற்று கோவையில் கௌமார மடம் சமைத்தது போல் அடியேன் கோவை கௌமார மடாலயத்தில் இருந்து உபதேசம் பெற்று நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தைச் சமைக்கும்படி திருவருள் கூட்டியுள்ளது. இந்தத் தகவல் மீனாட்சி நாடியில் இருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். எனவே நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்திற்கு குரு பீடமாகத் திகழ்வது கோவை சிரவை ஆதீனமாகிய கௌமார மடாலயம். சரி சென்ற கட்டுரையின் தொடர்ச்சியைக் காண்போம். திருமுருகன்பூண்டி எனும் திருத்தலத்தில் இருந்து கிளம்பி எங்கள் வாகனம் காசி சுவாமிகளுடனேயே பவானி கூடுதுறை கோவில் நோக்கி விரைந்தது. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது. வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம். இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் பெயர் பெற்றது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் எனபது மக்களின் நம்பிக்கையாகும். அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கு வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாய்த் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் பொன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றுமுள்ளன. ஒருமுறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும். இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.
இப்படி ஒவ்வொரு இடங்களிலும் விளக்கங்களப் பெற்றுக் கொண்டே வழிபட்டு வந்தோம். காசி சுவாமிகள் எந்தவித உபதேசமும் செய்யவில்லை மௌனமாகவே இருந்தார். நாங்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. சிறப்பாக வழிபட்டு ஓர் இடத்தில் அனைவரும் அமர்ந்தோம். சிவனுக்கு குரு யார்? எனும் கேள்வியை என்னை நோக்கி கேட்டார் காசி சுவாமிகள். சிவனுக்கு யார் குருவாக இருக்கமுடியும் சுவாமி. சிவனே பரம்பொருள் எனும் போது சிவனுக்கு ஏது குரு என்றேன். இல்லை இல்லை சிவனுக்கு குரு உண்டு. அது யார்? என்றார் காசி சுவாமிகள். நான் முருகனா என்றேன். முருகன் எனும் நாமத்தைக் கேட்ட உடனேயே வந்த்து பாருங்கள் ஒரு ருத்ர கோபம் முகம் முழுதும் சிவந்து என்னை பார்த்து ஒரு முறைப்பான பார்வை ஒனறைப் பார்த்தார். அந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நிச்சயம் அடித்திருப்பார் என நினைக்கிறேன். முருகனா...குரு... என்றார். நான் பிரணவ உபதேசம் செய்த கதையைக் கூறி அதனால் முருகனே சிவனின் குரு என்றேன்.இல்லை...இல்லை...சிவனின் குரு நந்தி என்றார். சரி என்று சொல்லி கிளம்பி அடுத்த்தலமான திருச்செங்கோடு எனும் தலத்தை அடைந்தோம்.
                                                                    தொடரும்...

ஓம்ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வியாழன், 3 மார்ச், 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-44

ஐயர்மலை எனும் இரத்னகிரி
பக்தியால் அடியேன் உன்னை பல காலங்களிலும் விடாமல் பற்றிக்கொண்டு உயர்வு பொருந்திய ஒப்புயர்வற்ற திருப்புகழைப் பாடி அடியேன் முக்தனாகுமாறு பெருவாழ்வில் முத்தியே சேர்ந்து உய்வதற்கு அருள்வாயே முருகா... உத்தமமான  நல்ல குணங்களைக் கொண்டுள்ள  இயல்புள்ளவர்களின் நண்பனே ஒப்புமை இல்லாத பெருமை பொருந்திய ரத்னகிரியில் வாசம் செய்பவனே வித்தகனே.... திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனே வெற்றிவேலாயுதப் பெருமாளே.... என்று திருச்சி மாவட்டம் குளித்தலை அருகில் இருக்கும் இரத்தினகிரி மீது நமது கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயாணத் திருப்புகழாகும். இந்த திருப்புகழில் பக்தியால் எப்போதுமே திருப்புகழைப் பாடிக்கொண்டே இருந்தால் முக்திக்கு வேறு செயல்கள் செய்யத்தேவையில்லை என்பது நமது கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகளின் சீரிய உபதேசம் ஆகும். எனவே திருப்புகழைக் கேளீர் தினம்.
இரத்தினகிரி திருப்புகழ்
பத்தியால் யானுனைப்  பலகாலும்
     பற்றியே மாதிருப் புகழ்பாடி
முத்தனா மாறெனைப்  பெருவாழ்வின்
     முத்தியே சேர்வதற்  கருள்வாயே
உத்தமா தானசற்  குணர்நேயா
     ஒப்பிலா மாமணிக்  கிரிவாசா
வித்தகா ஞானசத்  திநிபாதா
     வெற்றிவே லாயுதப் பெருமாளே.
                                          
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்

பார் போற்றும்  கௌமார மடத்தின்
சீர்மிகு  சிரவை நான்காம் சந்நிதானம்
தேர்தன்னை தன் கரத்தால் வடம்பிடிக்கும்
சீர்மிகு காட்சியென் சிந்தை நிறைந்ததே!!!!
                                                                   -ஸ்ரீஸ்கந்த உபாசகர்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
               ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!
                  சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

புதன், 2 மார்ச், 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-43

.                                       
காலிலே அணிகின்ற தண்டையும்,  அதே போல் வெண்டையம் எனும் காலணியும், கிண்கிணி, சலங்கையும், குளிர்ச்சி பொருந்திய அருள் நிறைந்த கழல்களும், சிலம்புடன் கொஞ்சவே முருகா உன் தந்தையாகிய சிவபெருமானை அன்பாக  வலம்வந்து நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே,  மனம் ஒன்றுபட, கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், சூரனை அழித்த வேலும், பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், நிலவின் ஒளிகளும், என் கண்கள் குளிரும்படியாக என்றன்முன் சந்தியாவோ

                                               
தாமரையில் தோன்றியவன் பிரம்மாவின் உலகமும், அதனை உட்கொண்ட வெளியண்டங்களும், மகிழ்ச்சி பொங்கி எழ, முருகா நீ போர்க்களம் புகுந்த போதுபொன்மலை என்னும்படி அழகு சிறந்து எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று  தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவ பெருமானுன்  மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக  நீ கொண்ட நடனப் பாதங்கள்  திருச்செந்தூர் ஆகிய இந்தப் இடத்திலும், என் முன் கொஞ்சி நடனங் கொளும் கந்தவேளே 
                                                  
குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் மார்பை நுகர்கின்றவரே கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. என்று திருச்செந்தூரில் அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத்திருப்புகழாக மலர்கின்றது. திருச்செந்தூரில் அருணகிரிநாத சுவாமிகளுக்கு முருகப்பெருமான் நடன கோலத்தைக் காட்டி அருளியதாக இந்த திருப்புகழ் இயம்புகின்றது. எனவே முருகனை ஆவாஹனம் செய்யும் பூஜை நேரங்களில் இந்த திருப்புகழைப் பாடினால் நடனமாடிக் கொண்டே வந்து முருகப்பெருமான் நாம் ஆவாஹனம் செய்யும் கலசத்தில் அமர்வார் என்பது நிச்சயம்.
திருச்செந்தூர் திருப்புகழ்
தண்டையணி வெண்டையுங் கிண்கிணிச தங்கையுந்
     தண்கழல்சி லம்புடன்  கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
     சந்தொடம ணைந்துநின் றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
     கஞ்சமலர் செங்கையுஞ்  சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
     கண்குளிர என்றன்முன் சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
     பொங்கியெழ வெங்களங் கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
     புண்டரிகர் தந்தையுஞ்  சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
     கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
     கும்பமுநி கும்பிடுந் தம்பிரானே!!!!
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                               
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
                                  ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                              சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

முருகன் ஜீவ நாடியில் தோன்றி அருள்வாக்கு சொல்லும் அற்புத ஸ்தலம்



நன்றி: திருவருள் சக்தி மாத இதழ், அப்ஸரா பப்ளிகேஷன்ஸ், சென்னை

ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

செவ்வாய், 1 மார்ச், 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-42

                                                                        விராலிமலை
வயலூரில் அருணகிரிநாத சுவாமிகளுக்குக் காட்சி தந்த முருகப்பெருமான் விராலிமலைக்கு வா என்கிறார். எனவே அருணகிரிநாத சுவாமிகள் விராலிமலை செல்கின்றார். விராலிமலை எங்கே இருக்கின்றது என்று வழி தெரியாமல் அருணகிரிநாத சுவாமிகள் தவிக்கவே வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து அருணகிரிநாத சுவாமிகளுக்கு வழிகாட்டி அழைத்து வந்தார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் இந்த விராலிமலை. இந்த விராலிமலைத்தலத்தில் அருணகிரிநாத சுவாமிகளுக்கு அஷ்டமாசித்தியை முருகப்பெருமான் அருளியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு உன்னத தலத்தின் மீது அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத்திருப்புகழாகும்.
                                                     
மால் என்று சொல்லக் கூடிய மயக்கம், ஆசை, கோபம் ஆகியவை ஓயாமல் எல்லா நாளும் மாயாவிகார வழியே செல்கின்ற அடியேன் மகாபாவி, காளியாகிய இருட்டு போன்று தீயகுணம் உள்ளவன்தான் என்றாலும் நாதனே, இனிமேல் நீதான் எனக்கு மாதா, பிதா என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள். முருகப்பெருமானே, விராலிமலியில் இருப்பவரே அடியேன் நான்கு வேத நூல்களையும், 28 ஆகமங்கள் ஆகிய பிற நூல்களையும் படித்தது இல்லை. எனது வாழ்நாள் முழுவதும் வீணாகப் போய் விடாமல் முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கும் நிலையான ஞானோபதேசத்தை அருள வேண்டும் என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள்.  பாலனே, செங்குவளை மலரின் மீது பிரியம் உடையவனே,  நகைகளின் மீது சந்தனம்பூசிய அழகனே, பாதாளம், பூமியிரண்டுக்கும் ஆதாரமாய் உள்ளவனே, மீனினங்களும் தண்ணீரும் நிறைந்த மேற்கு வயலூரில் குடிகொண்டவனே,வேலனே, விராலிமலை வாழ்வே, சமூக வேதாள, பேய்கள், பூதகணங்கள் வணங்கும் இறைவனின் குமாரனே, வீரனே, கொடுமையான சூரனுக்குப் பகைவனே,செவ்வேளே, தேவர்களுக்குப்  பெருமாளே என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள். இதோ அந்த திருப்புகழ்.
விராலிமலை திருப்புகழ்
மாலாசை கோபம் ஓயாதென்னாளும் மாயாவிகார வழியே செல்
மாபாவி காளி தானேனு நாத மாதா பிதாவும் இனி நீயே
நாலான வேத நூலாகம் ஆதி நானோதினேனும் இலை வீணே
நாள் போய்விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே!
பாலா கலாரம் ஆமோத லேப பாடீர வாக அணி மீதே
பாதாள பூமி ஆதாரம் மீன பானீயம் மேலை வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக வேதாள பூத பதி சேயே
வீரா கடோர சூராரியே செவ்வேளே சுரேசர் பெருமாளே!
நன்றி:சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                      
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
                    ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                            சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!