வியாழன், 9 அக்டோபர், 2014

சக்தி நிறைந்த உடல்!!!


சக்தி நிறைந்த உடல்
மனித உடல் சக்தி வடிவமானது. இந்த உடலை சூட்சும சரீரத்தில் உள்ள சக்கரங்களே இயக்குவதாக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சக்கரத்தின் வழியாக நகர்வதைப் போல மனிதனின் வளர்ச்சிக்கு அவனுள் உள்ள ஏழு சக்கரங்களே உதவி புரிகின்றன.

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

ரகசியமாக வைத்திருக்க வேண்டிய 9 விஷயங்கள்.


இந்து தர்மசாஸ்திரப் படி ஒருவர் 9 விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்:

1.தனது வயது
2.பணம் கொடுக்கல்-வாங்கல்
3.வீட்டுச் சண்டை மற்றும் சச்சரவு
4.மருந்துகளில் சேர்க்கப்படும் பொருட்கள்(மூலிகைகள்)
5.கணவன் மனைவியின் காம அனுபவங்கள்
6.செய்த தான தருமங்கள்
7.கிடைக்கும் புகழ்
8.சந்தித்த அவமானங்கள்
9.பயன்படுத்திய மந்திரம்

தோப்புக்கரணத்துக்கான கதை!!!




விநாயகர் வழிபாட்டில் கைகளால் குட்டிதோப்புக்கரணம் இடுவர். "தோர்பி கர்ணம்' என்னும் வடசொல்லே தோப்புக் கரணம் எனப்படுகிறது. இந்தச்சொல்லுக்கு "கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது' என்று பொருள். விநாயகர், தன் மாமா திருமாலின் சக்கரத்தை வாயில் போட்டுக் கொண்டு கொடுக்க மறுத்து அடம் பிடித்தார்.

அவரைச் சிரிக்க வைத்தால் வாயில் இருந்து சக்கரம் வெளியே வந்துவிடும் என்று எண்ணிய பெருமாள், தன் நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு கரணம் போட்டு வேடிக்கை செய்தார். விநாயகரும் அதைப் பார்த்து சிரிக்க, சக்கரம் கீழே விழுந்துவிட்டது. அதுமுதல் விநாயகரை மகிழ்விப்பதற்காக இவ்வழக்கம் உண்டானது. இவ்வழிபாட்டிற்கு வேறொரு புராணக்காரணமும் உண்டு. தேவர்களைக் கைது செய்த கஜமுகன் என்ற அசுரன் தனக்கு தோப்புக்கரணம் இடும்படி ஆணையிட்டான். விநாயகப்பெருமானை அவனை அழித்து தேவர்களைக் காத்தார். அவருக்கு நன்றிக்கடனாக தேவர்கள் தோப்புக்கரணம் இட்டனர். அதுமுதல் இவ்வழிபாடு உண்டானதாகவும் கூறுவர்

படித்ததில் பிடித்தது- உணவுப் பழக்கங்கள்!!!



நீங்கள் உண்ணும் உணவு நீங்கள் வாழும் இந்த நிலத்தின் சத்துக்களை உறிஞ்சி உருவானவை. நிலத்தின் ஒரு பகுதியான இந்த உணவு சாப்பிட்டபிறகு நீங்களாகவே மாறுகிறது. இது சாதாரண விஷயமல்ல. மிகப் பெரிய விஷயம். எனவே சாப்பிடும்முன் இந்த உணவு உங்களுக்கு கிடைக்க வழி செய்த அனைத்து சக்திகளுக்கும் உங்கள் நன்றியை வெளிப்படுத்திவிட்டு, முடிந்தவரை மௌனமாக உண்ணுங்கள். 

1.சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் முகம், கை, கால்களைக் கழுவுங்கள். 

2.ஒவ்வொரு நாள் காலையிலும், மஞ்சள் மற்றும் வேப்பிலை உருண்டைகளை வெறும் வயிற்றில் உண்டு வந்தால், நல்ல ஜீரணசக்தி உண்டாவதோடு, தொற்றுக் கிருமிகளின் பாதிப்பிலிருந்தும் புற்றுநோய் ஏற்படாமலும் தவிர்க்க இயலும். 

3.தரையில் கால்களை மடித்து (சுகாசனம்/சாப்பாடு ஆசனம்) அமர்ந்து உண்பதே சிறந்தது. 

4.உணவை நன்றாக மென்று உண்ணுங்கள். 

5.ஒவ்வொரு வாய் உணவையும் குறைந்தபட்சம் 24 முறையாவது மெல்ல வேண்டும். 
உணவு செரிமானம்… 

உணவு செரிமானம் வாயில் தொடங்கி, மலக்குடல் வரை பல கட்டங்களாக நடக்கிறது. உமிழ்நீரில் இருக்கும் ஒருவிதமான நொதி, வாயிலிருந்தே உணவு செரிமானத்தைத் துவக்கிவிடுகிறது. உணவை, இந்த நொதி நிறைந்த உமிழ்நீருடன் கலந்து நன்றாக மென்று உண்பது, ஆபத்தான வைரஸ்கள், பாக்டீரியாக்கள், மற்ற நுண்ணுயிர்களிடமிருந்தும், வேறு பல இரசாயனங்கள், கதிர்வீச்சு மற்றும் விஷப் பொருட்களிடமிருந்தும் பாதுகாக்கிறது. சரியாக மென்று தின்றால், 40-50% உணவு செரிமானம் வாயிலேயே நடந்துவிடுகிறது. உணவு சரியாக மெல்லப்படாவிட்டால், சரியாக செரிமானமாகாத உணவு வயிற்றை அடைந்து, ஒட்டுமொத்த உடலமைப்புக்கும் பிரச்சனை ஏற்படுத்துகிறது. 

தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும்? 

1.சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். 
2.சாப்பாட்டுக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக சிறிதளவு சீரகத் தண்ணீரோ அல்லது சாதாரண நீரோ குடிப்பது நல்லது. 
3.சாப்பிட்டு 30-40 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் அருந்துவது நல்லது. 
4.முதலில் சமைக்காத, பச்சை உணவு வகைகளை உண்டுவிட்டு, பிறகு சமைத்த உணவுகளை உண்ணுங்கள். 

சாப்பிட்ட பிறகு தூங்குவதற்கு 2 மணி நேரம் காத்திருக்கவும். உடலுக்கு உணவைப் பற்றித் தெரியும். ஏனென்றால் உடலே உணவால் ஆனதுதான். எனவே எதை, எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதில் உங்கள் நாக்கை கவனிக்காமல், உடலை கவனியுங்கள். மாதத்துக்கு ஓரிரு முறையாவது ஒரு நாள் முழுவதும் பழங்களையும், காய்கறிகளையும், தானியக் கஞ்சியையும் மட்டும் உட்கொள்ளுங்கள். மாதத்துக்கு இருமுறை வயிறை காலியாக விட்டுவிடுவது இன்னும் சிறந்தது. இது உடலை சுத்தப்படுத்தும். 

ஏகாதசி… 

பாரம்பரியமாக, மக்கள் ஏகாதசி அன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்நாட்களுக்கு ஆன்மீக முக்கியத்துவமும் இருக்கிறது. உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, முதலில் எளிதில் ஜீரணமாகக் கூடிய பப்பாளி மற்றும் கஞ்சி போன்ற உணவு வகைகளை உண்ண வேண்டும். 

தேன்...

தினந்தோறும் தேன் உட்கொள்வது ஒரு மனிதருக்கு பல அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது. தேனின் இரசாயன அமைப்பும், மனிதனின் இரத்த அமைப்பும் மிக நெருக்கமாக ஒத்திருக்கின்றன. ஆஸ்துமா மற்றும் சளித் தொந்தரவு இருப்பவர்களுக்கு தேன் ஒரு அருமருந்து. இதயம், மூளை இவற்றுக்கு நன்மை பயப்பது மட்டுமல்லாமல், மனதையும் கூர்மையாக வைத்திருக்கக் கூடியது. மிகவும் சக்தி ஊட்டக் கூடியது.

சனி, 4 அக்டோபர், 2014

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்''




குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்'' என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. குறிஞ்சிக்கடவுளாக முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்கிறார். தெய்வங்களில் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் "தெய்வசிகாமணி' என்று போற்றுவர். ""கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது'' என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. நாம் அறியாமல் செய்த பிழைகளையும் முருகன் பொறுத்துக் கொள்வான். பிள்ளை என்று அன்பாய் பிரியம் காட்டுவான் என்று கந்தசஷ்டிகவசம் நமக்கு வழிகாட்டுகிறது. 

அதோடு மட்டுமல்லாமல் முருகனிடம், ""என்னைப் பெற்றவன் நீயே! என் பிழைகளைப் பொறுத்துக் கொள்வது உன் கடமை!'' என்று தேவராய சுவாமிகள் கவசத்தில் முருகனிடம் முறையிடுகிறார். வள்ளலார் தனது தெய்வமணிமாலையில், ""தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே!'' என்று அழைக்கிறார்.

சூர வதத்துக்கு முன்பே முருகப்பெருமான் மயில் வாகனராகத் திகழ்ந்தாரா?





சூரபத்மனை வதைத்த முருகப்பெருமான் அவனுக்கு நற்கதி அளித்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஏற்றதாகப் படித்திருக்கிறேன். ஆனால்... சூர சம்ஹாரத்துக்கும் முன்னதாகவே மயிலின் மீது ஏறி முருகன் உலகை வலம் வந்தார் என்கின்றன புராணங்கள். எனில், சூர வதத்துக்கு முன்பே முருகப்பெருமான் மயில் வாகனராகத் திகழ்ந்தாரா?
அத்தனை உயிரினங்களிலும் ஊடுருவியிருக்கும் பரம்பொருள் முருகப்பெருமான். அவர், ஈசனின் நெற்றிக்கண் நெருப்பில் இருந்து தோன்றியவர்; பிறந்தவர் அல்ல. பிறப்பும் இறப்பும் அற்றவர். அவர், எந்த வேளையிலும் மயில் வாகனத்தில் தோன்றலாம்.
ஒருவனது உயிர் பிரிந்ததும் பூத உடல் மறைந்துவிடும். கண்ணுக்குப் புலப்படாத சூட்சும வடிவில் அவனது ஆன்மா இருக்கும். அதுதான் அழியாத பொருள். சூரன் உயிர் பிரிந்தது. பூத உடல் மறைந்தது. சூட்சும வடிவம், வாகனமான மயிலில் ஒன்றியது. ஸாரூப்யம், ஸாமீப்யம், ஸாலோக்யம், ஸாயுஜ்யம் என்கிற நான்கு நிலைகளில்... மயிலோடு சாயுஜ்யத்தை அளித்தார் முருகப்பெருமான். இப்போது, அவன் மயில் வடிவில் நமக்குத் தென்படுகிறான் என்றே அதற்குப் பொருள். உயிரினங்களில் நஞ்சை உமிழ்ந்த தாரகனை, நஞ்சை அழிக்கும் மயிலில் இணைத்தார் முருகப்பெருமான் என்று சொல்வது பொருந்தும்.
சூரபத்மன் இறக்கும் வரை வாகனம் இல்லாமல் இருந்து, பிறகு கிடைத்தது என்று, மனிதப் பிறவியின் சாதாரண சிந்தனையை இந்த இடத்தில் செயல்படுத்தக் கூடாது. 'உலகையே உலுக்கிய தீய சக்தியையும் அருள்பாலித்து ஆட்கொண்டார் முருகப்பெருமான்’ எனும் முருகனின் பெருமையைப் பறைசாற்றும் நோக்கத்தில் இந்த நிகழ்வு விளங்குகிறது.
வேதம் அறிமுகம் செய்த உயிரினம் மயில் (ஸெளரீ பலாக்ர்ச் யோமயூர:). வேதப்பொருள் (முருகன்) அதனுடன் என்றென்றும் ஒன்றியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. புராணங்களைத் தெரிந்து கொள்வதில் தனி அணுகுமுறை உண்டு. கதையில் ஒளிந்திருக்கும் தத்துவத்துக்கே முதலிடம் உண்டு. அவனது விளையாட்டிலும் செயல்பாட்டிலும் ஒளிந்திருக்கும் குறிக்கோளை உணர வேண்டும். பாமரர்களை ஈர்க்க கதை வடிவம் தேவைப்படுவதால், அதன் போக்கு விறுவிறுப்புடன் அமைந்திருக்கும்.
மோகினி அவதாரத்தில் அமுது பரிமாறும்போது, அரக்கன் ஒருவன் அமுதைப் பருகினான். மோகினி அதைக் கவனித்து, பாம்பாக மாறிய அவனை கரண்டியால் துண்டித்தாள். ஒருவன் இருவரானான். அவ்விருவருமே நவக்கிரகத்தில் இணைந்த ராகு- கேதுக்கள் என்ற தகவல் உண்டு.
வேதம் ராகுவை அறிமுகம் செய்தது. வேத கால வேதம் ஓதுபவர்கள், தினமும் மூன்று வேளை ராகு-கேதுவுக்கு தர்ப்பணம் செய்வார்கள். அப்படியிருக்க, பாற்கடலை கடைவதற்கு முன்பு ராகு-கேது இல்லை என்றாகுமா? வானவியல், ராகு சாரத்தை வரையறுத்துக் கூறும். உலகம் தோன்றிய நாளிலிருந்து கிரகணமும் தொடங்குகிறது.
காயத்ரீயை விஸ்வாமித்திரர் வெளியிட்டதாக புராணம் கூறும். ஆனால், வேத காலத்திலிருந்தே காயத்ரீ ஜபம் தொடர்கிறது. கங்கையை வரவழைத்தவன் பகீரதன் என்று புராணம் கூறும். ஆனால், வேத காலத்திலேயே கங்கை பற்றிய தகவல் உண்டு. (கங்காயமுறயோர்மத்யே...)
வேதத்தின் விளக்கவுரையாக புராணம் செயல்படுவதால், ஒரு கதையோடு அதன் தொடர்பை சிறப்பித்துக் காட்டும். யுகத்துக்கு யுகம் புராணக் கதைகளில் மாற்றம் உண்டு. வால்மீகி இயற்றிய ராமாயணம், மற்ற மொழிகளில் பல மாற்றங்களுடன் இருப்பது கண்கூடு. ஆகவே, ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மட்டும் ஆராயாமல், முன்னும் பின்னுமான தகவல்களையும் திரட்டி விரிவாக அதை அணுகும்போது உண்மை விளங்கும்.

திருப்பணி புண்ணியம் !!!



திருப்பணி புண்ணியம்:
ஒரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம். கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம். ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும்.

ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், 'ஐயா... என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்டார். 'சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. அதைத்தேடிக் கொண்டிருக்கிறேன்...' என்றார். 'பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகிவிட்டது; நான் ஓரணா தருகிறேன். வாழைப்பழம் வாங்கி, பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்...'என்று சொல்லி, ஓரணாவைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். (அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு நாலு வாழைப்பழம்.) அவரும், ஓரணாவுக்கு வாழைப்பழம் வாங்கி வைத்து, பூஜையை முடித்தார்.தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான். எமதர்மன், தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான். சபையில், ஒரு ரத்ன சிம்மாசனமும், ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது. அந்த சமயம், இரண்டு தேவ விமானங்கள் வந்தன. 


எமதர்மன், ஓடிப்போய் விமானத்திலிருந்தவரை வரவேற்று உபசரித்தான். ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர். எமதர்மன், ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும், உட்கார வைத்தான். 'புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்...' என்று சொல்லி, அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து, 'இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்! அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறாயே...' என்று கேட்டான்.

அதற்கு எமதர்மன், 'இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர். அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன். மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர். ஒரு நாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர், அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்...' என்றான் எமதர்மன்.
தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, 'சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்...' என்று சொல்லி, எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றான்.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு சிவபூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகமாம். அதனால் தான், எங்கேயாவது கும்பாபிஷேகம், திருப்பணி என்றால், 'என் பணமும் அதில் சேரட்டும்...' என்று, பணம் கொடுத்து. புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றனர். தெய்வத் திருப்பணிகளுக்குக் கொடுத்தால், புண்ணியம். கொடுத்து பாருங்கள், அந்த புண்ணியம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்வீர்கள்!திருப்பணியாளர்கள் இப்பிறவியில் அரசனைப் போல் வாழ்வார்கள் அல்லது அரசனாக வாழ்வார்கள். இழந்த பதவியை மீண்டும் பெற்று, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வாழ்வார்கள். தெய்வலோகத்திலும் பதவி பெற்று தேவர்களின் ஒரு பிரி விற்கு தலைமை வகிக்கும் நிலையையும் பெற்று தேவ அரசனாக வாழ்வதுடன் மோட்சத்தின் நான்காம் படியான (கடைசி படியாக) சாயுச்சியம் என்னும் இறைவனோடு கலக்கும் முழு முக்தியை அடைவதுடன் பிறவியின் பெரும் பயனை அடைவதுடன் பிறவியிலா பெருவாழ்வும் அடைவார்கள். 


இவர்களின் தலைமுறையில் இவருக்கு பின் வரும் 108 தலைமுறையினரும் அரசனுக்கு நிகராக பேரும் புகழும் தனமும் செல்வாக்கும் பெற்று வாழ்வார்கள். இவர்களின் குலம் தெய்வகுலம் என்று உலகத்தாரால் பேசப்படும். திருப்பணிக்கு நன்கொடை அளிப்பவர்கள் பூலோகத்தில் வாழும் போதே தெய்வமாக வழிபடுவார்கள். மனித ரூபத்தில் உள்ளவரை உலகம் தெய்வமாக வழிபடும். தெய்வத்திற்கு கிடைக்கும் அனைத்தும் உயர்வுகளையும் பெறுவார்கள். ஜீவ நிலையிலேயே (ஜீவ சமாதி) இறைவனை அடைவதுடன் தான் விரும்பிய வகையில் தேவர்களுக்கு தலைமை பதவி பெற்று இந்திரனுக்கு சமமா க தேவலோகத்தில் தேவர்களுக்கு தலைமை வகித்து பல கற்பகாலங்கள் தேவலோகத்தில் தவம் பெற்று வாழக்கூடிய பாக்கியத்தை பெறுவர். 


இவர்களது வருங்கால தலைமுறையினர் பல தெய்வீகத் திருப்பணிகளில் ஈடுபட்டு புண்ணியம் பெற்று குறைவில்லாமல் வாழ்வார்கள். பூலோ கத்தில் வாழும் காலத்தில் அட்டமாசித்துகளிலும் வல்லமை பெற்று சித்தனுக்கு சித்தனாய், குருவிற்கு குருவாய் நீடூடி வாழ்வார்கள். இவர்களுக்கு நிகர் பூலோகத்தில் யாரும் இல்லை எனும் நிலையை அடைவார்கள்.திருப்பணி வாழும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் இறந்த ஆன்மாக்களுக்கும் உயர்வு அளிக்கும் சர்வ வல்லமை படைத்தாகும். 


உங்கள் தாய், தந்தை, பாட்டன், பாட்டி, அண்ணன், தம்பி, தங்கை போன்ற ரத்த உறவினர் யாராவது அண்மையில் இறந்ததிருக்கலாம். அப்படி இறந்தவர்கள் தேவையான புண்ணிய பலம் இல்லாமல் சூன்ய திதி காலத்தில் உயர்வு நிலை பெற முடியாமல் பேய், பிசாசாக சுற்றிக் கொண்டிருக்கலாம். சிலர் பிதுர்லோகத்தில் அடுத்த பிறவி எடுப்பதற்கான புண்ணிய பலம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கலாம். சிலர் நரக லோகத்தில் வதைபட்டுக் கொண்டிருக்கலாம். சிலர் மோட்சம் அடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கலாம். மேற்கண்ட குறைபாடுடன் ஏதேனும் கொண்டு உங்கள் ரத்த உறவினர்களின் ஆத்மா தத்தளித்துக் கொண்டிருந்தால் அவர்களின் திருப் பெயரால் சங்கல்பம் செய்து ஓர் கோயில் உபயத்தினை நீங்கள் செய்தால் 48 நாட்களில் (ஒரு மண்டல காலத்தில்) அந்த ஆன்மாக்கள் வேண்டிய வரத்தை ஈசன் அருளால் பெறும் என்பது பேருண்மையாகும்.