வியாழன், 22 ஜூன், 2017

வைகாசி விசாகம் திருநாள்

அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடத்தில் வைகாசி விசாகம் திரு நாள் நிகழ்வு 07.06.2017 புதன்கிழமை அன்று  நடந்தது. முருகப்பெருமானுக்கு அபிடேக ஆராதனை செய்யப்பட்டு பாலமுருகனை குழந்தையாக தாலாட்டும் ஊஞ்சள் வழிபாடு நிகழ்த்தப்பட்டது. ஜீவ நாடியில் வந்த வாக்கின்படி குழந்தை வரம் வேண்டி வந்த நூற்றுக்கும் மேம்பட்டவர்களுக்கு குழந்தை அருள் திருவமுது வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு குழந்தை அருள் திருவமுது  பெற்ற பெரும்பாலான பக்தர்கள் பிள்ளைச்செல்வம்  அடைந்துள்ளார்கள் என்பதும் பலர் தற்போது மணிவயிறு வாய்த்துள்ளார்கள் என்பதும் கண்கூடு. கலியுகத் துன்பத்தை ஓட்டி நல்ல வரம் தரும் அருள்மிகு ஞானகந்தக் கடவுள் கருணையால்தான் இப்படி பல அதிசயங்கள் நடந்து வருவது உள்ளங்கை நெல்லிக்கனியாம். வைகாசி விசாக பூசையின் சில படங்கள்.



ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

18ம் ஆண்டு திருப்புகழ் இசை விழா அழைப்பிதழ் 08.07.2017 சனிக்கிழமை


18ம் ஆண்டு திருப்புகழ் இசை விழா அழைப்பிதழ் 
நாள்:08.07.2017 சனிக்கிழமை
இடம்:கௌமார மடாலயம் கோவை, 
நேரம்: மாலை 4 மணி முதல் 7 மணி வரை

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

ஜீவநாடி உரைத்தபடி செய்த பெருமாள் வழிபாடு

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி மூலம் தங்கள் குடும்ப தெய்வம் சில ஆண்டுகளாகப் பூஜை செய்யப்படாமல் இருந்ததைக் கண்டு முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்தபடியே பெருமாளுக்குப் பூஜை செய்து மெய் சிலிர்க்கும் அனுபவம் பெற்ற ஒரு வாசகியின் அனுபவத்தைப் பார்ப்போம்.
முருகப் பெருமான் ஜீவநாடி மூலம் நடத்திய அதிசயங்கள் ஏராளம். சுவாமிகள் நாடி படிக்கத் தொடங்கியவுடன் பூர்வீகத்தில் தெய்வம் உள்ளதாகவும், அதற்குப் பூஜை முறை மாற்றங்கள் வேண்டும் என்றும் நாடியில் உரைக்கப்பட்டது. எங்கள் முன்னோர்கள் பேழையில் (முத்திரைப் பெட்டி) பெருமாளை வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு இரண்டு தலைமுறையாக பூஜை முறைகள் சரியாக செய்யப்படவில்லை. அதைப் பற்றி  ஜீவநாடியில்  எங்களுக்கு பின்வருமாறு உரைத்தது மிகவும் அதிசயமாக இருந்தது. அதற்கு சுதர்ஸன ஹோமம் செய்து அத்தெய்வ குற்றத்தை நீக்குமாறும் ஜீவநாடியில் உரைக்கப்பட்டது. பின் பெருமாள் அஷ்டோத்ரம், விஷ்ணு சகஸ்கரநாமம் பாராயணம் செய்யவும், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பஜன், பகவானுடைய பக்தி கதைகள் சொல்லியும், கோ பூஜை, சுதர்ஸன ஹோமம் ஆயிரத்தெட்டு ஆவர்த்தி, திருத்துளாய் அர்ச்சனை செய்யுமாறும் நாடியில் உரைக்கப்பட்டது. பின் காரமடை ரங்கநாதர் கோவிலில் உள்ள இருபத்தியேழு விஷ்ணு தாசர்களைக் கொண்டு சங்கு சேவண்டி முழங்க பூஜை செய்து, அவர்களுக்கு வஸ்த்திரம் கொடுத்து அன்னதானம் செய்து  அவர்களிடத்தில் துளசியும், அட்சதையும் கொடுத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஆசி வாங்குமாறும் நாடியில் உரைக்கப்பட்டது. பின் வைணவ ஆச்சார்யர்களைக் கொண்டு எங்கள் தோட்டத்தில் முத்திரைப் பெட்டியில் இருக்கும் பெருமாளுக்கு அனைத்து வாரிசுகளும் சேர்ந்து ஜீவநாடியில் உரைத்தது போல  பெருமாள் அஷ்டோத்ரம், விஷ்ணு சகஸ்கரநாமம் பாராயணம் செய்து, திண்டுக்கல் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பஜன் குழுவினரைக் கொண்டு பஜன், மற்றும் பகவத் கீதை உபதேசம் சொல்லியும், கோ பூஜை மற்றும் சுதர்சன ஹோமம் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. எங்கள் குலதெய்வத்தின் அருளாலும், எங்கள் குடும்ப தெய்வம் பெருமாளின் அருளாலும், எங்கள் குரு ஸ்கந்த உபாசகரின் ஆசியாலும் பூஜையை மிகவும் சிறப்பாக செய்தோம். எங்கள் குரு ஸ்கந்த உபாசகர் ஜீவநாடியில் உரைத்ததால் தான் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பூஜை செய்யும் பாக்யம் கிடைத்தது. இந்த பூஜை முடிந்தவுடன் அனைவருக்கும் ஜீவநாடி கேட்குமாறு உரைக்கப்பட்டது. இனி அடுத்து ஜீவநாடியில் முருகப் பெருமான் என்ன உரைப்பார் என்பதை கேட்க ஆவலாக உள்ளோம்.

              








              ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

வெள்ளி, 16 ஜூன், 2017

கௌமார அமுதம் மாத இதழ்

 கௌமார அமுதம் மாத இதழ்
கோவை சின்னவேடம்பட்டியில் உள்ளது முருகப்பெருமானுக்கே என உருவான கௌமார மடம். முருகப்பெருமானைப் பரம்பொருளாகக் கொண்டு அறு சமயத்தையும் ஒரு சமயமாகக் கருதி நெறி காட்டும் மார்க்கமே கௌமாரம் ஆகும். கோவை கௌமார மடம் உருவாகி நூறாண்டுகளுக்கும் மேல் ஆகின்றது. தற்போது நான்காம் சந்நிதானமாகிய தவத்திரு. முனைவர் குமரகுருபர சுவாமிகள் அவர்கள் அருட் செங்கோல் செலுத்தும் இந்த நேரத்தில் மடத்தில் இருந்து பல ஆண்டுகளாக கௌமார அமுதம் எனும் மாத இதழ் வெளிவந்து கொண்டிருக்கின்றது. பெரும்புலவர் திரு.ப.வெ.நாகராஜன் அவர்கள் குழுவில் நமது சிரவையாதீனம் சுவாமிகள் சிறப்பாசிரியராக இருந்து தண்டமிழ்க் கடவுள் முருகனின் தமிழ்பாடி தமிழ்ச்சுவை சொட்ட நாமெல்லாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டி வருகின்றது கௌமார அமுதம் மாத இதழ். இந்த மாத அட்டைப் படம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பின் அட்டையில் சிரவை மூன்றாம் குரு மஹா சந்நிதானங்கள் தவத்திரு. கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு குரு பூஜை விழா படங்கள் அலங்காரம் செய்கின்றன. அந்த விழாவில் பன்னிரு திருமுறைகள் விளக்கவுரை, கந்த புராணம் விளக்கவுரை, திருவிளையாடற்புராணம் விளக்கவுரை (வர்த்தமானன் பதிப்பகம்) , கந்தரந்தாதி சொற்பொழிவு ஆய்வு நூல் என தமிழுக்குத் தொண்டாற்றும் வண்ணம்  நமது சிரவையாதீனம் சுவாமிகள்  வெளியிட்டு பெருமை செய்தார்கள். 

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!