ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

சிரவையாதீனம் 49ம் நாண்மங்கல நாள் விழா கவிதை



                                  
சிரவையாதீனத்தின் சீர்த்திகள் சேவைகள் சிறப்புகள்

நூறுஆண்டு கண்டது கௌமார மடாலயம்
பேறு பெற்று சிறக்கும் சிரவையாதீனம்
கூறு கூறாய்க் கூறுவேன் குருவின் அருளினாலே
வீறுகொண்டு எழும் கௌமாரமே காப்பு!

ஆயிரம் கிருத்திகை பூசை செய்து
ஆயிரம் வேலை அளித்து மகிழ்ந்து
ஆயிரம் வீட்டில் வேலின் பூசைக்கு
ஆயிரத்தில் ஒருவராய் அடித்தளமிட்ட
ஆயிரம் குருவில் எம்குரு உயர்குரு என
பாயிரம் பாடி மகிழ்வேன்!

ஆடிக்கிருத்திகை தேடி வரவே
கூடி நின்று குமரனை வணங்க
தேடி மக்கள் வருகின்ற நாளில்
கூடிவந்தது  நாற்பத்தொன்பதாம் அகவை
தேடி வரும் பக்தர் கூட்டம் குமரனை வணங்கி
நாடி வந்து குமர குருபர சுவாமிகளையும் வணங்கி
ஓடி வந்து குருவருள் திருவருள் பெறும் நாள்
கூடிவந்த நாண்மங்கள விழா நாள்!

இலட்சியம் முருகபக்தி முழுதுலகும் வளர
துலங்க அனைத்துலக முருக பக்தி மாநாடு
இலங்கை நாட்டில் எங்கள் சுவாமி
சலங்கைக் குரலில் மிளிர்ந்தார்!

 நல்லோர் போற்றும் நல்லையாதீனம் சந்திப்பு
வல்லோராக்கும் கீரிமலையாதீனம் சந்திப்பு
எல்லோரும் போற்றும் ஆன்மீக தலபயணம்
சொல்ல வார்த்தைகள் இல்லையம்மா!

  
பத்துநாட்கள் ஐரோப்பா ஆன்மீக பயணம்
முத்தாக முருகன் புகழ் எங்கும் பரப்பவே
சித்தராகவே வலம் வந்தவர் எம் சுவாமிகள்
பத்தனாக பணிந்தேன் பாதம்!

தமிழ்வின் வலைதள தரமான செய்தி
தமிழின் பெருமைகள் பரப்ப புகழ
தமிழ்ச் சைவஆதீனங்கள் ஐரோப்பா யாத்திரை
தமிழ் மண்ணிற்கு  சிறப்பு!

அன்பு நெறியை அகிலம் அறிய
அன்பாய் அவணி இருக்க கூடும்
ஐக்கிய நாடுகள் சபைதனைக் கண்டு
ஆனந்தம் அடைந்தவர் எம்குருநாதர்

சுவிட்சர்லாந்து சூரிஸ்நகரம் மாரியம்மன் கோவில்
ஊர் போற்றும் எம் குருநாதர் திருக்கரத்தால்
தேர்த்திருவிழா கொடியேற்றி வைத்தார்
பார் போற்றும் பாங்கே!

சுவாமி கதிர்வேலாயுதர் கோவில் வளாகம்
சுவாமி சிரவையாதீனம் சிறப்பு செய்தார்
சுவாமிகள் அருளும் வெண்ணீறு போலேவே
சுவாமி மயிலும் கண்டார்!

இருமனம் இணையும் திருமண நிகழ்வை
குருவாய் நின்று வாழ்த்தியது கோடி
திருவாய் உற்சவர் ஊர்வலம்போலே
குருவாய் பிரான்ஸ் நாடும் சென்றார்!

பத்தொன்பதாமாண்டு திருப்புகழ் இசைவிழா
சித்தத்தில் நிற்கும் சீரான திருவிழா
பத்தர்கள் கூடி திருப்புகழ் பாடி  ஆங்கே
நித்தமும் பேசி மகிழ்ந்தனர்!

குரு நெறியே கௌமார நெறியாம்
குருவின் சேவையோடு குருபூசை
குருவாம் சுந்தரர் நினைவைப் போற்றும்
இருபத்திநான்காமாண்டு குருபூசை செய்தார்

சுந்தரர் தொண்டர் எம்குரு நாதர்
சுந்தரமான தோற்றம் சொல்லாற்றல்- நடமாடும்
சுந்தரசுவாமியின் மறுஉரு இவரே
சுந்தரர் தோரண வாயில் கண்டார்

இராசகோபுரத் திருப்பணி லட்சியம்
இராசர்கள் போற்றும் தம் குரு சுந்தரர்
இராசகோபுரம்  சுந்தரர் திருப்பெயர்
இராசகோபுரம் சுந்தரர் தோரணவாயில்!

முருகபக்தர்கட்கு இருக்கும் திருமடம்
முருகனே குருவாய் வந்த அருணகிரி அம்சம்
முருகதாசசுவாமிகள் என்னும் வண்ணச்சரபர்
குருவம்சமாய் தொடரும் கௌமார சமயம்
குருவிற்கு பூசை நூற்றி இருபதாம் ஆண்டு
குருபூசை செய்து மகிழ்ந்தார் சுவாமிகள்!

உலகம் போற்றும் கௌமார சமயம்
உலகமே போற்றும் எம் குருநாதர்
உலக முருக இலக்கிய மாநாடு
உலகம் போற்ற கண்டார்!


சமயப்பணியோடு கல்விப்பணியும்
சமரசமாக இலக்கியப் பணியும்
சரியாக சுற்றுசூழல் தினத்தில்
சமுதாயத்திற்காய் செடிகள் நட்டார்

பழனியில் அருளாட்சி ஏற்றவர் சுவாமிகள்
பழனி பட்டணம்சுவாமி மடத்தின் தலைவர்
பழனி பாதயாத்திரை செல்வோர் நலம்பெற
பழனியாத்திரை தனிப்பாதை கோரினார்
பழனிமுருகனின் ஆணையோ என எண்ணி
பழனிச்சாமி தனிப்பாதை கொடுப்பார்
பழனி முருகனே எம் குரு நாதர்!

முகநூல்பக்கத்தில் முருகன் செய்தி
அகமெல்லாம் மகிழ காணவைத்தார்
இணையதளத்தில் இன்னும் சேவைகள்
பணையம் வைத்தேன் மனது!

முருகபக்தர்களை ஒன்றாய்க் கூட்டி
முருகபக்தர்கள் பேரவை கண்டு
முருகபக்தர்கள் மாநில மாநாட்டை
முருகன் அருளால் நான்காமாண்டு
முருகனெறியை முழுதுலகும் பரப்ப
முருகதாசர் பிறந்த ஊரில்
முருகன் அருளால் நடத்த உள்ளார்

எத்தனை பிறவி எத்தனை ஜென்மம்
எத்தனை தாயோ எத்தனை தந்தையோ
அத்தனை பிறவிதனிலும் குருமட்டும் நீவிர்-இந்த
பித்தனை பேயனை பெரும்பிழையானை
பத்தனாய் இருத்தி முருக உபதேசம் செய்த
சித்தரே சித்தம் நிறைந்தவரே இன்னும் பல்லாண்டு
சத்திய வாக்காய் சந்நிதானமாய் இருந்து
பத்தி நெறியை பரப்ப இறைஞ்சும் பித்தன்
சிரவையாதீனச்சீடன் முருக செகதீசுவரன்
வாழ்த்த வயதில்லை! திருவடி பணிகின்றேன்!
குருவே சரணம்! குருவே சரணம்! குருவே சரணம்!

கவிதையாக்கம்:

                     சிரவையாதீனச்சீடர் முருக செகதீசுவரன், 
                         ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம். 
                                         அந்தியூர்.

                                 சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
                                  கௌமாரநெறி ஓங்கி வளரட்டும்!!


வணங்குகின்றோம்...வரவேற்கின்றோம்...

இலங்கையில் 9 நாட்கள் ஆன்மீகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நமது சிரவை ஆதீன தவத்திரு. குருமகா சன்னிதானங்கள், குருவருளாலும், திருவருளாலும் பயணத்தை இனிதே நிறைவு செய்து  (04-08-2018) அன்று மடாலயம் திரும்பினார்கள்...
சுவாமிகளை  கரம் கூப்பி வணங்குகின்றோம்...வரவேற்கின்றோம்...





                                        சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
                                         கௌமாரநெறி ஓங்கி வளரட்டும்!!

சிரவையாதீனம் 49ம் ஆண்டு நாண்மங்கல நாள் விழா (ஆகஸ்ட்-6)

குருவிற்கு கொலு வழிபாடு செய்து குருவருள் பெறுவதைக் காண கண் கோடி வேண்டும். குருவே பரம்பொருள் என்பது கௌமார நெறியாகும். அருணகிரி நாதர் முதல் தொடங்கி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வழியில் முருகனுக்கு என உலகில் இருக்கும் ஒரே கௌமார பரம்பரையில் நான்காம் சந்நிதானமாக உலகளாவிய அளவில் கௌமார நெறியை பலர் கடைபிடிக்க காரணமாக இருக்கும் எனது தீட்சா குருவும் எனது ஞானதேசிகருமாகிய சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களின் 49ம் ஆண்டு நாண்மன்கல நாள் விழா அனைவரும் கொண்டாட வேண்டிய திருவிழா. 100 ஆண்டுகள் கடந்தும் தூய நெறியில் தொய்வில்லாமல் விளங்கும் கௌமார மடாலயத்தில் ஆகஸ்ட் 6ம் தேதி நாளை கொலு வழிபாடு. முருக பக்தர்கள் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டிய அவசிய விழா இது. நன்றி. சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்.
குருபணியில்
சிரவையாதீனச்சீடர்
முருக செகதீசுவரன்
ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.
                                      சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
                                       கௌமாரநெறி ஓங்கி வளரட்டும்!!

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

இலங்கை 4ஆவது_அனைத்துலக_முருக_பக்தர்கள்_மாநாடு

மங்கள வாத்தியங்களுடன், பக்திப்பாடல்கள் முழங்க முருகப் பெருமானுக்கு சிறப்பு பூசை, வழிபாடுகளுடன் இன்று (03-08-2018) மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இனிதே துவங்கியது, நமது கௌமார மடாலயம் சிரவை ஆதீன குருமகா சன்னிதானங்கள் முனைவர் தவத்திரு. #குமரகுருபர_சுவாமிகள் எழுந்தருளி, அருளாசியுரை வழங்கியும் கருத்தரங்கில் கலந்துகொண்டும் நிகழ்வினைச் சிறப்பித்தார்கள். மயிலம் பொம்மபுர ஆதீன குருமகா சன்னிதானங்கள் தவத்திரு. சிவஞானபாலய சுவாமிகள், மலேசியா திருவாக்கு பீடம் தவத்திரு. பாலயோகி சுவாமிகள் ஆகிய அருளரசர்களும் எழுந்தருளி மாநாட்டு நிகழ்வினைச் சிறப்பித்தார்கள். நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முருகபக்தர்கள் கலந்துகொண்டனர், நமது சிரவை ஆதீன குருமகா சன்னிதானங்கள் தலைமையில் இந்தியாவிலிருந்து 26 அன்பர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்துக் கொண்டிருகின்றார்கள் என்பது குருபிடத்தக்கது.

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
கௌமாரநெறி ஓங்கி வளரட்டும்!!

சிரவையாதீனம் இலங்கை_ஆன்மீகச்_சுற்றுப்பயணம்-4

இலங்கை  - கொழும்புவில் உள்ள மாணிக்கப் பிள்ளையார் கோயில் வளாகத்தில் இன்று (02-08-2018) மாலை 4.00 மணியளவில் இனிதே துவங்கியது. முதல் நாளான இன்று நமது #கௌமார_மடாலயம், சிரவை ஆதீன குருமகா சன்னிதானங்கள் முனைவர் தவத்திரு. #குமரகுருபர_சுவாமிகள், மலேசியா திருவாக்கு பீடம் தவத்திரு. பாலயோகி சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீன குருமகா சன்னிதானங்கள் தவத்திரு. சிவஞானபாலய சுவாமிகள் ஆகிய அருளரசர்கள் எழுந்தருளி மாநாட்டின் துவக்க விழாவினைச் சிறப்பித்தனர். இலங்கை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திருமிகு. இராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டது மாநாட்டிற்கு மேலும் சிறப்பாக அமைந்தது. வரவேற்பு, செங்கோல் வழங்குதல், மாநாட்டு விழா மலர் வெளியீடு, மாநாட்டில் கலந்துகொண்ட அருளாளர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் சிறப்பு செய்தல் ஆகியவை இன்றைய சிறப்பம்சங்களாக விளங்கின. நூற்றுக்கணக்கான குழந்தைகள் முருகப்பெருமான் வேடம் அணிந்தும், காவடி எடுத்தும் மாநாடு நடைபெறும் பகுதியின் சாலைகளில் ஊர்வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. இந்தியா, மலேசியா, சுவிற்சர்லாந்து, இங்கிலாந்து, பிரான்சு இன்னும்பிற உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் ஏராளமான முருகபக்தர்கள் கலந்துகொண்டு துவக்க விழாவினைச் சிறப்பித்தனர்.






                                          சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
                                            கௌமாரநெறி ஓங்கி வளரட்டும்!!