செவ்வாய், 5 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-2

அருணகிரி நாதர் தம் உயிரை விடுவதே ஒரே வழி என்று எண்ணி, திருவண்ணாமலை கோபுர உச்சிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்தார். முருகப்பெருமான் அடியவர் கோலத்தில் வந்து அவரை கீழே விழாமல் தாங்கி பிடித்தார். அவருக்கு மந்திர உபதேசம் அளித்து மறைந்தார். மந்திர உபதேசம் பெற்ற அருணகிரிநாதர், தியானத்தில் அமர்ந்தார். தியான நிலையிலேயே 12 ஆண்டுகள் கழித்தார். இறை அருளால், அவரது பிணி நீங்கி வஜ்ர தேகம் பெற்றிருந்தார். முருகப்பெருமான் அவர் முன் காட்சி அளிக்க, தியான நிலையில் இருந்து விடுபட்டு மெய்சிலிர்க்க ஆறுமுகக்கடவுளை வணங்கி நின்றார். முருகப்பெருமான் தன்னுடைய வேலால் அருணகிரிநாதர் நாவில் எழுதி, திருப்புகழை பாடுமாறு பணித்தார். அருணகிரிநாதர் தயங்கி நிற்க, முருகக்கடவுளே "முத்தைத்தரு பத்தித் திருநகை" என்று அடியை எடுத்துக் கொடுக்க, அருணகிரிநாதர் மடை திறந்த வெள்ளம் போல், திருப்புகழை பாடினார்

முத்தை தரு பத்தி திரு நகை
அத்திக்கு இறை சத்தி சரவண
முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்

முக்கண் பரமற்கு சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண

பத்து தலை தத்த கணை தொடு
ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு
பட்ட பகல் வட்ட திகிரியில் இரவாக

பத்தற்கு இரதத்தை கடவிய
பச்சை புயல் மெச்ச தகு பொருள்
பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே ?

தித்தித்தெய ஒத்த பரிபுர
நிர்த்த பதம் வைத்து பயிரவி
திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட

திக்கு பரி அட்ட பயிரவர்
தொக்கு தொகு தொக்கு தொகுதொகு
சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத

கொத்து பறை கொட்ட களம் மிசை
குக்கு குகு குக்கு குகுகுகு
குத்தி புதை புக்கு பிடி என முது கூகை

கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை
வெட்டி பலி இட்டு குலகிரி
குத்துப்பட ஒத்து பொர வ(ல்)ல பெருமாளே.

பத உரை

முத்தை = முத்துப் போன்ற முத்திச் செல்வத்தை.
தரு = அளிக்கும்.
 பத்தித் திரு நகை = வரிசையாய் விளங்கும் பற்களை உடைய.
அத்திக்கு = யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனைக்கு.
இறை = இறைவனே.

          படம்: முத்துபோன்ற பல் வரிசையை உடைய தெய்வானை அம்மையார்

சத்தி = சத்தி வேல் (ஏந்திய).
சரவண = சரவணபவனே.
முத்திக்கு = வீட்டுப் பேற்றுக்கு.
ஒரு வித்து = ஒரு வித்தே.
குருபர = குரு மூர்த்தியே.
 என ஓதும் = என்று ஓதுகின்ற.

முக்கண் பரமற்கு = மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கு.
சுருதியின் முற்பட்டது = வேதத்தில் முற்பட்டு நிற்கும் பிரணவத்தை.
கற்பித்து = கற்பித்து.
படம்: முக்கட் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து அருளல்

இருவரும் = பிரமன், திருமால் ஆகிய இருவரும்.
முப்பத்து மூ வர்க்கத்து = முப்பது மூன்று வகையான
அமரரும்- தேவர்களும்.
அடிபேண= (உனது)திருவடியை விரும்ப (அவுணருடன் போர் செய்த பெருமாளே).

பத்துத் தலை தத்த = (இராவணனுடைய) பத்து தலைகளும் சிதறும்படி.
கணை தொ(ட்)டு = அம்பைச் செலுத்தியும்.
படம்: பத்துத்தலை இராவணன் சம்ஹாரம்

ஒற்றைக் கிரி மத்தை = ஒப்பற்ற மந்தரம் என்னும் மலையை மத்தாக நட்டு.பொருது = (கடலைக்) கடைந்தும்.
ஒரு பட்டப்பகல் = ஒரு பட்டப் பகலை.

வட்ட = வட்ட வடிவமாக உள்ள.
திகிரியில் = சக்கரத்தினால்.                        இரவாக = இரவாகச் செய்தும்.
பத்தற்கு இரதத்தைக் கடவிய = பத்தனாகிய அருச்சுனனுடைய தேரைப் பாகனாகஇருந்த நடத்திய.
 பச்சைப் புயல் = பச்சை மேகம் போல் நிறமுடைய திருமால்.
 மெச்சத் தகு பொருள் = மெச்சத் தகுந்த பொருளே.
படம்: பக்தனுக்கு இரதமோட்டும் பச்சைப்புயல் கிருஷ்ணர்

பட்சத்தொடு = (என் மீது) அன்பு வைத்து.
ரட்சித்து அருள்வதும் = (என்னைக்) காத்தருளும்.
அருள்வதும். ஒரு நாளே = ஒரு நல்ல நாளும் உண்டாகுமா?


தித்தித்தெய ஒத்து = தித்தித்தெய என்னும் தாளத்துக்கு ஒத்த வகையில்.
பரிபுரம் = சிலம்பு (அணிந்த).
நிர்த்தப் பதம் வைத்து = நடனப் பதத்தை வைத்து.
பயிரவி = காளி.                                                 திக்கு = திக்குகளில்.
ப்டம்: போர்க்களத்தில் காளி ஆடுதல்

ஒட்க நடிக்க = சுழன்று நடிக்கவும்.        கழுகொடு = கழுகுகளுடன்.
கழுது = பேய்கள்.                                               ஆட = ஆடவும்.

திக்குப் பரி = திக்குகளைக் காக்கும்.     அட்டப் பயிரவர் = எட்டு பயிரவர்கள்.
தொக்கு.....தொகு = தொக்குத் தொகு என வரும்.
சித்ர = அழகிய.                                                  பவுரிக்கு = மண்டலக் கூத்தை.  
த்ரிகடக என ஓத = த்ரிகடக என்று ஓதவும்.
கொத்துப் பறை = கூட்டமான பறைகள்.
கொட்ட = முழங்கவும்.                                களம் மிசை = போர்க் களத்தில்.
குக்குக்குகு...குத்திப் புதை புக்குப் பிடி= இவ்வாறு ஒலி செய்து.
முது கூகை = கிழக் கோட்டான்கள்.
படம்: போர்க்களத்தில் அஷ்ட பைரவர்கள் ஆடுதல்

 கொட்புற்று எழ = வட்டம் இட்டு எழவும்.
நட்பு அற்ற அவுணரை = பகைவர்களாகிய அசுரர்களை.
வெட்டிப் பலி இட்டு = வெட்டிப் பலி இட்டு.
குலகிரி = குலகிரியாகிய கிரௌஞ்ச மலை.
 குத்துப்பட ஒத்து = குத்துப்படத் தாக்கி.
பொர வ(ல்)ல = சண்டை செய்ய வல்ல.
பெருமாளே = பெருமாளே.


இந்தத் திருப்புகழில்
1. தெய்வானை அம்மையார் இறைவனே
2.தகப்பனுக்கு உபதேசம் செய்தவனே
3.இராவண சம்ஹாரம் செய்த இராமனின் மருமகனே
4. பார்த்தசாரதியாகிய கிருஷ்ண பரமாத்மா மெச்சும் முருகனே
5. காளியும், அஷ்ட பைரவர்கள் எட்டுத் திசைகளிலும் ஆடவும் சூரனை சம்ஹாரம் செய்தவனே
என இத்தணை சிறப்பு அம்சங்களும் இந்த ஒரே திருப்புகழில் இருப்பதைக்காண்க.
இந்த திருப்புகழின் இரண்டாம் அடியில் முக்கட் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து என்று குருவே பரம்பொருள் எனும் கௌமார நெறியை அருணகிரி நாத சுவாமிகள் காட்டுகின்றார். அதாவது முருகப் பெருமான் சிவ பெருமானுக்கு உபதேசம் புரிந்தததை தனக்கும் உபதேசம் புரிந்ததால் குரு பக்தியில் இப்படி எடுத்த எடுப்பிலேயே குரு உபதேசத்தைப் பாடுகின்றார். இந்த பாடலை குழந்தைகள் மனப்பாடம் செய்து பாடினால் நல்ல புத்தித் தெளிவு ஏற்படுகின்றது. ஞாபக சக்தி அதிகரித்து மூளையின் அனைத்து செல்களும் தூண்டப்படுகின்றன. எனவே முதல் திருப்புகழாக இன்றைய தினமே இதை மனப்பாடம் செய்யத் துவங்குங்கள். அந்த குருவாக வந்து நம்மை முருகப்பெருமான் நிச்சயம் ஆட்கொள்வார்.
இவ்வளவு சிறப்புகளை உடையது நமது கௌமார சமயம். காலத்தின் போக்கில் இவை அழிந்து விடாது இளைய சமுதாயத்தினரிடையே கொண்டு போய் சேர்ப்பது நமது கௌமார பயணம் வாசகர்களின் கடமையாகும். இது போல் ஒவ்வொரு திருப்புகழாக தினமும் படித்து வந்தால் 1335 திருப்புகழையும் 1335 நாட்களில் சுமார் 4 ஆண்டுகளில் அனைத்து திருப்புகழையும் படித்து விட முடியும். எனவே வாசகர்கள் இதை மனதில் வைத்துக்கொண்டு கௌமார நெறியை அகிலமெங்கும் எடுத்துச் செல்ல துணை நிற்க எம் ஞான தேசிகரைப் பணிகின்றேன்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!!
நன்றி:
எனது குரு நாதர் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்.

ஓம்ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவை ஆதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

திங்கள், 4 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-1

                                
எனது ஞானதேசிகர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களின் ஆசியுடன் இன்று முதல் தினம் ஒரு திருப்புகழ் எனும் தலைப்பில் ஒரு தொடர் நமது கௌமாரபயணத்தில் ஆரம்பம் ஆகின்றது. எல்லாம் வல்ல பரம கருணா நிதியாகிய நமது வழிபடு கடவுள் தண்டமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அனைத்து அடியார்களின் திருப்பாதங்களையும் எனது சிரமேல் வைத்து வணங்கி இந்த திருப்புகழ் தொடரை எழுதுகின்றேன். முதலாவதாக திருப்புகழ் பற்றி இதுவரை வழக்கத்தில் உள்ள சிறப்பு பாயிரங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம். இப் பாயிரம் பூர்வத்துள்ள அபியுக்தர்களால் செய்யப்பட்டுப் புராதன பிரதிகளில் எழுதி வழங்கி வருவது என்பதை அறிந்து கொள்ளவும்.
திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் சில பாடல்கள்

திருப்புகழை நம் செவிகள் கேட்கும்

எல்லாரும் ஞானத் தெளிஞரே? கேளீர்சொல்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ? - பொல்லாக்
கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன்
திருப்புகழைக் கேட்குஞ் செவி?

திருப்புகழைக் கேளீர் தினம்

வேதம்வேண் டாம் சகல வித்தைவேண் டாம்கீத
நாதம்வேண் டாம்ஞான நூல்வேண்டாம், - ஆதி
குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந்
திருப்புகழைக் கேளீர் தினம்

திருப்புகழைத் தினமும் கேட்பதாலேயே வேதம், சகல வித்தைகள், இசை கீதங்கள் அனைத்தும் அறியலாம்; ஆதலால் அதனையே கேட்க என்கிறது பாடல்

திருப்புகழ் படிப்பவர் பெறுகின்ற நன்மைகள்

ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந் நாளும்
வானம் அரசாள் வரம் பெறலாம் - மோனாவீ
டேறலாம், யானைக் கிளையான் திருப்புகழைக்
கூறினார்க் காமேஇக் கூறு.

திருப்புகழ் படித்தால் முருகன் காட்சி கிட்டும்

ஆறுமுகந் தோன்றும் அழகியவேல் தோன் றுமவன்
ஏறுமயில் தோன்றும் எழில்தோன்றும் - சீறிவரு
சூரன் முடியைத் துணித்தோன் திருப்புகழைப்
பாரில் வழுத்தினோர் பால்

திருப்புகழ் படிப்பவர் மனமே முருகன் இருப்பிடம்
                              
பொருப்பது பொடிப்பட விடுத்திடுகை வேலா
இருப்பிடம் உனக்கெது எனக்கரு ளியம்பாய்;
உருக்க நல் விழுக்குலம் ஒழுக்கமில ரேனும்
திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பாம்

திருப்புகழ் படிப்பவர்கள் மனவலிமை பெறுவர்

திருப்புகழ் படிக்குமவர் சிந்தைவலு வாலே
ஒருத்தரை மதிப்பதிலை உன்றனரு ளாலே
பொருப்புக மிகப்பொருது வென்றுமயில் மீதே
தரித்தொரு திருத்தணியில் நின்றபெரு மாளே

திருப்புகழே முக்தி தரும் சாதனம்

திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத்
திருப்புகழை நித்தஞ் செபிக்கத் - திருப்புகழை
அர்ச்சிக்க முத்தியெளி தாகுமே, கூற்றைவென்று
கெர்ச்சிக்க லாமே கெடீ.

திருப்புகழ் படிக்கும் அடியார்கள் பெருமை

திருப்புகழ் வல்ல சூரர்மகன் நாயகன், சங்கரற்குக்
குருப்புகழ் வல்ல குமரேசன், சண்முகன், குன்றெறிந்தோன்
மருப்புகழ் வல்ல அருண கிரிப்பெயர் வள்ளல் சொன்ன
திருப்புகழ் வல்லவர் சீர்பாதத் தூளிஎன் சென்னியதே. 

இத்தகைய சிறப்பு மிக்க இந்த திருப்புகழைக் கற்போம், கேட்போம், படிப்போம், ஜபம் செய்வோம், அர்ச்சிபோம், போற்றுவோம், பகிர்வோம், படிக்க வைப்போம், பாட வைப்போம், கேட்க வைப்போம் இப்படி அனைத்திலும் உள்ள ஓம் ஓம் ஓம் என ஒலிக்கும் பிரணவத்திற்கு பொருள் சொன்ன சுவாமி நாதனே குருவாய் வருவாய் அருள்வாய்!!


நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள அவர்கள்

கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

மலேசியாவில் சிரவை ஆதீனம் அவர்கள் ஆசியுரை

 படம்: மலேசியாவில் அருணகிரி நாதர் விழாவில் ஆசியுரை

மலேசியா விழா பற்றிய  நிகழ்வுகளை சிரவை ஆதீனம் அவர்கள்
ஸ்ரீஸ்கந்த உபாசகர்  அவர்களிடம் பகிர்ந்து கொண்ட செய்திகளை இங்கு வெளியிடுகின்றோம்.

மலேசியாவில் ஈப்போ மாகாணத்தில் நடந்த அருணகிரிநாதர் விழாவிற்கு அரசு 10000 ஆயிரம் வெள்ளி நிதியுதவி செய்துள்ளது. நமது இந்திய மதிப்பில் 155000 ரூபாய் தொகை ஆகும்.மாநில அரசு சமய வகுப்பிற்கு இதே அளவு நிதியுதவி செய்துள்ளது.விடுமுறை கால பயிற்சியில் 82 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். அம்மாணவர்களுக்கு சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்களும், அமைச்சரும் சான்றிதழும் பதக்கமும் வழங்கி பாரட்டினார்கள்.அமைச்சர் எதிர்கட்சி நாடளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பனர் ஷா சீனர் விழாவின் ஆரம்பம் முதல் முழுமையாக இருந்தனர்.அமைச்சரின் பேச்சு மிக அருமையாக இருந்தது என்றும் அவர் திருமுறை,திருப்புகழ் உள்ளிட்ட பாடல்களில் ஆழ்ந்த புலமையுடையவர் என்பதை அவரின் பேச்சின் மூலம் உணர முடிந்தது என்றும் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் தெரிவித்து மகிழ்ந்தார்கள்.ஆங்கிலத்தின் மூலம் திருப்புகழைப் பதிவு செய்து படிப்பவர்களை மிகக் கடிமையாக கண்டித்தார் அமைச்சர்.அனைவரும் தமிழைப் படித்து அதன் பின் பாடல்களைச் சொல்லிக் கொடுங்கள் என்றார்.எதிர்காலத்தில் ஜனவரி முதல் தேதியில் அருணகிரிநாதர் விழா மலேசியா நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டும்.அதை தேசிய விழாவாக மாற்றபட வேண்டும்.அதற்கான முயற்சியாக விழா அன்று மலேசியா முருக பக்தர்கள் பேரவை தொடங்கப்பட்டுள்ளது என்றும் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் தெரிவித்தார்கள்.இதன் நோக்கும் அடுத்த தலைமுறைக்கு முறையான நமது முருக வழிபாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.இவ்விழா கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.இந்த ஆண்டு மூன்று மாகணங்களில் உள்ள முருகன் கோயில்களில் இவ்விழா நடைபெற்றதுள்ளது.வழிபாடு என்பது வெறும் ஆடம்பரமான பக்தி மட்டுமல்ல.உண்மையான அருளார்களில் அரும்பெரும் வாரலாறு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.பல தமிழர்கள் நமது பாரம்பரியமான முருக வழிபாடுகளை விட்டு பிற வழிபாடு நோக்கிச் சென்று கொண்டுள்ளனர்.அவர்களை மீண்டும் நமது வழிபாட்டு நெறிக்கு கொண்டு வரவேண்டும்.நாமும் நமது பகுதிகளில் ஒரு பக்தி இயக்கத்தை தோற்றுவிக்க வேண்டும்.அவர்கள் திருப்புகழ் உள்ளிட்ட பாடல்களை பாடி வழிபாடு செய்ய வேண்டும்.அங்கு விழாவில் குழந்தைகள் முதல் பெரிவர்களை வரை மரபு சார்ந்த உடைகளுடன் கோயிலுக்கு வருகின்றனர்.நாம் நமது கோயிலுக்கு எவ்வுடையுடன் செல்ல வேண்டும் விவாதம் நடைபெறுகின்றது என்றும் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் தெரிவித்தார்கள்.
இதையெல்லாம் நமது தமிழக மக்களும் அரசும் உணர வேண்டும். நமது பாரம்பரியமான முருக பக்தியை மறந்துவிட்டு பாதை மாறிச்சென்று கொண்டிருக்கின்றோம். பக்தியால் மட்டுமே வருங்கால சந்த்தியினருக்கு ஒழுக்க நெறிகளை உணர வைக்க முடியும் எனவே குரு பக்தியும் முருக பக்தியும் நமது தமிழகத்தில் பெருக நமது கௌமாரபயண வாசகர்கள் அனைவரும் தங்களால் இயன்ற முயற்சிகளை எடுக்க வேண்டும். எமது ஞானதேசிகர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் கௌமார நெறியை உலகம் முழுவதும் போதித்து மக்கள் அனைவரையும் நல்வழிப்படுத்தி வருகின்றார்கள். எனவே நாமும் திருப்புகழை தினமும் பாடியும், முருக பக்தியில் திளைத்தும் நமது வருங்கால சந்த்தியினருக்கு முருக பக்தியை எடுத்துக் கூறி நல்வழிப்படுத்தியும் நமது சங்ககாலத்திற்கும் முன்பு இருந்து வருகின்ற இயற்கையோடு இணைந்த இந்த முருக வழிபாட்டை மேற்கொள்ள வைக்க வேண்டும். அருணகிரி நாதர் திருப்புகழை இந்த அவணியெங்கும் முழங்க வைத்து முருகனின் அடியார்கள் அடைந்த அருமை பெருமைகளை அனைவரும் அறிய வைக்க வேண்டும். மலேசியா நாட்டினர் உணர்ந்த அள்விற்குகூட நாம் முருக பக்தியில் திளைப்பதில்லை என்பதே அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.
மலேசியா நாட்டு மத்திய அமைச்சர் விளையாட்டு மற்றும் இளைஞர் நல துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்கள் ஆறாம் ஆண்டு அருணகிரிநாதர் விழாவில் கலந்து கொண்டு சென்ற பின்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் அருணகிரி என்று பெயர் வைத்துள்ளார். இதைக் காட்டிலும் அவர்கள் சமய ஈடுபாட்டை நாம் காட்ட முடியாது என்று எமது குரு நாதர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் என்னிடம் தெரிவித்த போது எனது கண்களில் கண்ணீரே வந்து விட்டது. என்னே ஒரு முருக பக்தி. இது போல் நமக்கே உரிய பாரம்பரிய முருக பக்தியை நாம் கைவிடாமல் இன்னும் இன்னும் முருகா...முருகா... என ஓதி, உள்ளம் குழைந்து கண்ணீர் மல்க நாம் அனைவரும் முருக பக்தியில் திளைக்க இன்றே ஒரு மனதாகக் கைகோர்ப்போம். நம்மை சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் சிறப்பாக வழி நடத்துவார்கள். இன்று முதலே தினமும் ஒரு திருப்புகழை பக்தியால் பணிந்து பலகாலும் பற்றியே மா திருப்புகழ் பாட குருவருளால் ஒரு சபதம் செய்வோம்.
திருப்புகழைக் கேளீர் தினம்!

கான மயில் வீரன் திருப்புகழைக் கேட்கும் செவி!!

முத்திக்கு ஒரு வித்துக் குருபரன் என ஓது!!!

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள் பதமே துணையது!!!!

ஜெப மாலை தந்த சற்குரு நாதா!!!!!

நாத விந்து கலாதி நமோ! நமோ!!

தருணமிதுயா மிகுத்த கனமதுர நீள் சௌக்ய சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு  தகைமை சிவ ஞான முக்தி பரகதியும் நீ கொடுத்து உதவி செய்ய வேனும் நெய்த்த வடிவேலா!!!!!

அதிசயம் அனேகமுற்ற பழனி!!

அரிய தமிழ் தானளித்த மயில் வீரா!!!

இது போன்று திருப்புகழில் பொதிந்து கிடக்கும் அருள் மதிரங்கள் ஏராளம்! ஏராளம்!! எனவே தான் வள்ளிமலை சச்சிதானந்தம் சுவாமிகளுக்கு திருப்புகழ்தான் மகா மந்திரம் என்று திருவண்ணாமலையில் சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.
எனது குரு சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் ஒரு வெண்பாவில் திருப்புகழின் பெருமையையும் அதைப் படித்தால் இன்னல் இன்றி வாழ்ந்திடலாம் என்கிறார்கள்

அருணகிரி நாதர் அருந்தமிழ் வண்ணச்
சரபமுனி, நம் கந்தசாமிக்- கருணைமுகில்
என்னுஒரு மூவர் இயற்றமிழை ஓதிடுவோர்
இன்னலின்றி வாழ்ந்திடுவா ரே

இந்த வெண்பாவை 29.12.2015 அன்று நடந்த ஆதீனக் குரு முதல்வர் குரு பூசை விழாவில் வெளியிடப்பட்ட திருப்புகழ்த் திரட்டு எனும் நூலின் வாழ்த்துரையில் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் எழுதியுள்ளார்கள். அதே போல் வருடந்தோறும் திருப்புகழ் இசை விழாவை பெரிய விழாவாக கௌமார மடாலயத்தில் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் நடத்தி அருணகிரியின் பெருமையைப் பறைசாற்றி வருகின்றார்கள்.
சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்களின் உபதேசப்படி சீடன் எனும் வகையில் இனிமேல் தினமும் ஒரு திருப்புகழும் அதன் மகிமையும் நமது கௌமாரபயணத்தில் தொடர்ந்து வெளிவரும். என்னிடம் இருக்கின்ற அபூர்வ ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் திருப்புகழ் பற்றி ஜீவ நாடி உரைக்கும் அரிய இரகசியக் குறிப்புகளும் இனி அந்த தொடரில் இடம் பெறும். நமது கௌமார பயணம் வாசகர்கள் முடிந்த அளவு இந்த இணைய முகவரியை அனைவரிடமும் பகிர்ந்து முருக சேவையும் குரு சேவையும் செய்து கௌமார நெறியில் இணைந்து அரை நிமிஷ நேரமட்டில் தவமுறை தியானம் வைக்க தித்திக்கும் திருப்புகழைப் படித்து பாரினில் பரிசுத்தாமாய் பரம்பொருள் ஸ்ரீஞானஸ்கந்தனின் அருளோடு வாழ எனது குரு நாதர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்களை பிரார்த்தனை செய்கின்றேன்.


நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள்
 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!!

கட்டுரையை எழுதியவர்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன?


சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில்  பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.

அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.

இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.

இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.

அவர் சொன்னதாவது:

முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.

உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்…ஆங்கிலத்தில் துவங்கினார்..

மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை மௌத் இஸ் ரெலாக்ஸ்!

மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!

என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.

இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.

பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருதையும் கேட்டார்.

என் முறை வந்தது. நான் சொன்னேன்…”சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!” என்றேன்.

ஆச்சரியத்துடன் பார்த்த அவர் “அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்” என்று கேட்டார்.

நான் சொன்னேன் “சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது” என்றேன்.

மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.

நானும் சொல்லத் துவங்கினேன்.

கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!

விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!

பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!

கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க‌! .

என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.

இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.

இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.

மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.

கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.

இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?

கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.

இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.

ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.

ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்”. இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.

அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!

காக்க காக்க கனகவேல் காக்க!

நோக்க நோக்க நொடியில் நோக்க! 

என்றும் இறை பணியில் 
ஸ்கந்த உபாசகர்  ஜீவநாடி கலையரசு 
அந்தியூர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள்.

                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!

சனி, 2 ஜனவரி, 2016

மலேசியாவில் சிரவை ஆதீனம் அவர்கள்

ஞானப்பழத்திற்காக வைக்கப்பட்ட போட்டியில் உலகத்தை ஒரு நொடிப்பொழுதில் வலம் வந்தவர் நம் வழிபடு கடவுளாகிய முருகப்பெருமான். உலகை ஒரு நொடியில் வலம் வரும் சித்ர கலாப மயிலே என்பார் அருணகிநாத சுவாமிகள். அந்த வகையில் முருகப்பெருமானை பரம்பொருளாக வழிபடும் கௌமார சமயத்தினர் இந்த உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளார்கள். உலகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து கௌமார பகதர்களுக்கும் தலமை கௌமார மடமாகத் திகழ்ந்து வருவது கோவை கௌமார மடாலயமே. முருகப் பெருமானின் வம்சாவளி குரு நாதர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள். சிரவை ஆதீனமே நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கும் குரு நாதர் ஆவார்கள். முருகனைப் போன்றே அவரது வம்சாவளி குரு நாதரும் இது போல் பல நாடுகள் சென்று நமது கௌமார சமயத்திற்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களின் இந்த மலேசியா பயணம் அமைந்துள்ளது.
அந்த வகையில் மலேசியா நாட்டில் ஈப்போ மாகாணத்தில் நடந்த அருணகிரிநாதர் சுவாமிகள் விழாவில் சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள். அதன் படங்களில் சில





படங்கள்: மத்திய அமைச்சர் டத்தோ சரவணன், எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன்,சட்டமன்ற உறுப்பினர் ஷா சீனர், விழாக்குழுத்தலைவர் மருத்துவர் ஜெயபால் உள்ளிட்டோர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வணங்கினர் 
படம்: மலேசியா நாட்டில் ஈப்போ மாகாணத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் புகைப்படம் மற்றும் தண்டபாணிக்கடவுள் திருக்கோவில் உள்ளது





படங்கள் மலேசியா நாட்டு தமிழ் நேசன் நாளிதழில் வெளிவந்த செய்திகள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்

சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

3ம் ஆண்டில் கௌமாரபயணம்

ஜனவரி 2016 முதல் நமது கௌமாரபயணம் முத்தான மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த மூன்றாம் ஆண்டில் மகத்துவம் பொருந்திய இறையருள் செய்திகளை வெளியிடும் இந்த கௌமாரபயணம் உண்மையிலேயே முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக பயணம்  என்று பல ஆன்மீக அருளாளர்கள், குரு மஹா சந்நிதானங்கள், பல கௌமார பயண வாசகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள்.
உலகம் முழுவதும் இருந்து இதுவரை சுமார் 6 லட்சம் வாசகர்கள்  நமது கௌமாரபயணத்தைப் படித்துள்ளார்கள் என்பது இந்த நேரத்தில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
கருத்துக்கள்:
சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களின் வாழ்த்து
கஜ பூஜை சுவாமிகள் பற்றிய கவிதை மிக நன்று. சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் கட்டுரை மிக நன்றாக உள்ளது. பழனி பட்டணம் சுவாமிகள் குரு பூசை செய்தி நன்றாக உள்ளது.உங்கள் ஆன்மீக சேவை தொடர வாழ்த்துக்கள்.

தென்சேரிமலை ஆதீனம் தவத்திரு முத்து சிவராமசாமி அடிகளார் அவர்களின் வாழ்த்து
முருகப்பெருமானின் திருவிளையாடல்களை உலகம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் அரிய சேவைகள் செய்து வரும் இந்த தளமும், ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களும் நீடுழி வாழ்ந்து இது போல் இன்னும் பல சேவைகள் செய்ய வாழ்த்துகின்றேன்.
ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வருகின்ற எழுத்துக்கள் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை  பலிக்கின்றது.---உதய சங்கர், மும்பை

ஒரு பத்து நாட்களுக்கு முன்னர்தான் இந்த பிளாக்கை பார்த்தேன், அனைத்து பதிவுகளையும் படித்தேன் மிக நல்ல தகவல்கள்---அஷோக் அவர்கள்

அனைத்தும் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் திருவிளையாடல்கள் ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!---சம்பூர்ணம், கேரளா

தினசரி கௌமாரபயணம் மிக ஆர்வத்துடன் படித்து வருகின்றேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது---கந்தன்ஸ்ரீ அவர்கள்

அருமையான தவல்கள் அற்புதம்  கண்டேன்...வியந்தேன்.. பதிவிற்கு நன்றி         ---முத்தமிழன் அவர்கள்

இது இறையருள் பெற்றுத்தரும் பயணம் நன்றிகள் பல---கவிதா அவர்கள்

இணையதளம் மிக அருமை..எல்லாம் முருகன் அருள்----சங்கர் அவர்கள்

மிக நல்ல செய்தி இந்த சேவை தொடரட்டும்---சித்ரா சிட் பண்ட்ஸ் அவர்கள்

எனது 30 ஆண்டுகால அனுபவத்தில் நாடி மிக மிக மிக உண்மை---சூரிய மூர்த்தி அவர்கள் ஈரோடு

அற்புதமான தகவல்கள்---சுஜாஜெய்கோபி அவர்கள்

பெரும் தொண்டரோடு கூட்டுக்கண்டீர் வாழிய நீவிர் பல்லாண்டு---திரு.கார்த்திகேயன் அவர்கள்

மேலும் தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளேன்--- வள்ளி அவர்கள்

இந்த பதிப்புகளைப் படிப்பது பெரும் பாக்கியம்---சுரேஷ் அவர்கள்

மிகவும் அழகான திருவிளையாடல்கள், இதில் சில பகுதிகளை அகத்தியர்வனம் பிளாக்கில் ஆங்கிலத்தில் வெளியிடுகிறேன் ----சண்முகம் ஆவுடையப்பன் அவர்கள், மலேசியா

 நாடியின் பதிவுகள் மிகவும் அருமை சித்தர்கள் ஆட்சியை எதிர்பார்க்கிறேன் ---அருண்முருகன் அவர்கள்

எனது ஆன்மீகத் தேடலில் மற்றுமொரு முத்து கிடைத்த சந்தோஷம்---வள்ளி யு.எஸ்.ஏ

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்---திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடிக்கு ஈடு இணையே இல்லை. எனது மிகுந்த மரியாதைக்குரிய ஆன்மீக குரு ஜெகதீஸ்வரன் ஐயா அவர்கள் செய்து வரும் இந்த சேவைக்கு மிக மிக நன்றி---ஆறுமுகம் சந்தன ராஜீ அவர்கள்

அடியேன் தங்களிடம் ஜீவ நாடி கேட்டு வருகின்றேன். அதன் அனுபனக்களை வார்த்தைகளால் கூற இயலாது. முருகனே வழிகாட்டிக் கொண்டுள்ளார். தாங்கள் அடியேனுக்கு சொன்ன அனைத்தும் நடக்கிறது---ரவிகுமார் உடுமலைப்பேட்டை

அய்யா தங்களிடம் ஜீவ நாடி கேட்டுள்ளேன். அப்போது அடைந்த ஆனந்தத்தை இந்த பதிவுகளப் படிக்கும்போது உணர்கின்றேன்.

இது போல் இன்னும் ஆயிரக்கணக்கான கருத்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. உங்கள் கருத்துக்களை kaumarappayanam@gmail.com எனும் மின்னஞ்சலில் அனுப்பலாம்.
எனது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு இந்த நேரத்தில் இந்த கௌமார பயணம் இணையதளம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!