புதன், 21 அக்டோபர், 2015

சிரவையாதீனம்,தவத்திரு குமரகுருபர சுவாமிகளின் சிறப்புக்கட்டுரை !


வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எனவும் முருகதாசர் எனவும் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும். இவர் 28-01-1839 ஆம் ஆண்டு, சைவ வேளாளர் மரபில் தோன்றிய செந்தில்நாயகம் பிள்ளைக்கும் பேச்சி முத்தமாளுக்கும் மகனாக திருநெல்வேலியில் பிறந்தார். சிறுவன் சங்கரலிங்கம் தனது ஆறரை வயதில் தனது தந்தையாரை இழந்தார். தனது பெரிய தந்தையார் மூலம் தென்காசியை அடுத்த சுரண்டையில் கல்வி பயின்றார். அவ்வூரில் உள்ள பூமிகாத்தாள் என்னும் அம்மனை தனது எட்டு வயதில் நேரிசை வெண்பாவால் பாடத்தொடங்கினார். அன்றுமுதல் பாடல்களை பனை ஓலைகளில் புனையத்தொடங்கினார். சங்கரலிங்கத்தின் குருவான சீதாராம நாயுடு விநாயக மந்திரம், லட்சுமி மந்திரம், ஆறெழுத்து மந்திரம் போன்ற மந்திரங்களை உபதேசித்தார். சங்கரலிங்கத்தின் மடை திறந்த வெள்ளம் போலப் பாடும் திறனைக் கண்ட ஆசிரியர், அவரை "ஓயா மாரி" என அழைத்து பெருமை செய்தார். ஊர் மக்கள் அவரை முருகதாசர் என அழைத்தனர். திருப்புகழ் சந்தப் பாக்களையும், வண்ணப் பாடல்களையும் பாடியதால் வண்ணச் சரபம் எனவும் அழைக்கப்பட்டார்.

அவரது கனவில் முருக பெருமான் தோன்றி காட்சி கொடுத்ததால், அவர் குமரன் குடிகொண்ட இடங்களுக்கு சென்று வழிபட்டார். வள்ளியூர் மலைக்குச் சென்று முருக பெருமானின் சன்னதியில் கல்லாடை, இலங்கோடு, கவுபீணம், ருத்ராச மாலை, தண்டம் ஆகியவற்றை வைத்து வணங்கி, அவற்றை அணிந்து கொண்டார். அன்று முதல் அவர் தண்டபாணி சுவாமிகள் என அழைக்கப்பட்டார். யாரும் இவருக்கு முறைப்படி தீட்சையளித்து துறவியாக்கவில்லை. ஒரு முறை தென்காசி அருகிலுள்ள திருமசை குமாரசாமி கோயில் சந்நிதியில் நின்று, முருக பெருமான் தன்னை ஆட்கொள்ள வேண்டும் என பணிந்து வேண்டினார். இறையருள் கிடைக்காததால், இனி உயிருடன் இருந்து பயனில்லை என்று மலையிலிருந்து விழுந்து புரண்டார். ஆனால் முருகன் அருளால், இடது தோளில் புண் ஏற்பட்டதைத் தவிர அவருக்கு வேறு பெரிய தீங்கு நேரவில்லை. தமக்குத் திருவருள் துணை மிகுதியாக இருப்பதை உள்ளுணர்வால் உணரத் தொடங்கினார். தண்டபாணி சுவாமிகள் எழுத்தாணி கொண்டு எழுதத் தொடங்கினால், இவர் மனம் செல்லும் வேகத்துக்கு எழுத்தாணியால் எழுத இயலாது. இவர் தமது பாடல்களில் முற்பிறவியில் தாம் அருணகிரியாகப் பிறந்தவர் என்றும், இதை முருகபெருமானே தம்மிடம் பலமுறை கூறியதாகவும் குறிப்பிடுகிறார்.

      சுவாமிகள் திருப்பரங்குன்றம், மதுரை, சிதம்பரம், திருமயிலை ஆகிய திருத்தலங்களை வழிபட்டு சென்னையில் இருந்த சமயம் யாழ்பாணத்து நல்லூர் ஞானப்பிரகாசம் வழிவந்த ஆறுமுக நாவலரை கண்டு உரையாடி மகிழ்ந்தார். திருநெல்வேலியில் இருந்தபோது முருகனின் கட்டளைப்படி பிரபந்தங்கள் பாடினார். முருகனின் காட்சி கிடைக்காததால், தாம் இயற்றிய பிரபந்தங்களை பொருநை ஆற்றில் கிழித்தெறிந்தார். இப்படி அவசரப்பட்டு செய்தமைக்காக வருந்திய அவர், பதினாறு வகையான நூல்களைப் புனைந்து, திருச்செந்தூரில் இறையன்பர்கள் கூடியிருந்த அவையிலே அரங்கேற்றினார். கடலூரில் இருந்தபோது, திருவருட்பிரகாச வள்ளலாரை ஒரு அன்பர் வீட்டில் சந்தித்து, இருவரும் தங்களின் உறவுகளைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது சுவாமிகள் வள்ளலாரிடம், "தாங்கள் தாயுமானவராக முற்பிறப்பில் இருந்தவர்" என்றுணர்த்தினார். வள்ளலாரும் "இருக்கலாம்" என்றனர்.

      வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்கள் அருளிய பிரபந்தத்திரட்டு என்னும் நூலின் சிறப்புப்பாயிரத்தில், இரண்டு நேரிசை வெண்பாக்களையும் தண்டபாணி சுவாமிகள் இயற்றியுள்ளார்கள். (பிரபந்தத்திரட்டு - அ.திருநாவுக்கரசு பதிப்பு - பக்கம் - 5)

முருகதாச சுவாமிகளென்றுந்திருப்புகழ் சுவாமிகளென்றும் விளங்கிய
ஸ்ரீமத்-தண்டபாணிசுவாமிகள் அருளிச்செய்த
நேரிசை வெண்பா.

                  வடலூரா னண்பர்களில் வாய்மைகல்வி ஞானத்
                  திடமார்ந் தவிர்தருமோர் செல்வன் - கடல்சூழ்
                  பாருலுக முய்வதற்காப் பாடுமிசைப் பாடலமு
                  தாருமவர்க் குண்டே யருள்.
                                         
                  அந்தண் வடலூரா னன்பர்களிற் சீரியனாங்
                  கந்தசுவாமிக் கவிப் புலவ - னிந்த
                  வுலகத் தினர்மகிழ வோதுமிசைப் பாட
                  லிலகற்குஞ் சாட்சிதெய்வ மே.
                                         
      காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் தாம் அருளிய பிரபந்தத்திரட்டில் தண்டபாணி சுவாமிகளைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார், "திருநெல்வேலியில் சைவவேளாண் மரபில் உதித்து ஒன்பது வயது முதல் முருகப்பெருமானைச் செந்தமிழ்ச்சுவை பொலிந்த திருப்புகழ்களால் தம்காலம் முழுவதும் துதித்த தண்டபாணி சுவாமிகள் என்று வழங்கும் முருகதாசர் ஒருகால் வடலூர்க்கு வந்து வள்ளலாரிடம் சிலநாள் தங்கி முருகரது திருவருளை வியந்து கொண்டிருந்தனர்முருகதாசர் தாம்பாடிய திருப்புகழ்களை வள்ளலார்க்கு எடுத்துக் காட்டிக்கொண்டேவரவள்ளலார் ஏடுகளை ஒருசிறிது தள்ளினர்அதனால் அலட்சியங் கொண்டதாக அவர் எண்ணவேவள்ளலார் முருகதாசரை அருணகிரிதாசரே என்று சிறப்பித்துப் பேசினர்எனினும் அவர்க்குத் திருப்தியில்லைஏடுகளைத் தள்ளினதால் கணக்கிலாமற்பாடிக் கொண்டிருப்பதோடு அனுபவஞானம் இருத்தல் வேண்டும் என்று வள்ளலார் எண்ணினரோ என்று அவர் ஐயமுற்றனர்பின் ஒருகால் முருகத் தியானத்தி லிருந்தபோது வள்ளலார் தாயுமானவரே யென்று அவர்க்கு விளங்கியது. ஒருநாள் முருகதாசர் உஷ்ணவாயுவால் சிறிது அபக்குவம் அடையவள்ளலார் கேட்கவினையால் விளைந்தது என்றனர்வள்ளலார், "இங்கேயும் வினையுண்டோ?" என்று முருகதாசர்க்குக் கூறிச் சந்நியாசிகளை வினைதாக்குமோ என்பதைக் குறித்துப் பிரசங்கஞ் செய்தார்.வள்ளலாரைக்குறித்து வினாப்பதிகமும் அனுபவப் பதிகமும்பாடி ஜீவகாருணிய மூர்த்தியாகிய முருகதாசர் தமது நூல்களில் பல விடத்தும் ஜீவகாருணியம் விளக்கவந்த வள்ளலாரைப் புகழ்ந்திருக்கின்றனர்(பிரபந்தத்திரட்டு - அ.திருநாவுக்கரசு பதிப்பு - பக்கம் - 129)

      நெடுங்குளம் என்ற ஊரில் ஒரு வீட்டில் உணவருந்திய பின், அந்த அம்மையார் கேட்ட "தருமம் என்பதன் உண்மையான வடிவம் யாது?", உயிர்கள் இறைவனிடம் பெறும் பயன்களுல் மேலானது எது?" என்ற வினாக்களுக்கு சுவாமிகள், "தன்னைப் போன்ற உயிர்களிடத்துப் பதில் உதவியை விரும்பாமல் உதவுவதே உயர்ந்த தர்மம்" என்றும் "மற்றொரு தாய் வயிற்றில் பிறவாமல் ஒன்றுபடும் பர முக்தியே தெய்வத்தால் பெறப்படும் பயனில் மேலானது" என்றும் விடை பகிர்ந்தார். தலப் பயணத்தின்போது புதுச்சேரி வேலாயுதம் பிள்ளை - திருமலையம்மை என்னும் இணையருக்கு மூன்றாவது மகளாகப் பிறந்த சுந்தரம்மை என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.


சுவாமிகள் நெல்லையில் இருந்தபோது அங்கே தவச்சாலை தொடங்க, இலங்கைக்குச் சென்று, கண்டி கதிர்காமம் போன்ற இடங்களில் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி பொருளீட்டினார். பழனிமலை அடிவாரத்தில் ஆவினன்குடியில் சரவண பொய்கைக்கு அண்மையில் சுவாமிகள் ஒரு மடம் அமைத்தார். சுவாமிகள் அங்கேயிருந்தபோது, கொங்குநாடு சரவணம்பட்டிக்கு வடக்கேயுள்ள சாமக்குளம் வெங்கடரமணதாசருடன் தொடர்பு ஏற்பட்டது. இன்னிசை சொற்பொழிவாளராக விளங்கிய சாமக்குளத்தாருக்கு சுவாமிகள் தாம் இயற்றிய "தியானாநூபூதி" நூலை வழங்கினார். வேங்கடரமணதாசரிடமிருந்து இதனைப் பெற்ற இராமானந்தர், அதனை ஊன்றி கற்ற பின், அப்பனுவை இயற்றிய தண்டபாணி சுவாமிகளை குருவாக கொள்ள வேண்டும் என்ற வேட்கையில், பழனியம்பதி சென்று, சுவாமிகளை சந்தித்து வணங்கி தனது விருப்பத்தை வெளியிட்டார். பக்குவமடைந்த இராமானந்தரின் தகுதிப்பாட்டை பார்த்த அளவிலேயே, தண்டபாணி சுவாமிகள், அவரது வலது செவியில் ஆறெழுத்து மந்திரத்தை உபதேசித்து தலையின் மீது வலது கரம் வைத்து ஆசி வழங்கி, கெளமாரத்தின் ஆறு பேதங்களையும் சமய சமர்த்தையும், சமயாதீதத்தையும், எல்லா சமயங்களும் கெளமாரத்திற்கு உடன்பாடே என்பதையும் விளக்கி, வாழையடி வாழையென கெளமார நெறியை பரப்புமாறு தண்டபாணி சுவாமிகள் தமது சீடரான இராமானந்தரை பணித்தார்.

      பல தலங்களுக்கு சென்ற பின், புதுச்சேரிக்கு அருகிலுள்ள மதுரப்பாக்கம் வந்த சுவாமிகள், அங்கிருந்து விழுப்புரத்திற்கு வடமேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ள திருவாமத்தூரில் தங்கினார். தற்காப்பிற்கு பசுக்களுக்கு கொம்பு வேண்டியபோது, "கவி பாடுவதை பின்னர் பார்க்கலாம்; அருளைப் பெறும் முயற்சியில் முதற் கண் ஈடுபடுக" என ஈசன் அருளினார். "உனதருளைப் பெறுகின்ற வரையிலும் இவ்வூர் எல்லையைத் தாண்ட மாட்டேன்" என்று ஆறெழுத்து மந்திரத்தை மனதில் செபிக்கத் தொடங்கினார். அப்பொழுது விழுப்புரத்திலே வட்டாச்சியராக பணியாற்றிய பணியாற்றிய சண்முகப் பிள்ளைக்கு வந்த கடுமையான வயிற்று வலியை சுவாமிகள் போக்கியதால் மனம் மகிழ்ந்த சண்முகம் பிள்ளை திருவாமத்தூரில் புறம்போக்கு நிலங்களை இனாமாக வழங்க ஏற்பாடு செய்தார்.

      அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பலருடைய ஒத்துழைப்பால் திருவாமத்தூரில் கெளமார மடாலயம் எழுப்பினார். விளம்பி ஆண்டு பிறந்தது. சுவாமிகள் ஐயாயிரம் பிரபந்தம் என்னும் நூலை இயற்றத் தொடங்கினார். பாடல் பாடுவதிலும் இறை வழிபாட்டிலும் கழித்த சுவாமிகளின் உடலில் சூடு மிகுந்து உடல் தளர்ந்தது. பல்லாயிரம் பாடல்கள் பாடி தொண்டு செய்த தண்டபாணி சுவாமிகள் விளம்பி ஆண்டு ஆனித் திங்கள் 23-ஆம் நாள் (1898-ஆம் ஆண்டு) செவ்வாய் கிழமை திருவோண நட்சத்திரத்தில் வீடுபேறடைந்தார். அப்போது சுவாமிகளுக்கு 59 வயதாகும். சரவணபுரம் கெளமார மடாலயத்தின் தலைவர் தவத்திரு இராமானந்த சுவாமி, தம் குருவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தண்டபாணி கடவுள் திருவுருவத்தினை பிரதிஷ்டை செய்தார். நாள் வழிபாடுகள் நடைபெறவும் ஏற்பாடு செய்தார். இவ்வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

      தேவார மூவர், அருணகிரிநாதருக்குப் பிறகு அதிகமான பதிகங்கள் பல பாடிய பெருமை தண்டபாணி சுவாமிகளுக்கு உண்டு. முருகப்பெருமான் விநாயகர், சிவன், அம்பிகை, திருமால், சூரியன் மற்றும் கிராம தெய்வங்கள் மீது சமயாதீத நிலையில் ஒரு லட்சம் பாடல்களுக்கும் மேல் கவி புனைந்துள்ள இவர், முருக பெருமான் மீது ஊடல் கொண்டு கடலிலும், தீயிலும் எறிந்தது போக, தற்போது உள்ளவை 49,722 பாடல்களே. இதில் பாதிக்கு மேல் அச்சில் வராமல் சுவடியிலேயே, கோவை சரவணம்பட்டி கவுமார மடாலயப் பாதுகாப்பில் உள்ளன.


தண்டபாணி சுவாமிகள் உபதேசிக்கும் கெளமாரம் என்னும் முருக வழிபாடு ஆழமான தத்துவச் செறிவுமிக்க ஒரு மெய்யியற் கோட்பாடு ஆகும். முருகன் முதலிய ஆறுசமய வடிவங்களும் ஒரே பரம்பொருளின் பல்வேறு பண்புகளை உருவகப்படுத்தும் கற்பணைகள் என்பதுவும், இவற்றுள் எதனை வழிபட்டாலும் அவ்வழிபாட்டை ஏற்றுப் பயன் தரும் பரம்பொருள் ஒன்றே என்பதுவும், அது தனக்கெனத் தனிப் பெயரோ, வடிவமோ இல்லாத ஒன்று என்பதுவும் இவருடைய அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும். உருவ வழிபாட்டோடு ஒரே தெய்வ உபாசனையில் உறுதியாக நின்றால் சமரசம், சமயாதீதம் ஆகிய மேல் நிலைகள் தாமே இயல்பாக அவன் மாட்டு வரும் என்பது இவரது கொள்கை.

தன்னால் வழிபடப்படுகின்ற தெய்வம்தான் உண்மையானதும், மேலானதும் ஆகும்; மற்ற தெய்வங்கள் யாவும் பொய்யானவை என கருதுவது சமய வாழ்க்கையின் பொதுவான தொடக்க நிலை. இதனை இளம் பக்குவம் என்பார். இந்த நிலையில் பக்தியோடு வழிபாடு ஆழம் காண காண அநுபவ முதிர்ச்சி ஏற்பட்டு, தன் வழிபாடு தெய்வம்தான் பிற சமய வழிபாடுகளையும் ஏற்று அருள் வழங்குகிறது என்ற எண்ணம் உண்டாகி, பிற சமயங்களையோ, தெய்வங்களையோ பழிக்காத தன்மை தோன்றும். இந்த நிலை சமரசம் எனப்படும். இவ்வாறு சமரச நிலையை அடைந்த ஒருவன், சமய வாழ்வில் அநுபவம் முதிர முதிரப் பரம்பொருள் ஒன்றே என்றும், அந்தப் பரமே தன் வழிபாட்டு தெய்வம் உள்ளிட்ட எல்லா வடிவங்களையும், பெயர்களையும் தாங்கி அருள் புரிகிறது என்றும் உணர்வான். இந்த நிலையே சமயாதீதம், சமயங்களை கடந்த நிலை ஆகும். இந்த நிலையிலிருந்து சொல்லும்போதுதான், எம்மதமும் சம்மதம் என்பது முழுமையான பொருள் பொதிந்ததாக அமையும்; சமரச சமயாதீத நிலைகளை அடையாமல் கூறப்படுகின்ற "ஒருவனே தேவன்" என்ற கூற்று பொருளற்ற வெற்றுக் கூப்பாடே என்கிறார் தண்டபாணி சுவாமிகள்.

                                  சிரவையாதீனம்,தவத்திரு குமரகுருபர சுவாமிகள்.

ஒருவன் மனைவியோடு சேர்ந்து நடத்தும் இல்லறமே நல்லறமாகும். கொடைக்குணம், இரக்கம், கல்வி, உறவுண்மை எனும் இவற்றைப் பெற்ற இல்லறத்தானின் புகழே நிலைத்து நிற்கும். பிறன் மனை நோக்காத பேராண்மை, முயற்சியுடைமை, நன்றியுடைமை, சினமின்மை இவற்றை பெற்று வாழ்வானின் புகழ் வானம் போன்று உயர்ந்தோங்கும். உணவளித்தலில் நல்லார் பொல்லார் என்று பாராது, கீழ்மக்களுக்கும் உணவு வழங்க வேண்டும்.
     
மனதை அடக்கி ஒழுகுதலே சீரிய துறவு. புறமாகிய செல்வத்தின் கண்ணும் அகமாகிய உடம்பின் கண்ணும் உள்ள பற்றை அறவே விடுவது துறவு. மனிதனின் புற உறுப்பினும், அக உறுப்பாகிய நெஞ்சம் தூய்மையதாய் இருப்பது நல்லது. பற்றில்லாத பரம்பொருளைப் பற்றுபவரே உலகியலை முழுவதுமாகத் துறக்க முடியும். நாய் போல் அலைதல், பெண்ணைப் பார்த்து உருகுதல், பேய்போல் பறத்தல், தளர்ச்சி கொள்ளுதல், சினமுண்டாதல் இவ்வியல்பு உடையோர்க்குத் துறவறம் கைகூடாது. இயன்ற வரை கொடுத்தல், புகழை நிலை நிறுத்துதல், முது நூல் அறியும் தன்மை, அன்பு செய்தல் எனும் பொதுமறை எல்லோருக்கும் உகந்த அறம்.
        
உறவு   முறையிலும்  ஒரே   சாதியிலும்   திருமணம்   செய்வது  தொன்றுதொட்டு
நிகழ்ந்து வரும் சமுதாயப் பழக்கம் கலப்பு திருமணம் நிகழுமாயின் சாதியை ஒழிப்பதற்கு உரிய வழியுண்டாகும். சாதையை உடைத்தெறியக் காதலானது களம் அமைத்து உதவுகின்றது என்று சுவாமிகள் உறுதியாக நம்பினர்.
                                                                          
திருமணங்களால்     சென்ற    நூற்றாண்டில்     மகளிர்    பெரும்     இளமைத்
துன்பங்களுக்கு ஆளாயினர். இளம் பருவத்திலேயே கணவனை இழந்து வறுமையில் வாடியும், பிறரால் துன்புறுத்தப்பட்டும் பெண்கள் அலைகழிக்கப்பட்டனர். தண்டபாணி சுவாமிகள் விதவைகள் மறுமணம் குறித்து துணிந்து பேசுவது அவர்தம் சமுதாய மறுமலர்ச்சி எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றது. கெளமார முறைமை என்ற நூலில் சுவாமிகள் கணவனை இழந்த பெண் காம வேட்கையால் கெட்டுப் போவதனை விடவும் மறுமணம் செய்து கொளலே நன்று என்பார். "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு" என்ற சூழ்நிலை அக்காலத்தில் நிலவியது. சுவாமிகள் தமிழ்ச் சமுதாயம் முன்னேற வேண்டுமானால் பெண்கள் கல்வி பெற வேண்டும்; சான்றோர்கள், அருளாளர்களின் நூல்களைக் கற்றுத் தேற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

தண்டபாணி சுவாமிகள் திருக்குறள் வலியுறுத்தும் அறங்களின் அடிப்படையில் உயிரிரக்கம் என்னும் கொல்லாமைக் கோட்பாட்டை வலியுறுத்துகிறார். நம் முன்னைய இறைநெறிச் சான்றோர்களின் எண்ணங்களைச் சுவாமிகள் உள்வாங்கிக் கொண்டு, அறுசமயக் கடவுளிடத்தும் கொல்லாமையையும், புலால் உண்ணாமையையும் உலகில் நிலைக்க வைக்க வேண்டுமென மனமுருகி வேண்டினர். வேதத்தின் கரும காண்டம் வேள்வியில் உயிர்ப் பலி இடுவதனை ஏற்றுக் கொள்கிறது. இதனை மறுத்துச் சுவாமிகள் கொல்லா நெறியை தம்முடைய நூல்கள் வாயிலாக மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசினார். ஆங்கிலேயர் வருகையினால் உயிர் கொலை புரிதலும், ஊன் உண்ணுதலும் நாட்டில் தங்குதடையின்றி பெருகின. இவற்றைக் கண்ட சுவாமிகள் மனம் நொந்து ஆங்கிலேயர் அந்தாதி வாயிலாகவும், ஏனைய நூல்கள் வாயிலாகவும் தம் உயிர்க் கொள்கையான கொல்லாமையுணர்வை வெளிப்படுத்தினார். மக்களின் அறியாமையைப் போக்கிப் பிற உயிர்க்குத் தீங்கு செய்தலும், புலால் அருந்தும் புன்மைச் செயலும் இறைவனுக்கு உகந்தவை அல்ல என்று மக்களிடம் கூறினார். இக்கொல்லாமைக் கோட்பாட்டைச் சுவாமிகள் தம் காலத்திலே பல இடங்களில் செயற்படுத்தி, ஆடு, மாடு பசுக்களைப் பலி இடுதலைத் தாமே நேரிற் சென்று தடுத்துள்ளார்.

சுவாமிகளின் பாடல்களில் சமுதாயத்திற்கும், தனிமனிதனுக்குமான ஆக்கபூர்வமான சிந்தனைகளே மிகுந்திருந்தன. கலை வாழ்க்கைக்காகவே என்று குரல் எழுப்புகிறார். மருத்துவம் போன்ற அறிவு நூல்களை நல்ல காவியங்களை எழுதிய பின்பே எழுத வேண்டும்; எடுத்த எடுப்பிலேயே எழுதினால் குற்றப்படும் என்கிறார். மனிதர்கள் குறிப்பாகக் கவிஞர்கள் காகங்கள் போல பகுத்துண்டு கூடி வாழ வேண்டுமேயன்றி, நாய்கள் போல் ஒன்றை ஒன்று வெறித்துப் பிரியக் கூடாது. தமிழ்ப் புலமையை வெளிகாட்ட காமச் சுவையை மிக விரித்தும், பச்சையாகவும், கொச்சையாகவும் பாடுவோரின் புலமையால் நாட்டுக்கோ, மொழிக்கோ ஆக்கபூர்வமான பயன் இல்லவேயில்லை என்கிறார். தமிழைத் தாழ்த்தும் ஒரு தெய்வம் உண்டெனில், அது தெய்வமே அல்ல, பேயை விடத் தாழ்ந்தது என்றும் தீர்ப்பளிக்கிறார்.

தண்டபாணி சுவாமிகள் ஒரு தீர்க்கதரிசியைப் போன்று ஆட்சியாளர்கள் பற்றிய சிந்தனைகளைக் கொண்டுள்ளார். ஆட்சியாளர்கள் கடவுளுக்குப் பயந்து நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நீதியாக நடக்க வேண்டும். நீதி வழுவாமல் வழக்கை முடித்து வைக்க வேண்டும். பெரியோரின் அறிவுரை கேட்டு நடத்தல் வேண்டும். ஆணவம் இன்றியும், நீதியுடனும் ஆட்சி புரிதல் வேண்டும். செம்மையாக ஆளுதல் வேண்டும். ஆட்சியாளர் குடிமக்களின் காட்சிக்கு எளியராய் இருத்தல் வேண்டும். குடிமக்களின் குறைகளை உடனுக்குடன் கவனித்துத் தீர்வு காண வேண்டும். நாட்டில் உண்மை நிலைபெறுதல், பருவ மழை அளவாகப் பெய்தல் அல்லது பொய்த்தல், தீய சக்திகள் ஓங்குதல் இவற்றிக்கு ஆட்சியாளரே பொறுப்பு என்கிறார். சுவாமிகள், குடிமக்கள் செய்கிற பாவங்களில் ஒரு சிறு பங்கு ஆட்சியாளருக்கு சேரும். தற்காலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக வெடித்து வரும் வன்முறை நல்லதை அழித்து விடலாம்; ஆனால் வன்முறை தானே அழியும் என்கிறார் சுவாமிகள்.

குடும்பமே ஒழுக்கத்தைக் கட்டிக் காக்கும் தலையாய சமுதாய நிறுவனமாகும். ஒவ்வொரு மனிதனின் பிறப்பு முதற்கொண்டு தேவைகள் எல்லாம் குடும்பத்தின் மூலமே நிறைவேற்றப்படும். எனவே, எந்தவொரு துன்பத்திற்கும் இடந்தராத இன்ப இருப்பு நிலையமாக குடும்பத்தை ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு தந்தை, தாய், குழந்தைகள், உடன் பிறந்தோர் போன்றோரின் உறவில், குடும்பம் வலிமை பெற்றதாக திகழ்தல் வேண்டும்; சுற்றம் காத்து உறவு முறையால் விரிய வேண்டும். மேலும் உறவாகா வேறு சமூக நபர்களையும் நட்பால் உறவு கொண்டு சமூக நலமும் பேணுவதாகக் குடும்ப நலம் விரிந்து தழைக்க வேண்டும் என்கிறார்.

தியானானுபூதி எனும் இவரது பாடல்களில் தியானத்தின் மேன்மையையும், அதன் மூலம் அடையும் பயன்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தியானம் என்பது மனித ஆன்மாவை ஒருநிலைப்படுத்தி இறைவனை எண்ணி தியானிப்பது. அநுபூதி என்பது அது கைவரப்பெறும் நிலையாகும். நினைத்தவுடன் அமர்ந்து இறைவனைப் பிரார்த்திப்பது தியானம் அல்ல. தியானம் என்ற சொல்லைப் பயன்படுத்தும்போதே அதற்கான பலன் இன்னதென்று அறிந்து அதன்படி நடத்தலே ஆகும். பக்தியில் சிறந்தவனாக இருந்தாலும், கல்வி கேள்விகளில் சிறப்புற்று இருப்பினும், தியானம் கற்க விரும்பின் குருவின் கீழ் நின்று படித்தல் வேண்டும் என்பது இவரது கூற்றாகும்.

தெய்வ சிந்தனையே தியானத்திற்கு வழியாகும். சித்தி, முத்தி எனும் இரு பேறும் அடைவதற்கு தெய்வச் சிந்தனை வேண்டும். ஒரு கடவுளின் திருவுருவத்தை மட்டும் மனக்கண் முன்னால் நிறுத்தி, எப்போதும் ஒரே முறையில் நினைத்து தியானிப்பதே மிகுந்த பலனைத் தரும். "தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் இறைவனிடத்தில் மிக தொடர்பு கொண்டு இறைவனோடு பேச முடியும். இவ்வாறு தொடர்பு கொண்டு இறைவன் தோன்றி மறையும்போது அது கண்டு செருக்கடைதல் கூடாது". எனும் கருத்தை ஆழமாகக் கூறுகிறார். தியானம் செய்வதற்கு மன வலிமை வேண்டும். எந்நிலையிலும் தியானத்தை கைவிடலாகாது என்றும் கூறுகிறார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.


                                                       நன்றி : www.vallalarr.blogspot.in.

          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும் ! ! !  


சனி, 17 அக்டோபர், 2015

பழனியில் பட்டணம் சுவாமிகளுக்கு குரு பூஜை !


மன்மத ஆண்டு புரட்டாசித் திங்கள்  ஆயில்யம் அன்று 7.10.2015 புதன்கிழமை பழநி மலையில் தெற்குப் பகுதியில் உள்ள பட்டிணம் மாரிமுத்து சுவாமிகள் திருச்சமாதியில் கோவை சிரவை ஆதினம் தவத்திரு. குமர குருபர சுவாமிகளும், தென்சேரிமலை ஆதினம் தவத்திரு முத்து சிவ ராமசாமி அடிகளார் அவர்களும் மிகச் சிறப்பாக குரு பூஜையை நடத்தினார்கள். பட்டிணம் மாரிமுத்து சுவாமிகள் சேலத்தில் உள்ள தளவாய்ப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்தவர். தனது பயணத்தின் இறுதியில் பழனியில் வந்து சமாதி ஆனார்கள். அவரது திருச்சமாதியின் மேல் மிகவும் அழகான நேர்த்தியான கண்களுக்குக் குளிர்ச்சியையும் அதீத அருளையும் தருகின்ற தண்டபாணிக் கடவுளின் திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. 

இந்த மடத்தை சிரவை ஆதினமாகிய கௌமார மடம் நிர்வகித்து வருகிறது. சிரவை ஆதினம் நான்காம் பட்டம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். இந்த பட்டிணம் சுவாமிகள் குரு பூஜையை திண்டுக்கல் மாவட்ட முருக பக்தர்கள் பேரவையும் அதை செயல்படுத்திவரும் திரு.ராஜேந்திரன் அவர்களும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். எனது குரு நாதர் அந்தியூர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஸ்ரீ ஜெகதீஸ்வர சுவாமிகளுடன் ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரம அடியவர்களான கோவை திருமுருக சுரேந்தர், அடியேன் சிவப்பிரகாஷ், கோவை ஆனந்தன், காங்கேயம் சிவசுப்ரமணியம் ஆகியோர் இந்த குரு பூஜைக்குச் சென்றிருந்தோம். சிரவை ஆதினம் தவத்திரு. குமர குருபர சுவாமிகளும், தென்சேரிமலை ஆதினம் தவத்திரு முத்து சிவ ராமசாமி அடிகளார் அவர்களும் மிகச் சிறப்பாக தண்டபாணிக் கடவுளுக்கு அபிஷேகம் செய்வித்து, ராஜ அலங்காரம் செய்து தீப ஆராதனைகளுடன் குரு பூஜையை நடத்தினார்கள். அதன் பின்பு பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவியர்களின் ஆன்மீகப் பேச்சுக்கள் மிக அருமையாக இருந்தன.
படம்:1. சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் பூஜை செய்தல்
பேசிய மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இரண்டு ஆதீன்ங்களும் மிகச் சிறப்பாக ஆசியுரை வழங்கினார்கள். தென்சேரிமலை சுவாமிகள் பேசும்போது மிகவும் நகைச்சிவையாகவும் அதீத கருத்துக்களையும் பேசினார்கள். இப்போதெல்லாம் காலம் மிகவும் குறுகிவிட்டது. இவர்கள் சேலத்திலிருந்து நாலரை மணிக்கு கிளம்பி வரும் வழியில் காங்கேயத்தில் சாப்பிட்டுவிட்டு 10 மணிக்கெல்லாம் இங்கு வந்துவிட்டார்கள். இங்கேயேகூட சாப்பிட்டு இருக்கலாம். சரி பரவாயில்லை. அபோதெல்லாம் இவ்வளவு போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம். எனினும் பட்டிணம் மாரிமுத்து சுவாமிகள் அவர்கள் நடந்தே பல இடங்கள் சென்று இறுதியாக இங்கு வந்து சமாதி ஆகி இருக்கிறார்கள். அரை நிமிஷ  நேர மட்டும் தவ முறை தியானம் வைக்க அறியாத என்கிறார் அருணகிரி நாத சுவாமிகள். மனிதர்கள் அந்த அரை நிமிஷ நேரம் கூட தியானம் வைக்கத் தெரியாமல், நேரம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறான். தொலை பேசி  போய் இன்று அலை பேசி வந்து விட்டது. அதற்கு அலை பேசி எனப் பெயர் இருப்பதாலேயோ   என்னவோ மனிதர்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மாணவி இங்கு பேசும்போது குறிப்பிட்டாள். ஓதாமல் ஒரு நாளும் இருக்க மாட்டோம், ஒருவரையும் பொலாங்கு சொல்ல மாட்டோம் என்பதுதான் அது. அதில் அந்த இரண்டாம் வரிதான் மிக மிக முக்கியம். ஆம் இன்று எங்கு பார்த்தாலும் ஒருவருக்கு ஒருவர் பொல்லாங்கு சொல்லுவதே அதிகமாகிவிட்ட்து.

படம் 2: இரண்டு ஆதினங்கள் மற்றும் ஸ்ரீஸ்கந்த உபாசகருடன் நாங்கள்

மனிதன் நிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறான். இந்த பழநி மலையைச் சுற்றிலும் ஏராளமான சித்தர்கள் சமாதி கொண்டிருக்கிறார்கள். தவத்திரு ராமானந்த சுவாமிகளுக்கு இந்த பழநியில்தான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் இருந்து உபதேசம் கிடைத்தது என்று மிகவும் அருமையாகப் பேசி தனது ஆசி உரையை நிறைவு செய்தார். 


அடுத்ததாக சிரவை ஆதினம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் தனது அருளாசி உரையை நிகழ்த்தினார்கள். கண்ணினால் நல்ல காட்சியைக் காண நாமெல்லாம் இங்கு வந்திருக்கிறோம். இந்த மண்ணிற்கு என ஒரு பெருமை இருக்கின்றது. போகர் உட்பட பல அருளாளர்கள் வாழ்ந்த இடம் இந்த பழநி மலை. இங்கு பேசிய மாணவ மாணவியர்கள் மிகவும் அருமையாகப் பேசினார்கள். புத்தகத்தில் இருப்பதை அப்படியே பேச வேண்டும் என்று அவசியமில்லை. இயல்பாகவே பேசலாம். இந்த இடத்தில்  நீங்கள் பேசிய இந்த செயல்களின் சிறப்பு இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் கழித்துத் தெரியும். அப்போது உங்களுக்கே மிகவும் பிரமிப்பாக இருக்கும். ஒரு நல்ல குழந்தையை பள்ளிக்கு அனுப்பினால் அந்த குழந்தை தனது கல்வியைப் பூர்த்தி செய்து கொண்டு வெளியே வரும்போது பொறாமை போன்ற கெட்ட உண்ர்ச்சிகளோடுதான் வெளியே வருகிறது. 



பேராசிரியர்கள்கூட இங்கு வந்திருக்கிறார்கள். பள்ளிகளில் நாம் போதிப்பது என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மனித்த் தன்மையை உருவாக்காத கல்வி எப்போதுமே நல்ல கல்வி ஆகாது. எனவே கல்வி முறைகளில் மாற்றம் வேண்டும். ஒருவரைப் பார்த்து ஒருவர் குறை சொல்வதும், பொறாமைப் படுவதும் இன்று அதிகரித்து விட்டது. ஒருவன் அவன் வீட்டில் கடவுளை நோக்கி பூஜை செய்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது பக்கத்து வீட்டுக்காரன் அவைனப் போலவே இன்னும் இரண்டு மடங்கு பூஜை செய்தான். கடவுள் அவனுக்கு காட்சி அளித்தார். வரம் கொடுத்தார். அடுத்து பக்கத்து வீட்டுக்காரனுக்கும் காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் கேள் என்றார். உடனே அவன் சுவாமி பக்கத்து வீட்டுக்காரன் என்ன வரம் கேட்டான் என்றான். கடவுள் அவனிடம் உனக்கு என்ன வரம் தருகிறேனோ அதுபோல் அவனுக்கு இரண்டு மடங்கு வரம் வேண்டும் என்று கேடட்தாகத் தெரிவித்தார். இவன் உடனேயே எனக்கு ஒரு கண் போக வேண்டும் என்று வரம் கேட்டான். (ஒரே சிரிப்பலை கூட்டத்தில்) பாருங்கள்... என்ன அர்த்தம் தனக்கு ஒரு கண் போனால் அவன் கடவுளிடம் பெற்ற வரத்தின்படி அவனுக்கு இரண்டு கண்ணும் போய்விடும் அல்லவா. இப்படியா கடவுளுக்குப் பூஜை செய்வது. சற்று எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று மிக அழகாகப் பேசி தனது ஆசியுரையை நிறைவு செய்தார். 


திண்டுக்கல் மாவட்ட முருக பக்தர்கள் பேரவைத் தலைவர் திரு.ராஜேந்திரன் அவர்கள் பேச்சுப் போட்டியில் பங்கு பெற்ற் மாணவர்களுக்குப் பரிசை அறிவிக்க இரண்டு ஆதீனங்களும் மற்ற முக்கியப் பிரமுகர்களும் பரிசை வழங்கினார்கள். சிரவை ஆதீனம் அவர்களின் அருளானைப்படி நமது குரு நாதர் அந்தியூர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஸ்ரீ ஜெகதீஸ்வர சுவாமிகளும் ஒரு மாணவிக்கு பரிசை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் முடிவில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. மிகச் சிறப்பான இந்த பட்டணம் மாரிமுத்து சுவாமிகளின் குரு பூஜை அந்த குருவருளையும், திருவருளையும் தந்தது எனலாம்.
படம் 3: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள் பரிசு வழங்குதல் அருகில் திரு.ராஜேந்திரன் அவர்கள்

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வெள்ளி, 16 அக்டோபர், 2015

ருத்ராட்சம் எந்த வகையில் மாறுபட்டது?






பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும், அதற்கென்று ஒரு அதிர்வு இருக்கிறது. சில குறிப்பிட்ட பொருட்களை, சில குறிப்பிட்ட நோக்கத்திற்காக நாம் பயன்படுத்துகிறோம். ருத்ராக்ஷம் மட்டும் இல்லாமல், செடிகள், பூக்கள், மிருகங்கள் என அனைத்தும் நம்மை ஆன்மிக பாதையில் அழைத்து செல்பவை, செல்லாதவை என பிரிக்க முடியும்.

 உதாரணமாக, ஒரு ஆடு – இது சரியான தேர்வு அல்ல. ஆனால் ஒரு காளை, பாம்பு அல்லது ஒரு மயில் சரியான தேர்வாக இருக்க முடியும். ஏனென்றால் இவை சிறிது நுட்பமானவை. ருத்ராக்ஷம் மட்டும் இல்லாமல், செடிகள், பூக்கள், மிருகங்கள் என அனைத்தும் நம்மை ஆன்மிக பாதையில் அழைத்து செல்பவை, செல்லாதவை என பிரிக்க முடியும். ஆன்மிகம் என்று கருதப்படும் அதிர்வுகளை நோக்கி இவை போன்ற ஜீவராசிகள் ஈர்க்கப்படுகின்றன. அதேபோல் புனிதத்தன்மை கொண்ட பல மலர்கள் இருக்கின்றன. ஒரு சில பூக்கள் சிவனுக்கு விருப்பமானது, ஒரு சில பூக்கள் விஷ்ணுவுக்கு விருப்பமானது என்று மக்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். இந்தப் பூக்களின் அதிர்வுகள் சிவா அல்லது விஷ்ணு என்று நாம் குறிப்பிடும் ஒன்றுக்கு நெருக்கமானவை என்று அடையாள படுத்தப்பட்டவை. இந்த பூக்களை தொட்டாலோ, பெற்றுக் கொண்டாலோ ஒரு தாக்கம் இருக்கும். எனவே குறிப்பிட்ட சில பூக்கள் மட்டுமே ஆலயங்களில் அர்ப்பணிக்கப் படுகின்றன. 

பல விதமான பூக்களின் மீது ருத்ராக்ஷத்தை பிடித்து இதை நிரூபணம் செய்யலாம். ருத்ராக்ஷம் நேர்மறையாக (பிரதக்ஷணமாக) சுற்றினால் அந்த பூ சிவனுக்கு அர்ப்பணிக்க உகந்தது. தாழம்பூவை வைத்து இது போல செய்தால், ருத்ராக்ஷத்திற்கு அந்த பூவை பிடிக்கவில்லை என்பதை பார்ப்பீர்கள். தாழம்பூ சிவனுக்கு முன் பொய் சாட்சி சொன்னதால், சிவனுக்கு அர்ப்பணிக்க தடை செய்யப்பட்டது என்று ஒரு கதை இருக்கிறது தெரியுமா? இந்த கதைகள் எல்லாம் மக்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டவை. ஆனால் இதன் சாரம் என்னவென்றால் அதிர்வுகள் ஒத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் இணைப்பு உறுதிப்படும். இது போல அனைத்தும் அதிர்வுகளால் அடையாளப் படுத்தப்பட்டன. 

ருத்ராக்ஷம் ஒரு தனித்தன்மையான அதிர்வு கொண்டது. வெறுமனே கையில் அதைப் பிடித்து இருந்தாலே வித்தியாசத்தை உணர முடியும். ஆனால் ருத்ராக்ஷத்தை 3 முதல் 6 மாதங்கள் நீங்கள் அணிந்திருந்தால் உங்கள் உடலோடு அது ஒரு வகையில் கலந்து போயிருக்கும். எனவே ஒவ்வொருவரின் ருத்ராக்ஷமும் வித்யாசமாக இருக்கும். அதனால்தான் உங்கள் ருத்ராக்ஷத்தை இன்னொருவரிடம் கொடுப்பதோ, மற்றவருடையதை நீங்கள் பெறுவதோ கூடாது. உங்களுக்கு உகந்த அதிர்வை அது பெற்றிருக்கும். உங்களுடைய ஏதோ ஒன்று அதில் இருக்கும். 

தமிழ்நாட்டில் மற்றவர் கைகளில் இருந்து உப்பு, எள், எண்ணெய் போன்றவற்றை வாங்கிக் கொள்ள மாட்டார்கள். இது ஏனென்றால், ஒரு சில பொருட்கள், அவை தொடும் எதையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை. குறிப்பாக எலுமிச்சம்பழங்கள் நேர்மறையான, எதிர்மறையான என்று எதையும் உறிஞ்சி விடும். அதனால்தான் ஆலயங்களிலும் அதை உபயோகிக்கிறார்கள். மாந்த்ரீகத்திலும் உபயோகப்படுத்துகிறார்கள். ருத்ராக்ஷதிற்க்கும் இந்த குணம் இருக்கிறது. ஒரு வகையில் உங்கள் உடலின் ஒரு அங்கமாக இது ஆகி விடுகிறது. ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் நீங்கள் 24 நேரமும் அதை அணிந்திருந்து விட்டு ஒரு நாள் அதை கழற்றி விட்டு தூங்க முயற்சி செய்தால் தூக்கம் வராது. உங்கள் உடலின் ஒரு பாகம் இல்லாமல் இருப்பது போல இருக்கும். ஏனென்றால் ருத்ராக்ஷம் உங்களின் பாகமாகி விடுகிறது. 

அதிகப்படியான ஒரு உறுப்பு போல செயல் புரிகிறது. இந்த உறுப்பின் முக்கிய நோக்கம் உங்களுக்கு அருள் கிட்டுமாறு செய்வது. ஏனென்றால் என்னதான் யோகப் பயிற்சிகள், மற்ற ஏதோ செய்தாலும் அருள் இருந்தால் மட்டுமே நீங்கள் ஒரு சாத்தியமாக மலர முடியும். அதனால்தான் பக்தர்கள் விரைவில் முக்தி அடைந்து விடுகிறார்கள். அவர்கள் தங்களையே அர்ப்பணிக்கிறார்கள். அந்த அர்ப்பணிப்பு உணர்வு வரவில்லை என்றால் யோகா வெறும் சர்கஸ் ஆகிவிடும். 

ருத்ராக்ஷம் பற்றிய இன்னொரு விஷயம் அது ஆரோக்கியம் உருவாக்குகிறது. அதிக நாள் வாழ விரும்புபவர்களுக்கு இது ஒரு முக்கியமான அம்சம். எப்படி வாழ்கிறோம் என்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை, அதிக நாள் வாழ்வதில்தான் விருப்பம். எதற்காக? அவர்களின் சந்தோஷ கருவியை அளந்து பார்த்தல் அது எந்த உயரத்தையும் எட்டி இருக்கப் போவதில்லை. சாவை கண்டு பயம் இருப்பதாலேயே அவர்கள் அதிக நாள் வாழ ஆசைப்படுகிறார்கள். வாழ்வை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதால் குறிப்பிடும்படி எதுவும் அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்து விடப் போவதில்லை. அடுத்தது என்ன என்பது அவர்களுக்கு தெரியாத ஒன்று என்பதால் இதை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வாழ்வில் எது செய்தாலும் – ஆன்மிகம், ஆரோக்கியம், செல்வம், அல்லது அது வேறு எந்த தளமாக இருந்தாலும், அருள் உங்களுக்கு கிடைக்காவிட்டால் வெற்றி உங்களுக்கு வாய்க்காது. விழிப்புணர்வாகவோ, விழிப்புணர்வு இல்லாமலோ நீங்கள் அருள் கிடைக்கும் வண்ணம் இருக்க வேண்டும். 

சிறிது அளவாவது அருள் இல்லாமல் ஒரு ஜீவராசியும் உயிரோடு இருக்க முடியாது. ஆனால் விழிப்புணர்வோடு அருளை உங்கள் வாழ்வின் ஒரு பாகமாக ஆக்கி விட்டால் அனைத்தும் எளிதாக, இயல்பாக நடக்கும். வாழ்க்கை உராய்வுகள் இல்லாத ஒன்றாக இருக்கும். ருத்ராக்ஷம் இந்த சாத்தியத்தை மேம்படுத்துகிறது. 

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் (சிறு பொய்யும் வாழ்நாள் தண்டனையும் !







*
19ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமானமில்லாத குருநாதர் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள். மயிலேறும் ஷண்முகக் கடவுளைப் போற்றுவதைத் தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்த அருளாளர். சுவாமிகளின் அவதாரக் காலத்தில் நடந்தேறிய முக்கிய நிகழ்வு ஒன்றினை இனிக் காண்போம்.
*
எந்தவொரு செயலைத் தொடங்குமுன்பும் ஆறுமுகப் பெருமானின் திருமுன்பு (பூக்கள் மூலம்) உத்தரவு கேட்கும் மரபு சுவாமிகளின் இல்லத்தில் இருந்து வந்தது. சுவாமிகளுக்கு அப்பொழுது இளம் பிராயம்; பழனி தலம் சென்று சிவபாலனைத் தரிசிக்க பெருவிருப்பம் கொண்டார். மறுநாள் காலை பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்தார்.
*
அது பற்றி அன்பர் ஒருவரிடம் கூறிக் கொண்டிருந்தார். அவ்வன்பரும் 'பழனி தலம் செல்ல முருகக் கடவுளிடம் உத்தரவு வாங்கி விட்டாயா?' என்று வினவினார். தண்டபாணிக் கடவுளைத் தரிசிக்கும் பெரும் காதலால் சுவாமிகள் 'ஆம்' என்று ஒரு பொய் உரைத்தார். பின்னர் அன்று மாலை சுவாமிகள் வழக்கம் போல் மாடியில் அனுஷ்டானம் புரிந்து கொண்டிருந்தார்.
*
அச்சமயம் அங்கு ஒரு கொடிய உருவம் தோன்றியது. 'பழனி செல்ல உத்தரவு ஆகிவிட்டது என்று பொய் உரைத்தாயே?' என்று மிகக் கடுமையான தொனியில் மிரட்டியது. சுவாமிகள் உடலும் உள்ளமும் தளர்ந்த நிலையில் மிகவும் அஞ்சி கண்களை மூடிக் கொண்டு வேலேந்தும் வேலவனிடம் உளமாற மன்னிப்பு வேண்டினார்.
*
அவ்வடிவம் 'இனி வேலவனின் உத்தரவு கிடைக்கும் வரை பழனி செல்வதில்லை என்று உறுதி கூறு' என்று உரத்த குரலில் அதட்ட சுவாமிகளும் 'ஆம். இனி உத்தரவு கிடைக்கும் வரையில் பழனி வருவதில்லை' என்று உறுதி அளித்தார். அவ்வுருவம் அக்கணமே அங்கிருந்து மறைந்து விட்டது.
*
அது முதல் அனுதினமும் வள்ளி மணாளனிடம் தன்னை பழனிக்கு அழைக்குமாறு சுவாமிகள் மன்றாடுவார்; கண்ணீர் பெருக்குவார். பின்னாளில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 'பிரப்பன் வலசை' எனும் தலத்தில் குகக் கடவுளின் தரிசனத்தை நேரடியாகவே பெற்றார் சுவாமிகள். எனினும் இறுதி வரையில் பழனி தரிசனம் மட்டும் சுவாமிகளுக்குக் கிட்டவில்லை.
*
நாம் புரியும் தவறுகளுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைப்பதன் மூலம் இறைவனின் அருட் பார்வை நம் மீது பதிந்துள்ளது என்பதை உணர முடியும். தன்னைப் பூரணமாக ஒப்புவிக்கும் அடியவரின் முக்திப் பாதைக்கு இறைவன் பொறுப்பேற்கிறான். சிறு தவறுகள் நம் மூலம் நேரினும் அக்கணமே தண்டித்து அக்கர்மத்தில் இருந்து நம்மை விடுவித்தும் அருள்கிறான்.
*
ஆத்ம ஞானம் கைவரப் பெற்ற பரம ஞானியான ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளுக்கே (ஒரு சிறு பொய்க்கு) இத்தகு தண்டனை கிட்டும் என்றால் நம் நிலையை எண்ணிப் பார்த்துத் தெளிதல் வேண்டும். சத்திய உபாசனையே இறைவனை அடைவிக்கும் மார்க்கம். பரம ஞானியான பாம்பன் சுவாமிகளின் திருவடிகளைப் போற்றிப் பணிவோம். கௌமாரனின் திருவருளைப் பெறுவோம்.
*
(திருப்பழனி - பாம்பன் சுவாமிகள் அருளிய அற்புதப் பாடல்):
சூடேன்! நின்னடியை அன்றித் துதித்து நானெதையும்
பாடேன்! எம்மானே பரமார்த்த சன்யாசீ!
வாடா விண்மலரே! எனை வாவென்றே அழையாய்
சேடார் தென்பழனித் திருக்கோயில் உள்ளாயே!!

சனி, 10 அக்டோபர், 2015

ஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள் ! ! !


   

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான
மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள்
கூறி இருப்பதையும் அந்த உன்னத
மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித்
துதிப்பதையும் நன்கு அறிவோம் ; இந்த
நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம்
அது என்று புதிய ஒரு ஆய்வின்
முடிவில் ஆராய்ச்சியாளர்கள்
சொல்லும்போது நமது வியப்பின்
எல்லைக்கு அளவில்லை ;
அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ்
ஆப் என் ஜினியரிங்க்
அண்டு டெக்னாலஜியில்
பேராசியராகப் பணியாற்றும் அஜய்
அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின்
முதல்வர் சித்தார்த் லடாகேயுடன்
இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில்
இறங்கினார்.
இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக்
காரணம் நாளுக்கு நாள் வணிகம்
செய்வோர்,தொழிற்சாலை
அலுவலகங்களில் பணிபுரிவோர்
உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும்
தாங்கமுடியாத மன அழுத்தமும்
அதனால் ஏற்படும் வேதனைகளும்
அவர்களைப் படுத்தும் பாடும்தான்!
உளவியல் ரீதியிலான மன
அழுத்தத்திற்கு மருந்து எது என்று
ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர
உச்சரிப்புதான் அதற்கான
மாமருந்து என்று சோதனை
மூலமாகக் கண்டுபிடித்தனர்.
ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய
உத்வேகம் உடலில் ஏற்படுவதையும்
பிரக்ஞை தூண்டப் படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த
மந்திர ஒலியால் மீறப்படுவதையும்
அவர்கள்
உறுதிப்படுத்துகின்றனர். இதைக்
கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட்
ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம்
ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்
(Wavelet Transforms, Time- frequency Analaysis)
ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.
ஓம் என
உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில்
மாறுதல்கள் ஏற்படுவதையும்,
மூளையில் ஒலியினால் மின்செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும்,
அவர்கள் நவீன சாதனங்கள் மூலம்
குறித்துக் கொள்ள
முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் "ஓம்" என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும், பின்னரும், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க
முடிந்தது.
மந்திர ஒலிகள் மனிதர்களின்
நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன
என்கிறார்கள்.
ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற
முப்பெரும் தொழில்களை, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோர்
செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் "ஓம்" மந்திரத்தில் உள்ள அகார, உகார, மகாரங்கள் “ பிரம்மா, விஷ்ணு, ருத்ரனை” க் குறிப்பதையும்,
அனைவரும் அறிவர்.
"ஓம்" என நாம் ஒலிக்கும்போது, பிரபஞ்ச ஆற்றல்கள், நேரடியாக அதிர்வுகள் மூலமாக, நமது உடலில் நுழைகின்றன. வாயின் பின்புறம்
உதிக்கும் “அ” சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது.
வாயின் நடுவில் பிறக்கும் “உ ” மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம”
தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும், ஒரு குறிப்பிட்ட ஆற்றலை, உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை, ஏற்படுத்துகிறது. ஓம்
முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.
ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு, ஏன் ஈடுபாடு வந்தது, என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த, ஒரு சம்பவமே காரணம் ஆகும்.
29.5.1999 அன்று தொலைபேசியில்
பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென
அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது. மூளையில் ரத்தம் கட்டி விட்டதால், நினைவையும் இழந்து, அவர் பக்கவாதத்தால்
பாதிக்கப்பட்டார். அடுத்த நாள், அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது.
ஆனால், இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்து விட்டது. அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக் காரணம். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,
மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என
தெரிவித்தனர். இப்படிப்பட்ட நிலையைப்
போக்குவதற்கான சிறந்த சொல்
எது என்று ஆராயப் போக, அவர் "ஓம்" ஆராய்ச்சியில் இறங்கி,
"ஓம்" மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார். மந்திரத்தின்
ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல்
ப்ராஸஸிங் உத்திகளை அவர்
பயன்படுத்தினார்.
"ஓம்" பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:
தகாஷி எடல் என்பவர் 1999 இல்
மேற்கொண்ட ஆய்வில் குறைந்த
அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில்
மார்பு மற்றும் அடிவயிற்றுப்
பகுதிகளில்
மாற்றங்களை ஏற்படுத்துகிறது
என்பதைக் கண்டறிந்தார்.
இதை அடுத்து
2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல்
ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு “ஓ” என்று ஆரம்பித்து “ம்” என்று முடிக்கும் போது உடலில்
ஏற்படும் மாறுதல்களைத்
தொகுத்தார். இந்த உச்சரிப்பு மனிதனின்
நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.
ஏழு சக்கரங்களிலும் அதிர்வு இதையெல்லாம்
முன்னோடி ஆராய்ச்சியாக்
கொண்டு,
அனில் குர்ஜர்
25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட
ஒரு குழுவிடம் ஆறுவருட காலம்
தனது ஆராய்ச்சியை நடத்தினார்.
அமைதியான ஒரு அறையில் 44.1
ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட்
அமைப்பில் ஒரு மைக்ரோபோன்
மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச்
செய்து, ஆய்வுகள் தொடரப்பட்டன.
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன்
மூளையிலும் நரம்பு மண்டலத்திலும்
ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக
ஆராயப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில்,
1. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன
அழுத்தம் குறைகிறது.
2. எதன் மீதும் செய்யப்படும்
கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3. ஏழு உச்சநிலைகளைக் கொண்ட "ஓம்" உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய
குறிப்பிடத்தக்க
மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.
மூலாதாரத்தில் 256
ஹெர்ட்ஸீம் ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸீம் மணிபூரத்தில் 320
ஹெர்ட்ஸீம் அனாகதத்தில் (இதயம்) 341.3
ஹெர்ட்ஸீம், விசுத்தாவில் (தொண்டை )
384 ஹெர்ட்ஸீம் , ஆக்ஞாவில் (மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம், சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம்
அளக்கப்பட்டு, உடலின் ஏழு சக்கரங்களும்
புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு
நிரூபித்தது.
ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும்
"ஓம்".
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது
மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது
உடலின் தன்மை சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை, அனைத்தும், ஒலியால் பாதிக்கப் படுவதால், ஓம் உருவாக்கும் நல்ல ஒலி, நன்மையைத் தருகிறது. இது வேகஸ் நரம்பு மூலமாக, உள் காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறுகுடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 33 !


கோயம்புத்தூரில் இருக்கின்ற மிகச்சிறப்பான ஆலயம் பேரூர் பச்சை நாயகி உடனமர் பட்டீஸ்வரர் கோவில். நான் கோவையில் 2003ம் ஆண்டு முதல் 2007 ம் ஆண்டு வரை தங்கி இருந்தேன். அப்போதெல்லாம் என்னை மிகவும் கவரும் சிவாலயம் இது. செவ்வாய்க்கிழமை தோறும் தவறாமல் இந்த பேரூர் பட்டீசனைக் காணச் சென்று விடுவேன். அதன் பின்னர் இடமாற்றம் காரணமாக சேலம் வந்தாகிவிட்டது. இருந்தாலும் கோவை செல்லும் வாய்ப்பு கிடைத்தால் பேரூர் செல்வது வழக்கம். காரணம் என்ன என்று எனக்கு அப்போது தெரியவில்லை. சேலம் வந்த பின்பு சுமார் 5 வருடங்களாக பேரூர் செல்லவே இல்லை. பணிச்சுமையும், சரியான நேரம் கிட்டாமையுமே காரணமே அன்றி வேறில்லை.  நமக்கு இறைவனைப் பிடிப்பது முக்கியமல்ல இறைவனுக்கு நம்மைப் பிடிக்க வேண்டும் அதுதான் முக்கியம். அந்த வகையில் பேரூர் பட்டீசனுக்கும் என்னைப் பிடித்திருக்கும் போலும். ஏனப்பா என்னை வந்து பார்க்கவில்லை. வந்து பார் என்று உரைக்கும் வாய்ப்பை அந்த இறைவன் மீனாட்சி நாடி மூலம் மீனாட்சி அன்னை மூலம் குரு நாதர் ஜோதி அக்பர் சுவாமிகள் திருவாக்கின் மூலம் உரைத்தார். ஆம் திருவண்ணாமலை மீனாட்சி நாடியில் எனக்குப் பின்வருமாறு வந்தது.

”வகையருளும் முறையாகி
பேரூர் பட்டீசனைக் கண்டு வா
பின்பு ஆதீனக் குரு நாதன் உண்டு
பிரியமுடன் ஆசியதை வாங்கி வா
நீண்ட தொரு இடைவேளை ஏனடா
வந்து பார் என்றார் ஈசன்”
                              -மீனாட்சி நாடி

ஆச்சரியம் தாங்கவில்லை. அழுகையும் செய்த தவறுக்கு குற்ற உணர்ச்சியும் வந்தது. இருந்தாலும் பட்டீசனையும் பச்சை வண்ண நாயகியையும் நினைத்து நினைத்து கண்ணீர் மல்கினேன். இறைவனே வந்து உன்னைப் பார்க்க உனதாசி வேண்டும் என்று மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டேன்.பேரூரைப் பற்றி சற்று சொல்லியே ஆக வேண்டும் என்பதால் இங்கு அதன் வரலாற்றைச் சற்று சுருக்கமாகவே சொல்கிறேன்.

பிரம்மனைப்போல படைப்புத் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என விரும்பிய காமதேனு, சிவனை நோக்கி கடும் தவம் இருந்தது. இத்தலத்தில் புற்று வடிவில் இருந்த சிவலிங்கத்தின் மீது தினமும் பால் சொரிந்து வழிபட்டது. காமதேனுவின் கன்றான "பட்டி' விளையாட்டாக தன் காலால் புற்றை உடைத்து விட்டது.பதறிப் போன காமதேனு இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. காமதேனுவின் முன் தோன்றிய இறைவன் "உனது கன்றின் குளம்படி தழும்பை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். இது முக்தி தருவதில் முதன்மை தலமாதலால், நீ வேண்டும் படைப்பு வரத்தை திருக்கருகாவூரில் தருகிறேன். அங்கு சென்று தவம் செய். உனது நினைவாக இத்தலம் "காமதேனுபுரம்' என்றும், உன் கன்றின் பெயரால் "பட்டிபுரி' என்றும், எனக்கு "பட்டீஸ்வரர்' என்றும் பெயர் வழங்கப்படும்,''என அருளினார். சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். சன்னதி விமானத்தில் எட்டு திசை காவலர்களின் உருவங்கள் அமைந்துள்ளன. அம்மன் பச்சைநாயகி சன்னதி விமானம் சதுரமாக அமைந்துள்ளது. 



மற்றொரு அம்பிகையான மனோன்மணிக்கும் சன்னதி இருக்கிறது. சோமாஸ்கந்த வடிவில், சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் அருள்பாலிக்கிறார்.முக்தி தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் இங்கு அருள் செய்கிறார். அம்மன் சன்னதிக்கு வெளியே வரதராஜப் பெருமாளும், பிரகாரத்தில் மரத்தில் உருவான பெரிய ஆஞ்சநேயரும் அருளுகின்றனர். நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம். கோயிலின் முன்பு "பிறவாப்புளி' என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். இங்குள்ள பனைமரம் "இறவாப்பனை' எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள். நொய்யல் நதிக்கரையில் உள்ள பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பதும், இறந்தவர்களின் எலும்புகள் இந்நதியில் போட்டால் சில நாட்களில் அவை வெண்கற்களாக மாறி விடும் என்பதும் ஐதீகம். இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் "நமசிவாய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர் என்பதும், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது என்பதும் சிறப்பம்சங்கள். சிவாலயங்களில் ஆடும் நிலை யில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும். ஆனால், ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை இக்கோயிலில் காணலாம்.



இங்கு நடராஜரின் முகத்தில் குறும்பு பார்வை தெரிகிறது. மேடான கதுப்பு கன்னங்களும், பின்புறத்தில் தாழ் சடையும், ஆடி முடியப்போகும் நிலையில் கால்களும் தரையை நோக்கி மிகவும் தாழ்ந்துள்ளன. இங்குள்ள கனகசபையில் தான் பிரம்மா, விஷ்ணு, காளி, சுந்தரர் ஆகியோருக்கு நடராஜர் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்துள்ளார். சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாககொண்டாடப்படுவதால் இத்தலம் "மேலைச்சிதம்பரம்' என அழைக்கப்படுகிறது.இது எல்லாம் தெரியாத காலத்திலேயே நான் அடிக்கடி அங்கு சென்றது எனது பூர்வ புண்ணியமும் அந்த ஞானஸ்கந்தப் பெருமானின் அருளுமே ஆகும். ஒரு நாள் அன்னை மீனாட்சி உரைத்தபடி பேரூர் செல்லலாம் என்று முடிவு செய்து புறப்பட்டேன். நம்து ஞானஸ்கந்தாஸ்ரமத்திற்கு கோவை நகரில் ஒரு சிறந்த சேவகராக இருந்து வருகின்றவரும் என்னிடம் தீட்சை பெற்று முருக உபாசனை செய்து வருபவருமான திருமுருக சுரேந்திரமான அடியவர் குருஜீ வாருங்கள் எனது காரிலேயெ பேரூர் சென்று வரலாம் என்று சொல்லி என்னை அவரது காரில் ஏற்றிக் கொண்டு பீளமேடு பகுதியில் இருந்து பயணித்து பேரூரை அடைந்தோம். 



உள்ளம் பூரித்தது, உடல் சிலிர்த்தது. பேரூரா பட்டீசா எனும் நாமங்கள் என்னை அறியாமலேயெ எழுந்தன. வழக்கமாக நான் முன்பெல்லாம் செல்லும் போது என்னுடன் படிக்கும் நண்பர்கள் சிலரும் வருவார்கள். வேறு யாரையும் கோவிலுக்குள் தெரியாது அந்த பட்டீசனைத் தவிர. ஆனால் முருகப் பெருமான் ஒரு ஆச்சரியத்தை அங்கு வைத்திருந்தார். ஆம் கருவறை முன்பு நின்று இறைவனைத் தரிசனம் செய்த நொடி கூட இல்லை. சுவாமி என்றது ஒரு குரல். திரும்ப்பிப் பார்த்தேன். கோவில் பிரதான அர்ச்சகர் வயதில் மூத்தவர் பெரியவர் தில்லை ஆடும் ஐயன் நடராஜரின்  நாமம் படைத்தவர். 



சுவாமி சொல்லுங்கள் என்றேன். நீங்கள் ஜீவ நாடி படிப்பவர் முருக உபாசகர் தானே என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆம் என்றேன். உங்களப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். உங்கள் கட்டுரைகளையும் திருவருள் சக்தியில் படித்து வருகிறேன் என்றார். சரி வாருங்கள் என்று எனது பெயருக்கு அர்ச்சனை செய்து கண்களை மூடி பிரார்த்தனை செய்து உடனே நீங்கள் ஒரு ஆஸ்ரமம் கட்ட வேண்டுமாம் இந்தா பிடி ஒரு ரூபாய் என்று சொல்லி சிவ பெருமான் உங்களிடம் கொடுக்கச் சொல்கிறார் இதை மூலதனமாக்கி ஆஸ்ரமத்தை அபிவிருத்தி செய்யச் சொல் என்கிறார் என்று சொல்லி கொஞ்சம் விலவமும் சிவ பெருமானின் நெற்றிக் காணிக்கையையும் சந்தனத்தோடு சேர்த்துக் கொடுத்தார்.. கடவுளே என்ன விளையாட்டு என்று பிரகாரம் சுற்றி வந்தோம். எங்கள் பின்னாலேயே அவரும் தீபாராதனைத் தட்டோடு வந்திருக்கிறார் எனக்குத் தெரிய வில்லை. சுவாமி என்றேன் அது என்னமோ தெரியவில்லை உங்களிடம் இருக்கும் ஒரு வித சக்தி என்னை இழுக்கிறது என்றார். இத்தனை திருவிளையாடலும் ஒரு நொடிக்குள் நடந்து முடிந்தது. பின்பு தரிசனம் முடித்து வெளியில் வந்தோம். இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது. அப்போது நமது ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் ஒரு சிறிய அருள் வாக்கு மேடையாகவே இருந்தது. ஆனால் இப்போது ஒரு பெரிய அளவில் வளர்ந்து வருகிறது என்றால் அந்த பட்டீசன் போட்ட முதல் பிச்சை என்பதை இன்றும் உணர்கிறேன்.


தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் அவர்கள்

சரி இறைவனத் தரிசனம் செய்து விட்டோம். பேரூர் ஆதினம் அவர்களைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று எண்ணி பேரூர் மட்த்திற்குச் சென்றோம். அங்கு பெரிய ஆதீனம் தவத்திரு. சாந்த லிங்க ராமசாமி அடிகளார் இல்லை. இளைய பட்டம் தவத்திரு. மருதால அடிகளார் அவர்கள் இருந்தார்கள். அவரிடமும் ஆசி வாங்கி பின்பு பெரிய ஆதீனம் அவர்களை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று சின்ன சுவாமிகளிடம் தெரிவித்தோம். அதற்கு அவர் பெரிய சுவாமிகள் வெள்ளிங்கிரி மலைச்சாரலில் தங்கி இருக்கிறார் அங்கு செல்லுங்கள் என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்கள். அடுத்து கார் வெள்ளியங்கிரி மலைச்சாரல் நோக்கிப் பயணித்தது. அதற்கு முன் சிவ பெருமானும் ஞானஸ்கந்த மூர்த்தியும் ஒரு திருவிளையாடல் நடத்தினார்கள்.



சிவ வேடம் பூண்ட அடியவர் ஒருவர் சாந்தலிங்கர் கோவிலில் அமர்ந்து சிவ பஞ்சாட்சரத்தை உரக்க ஜபித்துக் கொண்டிருந்தார். எங்கிருந்து இந்த சிவ மந்திரம் கேட்கிறது என்று திரு மடத்திற்குள் சென்று பார்க்க வியப்பாக ஒரு சிவ யோகி அவ்வளவு தேஜஸ் முகத்தில் ஒளி வீச அமர்ந்து கொண்டு இருந்தார். உடனே அவர் முன்பு சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி விடை பெறலாம் என்று எண்ணும் போது எனது அருகில் இருந்த எனது சீடன் திருமுருக விஜயகுமார் அடியவரை அழைத்து அவர் எந்த ஊர் என்று கேள் என்றேன் அப்படியே அவர் கேட்க சுவாமிகள் புன்னகைத்து காசி என்று மட்டும் பதில் அளித்து விட்டு அங்கிருந்து எழுந்து விடு விடு என வேகமாகச் சென்று விட்டார். அப்படி அவர் செல்லும் போது திடீரெனெ என் மீது ஒரு பார்வை பார்த்து புன்னகை செய்து பின் வேகமாகக் கிளம்பி விட்டார். அப்போது அதன் அர்த்தம் தெரியவில்லை. ஆனால் அதன் சூட்சுமம் பின்னர் புரிந்தது. அதைப் பற்றி பின்பு சொல்கிறேன். சரி எதோ இது இறைவனின் திருவிளையாடல் என்று எண்ணி அடுத்து தவத்திரு. சாந்த லிங்க ராமசாமி அடிகளாராகிய பெரிய சந்நிதானங்களைப் பார்த்து ஆசி வாங்க ஆயத்தமானோம். மிகுந்த ஆவலோடு வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை அடைந்தோம். 



மிக ரம்மியமான மலைச்சாரலில் அழகான மண்டபத்தில் உற்சவர் விக்கிரகம் வீற்றிருப்பது போல் பெரிய சுவாமிகள் வீற்ரிருந்தார்கள். கையில் கொண்டு சென்ற பூ, பழங்களைக் கொடுத்து ஆசி வாங்கினோம். அமருங்கள் என்று எங்களுக்கு நாற்காலி கொடுத்து அமர வைத்தார். சிறிது நேரம் மௌனம். கண்களை மூடிக்கொண்டே சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியும், படுத்த படியுமே இருந்தார். திடீரென எனது முகத்தையே உற்றுப் பார்த்தார். மீண்டும் கண்களை மூடினார். சொல்லுங்கள் என்றார். சுவாமி நான் ஒரு முருகன் உபாசகன் என ஆரம்பித்து, ஜீவ நாடி பற்றியும் இளமை காலம் தொட்டு முருகன் என் மூலம் நட்த்திய திருவிளையாடல்கள் பற்றியும் ஒரு நீண்ட விளக்கமே கொடுத்தேன். அதே போல் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மீனாட்சி நாடியில் உங்களிடம் நான் ஆசி பெற வேண்டும் என்ற குறிப்பு உள்ளதைப் பற்றித் தெரிவித்து அதன் காரணமாகவே தங்களைப் பார்க்க வந்திருக்கிறோம் என்று சொன்னேன். பத்திரிகைப் பணி, கல்லூரிப் பணி பற்றியும் மிக ஆர்வமாக விசாரித்தார். கேட்டுக் கொண்டே இருந்தவர் திடீரென பலத்த சத்தத்துடன் என் முகத்தைப் பார்த்து சிரித்தார். 



அதுவரை சாதாரணமாக இருந்த எனக்கு திடீரென கண்கள் கட்டிக் கொண்டு ஒரு வித மயக்க நிலை ஏற்பட்டது. பின்பு முருகனுக்கு நீங்கள் செய்யும் பூஜை முறைகள் என்ன என்பதைப் பற்றிக் கேட்டார். சொன்னேன். முருகன் விளையாடுகிறாரப்பா, சிரிக்கிறாரப்பா, உனக்குள் உட்கார்ந்து இருக்கிறாரப்பா என்று சொல்லி திரு முருகாற்றுப் படை பற்றி ஒரு நீண்ட விளக்கமே கொடுத்தார். வயது ஆகின்ற காரணத்தால் வெள்ளியங்கிரி கைலாயத்திடமே அடைக்கலம் ஆகி இருப்பதாகவும் கூறி அங்கு தெரிகின்ற கைலாயக் காட்சியை எங்களுக்குக் காண்பித்தார்.சுவாமி தாங்கள் ஒரு முறை எங்களது ஆலயம் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க இப்போது எங்குமே செல்வதில்லை என்றும் என்னைக் கைகாட்டி பெரிய அளவில் வளர்ச்சி வரும் என்றும் தமிழ் முறைப்படி பூஜை செய்து வா என்றும் உபதேசம் செய்தார். சரி சரி சாப்பாட்டு  நேரம் ஆகிறது வாங்க சாப்பிடலாம் என்று சொல்லி சுடச் சுட உணவு பரிமாறி அமிர்தம் போல் மோர் கொடுத்து சில நூல்களையும் கொடுத்து எங்களை அனுப்பி வைத்தார். எனது வாழ் நாளில் மறக்க முடியாத மற்றும் மறக்கக் கூடாத சம்பவமாக இது அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.

மீனாட்சி நாடி உரைத்தபடியே செய்து முடிக்கும் போது இன்னும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அது என்ன?

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

(தொடரும்...)