வெஞ்சமாக்கூடல் எனும் இத்தலம் கருவூருக்கு தெற்கில் அரவக்குறிச்சி பாதையில் உள்ள ஆறுரோடு பிரிவில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.
சுந்தரரால்
பாடப்பெற்ற தலம். கோவில் அருகில் சிற்றாறு உள்ளது.பழைய கோவில் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டதால்
புதிய கோவில் நிறுவப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது. கோவில் பள்ளத்தில் உள்ளது.
15 படிகள் இறங்கிச் செல்லவேண்டும். ஆறுமுகக்கடவுளுக்குத் தனிச் சந்நிதி உண்டு. 63
நாயன்மார் சிற்பங்கள் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன. வெஞ்சன் என்ற அசுரன் வழிபட்ட
தலம். சிவபெருமான் தன் பக்தையான ஒரு கிழவியிடம் தன் பிள்ளைகளை ஈடு காட்டி
பொன்பெற்று சுந்தரருக்குக் கொடுத்ததாக வரலாறு சொல்கின்றது.
சுந்தரர்
இன்றும்
பிள்ளை தத்தெடுப்போர் இக்கோவிலில் இறைவரிடம் தவிட்டுக்கு வாங்குவது காலம் காலமாக
நடந்து வருகின்றது. சிரவையாதீனம் மூன்றாம் குரு
மஹா சந்நிதானம் தவத்திரு கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள் இந்த திருத்தலத்திற்கு
பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளார்கள்.
கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்
” எறிக்குங்
கதிர்வேயுதிர் முத்தமொடேல மிலவங் கந்தக் கோலமிஞ்சி
செறிக்கும்
புனலுட் பெய்து கொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக்குந்த்தழை
மாமூடப் புன்னை ஞாழல் குருக்கத்தி கண்மேற் குயில் கூவலறா
வெறிக்குங்
கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியெனையும் வேண்டுதியே”
என்று
சுந்தரர் இந்த தலத்தைப் பாடியுள்ளார். நமது கௌமார குரு நாதர் அருணகிரிநாத சுவாமிகள் இத்தலத்தின்
முருகன் மேல் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத் திருப்புகழாக மலர்கின்றது.
குரங்கு எவ்வாறு
மரக்கிளைகளைத் தாண்ட
வல்லதோ அவ்வாறே நானும் காலனின் பாசக் கயிற்றின் பிணிப்பைத்
தாவும் வல்லமை பெறுமாறும்,
செண்டாயுதத்தை எறிந்தால் எவ்வாறு
பகை மாய்க்கப்படுகிறதோ அவ்வாறு நான் பாசங்களுடன் போராடி
வெல்லுமாறும்,.
அலைந்து திரியும் என் மனத்தை
மாய்த்து சும்மா இருக்கச் செய்து மெய்யறிவைத் தந்தருள்வாயாக. உன் அடியார்களால் காணப்பெறும்
தன்மை உடையவனே,
தூய்மையான தலமாம் திருவேற்காட்டில் வாழ்பவனே,
திருவேற்காடு முருகப்பெருமான்
ஆணவம் மிக்கவர்களால் காணக்
கூடாதவனே, வெஞ்சமாக்
கூடற் பெருமாளே.
ஆணவம் மிக்க சூரனை அழித்தல்
என்று பக்தியால் பணிந்து பற்றியே மாதிருப்புகழ் பாடியுள்ளார்
அருணகிரிநாத சுவாமிகள். இதோ அந்தத் திருப்புகழ்
வண்டுபோற்
சாரத் ...... தருள்தேடி
மந்திபோற்
காலப் ...... பிணிசாடிச்
செண்டுபோற்
பாசத் ...... துடனாடிச்
சிந்தைமாய்த்
தேசித் ...... தருள்வாயே
தொண்டராற்
காணப் ...... பெறுவோனே
துங்கவேற்
கானத் ...... துறைவோனே
மிண்டராற்
காணக் ...... கிடையானே
வெஞ்சமாக்
கூடற் ...... பெருமாளே.
மரணபயம்
இருப்பவர்கள், அடிக்கடி ஆலயம் சென்று மன அமைதி தேடுபவர்கள் எதிரி தொல்லையால்
அவதிப்படுபவர்கள், நான் எனும் அகங்காரம் அதிகம் உள்ளவர்கள், புத்திரபாக்கியம்
இல்லாதவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் பொருட்டு 90 நாட்கள் இந்தத்
திருப்புகழைத் தினமும் காலை மாலை உடல் மனத் தூய்மையுடன் கிழக்கு நோக்கி அமர்ந்து
பாராயணம் செய்து 90வது நாள் வெஞ்சமாக்கூடல் சென்று அங்கு உள்ள முருகப்பெருமானுக்கு
அபிடேக ஆராதனையுடன் 108 செந்தமிழ் மந்திர அர்ச்சனைகள் செய்து வழிபட்டால்
தொண்டர்களுக்கு எளிமையாகக் காட்சி தரும் முருகப்பெருமான் அருள் உங்களுக்குக்
கிடைத்து அடியவர் இச்சையில் எவை எவை உற்றனவோ அவை தருவித்து நம்மை ஆட்கொள்வார் அந்த
ஆறுமுகப்பெருமான் என்பது திண்ணம்.
திருப்புகழ் பாராயணம் செய்தல்
நான்
பெரிய பணக்காரன், நான் பெரிய தொழிலதிபர், நான் பெரிய பேச்சாளன், நான் பெரிய
எழுத்தாளன், நான் பெரிய அறிஞர், நான் பெரிய அரசியல்வாதி, நான் பெரிய வித்வான்
என்று எல்லாமே நான் நான் நான் என்று அகந்தையில் இருப்பவர்களிடம் முருகப்பெருமான்
ஒருபோதும் நெருங்கவே மாட்டாராம். மிண்டராற் காணக் கிடையானே என்கிறார் அருணகிரிநாத
சுவாமிகள். ஆனால் அதே சமயம் குரு சேவை செய்து குரு சொல்லே மந்திரம் எனக் கடைபிடித்து,
குருவே பரம்பொருள் என உணர்ந்து, குரு உருவே தியானம் என நினைந்து நாளும் குருவைத்
தொழுது கௌமார நெறியாகிய குரு நெறியில் நிற்பவர்களை ஓடோடி வந்து மிக எளிமையாக நமது
அருகிலேயே இருப்பாராம் முருகப்பெருமான். இதைத் தொண்டரால் காணப்பெருவோனே
என்கின்றார் அருணகிரிநாத சுவாமிகள். எனவே இறைவனார் நல்ல தொண்டர்தம்
உள்ளத்தொடுக்கம், தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே எனும் ஔவையாரின்
வாக்கின்படி தொண்டர்களுக்கு தொண்டராய் வாழ்ந்து தண்டபாணிக் கடவுளின் அருள்
பெருவோம்.
ஔவையார்
நன்றி:
சிரவையாதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த
உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்,
அந்தியூர்.
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக