ஞாயிறு, 12 அக்டோபர், 2014

ஆறு ஆதாரங்களும் அழகுறும்!


முருகா என்றழைக்க
ஆறு ஆதாரங்களும் அழகுறும்!


பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடத்தில் மும்மூர்த்திகளின் அம்சமும் ஒருங்கே நிறைந்துள்ளது. காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் மூர்த்தியான ருத்ரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்தி திருநாமங்களின் முதல் மூன்று எழுத்துகள் ஒன்றிணைந்ததே "முருகா' என்னும் திருநாமம்.

இருள் படைத்த உலகம் ஒளி நிறைந்து விளங்க, ஒளி தருகிறது ஒரு திருமுகம். இத் திருமுகம் நமது அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானக்கதிராக விளங்குகிறது.

அன்பர்களுக்கு இனிய தோற்றமளித்து, அன்புடையோர்க்கு வரம் தந்து அருளுகிறது வேலவனின் இரண்டாவது முகம்.

வேத மந்திர விதிகளுக்கு ஏற்ப வேள்விகளைக் காப்பது கந்தனின் கருணை மிகுந்த மூன்றாவது திருமுகம்.

நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை விளக்கி அருள்புரிந்து ஞானம் பொழிவது ஞான பண்டிதனின் நான்காவது திருமுகம்.

துஷ்டசம்ஹார சிஷ்ட பரிபாலகராக வீரத்தை விளங்கச் செய்வது ஐயனின் ஐந்தாவது திருமுகம்.

தெய்வயானை, வள்ளியம்மை என்னும் கிரியா சக்தி, இச்சா சக்திகளைக் கொஞ்சி மகிழ, கோடி சூரிய ஒளி காட்டும் அழகு முகம் ஆறாவது திருமுகம்.

இவ்வாறு ஆறு திருமுகங்களைப் பெற்ற கந்தப் பெருமான் பன்னிரண்டு திருக்கரங் களோடு நீலமயில்மீது எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார்.

நீலமயில் ஓங்கார சொரூபம். ஓங்காரமே பிரம்மம். அகர, உகர, மகார ஒலிகள் கூடியது தான் ஓங்காரம். இந்த தத்துவம்தான் முருகன். முருகா என்று மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள் நம்மை நாடி வரும்.

"சரவணபவ' என்னும் சடாக்ஷர மந்திரத்தை மனதில் நினைத்து, "குகாய நம ஓம்' என்று ஜபித்தவுடன் அவன் ஓடோடி வந்து அருள் புரிவான்.

முருகனின் ஆறுபடை வீடுகளை நினைத் தாலே மனம் ஆறும். நமது உடலில் ஆறு விதமான ஆதாரங்கள் உண்டு. முருகப் பெருமான் இந்த ஆறுபடை வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக் கொண்டுதான் எழுந்தருளி உள்ளார்.

திருப்பரங்குன்றம்- மூலாதாரம்.

திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம்.

பழனி- மணிபூரகம்.

சுவாமிமலை- அநாகதம்.

திருத்தணி- விசுத்தி.

பழமுதிர்சோலை- ஆக்ஞை.

"முருகா முருகா' என்று மனமுருகி வணங்கி னால், நிலையான இன்பம் அளித்து நம்மைக் காப்பான் வேலவன்.


ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக