வெள்ளி, 24 ஜனவரி, 2014

சிவராத்திரி

27.02.2014 அன்று சிவராத்திரி:

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.   பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.   நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயேஅதாவது `சிவராத்திரிஎன்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.   சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல்மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..   சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரிஎன வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது.   பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
1.மகாசிவராத்திரி
2.யோகசிவராத்திரி
3.நித்திய சிவராத்திரி
4.பட்ஷிய சிவராத்திரி
5.மாத சிவராத்திரி
சிவராத்திரி விரதம் சற்று கடினமானது. கடந்த காலங்களில் முன்னோர்கள் முறையாக அதை கடைபிடித்தனர். இந்த காலகட்டத்திலும் சிலர் முடிந்தவரை அதை கடைபிடித்து பின்பற்றுகின்றனர். சிவராத்திரி அன்று சூரிய உதயத்துக்கு முன்பு நீராடி அன்று முழுவதும் உண்ணா நோன்பிருந்து பகல் முழுவதும் சிவபுராணம், சிவஅஷ்டோத்திரம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். மாலையில் சிவ ஸ்தலங்களுக்கு சென்று வழிபட வேண்டும். இரவு நான்கு ஜாமங்களில் கலந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடக்கும் பூஜைக்கு லிங்கோற்பவ காலம் என்று சொல்வார்கள். இந்த தரிசனத்தில் கலந்துகொள்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. மவுனம் மிகப் பெரிய பலம். மவுன விரதம் உடலுக்கும், ஆன்மாவுக்கும் உகந்ததாகும். சிவராத்திரி அன்று இதை செய்வதால் வாக்குபலிதமும், மந்திர சித்தியும் கூடிவரும் என்பது சித்தர்கள் வாக்கு.
அடியார்கள் அனைவரும் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2 கருத்துகள்: