புதன், 3 பிப்ரவரி, 2016

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி-36

                                                                      அவிநாசி
நமது ஜீவ நாடியில் வருகின்ற வாக்கு அப்படியே நூறு சதம் பலித்து வருகின்றது. ஒரு முறை நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தின் அடியார்களுடன் கொங்கு ஏழு ஸ்தலங்கள் என்று போற்றப்படும் சிவாலயங்களைத் தரிசித்து வருமாறும் அங்கு பல்வேறு திருவிளையாடல்களை நடத்துவதாகவும் முருகப்பெருமான் உரைத்தார். இதைக் கேட்ட அடியார்கள் சுவாமி உடனே செல்வோம் என்றார்கள். அது மார்கழி மாதம் இறை வழிபாட்டுக்குரிய மாதம்தான் முருகன் உரைத்திருப்பதால் செல்லலாம் என்றேன். மகிழ்ச்சி அடைந்த அடியார்கள் என்ன திருவிளையாடல்கள் நடக்கப் போகின்றதோ என எண்ணி மகிழ்ந்து சிவாலயப் பயணத்திற்குத் தயாரானார்கள். கொங்கு நாட்டில் சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் ஏழு. அந்த பாடல் பெற்ற ஏழு ஸ்தலங்களுமே கொங்கு ஏழ் ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை அவிநாசி, திருமுருகன்பூண்டி, பவானி முக்கூடல் கூடுதுறை, கொடுமுடி, திருச்செங்கோடு, கரூர், திருவெஞ்சமாக் கூடல், ஆகியவையாம். இந்த ஏழில் முதல் ஸ்தலம் அவிநாசி. இவ்வூரின் பழம்பெயர் திருப்புக்கொளியூர் ஆகும். இறைவன் ஆடிய அக்னிதாண்டவம், கண்டு அஞ்சிய தேவர்கள் புகுந்து ஒளிந்து கொள்ளவும், பின்னர் அவர்களுக்கு அருளவும் செய்த இடம். புக்கு ஒளி ஊர் புக்கொளியூர் ஆயிற்று. இப்போதுள்ள பெயர் அவிநாசி ஆகும். அவிநாசி என்றால் பெருங்கேட்டை நீக்கவல்லது என்று பொருள்படும். தேவார காலத்தில் இவ்வூரின் பெயர் திருப்புக்கொளியூர் என்றும், திருக்கோயிலின் பெயர் அவிநாசி என்றும் வழங்கின. காலப்போக்கில் கோயிலை ஒட்டி வளர்ந்த நகரம் அவிநாசி என்று பெயர் பெற்றது. திருப்புக்கொளியூர் இன்று கோயிலின் தெற்கே சிறிது தொலைவில் ஓர் சிற்றூராக உள்ளது. இவ்வூர், சென்னை - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.  நள்ளாற்றின் கரையில் நலம் பெற இயங்கும் திருக்கோயில் கிழக்கு நோக்கிய சன்னதி. கோவில் முன்புறம் ஒரே கல்லாலான தீபஸ் தம்பம் உள்ளது. சுமார் 70 அடி உயரம் உடையது. இதன் அடியில் கிழக்கில் விநாயகரும், மேற்கில் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், வடபுறத்திலும், தென்புறத்திலும் முதலை வாயிலிருந்து பிள்ளை வெளிப்படும் சிற்பங்களும் உள்ளன. இந்த தீபஸ்தம்பம் கொங்கு நாட்டுக்கே சிறப்பாக உரியது. கொங்கு நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களின் முன்புறம் இந்த தீபஸ் தம்பம் இருப்பது ஒரு சிறப்பு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவிநாசி ஈசனை வழிபட வந்தார். அப்போது அங்கு எதிரெதிரே இருந்த இருவீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடைபெற்று சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. மற்றொரு வீட்டில் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. அழுகுரல்  வந்த வீட்டிற்கு சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள், அதற்கான காரணத்தை கேட்டார். அப்போது இரு வீட்டிலும் நான்கு வயதுடைய குழந்தைகள் இருந்ததாகவும், தங்கள் வீட்டில் உள்ள குழந்தையை குளத்தில் நீராடச் சென்ற போது முதலை இழுத்துச் சென்று விட்டதாகவும், அந்தக் குழந்தையும் இருந்திருந்தால், எதிர் வீட்டில் உள்ளவர்களைப் போல தற்போது பூணூல் கல்யாணம் செய்து வைத்திருப்போம்' என்று கண்ணீர் மல்கியபடி கூறினர். அவர்கள் மீது இரக்கம் கொண்டு சுந்தரர், அவ்வீட்டாரை அழைத்துக் கொண்டு தாமரைக் குளக்கரைக்குச் சென்றார். அந்த குளத்தில் அச்சமயம் நீர் வற்றிப் போயிருந்தது. அவிநாசியப்பரை மனதில் நிறுத்தி, 'எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே' என்றுத் தொடங்கி பதிகம் பாடினார் சுந்தரர். தொடர்ந்து நான்காவது பாடலை, 'உரைப்பார் உரையுகந்து உள்க வல்லால் தங்கள் உச்சியாய்! அரைக்காடு அரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்! புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே! கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே!' என்று பாட அந்த அதிசயம் அடுத்த நொடியே அங்கு அரங்கேறியது. வறண்டு போய் கிடந்த குளம் திடீரென்று தண்ணீரால் நிரம்பித் தாமரையால் சிரித்தது. கூடவே ஒரு முதலையும் கரை நோக்கி வந்தது. சிவனும் பிரம்மாவும் உருவத்தைக் கொடுக்க, எமன் உயிரைக் கொடுக்க, திருமால் உடலை வளர்க்க, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விழுங்கிய அதே நான்கு வயது பாலகை, அதே முதலை தற்போது ஏழு வயது பாலகனாக உமிழ்ந்து விட்டு ஒதுங்கியது. முதலையில் வாயில் இருந்து மீண்ட அந்தப் பிள்ளைக்கு அவிநாசியப்பர் சன்னிதியிலேயே, பூணூல் கல்யாணம் செய்து வைத்தார் சுந்தரர். அவிநாசியில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் 'முதலைவாய்ப் பிள்ளை உற்சவம்' நடைபெறுகிறது.
                                                           
                                                                           சுந்தரர்
இத்தகைய சிறப்பு பெற்ற அவினாசித்தலத்தில் அடியார்களுடன் சென்று திருமுறைகளை ஓதிக் கொண்டே கூட்டு வழிபாடு செய்தோம். அவினாசியில் இருக்கும் அர்ச்சகர்கள் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்திற்கு அடிக்கடி வருபவர்கள் ஆதலால் எங்களை இன்முகத்துடன் வரவேற்று நல்ல தரிசனம் செய்து வைத்தார்கள். சிவாலயம் சென்றால் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வரவேண்டும் என்ற நியதியில் வழிபாடு முடித்து வெளிப்பிரகாரத்தில் வந்து அமர்ந்து தியானத்தில் இருந்தோம். தியானம் முடித்து கண்களைத் திறக்கையில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
சென்ற சில இதழ்களில் பேரூர் மட்த்தில் காசியில் இருந்து வந்திருந்த ஒரு பழுத்த சிவனடியாரை தரிசனம் செய்த்த்தையும் அதைப்பற்ரி பின்பு சொல்கின்றேன் என்று எழுதியிருந்தேன் அல்லவா அந்த அதே சிவனடியார் புன்னகை பூத்த முகத்துடன் எங்களுக்கு எதிரே அமர்ந்து கொண்டிருந்தார். எங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே அவரைத் தெரியும் மற்ற அடியார்களுக்குத் தெரியாது. உடனே அவரிடம் அனைவரும் ஆசி வாங்கினோம். அவர் ஓம் நமசிவாய....என உரக்க உச்சரித்துக் கொண்டே இருந்தாரே தவிர எந்தவித பதிலும் சொல்லவில்லை. நாங்கள் ஏற்கனே சந்திருந்த்தது மறந்துவிட்டார் போலும் என்று ஆசி மட்டும் வாங்கிக் கொண்டோம். சரி இதுவே பெரிய அதிசயம்தானே என்று விடைபெற்று அடுத்த ஸ்தலமான திருமுருகன் பூண்டி செல்ல ஆயத்தமானோம். எங்கள் வாகனம் அருகில் சுவாமியும் வந்து அடுத்து எங்கோ செல்ல ஆயத்தமானார். நான் உடனே திருமுருக விஜயகுமார் அடியவரிடம் சுவாமி நம்முடன் வருவதாக இருந்தால் வரச்சொல் செல்வோம் என்று சொன்னேன். அவரும் சுவாமியிடம் கேட்க அவர் பதில் ஏதும் சொல்லாமல் வந்து எங்கள் வண்டியில் ஏறி அமர்ந்துவிட்டார். சுவாமி நாங்கள் அடுத்து திருமுருகன் பூண்டி செல்கின்றோம் போவோமா என்று கேட்டேன். நான் இப்போதுதான் அங்கிருந்து வருகின்றேன் சரி பரவாயில்லை உங்களுடன் வருகின்றேன் என்று கன்னடத்தில் பதில் சொன்னார். எனக்கு கன்னடம் பாதி நன்றாகவே புரிந்த்தது. அதை அனைத்து அடியார்களுக்கும் விளக்கிச் சொன்னேன். அப்போதுதான் எனது முதல் குரு தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் எனக்கு செய்த உபதேசம் புரிந்த்து.
அது என்ன? இந்த பயணம் ஆரம்பிக்கும் ஒரு வாரம் முன்பு சில அடியார்களுடன் எனது முதல் உபதேச குரு தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்களைச் சந்தித்து ஆசி பெறச் சென்றேன். என் மீது அவருக்கு அவ்வளவு பிரியம். எனக்கும் அவர் மீது அளவு கடந்த அன்பு. நான் சென்றுவிட்டால் அவர் எப்போதுமே மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று எல்லா வேலைகளையும் தூக்கி எறிந்துவிட்டு என்னிடம் மணிக்கணக்கில் பேச அமர்ந்துவிடுவார். அது வெறும் பேச்சாக இருக்காது அருள்வாக்காவே இருக்கும். குறிப்பாக உபதேசமாகவே இருக்கும். முருகனை பற்றி அவர் பேசினால் எனக்கு உள்ளம் குழைந்து கண்ணீரே பெருகிவிடும் அப்படிப் பேசுவார். பேச்சி வாக்கில் உனக்கு கன்னடம் தெரியுமா? என்று கேட்டார். நான் தெரியாது சுவாமி என்றேன். விரைவில் கன்னடம் கற்றுக் கொள் உனக்கு அது பயன்படும் என்றார். நான் சுவாமி எனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும் எனவே சமாளித்துவிடுவேன் என்றேன். இல்லை இல்லை கன்னடம்...கன்னடம்..என்று ஏதோ முனுமுனுத்தார். அந்த உபதேசம் இந்த காசி சுவாமிகள் கன்னடம் பேசும் போது சுரீர் என்று பட்டது. ஆங்கிலம் தெரிந்து என்ன பயன் இப்போது கன்னடம் தெரிந்திருந்தால் இந்த காசி சுவாமிகள் சொல்வது முழுதும் புரிந்திருக்குமே! குரு வாக்கு என்றும் பொய்ப்பதில்லை என்பதற்கு இதுவே சாட்சி. இந்த விஷயம் தெரிந்த அடியார்களும் கன்னடம் பற்றி பேசிக் கொண்டார்கள். நான் அமைதியாய் அடுத்து காசி சுவாமிகள் என்ன சொல்கின்றார் என்பதைக் கூர்ந்து கவனித்தேன். அவர் தமிழ் கலந்த கன்னடத்தில் செய்த உபதேசங்கள்.
ஸ்ரீஸ்கந்த உபாசகருடன் காசிசுவாமிகள்
  1. உங்களை ஏற்கனவே பேரூர் மடத்தில் பார்த்திருக்கின்றேன் பேண்ட் சட்டையில் இருந்தீர்கள். ஆனாலும் முகத்தில் ஒரு ஒளி தெரிந்தது, அடுத்து கழுத்தைப் பார்த்தேன் ஒரு பெரிய ருத்திராட்சம் தெரிந்தது. உடனே மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் என்னை நமஸ்கரித்த உடனேயே ருத்திராட்சம் போட்டிருக்கிறாரே நமஸ்கரிக்கத் தேவையில்லை என நினைத்து நான் அப்போது எதுவும் பேசவில்லை. ஓம் நமசிவாய...ஓம் நமசிவாய....
  2.  நீங்கள் பேசவில்லையே என்று வருத்தமாக இருந்தேன் இவ்வளவு நினைவில் வைத்திருக்கின்றீர்களே சுவாமி அது என் பாக்கியம் என்றேன் நான். அதற்கு அவர் ஓம் நமசிவாய...என்று மட்டும் பதில் உரைத்தார்
  3. தொடர்ந்து பேசினார், இங்கு அவினாசியில் உங்களைப் பார்த்த உடனேயே பேரூர் மடத்தில் பார்த்த முகம் இது ஆனால் இன்று காவி உடையில் வந்திருக்கிறார் என்று மகிழ்ச்சி அடைந்தேன். இந்த உடை உங்களுக்குப் பொருத்தமாக இருக்கின்றது என்றார். மிக்க மகிழ்ச்சி சுவாமி என்றேன்.
  4. இப்படி அடியார் கூட்டத்தோடு ஸ்தலங்களைத் தரிசனம் செய்வது மிக நல்லது ஆனால் அங்கும் இங்கும் அலைவதால் மட்டும் பிரையோசனம் இல்லை என்றார். அதாவது கோவில் கோவிலாக சுற்றிக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது என்றார்.
  5. அவர் முன் சீட்டில் அமர்ந்து இருந்த்தால் அவர் தலையில் அணிந்திருந்த ஒரு வில்வம் பின் சீட்டில் அமர்ந்திருந்த என் மீது வந்து விழுந்தது மிகுந்த பக்தியோடு எடுத்துக் கொண்டேன்.
  6. காசி சுவாமிகள் தொடர்ந்து சொன்னார், நான் பசு, சிவ பெருமான் பதி  நான் சிவனைக் கல்யாணம் பண்ணிக்கொண்டேன். சிவனே எனக்குக் கணவர் பதி பசு பாசம் என்று இன்னும் நிறையாக ஏதோதோ கன்னடத்தில் சொன்னார். எனக்கு பாதிதான் புரிந்த்து.
ஸ்ரீஸ்கந்த உபாசகர் மற்றும் காசி சுவாமிகளுடன் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரம அடியார்கள்
இப்படிப் பேசிக்கொண்டும் உபதேசம் கேட்டுக் கொண்டும் செல்லும் போது திருமுகன் பூண்டி எனும் இரண்டாவது ஸ்தலத்தை அடைந்தோம். வண்டியை விட்டு கீழிறங்கி வேகமாக கோவிலுக்குள் சென்றுவிட்டார். பின் தொடர்ந்தோம். அப்போது ஒருவர் வந்து எங்கள் அனைவருக்கும் ருத்திராட்சம் ஒன்றைக் கொடுத்தார். அதைப் பார்த்த சுவாமிகள் ருத்திராட்சமே மிக உயர்ந்தது என்றும் அதை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்றும் எங்கள் அடியார்கள் அணிந்திருந்த மற்ற மாலைகளைக் காட்டி இதையெல்லாம் தூக்கி எறியுங்கள் ருத்திராட்சம் போடு....ருத்திராட்சம் போடு... என்று என்னைப் பார்த்து இதை இவர்களுக்கு உபதேசித்து சரியான வழியில் கொண்டு செல் என்றார். சரி சுவாமி என்றேன். திருமுருகன்பூண்டி எனும் இந்த ஸ்தலம் முருகப் பெருமான் வழிபட்ட தலமாகும். அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர் செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூத கணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக்கொண்ட தலம் எனக்கூறப்படுகிறது. இத்தலம் பிரம்ம ஹத்திதோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால் பக்தர்கள் பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.
இந்தத் தகவல்களையெல்லாம் அந்தக் கோவிலில் அறிந்து கொண்டோம். என்னிடம் வந்த மற்ற அடியார்கள் ஒவ்வொரு புறமாகப் பிரிந்து சென்று வழிபாடுகளை நடத்தினர். நான் காசி சுவாமிகளுடேனேயே இருந்தேன். அப்போது என்னிடம் வந்து ஒரு அடியவர் சுவாமி உங்களைப்பற்றி ஒருவர் விசாரித்தார் சொன்னேன் உங்களிடம் இருக்கும் பக்தியால் உங்கள் பின்னாலேலேயே வந்திவிடலாம் போலிருக்கிறது என்று சொல்கிறார் என்றார். நான் அதைப்பற்றி பெரிது படுத்தவில்லை. அதைப் புரிந்து கொண்ட காசி சுவாமிகள் பெரிய ஒலி வருமளவு சிரித்துவிட்டு அது உண்மைதான் கார்த்திகேயன் அருள்....ஓம் நமசிவாய...ஓம் நமசிவாய...என்றார். இது அனைத்தும் சத்தியமான உண்மை. அதற்கு என்னுடன் வந்த அடியார்களே சாட்சி. அடுத்து ஒரு பெரிய அதிசயமே நடந்தது. தொடர்ந்து பார்ப்போம்........(தொடரும்...)
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக