திங்கள், 27 ஜனவரி, 2014

மீனாட்சியம்மை கலிவெண்பா

"மீனாட்சியம்மை கலிவெண்பா
திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்தது!’
காப்பு
அங்கையற்கும் மாற்கும் அரியபெரு மான்இடஞ்சேர்
அங்கையற்கண் ணம்மைக் கணியவே - அங்கயத்தின்
மாமுகங்கொள் கோமானை வாழ்த்திக் கலிவெண்பா
நாமுகந்து பாடுவோம் நன்கு.
கலிவெண்பா
சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே சேயிழையே
காராரும் மேனிக் கருங்குயிலே - ஆராயும்
வேதமுத லாகிநின்ற மெய்ப்பொருளே மின்னொளியே
ஆதி பராபரையே அம்பிகையே - சோதியே
அண்டரெல்லாம் போற்றும் அரும்பொருளே யாரணங்கே
எண்திசைக்குந் தாயான ஈஸ்வரியே - தெண்திரையில்
வந்தஅமு தேயென்று மாறாம லேநினைப்பார்
சிந்தைதனி லேயுறையுஞ் செல்வியே - அந்தமிலா
மாயோன் தனக்கிளைய வல்லியே மாமயிலோன்
தாயே பராபரையே சங்கரியே - தூயவொளி
மன்னுங் கயிலாச மாமயிலே மேருவெனும்
பொன்னங் கிரியுடைய பூங்கொடியே - அன்னமே
அட்டகுல வெற்பாய் அமர்ந்தவளே ஆதிஅந்தம்
எட்டெட்டுந் தானாய் இருந்தவளே - முட்டஎங்கும்
அவ்வெழுத்தாய் நின்ற அரும்பொருளே ஆரணங்கே
உவ்வெழுத்தாய் நின்றதொரு உண்மையே - எவ்வெழுத்துந்
தானாகி நின்றதொரு தற்பரையே யெவ்வுயிர்க்கும்
ஊனாகி நின்றதோர் உத்தமியே - கோனாய்ப்
படியளக்க மால்பார் பதினான்கும் ஒக்க
அடியவரை யீடேற்றும் அன்னாய் - முடிவிலா [10]
ஓங்காரத் துட்பொருளே உற்றநவ கோணத்தில்
ரீங்காரந் தன்னில் இருப்பவளே - பாங்கான
முக்கோணத் துள்ளிருக்கும் மூர்த்தியே மூவிரண்டாஞ்
சட்கோணத் துள்ளிருக்குஞ் சக்தியே - மிக்கபுகழ்
எண்ணிரண்டாங் கோட்டில் இருப்பவளே எவ்வுயிர்க்கும்
பண்ணிசைந்த பாட்டின் பழம்பொருளே - விண்ணுலகின்
மேற்பட்டங் கூடுருவி மேலாகி நின்றதொரு
நாற்பத்து முக்கோண நாயகியே - சீர்ப்பெற்ற
பஞ்ச கோணத்திருந்த பைங்கிளியே பார்முழுதுந்
தஞ்சமது வாகிநின்ற தையலே - செஞ்சொல்மறைச்
சொல்லே பொருளே சுவையே அறுசுவையே
எல்லாப் புவிக்கும் இறைவியே - தொல்லை
எறும்புகடை யானைதலை எண்ணில் உயிர்க்கும்
உறும் பொருளாய் அங்கங் குணர்வாய்ப் - பெறும்பயனாய்
ஆறாறு தத்துவமாய் ஐயிரண்டு வாயுவாய்க்
கூறாய்த் திசைபத்தின் கூட்டமாய்ப் - பேறான
அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ ரட்சரமாய்ப்
பஞ்ச வர்ணமாய்ப் பஞ்ச தேவதையாய் - வஞ்சமற்ற
ஆறாதா ரப்பொருளாய் ஐயைந்தாய் ஐம்மூன்றாய்
வீறான சக்கரத்தின் மின்னொளியாய்க் - கூறாய் [20]
கருவிகர ணாதிகளாய்க் கைகலந்து நின்ற
பெரியதொரு மாயைப் பிரிவாய் - உரியதொரு
சோத்திரத்திற் சத்தமாய்த் தொக்கிற் பரிசமாய்
நேத்திரத்திற் பேருருவாய் நீக்கமிலா - நாத்தலனின்
மெத்திரத மாய்மூக்கின் மேவுகந்த மாய்ப்பிறவாய்
மத்தபிர மத்த வயிரவியாய்ச் - சுத்த
துரியமதாய்ப் பின்னுந் துரியாதீ தத்தின்
அரிய சிலம் பொலியும் ஆர்ப்பத் - தெரிவரிதாய்
நாடுதனிற் சென்றிரந்து நற்பவுரி கொண்டுதொந்தம்
ஆடுகின்ற பார்ப்பதியே அம்பிகையே - நாடிக்
களங்கமற வேதான் கரும்புருவந் தன்னிற்
பளிங் கொளியாய் நின்ற பரமே - வளம்பெறவே
கண்ணிரண்டி னுள்ளே கருணைத் திருவடிவாய்ப்
புண்ணியமாய் நின்றருளும் பூவையே - பண்ணமைந்த
நாசி நுனிமேல் நடுவெழுந்த தீபமாய்
ஓசைவிந்து நாதாந்தத் துட்பொருளாய் - நேசமுடன்
அஞ்சு முகமாய் அகண்டபரி பூரணமாய்ப்
பஞ்சபூ தம்மான பைங்கிளியே - கஞ்சமலர்ப்
பாத மிரண்டாகிப் பச்சைநிறந் தானாகி
ஆதிமுத லாகிநின்ற அம்பரமே - தீதிலா [30]
நெற்றிதனிற் கண்ணாகி நிட்களரூபப் பொருளாய்
உற்றவெளி யாகிநின்ற வுத்தமியே - பத்திநிரை
ஆகாயத் தின்னொளியாய் அந்தரத்தின் ரூபமாய்
மேகாதிக் குள்ளே விளைபொருளாய் - வாகாம்
இடைபிங் கலையாய் இரண்டுக்கும் எட்டாக்
கடையுஞ் சுழிமுனையாய்க் காலாய் - மடலவிழ்ந்த
மூலாதா ரத்தொளியாய் மும்மண் டலங்கடந்து
மேலாதா ரத்திருந்த வெண்மதியாய்ப் - பாலூறல்
உண்ணுஞ் சிவயோக வுத்தமியே மெய்த்தவமே
பண்ணுமறை வேதப் பழம்பொருளே - எண்ணரிய
மெய்ஞ்ஞான வித்தே விளக்கொளியே மெய்ச்சுடரே
அஞ்ஞான மேயகற்றும் அம்மையே - பைந்நாகம்
பூண்டசிவ னாரிடத்துப் பூங்கொடியே பாங்குடனே
தாண்டவமா டப்பவுரி தாளமொத்தி - ஆண்டியுடன்
ஆடுங்கூத் தாடிச்சி யம்மனைபந் தாடிச்சி
தேடியும்மால் காணாச் சிவசக்தி - நாடியுனைப்
போற்றும்அடி யார்கள் வினைபோக்கியே அஞ்சலென்று
தேற்றுகின்ற அம்மை துடியிடைச்சி - சாற்றறிய
பச்சை நிறத்தி பவளக் கொடியிடைச்சி
கச்சைப் பொருமுலைச்சி கைவளைச்சி - கொச்சை [40]
மலையரையன் பெற்ற மலைச்சி கலைச்சி
நிலையறிவே தாந்த நிலைச்சி - அலையாத
அன்ன நடைச்சி யருமறைச்சி யாண்டிச்சி
கன்னல் மொழிச்சி கருணைச்சி - பன்னுதமிழ்
வாய்ச்சி சடைச்சி வடிவுடைய மங்கைச்சி
பேய்ச்சி இளமுலைச்சி பேதைச்சி - காய்ச்சியபால்
வெண்ணெய் மொழிச்சி வெளிச்சி வெளியிடைச்சி
அண்ணுபுரந் தீயிட்ட அம்படைச்சி - நண்ணிலரும்
கொப்புக் குழைச்சி குவளைப் பொருவிழிச்சி
அப்புச் சடைச்சி சிவகாமச்சி - மெய்ப்பாங்
கருப்புச் சிலைச்சி கலைச்சி வலைச்சி
மருப்புத் தனத்திமவு நத்தி - பொருப்பிடத்தி
தாமப் புயத்தி சமர்த்தி தருமத்தி
நாமச் சிவபுரத்தி நாரணத்தி - தேமருவுங்
காரணத்தி பூத கணத்தி தனபார
வாரணத்தி அட்டதிக்கு மாரணத்தி - பூரணத்தி
பாத பரிபுரத்தி பங்கயத்தி செங்கரத்தி
சோதி மணிநிறத்தி சொப்பனத்தி - பாதிமதி
சூடுகின்ற சொக்கருடன் துய்யபுலித் தோலுடுத்திக்
காடுதனில் வீற்றிருக்கும் காரணியே - நாடறியுஞ் [50]
சேணிச்சி நல்ல சிறுத்தொண்டன் பிள்ளையறுத்
தூணிச்சி நஞ்சமுதாம் ஊணிச்சி - பாணிச்சி
பாசாங்கு சக்தி பரத்தி பருப்பதத்தி
காசாம்பூ மேனிக் கனதனத்தி - மாசிலா
அம்பரத்தி ஐம்புலத்தி யானதொரு வேதாந்த
உம்பருக்கும் எட்டாத வுத்தமத்தி - செம்பொன்வளைச்
செட்டிச்சி வைகைதனிற் சென்றுவெட்டி மண்சுமந்த
ஒட்டச்சி பூதியணி யுத்தளத்தி - அட்டதிக்கு
மின்னே விளக்கே விலையில்லாச் சீவரத்னப்
பொன்னே நவமணியே பூங்கிளியே - இன்னமுதே
மாணிக்க வல்லியே மாமரக தப்பணியே
ஆணிக் கனகத் தரும் பொருளே - மாணுற்ற
சிங்கார வல்லியே செம்பொற் சிலைவளைத்த
கங்காளற் கன்பான கண்மணியே - மங்காத
தெய்வக் குலக்கொழுந்தே செம்பட் டுடைத்திருவே
ஐவருக்குந் தாயாய் அமர்ந்தவளே மெய்யருக்குச்
சித்தி கொடுக்குஞ் சிவானந்தி அன்பருக்கு
முத்திகொடுக் குஞ்ஞான மூர்த்தியே - எத்திசைக்கும்
தாயகமாய்ச் சூழ்தா வரசங்க மம்விளக்குந்
தூயசுடர் மூன்றான சூக்குமமே - வேயீன்ற [60]
நித்திலமே கற்பகமே நின்மலமே நன்மணியே
சுத்தபரி பூரணியே சுந்தரியே - அத்தருடன்
வாதாடு மங்கையே மாமந்த்ர ரூபியே
வேதாந்தி யேகமல மெல்லியலே - நாதாந்த
மாயேச் சுவரியே மங்கையே மாமறைக்குந்
தாயாகி நின்ற சரஸ்வதியே - காயாய்ப்
பழுத்த பழமாய்ப் பழத்திரதத் தானாய்
முழுத்தபரா னந்த முதலாய் - எழுத்துமுதல்
ஆறுசம யங்களுக்குள் அவ்வவர்க்கும் வெவ்வேறாய்
வேறுபல ரூப விகற்பமதாய்க் - கூறரிதாய்
அங்கங்குந் தானாய் அமர்ந்தவளே ஆதியந்தம்
எங்கெங்குந் தானாய் இருந்தவளே - திங்கள்நுதல்
அஞ்சுகமே தேனே யணங்கே யமுதமொழிக்
கிஞ்சுகமே பிஞ்சுமதிக் கிள்ளையே - கொஞ்சுகுயில்
கன்னி திரிசூலி கபாலி சிவகாமி
மன்னு கவுரி மகமாயி - பொன்னின் மலர்த்
தாளி சதுரி சவுந்தரிமுக் கண்ணுடைய
காளி பகவதி கங்காளி - தூளியாத்
தக்கன் தலையறுத்த தத்துவத்தி தற்பரத்தி
அக்கினிகை யீர்ந்த அமர்க்களத்தி - மிக்கபுகழ் [70]
வீரசக்தி மேருவினை வில்லா வளைத்தவொரு
பராசக்தி வேதப் பராசக்தி - தாரணிகள்
கொண்டகா ரிச்சிக்குங் குந்தளத்தி மாமதனன்
சண்டைக்கா ரிச்சி சகலத்தி - துண்டமதிச்
செஞ்சடைச்சி கஞ்சுளிச்சி செம்படத்தி கங்கணத்தி
பஞ்சசக்தி கொந்தளத்தி பைம்பணத்தி - அஞ்சனத்தி
முத்துவடக் கொங்கைச்சி முல்லை முகிழ் நகைச்சி
பத்தரவர் நெஞ்சகத்தி பாரிடத்தி - சுத்தவெள்ளை
அக்கு வடத்தி அறம்வளர்த்தி அன்புடைச்சி
செக்க ரிளம்பிறைச்சி செண்பகத்தி - தக்கமணி
ஓலைக் குழைச்சி உபதேசக் குண்டலச்சி
மாலைக் கழுத்தி மவுனத்தி - ஞாலமெல்லாம்
அக்கரத்தி பொக்கணத்தி அண்டபகி ரண்டத்தி
முக்கணத்தி நிட்களத்தி மோட்சத்தி - மிக்கபுகழ்
ஏகாக் கரத்தி இமயப் பருப்பதத்தி
நாகாதி பூண்டசிங்க நாதத்தி - வாகான
பத்மா சனத்தி பரிமளத்தி பாம்பணைத்தி
கற்பாந் தரத்தி கருநிறத்தி - விற்காம
வேடிச்சி நல்லதொரு மீனவனுக் கன்றுமுடி
சூடிச்சி கொக்கிறகு சூடிச்சி - நாடிச்சீர் [80]
பாதந் தனைத்தேடும் பங்கயத்தில் வீற்றிருக்கும்
வேதன் தலையறுத்த வித்தகத்தி - நீதிபுனை
பாடகத்தி கீதப்ர பந்தத்தி வெள்ளிமன்றுள்
ஆடகத்தி கூடலுக்குள் ஆதியே ஏடெதிரே
ஏற்றுவித்து முன்சமணர் எண்ணா யிரர்கழுவில்
வீற்றிருக்க வைத்தமறை வித்தகியே - நாற்றிசையும்
கொண்டாடப் பெற்றதொரு கோமளமே சாமளையே
தண்டா மரைத்திருவே தையலே - மண்டலங்கள்
எங்குமொத்து நின்றருளும் ஈஸ்வரியே மாமதுரை
அங்கயற்கண் நாயகியே அம்மையே - துங்க
ஒளியே பெருந்திருவே ஓதிமமே உண்மை
வெளியே பரப்பிரம வித்தையே - அளிசேரும்
கொந்தளக பந்திக் குயிலே சிவயோகத்
தைந்தருவே மூவருக்கும் அன்னையே - எந்தன் இடர்
அல்லல்வினை யெல்லாம் அகற்றியே அஞ்சலென்று
நல்லசவு பாக்கியத்தை நல்கியே - வல்லபத்தின்
ஆசுமது ரஞ்சித்ர வித்தார மென்றறிஞர்
பேசுகின்ற வுண்மைப் பெருவாக்கு - நேசமுடன்
தந்தென்னை யாட்கொண்டு சற்குருவாய் என் அகத்தில்
வந்திருந்து புத்தி மதிகொடுத்துச் - சந்ததமும்
நீயே துணையாகி நின்றிரட்சி அங்கயற்கண்
தாயே சரணம் சரண். [91]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக