வியாழன், 4 ஜூன், 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 29 ! ! !

                 பொதிகை மலையில் அலங்காரத்தில் அகத்திய மாமுனிவர்.

ஒரு நாள் பூஜைகளை முடித்து விட்டு நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியைப் பிரித்து முருகன் வாக்கிற்காகக் காத்திருந்தேன்.  அப்போது அகத்தியர் தோன்றி இந்த ஜீவ சுவடியை எடுத்துக் கொண்டு எனது மலைக்கு வா என்று வாக்கு கொடுத்தார். முருகப் பெருமானும் அதற்கு ஆசி என்றார். சரி என்று என்னிடம் நெருக்கமாக இருக்கும்  நமது ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தின்
அடியார்கள் சிலரிடம் இதைப் பற்றிச் சொன்னேன். சரி நாங்களும் உங்களுடன் வருகிறோம் தனியாக நீங்கள் செல்ல வேண்டாம் என்று சொல்லி திருமுருகன் பூண்டியில் இருக்கும் குமாரமான சிவன் அடியவர் ஒருவர் கேரள வனத்துறையினரிடம் அனுமதி வாங்குதல் மற்றும் இணையதளத்தில் பதிவு செய்தல் போன்ற காரியங்களைக் கவனிப்பதாகக் கூறினார்.



 இன்னும் சரியாக ஒரு வாரத்தில்  நமது பயணம் தொடங்கும்படி இருக்கும் என்று சொன்னவர் திடீரென்று சாமி நமக்கு அனுமதி கிடைக்க வில்லை என்றார். உத்தரவு இருந்தும் எப்படி இப்படி நடந்தது என அறிந்து கொள்ள வேண்டும் என்றும் காரணம் என்ன என்றும் முருகப் பெருமானிடம் கேட்டேன். ஜீவ நாடியில் பின் வருமாறு வந்தது.

”ஆசிரெனவாதம் உண்டு

அகத்தியன் ஆசியும் உண்டு

அற்புதமும் நடக்கும்

பொதிகைமலை செல்லவும் கூடும்

அதற்கு முன்பு சதுரகிரி செல்லு

முன் சேந்தமங்கலம் தரிசனம்

அவசியமாமே கந்தன் கூற்று கச்சிதம்

ஆசி! ஆசி! ஆசி! ”

 என்று வந்தது. சேந்தமங்கலம் பற்றி முன் பின் எந்த ஒரு தகவல்களும் தெரியாததால் சரி சேந்தமங்கலத்தில் என்ன இருக்கிறது எனப் பார்போம் என்று ஒரு குழுவுடன் அங்கு சென்றோம். சேந்தமங்கலம் எனும் ஊர் நாமக்கல் நகரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க தத்தாத்ரேயர் ஆலயம் அமைந்துள்ளது. முற்காலத்தில் சன்னியாசி கரடு என்றும் சன்னியாசி குன்று என்றும்
அழைக்கப்பட்ட இந்த ஸ்தலம், தற்போது தத்தகிரி முருகன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.


ஞானம் பெற்ற பல முனிவர்கள், தவசிகள், யோகிகள், அருளாளர்கள், ஆன்மீகவாதிகள், சித்தர்கள் எனப் பலர் இங்கு தவத்தில் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இத்திருக்கோயிலின் குகாலயத்தில் 29.12.1948 அன்று ஜீவசமாதி அடைந்த ஸ்வயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி
அவதூத மகா சுவாமிகள் சன்னிதானம் உள்ளது.  குகாலயத்திற்கு மேல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்களை உள்ளடக்கிய தத்தாத்ரேயர் விக்கிரகம் 29.5.1931ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்குள்ள தத்தாத்ரேயர் மும்மூர்த்திகளின் மையத்தில், சிவபெருமான் உருவம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு பெற்றதாகும். ஸ்வயம் பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத மகா சுவாமிகள், விழுப்புரம் மாவட்டத்தில் கல்பட்டு அக்ரஹாரத்தில் ராமசாமி சாஸ்திரி- ஜானகியம்மாள் தம்பதியினருக்கு 1817ம் ஆண்டு 4வது மகனாக பிறந்தார்.


சிறு வயதிலேயே ஆத்மஞானம் பெறும் நோக்கத்தில் அவருடைய செயல்பாடுகள் இருந்தது.  பின்னர் தஞ்சாவூர் அருகில் ஆடுதுறையில் காவேரி கரையில் தவம்புரிந்தார். திருவிடை மருதூரில் பள்ளிக்கல்வியை
பயின்று, நாராயண சாஸ்திரி என்பவரிடம் வேதம் படித்தார். அதன் பிறகு காசி மாநகரில் சுமார் 3 ஆண்டுகள் தங்கியிருந்து, வேதங்களை பயின்றார். அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பி, மதுரை மாநகரை சேர்ந்த சதாசிவ பிரேம்மானந்தர், சரஸ்வதி அவதூத சுவாமிகளின் செயல்பாடுகளால்
கவரப்பட்டு நெரூரை அடைந்து ஜட்ஜ் சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.


 பின்னர் திருவண்ணாமலை, சேலம் வழியாக சேந்தமங்கலம் குகாலயத்தை வந்தடைந்தார். சுவாமிகள் அவதூத கோலத்தை தனது 28 வயதில் ஏற்றார்.  பிறகு சேந்தமங்கலம் குகாலயத்தில் தீவிர தவத்தில் இருந்து, சமுதாயம்
உய்வதற்கான நெறிமுறைகளை மக்களுக்கு போதித்து வந்தார். சைவம், வைணவம் என்ற பேதங்களை போக்கும் விதமாக இந்த குகாலயத்தில் தத்தாத்ரேயர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து 29.5.1931 ல் கும்பாபிஷேகம் நடக்க வைத்தார். குருவின் தீவிர சீடரான சாந்தானந்த சுவாமிகள்,



இக்கோயிலுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரியவேண்டும் என்ற நோக்கத்தில் குகாலயத்தில் 20.1.1983ல் தமிழ்க்கடவுளான முருகன் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்தார்.  அன்று முதல் இத்திருத்தலம் தத்தகிரி முருகன் குகாலயம் என்று அழைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து இத்திருத்தலத்தில் ஆன்மீக பணியாற்றிய சாந்தானந்த சுவாமிகள் 28.1.1985ல் சபா மண்டபத்தை அமைத்தார். சபா மண்டபத்தில் பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, ஐயப்பன், கருப்பண்ண சுவாமி, தட்சிணாமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், சனீஸ்வரர், வன துர்க்கை ஆகிய விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தார். சபா மண்டபத்திற்கு வலப்புறம் குருநாதர் பல மாதங்கள்
தவம் புரிந்த குகை உள்ளது.  இத்திருக்கோயிலில், ஒவ்வொரு ஆங்கில மாதமும் கடைசி சனிக்கிழமையன்று சனீஸ்வர பகவானுக்கு அபிஷேக ஆராதனையும், ஒவ்வொரு மாதமும் முருகனுக்கு கிருத்திகை விழாவும், சிவனுக்கு பிரதோஷ வழிபாடும் நடந்து வருகிறது.


இந்த தகவல்களை எல்லாம் நேரில் சென்ற பின்பு அங்கு உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம். மிகவும் சுவாரசியமான தகவல்களாக இருந்தது மட்டுமில்லாமல் மிகவும் ரம்மியமான இடமாகவும் இருந்தது. ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி எதோ ஒரு காரண காரியத்துடந்தான் இங்கு அனுப்பி இருப்பார் என்று எண்ணி பிரார்த்தனை செய்து பின் விடை பெற்றோம். அத்ற்கு பின் சதுரகிரி செல்ல வேண்டும் என்ற உத்தரவை கடைபிடிக்கும் ஆயத்தப் பணிகளைக் கவனித்தோம்.



சதுரகிரி மகாலிங்கம் கோவில் நான்கு பக்கமும் நன்னான்காக 16 மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள் வாழும் புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும்
மலைப் பாதைகள் உள்ளன.

மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இம்மலையில் ஐந்து கோவில்கள் உள்ளன

 சுந்தரமூர்த்தி லிங்கம்

 சந்தன மகாலிங்கம்

 இரட்டை லிங்கம்

 காட்டு லிங்கம்

இம்மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளதால் இதன் அருமைகளை உணர்ந்த பல சித்தர்கள் இங்கு தங்கி, தீராத நோயுள்ள மக்களுக்கு சித்த மருத்துவம் செய்து அருளியதாக வரலாறு உள்ளது. மிகுந்த திகைப்பூட்டும் இந்த மலைகளில், இன்னமும்கூட சித்தர்கள் சிவபெருமானை வணங்கிவருவதாக நம்பப்படுகிறது.

சதுரகிரி உச்சிக்கு செல்ல மூன்று பாதைகள் இருந்தாலும் தாணிப்பாறை பாதையே பக்தர்களுக்கு உகந்தது. எனினும் இவ்வழியே பயணப்படுவோர் பருவகாலச் சூழ்நிலையை அறிந்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது. மலைப்பாதையின் குறுக்கே சில ஆறுகளில் மழைக் காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.

கோடை காலம் தவிர மற்ற சூழ்நிலைகளில் மலைப்பகுதியில் குடிநீருக்கு அதிகம் சிரமம் இருக்காது எனினும் குடிநீர் கொண்டு செல்வது நல்லது. நான்கு அல்லது ஐந்து மலைகளை கடந்தே சதுரகிரியை அடையமுடியும். எனவே பாதையில் ஏற்ற இறக்கம் இருக்கும். நாவல் மரம், பலா மரம்,நெல்லி மரம், ஒரு யானையே ஒளிந்துகொள்ளலாம் போன்ற உடல் பருத்த பெருமரங்கள், வகைவகையான மூலிகைச் செடிகொடிகள், சித்தர்கள் வசித்த குகைகள்,

ஆங்காங்கே சலசலத்து ஓடும் ஓடைகள் இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்கள் நிறைந்த இடம். சிலிர்ப்பூட்டும் செங்குத்தான லையில்,உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க சுவாமி. ஒருமுறை தரிசித்தாலே நமது உள்மனத்தில் குடிகொண்டுவிடுகிறார்.

வான்மீகி, கோரக்கர், கமலமுனி, சட்டைமுனி, அகத்தியர், சுந்தரானந்தர், கருவூரார், அகப்பைச்சித்தர்,கொங்கணர், தன்வந்திரி, பாம்பாட்டிச்சித்தர், இராமதேவர், இடைக்காட்டுச்சித்தர், திருமூலர், போகர், அழுகுணிச்சித்தர், காலாங்கிநாதர், மச்சமுனி,ஆகியோர் பதிணென் சித்தர்கள் எனப்படுவர். 18 சித்தர்களும் சேர்ந்து ஒரே சந்நிதியில் காட்சி தருவது சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே. வருடத்துக்கு ஒருமுறை இந்த சித்தர்களுக்கு விஷேச பூசை நடைபெறும்.

சித்தர் சட்டநாதர் வாழ்ந்த குகையை இப்போதும் இங்கு காணலாம். சந்தன மகாலிங்கம் சந்நிதியில் இருந்து மிகஅருகில் அமைந்திருக்கிறது இந்த குகை. சதுரகிரியில் சந்தன மகாலிங்கம் சந்நிதியில் மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் தங்கள் கைகளாலேயே புஷ்பங்கள் சமர்பித்து சந்தன மகாலிங்கத்தை வழிபடலாம். மகாசிவராத்திரியின் போது இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு காலம் முடிந்ததும் பக்தர்கள் வரிசையில் சென்று இறைவனை தரிசிக்கலாம். சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே அம்பாளுக்கு தனிசந்நிதி உண்டு. இப்படி சிறப்புகள் பல பொருந்திய சதிரகிரி மலையில் அகத்தியர் எங்களுக்குப் பல அதிசயங்களை நிகழ்த்தினார்...

                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!   (தொடரும்...)

2 கருத்துகள்:

  1. ஓம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை.
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

    பதிலளிநீக்கு
  2. “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”
    “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”
    “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

    பதிலளிநீக்கு