மருதமலை
அறுமுகமுடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வாய்ந்தது மருதமலை
முருகன் கோவில். அறு படை வீடுகளைக் கொண்டு குன்று தோறும் குமரன் எழுந்தருளி
இருக்கும் இந்த மருதமலை 7-வது படைவீடு என
பக்தர்களால் போற்றி வணங்கப்படுகின்றது. எழில் கொஞ்சும் இயற்கையான சூழலில் அமைந்திருக்கும் மருதமலை, அதன் மூன்று புறங்களிலும் மலை அரண்களால் சூழப்பட்டு
உள்ளது. கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலைகளின் இயற்கை அமைப்போடு சேர்த்து
பார்க்கும் போது மயில் தோகை விரித்தாற்போல் காட்சி அளிக்கிறது. இதனால் முருகன் மயில் மீது அமர்ந்த தோற்றம் தெரிகின்றது. மருத மரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என
வழங்கப்படுகிறது. மேலும் மருதமால்வரை, மருதவரை, மருதவெற்பு, மருதக்குன்று, மருதலோங்கல், கமற்பிறங்கு, மருதாச்சலம், வேள்வரை என்றெல்லாம் பேரூர் புராணத்தில் கூறப்படுகிறது. எனவே மருதமரங்கள் அடர்ந்த மலை என்ற பொருளில்
மருதாச்சலம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த மலைச் சாரலில் 3 கற்கள் மாறுபட்ட நிறத்துடன் இருப்பதை காணலாம்.
அதாவது இந்த மூன்று கற்களும் சிலையாகி போன திருடர்கள் என்பார்கள். ஒரு முறை
முருகன் அடியார்கள் கோவில் திருப்பணி நடந்த போது பொன், பொருளை உண்டியலில் போட்டனர். இதைக் கண்ட 3 திருடர்கள் ஒரு நாள் இரவில் வந்து உண்டியலை உடைத்து பொன்னையும், பொருளையும் திருடி மலைச்சரிவு வழியாக சென்றனர்.
அப்போது முருகப் பெருமான் குதிரைவீரனைப் போல் சென்று அவர்களைப் பிடித்து 'நீங்கள் கற்சிலைகளாக மாறுவீர்' என சபித்தாராம். இதனால் அந்த திருடர்கள் 3 பேரும் கற்சிலைகளாக நிற்பதாக செவிவழிச் செய்தி
கூறுகிறது.
அருணகிரிநாத
சுவாமிகள் பாடிய கந்தர் அலங்காரம், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடிய தமிழ்
அலங்காரம், வேல் அலங்காரம் போல் மருத மலை மீது நமது சிரவையாதீன இரண்டாம் குரு மஹா
சந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள் மருதமலை அலங்காரம் எனும்
பாடல்களைப் பாடி உள்ளார்கள்.
தவத்திரு. கந்தசாமி சுவாமிகள்
திசைஆறும் திருமுகமாய் சமயங்கள் திருப்புயமாய்
இசை வேத ஆகம நிச்சயம் தாள்கள் இரண்டெனக்கொண்டு
அசையாப் பரம் தண்டம் ஏந்துகைத் தேசிகனாம்
நசையாய் அடியர் தொழ மருதாசலம் நன்னியதே
இது
மருதமலை அலங்காரத்தில் ஒரு பாடல் ஆகும். இப்படி பல பெருமைகளை உடைய மருதமலை மீது
நமது கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத்
திருப்புகழ்.
மருதமலைத் திருப்புகழ்
திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
பருவரை யதனை உருவிட எறியும்
அறுமுகமுடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவோனே!
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!
விளக்கம்
திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
(முப்புரத்தை ஒரு நொடியில் எரித்து அருளிய
சிவனின் வாழ்வே)
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
(கோபமுடைய அசுர்ர்கள் மனம்
வெருவ மயிலை வேகமாக செலுத்துபவனே)
பருவரை யதனை உருவிட எறியும்அறுமுகமுடைய வடிவேலா!
மதன்விடு பகழி தொடலாமோ!
(காமன் விடும் அம்புகளால்
இளமையான தனங்களை உடையவர்ள் மீது நான் காம வயப்படலாமோ)
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவோனே!
(யானை முகமும் பெரிய
வயிரும் உடையவர் பிறகு வருபவனே)
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
(பெரிய தனங்களை உடைய
குறமகளாகிய வள்ளியை கருணையோடு அணைக்கும் மணிகள் அணிந்த மார்பை உடையவனே)
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
(பாம்பின் மீது படுத்து
உறங்கும் ஹரியின் திரு மருகனே, மருதமலைக்கு அணியாக இருப்பவனே)
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!
(அடியவர்கள் வினையும், அமரர்கள் துயரும்
நீங்கும்படியாக அருளி உதவும் பெருமாளே)
பாம்பாட்டி சித்தர், சாண்டோ சின்னப்பா
தேவர், பித்துக்குளி முருகதாஸ் போன்றவர்களுக்கு முருகப்பெருமான் அனுக்கிரகம்
புரிந்த தலம் இந்த மருதமலை.
பாம்பாட்டி சித்தர்
சின்னப்பா தேவர் ஐயா
பித்துக்குளி முருகதாஸ்
எமது ஞானதேசிகர் சிரவையாதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் ஒவ்வொரு கந்தர் சஷ்டி பெருவிழாவின் ஐந்தாம் நாள் மருதமலை சென்று வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அதே போல் ஒவ்வொரு தை மாதம் 1ம் தேதியன்று மருதமலையில் படி விழா மிகவும் சிறப்பாக நடந்ததாகவும் அந்த விழாவில் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் தவறாமல் வந்து கலந்து கொண்டு திருப்புகழைப் பாடிக் கொண்டே அனைவரும் மலை ஏறி மருதமலையானை மனமாறச்சேவிப்பார்கள் என்றும் தற்போது கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த படி விழா நடக்கவில்லை என்றும் எமது ஞானதேசிகர் சிரவையாதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். எனவே தெய்வ அனுக்கிரகம், தெய்வ அனுபூதி வேண்டும் என்பவர்கள்
மருதமலை சென்று இந்தத் திருப்புகழை ஓதி மருதாசல மூர்த்தியின் இன்னருள் பெற்று
உய்யுமாறு உள்ளன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக