என்னிடம் இருக்கின்ற இந்த ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி இறைவனின்
கருணைக் கொடையாகும். இந்த ஜீவநாடி மட்டுமில்லாமல் எந்த ஜீவ
நாடியையும் வைத்திருப்பவர்கள் மிகவும் ஒழுக்கசீலர்களாகவும், ஆச்சாரம்
அனுஷ்டானம் உடையவர்களாகவும், தினமும் இறைவழிபாடு, பூஜை,
தியானம் செய்கிறவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், மிகுந்த
சுத்தத்துடன் நடந்துக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று
சொல்லப்படுவதால் அவ்வளவு விஷயங்களையும் அச்சு பிசகாமல்
கடைபிடித்து வருகிறேன். என்னைப் பற்றி அனைவருமே அறிவார்கள்.
ஜீவநாடி படிப்பவர் பொன், பொருள், புகழ், பணம் போன்றவற்றிற்கு
ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன்
தாய்மை குணத்தோடு தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற
ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது. அவ்வாறு நடந்து கொண்டால் நாடி
பலிக்காது, நாளடைவில் பலன்கள் தவறாகிச் செயலிழந்து விடும் என்பது
சித்தர்களின் கூற்று என்பதால் விளம்பர நோக்கோடு நான் எதையுமே
செய்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் நாடி படிப்பது எமது
பரம்பரைத் தொழிலும் அல்ல எனது தொழிலும் அல்ல. அது
மட்டுமல்லாமல் தட்சிணை வாங்காமல் நான் நாடி படிப்பதில்லை. காரணம்
உரிய காணிக்கை இல்லாமல் நாடி படிக்க வேண்டாம் என்ற எனது குருவின்
உத்தரவால் ஒரு சிறிய காணிக்கை வாங்கிதான் நாடி படிக்க வேண்டும்
என்ற விதிப்படி நடந்து வருகிறேன்.
ஆனாலும் எனக்கு பேராசை கிடையாது. அமாவாஸை பூஜைக்கோ
அன்று சொல்லப்படும் அருள் வாக்கிற்கோ எந்த காணிக்கையும்
கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. நாடி படிக்கும் போது வருகின்ற
காணிக்கை அனைத்தும் திருப்பணிகளுக்கும் அன்னதானத்திற்குமே செலவு
செய்து பணம் கொடுத்தவர்களுக்கு மேலும் புண்ணியம் சேரும்படி
செய்வதால்தான் என்னிடம் இரண்டு அல்லது மூன்று முறை நாடி பார்த்த
உடனேயே வாழ்வில் பல மாற்றங்கள் வருகின்றன. இதை அனைவருமே
அறிவார்கள். அடுத்து நீங்கள் கொடுக்கும் சில நூறு ரூபாய்க்கு மட்டுமே
விலை போகும் சரக்கு அல்ல இந்த ஜீவ நாடி. இது விலை மதிக்க
முடியாத பொக்கிஷம். கலியுகத்தில் பணமே பிரதானம் என்று
சொல்லப்பட்டாலும் இந்த நாடி மூலம் தவறாக பொருள் சேர்ப்பது நிச்சயம்
நல்ல வாழ்வைத் தராது என்பது நன்றாகவே எனக்குத் தெரியும்.
ஜீவநாடியை எதற்காக இறைவன் தோற்றுவித்தார் எனில் மானிட உயிர்கள்
ஆன்ம மேம்பாடு அடையவும், இறை நிலை உணரவும், வாழும் வகை
புரிந்து தெளியவும், தாம் செய்த பாவங்களுக்கு முன் ஜெனம கர்ம
வினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் உயர் நிலை அடைவதற்காகவும்தானே
எனவே தான் இறைவன் அருளால் பல்வேறு சித்தர்கள், மகான்கள்,
முனிவர்கள், தேவதைகள் பல இடங்களில், பல ரூபங்களில், பல்வேறு
முறைகளில் மானிட இனம் மேம்பட அருளியிருக்கிறார்கள். இப்போதும்
அருளிக் கொண்டு இருக்கிறார்கள். வினைப் பயன்களின் தெய்வீக
கணக்கீட்டின்படியும், இறை சித்தத்தாலும், சித்தர்களின் கருணையாலும்
சில மானிட உயிர்களை ஜீவநாடி குறித்து அறியவும், அவ்வகையே
ஜீவநாடி கேட்க வந்த அமரவும் அனுமதிக்கிறார்கள். இவ்வகை பாக்கியம்
பெற்ற ஆன்மாக்களில் சிலருக்கு மட்டும் “தங்க நிற எழுத்து” வடிவில்
தாங்கள் என்ன உணர்த்த விரும்புகின்றனரோ அதனை ஜீவ நாடியில் ஒளிரச்
செய்து, நாடி படிப்பவர் கண்களுக்கு மட்டும் அந்த எழுத்துகள் புலப்படும்
வண்ணம் வாக்குகள் உரைப்பர், அல்லது நாடியை உற்று நோக்கிய
உடனேயே மடை திறந்த வெள்ளம் போல பாடல் வடிவிலும் உணர்த்துவர்.
சில நேரங்களில் எவ்விதமான வாக்கும் உரைக்காமல் மௌனம் காப்பர். இது
மாயமோ மந்திரமோ மை வித்தையோ எட்சினி வாக்கோ ஆவிகளின்
பதிலோ ஜோதிடமோ குறி சொல்வதோ மனம் படிக்கும் கலையோ அல்ல.
முழுக்க முழுக்க முருகப் பெருமானின் வாக்கு என்பது சத்தியமான
இந்த ஜீவ நாடி குறித்து தெரிந்துக் கொள்வதோ, அதைப் பார்க்க முயற்சி
செய்வதோ, அல்லது கேட்க வந்தமர்வதோ, வந்து அமர்ந்த பின்னும் வாக்கு
வராமல் வெறும் மௌனமோ, ஒரே அல்லது சில வார்த்தைகளில் ஆசியோ,
பரிகாரமோ, நீண்ட நேர பாடலோ அதற்கு விளக்கமோ, எதிர்பார்த்து வந்த
விஷயங்களில் திருப்தியோ அல்லது அதிருப்தியோ, நம்பிக்கை ஏற்படும்
வண்ணம் வந்த நாடியின் வாக்கோ அல்லது அவநம்பிக்கை உண்டாக்கிய
நாடியின் வாக்கோ --- இவற்றுள் எது எப்படியாகினும் முழுக்க முழுக்க
அந்த முருகப் பெருமான் மற்றும் 18 சித்தர்களின் இறைச் சித்தமும், அவரவர்
கர்ம வினைப்பயனுமே ஆகுமே அல்லாது எனது தனிப்பட்ட விருப்பு
வெறுப்பு எதுவுமில்லை என்பதை எனை நாடி வருபவர்கள், நாடி கேட்க
முயற்சி செய்பவர்கள் அறிந்துக் கொள்வது அவசியம். சென்ற பதிவில்
அகத்தியர் நமது ஜீவ நாடியில் தோன்றி வாக்கு உரைத்ததை எழுதி
இருந்தேன். பல அகத்திய பக்தர்கள் பாராட்டி மகிழ்ந்தார்கள்.
“ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”