திங்கள், 23 மார்ச், 2015
செவ்வாய், 17 மார்ச், 2015
சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 27 !
“கலியுகத்தில் விரைவில் எனது தலைமையில் சித்தர்கள் ஆட்சி
தொடங்க இருக்கிறது. அதன் தாக்கம் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளது.
மக்கள் பல வகையில் துன்பத்திற்கு உள்ளாக இருக்கிறார்கள். குடும்பம்
எனும் அமைப்பே சிதைந்து தன்னந்தனியாகத் திரியப்போகிறார்கள். போட்டி,
பொறாமை, கள்ளம், கபடம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இயற்கைச்
சீற்றங்களும், புதிய நோய்க் கிருமிகளும் தோன்றி மிகப் பெரும் சவாலாக
இருக்கும். ஆனாலும் ஆலய வழிபாடுகள் அதிகமாகும். ஆலயத்தில் கூட
மக்கள் ஆடம்பர வழிபாடுகள் செய்து வந்தாலும் எந்தவித மனமாற்றமும்,
பக்குவகும் வந்ததாகத் தெரியவில்லை. சித்தர்கள் பெயராலும்,
என் பெயராலும், பல போலி வேலைகள் நடந்து வருவது கண்டு
வருத்தமடைந்தாலும் நமது ஆன்மிகம் தன்னைத்தானே சுத்தம் செய்து
கொள்ளும். என் பெயரையும், சித்தர்கள் பெயரையும் சொல்லி போலியாகப்
பிழைப்பு நடத்துபவர்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றுவது கடினமாகும்.
ஆனாலும் சில இடங்களில் ஒளி ரூபமாகவும்,. அரூபமாகவும் தோன்றி
உண்மையான நாடி மூலம் உரைத்து வருகின்றோம். உண்மையான
பக்தர்களுக்கு எனது எண்ணத்தைத் தெரிவிக்கும் செயல் அது. அதே
போல் இந்த நாடியில் முருகனது விருப்பம் இருந்தால் இது போன்று
தோன்றி அருள் தருவேன். முருகப் பெருமானும், நானும் மக்களின் கர்ம
வினை தீர்க்கும் வழி வகைகளை இதில் உனக்குத் தோன்றச் செய்வோம்.
நாங்கள் இரகசியம் என உரைப்பதை எதிரே வந்து நாடி கேட்கும் நபருக்கு
நீ உரைக்கக் கூடாது. அதே போல் யாருக்கு எங்கள் கருணை பார்வை
இருக்கிறதோ அவர்களுக்கே 100% உன்னால் நாடி படிக்க முடியும்.
பூஜைகள், தானங்கள், தர்மங்கள், யந்திரங்கள், மந்திரங்கள், தந்திரங்கள்,
மணி, மந்திரம், ஔஷதம், மூலிகை, மர்மங்கள், ஆலய வழிபாடுகள்
போன்றவற்றை வந்து அமர்கின்ற உண்மையான பக்தர்களுக்கு தெரிவித்து
அவனுக்கு இகலோகத்திற்கு தேவையான ஆரோக்யம், ஆயுள், கல்வி,
திருமணம், புத்திரபாக்கியம், பதவி, செல்வம், செல்வாக்கு, போன்ற
விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வழி வகைகளை உரைப்போம்.
முன்ஜென்மம் உரைப்போம். முன்ஜென்ம சாபங்களையும், அது தீர்க்கின்ற
மர்மங்களையும் உரைப்போம். எல்லாமே வழிபாடுகளாகவே இருக்கும்.
முருகப் பெருமானது வாக்கு மிகச் சாதாரணமானது அல்ல. எனது வாக்கும்
அவர் சொல்வதை சொல்லும் வாக்கு. என்னை இழிவு செய்பவர்களை நான்
மன்னித்து விடுவேன். முருகப் பெருமானை இழிவு செய்பவர்களை நான்
மன்னிக்கவே மாட்டேன். எனது குருதுரோகமாக அதை நினைக்கிறேன்.
எனவே நீயும் பக்தி இல்லாதவர்க்கும், நம்பிக்கை இல்லாதவர்க்கும் இதை
உரைக்கக் கூடாது. பரிகாசம் செய்பவர்கள் பாவத்தை சம்பாதிப்பவர்கள்.
அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. இந்த சுவடியை ஆங்காங்கு
இருக்கும் சில அபூர்வ இடங்களில் வைத்து நீ பூஜிக்க வேண்டி வரும்.
எனவே அதற்கு உன்னைத் தயார் படுத்திக் கொள். போற்றுபவர்களைக்
கண்டும் ஏமாறாதே. தூற்றுபவர்களைக் கண்டும் கோபம் கொள்ளாதே
நான் பார்த்துக் கொள்கிறேன். முருகன் பார்த்துக் கொள்வார். எனது ஆசி
எப்போதும் உண்டு மகனே ஆசி ஆசி ஆசி.
இவ்விதம் ஒரு நீண்ட உரையை அகத்தியப் பெருமான் உரைத்து
முடித்தார். ஓர் இனம் புரியாத அனுபத்தில் திளைத்தேன். எனக்குள் சில
சந்தேகங்கள் வந்தது. அதை அகத்தியப் பெருமானிடம் கேட்கலாம் என்று
தோன்றியது. அதைக் கேட்ட உடன் நல்ல பதில்களை குரு முனிவர்
அகத்தியர் பகர்ந்தார்.
கேள்வி 1: சுவாமி திருமணம், வேலை, குழந்தை பாக்யம் போன்றவை
தருவதாகச் சொல்லியுள்ளதால் அதைத் தருவதன் நோக்கம் என்ன?
அகத்தியர் பதில்: மகனே நீ என்ன அர்த்தத்தில் கேட்கிறாய் என்பது
எனக்குப் புரிகிறது. இது போன்ற ஆசைகளை நிறைவேற்றுவதால்
பந்தத்தில் ஆழ்த்துவது ஆகிறதே என்பதுதான். நிச்சயம் இல்லை.
இல்லறத்தில் இருந்து பல கடமைகளை ஆற்றிக் கொண்டே இறை
சாதனையில் முன்னேற முடியும். அது மட்டும் இல்லாமல் பூர்வ ஜென்ம
சாபம் தீரவும் சிலர் இவ்விதக் கோரிக்கைகளோடு வருவதுண்டு. எனவே
அவரவர் பிராப்தப்படி இந்த அகத்தியன் வழிகாட்டுவேன் கர்ம வினை
தீரும் வழிகளை உரைப்பேன். முருகப் பெருமான் சில நபர்களுக்கு என்னை
உரைக்கச் சொல்வார். காரணம் அவர்கள் என்னோடு பலஜென்மங்களில்
தொடர்பு உடையவர்களாக இருப்பார்கள்.
கேள்வி 2: சுவாமி நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், சோதிக்க
நினைப்பவர்களுக்கும் உரைக்கக்கூடாது என்கிறீர்கள். அவர்களை நான்
எப்படி கண்டு பிடிப்பது?
அகத்தியர் பதில்: அதை முருகப் பெருமானும், நானும் பார்த்துக்
கொள்கிறோம். சோதிக்க வருபவர்களுக்கு பல சோதனை வைக்கும்
பலன்களை உரைத்து அவர்களை அவர்கள் வழியிலேயே சென்று
திருத்துவோம். ஆனாலும் முருகனது கோபம் உனக்கு நன்றாகவே
தெரியும் என்பதால் ஒருவருக்கு ஜீவநாடி படிக்கும் முன்பு என்னிடமும்,
முருகனிடமும் உத்தரவு கேள். நாங்கள் படி என்றால் படி. இல்லாவிடில்
விட்டு விடு. அவ்வளவுதான். காரணம் வருவோர் போவோர் எல்லாம்
கிள்ளுகின்ற கீரைகள் இல்லை சித்தர்கள். இறை நிந்தை செய்பவர்களைக்
கண்டால் நாங்கள் காதைப் பொத்திக் கொண்டு சிவ சிவ என உச்சரித்து
காத தூரம் சென்று கடலிலோ அல்லது அருவியிலோ குளித்து பின்பு சிவ
பூஜை செய்துதான் நிம்மதி அடைவோம். இவ்விதமிருக்க இந்த விஷயத்தில்
கருணை காட்ட முடியாது.
கேள்வி 3: நாடி படித்த உடனேயே பல அதிர்ஷ்டங்கள் வரவேண்டும்
என்பவர்கள் பற்றி?
அகத்தியர் பதில்: ஜீவ நாடியில் எங்களது வாக்குவருவதே அங்களது
ஆசியும் விருப்பமும் இருப்பதால் தான் என்பதால் நிச்சயம் நாங்கள்
சொல்கின்ற வழிகளைக் கடைபிடித்தால் அதிர்ஷ்டங்கள் வரும். வரக்கூடிய
அதிர்ஷ்டங்கள் அவர்களது கர்மவினைகளைப் பொருத்தும் அமையும்.
எனவே நாடி கேட்பதால் மட்டுமே பெரிய மாற்றம் நிகழாது. தொடர்ந்து
நம்பிக்கையுடன் கடைபிடித்து வரவேண்டும்.
இப்படிச்சொன்ன அகத்திய பெருமான் ஆசி கொடுத்து விட்டு சுவடியில்
இருந்து மறைந்து கொண்டார். இப்படி ஒவ்வொரு நாளும் எனக்கு பல
அதிசயங்கள் நடந்து வருகிறது. ஜீவநாடி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட
அதிசயங்களைக் கண்டிருக்கிறேன். எனவேதான் உத்தரவு இல்லாமல் நாடி
உரைப்பதில்லை. இவ்வித சம்பவங்கள் சிலருக்கு நம்பிக்கையின்மையைத்
தரலாம். அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை. உத்தரவு
இருப்பவர்களுக்கு ஜீவநாடி படிப்பேன். இல்லாவிடில் இல்லை என்பது
அகத்தியர் வாக்கு. இன்னும் பல இரகசியங்களைத் தொடர்ந்து சொல்லப்
“ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”
திங்கள், 2 மார்ச், 2015
சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 26 !
ஒவ்வொருவரும் கர்ம வினைகளைக் கரைத்து கடைத்தேறுவதற்கே இந்த
பூலோகத்திற்கு வந்திருக்கிறோம். அதை மறந்து விட்டு மீண்டும்,
மீண்டும் கர்மாவைச் சம்பாதித்து கணக்கை அதிகரித்துக் கொண்டே
இருக்கிறோம். கர்மாவின் காலக்கண்ணாடியே ஜாதகம். அதில் உள்ள
கிரகநிலைகள் அனைத்தும் நம் இஷ்டத்திற்க்கு அமைத்துக் கொள்ளும்
வழிகள் இப்போது இருக்கின்றன. அறுவை சிகிக்சை மூலம் பிறக்கின்ற
குழந்தைகளுக்கு முன் கூட்டியே நல்ல நேரம் கணித்து தோஷம் ஏதும்
இல்லாமல் நல்ல யோக திசைகள் வரும்படியும், தீர்க்காயுள்
இருக்கும்படியும், பார்த்து, பார்த்து ஜாதகம் கணித்து அந்த குறித்த
நேரத்தில் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து விடுகிறார்கள்.
இது நவீன தொழில் நுட்பத்தின் சாதனை. ஆனால் விதியை வெல்ல
முடியுமா? மதிக்கு அங்கு வேலை உண்டா? என்பது கேள்விக் குறியே?
குறித்த நேரத்தில் சிலருக்கு அறுவை சிகிச்சை நடப்பதில்லை அல்லது
அவர்கள் கேட்கும் தேதியில் 12 இலக்கணங்களில் எதைப் போட்டுப்
பார்த்தாலும் 1000 சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. எனவே 100%
யோகமுள்ள ஒரு ஜாதகத்தை நம்மால் முன்கூட்டியே கணிப்பது என்பது
ஒரு சிரமமான காரியம்தான். அங்கும் பூர்வ ஜெனம பாவ புண்ணியங்கள்
விளையாடி விடுகின்றன. காரணம் இங்கு ஜெனனம் எடுப்பதே
இறைவனைத் துதித்து, தொழுது போற்றி, பணிந்து, தேடி, நாடி, ஓடி,
தானங்கள், தர்மங்கள் செய்து நமது ஜென்மா கடைத்தேறும் வழியைத் தேட
வேண்டுமே தவிர அடுத்தவன் கெட்டாலும் தான் நன்றாக இருக்க
வேண்டும் என்று எண்ணக் கூடாது. அது மிகக் கொடியச் செயல்.
இன்று ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்த உடனேயே பல அதிர்ஷ்டங்கள்
தானாகத் தேடி வந்து அபூர்வ அரிய நலன்களை அட்டியின்றி அடைய
எண்ணம் கொள்கின்றனர். ஒரு சிலருக்கு அவ்விதம் நடந்து நல்ல
நிலையைத் தருகிறது. ஒரு சிலருக்கு எதுவுமே நடப்பதில்லை. எதைத்
தின்றால் பித்தம் தீரும் என்ற நிலையில் அங்கும், இங்கும் அலைந்து
திரிந்து பல்வேறு குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். பலவகைகளில்
செலவும் செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டு தப்புவதற்கு வழியின்றி
தடுமாறிக் கொண்டு தடம் மாறிவிட்டு தன்னிலையை உணர முடியாமல்
தவித்துக் கொண்டு இருகின்றனர். ஒரே ஜோதிடரை நம்புவதில்லை. அது
இருக்கட்டும். ஒரே ஒரு சித்தரைக்கூட நம்புவதில்லை. சிலகாலம்
அகத்தியர், அப்புறம் அது ஒன்றும் சரியில்லை போகர் நல்லவர், இல்லை
புலிப்பாணிதான் கருணை மிக்கவர் சில மாதம் கழித்து தேரையார்
திவ்யமானவர், இல்லை குதம்பைச் சித்தர்தான் குதூகலத்தைக் கொடுக்க
சிறப்பானவர் என நினைத்து நிலை தடுமாறுகின்றனர். இது எல்லாமே
கிடையாது 108 சித்தர்களையும் பூஜித்தால் அதில் ஏதாவது ஒருவர்
நல்லது செய்யாமலா போய்விடுவார்? இப்படி பலர் பலவித வழிபாடுகளைச்
செய்து பல சித்தர்கள் தரிசனம் செய்தும் பலனே இல்லையே என்று
புலம்பிக் கொண்டு இருப்பவர்கள் அதிகம்.
எந்த சித்தர்களும் தன்னை வழிபட வேண்டும் என்று விருப்பம்
கொள்வதில்லை. மாறாக உண்மையான சரணாகதியோடு வருகின்ற
பக்தர்களை சித்தர்கள் என்றும் கைவிடுவதும் இல்லை. சித்தர்கள் நோக்கம்
ஜென்மாவைக் கடைத்தேற்றும் வழிகளைச் செய்வதே. கர்ம வினைகளைக்
குறைக்கும் வழிகளையே சித்தர்கள் சொல்கிறார்கள். நம்மைக்
கடைத்தேற்றுவதில் வல்லவர்கள் அவர்கள். இறைவனைத் தரிசித்தவர்கள்.
அவர்களுக்குத்தான் நெளிவு, சுளிவு தெரியும். மணி, மந்திரம்,
ஔஷதத்தில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் எதிர்ப்பார்ப்பது உண்மையான
பக்தி. இறைவழியில் மட்டும் நாட்டம் அவ்வளவே!.
நல்ல நபர்களாக யாருமே இந்த கலியுகத்தில் இருக்க முடியாது.
எல்லோரும் ஏதோ ஒரு வகையில் குற்றம் புரிந்துக் கொண்டே
இருக்கிறோம். ஆனாலும் ஆத்ம தாகம் அதிகமாகி கொண்டே செல்கிறது.
இறைதேடலும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. விரைவில் நல்ல
ஆன்மிக மாற்றம் வருவதற்கான அனைத்து அடையாளங்களும் ஆங்காங்கு
தென்படுகின்றன. இது நல்லதே.
நமது ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அகத்தியர், சுகர், காகபுஜண்டர்,
மற்றும் முருகப் பெருமான், பதஞ்சலி ஆகியோர் தோன்றி நம்பி வருகின்ற
பக்தர்களுக்கு பல நன்மைகளைச் செய்து வருகிறார்கள். பெரும்பாலும்
முருகப் பெருமானின் வாக்கே வெளிப்பட்டு வருகிறது. இருந்தாலும் முருகப்
பெருமானோடு சேர்ந்த அடிக்கடி வெளிப்பட்டு வருகின்ற சித்த புருஷர்
அகத்தியர் ஆவார். அந்த மகான், சித்தர் வரும் போதெல்லாம் இந்த
மக்களைக் குறித்து அடிக்கடி வருத்தப்படுவதாகச் சொல்லும் போதெல்லாம்
எனக்கும் ஓர் இனம்புரியாத வருத்தம் உண்டாகிறது.
ஒரு நாள் அதிகாலை வேளை பூஜையில் இருந்தேன். சுமார் 6 மணி
இருக்கும். அப்போது என்னுள் ஒரு குரல் கேட்டது. மகனே என்று. நான்
ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் முருகப் பெருமானாக இருக்கும் என்று
யோசித்து முடிவு செய்வதற்க்குள் ஜீவநாடியை எடுத்துப் படி சில
விஷயங்கள் உனக்கு சொல்ல வேண்டும் என்றது குரல். ஆனால் அரை
மணி நேரம் என்னால் தியானத்தை விட்டு எழுந்திருக்கவே முடியவில்லை.
யாரோ ஒருவர் பலமாக என்னை ஆட்கொண்டு இருப்பதாக உணர்ந்தேன்.
ஒரு வழியாகச் சமாளித்து காலை 6.30 மணிக்கு ஜீவநாடிச் சுவடியை
எடுத்த உடனேயே ஒருவித அதிர்வுகள் என்னுள் பாய்வதை உணர
முடிந்தது. சரி இன்று ஏதோ ஒரு தெய்வீக நிகழ்வு நடக்க இருக்கிறது
என்பது மட்டும் யூகிக்க முடிந்தது. மகனே எட்டாவது ஓலையைப் பிரித்து
படி என்றது குரல். சரி என்று எட்டாவது ஓலையைப் பிரித்தேன்.
அந்த எட்டாவது ஓலையில் ஒரு வித ஒளி மஞ்சள் நிறத்தில் மின்னியது.
உடனே ஒரு கமண்டலம், தீர்த்த சொம்பு, தாடியுடன் ஒரு சிறிய
உருவம்போல் தெரிந்தது. ஒளி இன்னும் பிரகாசமாய் மாறியது. அதில்
வந்தது அகத்திய முனிவர். அருகில் முருகப் பெருமான். இதை எழுதினால்
கூட பலர் என்னை பரிகாசம் செய்யக்கூடும் என்று தவிர்க்கப் பார்த்தேன்.
அகத்தியரும், முருகப் பெருமானும் நீ இதை எழுத வேண்டும்
என்பதால்தான் இந்த உபதேசத்தைச் செய்கிறோம். பரிகாசிப்பவர்கள் பாவிகள்
அவர்களை மன்னித்து விடு. பக்தர்கள் கருணையானவர்கள் அவர்களுக்கே
இந்த உபதேசம் என்றார். எனக்கு மெய்சிலிர்த்தது. கண்ணீர் மல்க வந்த
உபதேசத்தை அப்படியே எந்த வித மறைவில்லாமல் எழுதிக் கொண்டேன்.
அதை அப்படியே அந்த அகத்தியர் ஆசி பெற்ற “திருவருள் சக்தி” இந்த மாத
இதழில் எழுதி உங்களுக்காகத் தருகிறேன்.
“திருவருள் சக்தி” எனும் பெயர் கொண்ட இந்த இதழ் அந்த இறைவனது
அருளையும், அகத்தியர் போன்ற பல சித்தர்கள் அருளையும்
பெற்றிருப்பதால்தான் இது போன்ற பல தெய்வீக இரகசியங்களை தாங்கி
தங்குத் தடையின்றி கடந்த 9 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டும், 10
ஆண்டிலும் பவனி வர இருக்கிறது. இதன் ஆசிரியர் கூட சித்தர்
அடிமையாக இருந்து சித்தர்களுக்குச் சேவை செய்து வருவதால் தான்
அவரால் இதை வெளியிட முடிகிறது. அகத்தியர் பின்வருமாறு உரைத்தார்.
“ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”
சனி, 28 பிப்ரவரி, 2015
பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்!
"யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே" - திருமூலர்.
கோடைகாலம் நம் அனைவரையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு பறவைகள் நீர் இல்லாமல் வருடம்தோறும் தன்னுடைய உயிரை இழக்கின்றது.ஆனால் இந்த வருடம் நமது வலைபதிவு நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிந்த அளவு பறவைகளுக்கு நீர் மற்றும் உணவளிக்க முயற்சி எடுப்போம்.
நன்றி - கௌமாரபயணக்குழு
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்!
வியாழன், 26 பிப்ரவரி, 2015
அபூர்வ ஆற்றல்களை அள்ளித்தரும் அருள் சாதனங்கள் !
தர்மசாஸ்திரத்தை செயல் படுத்தும்போது, கையில் தர்ப்பை (பவித்ரம்)
அணிய வேண்டும். ‘பவித்ரம்’ என்றால் தூய்மை என்று பொருள்.
இயற்கையாகவே தர்ப்பை தூய்மையானது. பவித்ரம் என்பதே தர்ப்பையின்
பெயராக விளங்குகிறது என்கிறது வேதம். பவித்ரம் வை தர்பா என்று
சொல்லப்படுகிறது.
பூமியின் ஆகர்ஷண சக்தியைத் தடுக்க தர்ப்பையால் ஆன ஆசனத்தில்
அமருவது உண்டு. ஆகாயத்தில் இருக்கும் இடையூறைத் தடுக்க விரலில்
தர்ப்பை வேண்டும். கடமையைச் செய்வதற்கான பொருட்களைத்
தூய்மைப்படுத்தவும் தர்ப்பையைப் பயன்படுத்துவர். அக்னி பரிசுத்தமானது
என்றாலும் அதன் தூய்மையை வலுப்படுத்த தர்ப்பை உதவும்.
ஒரு புல்லைக் கொண்டு செய்யும் பவித்திரம் எனப்படும் தர்ப்பை
இறப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளிலும், இரண்டு புற்களைக் கொண்டு
செய்யப்படும் தருப்பை தினசரி நடைமுறைகளுக்கும், மூன்று புற்கள்
கொண்டு செய்யப்படும் தருப்பை அமாவாசை அன்று செய்யப்படும் நீத்தார்
சடங்கு போன்றவற்றிலும், நான்கு புற்களினால் செய்யப்பட்ட தருப்பை
கோயில் நடைமுறைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
தருப்பைப்புல்லைப் பொதுவாக பவுர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையன்று
சேகரிப்பர். அப்பொழுது அதற்குரிய மந்திரங்கள் உச்சரிக்கப்படும்.
தர்ப்பைப்புல் கொய்யும் போது சொல்லப்படும் மந்திரம்:
“தேவானாம் பரிஷூதமஸி வர்ஷவ்ருத்தமஸி,
தேவபர்ஹிர்மாத்வாஞ்..விவயஹம் ருஹேம!” --- யஜுர்வேதம், தை.ஸ 1.1.2.1
பொருள்: “ தர்ப்பமே, நீ தேவர்களின் பொருட்டு சேகரிக்கப்படுகிறாய்,
மற்றும் மழையால் வளர்கிறாய். உன்னை அறுப்பதற்கு கத்தியை
வைக்கிறேன். உன்னை அறுப்பவனாயினும் நான் குறைவற்றவனாகவே
இருக்கவேண்டும். தர்ப்பமே, நீ நூற்றுக்கணக்கான தளிர்களாய் தளிர்த்து
இனிது தழைப்பாயாக” என்பது இதன் பொருள்.
தருப்பையின் நுனிப்பகுதிதான் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தருப்பை
மேலும் பல கதிர்வீச்சுகளை அடக்கிவிடும் என்றும் நம்பப்படுகிறது.
அதனால்தான் சில வேத மந்திரங்களை உச்சரிக்கும்போது தருப்பை
அணிவது கட்டாயமாகக் கருதப்படுகிறது.
பிரஹ்மனின் மூக்கில் இருந்து ஆண், பெண், அலி ஆகிய மூன்று
வடிவில் தர்ப்பை தோன்றியதாகச் சொல்லப்படுகிறது.
அக்கிரஸ்தூலமுடையது பெண் தர்ப்பை என்றும், மூலஸ்தூலம் உடையது
அலி தர்ப்பை என்றும், அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது
ஆண் தர்ப்பை என்றும் பிரித்து அறியப்படும்.
அடி தர்ப்பையில் பிரம்மனும் இடையில் சிவனும் முனையில்
விஷ்ணுவும் இருப்பதாக ஐதீகம்.
தேவ தர்ப்பணத்திற்கு நுனியாலும், மனித தர்ப்பணத்திற்கு மத்தியாலும்,
பித்ரு தர்ப்பணத்திற்கு மடித்து நுனியாகவும், தர்பணாதிகள் செய்ய
வேண்டும் என்று சாஸ்திரம் வரையறுத்துள்ளது.
ஜபம் மற்றும் தானம் செய்யும்போது தர்ப்பபாணியாக இருக்க
வேண்டும். தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ,
அதே போல் தர்ப்பை அணிந்திருப்பவனிடம் பாவம் ஒட்டாது என்கிறது தர்ம
சாஸ்திரம். உபாசனையில் ஜபம் மற்றும் வேள்வியைச் செய்ய விடாமல்
தடுக்கும் கண்ணுக்குப் புலப்படாத அரக்கர்கள், நம் கையில் உள்ள
தர்ப்பையைப் பார்த்ததும் விலகி ஓடுவர். முன்னோர் ஆராதனையில்
அரக்கர்களை விரட்ட, விருந்து படைக்கும் இடத்தை தர்ப்பையால்
துடைப்பது உண்டு. பூதம், பிசாசு, பிரம்மரஷஸ் ஆகியவை விரலில்
தர்ப்பையைப் பார்த்ததும் மிரண்டு ஓடி விடும். ஆகவே தூய்மை
வேண்டியும் இடையூறுகளை அகற்றவும், தர்ப்பை அணிய வேண்டும்.
தர்ப்பை அணியும் விரலை, ‘பவித்ர விரல்’ என்கிறோம்.
மின்சாரம் பாயாத பொருட்களில் தர்ப்பையும் ஒன்று. ஆனால்,
மின்சாரத்தை விட பலமடங்கு செயல்திறன் கொண்டது தர்ப்பை.
விஸ்வாமித்ரப்புல் (லெமன் கிராஸ்) என்ற ஒரு புல் வகை இருக்கிறது.
தர்ப்பைக்கு நிகராக விஸ்வாமித்ரரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு புல்
வகை எனக் கூறுவார்கள். இந்தப் புல்லினால் செய்யப்பட்ட இருக்கைகளை
உபயோகப்படுத்தும் போது கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
தர்ப்பையின் சாம்பலால்தான் கோவிலில் உள்ள விக்கிரகங்களையும்,
பாத்திரங்களையும் துலக்க வேண்டும். உபாசனைக்கு எல்லா விதமான
ஆசனங்களை விடவும் தர்ப்பாசனம் சிறந்தது.
கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம்.
எனவேதான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய
கிருமிகளால் கெடாமலிருக்க தூய்மையான தர்ப்பையைப் பரப்புகிறார்கள்.
திருநள்ளாறு கோயிலில் தருப்பைப்புல் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.
தருப்பைப் புல்லுக்குச் சப்ததோஷம், அற்பவீரியவிஷம், கபாதிக்கம்,
சர்வசுரம், தாகம், நமைச்சல் ஆகியவை போகும்.. மேலும் இந்துமத
வைதீகக் காரியங்களைச் செய்ய மிகவும் அத்தியாவசியமானது.
தர்ப்பைப்புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது.
இதற்கு, ‘அக்னி கர்பம்’ என்ற பெயரும் உண்டு. இந்த புல்லில் காரமும்,
புளிப்பும் இருப்பதால் செப்பு, ஐம்பொன் உலோக படிமங்களை இந்த
புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அப்படி செய்தால் அவற்றின் ஓசை
திறன் குறையாமல் இருக்கும்.
தர்ப்பைப்புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாது. நீருக்குள் பல
நாட்கள் கிடந்தாலும் அழுகாது. சூரிய கிரகணம் ஏற்படும்போது இதன்
வீரியம் அதிகமாக இருக்கும். இதன் காற்றுபடும் இடங்களில் தொற்று
நோய்கள் வராது.
தர்ப்பைப்புல்லுக்கு மந்திர சக்தியை உள் வாங்கிக் கொள்ளும் தன்மை
மிக மிக அதிகம். இது தீய எண்ணங்களையும் கர்ம வினைகளையும்
நம்மிடம் ஒட்டாமல் இருக்க உதவுகிறது.
சிறந்த புனிதமான தெய்வீக சக்தியைக் கொண்ட தேவர்களும்
பித்ருக்களும் நம் கண்களுக்கு தெரியாத ஒளி ரூபத்தில் வந்து அந்த
தர்ப்பையில் அமர்கின்றனர்.
தர்ப்பையைத் தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு
காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும், பயன்படுத்துவார்கள். தர்ப்பை
உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது. மேலும் பஞ்சலோகங்களில்
தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவேதான்
கோவில் கும்பாபிஷேகங்களில் தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில்
அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்கள். அதை நாடி சந்தானம்
அல்லது உயிர் கொடுத்தல் என்று சொல்வார்கள்.
உபாசனையின் போது கையில் ஒரு பிடி தர்ப்பையும், ஆசனமாக நான்கு
பிடி தர்ப்பையையும் வைத்து மந்திரம் சொல்ல எல்லா தேவதைகளையும்
தொடர்பு கொண்டு பல்வேறு செய்திகளை அறியலாம். நன்கு உரு ஏற்றிய
தர்ப்பையை எரித்துச் சாம்பலாக்கி அதில் சிறிது நெய் விட்டு மை போல
குழைத்து புருவங்களில் தடவ எல்லாவிதமான தோஷங்களும் விலகி
ஓடும். ஜன வசீகரம் ஏற்படும். பொதுவாக யாகங்களின் முடிவில் இதை
யாக ரட்சையாகச் செய்வார்கள்.
“ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”
திங்கள், 16 பிப்ரவரி, 2015
அபூர்வ ஆற்றல்களை அள்ளித் தரும் அருள் சாதனங்கள்
மகாலஷ்மிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லஷ்மி
வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரி
சங்கில் நீர் விட்டு கும்பத்தின் மேல் வைத்து மந்திரத்தினால்
புஷ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான
தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம்
மகாபுண்ணிய தீர்த்தம் போல் பரிசுத்தமாக விளங்குகிறது. ஆலயங்களில்
பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். அஷ்டோத்ரசத
நூற்றியெட்டு எனவும், அஸ்டோத்ரசகஸ்ர ஆயிரத்தியெட்டு எனவும்,
சங்குகள் இடம் புரிச்சங்குகளில் அடுக்கி வைக்கப் பட்டு பூஜித்த பின்
சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சங்குவால் அபிஷேகிக்கும் போது
மகாபுண்ணியம் கிடைக்கப் பெறுகிறது. அதில் பிரதான சங்காக விளங்கும்
வலம்புரி தீர்த்தம் பாவங்களைப் போக்கி தீவினை களைந்து நன்மை
அளிக்கிறது.
திருக்கழுக்குன்றம் ஊருக்கு நடுவில் அமைந்துள்ள புகழ்பெற்ற குளம்-
சங்கு தீர்த்த குளம் ஆகும். இதில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு
பிறக்கும். அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் – குளத்தின்
ஓரங்களில் நுரை கட்டும். சங்கு கரை ஒதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள்
அதை தட்டில் எடுத்து வைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள
சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும்
தண்ணீரிலேயே சென்றுவிடும். சாதாரணமாக உப்பு நீரில் கடலில் தான்
சங்கு பிறக்கும். இங்கு சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது.
மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இது தோன்றும். இந்த
சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில்
வைக்கப்பட்டுள்ளது.
வலம்புரிச் சங்கு வழிபாடு காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன்
ஆலயத்தில் ஐநூறு ஆண்டுகளாக பூஜை செய்யப்படுகிறது.
உலகிலேயே உயிர்வளம் செழித்த பகுதிகள் கடல்தான். உலகின் 70
சதவீதம் கடல். அங்குள்ள அனைத்து உயிரினங்களும் இன்னும்
முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்படவில்லை. நிலத்தில்
உள்ளது போலவே கடலிலும் கணக்கற்ற உயிரினங்கள் ஒன்றை ஒன்று
சார்ந்து வாழ்ந்து வருகின்றன. பெரும்பாலான கடல் உயிரினங்கள் இடது
புறமாக வளரும் தன்மை கொண்டவை. இதனால் இடம்புரிச் சங்குகளே
பெரும்பாலும் உருவாகின்றன.
கடலில் இருந்து சேகரிக்கப்படும் இந்த சங்கு-சிப்பி என்பது ஒரு
உயிரினத்தின் கூடு. ஒவ்வொரு உயிரினத்தின் உடலுக்கு ஏற்பவே சங்கு,
சிற்பி, சோவிகள் வளர்கின்றன. சங்கு-சிப்பிகளை அதில் வாழும் சிறிய
உயிரினமே தனது பாதுகாப்புக்காக உருவாக்குகிறது. நமக்கு
எலும்புக்கூடு போல், அவற்றுக்கு இந்தக் கூடு பாதுகாப்பு அளிக்கிறது.
கால்ஷியம் கார்பனேட், என்றழைக்கப்படும் சுண்ணாம்பைக் கொண்டு
ஒவ்வொரு உயிரினமும் தனது இனத்திற்கு ஏற்ற வகையில் சங்கு-
சிப்பிகளை உருவாக்குகிறது. உயிரோடு பிடித்து வரப்படும் இந்த
உயிரினங்கள் கொதிக்கும் நீரை ஊற்றி அழிக்கப்படுகின்றன. பிடிக்கப்படும்
நேரத்தில் இந்த சங்கு-சிப்பிகள் பெரும்பாலும் சொரசொரப்பாகவே இருக்கும்.
ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஊற்றி சொரசொரப்பு நீக்கப்படுகிறது.
பட்டினத்தாரே, மனித வாழ்வின் முழுமையான தத்துவத்தையும்,
தமிழின் முச்சங்கங்களின் பெயராலேயே விளக்குகிறார்.
“முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார்
இசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும்-கடைச்
சங்கம் இம்போதது ஊதும் அம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்”
தமிழனின் வாழ்வில் மூன்று நிலைகளில் சங்கு இடம்பெறுகிறது.
1. பிறந்த குழந்தைக்கு வலம்புரிச்சங்கில் பால் புகட்டுவார்கள்.
2. திருமணத்தின் போது இசையுடன் கூடிய சங்கொலி இசைப்பர்.
3. பின்னர் இறுதியாக மரணத்தின் போது ஊதப்படும் சங்கு.
இவ்விதம் பெருமைகள் பல பெற்ற சங்கு, உபாசகர்களுக்கு அதிக
அளவில் பயன்படும். ஏனெனில் லட்சுமி கடாட்சம் இல்லாமல் இந்த
உலகில் வாழ முடியாது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.
எனவே உபாசகர்கள் குறைந்த பட்சம் ஒரு வலம்புரி அல்லது இடம்புரி
சங்கையாவது பூஜையில் வைத்து உபாசிப்பது நலம். சங்கு பூஜை செய்ய
விரும்புகிறவர்கள், சங்கில் நீர் நிரப்பி வைத்து, மலர்களால் அர்ச்சித்து,
மந்திரம் ஜபித்து, உபாசனை தெய்வத்தின் படம் அல்லது சிற்பத்துக்கு
அருகே வைத்து விட வேண்டும். பிறகு காலையில் எழுந்தவுடன்,
காலைக்கடன்களை முடித்துவிட்டு, நீராடியபின், பூஜை அறையில் சங்கில்
உள்ள நீரினை முதலில் வீட்டின் வாசற்படி மேல் தெளிக்க வேண்டும்.
இப்படிச் செய்வதால் லட்சுமியானவள் நிரந்தரமாக இல்லத்தில்
தங்கியிருப்பாள். மேலும், வெள்ளிக்கிழமைகளில் பசும்பால், துளசி
இலைகளப் போட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும். இதனை அடுத்த
நாள், காலையில் எழுந்ததும் நீராடிவிட்டு, பூஜை முறைகளைச்
செய்துவிட்டு, சங்கில் உள்ள பசும்பால், துளசி இலைகளை பிரசாதமாகச்
சாப்பிட, நாள்பட்ட நோய்கள் குணமாகும்.
வீட்டில் பூஜை அறையில் சங்கை வைத்து வழிபடுபவர்கள் சில
வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
1. சங்கு லட்சுமியின் அம்சம், ஆதலால் கீழே வெறும் தரையில்
2. தட்டு அல்லது வாழை இலையின் மீது வெறுமனே வைத்தால்
வைக்கக்கூடாது. ஏதேனும் தட்டு அல்லது வாழை இலையில்
வைக்க வேண்டும்.
சங்கு அங்கும் இங்கும் ஆடும். எனவே பச்சரிசி அல்லது நெல்
பரப்பி அதன் மீது சங்கை வைக்க வேண்டும்.
3. சங்கு வடக்கு அல்லது தெற்கு முகமாக இருக்க வேண்டும்.
4. சங்கில் தண்ணீர் வைத்து துளசி போடலாம்.
5. பணம், நாணயங்கள், தங்கம் அல்லது நவரத்தினங்கள் வைக்கலாம்
அல்லது பூக்கள் வைக்கலாம்.
6. சங்கைப் பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் அபிஷேகம்
முடிந்தபின் பட்டுத் துணியால் நன்றாக சங்கைத் துடைத்து
வைக்கவும்.
குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை எல்லா பூஜைக்கும் சொன்னால்
மந்திரம் விரைவில் சித்தியாகும். ஆனால் சங்கு பூஜை செய்யும்போது
மட்டும் பின்வரும் சங்கு காயத்ரி மூன்று முறை சொல்ல வேண்டும்.
“பாஞ்ச ஜன்யாய வித்மஹே
சங்க ராஜாய தீமஹி
தந்தோ சங்கப் ப்ரசோதயாத்”
இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லிய பின்பு நீங்கள் உபதேசம்
பெற்ற மந்திரத்தை ஜபம் செய்ய ஆரம்பிக்கலாம். உபாசகர்கள் சொல்லும்
ஒவ்வொரு மந்திரமும் சங்கில் உள்ள நீரில் பதியும். விபூதி, எலுமிச்சை
போலவே இந்த சங்கு நீரையும் அனைத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கவும்
பயன்படுத்தலாம். சங்கு மட்டுமல்லாமல் சோழிகளும் உபாசனையில்
வைத்து உரு ஏற்றி பிரஸ்னம் பார்க்கப் பயன்படுத்தலாம். சிறு சங்குகளைக்
கட்டி மாலையும் போடலாம். சங்கு எங்கு உள்ளதோ அங்கு துர் ஆவிகள்
ஒழிந்து விடும். அதே போல் செல்வம் செழிக்கும். எனவேதான்
கிராமங்களில் பசு மாட்டின் கழுத்தில் கூட சங்கு கட்டுவார்கள். சங்கின்
ஒலிக்குத் தீய சக்திகள் அஞ்சி நடுங்கும். மார்கழி மாதத்தில் பீடைகளை
அகற்ற விஷ்ணு தாசர்கள் சங்கு ஒலி எழுப்புவார்கள்.
அடுத்து வெற்றிலையின் மூலம் உபாசகர்கள் பெறுகின்ற நலனைப்
பார்க்கலாம். வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும்,
காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக ஐதீகம். இறைவனுக்கு எத்தனை
பதார்த்தங்கள் நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால்
அந்நிவேதனம் முற்றுப் பெறுவதில்லை. பூஜை மற்றும் திருமணம்
ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக
வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. வெற்றிலையும், பாக்கும்
மகாலட்சுமியின் அம்சங்களாகும்.
கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள்
ஆண்வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை நிறத்தில் உள்ள வெற்றிலைகள்
பெண்வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 31.3% புரதச்சத்தும், 0.8% கொழுப்புச்
சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின்,
ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.
தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய்
எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் (chavicol) என்னும் பொருள் இருப்பதாக
கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து
ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல
நோய்களையும் குணப்படுத்தலாம்.
உபாசனையின் போது வைக்கப்பட்ட வெற்றிலையை ஆவி பிடித்தவருக்கு
மென்று சாப்பிடக் கொடுக்க விரைவில் அந்த ஆவி அவரை விட்டு நீங்கும்.
உபாசகரால் உரு ஏற்றப்பட்ட வெற்றிலையைத் தரிப்பவருக்கு தரித்திரம்
நீங்கும். உபாசகர் பூஜை செய்த வெற்றிலையை இரவு தூங்கும் முன்பு
தரித்துக் கொள்ள மந்திர ஆற்றல்கள் உடலில் அப்படியே பதியும். நன்கு
உரு ஏற்றிய வெற்றிலையை பாக்கெட்டில் எடுத்துச் செல்ல எல்லாக்
காரியங்களும் வெற்றி அடையும்.
“ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015
சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 25!
தைபூச திருவிழாவில் அலங்காரத்தில் ஞானஸ்கந்தமூர்த்தி
இந்த “ஜீவ நாடி இரகசியங்கள்” எனும் தொடர் சத்தியத்தையும்,
தர்மத்தையும் தாங்கி வரும் தொடர், பல்வேறு ஆன்மிக அருளாளர்களின்
பாராட்டைப் பெற்ற தொடர். இதில் கலப்பு எதுவுமில்லை. நடந்தவற்றை
அப்படியே எழுதுகின்றேன். இது சுய விளம்பரம் அல்ல. அப்படி விளம்பரம்
செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. காரணம் நம்மிடம் நாடி
கேட்க யாராவது வரமாட்டார்களா என்று எதிர்பார்த்தால்தானே விளம்பரம்
வேண்டும். விற்காத பொருளுக்குத்தானே விளம்பரம் வேண்டும். உண்மை
உரைப்பதற்கு எதற்கு விளம்பரம். பல்வேறு தனியார் தொலைகாட்சிகளில்
இருந்து அழைப்பு வருகிறது. ஒரு மணி நேரம் புரோகிராம் செய்ய தொகை
கொடுத்தால் போதும், மிக முக்கிய தினசரி நாளிதழ்களிலிருந்து கூட
கேட்கிறார்கள். இது விளம்பரத் தொழில் அல்ல. முருகன் கருணை யாருக்கு
இருக்குமோ அவர்கள் தான் இதை 100% நம்பி பயன் அடைவார்கள்.
என்னைத் தேடி வர ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். திரும்பத்
திரும்ப வருகிறார்கள். காரணம் அவர்கள் உண்மையை உணர்ந்து
விடுகிறார்கள். பணம் என்பது அத்தியாவசியத் தேவைதான் என்றாலும்
சுவடியை வைத்துப் பொய் சொல்லி வயிறு வளர்க்கும் அளவிற்கு ஸ்ரீ
ஞானஸ்கந்த மூர்த்தி என்னை கேவலமாகப் படைத்து விடவில்லை. மிக
நன்றாகவே வைத்திருக்கிறார். எனவே விளம்பரத் தொடர் அல்ல இது.
வியாபாரத் தொடர் அல்ல இது. வேலனின் திருவிளையாடல்களை
வீதிதோறும் தெரிவித்து வாழ்வை வளமாக்கும் தொடர் என்பதைப்
தெரிவிப்பது எமது கடமையன்றோ!
எதற்காகச் சொல்கின்றேன் என்றால் என்னிடம் வந்து நாடி கேட்கவே
எவ்வளவு சிரமம் என்பதை அறியாதவர்கள் இல்லை. அப்படி நாள்
கொடுத்து நாடி படித்து சொன்னாலும் ஆலயப் பரிகாரங்களைச்
செய்யாதவர்களும் இருக்கிறார்கள். பட்டு திருந்தியவர்களும் இருக்கிறார்கள்.
நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. காரணமே அதை முருகன்
பார்த்துக் கொள்கிறார். நம் வேலையை நாம் பார்ப்போம்.
ஒரு திருமணமான புது தம்பதிகள் ஆறுமாத முயற்சிக்குப் பின்பு நாடி
படித்து தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்கள். புதுமணத்
தம்பதிகளை தரிசிப்பதே மிக நல்லது. திருமண கோலத்தில் இருக்கிற
தம்பதிகளை தரிசனம் செய்யத்தான் அனைவரையும் அழைக்கின்றோம்.
அப்போது இறையருள் அவர்களுக்குக் கிட்டுகிறது. மணக்கோலத்தில்
இருப்பவர்களை வெறும் கையில் சென்று பார்க்கக்கூடாது. அவர்கள்
மகிழ்ந்தால் நமது கர்மவினை குறையும். தற்காலத்தில் அது மாறி Gift
கொடுக்கும் பழக்கம் வந்துவிட்டது. அதுவும் தவறில்லை. எனவே
திருமணத் தம்பதிகளைக் கண்டால் சிறு குங்குமமாவது கொடுங்கள். சிறிது
தண்ணீர் கொடுத்து அவர்களது வயிற்றைக் குளிர்வித்தால் அந்த
இறையருள் கிட்டும். குறிப்பாக சுக்கிர பகவானின் ஆசி கிட்டும். இது
ஜீவநாடியில் வந்த ரகசியம்.
அந்த தம்பதியருக்கு முருகப் பெருமான் பின்வருமாறு உரைத்தார்.
“ஆசியதுவும் உண்டு
அருளதுவும் உண்டு
அற்புத சந்தானம் வாய்க்கும்
ஆனாலும் சந்தான கண்டாதி
அபதோஷம் ஒன்றுண்டு
அடுக்கடுக்காய் பரிகாரம்
ஆண்டு இரண்டுக்கு
அவசியமும் செய்ய வேணும்
ஆதான பின்னே ஆக வேண்டும் கரு”
உங்களுக்கு முருகனது ஆசி உண்டு. அவரது அருளும் உண்டு.
அற்புதமான சந்தானம் அற்புதமான குழந்தை வாய்க்கும். ஆனாலும்
“சந்தான கண்டாதி அபதோஷம்” என்கிற ஒரு மோசமான தோஷம் உண்டு.
எனவே அடுக்கடுக்கான பரிகாரங்கள் இரண்டு ஆண்டுகள் அவசியம் செய்ய
வேண்டும். அதன் பின்பே குழந்தைக்கு முயற்சிக்க வேண்டும் என்று
எட்டுப் பரிகாரங்களை முருகப்பெருமான் உரைத்தார். அந்த எட்டுப்
பரிகாரங்களை வெளியிட உத்தரவு இல்லை என்பதால் இங்கு தரவில்லை.
இந்த எட்டுப் பரிகாரங்களும் சில ஆலய தரிசனங்கள், சில தானங்கள்,
சில பூஜைகள், சில மூலிகைகள் என இருந்தன. பெரிய செலவுகள்
இல்லாத அவர்கள் சக்திக்கு ஏற்ப செய்யக்கூடிய பரிகாரங்களாகவே
இருந்தன. சரி ஐயா என ஆசி வாங்கி விடைபெற்றுச் சென்றார்கள். அதற்குப்
பின் ஒருவருடம் வரை மீண்டும் அவர்களைப் பார்த்ததாக நினைவில்லை.
அமாவாசை பூஜைக்கும் வருவதில்லை.
இந்த சம்பவம் மறந்தே போய்விட்டது. மீண்டும் ஒருநாள் தேதி
கேட்டார்கள். ஏற்கனவே என்னிடம் பார்த்திருந்தால் அவர்கள் யாராக
இருந்தாலும் உடனே படிக்க அனுமதி உண்டு என்பதால் வாருங்கள்
என்றேன். வந்து எனது காலைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதார்கள்.
எவ்வளவு சொல்லியும் எழுந்திருக்கவில்லை. சரி என்னதான் நடந்தது
எனச் சொல்லுங்கள் என்றேன்.
சுவாமி, தாங்கள் சொன்ன எட்டுப் பரிகாரங்களில் ஒன்றைக் கூட
நாங்கள் செய்யவில்லை. நாடி படித்த அந்த மாதமே கருவுற்றேன். மிகப்
பிரபல மருத்துவரிடம் காட்டி வந்தோம். மிக நலமாக இருக்கிறது
என்றார்கள். 7வது மாதத்தில் குழந்தையின் இருதயத்தில் சிறு கோளாறு
இருப்பதாகவும், பிறந்தால் சரியாகிவிடும் என்று சொன்னார்கள். அழகான
ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த 5 நாளில் இருதயக் கோளாறால் இறந்து
விட்டது சுவாமி எனக் கதறினார்கள். விதி எப்படி விளையாடி இருக்கிறது
பார்த்தீர்களா வாசகர்களே, நாடி கேட்டால் மட்டும் போதாது. அதன்படி
நடக்கவும் முயற்சி செய்ய வேண்டும். எது எப்படி இருந்தாலும் ஊழ்வினை
உறுத்து வந்து ஊட்டும் என்ற சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுவது போல
விதி வழியே வினை சென்று விடுகிறது. சரி இனி மேலாவது நலம்
கிட்டுமா என்று சுவடியைப் பூஜித்துப் படித்தேன். எத்தனை முறை
முயற்சி செய்தும் ஆசி என்று மட்டுமே வந்தது. வேறு எதுவும் வரவே
இல்லை. சரி அந்த எட்டுப் பரிகாரங்களை செய்து விட்டு வாருங்கள்.
நிச்சயம் வாக்கு வரும் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தேன். இனி
நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
“ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













