கோயம்புத்தூரில் இருக்கின்ற மிகச்சிறப்பான ஆலயம் பேரூர் பச்சை நாயகி உடனமர் பட்டீஸ்வரர் கோவில். நான் கோவையில் 2003ம் ஆண்டு முதல் 2007 ம் ஆண்டு வரை தங்கி இருந்தேன். அப்போதெல்லாம் என்னை மிகவும் கவரும் சிவாலயம் இது. செவ்வாய்க்கிழமை தோறும் தவறாமல் இந்த பேரூர் பட்டீசனைக் காணச் சென்று விடுவேன். அதன் பின்னர் இடமாற்றம் காரணமாக சேலம் வந்தாகிவிட்டது. இருந்தாலும் கோவை செல்லும் வாய்ப்பு கிடைத்தால் பேரூர் செல்வது வழக்கம். காரணம் என்ன என்று எனக்கு அப்போது தெரியவில்லை. சேலம் வந்த பின்பு சுமார் 5 வருடங்களாக பேரூர் செல்லவே இல்லை. பணிச்சுமையும், சரியான நேரம் கிட்டாமையுமே காரணமே அன்றி வேறில்லை. நமக்கு இறைவனைப் பிடிப்பது முக்கியமல்ல இறைவனுக்கு நம்மைப் பிடிக்க வேண்டும் அதுதான் முக்கியம். அந்த வகையில் பேரூர் பட்டீசனுக்கும் என்னைப் பிடித்திருக்கும் போலும். ஏனப்பா என்னை வந்து பார்க்கவில்லை. வந்து பார் என்று உரைக்கும் வாய்ப்பை அந்த இறைவன் மீனாட்சி நாடி மூலம் மீனாட்சி அன்னை மூலம் குரு நாதர் ஜோதி அக்பர் சுவாமிகள் திருவாக்கின் மூலம் உரைத்தார். ஆம் திருவண்ணாமலை மீனாட்சி நாடியில் எனக்குப் பின்வருமாறு வந்தது.
”வகையருளும் முறையாகி
பேரூர் பட்டீசனைக் கண்டு வா
பின்பு ஆதீனக் குரு நாதன் உண்டு
பிரியமுடன் ஆசியதை வாங்கி வா
நீண்ட தொரு இடைவேளை ஏனடா
வந்து பார் என்றார் ஈசன்”
-மீனாட்சி நாடி
ஆச்சரியம் தாங்கவில்லை. அழுகையும் செய்த தவறுக்கு குற்ற உணர்ச்சியும் வந்தது. இருந்தாலும் பட்டீசனையும் பச்சை வண்ண நாயகியையும் நினைத்து நினைத்து கண்ணீர் மல்கினேன். இறைவனே வந்து உன்னைப் பார்க்க உனதாசி வேண்டும் என்று மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டேன்.பேரூரைப் பற்றி சற்று சொல்லியே ஆக வேண்டும் என்பதால் இங்கு அதன் வரலாற்றைச் சற்று சுருக்கமாகவே சொல்கிறேன்.
பிரம்மனைப்போல படைப்புத் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என விரும்பிய காமதேனு, சிவனை நோக்கி கடும் தவம் இருந்தது. இத்தலத்தில் புற்று வடிவில் இருந்த சிவலிங்கத்தின் மீது தினமும் பால் சொரிந்து வழிபட்டது. காமதேனுவின் கன்றான "பட்டி' விளையாட்டாக தன் காலால் புற்றை உடைத்து விட்டது.பதறிப் போன காமதேனு இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. காமதேனுவின் முன் தோன்றிய இறைவன் "உனது கன்றின் குளம்படி தழும்பை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். இது முக்தி தருவதில் முதன்மை தலமாதலால், நீ வேண்டும் படைப்பு வரத்தை திருக்கருகாவூரில் தருகிறேன். அங்கு சென்று தவம் செய். உனது நினைவாக இத்தலம் "காமதேனுபுரம்' என்றும், உன் கன்றின் பெயரால் "பட்டிபுரி' என்றும், எனக்கு "பட்டீஸ்வரர்' என்றும் பெயர் வழங்கப்படும்,''என அருளினார். சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். சன்னதி விமானத்தில் எட்டு திசை காவலர்களின் உருவங்கள் அமைந்துள்ளன. அம்மன் பச்சைநாயகி சன்னதி விமானம் சதுரமாக அமைந்துள்ளது.
மற்றொரு அம்பிகையான மனோன்மணிக்கும் சன்னதி இருக்கிறது. சோமாஸ்கந்த வடிவில், சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் அருள்பாலிக்கிறார்.முக்தி தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் இங்கு அருள் செய்கிறார். அம்மன் சன்னதிக்கு வெளியே வரதராஜப் பெருமாளும், பிரகாரத்தில் மரத்தில் உருவான பெரிய ஆஞ்சநேயரும் அருளுகின்றனர். நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம். கோயிலின் முன்பு "பிறவாப்புளி' என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். இங்குள்ள பனைமரம் "இறவாப்பனை' எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள். நொய்யல் நதிக்கரையில் உள்ள பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பதும், இறந்தவர்களின் எலும்புகள் இந்நதியில் போட்டால் சில நாட்களில் அவை வெண்கற்களாக மாறி விடும் என்பதும் ஐதீகம். இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் "நமசிவாய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர் என்பதும், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது என்பதும் சிறப்பம்சங்கள். சிவாலயங்களில் ஆடும் நிலை யில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும். ஆனால், ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை இக்கோயிலில் காணலாம்.
இங்கு நடராஜரின் முகத்தில் குறும்பு பார்வை தெரிகிறது. மேடான கதுப்பு கன்னங்களும், பின்புறத்தில் தாழ் சடையும், ஆடி முடியப்போகும் நிலையில் கால்களும் தரையை நோக்கி மிகவும் தாழ்ந்துள்ளன. இங்குள்ள கனகசபையில் தான் பிரம்மா, விஷ்ணு, காளி, சுந்தரர் ஆகியோருக்கு நடராஜர் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்துள்ளார். சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாககொண்டாடப்படுவதால் இத்தலம் "மேலைச்சிதம்பரம்' என அழைக்கப்படுகிறது.இது எல்லாம் தெரியாத காலத்திலேயே நான் அடிக்கடி அங்கு சென்றது எனது பூர்வ புண்ணியமும் அந்த ஞானஸ்கந்தப் பெருமானின் அருளுமே ஆகும். ஒரு நாள் அன்னை மீனாட்சி உரைத்தபடி பேரூர் செல்லலாம் என்று முடிவு செய்து புறப்பட்டேன். நம்து ஞானஸ்கந்தாஸ்ரமத்திற்கு கோவை நகரில் ஒரு சிறந்த சேவகராக இருந்து வருகின்றவரும் என்னிடம் தீட்சை பெற்று முருக உபாசனை செய்து வருபவருமான திருமுருக சுரேந்திரமான அடியவர் குருஜீ வாருங்கள் எனது காரிலேயெ பேரூர் சென்று வரலாம் என்று சொல்லி என்னை அவரது காரில் ஏற்றிக் கொண்டு பீளமேடு பகுதியில் இருந்து பயணித்து பேரூரை அடைந்தோம்.
உள்ளம் பூரித்தது, உடல் சிலிர்த்தது. பேரூரா பட்டீசா எனும் நாமங்கள் என்னை அறியாமலேயெ எழுந்தன. வழக்கமாக நான் முன்பெல்லாம் செல்லும் போது என்னுடன் படிக்கும் நண்பர்கள் சிலரும் வருவார்கள். வேறு யாரையும் கோவிலுக்குள் தெரியாது அந்த பட்டீசனைத் தவிர. ஆனால் முருகப் பெருமான் ஒரு ஆச்சரியத்தை அங்கு வைத்திருந்தார். ஆம் கருவறை முன்பு நின்று இறைவனைத் தரிசனம் செய்த நொடி கூட இல்லை. சுவாமி என்றது ஒரு குரல். திரும்ப்பிப் பார்த்தேன். கோவில் பிரதான அர்ச்சகர் வயதில் மூத்தவர் பெரியவர் தில்லை ஆடும் ஐயன் நடராஜரின் நாமம் படைத்தவர்.
சுவாமி சொல்லுங்கள் என்றேன். நீங்கள் ஜீவ நாடி படிப்பவர் முருக உபாசகர் தானே என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆம் என்றேன். உங்களப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். உங்கள் கட்டுரைகளையும் திருவருள் சக்தியில் படித்து வருகிறேன் என்றார். சரி வாருங்கள் என்று எனது பெயருக்கு அர்ச்சனை செய்து கண்களை மூடி பிரார்த்தனை செய்து உடனே நீங்கள் ஒரு ஆஸ்ரமம் கட்ட வேண்டுமாம் இந்தா பிடி ஒரு ரூபாய் என்று சொல்லி சிவ பெருமான் உங்களிடம் கொடுக்கச் சொல்கிறார் இதை மூலதனமாக்கி ஆஸ்ரமத்தை அபிவிருத்தி செய்யச் சொல் என்கிறார் என்று சொல்லி கொஞ்சம் விலவமும் சிவ பெருமானின் நெற்றிக் காணிக்கையையும் சந்தனத்தோடு சேர்த்துக் கொடுத்தார்.. கடவுளே என்ன விளையாட்டு என்று பிரகாரம் சுற்றி வந்தோம். எங்கள் பின்னாலேயே அவரும் தீபாராதனைத் தட்டோடு வந்திருக்கிறார் எனக்குத் தெரிய வில்லை. சுவாமி என்றேன் அது என்னமோ தெரியவில்லை உங்களிடம் இருக்கும் ஒரு வித சக்தி என்னை இழுக்கிறது என்றார். இத்தனை திருவிளையாடலும் ஒரு நொடிக்குள் நடந்து முடிந்தது. பின்பு தரிசனம் முடித்து வெளியில் வந்தோம். இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது. அப்போது நமது ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் ஒரு சிறிய அருள் வாக்கு மேடையாகவே இருந்தது. ஆனால் இப்போது ஒரு பெரிய அளவில் வளர்ந்து வருகிறது என்றால் அந்த பட்டீசன் போட்ட முதல் பிச்சை என்பதை இன்றும் உணர்கிறேன்.
தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் அவர்கள்
சரி இறைவனத் தரிசனம் செய்து விட்டோம். பேரூர் ஆதினம் அவர்களைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று எண்ணி பேரூர் மட்த்திற்குச் சென்றோம். அங்கு பெரிய ஆதீனம் தவத்திரு. சாந்த லிங்க ராமசாமி அடிகளார் இல்லை. இளைய பட்டம் தவத்திரு. மருதால அடிகளார் அவர்கள் இருந்தார்கள். அவரிடமும் ஆசி வாங்கி பின்பு பெரிய ஆதீனம் அவர்களை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று சின்ன சுவாமிகளிடம் தெரிவித்தோம். அதற்கு அவர் பெரிய சுவாமிகள் வெள்ளிங்கிரி மலைச்சாரலில் தங்கி இருக்கிறார் அங்கு செல்லுங்கள் என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்கள். அடுத்து கார் வெள்ளியங்கிரி மலைச்சாரல் நோக்கிப் பயணித்தது. அதற்கு முன் சிவ பெருமானும் ஞானஸ்கந்த மூர்த்தியும் ஒரு திருவிளையாடல் நடத்தினார்கள்.
சிவ வேடம் பூண்ட அடியவர் ஒருவர் சாந்தலிங்கர் கோவிலில் அமர்ந்து சிவ பஞ்சாட்சரத்தை உரக்க ஜபித்துக் கொண்டிருந்தார். எங்கிருந்து இந்த சிவ மந்திரம் கேட்கிறது என்று திரு மடத்திற்குள் சென்று பார்க்க வியப்பாக ஒரு சிவ யோகி அவ்வளவு தேஜஸ் முகத்தில் ஒளி வீச அமர்ந்து கொண்டு இருந்தார். உடனே அவர் முன்பு சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி விடை பெறலாம் என்று எண்ணும் போது எனது அருகில் இருந்த எனது சீடன் திருமுருக விஜயகுமார் அடியவரை அழைத்து அவர் எந்த ஊர் என்று கேள் என்றேன் அப்படியே அவர் கேட்க சுவாமிகள் புன்னகைத்து காசி என்று மட்டும் பதில் அளித்து விட்டு அங்கிருந்து எழுந்து விடு விடு என வேகமாகச் சென்று விட்டார். அப்படி அவர் செல்லும் போது திடீரெனெ என் மீது ஒரு பார்வை பார்த்து புன்னகை செய்து பின் வேகமாகக் கிளம்பி விட்டார். அப்போது அதன் அர்த்தம் தெரியவில்லை. ஆனால் அதன் சூட்சுமம் பின்னர் புரிந்தது. அதைப் பற்றி பின்பு சொல்கிறேன். சரி எதோ இது இறைவனின் திருவிளையாடல் என்று எண்ணி அடுத்து தவத்திரு. சாந்த லிங்க ராமசாமி அடிகளாராகிய பெரிய சந்நிதானங்களைப் பார்த்து ஆசி வாங்க ஆயத்தமானோம். மிகுந்த ஆவலோடு வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை அடைந்தோம்.
மிக ரம்மியமான மலைச்சாரலில் அழகான மண்டபத்தில் உற்சவர் விக்கிரகம் வீற்றிருப்பது போல் பெரிய சுவாமிகள் வீற்ரிருந்தார்கள். கையில் கொண்டு சென்ற பூ, பழங்களைக் கொடுத்து ஆசி வாங்கினோம். அமருங்கள் என்று எங்களுக்கு நாற்காலி கொடுத்து அமர வைத்தார். சிறிது நேரம் மௌனம். கண்களை மூடிக்கொண்டே சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியும், படுத்த படியுமே இருந்தார். திடீரென எனது முகத்தையே உற்றுப் பார்த்தார். மீண்டும் கண்களை மூடினார். சொல்லுங்கள் என்றார். சுவாமி நான் ஒரு முருகன் உபாசகன் என ஆரம்பித்து, ஜீவ நாடி பற்றியும் இளமை காலம் தொட்டு முருகன் என் மூலம் நட்த்திய திருவிளையாடல்கள் பற்றியும் ஒரு நீண்ட விளக்கமே கொடுத்தேன். அதே போல் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மீனாட்சி நாடியில் உங்களிடம் நான் ஆசி பெற வேண்டும் என்ற குறிப்பு உள்ளதைப் பற்றித் தெரிவித்து அதன் காரணமாகவே தங்களைப் பார்க்க வந்திருக்கிறோம் என்று சொன்னேன். பத்திரிகைப் பணி, கல்லூரிப் பணி பற்றியும் மிக ஆர்வமாக விசாரித்தார். கேட்டுக் கொண்டே இருந்தவர் திடீரென பலத்த சத்தத்துடன் என் முகத்தைப் பார்த்து சிரித்தார்.
அதுவரை சாதாரணமாக இருந்த எனக்கு திடீரென கண்கள் கட்டிக் கொண்டு ஒரு வித மயக்க நிலை ஏற்பட்டது. பின்பு முருகனுக்கு நீங்கள் செய்யும் பூஜை முறைகள் என்ன என்பதைப் பற்றிக் கேட்டார். சொன்னேன். முருகன் விளையாடுகிறாரப்பா, சிரிக்கிறாரப்பா, உனக்குள் உட்கார்ந்து இருக்கிறாரப்பா என்று சொல்லி திரு முருகாற்றுப் படை பற்றி ஒரு நீண்ட விளக்கமே கொடுத்தார். வயது ஆகின்ற காரணத்தால் வெள்ளியங்கிரி கைலாயத்திடமே அடைக்கலம் ஆகி இருப்பதாகவும் கூறி அங்கு தெரிகின்ற கைலாயக் காட்சியை எங்களுக்குக் காண்பித்தார்.சுவாமி தாங்கள் ஒரு முறை எங்களது ஆலயம் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க இப்போது எங்குமே செல்வதில்லை என்றும் என்னைக் கைகாட்டி பெரிய அளவில் வளர்ச்சி வரும் என்றும் தமிழ் முறைப்படி பூஜை செய்து வா என்றும் உபதேசம் செய்தார். சரி சரி சாப்பாட்டு நேரம் ஆகிறது வாங்க சாப்பிடலாம் என்று சொல்லி சுடச் சுட உணவு பரிமாறி அமிர்தம் போல் மோர் கொடுத்து சில நூல்களையும் கொடுத்து எங்களை அனுப்பி வைத்தார். எனது வாழ் நாளில் மறக்க முடியாத மற்றும் மறக்கக் கூடாத சம்பவமாக இது அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.
மீனாட்சி நாடி உரைத்தபடியே செய்து முடிக்கும் போது இன்னும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அது என்ன?
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
(தொடரும்...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக