திங்கள், 16 பிப்ரவரி, 2015

அபூர்வ ஆற்றல்களை அள்ளித் தரும் அருள் சாதனங்கள்



   மகாலஷ்மிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லஷ்மி

வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரி

சங்கில் நீர் விட்டு கும்பத்தின் மேல் வைத்து மந்திரத்தினால்

புஷ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான

தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம்

மகாபுண்ணிய தீர்த்தம் போல் பரிசுத்தமாக விளங்குகிறது. ஆலயங்களில்

பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். அஷ்டோத்ரசத

நூற்றியெட்டு எனவும், அஸ்டோத்ரசகஸ்ர ஆயிரத்தியெட்டு எனவும்,

சங்குகள் இடம் புரிச்சங்குகளில் அடுக்கி வைக்கப் பட்டு பூஜித்த பின்

சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சங்குவால் அபிஷேகிக்கும் போது

மகாபுண்ணியம் கிடைக்கப் பெறுகிறது. அதில் பிரதான சங்காக விளங்கும்

வலம்புரி தீர்த்தம் பாவங்களைப் போக்கி தீவினை களைந்து நன்மை

அளிக்கிறது.


  திருக்கழுக்குன்றம் ஊருக்கு நடுவில் அமைந்துள்ள புகழ்பெற்ற குளம்-

சங்கு தீர்த்த குளம் ஆகும். இதில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு

பிறக்கும். அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் – குளத்தின்

ஓரங்களில் நுரை கட்டும். சங்கு கரை ஒதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள்

அதை தட்டில் எடுத்து வைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள

சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும்

தண்ணீரிலேயே சென்றுவிடும். சாதாரணமாக உப்பு நீரில் கடலில் தான்

சங்கு பிறக்கும். இங்கு சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது.

மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இது தோன்றும். இந்த

சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில்

வைக்கப்பட்டுள்ளது.

 
வலம்புரிச் சங்கு வழிபாடு காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன்

ஆலயத்தில் ஐநூறு ஆண்டுகளாக பூஜை செய்யப்படுகிறது.

   உலகிலேயே உயிர்வளம் செழித்த பகுதிகள் கடல்தான். உலகின் 70

சதவீதம் கடல். அங்குள்ள அனைத்து உயிரினங்களும் இன்னும்

முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்படவில்லை. நிலத்தில்

உள்ளது போலவே கடலிலும் கணக்கற்ற உயிரினங்கள் ஒன்றை ஒன்று

சார்ந்து வாழ்ந்து வருகின்றன. பெரும்பாலான கடல் உயிரினங்கள் இடது

புறமாக வளரும் தன்மை கொண்டவை. இதனால் இடம்புரிச் சங்குகளே

பெரும்பாலும் உருவாகின்றன.

 
கடலில் இருந்து சேகரிக்கப்படும் இந்த சங்கு-சிப்பி என்பது ஒரு

உயிரினத்தின் கூடு. ஒவ்வொரு உயிரினத்தின் உடலுக்கு ஏற்பவே சங்கு,

சிற்பி, சோவிகள் வளர்கின்றன.  சங்கு-சிப்பிகளை அதில் வாழும் சிறிய

உயிரினமே தனது பாதுகாப்புக்காக உருவாக்குகிறது. நமக்கு

எலும்புக்கூடு போல், அவற்றுக்கு இந்தக் கூடு பாதுகாப்பு அளிக்கிறது.

கால்ஷியம் கார்பனேட், என்றழைக்கப்படும் சுண்ணாம்பைக் கொண்டு

ஒவ்வொரு உயிரினமும் தனது இனத்திற்கு ஏற்ற வகையில் சங்கு-

சிப்பிகளை உருவாக்குகிறது. உயிரோடு பிடித்து வரப்படும் இந்த

உயிரினங்கள் கொதிக்கும் நீரை ஊற்றி அழிக்கப்படுகின்றன. பிடிக்கப்படும்

நேரத்தில் இந்த சங்கு-சிப்பிகள் பெரும்பாலும் சொரசொரப்பாகவே இருக்கும்.

ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஊற்றி சொரசொரப்பு நீக்கப்படுகிறது.

 
பட்டினத்தாரே, மனித வாழ்வின் முழுமையான தத்துவத்தையும்,

தமிழின் முச்சங்கங்களின் பெயராலேயே விளக்குகிறார்.

“முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார்

இசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும்-கடைச்

சங்கம் இம்போதது ஊதும் அம்மட்டோ

நாம் பூமி வாழ்ந்த நலம்”

 

 தமிழனின் வாழ்வில் மூன்று நிலைகளில் சங்கு இடம்பெறுகிறது.

1. பிறந்த குழந்தைக்கு வலம்புரிச்சங்கில் பால் புகட்டுவார்கள்.

2. திருமணத்தின் போது இசையுடன் கூடிய சங்கொலி இசைப்பர்.

3. பின்னர் இறுதியாக மரணத்தின் போது ஊதப்படும் சங்கு.

   இவ்விதம் பெருமைகள் பல பெற்ற சங்கு, உபாசகர்களுக்கு அதிக

அளவில் பயன்படும். ஏனெனில் லட்சுமி கடாட்சம் இல்லாமல் இந்த

உலகில் வாழ முடியாது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.

எனவே உபாசகர்கள் குறைந்த பட்சம் ஒரு வலம்புரி அல்லது இடம்புரி

சங்கையாவது பூஜையில் வைத்து உபாசிப்பது நலம். சங்கு பூஜை செய்ய

விரும்புகிறவர்கள், சங்கில் நீர் நிரப்பி வைத்து, மலர்களால் அர்ச்சித்து,

மந்திரம் ஜபித்து, உபாசனை தெய்வத்தின் படம் அல்லது சிற்பத்துக்கு

அருகே வைத்து விட வேண்டும். பிறகு காலையில் எழுந்தவுடன்,

காலைக்கடன்களை முடித்துவிட்டு, நீராடியபின், பூஜை அறையில் சங்கில்

உள்ள நீரினை முதலில் வீட்டின் வாசற்படி மேல் தெளிக்க வேண்டும்.

இப்படிச் செய்வதால் லட்சுமியானவள் நிரந்தரமாக இல்லத்தில்

தங்கியிருப்பாள். மேலும், வெள்ளிக்கிழமைகளில் பசும்பால், துளசி

இலைகளப் போட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும். இதனை அடுத்த

நாள், காலையில் எழுந்ததும் நீராடிவிட்டு, பூஜை முறைகளைச்

செய்துவிட்டு, சங்கில் உள்ள பசும்பால், துளசி இலைகளை பிரசாதமாகச்

சாப்பிட, நாள்பட்ட நோய்கள் குணமாகும்.

   வீட்டில் பூஜை அறையில் சங்கை வைத்து வழிபடுபவர்கள் சில

வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

1. சங்கு லட்சுமியின் அம்சம், ஆதலால் கீழே வெறும் தரையில்

2. தட்டு அல்லது வாழை இலையின் மீது வெறுமனே வைத்தால்

வைக்கக்கூடாது. ஏதேனும் தட்டு அல்லது வாழை இலையில்

வைக்க வேண்டும்.

சங்கு அங்கும் இங்கும் ஆடும். எனவே பச்சரிசி அல்லது நெல்

பரப்பி அதன் மீது சங்கை வைக்க வேண்டும்.

3. சங்கு வடக்கு அல்லது தெற்கு முகமாக இருக்க வேண்டும்.

4. சங்கில் தண்ணீர் வைத்து துளசி போடலாம்.

5. பணம், நாணயங்கள், தங்கம் அல்லது நவரத்தினங்கள் வைக்கலாம்

அல்லது பூக்கள் வைக்கலாம்.

6. சங்கைப் பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் அபிஷேகம்

முடிந்தபின் பட்டுத் துணியால் நன்றாக சங்கைத் துடைத்து

வைக்கவும்.

   குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை எல்லா பூஜைக்கும் சொன்னால்

மந்திரம் விரைவில் சித்தியாகும். ஆனால் சங்கு பூஜை செய்யும்போது

மட்டும் பின்வரும் சங்கு காயத்ரி மூன்று முறை சொல்ல வேண்டும்.

“பாஞ்ச ஜன்யாய வித்மஹே

சங்க ராஜாய தீமஹி

தந்தோ சங்கப் ப்ரசோதயாத்”

   இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லிய பின்பு நீங்கள் உபதேசம்

பெற்ற மந்திரத்தை ஜபம் செய்ய ஆரம்பிக்கலாம். உபாசகர்கள் சொல்லும்

ஒவ்வொரு மந்திரமும் சங்கில் உள்ள நீரில் பதியும். விபூதி, எலுமிச்சை

போலவே இந்த சங்கு நீரையும் அனைத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கவும்

பயன்படுத்தலாம். சங்கு மட்டுமல்லாமல் சோழிகளும் உபாசனையில்

வைத்து உரு ஏற்றி பிரஸ்னம் பார்க்கப் பயன்படுத்தலாம். சிறு சங்குகளைக்

கட்டி மாலையும் போடலாம். சங்கு எங்கு உள்ளதோ அங்கு துர் ஆவிகள்

ஒழிந்து விடும். அதே போல் செல்வம் செழிக்கும். எனவேதான்

கிராமங்களில் பசு மாட்டின் கழுத்தில் கூட சங்கு கட்டுவார்கள். சங்கின்

ஒலிக்குத் தீய சக்திகள் அஞ்சி நடுங்கும். மார்கழி மாதத்தில் பீடைகளை

அகற்ற விஷ்ணு தாசர்கள் சங்கு ஒலி எழுப்புவார்கள்.

   அடுத்து வெற்றிலையின் மூலம் உபாசகர்கள் பெறுகின்ற நலனைப்

பார்க்கலாம். வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும்,

காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக ஐதீகம். இறைவனுக்கு எத்தனை

பதார்த்தங்கள் நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால்

அந்நிவேதனம் முற்றுப் பெறுவதில்லை. பூஜை மற்றும் திருமணம்

ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக

வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. வெற்றிலையும், பாக்கும்

மகாலட்சுமியின் அம்சங்களாகும்.

   கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள்

ஆண்வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை நிறத்தில் உள்ள வெற்றிலைகள்

பெண்வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

   வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 31.3% புரதச்சத்தும், 0.8% கொழுப்புச்

சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின்,

ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய்

எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் (chavicol) என்னும் பொருள் இருப்பதாக

கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து

ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல

நோய்களையும் குணப்படுத்தலாம்.

   உபாசனையின் போது வைக்கப்பட்ட வெற்றிலையை ஆவி பிடித்தவருக்கு

மென்று சாப்பிடக் கொடுக்க விரைவில் அந்த ஆவி அவரை விட்டு நீங்கும்.

உபாசகரால் உரு ஏற்றப்பட்ட வெற்றிலையைத் தரிப்பவருக்கு தரித்திரம்

நீங்கும். உபாசகர் பூஜை செய்த வெற்றிலையை இரவு தூங்கும் முன்பு

தரித்துக் கொள்ள மந்திர ஆற்றல்கள் உடலில் அப்படியே பதியும். நன்கு

உரு ஏற்றிய வெற்றிலையை பாக்கெட்டில் எடுத்துச் செல்ல எல்லாக்

காரியங்களும் வெற்றி அடையும்.

                           “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

1 கருத்து: