வெள்ளி, 16 அக்டோபர், 2015

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் (சிறு பொய்யும் வாழ்நாள் தண்டனையும் !







*
19ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமானமில்லாத குருநாதர் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள். மயிலேறும் ஷண்முகக் கடவுளைப் போற்றுவதைத் தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்த அருளாளர். சுவாமிகளின் அவதாரக் காலத்தில் நடந்தேறிய முக்கிய நிகழ்வு ஒன்றினை இனிக் காண்போம்.
*
எந்தவொரு செயலைத் தொடங்குமுன்பும் ஆறுமுகப் பெருமானின் திருமுன்பு (பூக்கள் மூலம்) உத்தரவு கேட்கும் மரபு சுவாமிகளின் இல்லத்தில் இருந்து வந்தது. சுவாமிகளுக்கு அப்பொழுது இளம் பிராயம்; பழனி தலம் சென்று சிவபாலனைத் தரிசிக்க பெருவிருப்பம் கொண்டார். மறுநாள் காலை பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்தார்.
*
அது பற்றி அன்பர் ஒருவரிடம் கூறிக் கொண்டிருந்தார். அவ்வன்பரும் 'பழனி தலம் செல்ல முருகக் கடவுளிடம் உத்தரவு வாங்கி விட்டாயா?' என்று வினவினார். தண்டபாணிக் கடவுளைத் தரிசிக்கும் பெரும் காதலால் சுவாமிகள் 'ஆம்' என்று ஒரு பொய் உரைத்தார். பின்னர் அன்று மாலை சுவாமிகள் வழக்கம் போல் மாடியில் அனுஷ்டானம் புரிந்து கொண்டிருந்தார்.
*
அச்சமயம் அங்கு ஒரு கொடிய உருவம் தோன்றியது. 'பழனி செல்ல உத்தரவு ஆகிவிட்டது என்று பொய் உரைத்தாயே?' என்று மிகக் கடுமையான தொனியில் மிரட்டியது. சுவாமிகள் உடலும் உள்ளமும் தளர்ந்த நிலையில் மிகவும் அஞ்சி கண்களை மூடிக் கொண்டு வேலேந்தும் வேலவனிடம் உளமாற மன்னிப்பு வேண்டினார்.
*
அவ்வடிவம் 'இனி வேலவனின் உத்தரவு கிடைக்கும் வரை பழனி செல்வதில்லை என்று உறுதி கூறு' என்று உரத்த குரலில் அதட்ட சுவாமிகளும் 'ஆம். இனி உத்தரவு கிடைக்கும் வரையில் பழனி வருவதில்லை' என்று உறுதி அளித்தார். அவ்வுருவம் அக்கணமே அங்கிருந்து மறைந்து விட்டது.
*
அது முதல் அனுதினமும் வள்ளி மணாளனிடம் தன்னை பழனிக்கு அழைக்குமாறு சுவாமிகள் மன்றாடுவார்; கண்ணீர் பெருக்குவார். பின்னாளில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 'பிரப்பன் வலசை' எனும் தலத்தில் குகக் கடவுளின் தரிசனத்தை நேரடியாகவே பெற்றார் சுவாமிகள். எனினும் இறுதி வரையில் பழனி தரிசனம் மட்டும் சுவாமிகளுக்குக் கிட்டவில்லை.
*
நாம் புரியும் தவறுகளுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைப்பதன் மூலம் இறைவனின் அருட் பார்வை நம் மீது பதிந்துள்ளது என்பதை உணர முடியும். தன்னைப் பூரணமாக ஒப்புவிக்கும் அடியவரின் முக்திப் பாதைக்கு இறைவன் பொறுப்பேற்கிறான். சிறு தவறுகள் நம் மூலம் நேரினும் அக்கணமே தண்டித்து அக்கர்மத்தில் இருந்து நம்மை விடுவித்தும் அருள்கிறான்.
*
ஆத்ம ஞானம் கைவரப் பெற்ற பரம ஞானியான ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளுக்கே (ஒரு சிறு பொய்க்கு) இத்தகு தண்டனை கிட்டும் என்றால் நம் நிலையை எண்ணிப் பார்த்துத் தெளிதல் வேண்டும். சத்திய உபாசனையே இறைவனை அடைவிக்கும் மார்க்கம். பரம ஞானியான பாம்பன் சுவாமிகளின் திருவடிகளைப் போற்றிப் பணிவோம். கௌமாரனின் திருவருளைப் பெறுவோம்.
*
(திருப்பழனி - பாம்பன் சுவாமிகள் அருளிய அற்புதப் பாடல்):
சூடேன்! நின்னடியை அன்றித் துதித்து நானெதையும்
பாடேன்! எம்மானே பரமார்த்த சன்யாசீ!
வாடா விண்மலரே! எனை வாவென்றே அழையாய்
சேடார் தென்பழனித் திருக்கோயில் உள்ளாயே!!

சனி, 10 அக்டோபர், 2015

ஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள் ! ! !


   

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான
மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள்
கூறி இருப்பதையும் அந்த உன்னத
மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித்
துதிப்பதையும் நன்கு அறிவோம் ; இந்த
நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம்
அது என்று புதிய ஒரு ஆய்வின்
முடிவில் ஆராய்ச்சியாளர்கள்
சொல்லும்போது நமது வியப்பின்
எல்லைக்கு அளவில்லை ;
அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ்
ஆப் என் ஜினியரிங்க்
அண்டு டெக்னாலஜியில்
பேராசியராகப் பணியாற்றும் அஜய்
அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின்
முதல்வர் சித்தார்த் லடாகேயுடன்
இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில்
இறங்கினார்.
இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக்
காரணம் நாளுக்கு நாள் வணிகம்
செய்வோர்,தொழிற்சாலை
அலுவலகங்களில் பணிபுரிவோர்
உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும்
தாங்கமுடியாத மன அழுத்தமும்
அதனால் ஏற்படும் வேதனைகளும்
அவர்களைப் படுத்தும் பாடும்தான்!
உளவியல் ரீதியிலான மன
அழுத்தத்திற்கு மருந்து எது என்று
ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர
உச்சரிப்புதான் அதற்கான
மாமருந்து என்று சோதனை
மூலமாகக் கண்டுபிடித்தனர்.
ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய
உத்வேகம் உடலில் ஏற்படுவதையும்
பிரக்ஞை தூண்டப் படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த
மந்திர ஒலியால் மீறப்படுவதையும்
அவர்கள்
உறுதிப்படுத்துகின்றனர். இதைக்
கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட்
ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம்
ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்
(Wavelet Transforms, Time- frequency Analaysis)
ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.
ஓம் என
உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில்
மாறுதல்கள் ஏற்படுவதையும்,
மூளையில் ஒலியினால் மின்செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும்,
அவர்கள் நவீன சாதனங்கள் மூலம்
குறித்துக் கொள்ள
முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் "ஓம்" என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும், பின்னரும், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க
முடிந்தது.
மந்திர ஒலிகள் மனிதர்களின்
நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன
என்கிறார்கள்.
ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற
முப்பெரும் தொழில்களை, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோர்
செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் "ஓம்" மந்திரத்தில் உள்ள அகார, உகார, மகாரங்கள் “ பிரம்மா, விஷ்ணு, ருத்ரனை” க் குறிப்பதையும்,
அனைவரும் அறிவர்.
"ஓம்" என நாம் ஒலிக்கும்போது, பிரபஞ்ச ஆற்றல்கள், நேரடியாக அதிர்வுகள் மூலமாக, நமது உடலில் நுழைகின்றன. வாயின் பின்புறம்
உதிக்கும் “அ” சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது.
வாயின் நடுவில் பிறக்கும் “உ ” மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம”
தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும், ஒரு குறிப்பிட்ட ஆற்றலை, உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை, ஏற்படுத்துகிறது. ஓம்
முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.
ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு, ஏன் ஈடுபாடு வந்தது, என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த, ஒரு சம்பவமே காரணம் ஆகும்.
29.5.1999 அன்று தொலைபேசியில்
பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென
அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது. மூளையில் ரத்தம் கட்டி விட்டதால், நினைவையும் இழந்து, அவர் பக்கவாதத்தால்
பாதிக்கப்பட்டார். அடுத்த நாள், அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது.
ஆனால், இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்து விட்டது. அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக் காரணம். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,
மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என
தெரிவித்தனர். இப்படிப்பட்ட நிலையைப்
போக்குவதற்கான சிறந்த சொல்
எது என்று ஆராயப் போக, அவர் "ஓம்" ஆராய்ச்சியில் இறங்கி,
"ஓம்" மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார். மந்திரத்தின்
ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல்
ப்ராஸஸிங் உத்திகளை அவர்
பயன்படுத்தினார்.
"ஓம்" பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:
தகாஷி எடல் என்பவர் 1999 இல்
மேற்கொண்ட ஆய்வில் குறைந்த
அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில்
மார்பு மற்றும் அடிவயிற்றுப்
பகுதிகளில்
மாற்றங்களை ஏற்படுத்துகிறது
என்பதைக் கண்டறிந்தார்.
இதை அடுத்து
2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல்
ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு “ஓ” என்று ஆரம்பித்து “ம்” என்று முடிக்கும் போது உடலில்
ஏற்படும் மாறுதல்களைத்
தொகுத்தார். இந்த உச்சரிப்பு மனிதனின்
நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.
ஏழு சக்கரங்களிலும் அதிர்வு இதையெல்லாம்
முன்னோடி ஆராய்ச்சியாக்
கொண்டு,
அனில் குர்ஜர்
25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட
ஒரு குழுவிடம் ஆறுவருட காலம்
தனது ஆராய்ச்சியை நடத்தினார்.
அமைதியான ஒரு அறையில் 44.1
ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட்
அமைப்பில் ஒரு மைக்ரோபோன்
மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச்
செய்து, ஆய்வுகள் தொடரப்பட்டன.
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன்
மூளையிலும் நரம்பு மண்டலத்திலும்
ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக
ஆராயப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில்,
1. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன
அழுத்தம் குறைகிறது.
2. எதன் மீதும் செய்யப்படும்
கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3. ஏழு உச்சநிலைகளைக் கொண்ட "ஓம்" உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய
குறிப்பிடத்தக்க
மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.
மூலாதாரத்தில் 256
ஹெர்ட்ஸீம் ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸீம் மணிபூரத்தில் 320
ஹெர்ட்ஸீம் அனாகதத்தில் (இதயம்) 341.3
ஹெர்ட்ஸீம், விசுத்தாவில் (தொண்டை )
384 ஹெர்ட்ஸீம் , ஆக்ஞாவில் (மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம், சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம்
அளக்கப்பட்டு, உடலின் ஏழு சக்கரங்களும்
புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு
நிரூபித்தது.
ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும்
"ஓம்".
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது
மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது
உடலின் தன்மை சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை, அனைத்தும், ஒலியால் பாதிக்கப் படுவதால், ஓம் உருவாக்கும் நல்ல ஒலி, நன்மையைத் தருகிறது. இது வேகஸ் நரம்பு மூலமாக, உள் காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறுகுடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 33 !


கோயம்புத்தூரில் இருக்கின்ற மிகச்சிறப்பான ஆலயம் பேரூர் பச்சை நாயகி உடனமர் பட்டீஸ்வரர் கோவில். நான் கோவையில் 2003ம் ஆண்டு முதல் 2007 ம் ஆண்டு வரை தங்கி இருந்தேன். அப்போதெல்லாம் என்னை மிகவும் கவரும் சிவாலயம் இது. செவ்வாய்க்கிழமை தோறும் தவறாமல் இந்த பேரூர் பட்டீசனைக் காணச் சென்று விடுவேன். அதன் பின்னர் இடமாற்றம் காரணமாக சேலம் வந்தாகிவிட்டது. இருந்தாலும் கோவை செல்லும் வாய்ப்பு கிடைத்தால் பேரூர் செல்வது வழக்கம். காரணம் என்ன என்று எனக்கு அப்போது தெரியவில்லை. சேலம் வந்த பின்பு சுமார் 5 வருடங்களாக பேரூர் செல்லவே இல்லை. பணிச்சுமையும், சரியான நேரம் கிட்டாமையுமே காரணமே அன்றி வேறில்லை.  நமக்கு இறைவனைப் பிடிப்பது முக்கியமல்ல இறைவனுக்கு நம்மைப் பிடிக்க வேண்டும் அதுதான் முக்கியம். அந்த வகையில் பேரூர் பட்டீசனுக்கும் என்னைப் பிடித்திருக்கும் போலும். ஏனப்பா என்னை வந்து பார்க்கவில்லை. வந்து பார் என்று உரைக்கும் வாய்ப்பை அந்த இறைவன் மீனாட்சி நாடி மூலம் மீனாட்சி அன்னை மூலம் குரு நாதர் ஜோதி அக்பர் சுவாமிகள் திருவாக்கின் மூலம் உரைத்தார். ஆம் திருவண்ணாமலை மீனாட்சி நாடியில் எனக்குப் பின்வருமாறு வந்தது.

”வகையருளும் முறையாகி
பேரூர் பட்டீசனைக் கண்டு வா
பின்பு ஆதீனக் குரு நாதன் உண்டு
பிரியமுடன் ஆசியதை வாங்கி வா
நீண்ட தொரு இடைவேளை ஏனடா
வந்து பார் என்றார் ஈசன்”
                              -மீனாட்சி நாடி

ஆச்சரியம் தாங்கவில்லை. அழுகையும் செய்த தவறுக்கு குற்ற உணர்ச்சியும் வந்தது. இருந்தாலும் பட்டீசனையும் பச்சை வண்ண நாயகியையும் நினைத்து நினைத்து கண்ணீர் மல்கினேன். இறைவனே வந்து உன்னைப் பார்க்க உனதாசி வேண்டும் என்று மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டேன்.பேரூரைப் பற்றி சற்று சொல்லியே ஆக வேண்டும் என்பதால் இங்கு அதன் வரலாற்றைச் சற்று சுருக்கமாகவே சொல்கிறேன்.

பிரம்மனைப்போல படைப்புத் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என விரும்பிய காமதேனு, சிவனை நோக்கி கடும் தவம் இருந்தது. இத்தலத்தில் புற்று வடிவில் இருந்த சிவலிங்கத்தின் மீது தினமும் பால் சொரிந்து வழிபட்டது. காமதேனுவின் கன்றான "பட்டி' விளையாட்டாக தன் காலால் புற்றை உடைத்து விட்டது.பதறிப் போன காமதேனு இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. காமதேனுவின் முன் தோன்றிய இறைவன் "உனது கன்றின் குளம்படி தழும்பை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். இது முக்தி தருவதில் முதன்மை தலமாதலால், நீ வேண்டும் படைப்பு வரத்தை திருக்கருகாவூரில் தருகிறேன். அங்கு சென்று தவம் செய். உனது நினைவாக இத்தலம் "காமதேனுபுரம்' என்றும், உன் கன்றின் பெயரால் "பட்டிபுரி' என்றும், எனக்கு "பட்டீஸ்வரர்' என்றும் பெயர் வழங்கப்படும்,''என அருளினார். சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். சன்னதி விமானத்தில் எட்டு திசை காவலர்களின் உருவங்கள் அமைந்துள்ளன. அம்மன் பச்சைநாயகி சன்னதி விமானம் சதுரமாக அமைந்துள்ளது. 



மற்றொரு அம்பிகையான மனோன்மணிக்கும் சன்னதி இருக்கிறது. சோமாஸ்கந்த வடிவில், சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் அருள்பாலிக்கிறார்.முக்தி தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் இங்கு அருள் செய்கிறார். அம்மன் சன்னதிக்கு வெளியே வரதராஜப் பெருமாளும், பிரகாரத்தில் மரத்தில் உருவான பெரிய ஆஞ்சநேயரும் அருளுகின்றனர். நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம். கோயிலின் முன்பு "பிறவாப்புளி' என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். இங்குள்ள பனைமரம் "இறவாப்பனை' எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள். நொய்யல் நதிக்கரையில் உள்ள பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பதும், இறந்தவர்களின் எலும்புகள் இந்நதியில் போட்டால் சில நாட்களில் அவை வெண்கற்களாக மாறி விடும் என்பதும் ஐதீகம். இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் "நமசிவாய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர் என்பதும், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது என்பதும் சிறப்பம்சங்கள். சிவாலயங்களில் ஆடும் நிலை யில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும். ஆனால், ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை இக்கோயிலில் காணலாம்.



இங்கு நடராஜரின் முகத்தில் குறும்பு பார்வை தெரிகிறது. மேடான கதுப்பு கன்னங்களும், பின்புறத்தில் தாழ் சடையும், ஆடி முடியப்போகும் நிலையில் கால்களும் தரையை நோக்கி மிகவும் தாழ்ந்துள்ளன. இங்குள்ள கனகசபையில் தான் பிரம்மா, விஷ்ணு, காளி, சுந்தரர் ஆகியோருக்கு நடராஜர் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்துள்ளார். சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாககொண்டாடப்படுவதால் இத்தலம் "மேலைச்சிதம்பரம்' என அழைக்கப்படுகிறது.இது எல்லாம் தெரியாத காலத்திலேயே நான் அடிக்கடி அங்கு சென்றது எனது பூர்வ புண்ணியமும் அந்த ஞானஸ்கந்தப் பெருமானின் அருளுமே ஆகும். ஒரு நாள் அன்னை மீனாட்சி உரைத்தபடி பேரூர் செல்லலாம் என்று முடிவு செய்து புறப்பட்டேன். நம்து ஞானஸ்கந்தாஸ்ரமத்திற்கு கோவை நகரில் ஒரு சிறந்த சேவகராக இருந்து வருகின்றவரும் என்னிடம் தீட்சை பெற்று முருக உபாசனை செய்து வருபவருமான திருமுருக சுரேந்திரமான அடியவர் குருஜீ வாருங்கள் எனது காரிலேயெ பேரூர் சென்று வரலாம் என்று சொல்லி என்னை அவரது காரில் ஏற்றிக் கொண்டு பீளமேடு பகுதியில் இருந்து பயணித்து பேரூரை அடைந்தோம். 



உள்ளம் பூரித்தது, உடல் சிலிர்த்தது. பேரூரா பட்டீசா எனும் நாமங்கள் என்னை அறியாமலேயெ எழுந்தன. வழக்கமாக நான் முன்பெல்லாம் செல்லும் போது என்னுடன் படிக்கும் நண்பர்கள் சிலரும் வருவார்கள். வேறு யாரையும் கோவிலுக்குள் தெரியாது அந்த பட்டீசனைத் தவிர. ஆனால் முருகப் பெருமான் ஒரு ஆச்சரியத்தை அங்கு வைத்திருந்தார். ஆம் கருவறை முன்பு நின்று இறைவனைத் தரிசனம் செய்த நொடி கூட இல்லை. சுவாமி என்றது ஒரு குரல். திரும்ப்பிப் பார்த்தேன். கோவில் பிரதான அர்ச்சகர் வயதில் மூத்தவர் பெரியவர் தில்லை ஆடும் ஐயன் நடராஜரின்  நாமம் படைத்தவர். 



சுவாமி சொல்லுங்கள் என்றேன். நீங்கள் ஜீவ நாடி படிப்பவர் முருக உபாசகர் தானே என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆம் என்றேன். உங்களப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். உங்கள் கட்டுரைகளையும் திருவருள் சக்தியில் படித்து வருகிறேன் என்றார். சரி வாருங்கள் என்று எனது பெயருக்கு அர்ச்சனை செய்து கண்களை மூடி பிரார்த்தனை செய்து உடனே நீங்கள் ஒரு ஆஸ்ரமம் கட்ட வேண்டுமாம் இந்தா பிடி ஒரு ரூபாய் என்று சொல்லி சிவ பெருமான் உங்களிடம் கொடுக்கச் சொல்கிறார் இதை மூலதனமாக்கி ஆஸ்ரமத்தை அபிவிருத்தி செய்யச் சொல் என்கிறார் என்று சொல்லி கொஞ்சம் விலவமும் சிவ பெருமானின் நெற்றிக் காணிக்கையையும் சந்தனத்தோடு சேர்த்துக் கொடுத்தார்.. கடவுளே என்ன விளையாட்டு என்று பிரகாரம் சுற்றி வந்தோம். எங்கள் பின்னாலேயே அவரும் தீபாராதனைத் தட்டோடு வந்திருக்கிறார் எனக்குத் தெரிய வில்லை. சுவாமி என்றேன் அது என்னமோ தெரியவில்லை உங்களிடம் இருக்கும் ஒரு வித சக்தி என்னை இழுக்கிறது என்றார். இத்தனை திருவிளையாடலும் ஒரு நொடிக்குள் நடந்து முடிந்தது. பின்பு தரிசனம் முடித்து வெளியில் வந்தோம். இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது. அப்போது நமது ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் ஒரு சிறிய அருள் வாக்கு மேடையாகவே இருந்தது. ஆனால் இப்போது ஒரு பெரிய அளவில் வளர்ந்து வருகிறது என்றால் அந்த பட்டீசன் போட்ட முதல் பிச்சை என்பதை இன்றும் உணர்கிறேன்.


தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் அவர்கள்

சரி இறைவனத் தரிசனம் செய்து விட்டோம். பேரூர் ஆதினம் அவர்களைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று எண்ணி பேரூர் மட்த்திற்குச் சென்றோம். அங்கு பெரிய ஆதீனம் தவத்திரு. சாந்த லிங்க ராமசாமி அடிகளார் இல்லை. இளைய பட்டம் தவத்திரு. மருதால அடிகளார் அவர்கள் இருந்தார்கள். அவரிடமும் ஆசி வாங்கி பின்பு பெரிய ஆதீனம் அவர்களை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று சின்ன சுவாமிகளிடம் தெரிவித்தோம். அதற்கு அவர் பெரிய சுவாமிகள் வெள்ளிங்கிரி மலைச்சாரலில் தங்கி இருக்கிறார் அங்கு செல்லுங்கள் என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்கள். அடுத்து கார் வெள்ளியங்கிரி மலைச்சாரல் நோக்கிப் பயணித்தது. அதற்கு முன் சிவ பெருமானும் ஞானஸ்கந்த மூர்த்தியும் ஒரு திருவிளையாடல் நடத்தினார்கள்.



சிவ வேடம் பூண்ட அடியவர் ஒருவர் சாந்தலிங்கர் கோவிலில் அமர்ந்து சிவ பஞ்சாட்சரத்தை உரக்க ஜபித்துக் கொண்டிருந்தார். எங்கிருந்து இந்த சிவ மந்திரம் கேட்கிறது என்று திரு மடத்திற்குள் சென்று பார்க்க வியப்பாக ஒரு சிவ யோகி அவ்வளவு தேஜஸ் முகத்தில் ஒளி வீச அமர்ந்து கொண்டு இருந்தார். உடனே அவர் முன்பு சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி விடை பெறலாம் என்று எண்ணும் போது எனது அருகில் இருந்த எனது சீடன் திருமுருக விஜயகுமார் அடியவரை அழைத்து அவர் எந்த ஊர் என்று கேள் என்றேன் அப்படியே அவர் கேட்க சுவாமிகள் புன்னகைத்து காசி என்று மட்டும் பதில் அளித்து விட்டு அங்கிருந்து எழுந்து விடு விடு என வேகமாகச் சென்று விட்டார். அப்படி அவர் செல்லும் போது திடீரெனெ என் மீது ஒரு பார்வை பார்த்து புன்னகை செய்து பின் வேகமாகக் கிளம்பி விட்டார். அப்போது அதன் அர்த்தம் தெரியவில்லை. ஆனால் அதன் சூட்சுமம் பின்னர் புரிந்தது. அதைப் பற்றி பின்பு சொல்கிறேன். சரி எதோ இது இறைவனின் திருவிளையாடல் என்று எண்ணி அடுத்து தவத்திரு. சாந்த லிங்க ராமசாமி அடிகளாராகிய பெரிய சந்நிதானங்களைப் பார்த்து ஆசி வாங்க ஆயத்தமானோம். மிகுந்த ஆவலோடு வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை அடைந்தோம். 



மிக ரம்மியமான மலைச்சாரலில் அழகான மண்டபத்தில் உற்சவர் விக்கிரகம் வீற்றிருப்பது போல் பெரிய சுவாமிகள் வீற்ரிருந்தார்கள். கையில் கொண்டு சென்ற பூ, பழங்களைக் கொடுத்து ஆசி வாங்கினோம். அமருங்கள் என்று எங்களுக்கு நாற்காலி கொடுத்து அமர வைத்தார். சிறிது நேரம் மௌனம். கண்களை மூடிக்கொண்டே சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியும், படுத்த படியுமே இருந்தார். திடீரென எனது முகத்தையே உற்றுப் பார்த்தார். மீண்டும் கண்களை மூடினார். சொல்லுங்கள் என்றார். சுவாமி நான் ஒரு முருகன் உபாசகன் என ஆரம்பித்து, ஜீவ நாடி பற்றியும் இளமை காலம் தொட்டு முருகன் என் மூலம் நட்த்திய திருவிளையாடல்கள் பற்றியும் ஒரு நீண்ட விளக்கமே கொடுத்தேன். அதே போல் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மீனாட்சி நாடியில் உங்களிடம் நான் ஆசி பெற வேண்டும் என்ற குறிப்பு உள்ளதைப் பற்றித் தெரிவித்து அதன் காரணமாகவே தங்களைப் பார்க்க வந்திருக்கிறோம் என்று சொன்னேன். பத்திரிகைப் பணி, கல்லூரிப் பணி பற்றியும் மிக ஆர்வமாக விசாரித்தார். கேட்டுக் கொண்டே இருந்தவர் திடீரென பலத்த சத்தத்துடன் என் முகத்தைப் பார்த்து சிரித்தார். 



அதுவரை சாதாரணமாக இருந்த எனக்கு திடீரென கண்கள் கட்டிக் கொண்டு ஒரு வித மயக்க நிலை ஏற்பட்டது. பின்பு முருகனுக்கு நீங்கள் செய்யும் பூஜை முறைகள் என்ன என்பதைப் பற்றிக் கேட்டார். சொன்னேன். முருகன் விளையாடுகிறாரப்பா, சிரிக்கிறாரப்பா, உனக்குள் உட்கார்ந்து இருக்கிறாரப்பா என்று சொல்லி திரு முருகாற்றுப் படை பற்றி ஒரு நீண்ட விளக்கமே கொடுத்தார். வயது ஆகின்ற காரணத்தால் வெள்ளியங்கிரி கைலாயத்திடமே அடைக்கலம் ஆகி இருப்பதாகவும் கூறி அங்கு தெரிகின்ற கைலாயக் காட்சியை எங்களுக்குக் காண்பித்தார்.சுவாமி தாங்கள் ஒரு முறை எங்களது ஆலயம் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க இப்போது எங்குமே செல்வதில்லை என்றும் என்னைக் கைகாட்டி பெரிய அளவில் வளர்ச்சி வரும் என்றும் தமிழ் முறைப்படி பூஜை செய்து வா என்றும் உபதேசம் செய்தார். சரி சரி சாப்பாட்டு  நேரம் ஆகிறது வாங்க சாப்பிடலாம் என்று சொல்லி சுடச் சுட உணவு பரிமாறி அமிர்தம் போல் மோர் கொடுத்து சில நூல்களையும் கொடுத்து எங்களை அனுப்பி வைத்தார். எனது வாழ் நாளில் மறக்க முடியாத மற்றும் மறக்கக் கூடாத சம்பவமாக இது அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.

மீனாட்சி நாடி உரைத்தபடியே செய்து முடிக்கும் போது இன்னும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அது என்ன?

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

(தொடரும்...)

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

தோரணமலை ஓர் அதிசயம் !









அகத்திய மாமுனிவர் மற்றும் தேரையர் சித்தர் தவம் புரிந்த புண்ணிய பூமியான தோரணமலை திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகில் இருக்கிறது.இந்த மலையில் முருகப்பெருமாள் அருள்பாலிக்கிறார்.

தலசிறப்பு:-

                     சித்தரான தேரையர் தவம் புரிந்ததால் இம்மலையை "தேரையர் மலை"
என்று கூறுகின்றனர்.இச்சாலையில் வாகனங்களில் போகும்போது தோரணமலை உடன்வருவது  போலவும்,மலை உச்சியில் இருந்து வெளியேறும் பாறையில் வழிந்தோடும் சுண்ணாம்பு கலவை "தாடி" யுடன் தேரையர் தவம் புரிவது போல காட்சி அளிப்பது வேறெங்கும் காணாத அற்புதம்.


குமரன் பெருமை :-

குன்று இருக்கும்  இடமெல்லாம் குமரன் இருப்பான்  என்பதை போல இங்கு அடிவாரத்தில் இருந்து 998 படிக்கட்டுகளை கடந்து மலை உச்சியில் குடி கொண்டுள்ளார்.மலை  ஏறும்போது வரும் மூலிகை காற்று மனதுக்கு இதமாகவும் 
அரோகரா கோஷம் மலை ஏற்றத்துக்கு பதமாகவும் இருப்பதை அனுபவரீதியாக உணரமுடியும்.

வற்றாத சுனைகள் :-

தோரண மலையில் 65 விதமான வற்றாத சுனை ஊற்றுகள் இருக்கின்றன.இதில் முக்கியமான சுனை ஒன்று முருகன் கோயில் அருகில் உள்ளது. ஊற்றில் தீர்த்தமாடிய பின் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.ஆழமான சுனை ஊற்றில் கோடையிலும் தண்ணீர் வற்றுவதில்லை.மூலிகை குணம் நிறைந்த இசுனை நீரை பருகிவர தீராத நோய்கள் குணமாகிறது.

தோரண மலையில் சித்தர்கள் தவம் புரிந்த இடங்களில் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்கின்றனர்.சுவாமி தரிசனத்துடன்  தியானமும் நடப்பது தோரண மலையில் மட்டுமே.

குன்றாத செல்வம்,குறைவில்லாத கல்வி,வளமிக்க வாழ்வுதரும் தோரண மலை முருகனை வழிபடுவோம்.

                                      ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும் 

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

சுப்ரமண்யர் திருக்கல்யாண வைபவம்

எமது குருநாதர் ஆசிர்வாதத்தோடும் ஞானஸ்கந்தமூர்த்தியின் அருளாசியோடும்,பக்தர்களின் ஆதரவோடும், கோவை சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாதிபதி சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள்
தலைமையில் 29.08.2015 சனிக்கிழமை அன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யருக்கு திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடந்தது


கொங்கு நாட்டில் இதுவரை எந்த ஒரு ஆலயத்திலும் முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானைக்கு தமிழ் முறைப்படி திருமணம் நடந்ததாக சான்று இல்லை .இந்த அற்புதமான திருமண  விழாவில் கலந்துகொண்ட  அனைவருடைய மனதையும்  நெகிழவைத்தது.


விழாவில் அடியார்கள் ஒரு சிலர் வள்ளி  தெய்வானையை மணப்பெண்ணாக பாவித்து  பெண்  வீட்டார் பக்கமும்,மற்றும் சிலர்  முருகப்பெருமானை மணமகனாக  பாவித்து ஆன் வீட்டார் பக்கமும் நின்று திருக்கல்யாண வைபவத்தை  சிறப்பாக நடத்தி வைத்தனர்.

வள்ளி தேவசேனா திருக்கல்யாணம் நிகழ்வில் இன்னும் சில படங்கள்

F:\skandan\DSC_0390.JPG


கௌமார மடாதிபதிக்கு நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் மற்றும் சிவாச்சாரியர்களால் பூரண கும்ப மரியாதை செய்வித்து வரவேற்புக் கொடுக்கப் பட்டது.
F:\skandan\DSC_0397.JPG
ஞானஸ்கந்தாசிரமத்திற்கு மடாதிபதி வருகை தரும் காட்சி

F:\skandan\DSC_0533.JPG
   
   ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் கௌமார மடாதிபதிக்கு  மாலை அணிவித்து        மரியாதை செலுத்தும் காட்சி.


F:\skandan\DSC_0543.JPG
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் திருக்கல்யாண வைபவத்திற்கு வந்திருந்த பக்தர்களை ஆசிர்வதிக்கும் காட்சி .


ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் !

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சுப்ரமண்யர் திருக்கல்யாண வைபவம் !


29.08.2015 சனிக்கிழமை அன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யருக்கு திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடந்தது. அந்த விழாவை கோவை சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாதிபதி சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் தலைமை ஏற்று சிறப்பித்தார்கள்.
கௌமாரபயணம் வாசகர்கள் பலர் வந்து கலந்து கொண்டார்கள். சுமார் 1400 பக்தர்கள் இந்த திருக்கல்யாண வைபவத்தைக் கண்ணுற்றனர் அந்த கந்தன் அருள் பெற்றனர். நிகழ்வுகளில் சில படங்கள்:
கல்யாண கோலத்தில் முருகப் பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை
சிரவை ஆதீனத்துடன் நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள்


ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

சுப்ரமண்யர் திருக்கல்யாண வைபவம் !




                                                 தவத்திரு.குமர குருபர சுவாமிகள்

வருகின்ற 29.08.2015 அன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் 12 மணி வரை வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யருக்கு திருக்கல்யாண வைபோகம் நடக்க இருக்கிறது. அந்த விழாவை கோவை சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாதிபதி சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் தலைமை ஏற்று சிறப்பிக்க இருக்கிறார்கள் என்பதையும் கௌமாரபயணம்
வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.



                                          ஸ்ரீ ஸ்கந்த உபாசகர்  ஞானஸ்கந்தாஸ்ரமம்


நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அடிக்கடி இந்த கௌமார மடம் பற்றி வருவதும் இப்போது அதன் ஆதீனமே இந்த திருக்கல்யாண நிகழ்வைத் தலைமை தாங்கி நட்த்துவதும் அந்த முருகன் திருவிளையாடல் என்பது நிரூபணமாகிறது. கௌமாரப் பயணம் வாசகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு சேர குரு அருளையும் திருவருளையும் பெற 29.08.2015 அன்று சனிக்கிழமை ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் வரும் படி அழைக்கப்படுகிறார்கள்.



ஈரோட்டில் இருந்து பவானி வழியாக அந்தியூர் வர வேண்டும். அந்தியூரில் இருந்து புதுக்காடு எனும் ஊரில் உள்ள மந்தை பஸ் ஸ்டாப் வர வேண்டும். மந்தையில் இருந்து விலாங்குட்டை எனும் ஊர் செல்லும் வழியில் மலைக்காரன் தோட்ட்த்தில் ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது. வாசகர்கள் இந்த வழித்தடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

                         
                                 ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!