வெள்ளி, 1 ஜனவரி, 2021


ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில் நடந்த கும்பாபிஷேக நிகழ்வுகள்




 நமது கௌமார பயணம் வலைதள வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நமது ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில்  எழுந்தருளி உள்ள ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி பெருமான் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சிவ ஸ்ரீ ஜெகதீஸ்வர ஈசான கண சிவம் அவர்களை ஆட்கொண்டு ஜீவநாடி மூலமும், அருள்வாக்கின் மூலமும் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார். அந்த வகையில் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில் ஆதிசங்கரர் தோற்றுவித்த அறுசமய வழிபாடுகளையும் தோற்றுவிக்குமாறு ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருளாணை வழங்கியிருக்கிறார். திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளும் சுவாமிகளின் கனவில் தோன்றி இங்கு எழுந்தருளி ஆசி தருவதாகவும் வாக்கு உரைத்திருக்கிறார். மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளும் இங்கு எழுந்தருளி ஆசி வழங்குவதாகவும் நமது சுவாமிகளுக்கு கனவில் உரைத்திருக்கிறார். ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் அருளாணையின் படி ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில்  ஸ்ரீ அவிநாசியப்பர், ஸ்ரீ கருணாம்பிகை தாயார், ஸ்ரீ நந்தீஸ்வரர், திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், ஆகிய அனைத்து விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சேலம் பெரிய புத்தூர் ஆதீனம் ஸ்ரீ ராஜலிங்க சிவாச்சாரியர் அவர்கள் தலைமையில் கார்த்திகை மாதம் 16 ம் தேதி (4/12/2020) அன்று காலை கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.

 




நன்றி: சிவ ஸ்ரீ ஜெகதீஸ்வர ஈசான கண சிவம் அவர்கள்,

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடம், அந்தியூர். 

தொகுப்பு:

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடம் பக்தை,

சம்பூர்ணம் முருகேசன் .

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்.  

144 வண்ணச் சரபம், தண்டபாணி சுவாமிகள் இயற்றிய புலமை இலக்கணம் முற்றிற்று 

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

நூற்பா144

அருள்நிலை முடித்தற்கு ஆரால் ஆகும்என்று

அஞ்சி இந்தமட்டு அடக்கிச் செயல்வகைக்

குறிப்பொடு புலமை இலக்கணம் கூறிக்

கருதிய பயனில் கருத்துஅமைந் ததுவே.

திருவருளின் செயலை இத்தன்மைத்து என அறுதியிட்டுக் கூறி முடித்தற்கு எளியேன் போன்ற யாரால் இயலும் என்னும் அச்சத்துடன் இப்பிரிவை இத்துடன் நிறுத்திக் கொள்வதுடன் செயல்வகை இயல்பு எனப் பெயர்பெற்ற இப்பெரும் பகுதியுடன் புலமை இலக்கணத்தை முடித்துக் கொண்டேன், என் பணி முடிந்தது. இதனைக் கற்பார் இதன்வழி ஒழுகிக் கருணை மிகப்பெற்று மாதவம் முயன்று உலகிற்கு நலம் பயப்பதாகிய அருஞ்செயல்களைப் புரிந்து, பின் பிறவியின் முழுப்பயனாகிய வீட்டின்பத்தையும் அடைதல் வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்குகிறது என்றவாறு.

கருதிய பயன் என்பது இந்நூலாசிரியர் கொள்கைகட்கேற்ப விரித்துரைக்கப்பட்டது. இந் நூற்பயன் இவராலேயே முன்னர் பொதுப் பாயிரத்தின் ஆறாங்கவியில் கூறப்பட்டது.,

 இந்நூற்பாவுடன் இப்பிரிவும், செயல்வகை இயல்பும், அறுவகை இலக்கண நூலும் நிறைவுபெறுகின்றன

வண்ணச் சரபம், தண்டபாணி சுவாமிகள் இயற்றிய புலமை இலக்கணம் முற்றும். எனது திருமண நாளான இன்று(1-9-1982) நிறைவுற்றது பெரும்பாக்கியம் என்றே கருதுகிறேன். 

நன்றி: பதிவு தொல்காப்பியர் அன்பர் அடிப்பொடி புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர்,  உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம்,  கோவை.


புதன், 2 செப்டம்பர், 2020

  சொந்த முயற்சியின்றித் தானே வலிய வந்த திருவருட்புலமையைக் குறித்து நின்றது

140  வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

 143  சொந்த முயற்சியின்றித் தானே வலிய வந்த திருவருட்புலமையைக் குறித்து நின்றது.

நூற்பா143

தாய்வயிற்று இருந்து தரணியிற் பிறந்த

உடன்சிலர் பாடிய வொள்ளிய தமிழும்

பாரொடு வானில் பரந்தது அன்றே.

(பகவன் ஆதி என்னும் கணவன் மனைவியருக்குப் பிறந்த அவ்வை, உப்பை, அதிகன், உறுவை, கபிலர், வள்ளி, வள்ளுவர் என்ற எழுவரும்) தம் தாயின் அகட்டிலிருந்து வெளியேறி உலகில் தோன்றிய உடனே பாடிய சில கவிகளும் உலகிலும் வானிலும் பரவி உள்ளன என்றவாறு.

இச்சமயத்தில் இவ்வெழுவர் பாடியனவாக ஏழு கவிகள் தனிப்பாடல்களாக வழங்குகின்றன. “அளப்பரும் பனுவல் அகண்டம் ஆய நாத சத்தியின் நனந்தலை கிடந்து பகர்வார் வரவு பார்க்கின்றன”1 எனும் தம் கொள்கைக்கேற்ப வானில் பரந்தது என்றார். இதுவும் சொந்த முயற்சியின்றித் தானே வலிய வந்த திருவருட்புலமையைக் குறித்து நின்றது.


நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர்,  உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.





ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

 மாணிக்க வாசகர் புத்தபிக்குகளை வாதில் வெல்லல்

139 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

 142   மாணிக்க வாசகர் புத்தபிக்குகளை வாதில் வெல்லல்

நூற்பா142

வாதிடத் தேடி வரும்எழு மூவரும்

பேசும்நா இன்றிப் பிணம்போல் இருக்கக்

கண்டது அருள்எனக் கழறுதல் றையே.

இலங்கையில் இருந்து தில்லைக்கு வந்து அங்குள்ள சைவர்களை வாதத்தில் வென்று, திருக்கோயிலைத் தமதாக்கிக் கொள்ள விரும்பிய 21 புத்தபிக்குகளைத் தோற்கடித்து ஊமைகளாக்கிய மாணிக்கவாசகரின் வெற்றியையும் இறையருள் எனக் கொள்வதே சிறந்தது என்றவாறு.

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர்,  உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

 திருவருள்  இருப்பின் எளிய புலவனும் சிறந்த கவியைப் படைப்பான்

136 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  


   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

 139 திருவருள்  இருப்பின் எளிய புலவனும் சிறந்த கவியைப் படைப்பான்

நூற்பா139 

சீறி இகழ்வார் தெருத்தலை வாயில்

தோறும் அலைவுறீஇச் சுழலும் பாவலன்

செக்குஒரு கவியால் செம்பொன் ஆகப்

பாடவும் செய்யும் பழுதுஇலா அருளே.

இப்பாடலில் கூறப்படும் வரலாறு என்ன என்று தெரியவில்லை. பொருள் ஈகைகுணம் சற்றும் இல்லாத இரவலரைச் சினம் கொண்டு துறத்தும் கஞ்சன் வீட்டு வாயிலில் அலைந்து கொண்டிருக்கும் புலவன் கூடச் செக்குமரம் பொன்னாக மாற்றும் கவியை இயற்றுவதும் ஈசன் அருளே.

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர்,  உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.




புதன், 26 ஆகஸ்ட், 2020

கம்பர் சொல்லால் சோழர் குலம் அழிந்தது

 134 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  


   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

              137  கம்பர் சொல்லால் சோழர் குலம் அழிந்தது

  நூற்பா137   

             கவிதை ஒன்றால் கதிரவன் குலத்து

             மன்னவர் அனைவரும் மாண்டனர் அன்றே.

இதன்பொருள்: சோழனின் பொறிப்பெட்டிலிருந்து அம்பு பாய்ந்து இறக்கும் தருவாயிலிருந்த கம்பநாடன் பாடிய ‘வில்லம்பு சொல்லம்பு’ என்ற வெண்பாவால் சூரியன் மரபாகிய சோழ மன்னர் அனைவரும் மாய்ந்தனர் என்றவாறு.

விளக்கம்: இவ்வரலாறு முன் காட்டப்பட்டது. இதில் இடம்பெற்ற கவிதை “வில்லம்பு சொல்லம்பு மேதினியில் ரெண்டுண்டு; வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்-வில்லம்பு பட்டதடா என்மார்பில்; பார்வேந்தா நின்குலத்தைச் சுட்டதடா என்வாயிற் சொல்”1 என்னும் வெண்பாவாகும்

கம்பனுக்கு வாய்த்திருந்த தெய்வீக அருள் அச்சமயத்தில் அவன் உயிரைக் காக்காமல் கைவிட்டுவிட்டது; ஆனால் அதேசமயத்தில் அவன் இட்ட சாபம் நிசமாகியது, இதனால் திருவருளின் இயக்கம் எப்போது எப்படி இருக்குமென யாராலும் அறியமுடியாது என்பதை உணர்த்துவதே இந் நூற்பாவின் நோக்கம். இங்குக் கம்பன் பெற்றது முழுவெற்றி அன்று. 

 நன்றி: பதிவு புலவர்.ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர், உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.


சனி, 22 ஆகஸ்ட், 2020

 திருவருள் துணை இல்லாதபோது எவ்வளவு பெரியவர்களுக்கும் துன்பம் நேரலாம்               

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  


   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

 131 திருவருள் துணை இல்லாதபோது எவ்வளவு பெரியவர்களுக்கும் துன்பம் நேரலாம்                                                    

 நூற்பா134                                   

பற்பலர் செவிகவர் பாவலன் தன்கைக்

கொடுவாள் அருணைக் கோபுரத்து இழந்து

தன்செவி ஒருவன் தரப்பெற் றானே,


இதன்பொருள்: பல புலவர்களை வாதத்தில் வென்று அவர் காதுகளை அரிந்த வில்லிபுத்தூராழ்வார், பின் திருவண்ணாமலையில் அருணகிரிநாதரிடம் தோல்வியுற்றுத் தம் வாளையும் இழந்து மாற்றானின் கருணையினால் தம் செவிகளை இழக்காமல் தப்பினார் என்றவாறு,

விளக்கம்: இவ் வரலாறு முன்னரே உரைக்கப்பட்டது. இங்கு வில்லிபுத்தூராரின் தோல்வியைச் சுட்டிச் கூறுவதைக் கொண்டு இவ் வாசிரியருக்கு அருணகிரிநாதரிடமுள்ள அபிமான மிகுதியால் மற்றவரை இழிவாகக் கருதுகிறார் என எண்ணலாகாது, இவரைப்பற்றிப் புலவர் புராணத்தில் கூறுங்கால், “வரைதொறும் நடம்செய் வானை வழிபடும் அருணை நாதன் கரையில்சித் திரமாச் சொல்லும் கந்தன்அந் தாதிப் பாடற்கு உரைஉடன் அவன்சொல் மாட்சி ஒண்டமிழ்ப் புலவர் ஓர்வார்; திரைஉறு கரிய சிந்தைச் சிறியவர் தேறிடாரே”1 எனவே கூறுகின்றார்

அருணகிரியாரிடத்தில் வில்லிபுத்தூரார் தோற்றது தம் புலமைக் குறையாலன்று; ஆனால் சற்றும் கருணையின்றிப் பல புலவர்களின் செவிகளை அறுத்த பாவத்தால்தான் என்ற கருத்தை, “அந்தகன்போற் பற்பலர்காது அறுத்த பாவம் அமைந்தது இந்நாள் எனக்கு எனச்சொற்று ஆண்மை தீர்ந்தான்”2 எனவும் விளக்குகிறார்

திருவருள் துணை இல்லாதபோது எவ்வளவு பெரியவர்களுக்கும் துன்பம் நேரலாம் என்பதற்குச் சான்றாகவே இந்நிகழ்ச்சியும் இப் பிரிவில் இடம்பெறும் வேறு சிலவும் கூறப்படுகின்றன.

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.