செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

முப்பெரும் விழா நிகழ்வுகள்

22.08.2016 திங்கட்கிழமை அன்று அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் சிறப்பாக நடந்த முப்பெரும் விழா நிகழ்வுகள்
தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீஞானஸ்கந்தர்

தென்சேரிமலை ஆதீனம் எழுந்தருள்தல்

கோவை கொங்கு நாடு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.ராஜீ அவர்கள் வருகை

சிரவையாதீனம் சுவாமிகள் எழுந்தருள்தல் 
திருவண்ணாமலை மீனாட்சி நாடி Dr.W.J.A சுவாமிகள் மற்றும் தயவு சித்தாஸ்ரமம் சரவணபவா சுவாமிகள் எழுந்தருள்தல்

18 அடி வேலுக்கு மலர் வணக்கம் 
சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள், அற்புத பலன் கூறும் அபூர்வ ஆருடம் நூல்கள் வெளியீடு 
புத்தகத்தை எழுதியவர்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள்
வெளியீடு: அப்ஸரா பப்ளிகேஷன்ஸ், சென்னை 

முப்பெரும் விழாவிற்கு வந்த பக்தர்கள் 
உற்சவர் பாலசுப்ரமண்யர் 
வள்ளி, தேவசேனாவுடன் கல்யாண சுப்ரமண்யர் 
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் நன்றியுரை

முப்பெரும் விழாவின் மூன்று நாயகர்கள்

ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

புதன், 10 ஆகஸ்ட், 2016

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி - 42


ஜீவ நாடியின் மூலம் நடந்து வருகின்ற அதிசயங்கள் ஏராளம்…ஏராளம்…அதேசமயம் முருகப்பெருமானின் வாக்கை ஒரு சாதாரண மனிதனின் வாக்காக எடுத்துக் கொள்கின்றவர்களுக்கு சாதாரணாமான பலன்களே நடந்து வருவதையும் அதேபோல் மிக உன்னதமாக மிகுந்த நம்பிக்கையுடன் ஜீவ நாடியை நம்பி அதில் உரைக்கும் செய்திகளை மனம் உருகி பக்தியோடு கடைபிடிப்பவர்களுக்கு 100% மிக மிக துல்லியமாக பலன்கள் நடந்து வருவதோடு மட்டுமல்லாமல் முருகப்பெருமானின் திருவிளையாடல்களையும் தமது வாழ்வில் காண்கின்ற ஒரு அதிசயத்தைப் பெறுகின்றார்கள். பரிகாரங்கள் கூட பெரிய அளவில் வருவதில்லை. ஆலய வழிபாடுகள்தான் அதிகம் வருகின்றன. ஒரு சிலர் காண்ட நாடி போல் இந்த ஜீவ நாடியை நினைத்துக் கொள்கின்றார்கள். காண்ட நாடியில் பெயர் ஊர் எல்லாம் வருகின்றது. ஆனால் ஜீவ நாடியில் முருகன் என்ன உங்களுக்கு உரைக்க வேண்டும் என்று விதித்துள்ளாரோ அதை மட்டுமே உரைப்பார். பணிரெண்டு காண்டங்களின் பலனை உரைக்க முருகப்பெருமான் நாடி ஜோதிடரல்ல. கருணையே வடிவமான கடவுளிடம் ஜோதிடம் சொல்லுமாறு கேட்பது மிக மிக தவறு. ஆனால் துன்பமே தங்கள் வாழ்வாகப் பெற்றுள்ள மனிதர்கள் தங்கள் கர்ம வினையில் இருந்து விடுபடும் பொருட்டு கருணையே வடிவம் தாங்கி யார் வந்து அமர்கின்றார்களோ அவர்களின் கர்ம வினையை நீக்கும் பரிகாரங்களையும் சாப தோசங்களின் நிவர்த்திகளையும் உரைத்து நம்மை நல்வழிப்படுத்தும் பொருட்டே முருகப்பெருமான் நமக்காக கீழே இறங்கி வந்து ஜீவ நாடியில் தோன்றி வாக்கு உரைக்கின்றார். தங்கள் பிரச்சினை குறித்த கேள்விகளுக்கு உரிய விடை கொடுக்கின்றார். எனவே ஜோதிடம் கேட்கும் அனுகுமுறையில் ஜீவ நாடியை அனுகக்கூடாது. ஜோதிடம் ஜீவ நாடியில் நிச்சயம் வரும். ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது முருகப்பெருமானும் நாடி கேட்க வருகின்றவர்களின் கர்ம வினையுமே. ஜீவ நாடி என்பது ஜோதிடத்தின் வகையில் சேராது. இது இறைவனே உரைக்கின்ற அருள்வாக்கு. அருள்வாக்கு என்ற உடனேயே குறி சொல்லுமோ என்றும் எண்ணிவிடக்கூடாது. நமது தகுதியை அறிந்து ஜீவ நாடியில் முருகன் என்ன உரைக்கின்றார் என்பதை மட்டுமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே நம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமே ஜீவ நாடி கேட்க முயற்சி செய்யுங்கள். ஒரு துளி மனதில் சஞ்சலம் வந்தாலும் நாடி பலிக்காது. முழு மனதுடனும் முருகன் மீது பக்தியுடனும் முழு நம்பிக்கையுடனும் இருந்து ஜீவ நாடி கேட்கும் பிராப்தமும் இருந்தால் மட்டுமே ஜீவ நாடி உங்களுக்கு 100% பலிக்கும் என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். இப்போது பொதுமக்களுக்காக அதிகமாக ஜீவ நாடி உரைக்க வேண்டும் என்று முருகப்பெருமான் வாக்குரைத்துள்ளதால் பிராப்தம் இருகின்றவர்களுக்கு வாரத்தின் இறுதி நாட்களாகிய சனி ஞாயிற்றுக்கிழமைகளில் உரைத்து   வருகின்றேன். நாளைக்கே இனி ஜீவ நாடி உரைக்காதே என்று முருகன் உரைத்து விட்டால் நாடி படிப்பதை நிறுத்திவிடுவேன். காரணம் இது எனது தொழில் இல்லை. அதேபோல் நல்ல உள்ளங்கள் பலர் நமது நாடி மூலம் பலன் அடைகின்றார்கள் என்ற மகிழ்ச்சியான எண்ணமும் எனக்கு உண்டு என்பதால் படிக்கின்றேன். மற்றவர்களின் கர்ம வினையை நாம் வாங்கும் தகுதி இல்லை. இது விளையாடும் விஷயமும் இல்லை. முருகப்பெருமானே பொறுப்பேற்பதால் கர்மவினை நம்மைத் தாக்காது. முருகன் உத்தரவு இல்லை எனும் போது அதைத் தாங்கும் வல்லமை யாருக்கு உண்டு. எனவே பக்தி சிரத்தையோடு பக்குவத்தோடு வந்து ஜீவ நாடியை நம்பிக்கையுடன் கேளுங்கள்.இல்லாவிடில் நம்பிக்கை இருக்கும் எந்த இடத்திலும் பலன் கேட்டு வாழ்வில் வளம் அடையுங்கள். அங்கும் இங்கும் அலைவதைக் கைவிடுங்கள் தங்களுக்கு விருப்பமான மற்றும் நம்பிக்கையுள்ள் ஜோதிடரையோ மகானையோ ஏற்று அவர்களை நம்பிக்கையுடன் கடைபிடியுங்கள். அப்போதுதான் உங்கள் கர்ம வினை அகலும். அங்கும் இங்கும் அலைவதால் மட்டுமே கர்மவினை குறையாது. அகலமாக உழுவதைவிட ஆழமாக ஊழுவது மேல் எனும் பழமொழியை சிந்தியுங்கள். ஜோதிடர்களை மிகச்சாதாரணமாக அனுகாமல் உங்கள் வாழ்க்கையின் வழிகாட்டி எனும் நன்றி உணர்ச்சியோடு அனுகுங்கள். நிச்சயம் கடவுள் யாராவது ஒருவர் மூலம் நமது எதிர்காலத்தை உரைத்துக் கொண்டே இருப்பார். என்ன எழுதினாலும் உரைத்தாலும் இது கலியுகம். உண்மைகள் ஒதுங்கி இருப்பதுதான் நல்லது. எல்லாம் முருகன் செயல். எதற்காக இதை இவ்வளவு விளக்கமாகச் சொல்லவேண்டியுள்ளது என்பதால் ஜீவ நாடியின் மகிமையை உணராமல் ஜீவ நாடி கேட்கக் கூடாது என்பதற்கே. முருகப்பெருமான் அடிக்கடி ஜீவ நாடியில் உரைக்கின்ற விஷயம் பக்தியும் நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு இந்த ஜீவ நாடியை உரைக்கவோ தெரிவிக்கவோ கூடாது அப்படி உரைத்தால் அதைக் கேட்பவர்களுக்கு மிகவும் தீது என்கின்றார். அதனால்தான் யாராக இருந்தாலும் மிக எளிதில் எம்மிடம் நாடி கேட்டுவிட முடிவதில்லை. அதேபோல் தங்கள்  வீட்டை சுத்தம் செய்து குல தெய்வ வழிபாட்டை முறையாக முடித்த பின்பே ஜீவ நாடி கேட்க முயற்சி செய்யுங்கள். இல்லாவிடில் நாடியில் அதிக பலன்கள் வருவதில்லை.என்ன பரிகாரம் வந்தாலும் அதை செய்ய உடனே முயற்சியை மேற்கொள்ளுங்கள். அடுத்து எப்போது முருகப்பெருமான் ஜீவ நாடி கேட்க உரைக்கின்றாரோ அந்த மாதத்தில் வந்து மீண்டும் கேட்டு அடுத்த வழிபாட்டை செய்யத் துவங்குங்கள் பின்பு உங்கள் வாழ்க்கையே சிறுகச் சிறுக மாறுவதை அனுபவப் பூர்வமாக உணார்வீர்கள். இந்த வகையில் நமது ஜீவ நாடியில் வந்த ஒரு அதிசய சம்பவத்தை இப்போது பகிர்ந்து கொள்கின்றேன்.
நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்திற்கு நீண்ட நாட்களாக ஒருவர் வந்து இப்போது எனது அனுக்கத் தொண்டராகவே இருக்கின்றார். அவர் என்னை சந்திக்க வரும்போதெல்லாம் அவரது நண்பர் என்ன ஐயா எப்போது பார்த்தாலும் கோவில் குளம் என்று சுற்றிக் கொண்டே இருக்கின்றீர்கள் என்று கேலி செய்து கொண்டே இருந்துள்ளார். ஒரு முறை நீயும் எனது குருவை வந்து பார் என்று என்னிடம் அவர் நண்பரையும் அழைத்து வந்தார். வந்த உடனேயே அருள்வாக்கிலும் நாடியிலும் ஏராளமான செய்திகளை அறிந்து கொண்ட நண்பர் இப்போது தனது வாழ்வில் மிக உன்னத நிலை அடைந்தது மட்டுமில்லாமல் முருகன் மந்திரத்தை முறையாக என்னிடம் தீட்சை பெற்று முருக உபாசனை செய்வதோடு எனது அனுக்கத் தொண்டராகவும் இருக்கின்றார். தனது வாழ் நாளில் வளம் கண்டு வருவதால் அவர் குழந்தை பாக்கியம் வேண்டி இன்னொருவரை அழைத்துக் கொண்டு என்னை வந்து சந்தித்தார். முருகப்பெருமான் ஜீவ நாடியை அவருக்கு உரைக்கத் தொடங்கினார். எட்டு ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஆனால் நிச்சயம் குழந்தை பாக்கியம் அருள்வேன் என்று நாடியில் வந்தது. ஒரு குறிப்பிட்ட பரிகாரத் தலமும் வந்தது. மருத்துவ உதவி இல்லாமலேயே குழந்தை கிடைக்கும் எனவே பரிகாரத்தைக் கடை பிடி என்று முருகபெருமான் உரைத்தார். அவரும் அவரது மனைவியும் மிகுந்த நம்பிக்கையோடு முருகன் வாக்கை கடைபிடித்தனர். வாசகர்கள் நன்றாக இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எட்டு ஆண்டுகள் குழந்தை இல்லாதவர்கள் நிச்சயம் போகாத கோவில்கள் செய்யாத பரிகாரங்கள் பார்க்காத ஆட்கள் இல்லை. ஆனாலும் முருகனே ஜீவ நாடியில் உரைகின்றார் எனும் நம்பிக்கையை அவர்கள் கைவிடாமல் அடுத்தடுது வந்து நாடி கேட்டு உரிய வழிபாடுகளைச் செய்து வந்தார்கள். உரிய காலம் பிறந்தது. முருகன் கருணை புரிந்தார். அந்த பெண்மணிக்கு கரு தரித்தது. மீண்டும் எட்டாவது மாதத்தில் நாடி வாசிக்கப்பட்டது. அப்போது முருகப்பெருமான் சந்தான கண்டாதி சாபம் உண்டு கரு தரிக்கும் ஆனால் தங்காது கஷ்டம்…என்று சொன்ன உடனேயே எல்லோருக்கும் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அடுத்த வரியில் ஆனாலும் காப்பேன் என்று ஒரு ரட்சையைக் குறிப்பிட்டு இதை இடுப்பில் அணிந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட மூன்று ஆலயங்களுக்குச் சென்று வா கருவைக் காப்பேன் என்று சொல்லி ஆசியிட்டார். இருந்தாலும் வந்தவரின் முகம் வாடிப்போனது. ரட்சை எங்கு கிடைக்கும் என்று கேட்டார். நான் எந்த ரட்சையையும் தருவது கிடையாது. கலியுகத்தில் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள் எனவே உரிய நபர் மூலம் செய்யுங்கள் உதவி புரிகின்றேன் என்றேன். அவ்வப்போது வருகின்ற ஜீவ நாடி மூலம் வருகின்ற பெயர்ச்சி பலன்களின் பரிகார ரட்சையை செய்து தரும் நபரிடம் சொல்லி இவர் பெற்றார். அடுத்த நாள் ஆலயம் செல்ல ஆயத்தமானார். அப்போது அவரது மனைவிக்கு வயிற்று வலி அதிகமாகியது. இவர் மிகுந்த பயத்துடன் முருகனையே பிரார்த்தனை செய்தார். முருகன் உரைத்தது போலவே சந்தான கண்டாதி தோஷம் தனது வேலையைக் காட்டத் தொடங்கியது. ஆலய வழிபாடு இன்னும் செய்யப்படவில்லை. ஆனால் ரட்சையை அணிந்துவிட்டார். முருகனை முழு மனதோடு நம்பிய ஒரே காரணத்தினால் முருகன் கைவிடவில்லை. குழந்தையின் அழுகுரல் கேட்டது. பெண் குழந்தை பிறந்துள்ளது எனும் மகிழ்ச்சியான செய்தி இவர் காதில் விழுந்தது. அதிலும் ஒரு இரட்டிப்பு மகிழ்ச்சி என்னவென்றால் சுகப்பிரசவம். முருகன் உரைத்த ரட்சை எவ்வளவு வலிமையானது என்பதைத் தெரிந்து கொண்டேன் அதேபோல் நம்பிக்கை இருப்பவர்களை முருகப்பெருமான் கைவிடுவதில்லை என்று பெருமிததோடு பிள்ளை பிறந்த செய்தியை தனது நண்பரிடம் நன்றியோடு பகிர்ந்து கொண்டார் அந்த நபர். இதற்கு பெயர்தான் ஜீவ நாடி பத்து மணி நேரம் பலன் உரைப்பதல்ல ஜீவ நாடி இது போல்  கர்ம வினை களைந்து வெறும் பத்தே நிமிடத்தில் வாக்குரைத்தாலும் தக்க பரிகாரம் உரைப்பதே ஜீவ நாடி. ரட்சையை வாங்க ஒரு குறிப்பிட்ட அளவு செலவு செய்தார். ஆனால் அதே சமயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் செலவே இல்லாமல் சுகப்பிரசவம் ஏற்பட்டது. ஒரு சிறு தொகையை செலவு செய்ய வைத்து பெரும் தொகை செலவாகாமல் காப்பாற்றி இருக்கின்றார் முருகப்பெருமான். எனவே ஜீவ நாடி சொல்லும் பரிகாரங்களை கடைபிடிக்க கடைபிடிக்க இது போல் ஒரு பெரிய மாற்றமே வாழ்வில் நடக்கின்றது. பல லட்சம் செலவு செய்து செயற்கை கருவூட்டல்  செய்தும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் பலருக்கு இப்படி சந்தான கண்டாதி சாபங்களை முருகப்பெருமான் நீக்கி தக்க வழியை உரைத்து சுபிட்சமான வாழ்வை வாழ வழி வகை செய்கின்றார். வைகாசி விசாகம் அன்றும் தைப்பூசம் அன்றும் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமாத்தில் ஜீவ நாடி சொல்லியபடி தரப்படும் ஆசிர்வாதம் ஏராளமான நபர்களுக்கு புத்திர பாகியத்தை அருளி இருப்பது அனைவரும் அறிந்த செய்தியாகும்.

             தொலைபேசியில் நாடி படிக்க அனுமதி இல்லை
          
                ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!


சிரவையாதீனம் 47ம் பிறந்த நாள் விழா படங்கள்






சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

பத்திரிக்கைச் செய்தி

இன்றைய இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழில் வந்த அனைவருக்கும் யோகா பற்றிய செய்தி


                               ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
                                            சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

சிரவையாதீனம் சுவாமிகளுக்கு அவதார நாள் மரியாதை

சிரவையாதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்களின் 47ம் நாண்மங்கல நாள் (அவதார நாள்)விழாவின் கொண்டாட்டங்களை முன்னிட்டு சிறப்பு செய்யும் விதமாக அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தின் சார்பாக ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களும் கோவை திருமுருக சுரேந்திரன் அடியவரோடு ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரம கோவை பக்தர்கள் பலரும் இன்று சிரவையாதீனம் சுவாமிகள் அவர்களுக்கு மரியாதை செய்து குரு அருளும் ஆசியும் பெற்றார்கள். அதன் படங்களில் சில...



    
                                ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

                                       சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

புதன், 3 ஆகஸ்ட், 2016

சிரவையாதீனம் சுவாமிகளின் அவதார நாள் கவிதை


சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களின் 47ம் நாண்மங்கல நாளுக்காக (அவதாரத் திருநாள் 06.08.2016 அன்று சனிக்கிழமை) அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் இயற்றிய கவிதை.
                    
                     அவதார நாளுக்குக் கவிதை

சாதாரண ஆண்டு ஆடித் திங்கள்
சாதனை புரியவே சரியாய்த் தோற்றம்
வேதம் நான்கையும் மெய்ப்பொருளாக்கவே
பாதம் பதித்தார் உலகு

தில்லையாடும் சிற்றம்பலம் நடராசன் எந்தையாய்
எல்லையில்லா கருணை வள்ளியம்மை தாயாய்
அல்லல் வல்வினை அனைவருக்கும் நீக்கவே
சொல்லின் வள்ளல் பிறந்தார்

புண்ணியம் மிகுந்த கன்னியின் இராசி
கண்ணியம் மிக்க கனிவு தோற்றம்
விண்ணில் உதித்த உத்திரம் நாளில்
பண்கள் பாடிட பிறந்தார்

இளமைக்கல்வி இன்னும் மேல்நிலைக் கல்வி
வளமையாகக் கற்றார் வனப்பாய் இன்னும்
இமயமாய் நின்ற சுந்தரர் தொண்டால்
சமயம் புகழ திகழ்ந்தார்

ஆடியில் பிறந்தும் விளையாடிட வில்லை
தேடி வந்தது தெய்வீகத் தொண்டு
நாடி அதனை ஏற்றார் குமரர்
கூடி வந்தனர் கூட்டம்

கசபூசை புகழ் சுந்தர சுவாமிகள்
நிசமாய் இறை சோதியில் சேரவே
வசமாய் வந்தது குருவம்சப் பணி
தேசமே புகழ ஏற்றார்

இருபத்தி நான்காம் அகவை தன்னில்
குருவாய் அமர்ந்தார் குவலயம் போற்ற
உருவால் மின்னும் பொன்னென ஆக
பெருமை பேசியது உலகு

கொங்கு நாட்டுக் கச்சியப்பர் கவியை
எங்கும் சிறக்கவே ஆய்வுகள் செய்து
கொங்கு மண்ணின் பெருமை சிறக்க
மங்காத புகழால் மகிழ்ந்தார்

முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும்
சத்திய தெய்வம் முருகனார் வம்சம்
எத்திக்கும் தமிழின் சிறப்பு சிறக்க
தித்திக்க முனைவர் ஆனார்

சமயப் பணியொடு கல்விப் பணியும்
இமயமாய் நிற்கும் இலக்கியப் பணியும்
அரசுப் பணிக்கென இ.ஆ.ப அகாடமி
ஆயுர்வேதமும் அன்பாய்க் கொணர்ந்தார்

நாற்பத்தி யேழாம் அகவை கானும்
போற்றிட நானிலம் எம் தேசிகரை
சாற்றிய பாடல்கள் பத்தும் இதனை
போற்றுவோர் பேறு பெறுவரே
                            -ஸ்ரீஸ்கந்த உபாசகர்

                சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!