செவ்வாய், 7 ஜூன், 2016

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி-40


எழுத்துக்கள் எதுவுமே எழுதப்படாத வெறும் பனை ஓலையில் ஒளி வடிவிலும் வரி வடிவிலும் சில தெய்வீகச் சின்னங்களின் வடிவிலும் தோன்றி முருகப்பெருமான் எனது கண்களுக்குத் தென்படச் செய்து சில உள்ளுணர்வுகளைக் கொடுத்து யார் வந்து ஜீவ நாடி கேட்க அமர்கின்றார்களோ அவர்களின் கர்ம வினைகளைக் கரைக்கும்படியும் பாடல் வடிவில் முக்காலங்களையும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றார். உண்மையான ஜீவ நாடி என்பது  கலியுகத்தில் கிடைப்பது மிகவும் அபூர்வம் என்றே சொல்ல வேண்டும். நாடி ஜோதிடம் என்றாலே முகம் சுளிக்கின்ற ஒரு நிலையை தவறு செய்பவர்கள் சிலரால் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஜீவ நாடியைப் பொறுத்தவரை எந்தவித எழுத்துக்களும் இல்லாமல் யாராலும் எழுதப்படாமல் சித்தர்களும் தேவதைகளும் தோன்றி வாக்குரைப்பதாகும். இது அருள்வாக்கு எனும் பட்டியலிலும் இடம் பெறாது. அருள்வாக்கு என்பது உள்ளுணர்வினால் உரைப்பது. ஜீவ நாடி என்பது ஓலைச்சுவடியில் தோன்றும் சித்தர்களால் உரைப்பது. ஜீவ நாடி படிக்க பூர்வ ஜென்ம தவவலிமையோடு மிகுந்த ஒழுக்கம் தேவையாகும். அடியேனைப் பற்றி அனைவருமே நன்கு அறிவார்கள். தவ வலிமையோடு சீரிய ஒழுக்கமே உயரிய கொள்கை எனும்படி இருந்து வருபவன். முன் ஜென்ம கௌமார நெறியில் வந்தவர் எனும் குறிப்பு மீனாட்சி நாடியில் இருக்கின்றது. இப்படி தொழில் முறையில் அல்லாமலும் வியாபார ரீதியில் அல்லாமலும் அருள் நோக்கிலேயே  செயல்பட்டு வருவதால்தான் கடந்த 20 ஆண்டுகளாக இந்த சேவையை எந்தவித விமர்சனங்களும் இன்றி செய்ய முடிகின்றது என்பது நிச்சயம், நிதர்சனம். சத்தியமான உண்மையாகும்.இப்படி இருக்கின்ற நிலையில் ஒருவர் நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் தவித்து வரும் நிலையில்  ஜீவ நாடி கேட்டு தற்போது விரைவில் குழந்தை பிறக்கின்ற நிலையில் இருக்கின்றார் என்பது ஆச்சரியமான செய்தி. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிகாரங்கள் ஜீவ நாடியில் உரைக்கப்பட்டு இப்போது இன்னும் ஒரு மாதத்தில் முருகன் அருளால் குழந்தை பிறக்க இருக்கின்றது. அவருக்கு மீண்டும் ஜீவ நாடி உரைக்கும் போது ஓலைச்சுவடியில்  ஒரு நாய் வடிவம் காட்சி கொடுத்தது. அதைப்பார்த்த சுவாமிகள் உன் வீட்டில் இருக்கும் வயதான நாய் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் விரைவில் ஒரு குட்டி நாய்க்கு ஏற்பாடு செய்து வளர்க்குமாறு உரைத்த உடனேயே வந்தவருக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. காரணம் இது பற்றி எனக்கு ஏற்கனவே தெரியாது.சுவாமி உண்மைதான் இப்போது இருக்கும் நாய் வயதாகிவிட்டதால் படுத்த படுக்கையாக இருக்கின்றது என்பதால் சென்ற வாரம் தான் ஒரு குட்டி நாய்க்கு ஏற்பாடு செய்ய பணம் கொடுத்திருக்கின்றேன் என்றார். நல்லது குழந்தை பிறக்கும் இந்த நேரத்தில் ஒரு நாய் வளர்க்கத் துவங்கினால் அது பைரவர் ஆசியைப் பெற்றுத்தரும் என்று உரைத்தேன் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வருகின்ற வாக்கு அப்படியே 100% பலித்து வருகின்றது. யாருக்கு பிராப்தம் இருக்கின்றதோ அவர்களுக்கு முருகப்பெருமான் ஜீவ நாடி மூலம் வாக்குரைத்து வளமான வாழ்வைத் தந்தருள்கின்றார். எமது 13 வயது முதலாகவே முருக உபாசனை செய்து இந்த ஜீவ நாடி படிக்கின்ற தவ வலிமையைப் பெற்று இருக்கின்றேன்.  ஒரு இளைஞர் ஜீவ நாடி கேட்க வணங்கி அமர்ந்தார். அந்த இளைஞனுக்கு உடனடியாக அரசுப் பணி கிடைக்கும் என்று வாக்கு உரைத்தார் முருகப்பெருமான். அந்த இளைஞர் மகிழ்ச்சியடைந்தார். அதே போல் அரைஞான் கயிறு அணியாமல் இருக்கின்றாய் அது உனக்கு நலமல்ல உடனே அரைஞான் கயிறு அணிந்து கொள்ளவும் என்று அறிவுரை முருகப்பெருமான் ஜீவ நாடியில் சொல்வதாக உரைத்த உடனேயே அந்த இளைஞனுக்கு தூக்கி வாரிப்போட்டது. தாம் மட்டுமே அறிந்த இந்த இரகசியத்தை முருகன் உரைத்து விட்டாரே என்று சொல்லி கண்ணீர் மல்கினார் அந்த இளைஞர். இப்போது அந்த இளைஞனுக்கு ஜீவ நாடி மீது நம்பிக்கை வந்தது. அடுத்து சில ஆலயப்பரிகாரங்களை உரைத்து இதை செய்து விட்டு அடுத்து ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வந்து கேட்கும்படி முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்தார். பரிகாரங்களைப் பொறுத்தவரை மக்களது கர்ம வினைகளைத் தீர்க்கும் நோக்கிலேயேதான் முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைக்கின்றார். எனது சிறு வயது முதலாகவே பொருள் மீது பற்று இல்லை. அப்படி நினைத்திருந்தால் ஜீவ நாடி மூலம் பல லட்சங்களை ஈட்டியிருக்க முடியும். எந்த விதமான பரிகாரங்களையும் யாம் செய்து தருவது கிடையாது. அதேபோல் மூலிகை ரட்சைகள் போன்ற பொருட்களையும் உரிய நபர் மூலம் மக்கள் பெற வேண்டும் எனும் நோக்கில் உதவி மட்டுமே செய்கின்றேன். இந்த கலி யுகத்தைப் பற்றி நன்கு உணர்ந்திருக்கின்றேன். இதைப் பற்றி என்னை நேரில் சந்தித்துப் பயன் அடைந்தவர்கள் நன்கு அறிவார்கள். காணிக்கை இல்லாமல் ஜீவ நாடி உரைத்தால் தட்சிணா தேவியின் சாபம் ஏற்பட்டு ஜீவ நாடி உரைப்பவருக்கும் கேட்பவருக்கும் தோசம் ஏற்படும் என்பதால் ஒரு சிறு காணிக்கை பெற்றுக் கொண்டே ஜீவ நாடி உரைக்க வேண்டும் எனும் குரு உத்தரவின்படியும் ஜீவ நாடியில் முருகனின் வாக்கின் படியும் ஒரு சிறு காணிக்கை பெற்றுக் கொள்ளப்படுகின்றது. முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்தபடியே அந்த இளைஞர் ஆலயப்பரிகாரங்களை செய்து உடனடியாக அரசுப்பணியில் சேர்ந்துவிட்டார் என்பது ஆச்சரியமான உண்மையாகும். அது மட்டுமல்லாது அரைஞான் கயிறையும் அணிந்து கொண்டு வாழ்வில் ஏற்றம் கண்டு வருகின்றார் அந்த இளைஞர். இது போல் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியின் வழியாக முருகப்பெருமான் தினமும் இப்படி ஏதேனும் ஒரு திருவிளையாட்டை நடத்தி வருகின்றார்.
சென்னை வெள்ளம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அகத்திய சிவ சித்தர் சுவாமிகள் கொடுத்த பேட்டி இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதாவது இன்னும் அதிகமான வெள்ள பாதிப்புகளை மக்கள் சந்திக்க வேண்டும் என்பதே அது. அந்த பேட்டி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது என்பது அனைவரும் அறிந்த செய்தி. சித்தரிடம் பக்தர்கள் பிரார்த்தனை செய்து வெள்ளத்தால் எதிர்காலத்தில் ஏற்படும் சேதங்களில் இருந்து மக்களைக் காக்க என்ன வழி என்று கேட்டனர். அதற்கு பஞ்சேஷ்டி எனும் தலத்தில் அதிகமாக தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தால் பாதிப்பில் இருந்து ஓரளவு விடுபட முடியும் என்று சித்தர் பதில் உரைக்க சிறு ஆறுதல் கிடைத்தது. இந்த தகவல்களை அறிந்த காரைக்குடி அகத்தியர் திருமைந்தன் ஐயா அவர்கள் மதுரை இறையருள் மன்றம் பரமசிவம் ஐயா உட்பட பல நபர்களுடன் அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் வந்து பஞ்சேஷ்டியில் எந்த நாளில் தீபம் ஏற்றினால் இயற்கைச்சீற்றம் குறையும் என்று ஞானஸ்கந்தர்  ஜீவ நாடியில் முருகப்பெருமானிடம் கேட்டு உரைக்குமாறு வேண்டுகோள் வைத்தார்கள். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு ஜீவ நாடியில் முருகனிடம் கேட்டு சித்ரா பௌர்ணமி அன்று தீபம் ஏற்றுங்கள் என்று உரைத்தேன். அவ்விதமே அகத்தியர் திருமகன் ஐயா அவர்கள் குழுவினர் வேல் தீபம், சக்திகல தீபம் பிரமிடு தீபம் சிவ லிங்க தீபம் என 2108 தீபங்களை ஏற்றி உலக நன்மைக்காக கூட்டு வழிபாடு நடத்தினார்கள். ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் பௌர்ணமி பூஜை இருந்ததால் அடியேன் இந்த தீப வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அகத்திய சிவ சித்தர் சுவாமிகள் அமாவாசை அன்று ஒரு நாள் மட்டுமே கருவறையை விட்டு வெளியே வரக்கூடியவர் இந்த தீப வழிபாட்டை துவங்கி வைத்து ஆசி கூறியது மிகவும் ஆச்சரியாமாக இருந்தது என்று அனைவருமே மகிழ்ச்சி அடைந்தனர். உலக நன்மைக்காக ஜீவ நாடியில் நாள் உரைத்து தீப வழிபாட்டிற்கு அருள் கொடுத்த ஞானஸ்கந்த மூர்த்தியை அனைவரும் ஒரு நிமிடம் கண்மூடி உலக நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வோம்.
பஞ்சேஷ்டி திருத்தலம் அரும்பெரும் ஆன்மிகத் திருத்தலமாக விளங்குகிறது. ஒருமுறை மாமுனிவர்களான வசிஷ்டர், கௌதமர், கன்வர் ஆகியோர் பூமியில் தாங்கள் தவம் செய்வதற்கு ஏற்ற இடத்தை கூறியருள வேண்டும் என்று சக்கரம் ஒன்றை செய்து அதை உருளச் செய்தார். அத்தர்ப்பைப் புல் சக்கரமானது உருண்டோடி வந்து ஓரிடத்தில் நின்றது. அவ்விடத்தில் தவம் செய்யும்படி முனிவர்களிடம் கூறினார் பிரம்மா. பிரம்மா காட்டிய அந்த இடமே பஞ்சேஷ்டி திருத்தலமாகும். கோடை காலத்தில் இத்திருத்தலத்தைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும், இவ்வூரில் மட்டும் பூமியின் மேற்பரப்பிலேயே சுவையான நீர் கிடைக்கும். இந்த அதிசயம் இன்றளவும் நாம் காணும் உண்மையாகும். எனவே, இத்தலம் "பஞ்சம் தீர்க்கும் பஞ்சேஷ்டி" என்று அழைக்கப்படுகிறது. இனி, இத்தலத்திற்கு பஞ்சேஷ்டி என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்று பார்ப்போம்.
பஞ்சம் - ஐந்து, இஷ்டி - யாகம், அதாவது அகத்திய முனிவரால் ஐந்து யாகங்கள் நடத்தப்பெற்ற திருத்தலம் என்பதால் இத்தலம் பஞ்சேஷ்டி என்று பெயர் பெற்றது. அகத்திய முனிவர் ஐந்து யாகங்கள் நடத்த வேண்டிய காரணம் தான் என்ன? ஒருமுறை திருக்கயிலாயத்தில் சிவபெருமான் அங்கிருந்தோருக்கு சிவ தத்துவத்தை போதித்து கொண்டிருந்தார். அவ்வேளையில் சிவபெருமானின் அருகில் பார்வதி தேவியும் அமர்ந்திருந்தார். அப்போது அங்கிருந்த சுகேது என்ற யட்சன் சிவபெருமானிடம், "பெருமானே! பார்வதி தேவியையும் அருகில் வைத்துக் கொண்டு சிவ தத்துவத்தை எங்களுக்கு விளக்கிக் கூறுவது சரிதானா?" என்று கேட்டான். சிவபெருமான் புன்னகைத்தார். ஆனால் அருகில் இருந்த முருகப் பெருமானுக்கோ கோபம் வந்தது. சிவனும், சக்தியும் ஒருவரில் ஒருவர் பதியென்று அறிந்த பின்னும் இக்கேள்வியை கேட்ட சுகேதுவை அசுரனாகப் பிறக்கும்படி சபித்தார் முருகப் பெருமான். சுகேது அசுரனாகப் பிறந்தான். அசுரப் பெண்ணொருத்தியை மணந்து மூன்று ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தான். அம்மூன்று குழந்தைகளும் தங்கள் தந்தைக்கு நேர்ந்த சாபம் பற்றி அறிந்தனர். அவர்கள் பராசக்தியை நோக்கி தவம் புரிந்து, அளப்பர்கறிய ஆற்றல்களை பெற்றனர். தாங்கள் பெற்ற அரிய ஆற்றல்களைக் கொண்டு தேவர்களை வென்றதோடு, அவர்களை அடிக்கடி துன்புறுத்தியும் வந்தனர். சுகேதுவின் புதல்வர்களால் துன்பத்திற்குள்ளான தேவர்கள் இது பற்றி அகத்திய முனிவரிடம் முறையிட்டனர். அகத்திய முனிவர் சிவபெருமானைத் துதித்தார். சிவபெருமான் ரிஷபாரூடராக பார்வதி தேவி, விநாயகப் பெருமான், முருகப் பெருமான், நந்தி தேவர் ஆகியோருடன் அகத்தியரின் முன்பு எழுந்தருளி அகத்தியருக்குத் தேவையான ஆற்றலை அருளினார்.
இந்நிலையில் அசுரன் சுகேது மகிஷாசுரண்யம் என்ற வனத்தில் இருந்த மத்தன், உன்மத்தன், பிரமதத்தன் என்னும் ராட்சதர்களுடன் போரிட்டுத் தோற்று கடலுக்கு அடியில் சென்று மறைந்தான். அவனது மூன்று புதல்வர்களும் தங்கள் தந்தையை தேடி கடலை கலக்கினர். இதனால், கடல்வாழ் உயிரினங்கள் அஞ்சி நடுங்கின. உலகில் பிரளயம் ஏற்பட்டு உயிர்கள் துன்பம் அடைந்தன. அவ்வேளையில் அகத்திய முனிவர் தனது ஆற்றலால் கடல் நீர் முழுவதையும் பானகம் போல் குடித்துவிட்டார். கடல் நீர் முழுவதும் காணாமல் போய் நிலமெல்லாம் வறண்டது. இதனையறிந்த தேவர்கள் மீண்டும் கடலை உருவாக்கும்படி வேண்டினர். அகத்தியர் பஞ்சேஷ்டி திருத்தலத்தில் சிறிது நீரை உமிழ்ந்த பின், மீதி நீரை முன்பு கடல் இருந்த இடத்திலேயே உமிழ்ந்தார். பஞ்சேஷ்டியில் அகத்தியர் உமிழ்ந்த சிறிது நீரே இன்று திருக்குளமாகத் திகழ்கிறது. "அகத்திய உமிழ்நீர் தீர்த்தம்" என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
அகத்திய முனிவர் வைகாசி பௌர்ணமி தினத்தில் இத்திருக்குளத்தை உருவாக்கியதால், ஒவ்வொரு ஆண்டும், வைகாசி பௌர்ணமி நாளில் கங்கை நதியே இத்தீர்த்தத்தில் கலப்பதாக ஐதீகம். ஒருமுறை தேவர்களின் தலைவனான இந்திரன் யாகம் ஒன்று நடத்த விரும்பினான். தேவகுருவான பிரகஸ்பதியோ அவ்வேளையில் தவத்தில் ஈடுபட்டிருந்தார். எனவே விஸ்வருபன் என்பவரை தனது குருவாக ஏற்று யாகத்தை நடத்திவிட்டான். இதனால் கோபமடைந்த பிரகஸ்பதி, இந்திரனையும் விஸ்வரூபனையும் மானிடப் பிறவி எடுக்கும்படி சபித்தார். அவர்கள் இருவரும் மித்ரத்வஜ மன்னனின் புதல்வர்களாக, சந்திரமௌலிப்ரியன் மற்றும் சாம்புப்ரியன் என்னும் பெயரில் பிறந்தனர். அதுபோல, குபேரனின் மகளான பத்மினி என்பவள் உரோம மகரிஷியை பரிகசித்ததால் அம்முனிவரின் சாபத்திற்கு உள்ளானாள். அதாவது, பத்மினி விருத்தாசலத்தை ஆண்டு வந்த பாவபானு என்ற மன்னனுக்கு அம்பிகை என்ற பெயரில் மகளாகப் பிறந்தாள். அம்பிகை திருமண வயதை எட்டியதும் பாவபானு மன்னன் அவளுக்கு சுயம்வரம் நடத்தினான். சம்பாசுரன் என்னும் அசுரனும் மானிட உருவெடுத்து சுயம்வரத்தில் கலந்து கொண்டதோடு, அம்பிகையையும் தூக்கிச் சென்றான். இதனையறிந்த, சுயம்வரத்திற்கு வந்திருந்த சந்திரமௌலிப்ரியன் மற்றும் சாம்புப்ரியன் சம்பாசுரனை துரத்திச் சென்று போரிட்டு வென்றனர். அம்பிகையை இருவருமே திருமணம் செய்து கொண்டனர். ஆனால் தக்க சமயம் பார்த்து சம்பாசுரன் மீண்டும் அம்பிகையை தூக்கிச் சென்றுவிட்டான். அம்பிகையை காணாமல் தவித்த சந்திரமௌலிப்ரியனும் சாம்புப்ரியனும் பல இடங்களிலும் தேடி இறுதியில் காளஹஸ்தி வந்தடைந்தனர். அப்போது காளஹஸ்தியின் தென்கிழக்கில் தவம் செய்யும் அகத்திய முனிவரின் குரலைக் கேட்டனர். அகத்திய முனிவர் தங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருவரும் அவ்விடத்திற்கு வந்தனர். அவ்விடம் பஞ்சேஷ்டி ஆகும். பஞ்சேஷ்டிக்கு வந்த சந்திரமௌலிப்ரியனும் சாம்புப்ரியனும் அகத்தியரின் பாதங்களை வணங்கி, நடந்தவற்றை கூறினர். அகத்திய முனிவரும் அவ்விடத்தில் ஓர் ஆசிரமம் அமைத்து பிரதோஷ பூஜையை செய்யும்படி கூறினார். ஒருநாள் பிரதோஷ பூஜையை முடித்த இருவரும் ஆசிரமம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண்ணின் அபயக்குரல் கேட்க, அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கே சக்திஉபாசகன் என்னும் அசுரன் அம்பிகையை காளி தேவிக்குப் பலி கொடுக்கவிருந்தான். அவன் ஏற்கனவே சம்பாசுரனிடமிருந்து அம்பிகையை தூக்கி வந்திருந்தான். சந்திரமௌலிப்ரியனும் சாம்புப்ரியனும் அவனுடன் போரிட்டு அவனை கொன்று அம்பிகையை மீட்டு வந்தனர். இறுதியில் அகத்திய முனிவரின் வழிகாட்டுதலின்படி அம்மூவரும் சாப விமோசனம் பெற்று விண்ணுலகை அடைந்தனர். இவ்வாறு பஞ்சேஷ்டி திருத்தலம் புராண காலந்தொட்டே விண்ணுலகோர்க்கும், மண்ணுலகோர்க்கும் நற்கதி வழங்கிய புண்ணியத் தலமாகத் திகழ்கிறது.
இத்தகைய பெருமை நிறைந்த பஞ்சேஷ்டி திருத்தலத்தில் தீப வழிபாடு நடத்தி இயற்கை சீற்றத்தால் இனிமேல் மக்கள் பாதிக்காமல் இருக்க வேண்டுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு தனி மனித வாழ்விற்கு மட்டுமில்லாமல் உலக நன்மைக்கும் நமது ஜீவ நாடி வழிகாட்டுகின்றது என்பது பெருமைப்பட வேண்டிய செய்தியாகும். பிராப்தம் இருப்பவர்கள் புதன் வியாழன் இரவு 8 மணி முதல் 10 மணி வரை அலைபேசியில் தொடர்பு கொண்டு ஜீவ நாடியில் முருகப்பெருமான் வாக்கைக் கேட்க முன் அனுமதி பெறலாம். வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஜீவ நாடி உரைக்க அனுமதி கிடைத்துள்ளது. ஜீவ நாடி மூலம் அதிசயத்தை நடத்த வேண்டும் என்று முருகன் விரும்பினால் மட்டுமே உங்களுக்கு ஜீவ நாடி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது அனுபவம். 

ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!! (தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக