வெள்ளி, 3 மார்ச், 2017

மருதமலை அலங்காரம்

சிரவை இரண்டாம் குரு மஹாசந்நிதானம் தவத்திரு.கந்தசாமி சுவாமிகள் அவர்கள் இயற்றிய மருதமலை அலங்காரம் நூறு பாடல்களைக் கொண்டதாகும். அந்த பாடல்களைப் பாடிக்கொண்டே வரும் பங்குனி மாதம் 1ம் தேதி செவ்வாய் காலை 6 மணிக்கு (14.03.2017) மருதமலை அடிவாரத்தில் இருந்து படி பூஜை செய்து கொண்டே மலை மேல் சென்று மருதாசலனக் கண்டு அருள் பெற இருக்கின்றோம். இந்த நேரத்தில் மருதமலை அலங்காரம் பாடல்களில் இருந்து இரண்டு பாடல்களைக் காண்போம்.  
பாடல்:
பகடேறி வந்ததட் டுங்கொடுங் கூற்றனும் பாவையர்த
மகடே றிடப்புரி மாரனும் வேதனு மான்றதையிற்
சகடே றிடுமரு தாசலன் றாளன்றிச் சாற்றுமண்ட
முகடேறி னாலும் விடார்மன மேசற்றுண் முன்னுதியே

விளக்கம்: எருமை வாகனத்தின் மீது வந்து அதட்டும் கொடும் கூற்றனாகிய எமதர்மனும், காமத்தை உருவாக்கும் மன்மதனும், படைக்கும் பிரம்மாவும் விண்ணின் முகடு ஏறினாலும் விடமாட்டார்கள் மனமே ஆதலால் தை மாதத்தில் தேரில் ஏறி வரும் மருதாசலன் திருத்தாள்களே இந்த மூன்றையும் வெல்லும் சக்தியைத் தரும் ஆதலால் மருதாசலன் திருப்பாதங்களை மனதில் இருத்துவாயாக.

பாடல்:
திருவளிக் கும்பெருங் கல்வியு நல்கிடுஞ் சேணுலகார்
தருவளிக் கும்பத ம்யாவையு மீந்திடுந் தன்னனைய
வுருவளிக் குந்தொண்ட ரெண்ணிய யாவு முடனளிக்கு
மருவளிக் கும்பொழில் சூழ்மரு தாசலன் வண்பதமே. 

விளக்கம்:
செல்வம் அளிக்கும், பெரும் கல்வியைத் தரும், இந்திரலோகத்தில் உள்ள கற்பகத்தரு அளிக்கும் பதங்கள் எல்லாவற்றையும் ஈந்திடும், முருகப்பெருமான் போன்றே உரு அளிக்கும், தொண்டர்கள் எண்ணிய யாவும் உடனே அளிக்கும் இயற்கை எழில் சூழ்ந்து இருக்கும் மருதாசலனின் திருத்தாள்களே.
                                    ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
                                             சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக