வியாழன், 23 ஜூலை, 2015

ஜீவ நாடி ரகசியம் - குரு பௌர்ணமி!




ஆடி மாதத்தில் வருகின்ற பௌர்ணமியை குரு பௌர்ணமி என்பர். அந்த வகையில் வருகின்ற 30.07.2015 அன்று வியாழன் இரவு முதல் 31.07.2015 வெள்ளி  இரவு வரை பௌர்ணமி இருக்கிறது. அதில் வியாழக்கிழைமை குருவிற்கு உகந்த தினமாதலால் பௌர்ணமியும் வியாழன் இரவு தங்குவதால் இந்த நாள் குருவை வழிபட உகந்த நாளாகிறது. உங்களுக்கு யாரெல்லாம் குருவாக இருக்கிறார்களோ அவர்களிடம் வஸ்திரம் கொடுத்து ஆசி வாங்கினால் இந்த ஆண்டு முழுதுமே குரு பகவானால் பல நல்ல செயல்கள் நடக்கும் என்கிறது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடி.


குரு பூர்ணிமா , ஆடி மாதத்தில் (ஜூ ன் - ஜூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.



மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதைஅருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.

சப்தரிஷிகள் என அழைக்கப்படும் ஏழு பேர் சிவனிடமிருந்து பெற்ற சில யோகப் பயிற்சிகளை 84 வருடங்கள் தொடர்ந்து செய்தனர். அந்த 84 வருடங்களும் சிவன் அவர்களை பார்க்கவில்லை,

அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவன் மனமிரங்கி, உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்ட தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியன்று தெற்கு நோக்கி அமர்ந்து, அவர்களுக்கு முறையான போதனைகளை வழங்கினார். சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால் அந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. சிவன் தெற்கு நோக்கி அமர்ந்ததால் சிவன் அன்று முதல் தக்ஷிணாமூர்த்தி என்றும் அறியப்பட்டார்.

ஆன்மீக சாதகர்கள் அனைவரும் அன்று தங்கள் குருவிற்கு குருபூஜை செய்து, அடுத்துவரும் 6 மாதங்களுக்கு ஆன்மீகப் பயிற்சிகள் தீவிரமாக செய்து வந்தால் அப்பயிற்சியின் பலன்கள் அடுத்த 6 மாதங்களில் பலனளிக்கக் துவங்கும்.கௌமாரப் பயணம் வாசகர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

புதன், 15 ஜூலை, 2015

ஓர் இந்துவின் வாழ்க்கை குருவை சந்தித்த பிறகு தான் பூரணமடைகிறது!



ஓர் இந்துவின் வாழ்க்கை குருவை சந்தித்த பிறகு தான் பூரணமடைகிறது. தான் யார்? தனது உண்மைத் தன்மை என்ன? போன்ற எதுவும் தெரியாத நிலையில், அறியாமையுடன், காலம் கொண்டு செல்கின்ற விதத்தில், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்கின்ற ஓர் இந்து, தான் நம்புகின்ற பூர்வஜென்மப் புண்ணிய வசத்தினால் தன் குருவைச் சந்திக்கிறான். 


அந்தச் சந்திப்பு இறையருளால் தான் நிகழ்கின்றது. குருவும் தானுமாக சந்திக்கின்ற அந்த நிகழ்வு அவனுக்கு வாழ்க்கையின் திருப்பமாக அமைகின்றது. இறைவனே தன் விருப்பத்தால் குருவாக அவதரித்துத் தன் படைப்பாகிய மனிதனைத் தன்னிடத்தில் சேர்க்கின்ற முயற்சியில் ஈடுபடுகின்றான். இது ஒன்றும் ஒரு சாதாரணமான செயல் அல்ல. ஒரு பூ மலர்வதைப் போல், ஒரு விதை முளைவிடுவதைப் போல், ஒரு குழந்தை பூமியில் ஜனிப்பதைப்போல் அற்புதமான ஓர் இணைவு இது.

இவ்வகையில் யாராயிருந்தாலும் ஒருவனுக்குக் குரு மிக மிக அவசியமாகின்றார். பிற மதத்தினரை விட ஓர் இந்துவிற்குத்தான் இந்தத் தேடல் எளிதில் வாய்க்கின்றது. குரு கிடைப்பதும் அவனது வாழ்க்கைப் போக்கில் தான் சுலபமாக அமைகின்றது. ஏனெனில் அவனது வாழ்க்கையே அந்தப் போக்கில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது.

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!




வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!

1. ஆறுமுகம்:ஈசானம், தத்புருஷம்,
வாமதேவம், அகோரம், சத்யோஜாதம்
என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
4. முருகன்: முருகு அழகு என்று பொருள்,
எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
5. குருபரன் : கு - அஞ்ஞான இருள்,
ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும்,
அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
6. காங்கேயன்:கங்கையின் மைந்தன்.
7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன்ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன்ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
10. சரவணபவன் : சரம் - நாணல்,
வனம் - காடு, பவன் - தோன்றியவன்,
நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்குமட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
12. சுரேஷன் :தேவர் தலைவன் சுரேசன்.
13. செவ்வேள் :செந்நிறமுடையவன்,
ஞானச் செம்மை உடையவன்.
14. சேந்தன் :செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்;சத்து - சிவம்,
சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
20. சுப்ரமணியன் :சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து,நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
21. வள்ளற்பெருமான் : முருகன்,
மண்ணுலகில் அவதரித்தவள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியாசக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மைநலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
22. ஆறுபடை வீடுடையோன்:
மூலாதாரம், சுவாதிஷ்டானம்,மணிபூரகம்,
அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
23. மயில்வாகனன் : மயில் - ஆணவம்,
யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
24. தமிழ் என்றால் முருகன்: முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்கமுடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பதுமுருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்துஎன்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.
இந்தவேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல
சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

புதன், 1 ஜூலை, 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 32 !

 சென்ற பதிவின் தொடர்ச்சி




இவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில்நடந்து, சுமார் 8 மணி நேர பயணத்தில்  அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம்.

அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம்.

மீண்டும் அடுத்த நாள் 16.4.2015 வியாழக்கிழைமை அன்று  சுமார் 2 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடைந்தோம். பின்பு தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைந்தோம்.

  இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை "பொங்காலைப்பாறை' என்று கூறுகின்றனர். கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது. இச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.

இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப்பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது. இச்சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியேதுன்பத்தைப் பொருள்படுத்தாது, காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி,
நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடைந்து அளவிலாத ஆனந்தம் அடைந்தோம் .

 அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை எங்களுக்கு ஏற்பட்டது.

படம்:3 பொதிகைமலை உச்சியில் உள்ள அகத்தியர் அருகில் நமது ஜீவ நாடி சுவடி

  இந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்பட்டு ஒருவிதமான பயம் கலந்த பக்தியை தந்தது

இப்படி ஆனந்த அனுபவத்துடன், நாங்கள்  கொண்டு சென்ற பூஜைப் பொருள்களால், குரு முனிவருக்கு அபிஷேக, ஆராதனை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்து. அகத்தியர் மீது விபூதி அபிஷேகம் செய்த பின்பு அந்த விபூதியை எடுத்து எங்கள் நெற்றியில் பூசுமாறு ஒருவர் கேட்க முருகா!!! அகத்தீசா என நான் உரக்கக் கூறி வந்திருந்த அனைவர் நெற்றியிலும்
அபிஷேக விபூதியைப் பூசி விட்டேன். மின்சார சக்தி தங்களது உடலில் பாய்ந்ததாக அனைவரும் ஆனந்தம் அடைந்தனர்.


பின்பு கூட்டு வழிபாடு நடைபெற்று அங்கேயே பொதிகை மலை உச்சியில் தென்றல் தவழ ஜீவ நாடி படிக்கப் பட்டது.திடீரன மழை அதிகமாகி நீர் பெருக்கெடுக்கத் தொடங்கியதால் தொடர்ந்து மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, ஐந்து மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடைந்து அங்கு உணவருந்தி விட்டு, தூங்கி விட்டோம். அடுத்த நாள் 17.4.2015 காலையில் பொதிகை சிகரத்தை வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 7 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெற்றது.

”ஆசிரெனவாதம் உண்டு

அகத்தியன் ஆசியும் உண்டு

அற்புதமும் நடக்கும்

பொதிகைமலை செல்லவும் கூடும்

அதற்கு முன்பு சதுரகிரி செல்லு

முன் சேந்தமங்கலம் தரிசனம்

அவசியமாமே கந்தன் கூற்று கச்சிதம்

ஆசி! ஆசி! ஆசி! ”

என்று முருகப் பெருமான் நாடியில் உரைத்தவாறே சேந்தமங்கலம் மற்றும் சதுரகிரி சென்ற பின்பு எந்த வித பெரிய முயற்சிகள் ஏதும் இல்லாமலேயே பொதிகை மலைப் பயணம் எளிமையாக அமைந்தது எனலாம். ஏற்கனவே பொதிகை மலை சென்று வந்தவர்களுக்கே அதன் கடினம் புரியும். அவ்வளவு எளிதானதல்ல என்பதை நான் இப்போதும் உண்ர்கிறேன். ஜீவ நாடியில்
சொன்னபடி கந்தன் கூற்று கச்சிதம் என்பதை என்னுடன் வந்த அனைவரும் உணர்ந்து ஆச்சரியப் பட்டனர் எனலாம்.

(தொடரும்...)

                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

செவ்வாய், 30 ஜூன், 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 32 !




சதுரகிரி பயணம் முடித்த பின்பு பொதிகைமலை செல்ல வேண்டும் அங்கு நமது ஜீவ நாடியை வைத்துப் பூஜிக்க வேண்டும் என்ற ஆவல் மீண்டும் கொழுந்து விட்டு எரிந்தது.

1998-ம் ஆண்டு தமிழக வனத் துறை பொதிகை மலை செல்ல அனுமதி மறுத்து விட்டது. பின் பொதிகை மலை புனித யாத்திரைக் குழுவினர் மற்றும் பக்தர்களின் முயற்சியால், வனத் துறை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை தமிழகம் வழியாகச் செல்ல அனுமதி வழங்கியது.

  இந்நிலையில், 2009-ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல மீண்டும் அனுமதி மறுத்ததுடன், கேரளம் வழியாக செல்ல அறிவுறுத்தியது. அதுவும் அனுமதி கிடைப்பது மிகவும் சிரமமாக எங்களுக்கு இருந்தது.

இந்த நிலையில்மதுரை இறையருள் மன்றம் பரமசிவம் அவர்கள் நீண்ட நாட்களாக என்னிடம் ஜீவ நாடி கேட்டு அதன் படி நடந்து வருபவர். அவர் சதுரகிரியில் சிவ சங்கு ஐயா அவர்களின் ஆஸ்ரமத்தில் இரவில் தங்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து தந்தார். அதேபோல் அவரிடம்  இந்த பொதிகைமலை பயணம் குறித்துச் சொல்லி இருந்தேன். அதற்கு தகுந்த நபர் மும்பை
கணேசரத்தினம் ஐயா அவர்கள்தான் என எண்ணி அவரிடம் என்னைப் பற்றியும் ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி இதுவரை நடத்தி வந்த அதிசயங்கள் பற்றியும் சொல்லி அறிமுகம் செய்து வைத்தார்.

நான் உங்களைப் பொதிகை மலைக்கு என்னுடன் கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்கிறேன் என்று மும்பை கணேச ரத்தினம் அவர்கள்  சொல்ல அவர்தான் உன்னை கூட்டிச் செல்லும் சரியான நபர் என முருகப் பெருமான் ஜீவ நாடியில் சொல்ல இத்தனை அதிசயங்களையும் அந்த அகத்தியரும் முருகப்பெருமானும் நடத்தி இருக்கிறார்கள்.

மும்பை கணேச ரத்தினம் அவர்கள் சிறந்த அகத்தியர் அடியவர் ஆவார். இவருக்கு அகத்தியர் பல திருவிளையாடல்களை நடத்தி இருக்கிறார். இவர் ஒருமுறை பொதிகைமலை செல்லும் போது ஒரு தேங்காயை உடைத்து அகத்தியர் அருளால் கொட்டுகின்ற மழையை நிறுத்தி உடனே சூரியனை தோன்றச் செய்து பின் பொதிகை மலை சென்று அகத்தியரை தரிசனம் செய்தவர்.

பொதிகை மலையில் அகத்தியராலேயே கொடுக்கப்பட்ட யோக தண்டத்தை வைத்து பூஜித்து வருபவர். ஒருமுறை இவர் திருப்பதியில் முடிகாணிக்கை செலுத்த சென்ற போது இவரது தலையில் முடியெடுக்க தீர்த்தம் போட இவர் மீது ஒரு சொட்டு தண்ணீர் கூட பட முடியாமல் தெளிக்கின்றவர் தலை மீதே அந்த தண்ணீர் கொட்டியது. என்வே மொட்டை அடித்துக் கொள்ளாமல் சென்ற இவர் முன்பு பெரிய தாடியுடன் அகத்தியர் தோன்றி காட்சி கொடுத்திருக்கிறார்.

நீண்ட நாட்களாக இவருக்கு ஆண்வாரிசு இல்லாத குறையை அந்த அகத்தியரே போக்கி வாரிசு தந்திருக்கிறார். அந்த ஆண் குழந்தைக்கு அகத்தியன் என்ற பெயரை வைத்திருக்கிறார். அந்த குட்டி அகத்தியனும் என்னுடம் பொதிகைமலைக்கு வந்து ஜீவ நாடியில் முருகன் மற்றும் அகத்தியரின் ஆசியைப் பெற்றான். அதேபோல் கருத்தடை செய்து கொண்ட ஒரு பெண் அகத்தியர் ஆசியால் கருவுறும் பாக்கியத்தைக் கொடுத்து இருக்கிறார் இவர் இதுவரை எங்கும் நாடி கேட்கவில்லை. இரு இடத்தில் கேட்டு இவருக்கு சரியாக வரவில்லை. இந்த நிலையில்  அவரிடம் 24.01.2015 அன்று அகத்தியர் நீ கடுக்கண் போடு பச்சை, சிவப்பு என்று சொல்லி இதன் சூட்சுமம் விரைவில் ஒருவர் அறிவிப்பார் என்று சொல்லியிருக்கிறார். உடனே தற்செயலாக மதுரை இறையருள் மன்றம் திரு.பரமசிவம் என்னைப் பற்றி இவரிடம் சொல்ல நமது ஜீவ நாடி உண்மை என்று இவரிடம் அகத்தியர் உரைக்க  உடனே என்னைத் தொடர்பு கொண்டார்.


 நானும் முருகனிடம் உத்தரவு கேட்க என்  சீடனிவன் உடனே படி என முருகனும் உரைக்க 25.1.2015 ஞாயிறு சஷ்டி அன்று ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி படிக்கப்பட்டது. எனக்கும் ஜீவ நாடியை பொதிகை மலையில் வைத்து வர வேண்டும் என்ற உத்தரவு வர அவருக்கும் என் மீது ஒரு வித ஈர்ப்பு வந்து எனக்கும் எனது சீடர்கள் சிலருக்கும் கேரள வனத்துறையில் அனுமதி வாங்கி பொதிகை மலை செல்ல் ஏற்பாடுகளை கணேச ரத்தினம் அவர்கள் செய்தார். 14.4.2015 மன்மத வருடம் முதல் தேதி யில் நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் அப்ஸரா பப்ளிகேஷன்ஸ் நடத்திய முப்பெரும் விழாவை முடித்த உடனேயே எனது பொதிகைமலைப் பயணம் தொடங்கியது.

பொதிகை மலை செல்லும்  அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், காட்டெருமை, கரடி,சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன.

படம்: பொதிகை மலைப் பயணம் என்னுடன் ஞானஸ்கந்தாஸ்ரம அடியவர்கள்

அகத்திய முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள
வழிகாட்டியுடன் மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது. 14.4.2015 ம் தேதி இரவு தென்காசியில் உள்ள அகத்தியர் பக்தர்களான வக்கீல் வீட்டில் தங்கினோம். 15.4.2015 புதன் கிழைமை காலை 5 மணிக்கு பயணம் ஆரம்பமானது. 16.4.2015 வியாழக்கிழைமை மதியம் குரு ஹோரையில் நமது ஜீவ நாடி அகத்தியப் பெருமானிடம் வைத்துப் பூஜிக்கப்பட்டது.

  முதல் அரைமணிநேரப் பயணத்தில் நாம் முதலில் காண்பது விநாயகர் கோயிலை. அவரை வணங்கி நடைப்பயணம் தொடங்குகிறது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் கரமனையாறு அடைகிறோம். அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

                                                      ...தொடரும்  பல அதிசயங்களுடன் 

செவ்வாய், 9 ஜூன், 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 31!

                                    குரு வாழ்க!                                                குருவே சரணம்!

1. ஆறுமுகம் பன்னிரண்டு கரங்களுடன்  --  அவினாசி அருகில் உள்ள

     பூண்டியிலும்,

2. ஐந்து முகம் எட்டு கரங்களுடன்  --  பெத்திக்கோட்டை

    ஓதிமலையிலும்,

3. நான்கு முகம் எட்டு கரங்களுடன்  --  திண்டுக்கல்

   சின்னாளப்பட்டியிலும்,

4. மூன்று முகம் ஆறு கரங்களுடன்  --  கோபி, காசிபாளையம்

    குமரன்கரட்டிலும்,

5. இரண்டு முகம் நான்கு கரங்களுடன்  --  சென்னிமலையிலும்,

6. ஒரு முகம்  தண்டாபுதபாணியாக  --  பழனியிலும்,

    முருகப் பெருமான் வீற்றிருக்கிறார்.




திருமுருகன் பூண்டி தலம் முருகப் பெருமான் வழிபட்ட தலமாகும்.

அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள்

வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர்

செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூத

கணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப்

பறித்துக்கொண்ட தலம் எனக்கூறப்படுகிறது. இத்தலம் பிரம்மஹத்தி

தோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி,

சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால்

பக்தர்கள் பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை

வழிபட்டுச் செல்கின்றனர்.

 

ஓதிமலை சிறப்பு என்னவென்றால் படைப்புக் கடவுளான பிரம்மா

கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு

முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன்,

பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். அவர்

தெரியாது நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்

தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது. படைக்கும்

கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது.

எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன்

இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்”

எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய

ஆத்மாக்களாகவே பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம்

முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி

கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார்.




முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.

   சுவாமிமலை தலத்தில் சிவனுக்கு பிரணவத்தின் விளக்கம்

சொன்ன முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை

உபதேசித்தார். இவ்வறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த

மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு

“ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது. 18 சித்தர்களில்

ஒருவரான போகர் முருகனை தரிசிக்க பழனிக்கு செல்லும்போது

அவருக்கு சரியாக வழி தெரியாத நிலை ஏற்பட்டது. வழியில் இந்த

தலத்தில் தங்கிய போகர் முருகனை வேண்டி யாகம் நடத்தினார்.

அப்போது இத்தலத்து முருகன் அவருக்கு வழிகாட்டினார்.




இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ

வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை

நிறைவேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்

கூறுகின்றனர். பிரம்மாவை முருகன் இரும்பு அறையில்

சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என அழைக்கப்படுகிறது.

கோவில் 1600 படிக்கட்டுக்கள் கொண்டது.

 



அதே போல் திண்டுக்கல் சின்னாளப்பட்டி என்ற தலத்தில் நான்கு

முகங்களுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். ‘ஓம்’ என்னும்

பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் பிரம்மனை முருகப்

பெருமான் சிறையில் அடைத்தார். பின்னர் ஈசனின் மகனான கந்தக்

கடவுளே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அப்போது அவர்

நான்கு முகங்களுடன் இருந்ததாக கோவில் தல புராணத்தில்

குறிப்பிடப்பட்டுள்ளது.

 


அடுத்து மூன்று முக முருகனாக ஈரோடு மாவட்டம் கோபி

வட்டம் தடப்பள்ளி கிராமம் காசிபாளையம் குமரன் கரட்டில் சிவகிரி

ஸ்ரீ முத்து வேலாயுதசாமி ஆலயத்தில் அருள் பாலிக்கிறார். இது 800

ஆண்டுகள் பழமையானது. இத் தலத்தின் சிறப்பு என்னவென்றால்

முருகப்பெருமான் மூன்று முகம் ஆறு கரங்களுடன் கிழக்கு பார்த்த

முகமாக நிந்ற நிலையில் தேவியருடன் அருள் பாலித்து வருகிறார்.




எங்கும் முருகப்பெருமான் முன்பு அவரது வாகனமான மயிலை

பீடத்தில் அமைத்திருப்பதை காணலாம். ஆனால் இத்திருக்கோவில்

முன்பு சக்திவேல் அமையப்பட்டிருக்கிறது. இவ்வேல் சூரபத்மனை

வதம் செய்ய ஆதிசிவசங்கர அம்மை உமையவள் சகிதம் இவ்வேலின்

ஒருபுறம் சரவணபவ சக்ரமும் மறுபுறம் ஓம் என்ற எழுத்துடன்

சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளது.




   இரண்டு முகம் உடைய சென்னிமலை முருகன் கோவிலில்

செவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களையும் காணலாம். ஏனெனில்

இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே

இத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும்

அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகல

கிரக பீடைகளும் உடனே விலகும்.

 


 பழனி பற்றி அறியாதார் உண்டா என்பதால் கூடுதல் விளக்கம்

தேவையில்லை என நினைக்கிறேன். இது போல் இன்னும் பல

இரகசியங்களை தொடர்ந்து சொல்லப் போகிறேன்.

                              “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

சனி, 6 ஜூன், 2015

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 30 !



   ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஜீவநாடியை நம்பிக்கையுடன் கேட்டு

பல்வேறு நலன்களை அடைந்து வரும் ஒரு நலம் விரும்பி நாடி பற்றிய

ஒரு சுவராஸ்யமான சம்பவத்தை எனக்கு அனுப்பி வைத்தார். அதை

அனைவரும் தெரிந்து கொண்டால் நலமாக இருக்கும் என்பதால் அதை

அப்படியே இங்கு எழுதுகிறேன்.


காண்ட நாடி பற்றிய சம்பவக் கதை இது.

   36 ஆண்டுகளுக்கு முன் மதுரை ஆதீனத்தின் முந்திய ஆதீனகர்த்தராகிய

ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் கூறிய உண்மைச் சம்பவம் இது.

மதுரையைச் சேர்ந்த ஒரு நபர் நாடி ஜோதிடம் பார்ப்பதற்காக தஞ்சை

மாவட்டத்தில் ஓரிடத்திற்குச் சென்றார். அவருடைய ஏடு கிடைத்தது.

ஜோதிடர் படித்துக் கொண்டே வந்தார். எல்லாம் சரியாகவே இருந்தது.

திடீரென்று பாதியிலேயே நின்றுவிட்டது. ஏனெனில் அதற்கு மேல்

தொடர்ச்சியாக இருக்கவேண்டிய ஏடுகளைக் காணோம்! ஜோதிடர் கூறினார்.

 

“இந்த ஏடுகள் என்னுடைய மூதாதைகளுக்குச் சொந்தம். என்

தந்தையாருக்குப் பிறகு நானும் என் தம்பியும் பாகப்பிரிவினை செய்துக்

கொண்டோம். அப்போது சரி பாதி ஏட்டுச் சுவடிகளை என்னுடைய தம்பி

எடுத்துக்கொண்டான். இப்போது நான் படித்த சுவடியின் மீதிப் பாகம்

என்னுடைய தம்பியிடம் இருக்கலாம். அவனிடம் சென்று பாருங்கள்.



தற்சமயம் அவன் கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருக்கிறான்”.  என்று

கூறி ஜோதிடர் தன் தம்பியின் விலாசத்தையும் கொடுத்தார்.

   சில காலம் கழித்து மதுரைக்காரர் , திருவனந்தபுரத்திற்குச் சென்றார்.

பாதி வழியில் ஒரு விபத்தில் அவர் இறந்து போனார். அவருடன் சென்ற

நண்பர் தப்பினார். விடுபட்டுப் போன அந்த ஏடுகளில் என்னதான் இருந்தது

என்பதைப் பார்க்க அவர் ஆர்வம் கொண்டார். ஆகையால் திருவனந்தபுரம்

சென்று இளைய ஜோதிடரைச் சந்தித்து அவருடைய அண்ணன் கூறிய

விபரங்களைச் சொல்லி அவர் கொடுத்த சுவடிக்கட்டின் முதல் பாகத்தின்

ஏடுகளைக் கொடுத்தார். அவற்றை வைத்து மீதிப் பகுதியைத் தேடிக்

கண்டு பிடித்து இளைய ஜோதிடர் படிக்கலானார்.



அப்பகுதியில் ஒரே ஓர் ஏடுதான் இருந்தது. அதன் ஆரம்பத்தில் ஒரே ஒரு

வாசகம் மட்டுமே காணப்பட்டது.

“மலையாள தேசஞ்சென்று

மரணத்தில் ஏகுவானே” என்றிருந்தது!

   சாகவேண்டிய தருணத்தில் அவர் மலையாளதேசம் செல்ல

வேண்டியிருந்தது.  ஏட்டைத் தேடி அவர் மலையாள தேசம் சென்றார்.

முழுச்சுவடியும் தஞ்சாவூரிலேயே இருந்திருந்தால் அவர் மலையாள

தேசம் சென்றிருக்க மாட்டார்.

 

இப்படி ஆங்காங்கே பல்வேறு உண்மைச் சம்பவங்கள் நடந்து

வருகின்றன. வாசகர்கள் இது போல் அனுபவம் இருந்தால் அதை எனக்கு

அனுப்பி வைக்கலாம். பல பேருக்குப் பயன்படும். ஒரு சில இடங்களில்

போலி நாடி ஜோதிடர்களால் இந்த கலைக்குக் களங்கம் வந்தாலும் உண்மை

எப்போதுமே தோற்காது.



நமது ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி ஜீவநாடி மூலம் நடத்தி வரும் பல

திருவிளையாடல்களைப் பார்க்கும் போது ஜீவநாடியில்

வாக்கு உரைப்பது சாட்சாத் அந்த முருகனே என்பது  நிரூபணமாகிக்

கொண்டே இருக்கிறது. எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டால் இந்த இறைக்

காட்சி கிட்டுவதில்லை. நம்பிக்கை ஒன்றே நமது மூலதனம். நம்பிக்கை

இல்லாமல் எதுவும் நடக்காது என்பது திண்ணம். நமது ஜீவ நாடியைப்

பொறுத்தவரை முருகன் அருள் யார் மீது விழுகிறதோ அவருக்குத்தான்

நான் நாடி உரைத்து நலம் செய்ய முடிகிறது என்பது திண்ணம். நமது

ஜீவநாடியைப் பொருத்தவரை முருகன் அருள் யார் மீது விழுகிறதோ

அவருக்குத்தான் நான்  நாடி உரைத்து நலம் செய்ய முடிகிறது என்பது

என்னிடம் வருகின்ற அனைவருமே அறிந்த கூற்று. காரணம் பிரணவ

சொரூபியான முருகப் பெருமானிடத்தில் மும்மூர்த்திகளின் அம்சமும்

ஒருங்கே நிறைந்துள்ளது. காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும்

மூர்த்தியான ருத்ரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய

மும்மூர்த்தி திரு நாமங்களின் முதல் மூன்று எழுத்துக்கள்

ஒன்றிணைந்ததே “முருகா” என்னும் திரு நாமம்.






1. இருள் படைத்த உலகம் ஒளி நிறைந்து விளங்க, ஒளி தருகிறது ஒரு

திருமுகம். இத்திருமுகம் நமது அஞ்ஞானத்தைப் போக்கும்

ஞானக்கதிராக விளங்குகிறது.


2. அன்பர்களுக்கு இனிய தோற்றமளித்து, அன்புடையோர்க்கு வரம்

தந்து அருளுகிறது வேலவனின் இரண்டாவது முகம்.


3. வேத மந்திர விதிகளுக்கு ஏற்ப வேள்விகளைக் காப்பது கந்தனின்

கருணை மிகுந்த மூன்றாவது திருமுகம்.


4. நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை விளக்கி அருள்புரிந்து ஞானம்

பொழிவது ஞான பண்டிதனின் நான்காவது திருமுகம்.


5. துஷ்டசம்ஹார சிஷ்ட பரிபாலகராக வீரத்தை விளங்கச் செய்வது

ஐயனின் ஐந்தாவது திருமுகம்.


6. தெய்வயானை, வள்ளியம்மை என்னும் கிரியா சக்தி, இச்சா

சக்திகளைக் கொஞ்சி மகிழ, கோடி சூரிய ஒளி காட்டும் அழகு முகம்

ஆறாவது திருமுகம்.


இவ்வாறு ஆறு திருமுகங்களைப் பெற்ற கந்தப் பெருமான்

பன்னிரண்டு திருக்கரங்களோடு நீலமயில்மீது எழுந்தருளி நமக்கு

அருள்பாலிக்கிறார்.நீலமயில் ஓங்கார சொரூபம், ஓங்காரமே பிரம்மம். அகர,

உகர, மகரா ஒலிகள் கூடியது தான் ஓங்காரம். இந்த தத்துவம்தான் முருகன்.

முருகா என்று மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள்

நம்மை நாடி வரும். முருகனின் ஆறுபடை வீடுகளை நினைத்தாலே

மனம் ஆறும். நமது உடலில் ஆறு விதமான ஆதாரங்கள் உண்டு.

முருகப் பெருமான் இந்த ஆறுபடை வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக்

கொண்டுதான் எழுந்தருளி உள்ளார்.



திருப்பரங்குன்றம்  -- மூலாதாரம்

திருச்செந்தூர்      -- சுவாதிஷ்டானம்

பழனி             -- மணிபூரகம்

சுவாமிமலை      -- அநாகதம்

திருத்தணி         -- விசுத்தி

பழமுதிர்சோலை   -- ஆக்ஞை



இப்படிப்பட்ட சிறப்புகள் ஒருங்கே அமையப்பெற்ற முருகப் பெருமான்

எப்படி ஒரு சாதாரண மனிதனுக்கு ஓலையில் ஒளி ரூபத்தில்

தோன்றி வாக்கு உரைக்க முடியும் என்ற சந்தேகம் வருவது

இயற்கையே. அதற்கு முருகனே விடை தந்திருக்கிறார். எவர் ஒருவர்

என்னை முழுமையாக நம்பி பக்தி செய்கிறார்களோ அவர்களுக்கு

நான் தோன்றுவேன் என்பதே அது. அதுபோல் பலருக்கும் முருகன்

திருவிளையாடல்கள் நடத்திய வரலாறுகள் பல்லாயிரக்கணக்கில்

உண்டு. அது போல் இந்த ஜீவ நாடியில் தோன்றி வாக்குரைப்பதும்

அவரின் ஒரு விளையாட்டே. அப்படி ஒரு நாள் முருகப் பெருமானை

பூஜித்து சுவடியைக் கையில் எடுத்துப் பிரித்தேன். அப்போது ஸ்ரீ

ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் கொங்கு நாட்டிலுள்ள ஆறுபடை

வீடுகள் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் வந்தது.




அதன் விபரத்தை வாசகர்களும் முருக பக்தர்களும் தெரிந்து கொண்டால்

அந்த ஆறுமுகன் அருள் பெற வசதியாக இருக்கும் என்பதால் அதை

அப்படியே இங்கு எழுதுகிறேன். ஒவ்வொரு முருக பக்தர்களும்

தரிசனம் செய்யவேண்டும் என்றும் நாடியில் வந்துள்ளது. விருப்பம்

உள்ளவர்கள் இதைக் கடைபிடிக்கலாம்.

                                                                                   .....தொடரும்

                          “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”