மன்மத ஆண்டு புரட்டாசித் திங்கள் ஆயில்யம் அன்று 7.10.2015 புதன்கிழமை பழநி மலையில் தெற்குப் பகுதியில் உள்ள பட்டிணம் மாரிமுத்து சுவாமிகள் திருச்சமாதியில் கோவை சிரவை ஆதினம் தவத்திரு. குமர குருபர சுவாமிகளும், தென்சேரிமலை ஆதினம் தவத்திரு முத்து சிவ ராமசாமி அடிகளார் அவர்களும் மிகச் சிறப்பாக குரு பூஜையை நடத்தினார்கள். பட்டிணம் மாரிமுத்து சுவாமிகள் சேலத்தில் உள்ள தளவாய்ப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்தவர். தனது பயணத்தின் இறுதியில் பழனியில் வந்து சமாதி ஆனார்கள். அவரது திருச்சமாதியின் மேல் மிகவும் அழகான நேர்த்தியான கண்களுக்குக் குளிர்ச்சியையும் அதீத அருளையும் தருகின்ற தண்டபாணிக் கடவுளின் திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது.
இந்த மடத்தை சிரவை ஆதினமாகிய கௌமார மடம் நிர்வகித்து வருகிறது. சிரவை ஆதினம் நான்காம் பட்டம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். இந்த பட்டிணம் சுவாமிகள் குரு பூஜையை திண்டுக்கல் மாவட்ட முருக பக்தர்கள் பேரவையும் அதை செயல்படுத்திவரும் திரு.ராஜேந்திரன் அவர்களும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். எனது குரு நாதர் அந்தியூர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஸ்ரீ ஜெகதீஸ்வர சுவாமிகளுடன் ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரம அடியவர்களான கோவை திருமுருக சுரேந்தர், அடியேன் சிவப்பிரகாஷ், கோவை ஆனந்தன், காங்கேயம் சிவசுப்ரமணியம் ஆகியோர் இந்த குரு பூஜைக்குச் சென்றிருந்தோம். சிரவை ஆதினம் தவத்திரு. குமர குருபர சுவாமிகளும், தென்சேரிமலை ஆதினம் தவத்திரு முத்து சிவ ராமசாமி அடிகளார் அவர்களும் மிகச் சிறப்பாக தண்டபாணிக் கடவுளுக்கு அபிஷேகம் செய்வித்து, ராஜ அலங்காரம் செய்து தீப ஆராதனைகளுடன் குரு பூஜையை நடத்தினார்கள். அதன் பின்பு பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவியர்களின் ஆன்மீகப் பேச்சுக்கள் மிக அருமையாக இருந்தன.
படம்:1. சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் பூஜை செய்தல்
பேசிய மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இரண்டு ஆதீன்ங்களும் மிகச் சிறப்பாக ஆசியுரை வழங்கினார்கள். தென்சேரிமலை சுவாமிகள் பேசும்போது மிகவும் நகைச்சிவையாகவும் அதீத கருத்துக்களையும் பேசினார்கள். இப்போதெல்லாம் காலம் மிகவும் குறுகிவிட்டது. இவர்கள் சேலத்திலிருந்து நாலரை மணிக்கு கிளம்பி வரும் வழியில் காங்கேயத்தில் சாப்பிட்டுவிட்டு 10 மணிக்கெல்லாம் இங்கு வந்துவிட்டார்கள். இங்கேயேகூட சாப்பிட்டு இருக்கலாம். சரி பரவாயில்லை. அபோதெல்லாம் இவ்வளவு போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம். எனினும் பட்டிணம் மாரிமுத்து சுவாமிகள் அவர்கள் நடந்தே பல இடங்கள் சென்று இறுதியாக இங்கு வந்து சமாதி ஆகி இருக்கிறார்கள். அரை நிமிஷ நேர மட்டும் தவ முறை தியானம் வைக்க அறியாத என்கிறார் அருணகிரி நாத சுவாமிகள். மனிதர்கள் அந்த அரை நிமிஷ நேரம் கூட தியானம் வைக்கத் தெரியாமல், நேரம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறான். தொலை பேசி போய் இன்று அலை பேசி வந்து விட்டது. அதற்கு அலை பேசி எனப் பெயர் இருப்பதாலேயோ என்னவோ மனிதர்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மாணவி இங்கு பேசும்போது குறிப்பிட்டாள். ஓதாமல் ஒரு நாளும் இருக்க மாட்டோம், ஒருவரையும் பொலாங்கு சொல்ல மாட்டோம் என்பதுதான் அது. அதில் அந்த இரண்டாம் வரிதான் மிக மிக முக்கியம். ஆம் இன்று எங்கு பார்த்தாலும் ஒருவருக்கு ஒருவர் பொல்லாங்கு சொல்லுவதே அதிகமாகிவிட்ட்து.
படம் 2: இரண்டு ஆதினங்கள் மற்றும் ஸ்ரீஸ்கந்த உபாசகருடன் நாங்கள்
மனிதன் நிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறான். இந்த பழநி மலையைச் சுற்றிலும் ஏராளமான சித்தர்கள் சமாதி கொண்டிருக்கிறார்கள். தவத்திரு ராமானந்த சுவாமிகளுக்கு இந்த பழநியில்தான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் இருந்து உபதேசம் கிடைத்தது என்று மிகவும் அருமையாகப் பேசி தனது ஆசி உரையை நிறைவு செய்தார்.
அடுத்ததாக சிரவை ஆதினம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் தனது அருளாசி உரையை நிகழ்த்தினார்கள். கண்ணினால் நல்ல காட்சியைக் காண நாமெல்லாம் இங்கு வந்திருக்கிறோம். இந்த மண்ணிற்கு என ஒரு பெருமை இருக்கின்றது. போகர் உட்பட பல அருளாளர்கள் வாழ்ந்த இடம் இந்த பழநி மலை. இங்கு பேசிய மாணவ மாணவியர்கள் மிகவும் அருமையாகப் பேசினார்கள். புத்தகத்தில் இருப்பதை அப்படியே பேச வேண்டும் என்று அவசியமில்லை. இயல்பாகவே பேசலாம். இந்த இடத்தில் நீங்கள் பேசிய இந்த செயல்களின் சிறப்பு இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் கழித்துத் தெரியும். அப்போது உங்களுக்கே மிகவும் பிரமிப்பாக இருக்கும். ஒரு நல்ல குழந்தையை பள்ளிக்கு அனுப்பினால் அந்த குழந்தை தனது கல்வியைப் பூர்த்தி செய்து கொண்டு வெளியே வரும்போது பொறாமை போன்ற கெட்ட உண்ர்ச்சிகளோடுதான் வெளியே வருகிறது.
பேராசிரியர்கள்கூட இங்கு வந்திருக்கிறார்கள். பள்ளிகளில் நாம் போதிப்பது என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மனித்த் தன்மையை உருவாக்காத கல்வி எப்போதுமே நல்ல கல்வி ஆகாது. எனவே கல்வி முறைகளில் மாற்றம் வேண்டும். ஒருவரைப் பார்த்து ஒருவர் குறை சொல்வதும், பொறாமைப் படுவதும் இன்று அதிகரித்து விட்டது. ஒருவன் அவன் வீட்டில் கடவுளை நோக்கி பூஜை செய்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது பக்கத்து வீட்டுக்காரன் அவைனப் போலவே இன்னும் இரண்டு மடங்கு பூஜை செய்தான். கடவுள் அவனுக்கு காட்சி அளித்தார். வரம் கொடுத்தார். அடுத்து பக்கத்து வீட்டுக்காரனுக்கும் காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் கேள் என்றார். உடனே அவன் சுவாமி பக்கத்து வீட்டுக்காரன் என்ன வரம் கேட்டான் என்றான். கடவுள் அவனிடம் உனக்கு என்ன வரம் தருகிறேனோ அதுபோல் அவனுக்கு இரண்டு மடங்கு வரம் வேண்டும் என்று கேடட்தாகத் தெரிவித்தார். இவன் உடனேயே எனக்கு ஒரு கண் போக வேண்டும் என்று வரம் கேட்டான். (ஒரே சிரிப்பலை கூட்டத்தில்) பாருங்கள்... என்ன அர்த்தம் தனக்கு ஒரு கண் போனால் அவன் கடவுளிடம் பெற்ற வரத்தின்படி அவனுக்கு இரண்டு கண்ணும் போய்விடும் அல்லவா. இப்படியா கடவுளுக்குப் பூஜை செய்வது. சற்று எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று மிக அழகாகப் பேசி தனது ஆசியுரையை நிறைவு செய்தார்.
திண்டுக்கல் மாவட்ட முருக பக்தர்கள் பேரவைத் தலைவர் திரு.ராஜேந்திரன் அவர்கள் பேச்சுப் போட்டியில் பங்கு பெற்ற் மாணவர்களுக்குப் பரிசை அறிவிக்க இரண்டு ஆதீனங்களும் மற்ற முக்கியப் பிரமுகர்களும் பரிசை வழங்கினார்கள். சிரவை ஆதீனம் அவர்களின் அருளானைப்படி நமது குரு நாதர் அந்தியூர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஸ்ரீ ஜெகதீஸ்வர சுவாமிகளும் ஒரு மாணவிக்கு பரிசை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் முடிவில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. மிகச் சிறப்பான இந்த பட்டணம் மாரிமுத்து சுவாமிகளின் குரு பூஜை அந்த குருவருளையும், திருவருளையும் தந்தது எனலாம்.
படம் 3: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள் பரிசு வழங்குதல் அருகில் திரு.ராஜேந்திரன் அவர்கள்
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக