வியாழன், 29 அக்டோபர், 2015

கோவை கௌமார மடாலயத்தில் கந்த சஷ்டி விழா !



மன்மத ஆண்டு ஐப்பசி மாதம் 26ம் நாள் 12.11.2015 வியாழக்கிழமை முதல் கார்த்திகை மாதம் 2ம் தேதி 18.11.2015 புதன் கிழமை முடிய கோவை சரவணம்பட்டி, சிரவணபுரம் கௌமார மடாலயம் அருள்மிகு தண்டபாணிக்கடவுள் திருக்கோவிலில் 57 ம் ஆண்டு லட்சார்ச்சனை, கந்த
சஷ்டித்திருவிழாவானது தவத்திரு சிரவை ஆதினம் குமர குருபர சுவாமிகள் தலைமையில் சீரும் சிறப்பாக நடக்க இருக்கின்றது.

12.11.2015 வியாழக்கிழமை அன்று

காலை 7 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம்

காலை 10 மணிக்கு வேள்வி அருச்சனை, பூசை

மாலை 7 மணிக்கு வேள்வி, மூல மந்திர அருச்சனை, பூசை

13.11.2015 வெள்ளி முதல் 16.11.2015 திங்கள் முடிய 

காலை 7 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம்

காலை 10 மணிக்கும்
மாலை 7 மணிக்கும்  : வேள்வி, மூலமந்திர அர்ச்சனை, பூஜை.

17.11.2015 செவ்வாய்க்கிழமை அன்று

காலை 7 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம்

காலை 10 மணிக்கு வேள்வி அருச்சனை, பூசை

பிற்பகல் 2.30 மணிக்கு சண்முக அருச்சனை

மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம், வீரபாகு தூது, சிங்கமுகன், தாராகன் வதம்

இரவு 7.00 மணிக்கு தெய்வானையார் தவசுக் காட்சி

18.11.2015 புதன் கிழமை அன்று

காலை 7 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம்

காலை 9.30 மணிக்கு வேள்வி, சிறப்பு அபிடேகம்

பிற்பகல் 12.00 மணிக்கு தெய்வாணை அம்மையார் திருக்கல்யாணம், பேரொளி வழிபாடு

பிற்பகல் 1.00 மணிக்கு திருமண விருந்து

இந்த விழாவில் நமது கௌமாரப் பயணம் வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு முருகப் பெருமானின் வம்சாவளி குரு நாதராகிய சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகளின் குரு அருளையும், தண்டபாணிக் கடவுள் மற்றும் உற்சவர் குமர குருபரக் கடவுளின் அருளையும் பெற்று வாழ்வில் வற்றாத செல்வமும், வளமும் பெற்று வாழும் படி நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜீவ நாடி கலை அரசு அந்தியூர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

                             ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

அழைப்பிதழ்


நிகழ்ச்சி நிரல்


சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் ஸ்வாமிகளின் கோடிக்கரை புனித கடல் வழிபாடு !



சிரவை ஆதினம்  தவத்திரு குமரகுருபரர் ஸ்வாமிகள் மற்றும் தென்சேரிமலை ஆதினம் தவத்திரு முத்து சிவ ராமசாமி அடிகளார் அவர்களும் தங்கள் அடியார்களுடன் இன்று கோடிக்கரை புனித கடல் வழிபாட்டை சிறப்பாக முடித்தனர்.
அவற்றுள் சில....

சிரவை ஆதினம் குமரகுருபரர் ஸ்வாமிகள் மற்றும் தென்சேரிமலை ஆதினம் தவத்திரு முத்து சிவ ராமசாமி சுவாமிகளுடன் அடியார்கள்.

எங்கள் குருநாதர் திரு.ஜெகதீஸ்வரன் ஸ்வாமிகள் மற்றும் ஞானஸ் கந்தா ஆசிரமம் சார்பாக சிரவை ஆதினம் குமரகுருபரர் சுவாமிகள் மற்றும் தென்சேரிமலை ஆதினம் தவத்திரு முத்து சிவ ராமசாமி சுவாமிகள் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.

தவத்திரு சிரவை ஆதினம் குமரகுருபரர் ஸ்வாமிகள் அருளிய முருகன் - 60 சுவராசிய தகவல்கள் !



1. முருகனின் திருவுருவங்கள்: 
1. சக்திதரர், 
2. கந்த சுவாமி,
3. தேவசேனாதிபதி, 
4. சுப்பிரமணியர், 
5. கஜவாகனர், 
6. சரவணபவர், 
7. கார்த்திகேயர், 
8. குமாரசுவாமி, 
9. சண்முகர், 
10. தாரகாரி, 
11. சேனாபதி, 
12. பிரமசாத்தர், 
13. வள்ளி கல்யாண சுந்தரர், 
14. பாலசுவாமி, 
15. கிரவுஞ்ச பேதனர், 
16. சிகிவாகனர் எனப்படும். 

2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது. 

4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.

1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 

2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,

3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும். 

5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது. 

6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும். 

7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும். 

8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சிய ளிக்கிறார். வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள். 

9. முருகன் இறைபணிச் செல்வர்கள்: 
1. அகத்தியர், 
2. அருணகிரி நாதர், 
3. ஒளவையார், 
4. பாம்பன் சுவாமிகள், 
5. அப்பர் அடிகளார், 
6. நக்கீரர், 
7. முசுகுந்தர், 
8. சிகண்டி முனிவர்,
9. குணசீலர், 
10. முருகம்மையார், 
11. திருமுருககிருபானந்த வாரியார், 
12. வள்ளிமலைச் சுவாமிகள், 
ஆகியோர் ஆவார்கள். 

10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும். 

11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.

12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும். 

13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும். 

14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் "கார்த்திகேயன்'' என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான். 

15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது. 

16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும். 

17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான "திருப்புகழ்'' நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர். 

18. "முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்'' என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார். 

19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான். 

20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான். 

21. முருகனைக் குறித்துக் "குமார சம்பவம்'' என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர். 

22. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது. 

23. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழிபட்டனர். 

24. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர் இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர். 

25. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும். 

26. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர். 

27. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது. 

28. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம். 

29. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும். 

30. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும். 

31. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார். 

32. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது. 

33. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது. 

34. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும். 

35. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும். 

36. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம். 

37. பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன், பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறுகின்றன. 

38. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது. 

39. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன. 

40. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

41. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும். 

42. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர். 

43. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம். 

44. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார். 

45. சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ளது புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல சவுபாக்கியங்களும் முருகனால் உண்டாகும். 

46. சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள் கொண்ட மலைமீது முருகன் கோவில் உள்ளது. 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்று இது. இங்கு சிவன் கோவிலும் உண்டு. இந்த தலத்தின் பெயர் திருத்தங்கல் ஆகும். 

47. தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி முருகன் கோவிலில் 1957-ல் இழுக்கப்பட்டது. 

48. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள். 

9. கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார். 

50. முருக வழிபாடு என்பது ஷண்மம் என்று சொல்லப்படுகின்றது. 

51. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது. 

52. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும். 

53. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது. 

54. கந்தனுக்குரிய விரதங்கள்: 
1. வார விரதம், 
2. நட்சத்திர விரதம், 
3. திதி விரதம். 

55. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். 

56. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார். 

57. முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை. 

58. வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறை எடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும். 

59. பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் கோவிலில் முருகன் 6

அடி உயரத்தில் உள்ளார். இங்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி

கொடையுடனும் காட்சி தருகிறார்கள். இப்படி வேறு எங்குமில்லை.

60. முருகப் பெருமானின் திருவடி பட்ட இடம் ஞானமலை ஆகும்.

புதன், 28 அக்டோபர், 2015

கோவை ஸ்ரீ தர்ம சாஸ்தா பள்ளியில் குரு பூஜை !





கோவை ஸ்ரீ தர்ம சாஸ்தா பள்ளி குரு பூஜைக்கு தலைமை வகித்த சிரவை ஆதீனம் கோவை ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நடத்தப்படும் விளாங்குறிச்சி ஸ்ரீ தர்ம சாஸ்தா பள்ளியில் நடைபெற்ற மாத்ரு பூஜை, குரு பூஜையில் சிரவை ஆதீனம்  தவத்திரு. குமர குருபர சுவாமிகள் தலமை வகித்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி, அங்கு இருந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அருளாசி வழங்கினார்கள்.


நமது ஞானஸ்கந்தாஸ்ரமம் சார்பாகவும் நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வர சுவாமிகள் சார்பாகவும்,  நமது கௌமாரப் பயணம் இணையத்தின் சார்பாகவும் சிரவை ஆதீனத்தை வணங்கி மகிழ்கின்றோம்.

                                           ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

மாணவ, மாணவிகளுக்கு சிரவை ஆதீனம் பாராட்டு!

 


இசைப்போட்டியில் முதலிடம் பெற்ற மாண, மாணவிகளுக்கு சிரவை ஆதீனம் பாராட்டு விழா  கோவை கணபதி சின்னவேடம்பட்டி கவுமார மடா லயத்தின் ராமானந்த அடிகளார் மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான இசைப் போட்டியில் முதலிடம் பெற்றனர். அவர்களை சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்  வாழ்த்தினார். நமது ஞானஸ்கந்தாஸ்ரமம் சார்பாகவும் நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வர சுவாமிகள் சார்பாகவும்,  நமது கௌமாரப் பயணம் இணையத்தின் சார்பாகவும் மாணவ மாணவிகளை வாழ்த்தி மகிழ்கின்றோம்.




குறிப்பு: தவத்திரு ராமானந்த சுவாமிகள் சிரவை ஆதினத்தின் முதல் குரு மகா சந்நிதானம் ஆவார். பழநியில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் உபதேசம் பெற்று கோவையில் கவுமார மடத்தை ஸ்தாபிதம் செய்தவர் தவத்திரு ராமானந்த சுவாமிகள் அவர்கள். அவரது பெயரால் செயல்படும் இந்த பள்ளி மாணவ மாணவியரே இசைப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கோடிக்கரை குழகர் கோவிலில் சிரவை ஆதினம் !



கௌமார மடாதிபதி சிரவை ஆதினம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் அவர்கள் கோடிக்கரை குழகர் கோவில் சென்று வந்தார்கள். அதன் படத்தை நமது கௌமாரப்பயணம் வாசகர்கள் தரிசித்து மகிழுங்கள்.




கோடிக்கரை குழகர் கோவில் பற்றி நமது குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வர சுவாமிகள் அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்கள் அதையும் வாசகர்கள் அறிந்து கொள்ளுங்கள். திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதக் கலசத்தை வாயு பகவான், தேவருலகிற்கு எடுத்துச் சென்ற போது அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்கமாக ஆயிற்று என்று
தலவரலாறு கூறுகிறது. சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வந்த சுந்தரர், கோயில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்தி பாடியதாக வரலாறு சொல்லப்படுகிறது.

இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும். தட்சிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் தல தீர்த்தமாகிய கடலில் நீராடுவது சிறப்பு எனக் கருதுகின்றனர். இத்தலத்து முருகப்பெருமான் ஓர் முகமும், ஆறு கரங்களும், ஏனைய ஆயுதங்களுடன் ஒரு திருக்கரத்தில் அமுத கலசமும் ஏந்தியிருக்கிறார். அமுத கலசம் ஏந்தியிருப்பது தலப்புராணம்  தொடர்புடையதாக இருக்கலாம். இத்தலத்து விநாயகரும் "அமிர்த விநாயகராவார்"

கடற்கரையிலுள்ள சித்தர் கோயிலில் சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக நம்பப்படுகிறது. நவகிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன; இத்தலம் கோளிலி தலம் எனப்படுகிறது. இந்த தலத்தைப் போற்றி சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் உள்ளன.ஏழாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பாடல், கொல்லிப் பண்ணில் அமைந்தது.

“கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்
குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே. (7.32.1)

”கோடிக்குழகர் கோயிலின் அயலிலும் அதன் புறத்திலும் எங்கும் தேடியும் ஒரு குடியும் காணாத நிலையில், கோயிலுள் புகுந்து இறைவரின் திருவடியைத் தொழுது உள்ளம் வருந்தி மலர் போன்ற கண்களில் நீர் வரக் `கடிதாய்க் காற்று' எனத் தொடங்கும் பதிகம் பாடிக், கொற்றவையுடன்
இறைவர் வீற்றிருக்கின்ற தன்மையையும் அப்பதிகத்துள் வைத்துப் போற்றினர்.

பொன்னியின் செல்வன் என்னும் நூலில் இரண்டாம் பாகத்தின் முதல் அத்தியாயத்தில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இத்தலத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனார் வந்து இறைவனை வணங்கியதாகவும், இத்தலத்து இறைவன் தனிமையில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

திங்கள், 26 அக்டோபர், 2015

ராமேஸ்வரத்தில் சிரவை ஆதினம் தலைமையில் பைரவருக்கு குடமுழுக்கு விழா !







ராமேஸ்வரத்தில் உள்ள பைரவர் கோவிலில் சிரவை ஆதினம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமையில் திரு நெறிய தெய்வத் தமிழ் முறைப்படி இன்று 26.10.2015 குடமுழுக்கு பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது. அதில் நிகழ்வுகள் சில.....


                                   
                                  குடமுழுக்கு பூஜையில்  குமர குருபர சுவாமிகள் அவர்கள்




                                     

அடியார்களுடன் ஆலோசனையில் குமர குருபர சுவாமிகள் அவர்கள்

 எங்கள் குருநாதர் திரு ஜெகதீஸ்வரன் சுவாமிகள் மற்றும் ஞானஸ் கந்தா ஆசிரமம் சார்பாக தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம் .


                                         ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும்               

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 34 !







ஜெர்மனிக்காரருக்கு உரைக்கப்பட்ட ஜீவ நாடி

ஜெர்மனியில் இருந்து திரு.ஆனந்த் என்பவர் அடிக்கடி நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர்  ஜெகதீஸ்வர சுவாமிகளைத் தொடர்பு கொண்டு தனக்கு ஜீவ நாடி படிக்கும்படி கேட்டு வந்தார். நமது குரு நாதரும் ஒரு நாள் தொலை பேசியிலேயே ஜீவ நாடியைப் படிக்குமாறு இறை கட்டளை வந்தவுடன் ஆனந்த் அவர்களுக்கு நாடி உரைத்தார். மிக மிகத் துல்லியமாக ஆனந்த் மட்டுமே அறிந்த ரகசியங்களை நாடியில் முருகப் பெருமான் உரைத்து உனக்கு விரைவில்  நல்ல வேலை கிட்டும் என்றும், உனது சொந்த ஊரிலேயே வேலை கிட்டும் என்றும் இன்னும் ஒரு மாதம் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் உரைத்தார்.

அதே போல் காகம் போல் ஒரு பறவை அடிக்கடி உன்னிடம் வரும் என்றார். முருகப் பெருமான் உரைத்தது போலவே ஒரு மாதத்தில் வேலை அவரது சொந்த நாட்டிலேயே கிடைத்தது. அதே போல் காகம் ஒன்று வந்து அவரிடம் பழக ஆரம்பித்தது. முதல் முறையாக வெளி நாட்டுக்காரர் ஒருவருக்கு ஜீவ நாடி தொலைபேசியில் படிக்கப் பட்டது. இனிமேலும் அவ்விதம் பலருக்குப் படிக்க விரைவில் உத்தரவு வரும் எனவும் நாடியில் உரைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய ஒரு பதிவை  நாடி அனுபவத்தை ஆனந்த் அவர்கள் எழுத உள்ளார்கள். அதுவும் விரைவில் வெளியிடப்படும்.

அதுபோல் நமது ஞானஸ்கந்தர் ஜீவ நாடி நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வர சுவாமிகள் மூலம் நட்த்திய திருவிளையாடல்களில் 200 க்கும் மேற்பட்ட குழந்தை பாக்கியம், 100 க்கும் மேற்பட்ட நடக்கவே முடியாத அளவு இருந்த திருமணம், பலபேருக்கு தொழிலில் அதிரடி மாற்றம், தீராத் நோய் கூட தீர்ந்த அதிசயம் என தினசரி பல அதிசயங்கள் நடந்து வருகின்றன.

                எல்லாமே இந்த இணயத்தில் இனி தொடர்ந்து எழுதப்படும்.


                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?





குலதெய்வங்கள் என்றால் என்ன ..?

அவர்களின் பெருமை என்ன...?

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?

நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறுதெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.அதன் சக்தியை அளவிடமுடியாது எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.



அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்அழைக்கப்படுகின்றன.குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?



நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி
வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரியஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில்  சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.



இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்.இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று.அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.இது எத்தனை  தூரப்பார்வையோடு,வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்! விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே  ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23  க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமோ சோமே முடிவு செய்கிறது.



தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும்
தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.
ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது.வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.



இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்,பெண் குழந்தைகளை  குல விளக்காக காத்தனர்.பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை.ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y
க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.
எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்.அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது. பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.



பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்.புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில்  உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.



இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின்  அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி(குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.



அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அனைத்து நலன்களும் பெற்றிடுங்கள்.

                                               

                         ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும் 

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

ராமேஸ்வரத்தில் சிரவை ஆதினம் !






ராமேஸ்வரத்தில் உள்ள பைரவர் கோவிலில் சிரவை ஆதினம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் . திரு நெறிய தெய்வத் தமிழ் முறைப்படி இன்று 26.10.2015 திங்கட்கிழைமை குடமுழுக்கை நடத்துகிறார்கள்.


அதேபோல் இன்று மாலை திருமறைக்காடு செல்கிறார்கள். சுவாமிகளை ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் சார்பாகவும்  நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர்
ஜெகதீஸ்வர சுவாமிகள் சார்பாகவும் வாழ்த்தி வணங்கி மகிழ்கின்றோம்.



                                             ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும் 

கோவை சரவணம்பட்டியில் குடமுழுக்கை நடத்திய சிரவை ஆதினம் ! ! !








சிரவை ஆதினம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களின் பூர்வாஸ்ரம ஊரான சரவணம்பட்டியில்  நடைபெற்ற திருக்குட நீராட்டு விழாவில் பணியாற்றிய தொண்டர்களுடன் சிரவை ஆதினம் அவர்கள்.





ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும் 

சிரவை ஆதினம் நடத்திய குடமுழக்கு விழா !





ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 25.10.2015 ஞாயிற்றுக் கிழைமை அன்று காலை 8.30 மணிக்கு அங்காளம்மன் ஆலய குடமுழுக்கு விழா இனிதே நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிரவை ஆதினம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் வருகை தந்து குடமுழுக்கை நடத்தினார்கள். திரு நெறிய தெய்வத் தமிழ் முறைப்படி இந்த குடமுழுக்கு கௌமார மடாலய அன்பர்களால் சீரும் சிறப்புமாக தமிழ் முறைப்படி நடத்தப்பட்டது. நமது ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் சார்பாக நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வர சுவாமிகள் அவர்களும் இந்த விழாவிற்குச் சென்று இருந்தார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

                                              ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும் 

வெள்ளி, 23 அக்டோபர், 2015

கௌமார மடாலயத்தில் திருக்குறள் போட்டி !


                                 சிரவையாதீனம்,தவத்திரு குமரகுருபர சுவாமிகள்.



கோவை சின்ன வேடம்பட்டி கௌமார மடாலயத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான திருக்குறள் போட்டி வருகின்ற நவம்பர் 1இல் நடைபெற உள்ளது.


கணபதி,தமிழ் சங்கம் மற்றும் சிரவை ஆதினம் சுந்தரஸ்வாமிகள் தமிழ் ஆய்வு மையம் சார்பில்,திருக்குறள் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.நடப்பாண்டு,திருக்குறள் ஒப்புவித்தல்,கவிதை,கதை எழுதுதல்,தமிழ் இலக்கியம் மற்றும் வரலாறு சார்ந்த ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

அதேபோல நாட்டு விடுதலைக்காக  உழைத்த 132 தேசிய தலைவர்களின் புகைப்பட கண்காட்சியும் நடைபெற உள்ளது.பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கௌமார மடாலயத்தின் சார்பில் கேட்டுகொள்கிறோம்.

வியாழன், 22 அக்டோபர், 2015

கௌமார மடாலயத்தில் எழுத்தாணிப்பால் விழா !


மன்மத ஆண்டு குரு வாரத்தில் விஜயதசமியாகிய இன்று கோவை சரவணம்பட்டி கௌமாரமடாலயத்தில் சிரைவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில்  எழுத்தாணிப்பால் விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. முருகப்பெருமானின் ஆசிர்வாதத்தோடு  100 குழந்தைகள் எழுத்தாணிப்பால் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


 சிரைவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள்   தீப ஆராதனை செய்யும் காட்சி.



குமரகுருபர சுவாமிகள் எழுத்தாணி கற்பிக்கும் காட்சி.


எழுத்தாணிப்பால் விழாவில் கலந்துகொண்ட பெற்றோர் மற்றும் குழந்தைகள் 

ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும் 

புதன், 21 அக்டோபர், 2015

கவுமார மடாலயத்தில் பயிற்சி: கிராம கோவில் பூசாரிகளுக்கு சான்றிதழ்! ! !




கவுமார மடாலயத்தில் பயிற்சி பெற்ற கிராம கோவில் பூசாரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அகில இந்திய கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆலய வழிபாட்டு முறைகள் குறித்து கிராம கோவில் பூசாரிகளுக்கு கோவையை அடுத்த சின்னவேடம்பட்டி சிரவை ஆதினம் கவுமார மடாலயத்தில் பயிற்சி முகாம் 10 நாட்கள் நடைபெற்றது. 

இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பூசாரிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு தென்னிந்திய புரோகிதர் சங்கதலைவர் ஆற்காடு நரசிம்மஐயர் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது சந்தியாவதனம், சுலோகங்கள், அர்ச்சனை, அபிஷேக, அலங்கார முறைகள், நெய்வேத்திய முறை, காயத்ரி மந்திரங்கள், மகா சங்கல்பம், விநாயகர் சங்கல்பம், வாஸ்து பூஜை மற்றும் பஞ்சாங்க முறைப்படி பூஜை முறைகள் குறித்து கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் கற்றுக்கொடுக்கப்பட்டது.


இந்த பயிற்சி நிறைவு விழா மற்றும் பூசாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு ராமகிருஷ்ணா வித்யாலயா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் விஸ்வநாதன் தலைமை தாங்கி னார். பயிற்சி குறித்து அகில இந்திய கிராம கோவில் பூசாரிகள் பேரவை அறங்காவலர் சவுந்தர்ராஜன் விளக்கி கூறினார். விழாவில், பேரூர் ஆதினம் இளைய பட்டம் மருதாசல அடி களார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கிராம கோவில் பூசாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி பேசினர். இதுவரை சுமார் 2500 க்கும் மேற்பட்ட பூசாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாக பூசாரிகள் பேரவையின் தெரிவித்தனர்.  

                                                                             நன்றி: தினத்தந்தி நாளிதழ்.       


                            ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும் ! ! !  

சிரவையாதீனம்,தவத்திரு குமரகுருபர சுவாமிகளின் சிறப்புக்கட்டுரை !


வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எனவும் முருகதாசர் எனவும் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும். இவர் 28-01-1839 ஆம் ஆண்டு, சைவ வேளாளர் மரபில் தோன்றிய செந்தில்நாயகம் பிள்ளைக்கும் பேச்சி முத்தமாளுக்கும் மகனாக திருநெல்வேலியில் பிறந்தார். சிறுவன் சங்கரலிங்கம் தனது ஆறரை வயதில் தனது தந்தையாரை இழந்தார். தனது பெரிய தந்தையார் மூலம் தென்காசியை அடுத்த சுரண்டையில் கல்வி பயின்றார். அவ்வூரில் உள்ள பூமிகாத்தாள் என்னும் அம்மனை தனது எட்டு வயதில் நேரிசை வெண்பாவால் பாடத்தொடங்கினார். அன்றுமுதல் பாடல்களை பனை ஓலைகளில் புனையத்தொடங்கினார். சங்கரலிங்கத்தின் குருவான சீதாராம நாயுடு விநாயக மந்திரம், லட்சுமி மந்திரம், ஆறெழுத்து மந்திரம் போன்ற மந்திரங்களை உபதேசித்தார். சங்கரலிங்கத்தின் மடை திறந்த வெள்ளம் போலப் பாடும் திறனைக் கண்ட ஆசிரியர், அவரை "ஓயா மாரி" என அழைத்து பெருமை செய்தார். ஊர் மக்கள் அவரை முருகதாசர் என அழைத்தனர். திருப்புகழ் சந்தப் பாக்களையும், வண்ணப் பாடல்களையும் பாடியதால் வண்ணச் சரபம் எனவும் அழைக்கப்பட்டார்.

அவரது கனவில் முருக பெருமான் தோன்றி காட்சி கொடுத்ததால், அவர் குமரன் குடிகொண்ட இடங்களுக்கு சென்று வழிபட்டார். வள்ளியூர் மலைக்குச் சென்று முருக பெருமானின் சன்னதியில் கல்லாடை, இலங்கோடு, கவுபீணம், ருத்ராச மாலை, தண்டம் ஆகியவற்றை வைத்து வணங்கி, அவற்றை அணிந்து கொண்டார். அன்று முதல் அவர் தண்டபாணி சுவாமிகள் என அழைக்கப்பட்டார். யாரும் இவருக்கு முறைப்படி தீட்சையளித்து துறவியாக்கவில்லை. ஒரு முறை தென்காசி அருகிலுள்ள திருமசை குமாரசாமி கோயில் சந்நிதியில் நின்று, முருக பெருமான் தன்னை ஆட்கொள்ள வேண்டும் என பணிந்து வேண்டினார். இறையருள் கிடைக்காததால், இனி உயிருடன் இருந்து பயனில்லை என்று மலையிலிருந்து விழுந்து புரண்டார். ஆனால் முருகன் அருளால், இடது தோளில் புண் ஏற்பட்டதைத் தவிர அவருக்கு வேறு பெரிய தீங்கு நேரவில்லை. தமக்குத் திருவருள் துணை மிகுதியாக இருப்பதை உள்ளுணர்வால் உணரத் தொடங்கினார். தண்டபாணி சுவாமிகள் எழுத்தாணி கொண்டு எழுதத் தொடங்கினால், இவர் மனம் செல்லும் வேகத்துக்கு எழுத்தாணியால் எழுத இயலாது. இவர் தமது பாடல்களில் முற்பிறவியில் தாம் அருணகிரியாகப் பிறந்தவர் என்றும், இதை முருகபெருமானே தம்மிடம் பலமுறை கூறியதாகவும் குறிப்பிடுகிறார்.

      சுவாமிகள் திருப்பரங்குன்றம், மதுரை, சிதம்பரம், திருமயிலை ஆகிய திருத்தலங்களை வழிபட்டு சென்னையில் இருந்த சமயம் யாழ்பாணத்து நல்லூர் ஞானப்பிரகாசம் வழிவந்த ஆறுமுக நாவலரை கண்டு உரையாடி மகிழ்ந்தார். திருநெல்வேலியில் இருந்தபோது முருகனின் கட்டளைப்படி பிரபந்தங்கள் பாடினார். முருகனின் காட்சி கிடைக்காததால், தாம் இயற்றிய பிரபந்தங்களை பொருநை ஆற்றில் கிழித்தெறிந்தார். இப்படி அவசரப்பட்டு செய்தமைக்காக வருந்திய அவர், பதினாறு வகையான நூல்களைப் புனைந்து, திருச்செந்தூரில் இறையன்பர்கள் கூடியிருந்த அவையிலே அரங்கேற்றினார். கடலூரில் இருந்தபோது, திருவருட்பிரகாச வள்ளலாரை ஒரு அன்பர் வீட்டில் சந்தித்து, இருவரும் தங்களின் உறவுகளைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது சுவாமிகள் வள்ளலாரிடம், "தாங்கள் தாயுமானவராக முற்பிறப்பில் இருந்தவர்" என்றுணர்த்தினார். வள்ளலாரும் "இருக்கலாம்" என்றனர்.

      வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்கள் அருளிய பிரபந்தத்திரட்டு என்னும் நூலின் சிறப்புப்பாயிரத்தில், இரண்டு நேரிசை வெண்பாக்களையும் தண்டபாணி சுவாமிகள் இயற்றியுள்ளார்கள். (பிரபந்தத்திரட்டு - அ.திருநாவுக்கரசு பதிப்பு - பக்கம் - 5)

முருகதாச சுவாமிகளென்றுந்திருப்புகழ் சுவாமிகளென்றும் விளங்கிய
ஸ்ரீமத்-தண்டபாணிசுவாமிகள் அருளிச்செய்த
நேரிசை வெண்பா.

                  வடலூரா னண்பர்களில் வாய்மைகல்வி ஞானத்
                  திடமார்ந் தவிர்தருமோர் செல்வன் - கடல்சூழ்
                  பாருலுக முய்வதற்காப் பாடுமிசைப் பாடலமு
                  தாருமவர்க் குண்டே யருள்.
                                         
                  அந்தண் வடலூரா னன்பர்களிற் சீரியனாங்
                  கந்தசுவாமிக் கவிப் புலவ - னிந்த
                  வுலகத் தினர்மகிழ வோதுமிசைப் பாட
                  லிலகற்குஞ் சாட்சிதெய்வ மே.
                                         
      காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் தாம் அருளிய பிரபந்தத்திரட்டில் தண்டபாணி சுவாமிகளைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார், "திருநெல்வேலியில் சைவவேளாண் மரபில் உதித்து ஒன்பது வயது முதல் முருகப்பெருமானைச் செந்தமிழ்ச்சுவை பொலிந்த திருப்புகழ்களால் தம்காலம் முழுவதும் துதித்த தண்டபாணி சுவாமிகள் என்று வழங்கும் முருகதாசர் ஒருகால் வடலூர்க்கு வந்து வள்ளலாரிடம் சிலநாள் தங்கி முருகரது திருவருளை வியந்து கொண்டிருந்தனர்முருகதாசர் தாம்பாடிய திருப்புகழ்களை வள்ளலார்க்கு எடுத்துக் காட்டிக்கொண்டேவரவள்ளலார் ஏடுகளை ஒருசிறிது தள்ளினர்அதனால் அலட்சியங் கொண்டதாக அவர் எண்ணவேவள்ளலார் முருகதாசரை அருணகிரிதாசரே என்று சிறப்பித்துப் பேசினர்எனினும் அவர்க்குத் திருப்தியில்லைஏடுகளைத் தள்ளினதால் கணக்கிலாமற்பாடிக் கொண்டிருப்பதோடு அனுபவஞானம் இருத்தல் வேண்டும் என்று வள்ளலார் எண்ணினரோ என்று அவர் ஐயமுற்றனர்பின் ஒருகால் முருகத் தியானத்தி லிருந்தபோது வள்ளலார் தாயுமானவரே யென்று அவர்க்கு விளங்கியது. ஒருநாள் முருகதாசர் உஷ்ணவாயுவால் சிறிது அபக்குவம் அடையவள்ளலார் கேட்கவினையால் விளைந்தது என்றனர்வள்ளலார், "இங்கேயும் வினையுண்டோ?" என்று முருகதாசர்க்குக் கூறிச் சந்நியாசிகளை வினைதாக்குமோ என்பதைக் குறித்துப் பிரசங்கஞ் செய்தார்.வள்ளலாரைக்குறித்து வினாப்பதிகமும் அனுபவப் பதிகமும்பாடி ஜீவகாருணிய மூர்த்தியாகிய முருகதாசர் தமது நூல்களில் பல விடத்தும் ஜீவகாருணியம் விளக்கவந்த வள்ளலாரைப் புகழ்ந்திருக்கின்றனர்(பிரபந்தத்திரட்டு - அ.திருநாவுக்கரசு பதிப்பு - பக்கம் - 129)

      நெடுங்குளம் என்ற ஊரில் ஒரு வீட்டில் உணவருந்திய பின், அந்த அம்மையார் கேட்ட "தருமம் என்பதன் உண்மையான வடிவம் யாது?", உயிர்கள் இறைவனிடம் பெறும் பயன்களுல் மேலானது எது?" என்ற வினாக்களுக்கு சுவாமிகள், "தன்னைப் போன்ற உயிர்களிடத்துப் பதில் உதவியை விரும்பாமல் உதவுவதே உயர்ந்த தர்மம்" என்றும் "மற்றொரு தாய் வயிற்றில் பிறவாமல் ஒன்றுபடும் பர முக்தியே தெய்வத்தால் பெறப்படும் பயனில் மேலானது" என்றும் விடை பகிர்ந்தார். தலப் பயணத்தின்போது புதுச்சேரி வேலாயுதம் பிள்ளை - திருமலையம்மை என்னும் இணையருக்கு மூன்றாவது மகளாகப் பிறந்த சுந்தரம்மை என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.


சுவாமிகள் நெல்லையில் இருந்தபோது அங்கே தவச்சாலை தொடங்க, இலங்கைக்குச் சென்று, கண்டி கதிர்காமம் போன்ற இடங்களில் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி பொருளீட்டினார். பழனிமலை அடிவாரத்தில் ஆவினன்குடியில் சரவண பொய்கைக்கு அண்மையில் சுவாமிகள் ஒரு மடம் அமைத்தார். சுவாமிகள் அங்கேயிருந்தபோது, கொங்குநாடு சரவணம்பட்டிக்கு வடக்கேயுள்ள சாமக்குளம் வெங்கடரமணதாசருடன் தொடர்பு ஏற்பட்டது. இன்னிசை சொற்பொழிவாளராக விளங்கிய சாமக்குளத்தாருக்கு சுவாமிகள் தாம் இயற்றிய "தியானாநூபூதி" நூலை வழங்கினார். வேங்கடரமணதாசரிடமிருந்து இதனைப் பெற்ற இராமானந்தர், அதனை ஊன்றி கற்ற பின், அப்பனுவை இயற்றிய தண்டபாணி சுவாமிகளை குருவாக கொள்ள வேண்டும் என்ற வேட்கையில், பழனியம்பதி சென்று, சுவாமிகளை சந்தித்து வணங்கி தனது விருப்பத்தை வெளியிட்டார். பக்குவமடைந்த இராமானந்தரின் தகுதிப்பாட்டை பார்த்த அளவிலேயே, தண்டபாணி சுவாமிகள், அவரது வலது செவியில் ஆறெழுத்து மந்திரத்தை உபதேசித்து தலையின் மீது வலது கரம் வைத்து ஆசி வழங்கி, கெளமாரத்தின் ஆறு பேதங்களையும் சமய சமர்த்தையும், சமயாதீதத்தையும், எல்லா சமயங்களும் கெளமாரத்திற்கு உடன்பாடே என்பதையும் விளக்கி, வாழையடி வாழையென கெளமார நெறியை பரப்புமாறு தண்டபாணி சுவாமிகள் தமது சீடரான இராமானந்தரை பணித்தார்.

      பல தலங்களுக்கு சென்ற பின், புதுச்சேரிக்கு அருகிலுள்ள மதுரப்பாக்கம் வந்த சுவாமிகள், அங்கிருந்து விழுப்புரத்திற்கு வடமேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ள திருவாமத்தூரில் தங்கினார். தற்காப்பிற்கு பசுக்களுக்கு கொம்பு வேண்டியபோது, "கவி பாடுவதை பின்னர் பார்க்கலாம்; அருளைப் பெறும் முயற்சியில் முதற் கண் ஈடுபடுக" என ஈசன் அருளினார். "உனதருளைப் பெறுகின்ற வரையிலும் இவ்வூர் எல்லையைத் தாண்ட மாட்டேன்" என்று ஆறெழுத்து மந்திரத்தை மனதில் செபிக்கத் தொடங்கினார். அப்பொழுது விழுப்புரத்திலே வட்டாச்சியராக பணியாற்றிய பணியாற்றிய சண்முகப் பிள்ளைக்கு வந்த கடுமையான வயிற்று வலியை சுவாமிகள் போக்கியதால் மனம் மகிழ்ந்த சண்முகம் பிள்ளை திருவாமத்தூரில் புறம்போக்கு நிலங்களை இனாமாக வழங்க ஏற்பாடு செய்தார்.

      அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பலருடைய ஒத்துழைப்பால் திருவாமத்தூரில் கெளமார மடாலயம் எழுப்பினார். விளம்பி ஆண்டு பிறந்தது. சுவாமிகள் ஐயாயிரம் பிரபந்தம் என்னும் நூலை இயற்றத் தொடங்கினார். பாடல் பாடுவதிலும் இறை வழிபாட்டிலும் கழித்த சுவாமிகளின் உடலில் சூடு மிகுந்து உடல் தளர்ந்தது. பல்லாயிரம் பாடல்கள் பாடி தொண்டு செய்த தண்டபாணி சுவாமிகள் விளம்பி ஆண்டு ஆனித் திங்கள் 23-ஆம் நாள் (1898-ஆம் ஆண்டு) செவ்வாய் கிழமை திருவோண நட்சத்திரத்தில் வீடுபேறடைந்தார். அப்போது சுவாமிகளுக்கு 59 வயதாகும். சரவணபுரம் கெளமார மடாலயத்தின் தலைவர் தவத்திரு இராமானந்த சுவாமி, தம் குருவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தண்டபாணி கடவுள் திருவுருவத்தினை பிரதிஷ்டை செய்தார். நாள் வழிபாடுகள் நடைபெறவும் ஏற்பாடு செய்தார். இவ்வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

      தேவார மூவர், அருணகிரிநாதருக்குப் பிறகு அதிகமான பதிகங்கள் பல பாடிய பெருமை தண்டபாணி சுவாமிகளுக்கு உண்டு. முருகப்பெருமான் விநாயகர், சிவன், அம்பிகை, திருமால், சூரியன் மற்றும் கிராம தெய்வங்கள் மீது சமயாதீத நிலையில் ஒரு லட்சம் பாடல்களுக்கும் மேல் கவி புனைந்துள்ள இவர், முருக பெருமான் மீது ஊடல் கொண்டு கடலிலும், தீயிலும் எறிந்தது போக, தற்போது உள்ளவை 49,722 பாடல்களே. இதில் பாதிக்கு மேல் அச்சில் வராமல் சுவடியிலேயே, கோவை சரவணம்பட்டி கவுமார மடாலயப் பாதுகாப்பில் உள்ளன.


தண்டபாணி சுவாமிகள் உபதேசிக்கும் கெளமாரம் என்னும் முருக வழிபாடு ஆழமான தத்துவச் செறிவுமிக்க ஒரு மெய்யியற் கோட்பாடு ஆகும். முருகன் முதலிய ஆறுசமய வடிவங்களும் ஒரே பரம்பொருளின் பல்வேறு பண்புகளை உருவகப்படுத்தும் கற்பணைகள் என்பதுவும், இவற்றுள் எதனை வழிபட்டாலும் அவ்வழிபாட்டை ஏற்றுப் பயன் தரும் பரம்பொருள் ஒன்றே என்பதுவும், அது தனக்கெனத் தனிப் பெயரோ, வடிவமோ இல்லாத ஒன்று என்பதுவும் இவருடைய அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும். உருவ வழிபாட்டோடு ஒரே தெய்வ உபாசனையில் உறுதியாக நின்றால் சமரசம், சமயாதீதம் ஆகிய மேல் நிலைகள் தாமே இயல்பாக அவன் மாட்டு வரும் என்பது இவரது கொள்கை.

தன்னால் வழிபடப்படுகின்ற தெய்வம்தான் உண்மையானதும், மேலானதும் ஆகும்; மற்ற தெய்வங்கள் யாவும் பொய்யானவை என கருதுவது சமய வாழ்க்கையின் பொதுவான தொடக்க நிலை. இதனை இளம் பக்குவம் என்பார். இந்த நிலையில் பக்தியோடு வழிபாடு ஆழம் காண காண அநுபவ முதிர்ச்சி ஏற்பட்டு, தன் வழிபாடு தெய்வம்தான் பிற சமய வழிபாடுகளையும் ஏற்று அருள் வழங்குகிறது என்ற எண்ணம் உண்டாகி, பிற சமயங்களையோ, தெய்வங்களையோ பழிக்காத தன்மை தோன்றும். இந்த நிலை சமரசம் எனப்படும். இவ்வாறு சமரச நிலையை அடைந்த ஒருவன், சமய வாழ்வில் அநுபவம் முதிர முதிரப் பரம்பொருள் ஒன்றே என்றும், அந்தப் பரமே தன் வழிபாட்டு தெய்வம் உள்ளிட்ட எல்லா வடிவங்களையும், பெயர்களையும் தாங்கி அருள் புரிகிறது என்றும் உணர்வான். இந்த நிலையே சமயாதீதம், சமயங்களை கடந்த நிலை ஆகும். இந்த நிலையிலிருந்து சொல்லும்போதுதான், எம்மதமும் சம்மதம் என்பது முழுமையான பொருள் பொதிந்ததாக அமையும்; சமரச சமயாதீத நிலைகளை அடையாமல் கூறப்படுகின்ற "ஒருவனே தேவன்" என்ற கூற்று பொருளற்ற வெற்றுக் கூப்பாடே என்கிறார் தண்டபாணி சுவாமிகள்.

                                  சிரவையாதீனம்,தவத்திரு குமரகுருபர சுவாமிகள்.

ஒருவன் மனைவியோடு சேர்ந்து நடத்தும் இல்லறமே நல்லறமாகும். கொடைக்குணம், இரக்கம், கல்வி, உறவுண்மை எனும் இவற்றைப் பெற்ற இல்லறத்தானின் புகழே நிலைத்து நிற்கும். பிறன் மனை நோக்காத பேராண்மை, முயற்சியுடைமை, நன்றியுடைமை, சினமின்மை இவற்றை பெற்று வாழ்வானின் புகழ் வானம் போன்று உயர்ந்தோங்கும். உணவளித்தலில் நல்லார் பொல்லார் என்று பாராது, கீழ்மக்களுக்கும் உணவு வழங்க வேண்டும்.
     
மனதை அடக்கி ஒழுகுதலே சீரிய துறவு. புறமாகிய செல்வத்தின் கண்ணும் அகமாகிய உடம்பின் கண்ணும் உள்ள பற்றை அறவே விடுவது துறவு. மனிதனின் புற உறுப்பினும், அக உறுப்பாகிய நெஞ்சம் தூய்மையதாய் இருப்பது நல்லது. பற்றில்லாத பரம்பொருளைப் பற்றுபவரே உலகியலை முழுவதுமாகத் துறக்க முடியும். நாய் போல் அலைதல், பெண்ணைப் பார்த்து உருகுதல், பேய்போல் பறத்தல், தளர்ச்சி கொள்ளுதல், சினமுண்டாதல் இவ்வியல்பு உடையோர்க்குத் துறவறம் கைகூடாது. இயன்ற வரை கொடுத்தல், புகழை நிலை நிறுத்துதல், முது நூல் அறியும் தன்மை, அன்பு செய்தல் எனும் பொதுமறை எல்லோருக்கும் உகந்த அறம்.
        
உறவு   முறையிலும்  ஒரே   சாதியிலும்   திருமணம்   செய்வது  தொன்றுதொட்டு
நிகழ்ந்து வரும் சமுதாயப் பழக்கம் கலப்பு திருமணம் நிகழுமாயின் சாதியை ஒழிப்பதற்கு உரிய வழியுண்டாகும். சாதையை உடைத்தெறியக் காதலானது களம் அமைத்து உதவுகின்றது என்று சுவாமிகள் உறுதியாக நம்பினர்.
                                                                          
திருமணங்களால்     சென்ற    நூற்றாண்டில்     மகளிர்    பெரும்     இளமைத்
துன்பங்களுக்கு ஆளாயினர். இளம் பருவத்திலேயே கணவனை இழந்து வறுமையில் வாடியும், பிறரால் துன்புறுத்தப்பட்டும் பெண்கள் அலைகழிக்கப்பட்டனர். தண்டபாணி சுவாமிகள் விதவைகள் மறுமணம் குறித்து துணிந்து பேசுவது அவர்தம் சமுதாய மறுமலர்ச்சி எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றது. கெளமார முறைமை என்ற நூலில் சுவாமிகள் கணவனை இழந்த பெண் காம வேட்கையால் கெட்டுப் போவதனை விடவும் மறுமணம் செய்து கொளலே நன்று என்பார். "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு" என்ற சூழ்நிலை அக்காலத்தில் நிலவியது. சுவாமிகள் தமிழ்ச் சமுதாயம் முன்னேற வேண்டுமானால் பெண்கள் கல்வி பெற வேண்டும்; சான்றோர்கள், அருளாளர்களின் நூல்களைக் கற்றுத் தேற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

தண்டபாணி சுவாமிகள் திருக்குறள் வலியுறுத்தும் அறங்களின் அடிப்படையில் உயிரிரக்கம் என்னும் கொல்லாமைக் கோட்பாட்டை வலியுறுத்துகிறார். நம் முன்னைய இறைநெறிச் சான்றோர்களின் எண்ணங்களைச் சுவாமிகள் உள்வாங்கிக் கொண்டு, அறுசமயக் கடவுளிடத்தும் கொல்லாமையையும், புலால் உண்ணாமையையும் உலகில் நிலைக்க வைக்க வேண்டுமென மனமுருகி வேண்டினர். வேதத்தின் கரும காண்டம் வேள்வியில் உயிர்ப் பலி இடுவதனை ஏற்றுக் கொள்கிறது. இதனை மறுத்துச் சுவாமிகள் கொல்லா நெறியை தம்முடைய நூல்கள் வாயிலாக மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசினார். ஆங்கிலேயர் வருகையினால் உயிர் கொலை புரிதலும், ஊன் உண்ணுதலும் நாட்டில் தங்குதடையின்றி பெருகின. இவற்றைக் கண்ட சுவாமிகள் மனம் நொந்து ஆங்கிலேயர் அந்தாதி வாயிலாகவும், ஏனைய நூல்கள் வாயிலாகவும் தம் உயிர்க் கொள்கையான கொல்லாமையுணர்வை வெளிப்படுத்தினார். மக்களின் அறியாமையைப் போக்கிப் பிற உயிர்க்குத் தீங்கு செய்தலும், புலால் அருந்தும் புன்மைச் செயலும் இறைவனுக்கு உகந்தவை அல்ல என்று மக்களிடம் கூறினார். இக்கொல்லாமைக் கோட்பாட்டைச் சுவாமிகள் தம் காலத்திலே பல இடங்களில் செயற்படுத்தி, ஆடு, மாடு பசுக்களைப் பலி இடுதலைத் தாமே நேரிற் சென்று தடுத்துள்ளார்.

சுவாமிகளின் பாடல்களில் சமுதாயத்திற்கும், தனிமனிதனுக்குமான ஆக்கபூர்வமான சிந்தனைகளே மிகுந்திருந்தன. கலை வாழ்க்கைக்காகவே என்று குரல் எழுப்புகிறார். மருத்துவம் போன்ற அறிவு நூல்களை நல்ல காவியங்களை எழுதிய பின்பே எழுத வேண்டும்; எடுத்த எடுப்பிலேயே எழுதினால் குற்றப்படும் என்கிறார். மனிதர்கள் குறிப்பாகக் கவிஞர்கள் காகங்கள் போல பகுத்துண்டு கூடி வாழ வேண்டுமேயன்றி, நாய்கள் போல் ஒன்றை ஒன்று வெறித்துப் பிரியக் கூடாது. தமிழ்ப் புலமையை வெளிகாட்ட காமச் சுவையை மிக விரித்தும், பச்சையாகவும், கொச்சையாகவும் பாடுவோரின் புலமையால் நாட்டுக்கோ, மொழிக்கோ ஆக்கபூர்வமான பயன் இல்லவேயில்லை என்கிறார். தமிழைத் தாழ்த்தும் ஒரு தெய்வம் உண்டெனில், அது தெய்வமே அல்ல, பேயை விடத் தாழ்ந்தது என்றும் தீர்ப்பளிக்கிறார்.

தண்டபாணி சுவாமிகள் ஒரு தீர்க்கதரிசியைப் போன்று ஆட்சியாளர்கள் பற்றிய சிந்தனைகளைக் கொண்டுள்ளார். ஆட்சியாளர்கள் கடவுளுக்குப் பயந்து நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நீதியாக நடக்க வேண்டும். நீதி வழுவாமல் வழக்கை முடித்து வைக்க வேண்டும். பெரியோரின் அறிவுரை கேட்டு நடத்தல் வேண்டும். ஆணவம் இன்றியும், நீதியுடனும் ஆட்சி புரிதல் வேண்டும். செம்மையாக ஆளுதல் வேண்டும். ஆட்சியாளர் குடிமக்களின் காட்சிக்கு எளியராய் இருத்தல் வேண்டும். குடிமக்களின் குறைகளை உடனுக்குடன் கவனித்துத் தீர்வு காண வேண்டும். நாட்டில் உண்மை நிலைபெறுதல், பருவ மழை அளவாகப் பெய்தல் அல்லது பொய்த்தல், தீய சக்திகள் ஓங்குதல் இவற்றிக்கு ஆட்சியாளரே பொறுப்பு என்கிறார். சுவாமிகள், குடிமக்கள் செய்கிற பாவங்களில் ஒரு சிறு பங்கு ஆட்சியாளருக்கு சேரும். தற்காலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக வெடித்து வரும் வன்முறை நல்லதை அழித்து விடலாம்; ஆனால் வன்முறை தானே அழியும் என்கிறார் சுவாமிகள்.

குடும்பமே ஒழுக்கத்தைக் கட்டிக் காக்கும் தலையாய சமுதாய நிறுவனமாகும். ஒவ்வொரு மனிதனின் பிறப்பு முதற்கொண்டு தேவைகள் எல்லாம் குடும்பத்தின் மூலமே நிறைவேற்றப்படும். எனவே, எந்தவொரு துன்பத்திற்கும் இடந்தராத இன்ப இருப்பு நிலையமாக குடும்பத்தை ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு தந்தை, தாய், குழந்தைகள், உடன் பிறந்தோர் போன்றோரின் உறவில், குடும்பம் வலிமை பெற்றதாக திகழ்தல் வேண்டும்; சுற்றம் காத்து உறவு முறையால் விரிய வேண்டும். மேலும் உறவாகா வேறு சமூக நபர்களையும் நட்பால் உறவு கொண்டு சமூக நலமும் பேணுவதாகக் குடும்ப நலம் விரிந்து தழைக்க வேண்டும் என்கிறார்.

தியானானுபூதி எனும் இவரது பாடல்களில் தியானத்தின் மேன்மையையும், அதன் மூலம் அடையும் பயன்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தியானம் என்பது மனித ஆன்மாவை ஒருநிலைப்படுத்தி இறைவனை எண்ணி தியானிப்பது. அநுபூதி என்பது அது கைவரப்பெறும் நிலையாகும். நினைத்தவுடன் அமர்ந்து இறைவனைப் பிரார்த்திப்பது தியானம் அல்ல. தியானம் என்ற சொல்லைப் பயன்படுத்தும்போதே அதற்கான பலன் இன்னதென்று அறிந்து அதன்படி நடத்தலே ஆகும். பக்தியில் சிறந்தவனாக இருந்தாலும், கல்வி கேள்விகளில் சிறப்புற்று இருப்பினும், தியானம் கற்க விரும்பின் குருவின் கீழ் நின்று படித்தல் வேண்டும் என்பது இவரது கூற்றாகும்.

தெய்வ சிந்தனையே தியானத்திற்கு வழியாகும். சித்தி, முத்தி எனும் இரு பேறும் அடைவதற்கு தெய்வச் சிந்தனை வேண்டும். ஒரு கடவுளின் திருவுருவத்தை மட்டும் மனக்கண் முன்னால் நிறுத்தி, எப்போதும் ஒரே முறையில் நினைத்து தியானிப்பதே மிகுந்த பலனைத் தரும். "தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் இறைவனிடத்தில் மிக தொடர்பு கொண்டு இறைவனோடு பேச முடியும். இவ்வாறு தொடர்பு கொண்டு இறைவன் தோன்றி மறையும்போது அது கண்டு செருக்கடைதல் கூடாது". எனும் கருத்தை ஆழமாகக் கூறுகிறார். தியானம் செய்வதற்கு மன வலிமை வேண்டும். எந்நிலையிலும் தியானத்தை கைவிடலாகாது என்றும் கூறுகிறார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.


                                                       நன்றி : www.vallalarr.blogspot.in.

          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும் ! ! !