செவ்வாய், 24 ஜூலை, 2018

முருகப் பெருமான் - குறிஞ்சிக் கிழவன்

#குறிஞ்சிக்_கிழவன்:
#முருகன் குறிஞ்சி நிலக் கடவுள் என்பதைத் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களால் அறியலாம். உலகிலுள்ள ஆன்மாக்கள் ஆணவமலத்தால் கட்டுண்டு கிடப்பதைக் கண்டு, பேரிரக்கம் கொண்டு, அவற்றை உய்விக்கும் பொருட்டுச் சிவசக்தியாகிய பரமேசுவரி தனு கரண புவன போகங்களை உண்டாக்கி, அனுபவிக்கச் செய்து, ஆன்மா பரிபக்குவ நிலையடைந்தவுடன் சிவத்துடன் கலக்கச் செய்து பேரின்பப் பெருவாழ்வு வாழச் செய்வார்.

இப்படிப்பட்ட அன்னை #உண்ணாமுலையிடம் கந்தன் ஞானமாகிய பால் அருந்தி சரவணப் பொய்கையிலுள்ள தாமரை மலராகிய தொட்டிலில் ஏறிக் கார்த்திகை மாதர் அறுவரின் திருமுலைப்பாலை உண்டு மகிழ்ந்தார். அப்போது #உமையம்மையார் கண்ணுதற் கடவுளுடன் சென்று அவ்வுருவம் ஆறினையும் தன்பொற்கரங்களால் எடுத்து அணைத்துக் #கந்தன் எனப் பெயரிட்டு உச்சிமோந்து மகிழ்ந்தார்.


முருகன் பல திருவிளையாடல்களைப் புரிந்து வளர்ந்து கடலின் நடுவில் தோன்றித் துன்பம் செய்த கிரவுஞ்ச மலையை அழித்துச் சூரசம்காரம் செய்தான். 

இளமையும், அழகும், அலங்காரமும் உடைய முருகனை, குறிஞ்சி நிலத்துக்கு உரியவன் (#குறிஞ்சிக்_கிழவன்) என்று #கந்தர்_அலங்காரம் கூறும். 
அழகனை, இளைஞனை, முருகனை வயதான கிழவன் என்று #அருணகிரிநாதர்கூறுகிறார். முருகன் தோன்றியவுடனே நாம் அழியப் போகிறோம் என்று எண்ணி கடலும், கிரவுஞ்ச மலையும், சூரபதுமனும் அழுதார்களாம்.
இன்னோரன்ன முருகன்பிறப்பு, வளர்ப்பு, சூரசம்காரம் ஆகிய விபரங்களையும், ஆன்மாக்களின் தத்துவார்த்தங்களையும் அருணகிரிநாதப்பெருமான் அழகாக கீழ்வரும் அலங்காரப் பாடலில் கூறுகிறார்.
"திருந்தப் புவனங்கள் ஈன்றபொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டிலேறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழக் குரழ விம்மிஅழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்றோதும் குவலயமே."

கஜபூசைச் சுந்தர சுவாமிகள் - வரலாற்றுச் சுருக்கம்

#தவத்திரு_கஜபூசைச்_சுந்தர_சுவாமிகள்

வரலாற்றுச் 
சுருக்கம்
கோயமுத்தூரையடுத்த #சிரவணபுரம் கௌமார மடாலயத்தின் தவ ஞானியாகவும், பெருங் கவிஞராகவும் விளங்கிய #சிரவையாதீனத்தின் இரண்டாவது குருமகா சன்னிதானங்கள் தவத்திரு. கந்தசாமி சுவாமிகளின் பூர்வாசிரமத்துத் தம்பியாகிய திரு. வேலப்பக் கவுண்டருக்கும் அவருடைய மனைவி திருமதி. சின்னமைக்கும் இரண்டாவது திருக்குமாரராக 29-11-1929 வெள்ளிக்கிழமையன்று கார்த்திகை மாதம் விசாக நட்சத்திரத்தில் நம் குருமகா சன்னிதானங்கள் தவத்திரு. சுந்தர சுவாமிகள் திரு அவதாரம் செய்தார்கள்.
☀இளமையிலேயே தவத்திரு. கந்தசாமி சுவாமிகளிடம் அடக்கம், அன்பு, பொருமை, பக்தி முதலிய சீரிய குணங்களையும் தமிழ்க்கல்வியையும் பெற்ற நம் சன்னிதானங்கள் தம் தேசிகரின் திருவருட் கருணையை முழுமையாகப் பெற்றார்கள். தவத்திரு. கந்தசாமி சுவாமிகளின் திருமேனி நலிவுற்றிருந்த கடைசி நாட்களில் நம் சன்னிதானங்கள் அவருக்குச் செய்ய வேண்டிய பணி விடைகளை எல்லாம் மிகக் கவனமாகச் செய்து தம் கண்ணைப் போலப் பேணிப் பாதுகாத்தார்கள். நம் சன்னிதானங்களின் குருபக்தி அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
☀நம் சன்னிதானங்கள் 9-2-1964 அன்று #சிரவையாதீனத்தின் மூன்றாவது குருமகா சன்னிதானமாக திருப்பழனி #தண்டாயுதபாணி சன்னிதியில் அருளாட்சி ஏற்றார்கள் என்றாலும் 1948 முதலே கௌமார மடாலயத்தின் நிர்வாகத்தைக் கௌமார மடாலயத்தில் இருந்த மூத்த துறவிகளாகிய தவத்திரு. சபாபதி சுவாமிகள், தவத்திரு. அரங்கமுத்து சுவாமிகள், தவத்திரு. சின்னசாமி சுவாமிகள் ஆகியவர்களின் ஆலோசனையுடன் கவனித்து வந்தார்கள்.
☀நம் சன்னிதானங்கள் பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்று அக்கல்லூரியிலேயே சில காலம் ஆசிரியராகவும் இருந்தார்கள். நல்ல சொற்பொழிவாற்றும் திறமையும் கவிபுனையும் ஆற்றலும் அவர்களுக்கு இயல்பாகவே அமைந்து விட்டன. அவர்களுடைய பெரியபுராண புலமையைப் பாராட்டாதாரே இல்லை.
நம் சன்னிதானங்கள் நல்ல கவிஞர். தவத்திரு. கந்தசாமி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை எண்களை வண்ணமாகப் பாடியுள்ளார்கள். இவர்களுடைய செய்யுள்கள் ஓசையினிமையும், பொருட்சிறப்பும், எளிமையும் கொண்டவை.
☀எல்லோரும் தமிழில் இறை வழிபாடுகள் நடக்க வேண்டும் என விரும்பியபோது 24-6-1953 அன்றே திருப்பேரூர் ஆதீனம் தவத்திரு. சாந்தலிங்க இராமசாமி அடிகளாருடன் இணைந்து தமிழ் அர்ச்சனையைத் தொடங்கி வைத்தார்கள். 1954 இல் கணபதியில் திருமுறைகளைக் கொண்டு திருக்குட நன்னீராட்டு விழாவை நடத்தினார்கள். தமிழக சமய வரலாற்றில் இச்செயல் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கியது எனில் மிகையன்று.
☀நம் சன்னிதானங்களாகிய சுந்தர சுவாமிகள் தலைமையில் நிறைவேறியுள்ள திருப்பணிகளுக்கும் கும்ப நன்னீராட்டிற்கும் கணக்கே இல்லை. கௌமார மடாலயத்தில் #தண்டபாணிக்_கடவுள்_திருக்கோயில் 
முன்மண்டபம், விமானம், மடப்பள்ளி, தெற்குப் பிரகார மண்டபம் ஆகியவற்றைக்கட்டி 1-6-1966 அன்று திருக் குடமுழுக்காட்டினார்கள். 1971 இல் இராசகோபுரம் கட்டப் பெற்றது. 1978 இல் அருள்மிகு கருணாம்பிகையுடனமர் அவினாசிலிங்கேசுவரரின் கற்றளி எழுந்தது. 1982 இல் பாண்டுரங்கர் ஆலயம் தோன்றியது. இந்தத் திருப்பணியில் 1994 இல் சுவர்ணபந்தன மஹா சம்ப்ரோட்சணமும் கனகாபிஷேகமும் நிகழ்ந்தன. தண்டபாணிக் கடவுள் திருக்கோயில் புதிய முறையில் கற்றளியாகப் பெருஞ் செலவில் உருவாக்கப் பெற்று 2-9-1985 அன்று திருக்குட முழுக்கு நடைபெற்றது. நம் குருநாதர் செய்வித்த அழகிய சித்திரத் தேர் (1977), வெள்ளித்தேர், வெள்ளி மயில்வாகனம் ஆகியன கலையழகுமிக்க எழிற்படைப்புகள் ஆகும்.
☀நம் சுவாமிகள் பிற திருத்தலங்களில் மேற்கொண்ட திருப்பணிகளில் திருப்பெருந்துறை, அவிநாசி, வெஞ்சமாக்கூடல் ஆகியன குறிப்பிட்டுக் கூறத்தக்க சிறப்பு பெற்றவையாகும்.
☀நம் சன்னிதானங்களால் 1957 ஆம் ஆண்டு தவத்திரு. இராமானந்த அடிகளார் உயர் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 1991 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் ஆயிற்று. 
☀1976 ஆம் ஆண்டு தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் மழலையர் பள்ளி தொடங்கப்பட்டது. தற்பொழுது மெட்ரிக் பள்ளியாக வளர்ந்து 60 ஆசிரியர்களையும் 1500 மாணவச் செல்வங்களையும் பெற்றுச்சீராக வளர்ந்து வருகிறது.

☀1987 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25, 26, 27, ஆம் தேதிகளில் நம் குருநாதர் உலகநலம் கருதி 108 ஆண் யானைகளைக் கொண்டு செய்த கஜபூசை என்னும் உலகப் பெருவேள்வியின் சிறப்பு தனிநூலாக எழுதப்பட வேண்டியது ஆகும். இதனாலேயே நம் குருநாதர் கஜபூசை சுந்தர சுவாமிகள் என வழங்கப்படுகிறார்கள். இந்த உலகப் பெருவழிபாட்டின் நினைவாக அருட்செல்வர் முனைவர் நா. மகாலிங்கம் அவர்கள் முற்றிலும் பனைமர பொருட்களாலேயே அமைந்த 120 அடி நீளமும் 54 அடி அகலமும் கொண்ட உலகப் பெருவேள்வி மண்டபத்தைத் தண்டபாணிக் கடவுள் திருக்கோயில் வளாகத்தில் கட்டிக் கொடுத்துள்ளார்கள்.
☀1984 ஆம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் நம் சுவாமிகளின் தொடை எலும்பு உடைந்துவிட்டது. அப்போது அவர்காட்டிய மன உறுதியையும் தமக்கே உரிய இயல்பான இன்முகம் மாறாத தன்மையையும் கண்டு மருத்துவர்களே வியப்புற்றனர்.
☀அடியார்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக அடிக்கடி திருத்தலயாத்திரை, முருக பக்தர்கள் பேரவை அமைப்பு, சொற்பொழிவு ஆற்றுதல் எனப் பலவகையிலும் நம் குருநாதர் இடையறாது பணியாற்றிவந்தார். சமயப் பணியையும் தமிழ்ப் பணியையும் தம் இரு கண்களாகப் போற்றி வளர்த்து வந்த நம் சன்னிதானங்கள் பவ ஆண்டு வைகாசித் திங்கள் 31 ஆம் நாள் வளர்பிறைச் சஷ்டி திதியும் மக நட்சத்திரமும் அமைந்த நாளில் (14-6-1994) பரமசற்குரு நாதரின் திருவடிகளில் ஐக்கியமடைந்தார்கள்.

☀சிரவணபுரம் கெளமார மடாலயம் அவர்கள் காட்டியருளிய நன்னெறியிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
☀“அந்தரரும் போற்ற அரும்பணிகள் செய்துயர்ந்த
சுந்தரநல்த் தேசிகரின் செவ்வழியில் –இந்தப்
பறவையினில் மக்களுக்காகப் பாடுபடல் ஒன்றே
சிரவைத் திருமடத்தின் சீர்”.

கௌமார மடாலயம் சித்திரத் தேர் வரலாறு-சுருக்கம்

சிரவணபுரம், கௌமார மடாலயம், தண்டபாணிக் கடவுள் திருக்கோயில் சித்திரத் தேர் பற்றிய வரலாற்றுச் சுருக்கம்...


#கௌமார_மடாலயம், தண்டபாணிக் கடவுள் திருக்கோயில்த் தேர் பற்றிய வரலாற்றுச் சுருக்கம்...

☀️நமது #சிரவணபுரம் கௌமார மடாலயதில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணிக் கடவுள் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள, எல்லாம் வல்ல தமிழ்க் கடவுளான #முருகப்பெருமானின் திருவடிகளுக்குச் சமர்ப்பிக்க ஒரு திருத்தேர் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம், நமது சிரவை ஆதீனம் மூன்றாம் குருமகா சந்நிதானங்கள் #தவத்திரு_கஜபூசைச்_சுந்தர_சுவாமிகள் அவர்களின் எண்ணத்தில் தோன்றியதன் காரணமாக உருவானதுதான் நமது சித்திரத் தேர்.
☀️


☀️தனிச்சிறப்புகள்:


பொதுவாக எல்லா தேர்களிலும் 5 பூதப்பார்கள்தான் இருக்கும். (தேரின் அடிப்பாகத்தில் தாங்கக்கூடிய குறுக்குக் கட்டைகள் ஒவ்வொன்றுக்கும் பூதப்பார் என்று பெயர்) ஆனால் சித்திரத் தேர் 6 பூதப்பார்களால் உருவாக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு. மேலும் 12 கோணத்தில் இதன் வடிவமைப்பு அமைந்துள்ளது.
தேரின் அடிப்பாகத்தைப் பூதங்களும், அதற்கு மேலாக கூர்மம் (ஆமை) தாங்குவதாகவும், அதற்கு மேலாக பூமாதேவியும், அதற்கு மேலாக ஆதிசேடனும் தாங்குவதாக சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளுக்கு மேலுள்ள பகுதி “சித்தூர் மட்டம்” என்பதாகும்.
☀️சித்தூர் மட்டம் - பால ரூப சிற்பங்கள் 
முருகக் கடவுளின் “பால ரூப” சிற்பங்கள் இப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளன. சிவபெருமான் நெற்றிக்கண் திறந்து ஆறு குழந்தைகளையும் உண்டாக்கும் காட்சியும், உமாதேவியார் ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்க்கும் காட்சியும், தம்பதிகளாய் சிவன் பார்வதி காளை வாகனத்தில் குழந்தையை எடுப்பதற்காகச் செல்லும் காட்சியும், நாரதரின் வேள்வியில் தோன்றிய முரட்டு ஆட்டை வீரபாகு சிறைப்பிடித்தல், முரட்டு ஆட்டை அடக்கி வாகனமாக்கிய முருகன், வீரபாகு நாரதருடன் தோன்றும் காட்சி, கைலாயத்தில் பாலமுருகனைப் பிரம்மன் மதிக்காமல் சென்ற காட்சி, பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை சிறை வைத்தல், பிரணவ மந்திரத்தின் பொருளைச் சிவபெருமானுக்கு ஓதுதல், மயிலை அன்புடன் அணைத்து மயூரப்பிரியராக முருகன் காட்சி தருதல், மூன்று முகம் ஆறு கைகளுடன் முருகன் கார்த்திகேயராகத் தோன்றுதல், மாம்பழத்திற்காக உலகை மயில் மீது சுற்றி வலம் வருதல், ஞானப்பழத்தை விநாயகர் பெறுதல், இறுதியில் முருகன் பழனியில் ஆண்டியாய் நிற்றல், யானையுடன் கூடி “கஜாரூடர்” என்ற பெயருடன் முருகன் காட்சி தருவது போன்றவை தத்ரூபமாகச் “சித்திரத் தேரில்” சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
☀️பேரூர் மட்டம் - போர்க்கோலச் சிற்பங்கள்:


சித்தூர் மட்டத்திற்கு மேலுள்ள பகுதி “பேரூர் மட்டம்” என்பதாகும். இப்பகுதியில் கடவுள்களின் போர்க் கோலச் சிற்பங்கள் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. பேரூர் மட்டத்தின் முன்பகுதியில் சிவன், முருகன், விநாயகர், அம்பிகை, திருமால், சூரியன் சிற்பங்களும் முருகன் கிரவுஞ்சமலை மீது வேல் ஏவும் காட்சி, தாரகாசுரனை அழிக்கும் காட்சி, சூரபதுமன் தர்பார் காட்சி, பானுகோபன் வீரபாகு போர்க் கோலம், சிங்கமுகன் முருகன் போர்க் காட்சி, சூரபதுமனுடன் முருகன் போர்க் காட்சி, மாமரமாய் நின்ற சூரபதுமன் மேல் வேல் ஏவும் காட்சி, மாமரம் பிளந்து அது சேவலாகவும், கொடியாகவும் மாறிய காட்சி, சிவபெருமான் யானை உரி போர்த்த மூர்த்தியாய் நின்ற காட்சி, சிவன் யமனை எட்டி உதைத்த காட்சி, ராவணன் போர்க்கோலம், கம்சன் கண்ணன் போர், கண்ணன் மோகினி உருவில் பத்மாசுரனை வஞ்சம் தீர்த்த காட்சி, துர்க்கை மகிசாசுரன் போர்க்காட்சி போன்ற போர்க் கோலச் சிற்பங்கள் காண்போரைக் கவரும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளன.

☀️இருதயப் பகுதி:

சித்திரத்தேரின் நடு மையத்தை இருதயப் பகுதி எனக் குறிப்பிடுவர். இருதயப் பகுதி என்றும் துடிப்புள்ளது என்பதால் இப்பகுதியில் அமைந்த எல்லா சிற்பங்களும் நடனமாடுவது போன்ற தோற்றமுடையதாக அமைக்கப்பட்டுள்ளன.
☀️நாராசனப் பகுதி – அடியார்களின் சிற்பங்கள்:
இருதயப் பகுதிக்கு மேல் அமைந்துள்ளது நாராசனம் என்ற பகுதி. இதில் முருகனைப் போற்றிப் புகழ்ந்த அடியவர்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன அகத்தியர், நக்கீரர், அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், இராமானந்த சுவாமிகள், கந்தசாமி சுவாமிகள் ஆகியோரின் சிற்பங்களும் இதையடுத்து குமரகுருபரர், சிதம்பரம் சுவாமிகள், சிவப்பிரகாசர், சிவஞான பாலைய சுவாமிகள், வள்ளலார், பாம்பன் சுவாமிகள் போன்ற அடியார்களும் அடுத்து சைவ அடியார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கண்ணப்பர், திலகவதியார் ஆகியோரும் அடுத்து வைணவ அடியார்களான பெரியாழ்வார், இராமானுஜர், திருமங்கையாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், மத்வாச்சாரியார் ஆகியோரும் அடுத்து தத்துவ ஆசிரியர்களான மெய்கண்ட தேவர், அருணந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம், சாந்தலிங்க சுவாமிகள், திருவள்ளுவர் ஆகியோரும் அடுத்து முருகன் அடியார்களான ஆதிசங்கரர், போகர், பாம்பாட்டிச் சித்தர், செந்தில் நாயகர் சுவாமிகள், சுந்தரத்தம்மையார், முருகானந்த சுவாமிகள் ஆகியோரும் அடுத்து கௌமார மடாலயம் அடியார்களான பேரூர் சுந்தர சுவாமிகள், சபாபதி சுவாமிகள், பாப்பநாயக்கன்பாளைய சுவாமிகள், ராசு சுவாமிகள், தாயம்மாள், முருகதாச சுவாமிகள் ஆகியோரும் அடுத்து கிருபானந்த வாரியார், அரங்கமுத்து சுவாமிகள், குமாரசாமி சுவாமிகள், சாந்தலிங்க ராமசாமி அடிகளார், ராமகிருட்ண சுவாமிகள், தம்பி சுவாமிகள் ஆகியோரும் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கின்றார்கள்.
☀️தேவாசனப் பகுதி – தேவர்களின் சிற்பங்கள்:
நாராசனம் என்ற பகுதிக்கு மேலுள்ள பாகம் தேவாசனமாகும். இப்பகுதியில் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலியோரின் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 
☀️சிம்மாசனப் பகுதி: 
தேவாசனப் பகுதியின் நடுநாயகமாக முருகப்பெருமான் அமரச் சந்தன மரத்தாலான நவரத்தினச் சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுந்தர சுவாமிகள், இராமானந்த சுவாமிகள் ஆகியோர்களின் உருவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன மேலும் அஷ்ட்டலட்சுமிகளின் திருவுருவங்களும் இதில் செதுக்கப்பட்டுள்ளன.
☀️மகுடங்கள்:
சிம்மாசனப் பகுதிக்கு மேல் மரத்தாலான மூன்று மகுடங்கள் அழகுடன் சித்திரத்தேரை அலங்கரிக்கின்றன.
☀️சிற்பிகள்:


மேலும் சித்திரத் தேரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சிற்பத்திற்கும் ஒரு கோவில் போன்ற அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிற்பத்திலும் கால் நகங்கள் கூட துல்லியமாகத் தெரிகின்ற அளவுக்கு மிக மிக நுட்பமாக செதுக்கியிருப்பதை நோக்கும்பொழுது, இதை உருவாக்கிய சிற்பக் கலைஞர்கள் தனிச்சிறப்பு மிக்க கலைத் திறனோடு, சிரவணபுரம் தண்டபாணிக் கடவுளின் திருவருளையும் பெற்றவர்கள் என்றால் அது மிகையாகாது.

☀️இத்தனைச் சிறப்புகள் வாய்ந்த இந்த சித்திரத் தேரைக் காண ஒவ்வொரு ஆண்டும், கோவை, சிரவணபுரம், கௌமாரமடாலயம், அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு குருவருளும் திருவருளும் பெறுமாறு அன்புடன் வரவேற்றுக் கட்டுரையை நிறைவு செய்கின்றோம்.
குருவடி சரணம் – திருவடி சரணம்

(நன்றி: #தவத்திரு_கஜபூசைச்_சுந்தர_சுவாமிகள் மணிவிழா மலர் -1989)

வெள்ளி, 23 மார்ச், 2018

மாலை மயங்கும் நேரம் எதை செய்யக்கூடாது-ஸ்ரீஸ்கந்த உபாசகர் உரை

ஒரு நாள் என்பது எட்டு முகூர்த்தங்கள் கொண்டது. ஒவ்வொறு முகூர்த்தமும் ஒவ்வொறு விஷேசங்களை கொண்டது. அந்த வகையில் ஒவ்வொறு நாளும் வருகிற சந்தியா காலம் என்பது புனிதமானது. அந்த நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றிய தொகுப்பு அருளியிருப்பவர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள். கீழே உள்ள லிங்கை சொடுக்கி உரையைக் கேட்கலாம்.



ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

செவ்வாய், 20 மார்ச், 2018

பங்குனி உத்திர வழிபாடு

இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருநாள், 30.3.2018 (வெள்ளிக்கிழமை) அன்று வருகின்றது. அன்றைய தினம் வீட்டு பூஜையறையில் வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமானின் படத்தை வைத்து, பஞ்சமுக விளக்கேற்றி விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

‘முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே, ஈசன்மகனே ஒரு கைமுகன் தம்பியே
நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்!’

என்று முன்னோர்கள் பாடியதைப் போல நாமும் நம்பிக்கையோடு பாடி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள், கௌமார மடாலயம், கோயம்புத்தூர்.
                                                     சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

வியாழன், 15 மார்ச், 2018

ஸ்ரீஸ்கந்த உபாசகர் நடத்தும் பயிற்சி தொடர்பு எண்கள்

பயிற்சி வகுப்பில் சேர தொடர்பு கொள்ள வேண்டிய செல்  எண்கள்
                            6382034853

                            6382039706

                            8668088735
இந்த எண்களில் தொடர்பு கொண்டு ஸ்ரீஸ்கந்த உபாசகர் நடத்தும் ஜோதிடம் மற்றும் உபாசனை பயிற்சிகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் எழுதிய நூல்கள்
1. திம்ப சக்கரம் (மனித உடலே ஜாதமாக்கி பலன் கூறும் ஜோதிட நூல்)
2. புண்ணிய சக்கரம் (மரணத்தின் பின் ஆன்மாவின் நிலையை கிரக ரீதியாக கணிக்கும் ஜோதிட நூல்)
3. ஞானம் அருளும் காலக்கண்ணாடி (ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய பலன் கூற உதவும் ஜோதிட நூல்)
4.சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் (ஜீவ நாடி திருவிளையாடல்கள் தொகுப்பு)
5. அற்புத பலன் கூறும் அபூர்வ ஆருடம் (அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என கண்டறிய உதவும் ஆருட ஜோதிட நூல்)

புத்தகம் பெற தொடர்பு கொள்ள வேண்டிய செல்  எண்கள்
                            6382034853

                            6382039706

                            8668088735
இந்த எண்களில் தொடர்பு கொண்டு ஸ்ரீஸ்கந்த உபாசகர் எழுதிய புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

website:

                ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

புதன், 14 மார்ச், 2018

ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி - கழுகுமலை



மிகவும் அமானுஷ்ய அதிசயம் நிறைந்த அற்புதமான ஜீவசமாதி இவரை பற்றி 4 ஆண்டுகள் முன்பே தெரிந்திருந்தாலும் குரு பௌர்ணமி அன்று  (08/07/2017) செல்லும் பாக்கியம் கிடைத்தது..

நேரில் சென்று தரிசனம் செய்யும் போது தான் அதன் மகிமையும் அங்குள்ள ஆற்றலும் நம்மை எப்படி ஆட்கொள்கிறது என்பது புரியும்..

85 வயது மதிக்க தக்க பாட்டி அவர்கள் இங்கு பூஜைகள் செய்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் கிரிவலம் வரும் அடியார்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள் இந்த வயதிலும் என்ன ஒரு பணிவு அன்பு கலந்த உபசரிப்பு .. என்ன தான் பணம் செலவு செய்து five star ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் இது போன்ற அன்பு கலந்த  உபசரிப்பு கிடைக்காது..

சுவாமிகளின் வாரிசு வரிசையில் இவர் 8வது தலைமுறை சேர்ந்தவர்கள் .. இப்போதும் சுவாமிகள் இங்கு தேகத்துடன்  உள்ளார்கள் என்பதற்கு இவரே சாட்சி..சுவாமிகளுடன் நேரடியாக பேசவும் தேவையானதை  மக்களுக்கு பெற்று தருவதும் இவர்தான்...

மிகவும் ஆச்சர்யமான பல நிகழ்வுகள் சுவாமிகளை பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள் ஒரு குழந்தையிடம் என்ன பரிவு இருக்குமோ அப்படி ஒரு  அன்பு இங்கிருந்து வர மனம் இல்லை..

மிளகாய் பழம் மற்றும் வற்றல்ளே இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.. அதையே நமக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள்..

மிகவும் சமீபத்தில் நடந்த ஒரு அதிசய நிகழ்வு உங்களுக்காக கோவில்பட்டி சேர்ந்த அன்பர் ஒருவர் சுவாமி சமாதி தரிசனத்திற்கு வந்துள்ளார் அப்போது சமாதி பீடத்தில் இருந்து அவரை ஒரு குரல் அவரை பெயர் சொல்லி  அழைத்தது அவரை மெய்சிலிர்க்க வைத்தது அந்த வினாடி  முதல் அவரை ஆட்கொண்ட நோய் நீங்க புது பிறவி எடுத்து சென்றது போல் அவர் உணர்ந்துள்ளார் ... இது போல் பல அதிசயங்களை நிகழ்த்தும் சுவாமிகள் பற்றி நிறைய செய்திகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்..

திருமணமாகி சுமார் 20 ஆண்டுகளாக குழந்தை செல்வம் இல்லாமல் தவித்து வந்த தம்பதிகள் இங்கு வந்து சுவாமிகளிடம் பிரார்த்திக்க அடுத்த வருடம் அவர்கள் தன் குழந்தை செல்வத்துடன் வந்து இங்கு சுவாமிகளை வழிபட்டு சென்றதாக கூறினார்கள்..

பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை வைத்து இங்கு பூஜை அன்னாதனம் நடைபெறுகிறது..

தற்போது சமாதி பீடம் கட்டிடம் சரியான நிலையில் இல்லை பராமரிப்பு செலவிற்காக கூட இவர்கள் யாரிடமும் கேட்பதில்லை இங்கு சென்று பார்த்த பிறகு தான் எனக்கும் தெரிந்தது ..

இந்த பதிவை படிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு என்னுடை தாழ்மையான வேண்டுகோள் நீங்களும் இங்கு சென்று மகானை சேவித்து உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

திருமணம் வரம் வேண்டுவோர் ஒரு ரோஜா மாலையை இங்கு சுவாமிக்கு சாற்றி விளக்கேற்றி வழிபட விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை..

குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இங்கு வந்து எலுமிச்சை பழம் வாங்கி வந்து சமாதி பீடத்தில் வைத்து வழிபட்டு அத்துடம் சுவாமி நிவேதனம் செய்த மிளகாய் வற்றல்களை சேர்த்து எலுமிச்சை சாதம் செய்து அதில் இந்த மிளகாய் வற்றல்களை சேர்த்து சாப்பிட வேண்டும் என்பது இங்குள்ள நடைமுறை..

ஒரு முறை தரிசனம் செய்யுங்கள் ஆனந்தமாக வாழுங்கள் ...

ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி
ஆறுமுக நகர்..
கிரிவல பாதை ..
கழுகு மலை..

சிவாயநம
ராஜா @ ஈஸ்வர்
தர்மபுரி