ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 25!


                    தைபூச திருவிழாவில் அலங்காரத்தில்  ஞானஸ்கந்தமூர்த்தி 

   இந்த “ஜீவ நாடி இரகசியங்கள்” எனும் தொடர் சத்தியத்தையும்,

தர்மத்தையும் தாங்கி வரும் தொடர், பல்வேறு ஆன்மிக அருளாளர்களின்

பாராட்டைப் பெற்ற தொடர். இதில் கலப்பு எதுவுமில்லை. நடந்தவற்றை

அப்படியே எழுதுகின்றேன். இது சுய விளம்பரம் அல்ல. அப்படி விளம்பரம்

செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. காரணம் நம்மிடம் நாடி

கேட்க யாராவது வரமாட்டார்களா என்று எதிர்பார்த்தால்தானே விளம்பரம்

வேண்டும். விற்காத பொருளுக்குத்தானே விளம்பரம் வேண்டும். உண்மை

உரைப்பதற்கு எதற்கு விளம்பரம். பல்வேறு தனியார் தொலைகாட்சிகளில்

இருந்து அழைப்பு வருகிறது. ஒரு மணி நேரம் புரோகிராம் செய்ய தொகை

கொடுத்தால் போதும், மிக முக்கிய தினசரி நாளிதழ்களிலிருந்து கூட

கேட்கிறார்கள். இது விளம்பரத் தொழில் அல்ல. முருகன் கருணை யாருக்கு

இருக்குமோ அவர்கள் தான் இதை 100% நம்பி பயன் அடைவார்கள்.

என்னைத் தேடி வர ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். திரும்பத்

திரும்ப வருகிறார்கள். காரணம் அவர்கள் உண்மையை உணர்ந்து

விடுகிறார்கள். பணம் என்பது அத்தியாவசியத் தேவைதான் என்றாலும்

சுவடியை வைத்துப் பொய் சொல்லி வயிறு வளர்க்கும் அளவிற்கு ஸ்ரீ

ஞானஸ்கந்த மூர்த்தி என்னை கேவலமாகப் படைத்து விடவில்லை. மிக

நன்றாகவே வைத்திருக்கிறார். எனவே விளம்பரத் தொடர் அல்ல இது.

வியாபாரத் தொடர் அல்ல இது. வேலனின் திருவிளையாடல்களை

வீதிதோறும் தெரிவித்து வாழ்வை வளமாக்கும் தொடர் என்பதைப்

தெரிவிப்பது எமது கடமையன்றோ!

   எதற்காகச் சொல்கின்றேன் என்றால் என்னிடம் வந்து நாடி கேட்கவே

எவ்வளவு சிரமம் என்பதை அறியாதவர்கள் இல்லை. அப்படி நாள்

கொடுத்து நாடி படித்து சொன்னாலும் ஆலயப் பரிகாரங்களைச்

செய்யாதவர்களும் இருக்கிறார்கள். பட்டு திருந்தியவர்களும் இருக்கிறார்கள்.

நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. காரணமே அதை முருகன்

பார்த்துக் கொள்கிறார். நம் வேலையை நாம் பார்ப்போம்.

   ஒரு திருமணமான புது தம்பதிகள் ஆறுமாத முயற்சிக்குப் பின்பு நாடி

படித்து தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்கள். புதுமணத்

தம்பதிகளை தரிசிப்பதே மிக நல்லது. திருமண கோலத்தில் இருக்கிற

தம்பதிகளை தரிசனம் செய்யத்தான் அனைவரையும் அழைக்கின்றோம்.

அப்போது இறையருள் அவர்களுக்குக் கிட்டுகிறது. மணக்கோலத்தில்

இருப்பவர்களை வெறும் கையில் சென்று பார்க்கக்கூடாது. அவர்கள்

மகிழ்ந்தால் நமது கர்மவினை குறையும். தற்காலத்தில் அது மாறி Gift

கொடுக்கும் பழக்கம் வந்துவிட்டது. அதுவும் தவறில்லை. எனவே

திருமணத் தம்பதிகளைக் கண்டால் சிறு குங்குமமாவது கொடுங்கள். சிறிது

தண்ணீர் கொடுத்து அவர்களது வயிற்றைக் குளிர்வித்தால் அந்த

இறையருள் கிட்டும். குறிப்பாக சுக்கிர பகவானின் ஆசி கிட்டும். இது

ஜீவநாடியில் வந்த ரகசியம்.


   அந்த தம்பதியருக்கு முருகப் பெருமான் பின்வருமாறு உரைத்தார்.

“ஆசியதுவும் உண்டு

அருளதுவும் உண்டு

அற்புத சந்தானம் வாய்க்கும்

ஆனாலும் சந்தான கண்டாதி

அபதோஷம் ஒன்றுண்டு

அடுக்கடுக்காய் பரிகாரம்

ஆண்டு இரண்டுக்கு

அவசியமும் செய்ய வேணும்

ஆதான பின்னே ஆக வேண்டும் கரு”

   உங்களுக்கு முருகனது ஆசி உண்டு. அவரது அருளும் உண்டு.

அற்புதமான சந்தானம் அற்புதமான குழந்தை வாய்க்கும். ஆனாலும்

“சந்தான கண்டாதி அபதோஷம்” என்கிற ஒரு மோசமான தோஷம் உண்டு.

எனவே அடுக்கடுக்கான பரிகாரங்கள் இரண்டு ஆண்டுகள் அவசியம் செய்ய

வேண்டும். அதன் பின்பே குழந்தைக்கு முயற்சிக்க வேண்டும் என்று

எட்டுப் பரிகாரங்களை முருகப்பெருமான் உரைத்தார். அந்த எட்டுப்

பரிகாரங்களை வெளியிட உத்தரவு இல்லை என்பதால் இங்கு தரவில்லை.

   இந்த எட்டுப் பரிகாரங்களும் சில ஆலய தரிசனங்கள், சில தானங்கள்,

சில பூஜைகள், சில மூலிகைகள் என இருந்தன. பெரிய செலவுகள்

இல்லாத அவர்கள் சக்திக்கு ஏற்ப செய்யக்கூடிய பரிகாரங்களாகவே

இருந்தன. சரி ஐயா என ஆசி வாங்கி விடைபெற்றுச் சென்றார்கள். அதற்குப்

பின் ஒருவருடம் வரை மீண்டும் அவர்களைப் பார்த்ததாக நினைவில்லை.

அமாவாசை பூஜைக்கும் வருவதில்லை.

   இந்த சம்பவம் மறந்தே போய்விட்டது. மீண்டும் ஒருநாள் தேதி

கேட்டார்கள். ஏற்கனவே என்னிடம் பார்த்திருந்தால் அவர்கள் யாராக

இருந்தாலும் உடனே படிக்க அனுமதி உண்டு என்பதால் வாருங்கள்

என்றேன். வந்து எனது காலைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதார்கள்.

எவ்வளவு சொல்லியும் எழுந்திருக்கவில்லை. சரி என்னதான் நடந்தது

எனச் சொல்லுங்கள் என்றேன்.

   சுவாமி, தாங்கள் சொன்ன எட்டுப் பரிகாரங்களில் ஒன்றைக் கூட

நாங்கள் செய்யவில்லை. நாடி படித்த அந்த மாதமே கருவுற்றேன். மிகப்

பிரபல மருத்துவரிடம் காட்டி வந்தோம். மிக நலமாக இருக்கிறது

என்றார்கள். 7வது மாதத்தில் குழந்தையின் இருதயத்தில் சிறு கோளாறு

இருப்பதாகவும், பிறந்தால் சரியாகிவிடும் என்று சொன்னார்கள். அழகான

ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த 5 நாளில் இருதயக் கோளாறால் இறந்து

விட்டது சுவாமி எனக் கதறினார்கள். விதி எப்படி விளையாடி இருக்கிறது

பார்த்தீர்களா வாசகர்களே, நாடி கேட்டால் மட்டும் போதாது. அதன்படி

நடக்கவும் முயற்சி செய்ய வேண்டும். எது எப்படி இருந்தாலும் ஊழ்வினை

உறுத்து வந்து ஊட்டும் என்ற சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுவது போல

விதி வழியே வினை சென்று விடுகிறது. சரி இனி மேலாவது நலம்

கிட்டுமா என்று சுவடியைப் பூஜித்துப் படித்தேன். எத்தனை முறை

முயற்சி செய்தும் ஆசி என்று மட்டுமே வந்தது. வேறு எதுவும் வரவே

இல்லை. சரி அந்த எட்டுப் பரிகாரங்களை செய்து விட்டு வாருங்கள்.

நிச்சயம் வாக்கு வரும் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தேன். இனி

நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

                           “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக