வெள்ளி, 30 மே, 2014

ஜீவ நாடி இரகசியங்கள்- பகுதி 2





சித்தர்களைப் புரிந்து கொள்வதும், சித்தர்களின் அருள்வாக்கை ஜீவ நாடியில் புரிந்து கொள்வதும் அவ்வளவு எளிதானதில்லை. குருவருள் வேண்டும். “குரு தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டலும் வராது”. குரு இல்லா வித்தை பாழ். தகுந்த குரு மூலம் உபாசனை செய்யச் செய்ய அருள் வாக்கு ஞானம் ஏற்படுகிறது. ஒருவர் வந்து எதிரிலே அமர்ந்த்வுடன் அவரது முக்காலமும் உணர்த்தப்படுகிறது. இந்த மாதிரி சித்திகளை ESP என்று ஆங்கிலத்தில் அழைத்து மகிழ்கிறார்கள்

மனதைக் குறிக்கின்ற கிரகம் சந்திரன்.அந்த கிரகம் சுப பலம் பெற்று இருந்து மனதைக் குறிக்கும் 5ஆம் இட அதிபதி 8ஆம் இடத்தில் தொடர்பு கொண்டு, 5 குரு பார்க்க இருக்கின்ற ஜாதகர்கள் அமானுஷ்ய ஆற்றல்களையும், அஷ்டமா சித்திகளையும், வருங்காலம் உரைக்கின்ற வலிமைகளையும், ஆவிகளுடன் பேசி அனைத்தும் அறிகின்ற சக்திகளையும், மகான்களுடன் சூட்சுமத்தில் தொடர்பு கொள்ளும் மகத்துவம் உணர்த்தும் இரகசியங்களையும், சித்தர்களோடு தொடர்புக் கொண்டு சிறப்பான பலன்களை உரைக்கும் வலிமையும் பெறுகிறார்கள்

இதனுடன் 9ஆம் இட அதிபதியும், 9ஆம் இடமும்  கைகோர்த்து செயல்பட்டால் பல விசேஷ சக்திகளைப் பெற்று எல்லா தெய்வங்களுடனும் உரையாடி உற்ற நலங்களைப் பெறும் நிலைகளை நிச்சயம் அடைந்தே தீருவர் என்பது ஜோதிட நியதி.   

ஒரு சிலருக்கு இயற்கையாகவே இத்தகைய அதிசய சக்தி அமைந்துவிடுவதும் உண்டு. இன்னும் சிலர் உபாசனை மூலம் உயர்ந்த சித்திகளை அடைந்து உயர் சாதனைகளை ஊரரிய உலகறியச் செய்து அழியாப் புகழ் பெறுகின்றனர். இத்தகைய நிலையில் இருப்பவர்கள் விளம்பரத்தை விரும்புவதில்லை.

எனது குருநாதர் எலுமிச்சம் பழத்தை வைத்தே வர்த்தமானங்களைத் திறம்பட உரைத்துவிடுவார். ஒருமுறை அடியேன் எலுமிச்சம்பழத்தை நேரடியாகச் செடியில் பறித்தேன். நறுக்கென முள் தைத்தது. சரி என விட்டுவிட்டேன். அந்தப் பழத்தைக் கொண்டு போய் குருநாதரிடம் பூஜைக்குக் கொடுத்துவிட்டேன். இரவு பூஜைகளை முடித்து அருள்வாக்கு சொல்ல அமர்ந்தார் குரு. இரவு 2 மணி இருக்கும். நான் அயர்ந்து தூங்கிவிட்டேன். என்னை அருள்வாக்கில் அழைப்பதாக வந்து அழைத்துச் சென்றார்கள். அடடா தூங்கி விட்டோமோ என்று பரபரப்பாக எழுந்து குருவின் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன். குரு கேட்ட கேள்வி என்னை மெய் சிலிர்க்க வைத்த்து. என்னப்பா இந்த எலுமிச்சம் பழம் பறிக்கும் போது முள் ஏறியதோ? அது இன்னும் வலிக்கிறதா? எனக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்த்து. ஆழமான ஆழ்மனதில் குருவருள் தைத்தது. இது எப்படி சொல்ல முடிந்தது? ESP ஆக இருக்குமோ? இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன.போகப் போகப் புரிந்து கொண்டேன்

வந்து பேசுவது சாட்சாத் முருகப் பெருமானே என்று குரு புகழ் பாடப் பாட திருவருள் கைகூடியதை உணர்ந்தேன். இப்போது ஜீவ நாடி படிக்கின்ற அளவிற்கு முருகன் எனது குரு மூலமாக ஏராளமான விளையாடல்களைச் செய்து வருகிறார். தீட்சை வாங்கி மந்திர பயிற்சி செய்து வரும் காலங்களில் குரு என்னுள் இருந்து பேசினார். அதே குரல். அதே பாடல் வடிவில் அருள்வாக்கு. அதிர்ச்சியிலும், பக்தியிலும், பக்தர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது

"16 வயதில் தொடங்கியது" ஆன்மிகச் சேவை. அதீத வாக்குப் பலிதத்தினால் ஞானஸ்கந்த மூர்த்தி ஜீவநாடி கை கூடியது. அமாவாசை தோறும் அதை ஞானஸ்கந்த மூர்த்தியின் திருப்பாதங்களில் வைத்து விட்டால் அந்த மாதத்தில் யாரெல்லாம் தேடி வருவார்கள் என முருகன் உரைத்திடுவார். அதே போல் வருவார்கள். இந்த மாதம் இந்தந்த நட்சத்திரக்காரர்களுக்குப் படி என்பார். அதே போல் அந்தந்த நட்சத்திரம் உடையவர்கள் வருவார்கள். நாடியில் என்ன வருகிறதோ அதை மட்டும் உரைக்கின்ற கருவி மட்டுமே அடியேன். என்னை நெருங்கி நற்பலன் அடைந்தவர்களும் இந்த பத்திரிக்கையைத் தொடர்ந்து படிப்பதால் இல்லாத ஒன்றை இட்டுக்கட்டிக் கூற முடியாது. இருப்பதை இனிமை வடிவில் உண்மை மாறாமல் எடுத்து இயம்புவதே எமது பணி.

அன்று ஒரு நாள் அமாவாசை திதி. பூஜைகளை முடித்து விட்டு, அடியார்களுக்கு அன்னதானம் அளித்து விட்டு அருள்வாக்கு மேடையில் அடியார்களோடு அமர்ந்தேன். நல்ல கூட்டம். வந்திருந்த அனைவரும் முருகன் யாருக்கு நாடி படிக்கப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தார்கள். சுவடியைப் பிரித்தேன் ரேவதி நட்சத்திர காரர்களுக்குப்படி என வந்தது. வந்திருந்த அத்துனை பேர்களில் ரேவதி நட்சத்திரம் உடைய ஒரே ஒரு பெண்மணி மட்டுமே இருந்தார். அவருக்கு மட்டுமே அன்று நாடி, தேடி வந்தது. யாருக்கு முருகனின் ஆசியும் சித்தர்களின் ஆசியும் இருக்கிறதோ அவர்களுக்கே ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவநாடியில் அருள்வாக்கு வருகிறது. அதனால்தான் இதைத் தொழிலாக யாம் செய்வதில்லை. படித்த படிப்பு வேறு, செய்கின்ற தொழில் வேறு இது ஒரு ஆன்மிகச் சேவை அவ்வளவே. ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே படிக்க நேர அவகாசம் இருப்பதால் இதை விளம்பரம் செய்வதில்லை.

வந்திருந்த பெண்மணிக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சிறுநீரகக்கல் வந்து வலி உயிர்போகும் அளவு வலிக்கும். பார்க்காத வைத்தியம் இல்லை. போகாத டாக்டர் இல்லை. எப்படி இரண்டு மாதத்திற்குள் கல் உருவாகும். குழம்பிய நிலையில் குடும்பமே இருந்தது. அந்த அம்மையார் ரேவதியில் பிறந்ததால் அன்றைய நாடி அவருக்கு வந்ததால் பாதி நோய் சரியான மாதிரி உணர்வு. சரி முருகன் என்ன உரைத்தார்.


பழனிமலைப் பரமனின் அருளாலே
பாரினில் வந்துதித்தாள்
பத்தினியாய் வாழ்வாள்
தீர்க்க சுமங்கலியாய் இருப்பாள்
கைராசிக்காரி என்று
கச்சிதமாய்ப் பெயரெடுப்பாள்
இடையில் வருகின்ற வலிக்கு
வருத்தம் கொண்டிடுவாள்
வாட்டம் அடைந்திடுவாள்
குடிக்கின்ற தண்ணீரை மாற்று
குறை போம்….”

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தப் பெண்ணின் தந்தையார் சிறு வயது முதலே பழநிக்குக் காவடி எடுத்துச் சென்றவர். அந்த அருளிலே பிறந்தவர்தான் இந்த அம்மையார். கணவனுடன் இதுவரை சிறு சண்டை கூட போட்ட்தில்லை பத்தினியாகவே வாழ்கிறார். சதி&பதி ஒற்றுமையில் வள்ளுவர்வாசுகி. இப்படி பெயர் எடுத்த தம்பதி. இந்த அம்மையார் கையில்தான் முதல் பத்திரிக்கை வைப்பார்கள் திருமணத்திற்கு. கைராசிக்காரி என்ற பெயரும் உண்டு. இடையில் வருகின்ற வலி என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று இடை என்ற இடுப்பில் வருகின்ற வலி. மற்றொன்று இடைபட்ட காலத்தில் வருகின்ற வலி. அதற்கு அந்த அம்மையார் சிறு நீரகக் கல்லால் அவதிப்படுவதாக உரைத்தார். அதற்கு மருத்துவம் என்னவெனில் குடிக்கின்ற தண்ணீரை மாற்றுவதுதான். சித்தர்கள் எப்போதுமே சூட்சுமமாகவே உரைப்பார்கள். குடிக்கின்ற தண்ணீர் இந்த அம்மையாருக்கு அலர்ஜியாகி சிறுநீரகக் கல்லாகி விடுகிறதுஇதை எந்த மருத்துவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை

ஒரே நொடியில் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவநாடியில் விடை கிடைத்துவிட்டது. உடனே அவர்கள் தண்ணீர் வடிகட்டி ஒன்றை வீட்டில் வைத்தார்கள். முருகப் பெருமான் இன்னும் சில மூலிகைகளை உரைத்து அதைப் பயன்படுத்தும் முறையையும் அறிவித்தார். அந்த மூலிகைக்கு சூட்சும்மாக வெள்ளை மருந்து என்று பெயர். அதையும் முறைப்படி செய்தார்

தற்போது வலி எங்கோ போய்விட்டது. ஆச்சரியம், அதிசயம், அற்புதம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதைப் படித்த உடனே நமக்கும் இதுபோல் பிரச்சினை தீரும் என வாசகர்கள் நினைப்பது இயற்கையே. உத்தரவு வந்தால் மட்டுமே அடியேன் ஜீவநாடி வாசிப்பேன். எனவே அதை மனதில் வைத்துக் கொள்வது நல்லது. வருகின்ற அத்தனை பேருக்கும் உரைக்க முடியாது. யாருக்கு ப்ராப்தம் இருக்கிறதோ அவருக்கு 100% சரியாக வரும்.

3 கருத்துகள்:

  1. குருஜீ, மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  2. அய்யா, நான் தங்களிடம் ஜிவ நாடி கேட்டுள்ளேன்.அப்பொழுது அடைந்த ஆனந்தத்தை, இந்த கட்டுரையை படிக்கும் பொழுது உணர்கிறேன்......நன்றி அய்யா..........

    பதிலளிநீக்கு
  3. ஓம் அகஸ்திய மஹா ரிஷி நமஹ!!!அற்புதம் ஐயா...

    பதிலளிநீக்கு