வியாழன், 5 ஆகஸ்ட், 2021

 சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகளுக்கு 52 வது நாண் மங்கல விழா நாள் கவிதை



குரு நெறியாம் கௌமாரம் உண்மை

திரு நெறிய செந்தமிழால் தோய்ந்து 

உரு செய்து பல்பூசை செய்விக்கும் 

குருநாதன் குமரகுருபரன் காப்பு!


ஓலைச்சுவடி செப்ப உணர்ந்த உண்மை

காலை வேலை அன்று வந்தேன்

வேலை வணங்கும் கோலம் கண்டு 

மாலை முழுதும் மகிழ்ந்தேன்!


அடியேன் பூர்வ ஜென்மம் கௌமாரம்

நொடியில் சொன்ன சுவடி மர்மம்

தேடி வந்தேன் திருப்பம் பெற்றேன்

நாடி சொன்னது உண்மை!


ஐப்பசி திங்கள் சஷ்டி விழா சுகமாய் 

எப்பவும் கூட்டம் கூட்டம் மெய்யாய்

மெய்ப்பசியோடு அடியேன் தீட்சை பெற

உய்யும் நாளாய் சிறந்து!


குருவைத் தேடி அலைய ஓய்ந்தேன்

திரு உருவாக தோன்றி குருவாய்

உருவம் சூரியன் சந்திர பிரகாசம் 

குருவே சரணம் என்று


நான்காம் சந்நிதானம் சிறப்பாய் ஆட்சி

நாண்மங்கல நாள் விழா பூண்டு

என்றும் இப்படியே இருந்து சிறக்க

ஒன்றிப் பணிந்தேன் குருபாதம்!


ஒருமுறை சுவாமிகள் வலக்கை பெருவிரல் 

குருவே சரணம் என்று பார்த்தேன்

உருவாய் தெரிந்தது மலேசியா முருகன்

திருவே இவர்தான் உணர்ந்தேன்


கொல்லாமை  புலால் மறுத்தல் நம்நெறி 

சொல்லியும் கேட்கவில்லை மக்கள் என 

சொல்லி அடித்தாற் போல் வந்த குறுஞ்செய்தி

எல்லோரும் ஏற்றனர் அன்று


காவி உடை அணிந்து கழுத்தில் மாலை

ஆவிதனை அப்படியே ஆட்டுவிக்கும் மந்திர 

சாவியின் ரகசியத்தை என்னவென்பேன்

பாவிகளும் பரிசுத்தம் ஆவர்


பட்டி தொட்டி எல்லா இடமும் சென்று 

ஆட்சி செய்யும் எம் குருநாதன் புகழை

ஏட்டில் வடிக்க எவ்வார்த்தையுமில்லை

கூட்டி வைத்தது இறையே!


அன்பு மொழி இன்முகம் அளந்து பேசுதல்

அன்றாடம் பல ஆன்மீகச் செயல்கள்

சென்றவிடமெல்லாம் சிறப்பு கற்றோர்க்கு

வென்று விடும் எம் குருவருள்!


ஐ.நா சபை வரை சென்று ஆட்சிபுரிந்து 

ஐயம் பல தீர்க்கும் எம் குருநாதன்

ஐயமில்லை ஜெயமே என்றும் பெற்றதும்

ஐயன் வேலன் அருளே!


குருவிற்கு அவதார நாள் விழா

திருவருள் காட்டும் குருவருள் வாழ்க

பெருவாழ்வு வாழ வாழ்த்த வயதில்லை

குருவே சரணம் புகுந்து!


நாளும் தினமும் புகழும் பூசைகள்

நாளும் தினமும் கல்விப் பணிகள்

நாளும் தினமும் சமயப் பணிகள்

நாளும் தினமும் சிறப்பே!


குருமுகம் சூர்யப் பிரகாசம் மெய்

குருமுகம் சந்திரக் குளிர்ச்சி மெய்

குருமுகம் பலவினை தீர்க்கும் மெய்

குருமுகம் காண விரைந்து!


அருணகிரியார் தண்டபாணி சுவாமிகள்

அருள்திரு ராமானந்தர், கந்தசாமி சுவாமிகள்

அருள்திரு கஜபூஜை சுந்தரர் என வழிவழி

அருள் வடிவே எம்குரு!


தம் குரு கஜபூஜை சுவாமிகள் நினைவாய்

எம் குரு குமரகுருபர சுவாமிகள் செய்த 

நம் கௌமார மடாலய திருப்பணி குடமுழுக்கு

நம் நெஞ்சில் சிலிர்த்து!


வீட்டில் முடங்கி இருக்கும் காலமும்

ஏட்டில் பதிக்கும் வண்ணமயமாய்

நாட்டில் மக்கள் அனைவருக்கும் சிறப்பாய்

காட்சி கொடுத்து பேசியவர் எம் குரு!


வாழி வாழி எம் குரு வாழி என்றும்

வாழி சிரவை ஆதீனம் சிறப்பாய் வாழி

வாழி சீர்மிகு சிரவை ஆதீனம் என்றும்  

வாழி வாழி வாழியவே!!


கவிதையாக்கம்:

முருக செகதீசுவரன்,

ஞானஸ்கந்த கௌமார பீடம்,

அந்தியூர்.