புதன், 3 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-23

                                                                  சென்னிமலை
சென்னிமலை ஈரோட்டில் இருந்து பழனி செல்லும் வழியில் 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  முருகப்பெருமான் மீது திருப்புகழைப் பாடிய அருணகிரிநாத சுவாமிகளுக்கு, சென்னி மலை முருகப்பெருமான் படிக்காசு வழங்கி திருவிளையாடல்  நடத்தி அருள்பாலித்து ஆட்கொண்டிருகின்றார். சென்னிமலை முருகன் கோவிலில் செவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களையும் காணலாம். ஏனெனில் இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே இத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும் அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகல கிரக பீடைகளும் உடனே விலகும். இந்த சென்னிமலை மீது இரண்டு முகம் உள்ள அக்னிஜாதர் எனும் முருகப்பெருமானின் திரு உருவத்தைக் காணலாம்.
கந்தசஷ்டி கவசம் இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள் அதனை எங்கே அரங்கேற்றம் செய்வது என தவித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான், சென்னிமலையில் அரங்கேற்றம் செய் என்று கூறி அருளினார். அதன்படி சென்னிமலையில், துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம்போம், நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் எனத் தொடங்கும் கந்தசஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்தார் பாலன் தேவராயர் சுவாமிகள். 
                                                   
                                                        பால தேவராய சுவாமிகள்
மாட்டு வண்டி மலையேறும் அதிசயம், மமாங்க குளத்தின் அதிசயம், சிரசுப்பூ உத்தரவு கேட்டு அதன்படியே நடக்கும் அதிசயம் மட்டுமல்ல சென்னிமலை முருகன் மூலவரே ஒரு அதிசயம்தான்.  
                                      
                                       மாட்டு வண்டி சென்னிமலை மீது ஏறுதல்
நீண்ட நாட்களாக மணலால் மூடப்பட்டுக் கிடந்த மூலவர்  சிலையின் மேல்பகுதியில் இருந்து இடுப்பு வரை நல்ல வேலைப்பாட்டுடன் மிகவும் அழகாக வடிக்கப்பட்டிருந்தது. இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகள் முறையான வேலைப்பாடு இல்லாமல் கரடு, முரடாக இருந்தது. அதை சிற்பி செதுக்க முற்படும்போது மனிதனுக்கு போன்றே அந்த சிலையில் இருந்து இரத்தம் வந்ததாம். உடனே சிற்பி சிலையைச் செதுக்காமல் அப்படியே பிரதிஷ்டை செய்து விட்டாகள். எனவே மூலவராக உள்ள முருகப்பெருமானின் சிலை இடுப்புக்கு கீழே உள்ள பகுதி வேலைப்பாடற்ற நிலையில் கரடுமுரடாகத்தான் இருக்கும். 
                                                
                                                சென்னிமலை முருகன் மூலவர்
சென்னிமலை மீது புகழ்பெற்ற பின்னாக்கு சித்தர் கோவில் உள்ளது. நமது அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் சென்னிமலை, சிவன் மலை, பழனி எனும் மூன்று மலைகளை ஒரே நாளில் ஏறி வழிபட்டு அந்த மூன்று மலைகளிலும் தீர்த்தங்கள் எடுத்து வந்து நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் உள்ள ஸ்ரீஞானஸ்கந்தக் கடவுளுக்கு அபிடேகம் செய்வது ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகின்றது. 
                                              ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி அந்தியூர்
இப்படிப்பட்ட அதிசயம் அனேகமுற்ற சிரகிரியான சென்னிமலை மீது அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத் திருப்புகழாக மலர்கின்றது.
சென்னிமலைத் திருப்புகழ்
பகலிரவினிற் ...... றடுமாறா
     பதிகுருவெனத் ...... தெளிபோத
ரகசியமுரைத் ...... தநுபூதி
     ரதநிலைதனைத் ...... தருவாயே
இகபரமதற் ...... கிறையோனே
     இயலிசையின்முத் ...... தமிழோனே
சகசிரகிரிப் ...... பதிவேளே
     சரவணபவப் ...... பெருமாளே.

விளக்கம்
பகல் இரவாகிய நினைவு மற்றும் மறப்பு என்ற நிலைகளிலே தடுமாறாது, முருகனே குருநாதன் என்று தெளிகின்ற ஞானத்தின் பரம ரகசியத்தை அடியேனுக்கு உபதேசித்து, அனுபூதி நிலையினைத் தந்தருள்வாயாக. இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனாக விளங்குபவனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியவனே, இவ்வுலகில் மேலான திருச்சிரகிரி மலையின் செவ்வேளே, சரவணபவப் பெருமாளே.
                                      

சென்னிமலையைப் பற்றி நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வந்துள்ள மேலும் சில அபூர்வத்தகவல்களை இந்த இணைப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள்
                                               
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

                            ஓம்ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                   சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக