வெள்ளி, 16 அக்டோபர், 2015

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் (சிறு பொய்யும் வாழ்நாள் தண்டனையும் !







*
19ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமானமில்லாத குருநாதர் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள். மயிலேறும் ஷண்முகக் கடவுளைப் போற்றுவதைத் தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்த அருளாளர். சுவாமிகளின் அவதாரக் காலத்தில் நடந்தேறிய முக்கிய நிகழ்வு ஒன்றினை இனிக் காண்போம்.
*
எந்தவொரு செயலைத் தொடங்குமுன்பும் ஆறுமுகப் பெருமானின் திருமுன்பு (பூக்கள் மூலம்) உத்தரவு கேட்கும் மரபு சுவாமிகளின் இல்லத்தில் இருந்து வந்தது. சுவாமிகளுக்கு அப்பொழுது இளம் பிராயம்; பழனி தலம் சென்று சிவபாலனைத் தரிசிக்க பெருவிருப்பம் கொண்டார். மறுநாள் காலை பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்தார்.
*
அது பற்றி அன்பர் ஒருவரிடம் கூறிக் கொண்டிருந்தார். அவ்வன்பரும் 'பழனி தலம் செல்ல முருகக் கடவுளிடம் உத்தரவு வாங்கி விட்டாயா?' என்று வினவினார். தண்டபாணிக் கடவுளைத் தரிசிக்கும் பெரும் காதலால் சுவாமிகள் 'ஆம்' என்று ஒரு பொய் உரைத்தார். பின்னர் அன்று மாலை சுவாமிகள் வழக்கம் போல் மாடியில் அனுஷ்டானம் புரிந்து கொண்டிருந்தார்.
*
அச்சமயம் அங்கு ஒரு கொடிய உருவம் தோன்றியது. 'பழனி செல்ல உத்தரவு ஆகிவிட்டது என்று பொய் உரைத்தாயே?' என்று மிகக் கடுமையான தொனியில் மிரட்டியது. சுவாமிகள் உடலும் உள்ளமும் தளர்ந்த நிலையில் மிகவும் அஞ்சி கண்களை மூடிக் கொண்டு வேலேந்தும் வேலவனிடம் உளமாற மன்னிப்பு வேண்டினார்.
*
அவ்வடிவம் 'இனி வேலவனின் உத்தரவு கிடைக்கும் வரை பழனி செல்வதில்லை என்று உறுதி கூறு' என்று உரத்த குரலில் அதட்ட சுவாமிகளும் 'ஆம். இனி உத்தரவு கிடைக்கும் வரையில் பழனி வருவதில்லை' என்று உறுதி அளித்தார். அவ்வுருவம் அக்கணமே அங்கிருந்து மறைந்து விட்டது.
*
அது முதல் அனுதினமும் வள்ளி மணாளனிடம் தன்னை பழனிக்கு அழைக்குமாறு சுவாமிகள் மன்றாடுவார்; கண்ணீர் பெருக்குவார். பின்னாளில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 'பிரப்பன் வலசை' எனும் தலத்தில் குகக் கடவுளின் தரிசனத்தை நேரடியாகவே பெற்றார் சுவாமிகள். எனினும் இறுதி வரையில் பழனி தரிசனம் மட்டும் சுவாமிகளுக்குக் கிட்டவில்லை.
*
நாம் புரியும் தவறுகளுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைப்பதன் மூலம் இறைவனின் அருட் பார்வை நம் மீது பதிந்துள்ளது என்பதை உணர முடியும். தன்னைப் பூரணமாக ஒப்புவிக்கும் அடியவரின் முக்திப் பாதைக்கு இறைவன் பொறுப்பேற்கிறான். சிறு தவறுகள் நம் மூலம் நேரினும் அக்கணமே தண்டித்து அக்கர்மத்தில் இருந்து நம்மை விடுவித்தும் அருள்கிறான்.
*
ஆத்ம ஞானம் கைவரப் பெற்ற பரம ஞானியான ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளுக்கே (ஒரு சிறு பொய்க்கு) இத்தகு தண்டனை கிட்டும் என்றால் நம் நிலையை எண்ணிப் பார்த்துத் தெளிதல் வேண்டும். சத்திய உபாசனையே இறைவனை அடைவிக்கும் மார்க்கம். பரம ஞானியான பாம்பன் சுவாமிகளின் திருவடிகளைப் போற்றிப் பணிவோம். கௌமாரனின் திருவருளைப் பெறுவோம்.
*
(திருப்பழனி - பாம்பன் சுவாமிகள் அருளிய அற்புதப் பாடல்):
சூடேன்! நின்னடியை அன்றித் துதித்து நானெதையும்
பாடேன்! எம்மானே பரமார்த்த சன்யாசீ!
வாடா விண்மலரே! எனை வாவென்றே அழையாய்
சேடார் தென்பழனித் திருக்கோயில் உள்ளாயே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக