புதன், 3 பிப்ரவரி, 2016

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி-36

                                                                      அவிநாசி
நமது ஜீவ நாடியில் வருகின்ற வாக்கு அப்படியே நூறு சதம் பலித்து வருகின்றது. ஒரு முறை நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தின் அடியார்களுடன் கொங்கு ஏழு ஸ்தலங்கள் என்று போற்றப்படும் சிவாலயங்களைத் தரிசித்து வருமாறும் அங்கு பல்வேறு திருவிளையாடல்களை நடத்துவதாகவும் முருகப்பெருமான் உரைத்தார். இதைக் கேட்ட அடியார்கள் சுவாமி உடனே செல்வோம் என்றார்கள். அது மார்கழி மாதம் இறை வழிபாட்டுக்குரிய மாதம்தான் முருகன் உரைத்திருப்பதால் செல்லலாம் என்றேன். மகிழ்ச்சி அடைந்த அடியார்கள் என்ன திருவிளையாடல்கள் நடக்கப் போகின்றதோ என எண்ணி மகிழ்ந்து சிவாலயப் பயணத்திற்குத் தயாரானார்கள். கொங்கு நாட்டில் சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் ஏழு. அந்த பாடல் பெற்ற ஏழு ஸ்தலங்களுமே கொங்கு ஏழ் ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை அவிநாசி, திருமுருகன்பூண்டி, பவானி முக்கூடல் கூடுதுறை, கொடுமுடி, திருச்செங்கோடு, கரூர், திருவெஞ்சமாக் கூடல், ஆகியவையாம். இந்த ஏழில் முதல் ஸ்தலம் அவிநாசி. இவ்வூரின் பழம்பெயர் திருப்புக்கொளியூர் ஆகும். இறைவன் ஆடிய அக்னிதாண்டவம், கண்டு அஞ்சிய தேவர்கள் புகுந்து ஒளிந்து கொள்ளவும், பின்னர் அவர்களுக்கு அருளவும் செய்த இடம். புக்கு ஒளி ஊர் புக்கொளியூர் ஆயிற்று. இப்போதுள்ள பெயர் அவிநாசி ஆகும். அவிநாசி என்றால் பெருங்கேட்டை நீக்கவல்லது என்று பொருள்படும். தேவார காலத்தில் இவ்வூரின் பெயர் திருப்புக்கொளியூர் என்றும், திருக்கோயிலின் பெயர் அவிநாசி என்றும் வழங்கின. காலப்போக்கில் கோயிலை ஒட்டி வளர்ந்த நகரம் அவிநாசி என்று பெயர் பெற்றது. திருப்புக்கொளியூர் இன்று கோயிலின் தெற்கே சிறிது தொலைவில் ஓர் சிற்றூராக உள்ளது. இவ்வூர், சென்னை - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.  நள்ளாற்றின் கரையில் நலம் பெற இயங்கும் திருக்கோயில் கிழக்கு நோக்கிய சன்னதி. கோவில் முன்புறம் ஒரே கல்லாலான தீபஸ் தம்பம் உள்ளது. சுமார் 70 அடி உயரம் உடையது. இதன் அடியில் கிழக்கில் விநாயகரும், மேற்கில் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், வடபுறத்திலும், தென்புறத்திலும் முதலை வாயிலிருந்து பிள்ளை வெளிப்படும் சிற்பங்களும் உள்ளன. இந்த தீபஸ்தம்பம் கொங்கு நாட்டுக்கே சிறப்பாக உரியது. கொங்கு நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களின் முன்புறம் இந்த தீபஸ் தம்பம் இருப்பது ஒரு சிறப்பு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவிநாசி ஈசனை வழிபட வந்தார். அப்போது அங்கு எதிரெதிரே இருந்த இருவீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடைபெற்று சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. மற்றொரு வீட்டில் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. அழுகுரல்  வந்த வீட்டிற்கு சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள், அதற்கான காரணத்தை கேட்டார். அப்போது இரு வீட்டிலும் நான்கு வயதுடைய குழந்தைகள் இருந்ததாகவும், தங்கள் வீட்டில் உள்ள குழந்தையை குளத்தில் நீராடச் சென்ற போது முதலை இழுத்துச் சென்று விட்டதாகவும், அந்தக் குழந்தையும் இருந்திருந்தால், எதிர் வீட்டில் உள்ளவர்களைப் போல தற்போது பூணூல் கல்யாணம் செய்து வைத்திருப்போம்' என்று கண்ணீர் மல்கியபடி கூறினர். அவர்கள் மீது இரக்கம் கொண்டு சுந்தரர், அவ்வீட்டாரை அழைத்துக் கொண்டு தாமரைக் குளக்கரைக்குச் சென்றார். அந்த குளத்தில் அச்சமயம் நீர் வற்றிப் போயிருந்தது. அவிநாசியப்பரை மனதில் நிறுத்தி, 'எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே' என்றுத் தொடங்கி பதிகம் பாடினார் சுந்தரர். தொடர்ந்து நான்காவது பாடலை, 'உரைப்பார் உரையுகந்து உள்க வல்லால் தங்கள் உச்சியாய்! அரைக்காடு அரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்! புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே! கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே!' என்று பாட அந்த அதிசயம் அடுத்த நொடியே அங்கு அரங்கேறியது. வறண்டு போய் கிடந்த குளம் திடீரென்று தண்ணீரால் நிரம்பித் தாமரையால் சிரித்தது. கூடவே ஒரு முதலையும் கரை நோக்கி வந்தது. சிவனும் பிரம்மாவும் உருவத்தைக் கொடுக்க, எமன் உயிரைக் கொடுக்க, திருமால் உடலை வளர்க்க, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விழுங்கிய அதே நான்கு வயது பாலகை, அதே முதலை தற்போது ஏழு வயது பாலகனாக உமிழ்ந்து விட்டு ஒதுங்கியது. முதலையில் வாயில் இருந்து மீண்ட அந்தப் பிள்ளைக்கு அவிநாசியப்பர் சன்னிதியிலேயே, பூணூல் கல்யாணம் செய்து வைத்தார் சுந்தரர். அவிநாசியில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் 'முதலைவாய்ப் பிள்ளை உற்சவம்' நடைபெறுகிறது.
                                                           
                                                                           சுந்தரர்
இத்தகைய சிறப்பு பெற்ற அவினாசித்தலத்தில் அடியார்களுடன் சென்று திருமுறைகளை ஓதிக் கொண்டே கூட்டு வழிபாடு செய்தோம். அவினாசியில் இருக்கும் அர்ச்சகர்கள் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்திற்கு அடிக்கடி வருபவர்கள் ஆதலால் எங்களை இன்முகத்துடன் வரவேற்று நல்ல தரிசனம் செய்து வைத்தார்கள். சிவாலயம் சென்றால் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வரவேண்டும் என்ற நியதியில் வழிபாடு முடித்து வெளிப்பிரகாரத்தில் வந்து அமர்ந்து தியானத்தில் இருந்தோம். தியானம் முடித்து கண்களைத் திறக்கையில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
சென்ற சில இதழ்களில் பேரூர் மட்த்தில் காசியில் இருந்து வந்திருந்த ஒரு பழுத்த சிவனடியாரை தரிசனம் செய்த்த்தையும் அதைப்பற்ரி பின்பு சொல்கின்றேன் என்று எழுதியிருந்தேன் அல்லவா அந்த அதே சிவனடியார் புன்னகை பூத்த முகத்துடன் எங்களுக்கு எதிரே அமர்ந்து கொண்டிருந்தார். எங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே அவரைத் தெரியும் மற்ற அடியார்களுக்குத் தெரியாது. உடனே அவரிடம் அனைவரும் ஆசி வாங்கினோம். அவர் ஓம் நமசிவாய....என உரக்க உச்சரித்துக் கொண்டே இருந்தாரே தவிர எந்தவித பதிலும் சொல்லவில்லை. நாங்கள் ஏற்கனே சந்திருந்த்தது மறந்துவிட்டார் போலும் என்று ஆசி மட்டும் வாங்கிக் கொண்டோம். சரி இதுவே பெரிய அதிசயம்தானே என்று விடைபெற்று அடுத்த ஸ்தலமான திருமுருகன் பூண்டி செல்ல ஆயத்தமானோம். எங்கள் வாகனம் அருகில் சுவாமியும் வந்து அடுத்து எங்கோ செல்ல ஆயத்தமானார். நான் உடனே திருமுருக விஜயகுமார் அடியவரிடம் சுவாமி நம்முடன் வருவதாக இருந்தால் வரச்சொல் செல்வோம் என்று சொன்னேன். அவரும் சுவாமியிடம் கேட்க அவர் பதில் ஏதும் சொல்லாமல் வந்து எங்கள் வண்டியில் ஏறி அமர்ந்துவிட்டார். சுவாமி நாங்கள் அடுத்து திருமுருகன் பூண்டி செல்கின்றோம் போவோமா என்று கேட்டேன். நான் இப்போதுதான் அங்கிருந்து வருகின்றேன் சரி பரவாயில்லை உங்களுடன் வருகின்றேன் என்று கன்னடத்தில் பதில் சொன்னார். எனக்கு கன்னடம் பாதி நன்றாகவே புரிந்த்தது. அதை அனைத்து அடியார்களுக்கும் விளக்கிச் சொன்னேன். அப்போதுதான் எனது முதல் குரு தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் எனக்கு செய்த உபதேசம் புரிந்த்து.
அது என்ன? இந்த பயணம் ஆரம்பிக்கும் ஒரு வாரம் முன்பு சில அடியார்களுடன் எனது முதல் உபதேச குரு தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்களைச் சந்தித்து ஆசி பெறச் சென்றேன். என் மீது அவருக்கு அவ்வளவு பிரியம். எனக்கும் அவர் மீது அளவு கடந்த அன்பு. நான் சென்றுவிட்டால் அவர் எப்போதுமே மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று எல்லா வேலைகளையும் தூக்கி எறிந்துவிட்டு என்னிடம் மணிக்கணக்கில் பேச அமர்ந்துவிடுவார். அது வெறும் பேச்சாக இருக்காது அருள்வாக்காவே இருக்கும். குறிப்பாக உபதேசமாகவே இருக்கும். முருகனை பற்றி அவர் பேசினால் எனக்கு உள்ளம் குழைந்து கண்ணீரே பெருகிவிடும் அப்படிப் பேசுவார். பேச்சி வாக்கில் உனக்கு கன்னடம் தெரியுமா? என்று கேட்டார். நான் தெரியாது சுவாமி என்றேன். விரைவில் கன்னடம் கற்றுக் கொள் உனக்கு அது பயன்படும் என்றார். நான் சுவாமி எனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும் எனவே சமாளித்துவிடுவேன் என்றேன். இல்லை இல்லை கன்னடம்...கன்னடம்..என்று ஏதோ முனுமுனுத்தார். அந்த உபதேசம் இந்த காசி சுவாமிகள் கன்னடம் பேசும் போது சுரீர் என்று பட்டது. ஆங்கிலம் தெரிந்து என்ன பயன் இப்போது கன்னடம் தெரிந்திருந்தால் இந்த காசி சுவாமிகள் சொல்வது முழுதும் புரிந்திருக்குமே! குரு வாக்கு என்றும் பொய்ப்பதில்லை என்பதற்கு இதுவே சாட்சி. இந்த விஷயம் தெரிந்த அடியார்களும் கன்னடம் பற்றி பேசிக் கொண்டார்கள். நான் அமைதியாய் அடுத்து காசி சுவாமிகள் என்ன சொல்கின்றார் என்பதைக் கூர்ந்து கவனித்தேன். அவர் தமிழ் கலந்த கன்னடத்தில் செய்த உபதேசங்கள்.
ஸ்ரீஸ்கந்த உபாசகருடன் காசிசுவாமிகள்
  1. உங்களை ஏற்கனவே பேரூர் மடத்தில் பார்த்திருக்கின்றேன் பேண்ட் சட்டையில் இருந்தீர்கள். ஆனாலும் முகத்தில் ஒரு ஒளி தெரிந்தது, அடுத்து கழுத்தைப் பார்த்தேன் ஒரு பெரிய ருத்திராட்சம் தெரிந்தது. உடனே மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் என்னை நமஸ்கரித்த உடனேயே ருத்திராட்சம் போட்டிருக்கிறாரே நமஸ்கரிக்கத் தேவையில்லை என நினைத்து நான் அப்போது எதுவும் பேசவில்லை. ஓம் நமசிவாய...ஓம் நமசிவாய....
  2.  நீங்கள் பேசவில்லையே என்று வருத்தமாக இருந்தேன் இவ்வளவு நினைவில் வைத்திருக்கின்றீர்களே சுவாமி அது என் பாக்கியம் என்றேன் நான். அதற்கு அவர் ஓம் நமசிவாய...என்று மட்டும் பதில் உரைத்தார்
  3. தொடர்ந்து பேசினார், இங்கு அவினாசியில் உங்களைப் பார்த்த உடனேயே பேரூர் மடத்தில் பார்த்த முகம் இது ஆனால் இன்று காவி உடையில் வந்திருக்கிறார் என்று மகிழ்ச்சி அடைந்தேன். இந்த உடை உங்களுக்குப் பொருத்தமாக இருக்கின்றது என்றார். மிக்க மகிழ்ச்சி சுவாமி என்றேன்.
  4. இப்படி அடியார் கூட்டத்தோடு ஸ்தலங்களைத் தரிசனம் செய்வது மிக நல்லது ஆனால் அங்கும் இங்கும் அலைவதால் மட்டும் பிரையோசனம் இல்லை என்றார். அதாவது கோவில் கோவிலாக சுற்றிக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது என்றார்.
  5. அவர் முன் சீட்டில் அமர்ந்து இருந்த்தால் அவர் தலையில் அணிந்திருந்த ஒரு வில்வம் பின் சீட்டில் அமர்ந்திருந்த என் மீது வந்து விழுந்தது மிகுந்த பக்தியோடு எடுத்துக் கொண்டேன்.
  6. காசி சுவாமிகள் தொடர்ந்து சொன்னார், நான் பசு, சிவ பெருமான் பதி  நான் சிவனைக் கல்யாணம் பண்ணிக்கொண்டேன். சிவனே எனக்குக் கணவர் பதி பசு பாசம் என்று இன்னும் நிறையாக ஏதோதோ கன்னடத்தில் சொன்னார். எனக்கு பாதிதான் புரிந்த்து.
ஸ்ரீஸ்கந்த உபாசகர் மற்றும் காசி சுவாமிகளுடன் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரம அடியார்கள்
இப்படிப் பேசிக்கொண்டும் உபதேசம் கேட்டுக் கொண்டும் செல்லும் போது திருமுகன் பூண்டி எனும் இரண்டாவது ஸ்தலத்தை அடைந்தோம். வண்டியை விட்டு கீழிறங்கி வேகமாக கோவிலுக்குள் சென்றுவிட்டார். பின் தொடர்ந்தோம். அப்போது ஒருவர் வந்து எங்கள் அனைவருக்கும் ருத்திராட்சம் ஒன்றைக் கொடுத்தார். அதைப் பார்த்த சுவாமிகள் ருத்திராட்சமே மிக உயர்ந்தது என்றும் அதை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்றும் எங்கள் அடியார்கள் அணிந்திருந்த மற்ற மாலைகளைக் காட்டி இதையெல்லாம் தூக்கி எறியுங்கள் ருத்திராட்சம் போடு....ருத்திராட்சம் போடு... என்று என்னைப் பார்த்து இதை இவர்களுக்கு உபதேசித்து சரியான வழியில் கொண்டு செல் என்றார். சரி சுவாமி என்றேன். திருமுருகன்பூண்டி எனும் இந்த ஸ்தலம் முருகப் பெருமான் வழிபட்ட தலமாகும். அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர் செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூத கணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக்கொண்ட தலம் எனக்கூறப்படுகிறது. இத்தலம் பிரம்ம ஹத்திதோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால் பக்தர்கள் பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.
இந்தத் தகவல்களையெல்லாம் அந்தக் கோவிலில் அறிந்து கொண்டோம். என்னிடம் வந்த மற்ற அடியார்கள் ஒவ்வொரு புறமாகப் பிரிந்து சென்று வழிபாடுகளை நடத்தினர். நான் காசி சுவாமிகளுடேனேயே இருந்தேன். அப்போது என்னிடம் வந்து ஒரு அடியவர் சுவாமி உங்களைப்பற்றி ஒருவர் விசாரித்தார் சொன்னேன் உங்களிடம் இருக்கும் பக்தியால் உங்கள் பின்னாலேலேயே வந்திவிடலாம் போலிருக்கிறது என்று சொல்கிறார் என்றார். நான் அதைப்பற்றி பெரிது படுத்தவில்லை. அதைப் புரிந்து கொண்ட காசி சுவாமிகள் பெரிய ஒலி வருமளவு சிரித்துவிட்டு அது உண்மைதான் கார்த்திகேயன் அருள்....ஓம் நமசிவாய...ஓம் நமசிவாய...என்றார். இது அனைத்தும் சத்தியமான உண்மை. அதற்கு என்னுடன் வந்த அடியார்களே சாட்சி. அடுத்து ஒரு பெரிய அதிசயமே நடந்தது. தொடர்ந்து பார்ப்போம்........(தொடரும்...)
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-23

                                                                  சென்னிமலை
சென்னிமலை ஈரோட்டில் இருந்து பழனி செல்லும் வழியில் 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  முருகப்பெருமான் மீது திருப்புகழைப் பாடிய அருணகிரிநாத சுவாமிகளுக்கு, சென்னி மலை முருகப்பெருமான் படிக்காசு வழங்கி திருவிளையாடல்  நடத்தி அருள்பாலித்து ஆட்கொண்டிருகின்றார். சென்னிமலை முருகன் கோவிலில் செவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களையும் காணலாம். ஏனெனில் இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே இத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும் அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகல கிரக பீடைகளும் உடனே விலகும். இந்த சென்னிமலை மீது இரண்டு முகம் உள்ள அக்னிஜாதர் எனும் முருகப்பெருமானின் திரு உருவத்தைக் காணலாம்.
கந்தசஷ்டி கவசம் இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள் அதனை எங்கே அரங்கேற்றம் செய்வது என தவித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான், சென்னிமலையில் அரங்கேற்றம் செய் என்று கூறி அருளினார். அதன்படி சென்னிமலையில், துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம்போம், நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் எனத் தொடங்கும் கந்தசஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்தார் பாலன் தேவராயர் சுவாமிகள். 
                                                   
                                                        பால தேவராய சுவாமிகள்
மாட்டு வண்டி மலையேறும் அதிசயம், மமாங்க குளத்தின் அதிசயம், சிரசுப்பூ உத்தரவு கேட்டு அதன்படியே நடக்கும் அதிசயம் மட்டுமல்ல சென்னிமலை முருகன் மூலவரே ஒரு அதிசயம்தான்.  
                                      
                                       மாட்டு வண்டி சென்னிமலை மீது ஏறுதல்
நீண்ட நாட்களாக மணலால் மூடப்பட்டுக் கிடந்த மூலவர்  சிலையின் மேல்பகுதியில் இருந்து இடுப்பு வரை நல்ல வேலைப்பாட்டுடன் மிகவும் அழகாக வடிக்கப்பட்டிருந்தது. இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகள் முறையான வேலைப்பாடு இல்லாமல் கரடு, முரடாக இருந்தது. அதை சிற்பி செதுக்க முற்படும்போது மனிதனுக்கு போன்றே அந்த சிலையில் இருந்து இரத்தம் வந்ததாம். உடனே சிற்பி சிலையைச் செதுக்காமல் அப்படியே பிரதிஷ்டை செய்து விட்டாகள். எனவே மூலவராக உள்ள முருகப்பெருமானின் சிலை இடுப்புக்கு கீழே உள்ள பகுதி வேலைப்பாடற்ற நிலையில் கரடுமுரடாகத்தான் இருக்கும். 
                                                
                                                சென்னிமலை முருகன் மூலவர்
சென்னிமலை மீது புகழ்பெற்ற பின்னாக்கு சித்தர் கோவில் உள்ளது. நமது அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் சென்னிமலை, சிவன் மலை, பழனி எனும் மூன்று மலைகளை ஒரே நாளில் ஏறி வழிபட்டு அந்த மூன்று மலைகளிலும் தீர்த்தங்கள் எடுத்து வந்து நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் உள்ள ஸ்ரீஞானஸ்கந்தக் கடவுளுக்கு அபிடேகம் செய்வது ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகின்றது. 
                                              ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி அந்தியூர்
இப்படிப்பட்ட அதிசயம் அனேகமுற்ற சிரகிரியான சென்னிமலை மீது அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத் திருப்புகழாக மலர்கின்றது.
சென்னிமலைத் திருப்புகழ்
பகலிரவினிற் ...... றடுமாறா
     பதிகுருவெனத் ...... தெளிபோத
ரகசியமுரைத் ...... தநுபூதி
     ரதநிலைதனைத் ...... தருவாயே
இகபரமதற் ...... கிறையோனே
     இயலிசையின்முத் ...... தமிழோனே
சகசிரகிரிப் ...... பதிவேளே
     சரவணபவப் ...... பெருமாளே.

விளக்கம்
பகல் இரவாகிய நினைவு மற்றும் மறப்பு என்ற நிலைகளிலே தடுமாறாது, முருகனே குருநாதன் என்று தெளிகின்ற ஞானத்தின் பரம ரகசியத்தை அடியேனுக்கு உபதேசித்து, அனுபூதி நிலையினைத் தந்தருள்வாயாக. இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனாக விளங்குபவனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியவனே, இவ்வுலகில் மேலான திருச்சிரகிரி மலையின் செவ்வேளே, சரவணபவப் பெருமாளே.
                                      

சென்னிமலையைப் பற்றி நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வந்துள்ள மேலும் சில அபூர்வத்தகவல்களை இந்த இணைப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள்
                                               
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

                            ஓம்ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                   சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-22

     
                                                                     மருதமலை
கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வாய்ந்தது மருதமலை முருகன் கோவில். அறு படை வீடுகளைக் கொண்டு குன்று தோறும் குமரன் எழுந்தருளி இருக்கும் இந்த மருதமலை 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றி வணங்கப்படுகின்றது.  எழில் கொஞ்சும் இயற்கையான சூழலில் அமைந்திருக்கும் மருதமலை, அதன் மூன்று புறங்களிலும் மலை அரண்களால் சூழப்பட்டு உள்ளது. கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலைகளின் இயற்கை அமைப்போடு சேர்த்து பார்க்கும் போது மயில் தோகை விரித்தாற்போல் காட்சி அளிக்கிறது. இதனால் முருகன் மயில் மீது அமர்ந்த தோற்றம் தெரிகின்றது. மருத மரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என வழங்கப்படுகிறது. மேலும் மருதமால்வரை, மருதவரை, மருதவெற்பு, மருதக்குன்று, மருதலோங்கல், கமற்பிறங்கு, மருதாச்சலம், வேள்வரை என்றெல்லாம் பேரூர் புராணத்தில் கூறப்படுகிறது.  எனவே மருதமரங்கள் அடர்ந்த மலை என்ற பொருளில் மருதாச்சலம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த மலைச் சாரலில் 3 கற்கள் மாறுபட்ட நிறத்துடன் இருப்பதை காணலாம். அதாவது இந்த மூன்று கற்களும் சிலையாகி போன திருடர்கள் என்பார்கள். ஒரு முறை முருகன் அடியார்கள் கோவில் திருப்பணி நடந்த போது பொன், பொருளை உண்டியலில் போட்டனர்.  இதைக் கண்ட 3 திருடர்கள் ஒரு நாள் இரவில் வந்து உண்டியலை உடைத்து பொன்னையும், பொருளையும் திருடி மலைச்சரிவு வழியாக சென்றனர். 
                                                          
அப்போது முருகப் பெருமான் குதிரைவீரனைப் போல் சென்று அவர்களைப் பிடித்து 'நீங்கள் கற்சிலைகளாக மாறுவீர்' என சபித்தாராம். இதனால் அந்த திருடர்கள் 3 பேரும் கற்சிலைகளாக நிற்பதாக செவிவழிச் செய்தி கூறுகிறது. 
                                                                 
அருணகிரிநாத சுவாமிகள் பாடிய கந்தர் அலங்காரம், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடிய தமிழ் அலங்காரம், வேல் அலங்காரம் போல் மருத மலை மீது நமது சிரவையாதீன இரண்டாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள் மருதமலை அலங்காரம் எனும் பாடல்களைப் பாடி உள்ளார்கள்.
தவத்திரு. கந்தசாமி சுவாமிகள்
திசைஆறும் திருமுகமாய் சமயங்கள் திருப்புயமாய்
இசை வேத ஆகம நிச்சயம் தாள்கள் இரண்டெனக்கொண்டு
அசையாப் பரம் தண்டம் ஏந்துகைத் தேசிகனாம்
நசையாய் அடியர் தொழ மருதாசலம் நன்னியதே

இது மருதமலை அலங்காரத்தில் ஒரு பாடல் ஆகும். இப்படி பல பெருமைகளை உடைய மருதமலை மீது நமது கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத் திருப்புகழ்.
மருதமலைத் திருப்புகழ்
திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
பருவரை யதனை உருவிட எறியும்
அறுமுகமுடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவோனே!
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!

விளக்கம்
திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
(முப்புரத்தை ஒரு நொடியில் எரித்து அருளிய சிவனின் வாழ்வே)

                                             
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
(கோபமுடைய அசுர்ர்கள் மனம் வெருவ மயிலை வேகமாக செலுத்துபவனே)
                                                    
பருவரை யதனை உருவிட எறியும்
அறுமுகமுடைய வடிவேலா!
(பெரிய மலைகளை ஊடுருவக்கூடிய ஆறு முகம் உடைய வேலை உடைய வடிவேலனே) 
                                             
பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!

(காமன் விடும் அம்புகளால் இளமையான தனங்களை உடையவர்ள் மீது நான் காம வயப்படலாமோ)
                                                               

கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவோனே!
(யானை முகமும் பெரிய வயிரும் உடையவர் பிறகு வருபவனே)
                                                   
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!

(பெரிய தனங்களை உடைய குறமகளாகிய வள்ளியை கருணையோடு அணைக்கும் மணிகள் அணிந்த மார்பை உடையவனே)
                                                      

அரவணை துயிலும் அரிதிரு மருக
                                           

அணிசெயு மருத மலையோனே!

(பாம்பின் மீது படுத்து உறங்கும் ஹரியின் திரு மருகனே, மருதமலைக்கு அணியாக இருப்பவனே)
                                                  

அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!

(அடியவர்கள் வினையும், அமரர்கள் துயரும் நீங்கும்படியாக அருளி உதவும் பெருமாளே)

பாம்பாட்டி சித்தர், சாண்டோ சின்னப்பா தேவர், பித்துக்குளி முருகதாஸ் போன்றவர்களுக்கு முருகப்பெருமான் அனுக்கிரகம் புரிந்த தலம் இந்த மருதமலை.
                                             
                                                          பாம்பாட்டி சித்தர்
                                      
                                                      சின்னப்பா தேவர் ஐயா
                                            
                                                          பித்துக்குளி முருகதாஸ்
 எமது ஞானதேசிகர் சிரவையாதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் ஒவ்வொரு கந்தர் சஷ்டி பெருவிழாவின் ஐந்தாம் நாள் மருதமலை சென்று வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அதே போல் ஒவ்வொரு தை மாதம் 1ம் தேதியன்று மருதமலையில் படி விழா மிகவும் சிறப்பாக நடந்ததாகவும் அந்த விழாவில் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் தவறாமல் வந்து கலந்து கொண்டு திருப்புகழைப் பாடிக் கொண்டே அனைவரும் மலை ஏறி மருதமலையானை மனமாறச்சேவிப்பார்கள் என்றும் தற்போது கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த படி விழா நடக்கவில்லை என்றும் எமது ஞானதேசிகர் சிரவையாதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். எனவே தெய்வ அனுக்கிரகம், தெய்வ அனுபூதி வேண்டும் என்பவர்கள் மருதமலை சென்று இந்தத் திருப்புகழை ஓதி மருதாசல மூர்த்தியின் இன்னருள் பெற்று உய்யுமாறு உள்ளன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                                     
 கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

திங்கள், 1 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-21


                                  
வெஞ்சமாக்கூடல் எனும் இத்தலம் கருவூருக்கு தெற்கில் அரவக்குறிச்சி பாதையில் உள்ள ஆறுரோடு பிரிவில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.
சுந்தரரால் பாடப்பெற்ற தலம். கோவில் அருகில் சிற்றாறு உள்ளது.பழைய கோவில் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டதால் புதிய கோவில் நிறுவப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது. கோவில் பள்ளத்தில் உள்ளது. 15 படிகள் இறங்கிச் செல்லவேண்டும். ஆறுமுகக்கடவுளுக்குத் தனிச் சந்நிதி உண்டு. 63 நாயன்மார் சிற்பங்கள் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன. வெஞ்சன் என்ற அசுரன் வழிபட்ட தலம். சிவபெருமான் தன் பக்தையான ஒரு கிழவியிடம் தன் பிள்ளைகளை ஈடு காட்டி பொன்பெற்று சுந்தரருக்குக் கொடுத்ததாக வரலாறு சொல்கின்றது.
                                                         
                                                                       சுந்தரர்
இன்றும் பிள்ளை தத்தெடுப்போர் இக்கோவிலில் இறைவரிடம் தவிட்டுக்கு வாங்குவது காலம் காலமாக நடந்து வருகின்றது. சிரவையாதீனம் மூன்றாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள் இந்த திருத்தலத்திற்கு பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளார்கள்.
                                          கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்
எறிக்குங் கதிர்வேயுதிர் முத்தமொடேல மிலவங் கந்தக் கோலமிஞ்சி
செறிக்கும் புனலுட் பெய்து கொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக்குந்த்தழை மாமூடப் புன்னை ஞாழல் குருக்கத்தி கண்மேற் குயில் கூவலறா
வெறிக்குங் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியெனையும் வேண்டுதியே
என்று சுந்தரர் இந்த தலத்தைப் பாடியுள்ளார்.  நமது கௌமார குரு நாதர் அருணகிரிநாத சுவாமிகள் இத்தலத்தின் முருகன் மேல் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத் திருப்புகழாக மலர்கின்றது.
 வண்டு எவ்வாறு மலர்களின் தேனைத் தேடிக் களிக்கிறதோ அவ்வாறு உனது அருளை நான் தேடிக் களிக்குமாறும், 
                                   
குரங்கு எவ்வாறு மரக்கிளைகளைத் தாண்ட வல்லதோ அவ்வாறே நானும் காலனின் பாசக் கயிற்றின் பிணிப்பைத் தாவும் வல்லமை பெறுமாறும்,
                                  
செண்டாயுதத்தை எறிந்தால் எவ்வாறு பகை மாய்க்கப்படுகிறதோ அவ்வாறு நான் பாசங்களுடன் போராடி வெல்லுமாறும்,
                                  
அலைந்து திரியும் என் மனத்தை மாய்த்து சும்மா இருக்கச் செய்து மெய்யறிவைத் தந்தருள்வாயாக. உன் அடியார்களால் காணப்பெறும் தன்மை உடையவனே, 
தூய்மையான தலமாம் திருவேற்காட்டில் வாழ்பவனே, 
                                                    
                                                   திருவேற்காடு முருகப்பெருமான்
ஆணவம் மிக்கவர்களால் காணக் கூடாதவனே, வெஞ்சமாக் கூடற் பெருமாளே. 
                                                     
                                                        ஆணவம் மிக்க சூரனை அழித்தல்
என்று பக்தியால் பணிந்து பற்றியே மாதிருப்புகழ் பாடியுள்ளார் அருணகிரிநாத சுவாமிகள். இதோ அந்தத் திருப்புகழ்
 வெஞ்சமாக்கூடல் திருப்புகழ்
வண்டுபோற் சாரத் ...... தருள்தேடி
மந்திபோற் காலப் ...... பிணிசாடிச்
செண்டுபோற் பாசத் ...... துடனாடிச்
சிந்தைமாய்த் தேசித் ...... தருள்வாயே
தொண்டராற் காணப் ...... பெறுவோனே
துங்கவேற் கானத் ...... துறைவோனே
மிண்டராற் காணக் ...... கிடையானே
வெஞ்சமாக் கூடற் ...... பெருமாளே.

மரணபயம் இருப்பவர்கள், அடிக்கடி ஆலயம் சென்று மன அமைதி தேடுபவர்கள் எதிரி தொல்லையால் அவதிப்படுபவர்கள், நான் எனும் அகங்காரம் அதிகம் உள்ளவர்கள், புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் பொருட்டு 90 நாட்கள் இந்தத் திருப்புகழைத் தினமும் காலை மாலை உடல் மனத் தூய்மையுடன் கிழக்கு நோக்கி அமர்ந்து பாராயணம் செய்து 90வது நாள் வெஞ்சமாக்கூடல் சென்று அங்கு உள்ள முருகப்பெருமானுக்கு அபிடேக ஆராதனையுடன் 108 செந்தமிழ் மந்திர அர்ச்சனைகள் செய்து வழிபட்டால் தொண்டர்களுக்கு எளிமையாகக் காட்சி தரும் முருகப்பெருமான் அருள் உங்களுக்குக் கிடைத்து அடியவர் இச்சையில் எவை எவை உற்றனவோ அவை தருவித்து நம்மை ஆட்கொள்வார் அந்த ஆறுமுகப்பெருமான் என்பது திண்ணம்.
                                           
                                                  திருப்புகழ் பாராயணம் செய்தல்
நான் பெரிய பணக்காரன், நான் பெரிய தொழிலதிபர், நான் பெரிய பேச்சாளன், நான் பெரிய எழுத்தாளன், நான் பெரிய அறிஞர், நான் பெரிய அரசியல்வாதி, நான் பெரிய வித்வான் என்று எல்லாமே நான் நான் நான் என்று அகந்தையில் இருப்பவர்களிடம் முருகப்பெருமான் ஒருபோதும் நெருங்கவே மாட்டாராம். மிண்டராற் காணக் கிடையானே என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள். ஆனால் அதே சமயம் குரு சேவை செய்து குரு சொல்லே மந்திரம் எனக் கடைபிடித்து, குருவே பரம்பொருள் என உணர்ந்து, குரு உருவே தியானம் என நினைந்து நாளும் குருவைத் தொழுது கௌமார நெறியாகிய குரு நெறியில் நிற்பவர்களை ஓடோடி வந்து மிக எளிமையாக நமது அருகிலேயே இருப்பாராம் முருகப்பெருமான். இதைத் தொண்டரால் காணப்பெருவோனே என்கின்றார் அருணகிரிநாத சுவாமிகள். எனவே இறைவனார் நல்ல தொண்டர்தம் உள்ளத்தொடுக்கம், தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே எனும் ஔவையாரின் வாக்கின்படி தொண்டர்களுக்கு தொண்டராய் வாழ்ந்து தண்டபாணிக் கடவுளின் அருள் பெருவோம்.
                                                   
                                                                  ஔவையார்
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                                  
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
                          ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                 சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!