அருணகிரி நாதர் தம் உயிரை விடுவதே
ஒரே வழி என்று எண்ணி, திருவண்ணாமலை
கோபுர உச்சிக்கு சென்று, அங்கிருந்து கீழே
குதித்தார். முருகப்பெருமான் அடியவர் கோலத்தில் வந்து அவரை கீழே விழாமல் தாங்கி
பிடித்தார். அவருக்கு மந்திர உபதேசம் அளித்து மறைந்தார். மந்திர உபதேசம் பெற்ற
அருணகிரிநாதர், தியானத்தில்
அமர்ந்தார். தியான நிலையிலேயே 12 ஆண்டுகள்
கழித்தார். இறை அருளால், அவரது பிணி நீங்கி
வஜ்ர தேகம் பெற்றிருந்தார். முருகப்பெருமான் அவர் முன் காட்சி அளிக்க, தியான நிலையில் இருந்து விடுபட்டு
மெய்சிலிர்க்க ஆறுமுகக்கடவுளை வணங்கி நின்றார். முருகப்பெருமான் தன்னுடைய வேலால்
அருணகிரிநாதர் நாவில் எழுதி, திருப்புகழை
பாடுமாறு பணித்தார். அருணகிரிநாதர் தயங்கி நிற்க, முருகக்கடவுளே "முத்தைத்தரு பத்தித்
திருநகை" என்று அடியை எடுத்துக் கொடுக்க, அருணகிரிநாதர் மடை திறந்த வெள்ளம் போல், திருப்புகழை பாடினார்
முத்தை தரு பத்தி திரு நகை
அத்திக்கு இறை சத்தி சரவண
முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்
முக்கண் பரமற்கு சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண
பத்து தலை தத்த கணை தொடு
ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு
பட்ட பகல் வட்ட திகிரியில் இரவாக
பத்தற்கு இரதத்தை கடவிய
பச்சை புயல் மெச்ச தகு பொருள்
பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே ?
தித்தித்தெய ஒத்த பரிபுர
நிர்த்த பதம் வைத்து பயிரவி
திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட
திக்கு பரி அட்ட பயிரவர்
தொக்கு தொகு தொக்கு தொகுதொகு
சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத
கொத்து பறை கொட்ட களம் மிசை
குக்கு குகு குக்கு குகுகுகு
குத்தி புதை புக்கு பிடி என முது கூகை
கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை
வெட்டி பலி இட்டு குலகிரி
குத்துப்பட ஒத்து பொர வ(ல்)ல பெருமாளே.
பத உரை
முத்தை = முத்துப் போன்ற முத்திச் செல்வத்தை.
தரு = அளிக்கும்.
பத்தித் திரு நகை = வரிசையாய் விளங்கும் பற்களை உடைய.
அத்திக்கு = யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனைக்கு.
இறை = இறைவனே.
படம்: முத்துபோன்ற பல் வரிசையை உடைய தெய்வானை அம்மையார்
சத்தி = சத்தி வேல் (ஏந்திய).
சரவண = சரவணபவனே.
முத்திக்கு = வீட்டுப் பேற்றுக்கு.
ஒரு வித்து = ஒரு வித்தே.
குருபர = குரு மூர்த்தியே.
என ஓதும் = என்று ஓதுகின்ற.
முக்கண் பரமற்கு = மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கு.
சுருதியின் முற்பட்டது = வேதத்தில் முற்பட்டு நிற்கும் பிரணவத்தை.
கற்பித்து = கற்பித்து.
படம்: முக்கட் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து அருளல்
இருவரும் = பிரமன், திருமால் ஆகிய இருவரும்.
முப்பத்து மூ வர்க்கத்து = முப்பது மூன்று வகையான
அமரரும்- தேவர்களும்.
அடிபேண= (உனது)திருவடியை விரும்ப (அவுணருடன் போர் செய்த பெருமாளே).
பத்துத் தலை தத்த = (இராவணனுடைய) பத்து தலைகளும் சிதறும்படி.
கணை தொ(ட்)டு = அம்பைச் செலுத்தியும்.
படம்: பத்துத்தலை இராவணன் சம்ஹாரம்
ஒற்றைக் கிரி மத்தை = ஒப்பற்ற மந்தரம் என்னும் மலையை மத்தாக நட்டு.பொருது = (கடலைக்) கடைந்தும்.
ஒரு பட்டப்பகல் = ஒரு பட்டப் பகலை.
வட்ட = வட்ட வடிவமாக உள்ள.
திகிரியில் = சக்கரத்தினால். இரவாக = இரவாகச் செய்தும்.
பத்தற்கு இரதத்தைக் கடவிய = பத்தனாகிய அருச்சுனனுடைய தேரைப் பாகனாகஇருந்த நடத்திய.
பச்சைப் புயல் = பச்சை மேகம் போல் நிறமுடைய திருமால்.
மெச்சத் தகு பொருள் = மெச்சத் தகுந்த பொருளே.
படம்: பக்தனுக்கு இரதமோட்டும் பச்சைப்புயல் கிருஷ்ணர்
பட்சத்தொடு = (என் மீது) அன்பு வைத்து.
ரட்சித்து அருள்வதும் = (என்னைக்) காத்தருளும்.
அருள்வதும். ஒரு நாளே = ஒரு நல்ல நாளும் உண்டாகுமா?
தித்தித்தெய ஒத்து = தித்தித்தெய என்னும் தாளத்துக்கு ஒத்த வகையில்.
பரிபுரம் = சிலம்பு (அணிந்த).
நிர்த்தப் பதம் வைத்து = நடனப் பதத்தை வைத்து.
பயிரவி = காளி.
திக்கு = திக்குகளில்.
ப்டம்: போர்க்களத்தில் காளி ஆடுதல்
ஒட்க நடிக்க = சுழன்று நடிக்கவும். கழுகொடு = கழுகுகளுடன்.
கழுது = பேய்கள்.
ஆட = ஆடவும்.
திக்குப் பரி = திக்குகளைக் காக்கும். அட்டப் பயிரவர் = எட்டு பயிரவர்கள்.
தொக்கு.....தொகு = தொக்குத் தொகு என வரும்.
சித்ர = அழகிய.
பவுரிக்கு = மண்டலக் கூத்தை.
த்ரிகடக என ஓத = த்ரிகடக என்று ஓதவும்.
கொத்துப் பறை = கூட்டமான பறைகள்.
கொட்ட = முழங்கவும். களம் மிசை = போர்க் களத்தில்.
குக்குக்குகு...குத்திப் புதை புக்குப் பிடி= இவ்வாறு ஒலி செய்து.
முது கூகை = கிழக் கோட்டான்கள்.
படம்: போர்க்களத்தில் அஷ்ட பைரவர்கள் ஆடுதல்
கொட்புற்று எழ = வட்டம் இட்டு எழவும்.
நட்பு அற்ற அவுணரை = பகைவர்களாகிய அசுரர்களை.
வெட்டிப் பலி இட்டு = வெட்டிப் பலி இட்டு.
குலகிரி = குலகிரியாகிய கிரௌஞ்ச மலை.
குத்துப்பட ஒத்து = குத்துப்படத் தாக்கி.
பொர வ(ல்)ல = சண்டை செய்ய வல்ல.
பெருமாளே = பெருமாளே.
5. காளியும், அஷ்ட பைரவர்கள் எட்டுத் திசைகளிலும் ஆடவும் சூரனை சம்ஹாரம் செய்தவனே
என இத்தணை சிறப்பு அம்சங்களும் இந்த ஒரே திருப்புகழில் இருப்பதைக்காண்க.
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்.
ஓம்ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவை ஆதீன சீர்த்தி சிறக்கட்டும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக