பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பகை கடிதல்
திருவளர் சுடர் உருவே, சிவைகரம் அமர்உருவே,
அருமறை புகழ்உருவே, அறவர்கள் தொழும்உருவே
இருள்தபும்ஒளிஉருவே, எனநினை எனதுஎதிரே,
குருகுகன்முதல்மயிலே,கொணர்திஉன்இறைவனையே.
மறைபுகழ் இறைமுனரே, மறைமுதல்பகர்உருவே,
பொறைமலிஉலகுஉருவே, புனநடை தரும்உருவே
இறைஇளமுகஉருவே, எனநினைஎனதுஎதிரே
குறைவுஅறுதிருமயிலே, கொணர்திஉன்இறைவனையே.
இதரர்கள்பலர்பொரவே, இவன்உறை எனதுஎதிரே
மதிரவி பலஎனதேர், வளர்சரன்இடைஎனமா,
சதுரொடு வருமயிலே, தடவரைஅசைவுஉறவே,
குதிதரும்ஒருமயிலே, கொணர்திஉன்இறைவனையே.
பவநடை மனுடர்முனே, படர்உறும்எனதுஎதிரே
நவமணி நுதலணிஏர், நகைபல மிடறுஅணிமால்,
சிவணிய திருமயிலே, திடனொடு நொடிவலமே
குவலயம்வருமயிலே, கொணர்தி உன்இறைவனையே.
அழகுஉறுமலர் முகனே, அமரர்கள்பணிகுகனே,
மழஉரு உடையவனே, மதிநனி பெரியவனே
இழவுஇலர்இறையவனே, எனைநினைஎனதுஎதிரே
குழகுஅதுமிளிர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.
இணைஅறும்அறுமுகனே, இதசசிமருமகனே,
இணர்அணிபுரள்புயனே,எனநினை எனதுஎதிரே,
கணபணஅரவுஉரமே, கலை(வு)உறஎழுதரும்ஓர்
குணம்உறு மணிமயிலே, காணர்திஉன்இறைவனையே.
எளியவ, என் இறைவ, குகாஎனநினைஎனதுஎதிரே
வெளிநிகழ்திரள்களைமீன், மிளிர்சினைஎனமிடைவான்,
பளபள எனமினுமா பலசிறைவிரிதருநீள்,
குளிர்மணி விழிமயிலே, கொணர்தி உன் இறைவனையே
இலகுஅயில்மயில்முருகா, எனநினைஎனதுஎதிரே,
பலபல களமணியே, பலபல பதமணியே
கலகல கலஎனமா, கவினொடுவருமயிலே,
குலவிடு சிகைமயிலே, கொணர்தி உன் இறைவனையே.
இகல் அறுசிவகுமரா, எனநினை எனது எதிரே
சுகமுனிவரர் எழில்ஆர், சுரர் பலர்புகழ்செயவே,
தொகுதொகு தொகுஎனவே, சுரநடம் இடுமயிலே,
குகபதி அமர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.
கருணைபெய் கனமுகிலே, கடமுனிபணிமுதலே,
அருணையன்அரன்எனவே,அகம்நினைஎனதுஎதிரே
மருமலர் அணிபலவே,மருவிடு களமயிலே,
குருபல அவிர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.
நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பாடல் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த பாடல் ஆகும். இது மொத்தம் 10 பாடல்களை உடையது. இதில் பாம்பன் சுவாமிகள் முருகனை துதித்து பின்பு அவரின் வாகனமான மயிலிடம் இறைவனாகிய முருகனை அழைத்து வருமாறு பாடுகிறார். இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் கனவிலும், நனவிலும் முருகனின் அருள் உண்டாகும்.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத் திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 9 முறை பாராயணம் செய்ய வும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 9 முறை பாராயணம் செய்யவும்.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ அமர்ந்து 3 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 3 முறை பாராயணம் செய்து வரவும். முருகன் படத்திற்கு பதிலாக பித்தளையால் செய்யப்பட்ட வேல் ஒன்றினை வாங்கிக் கொள்ளலாம். வேலினையே முருகனாக பாவித்து வழிபாடு செய்து வரவும்.
நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். வேலின் உயரம் 6 அங்குலம் இருப்பது மிக சிறப்பு. அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஐந்து எண்ணெய் ஊற்றி இரண்டு குத்து விளக்குகள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முருகனின் அருளினை வாரி வழங்கக் கூடிய ஆற்றல் கொண்ட துதி ஆகும். பாராயணம் செய்யும் காலத்தில் கனவில் முருகனின் வாகனமான மயில் தோன்றும். அதன் பின்பு கனவில் குமரக்கடவுள் தோன்றுவார் என்பது திண்ணம். நேரில் தோன்றுவது என்பது அவரவர் செய்த புண்ணியத்தினைப் பொறுத்தது.
பாராயணம் செய்யும் காலத்தில் பாராயணத்திற்கு தடைகள் உருவாகலாம். தடைகள் வந்தாலும் அவற்றை கடந்து தொடர்ந்து பாராயணம் செய்து வரவும். அவ்வாறு பாராயணம் செய்தால் நமது கர்ம வினைகள் படிப்படி யாக கரைய ஆரம்பிக்கும். அகத்திலும், புறத்திலும் உள்ள பகை நீங்கும் என்பது உண்மையாகும்.
தினமும் 3 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து முருகனின் தரிசனத் தையும் தந்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
ஓம் சரவணபவ
ஓம் குமர குருதாச குருப்யோ நம: