புதன், 13 செப்டம்பர், 2017

பழநி பட்டணம் சுவாமிகள் மகிமை

அவதாரம்                       பரிபூரணம்
கி.பி.4932                        கி.பி.4999
கி.பி.1831                        கி.பி.1898
சற்குரு நிருவான தேசிகர் சுவாமிகள்
ஸ்தலம்: தளவை மடம்
தளவாய்ப்பட்டி.
 ஸ்ரீ பட்டணம் சுவாமிகள் துதி
ஆதிமறை முடிவாலு மறிய வொண்ணா
அருளுருவே யடியவர்பவ நீக்க வேண்டி
ஓதரிய உலகமதில் உதித் தெழுந்த
வுத்தமனே மத்தனுளத் துணர்வே போற்றி
வாதமிடுஞ் சமய நெறிக் குள்ளலைந்த
வம்பனுக்குத் தத்துவமசி வகையோ டீந்த
மூதுணர்வே சின்மயமாய் விளங்கும் மாரி
முத்தனடி சிரமுளத்திற் போற்றி வாழ்வாம்.
பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் அவதார மகிமை
   சேலம் தளவாய்பட்டி நிருவாண தேசிகர் சுவாமிகளால் “உன் வாயிலிருந்து சொற்கள் மாரி போல் பொழிந்து முத்துகளாகவே உதிர்கின்றன” என்று கூறி பட்டணத்திலிருந்து வந்து கதா காலட்சேபம் செய்து கொண்டிருந்த சின்னசாமி தாஸ் என்பவரை மாரிமுத்து என்றழைக்க தமது 21-ம் வயதில் துறவு பூண்டு மக்களால் பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.
    குரு நிருவாண தேசிகனுக்கு தொண்டு புரிந்து ஒரு மண்டலம் மோன நிலையை சாதிக்க பாலாம்பிகையின் குண்டத்தின் முன்னிலையில் ஆசார நியமத்துடன் மௌனமாகவே யாகாதி கருமங்களை செய்து குரு நிருவாண தேசிகனின் சன்னதியில் அன்றடைந்த நிலையே நிலையாக கொண்டு ஒரு மண்டலம் பூர்த்தியாகும் முன் அம்பிகை தரிசனம் கிடைக்கப்பெற்று புளகாங்கிதத்துடன் நா தழு தழுத்த நிலையில் அம்பிகையின் மீது பாமாலை பாடினார். இந்த ஜெபமாலையை ஆசாரத்துடனும் ஆதரவுடனும் கற்று நலன் பெற்றவர்கள் அநேகர்.
   மகேஸ்வர பூஜைக்கு சாமான்கள் பெற அகமமதையுடைய ஏத்தாபூர் பார்ப்பனர் தெருவிற்கு சென்று நான்கு வர்ணாசிரமத்தை பற்றி பேசி நிஷாத்தாத்பர்யங்களை சாந்த முறையிலே விளக்கி ஹடயோகப்ரதீகள் போன்ற நூல்களில் காணாத அநேக அரிய பெரிய உன்னத உபர்நிதிகளை ஸ்வாமிகள் தம் திருவாக்கால் சரமாரியாக பொழிந்து அனைவரையும் சிறிது நேரம் அமைதியடைய செய்து பூஜைக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தையும் கொண்டு வந்து சேர்த்து அவ்வூர் மக்களை குரு நிருவாண தேசிகனிடம் சரணடைய செய்தார்.
   குருநாதர் ஆணைப்படி யாத்திரை செய்த பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் நிலைப்பாடி கிராமத்திற்கு சென்று மக்களிடம் யாத்திரை சென்று வந்ததை விளக்கி கூறி ஆசி வழங்கினார்.
   தலை மாணவரான மாரிமுத்து சுவாமிகள் நிஷ்டானு பாவத்தில் தேசிகன் நிருவிகற்ப சமாதி அடைவதை தெரிந்து சந்நிதானம் வந்து பூர்வீக அபிடேகங்கள் செய்து நிஷ்டையில் தன் குருநாதர் நிருவாண தேசிகரை அடக்கம் செய்தார்.
   தனது குருநாதரின் ஆணைப்படி மடத்தின் அருகில் உள்ள கிணற்றை பெரியதாக வெட்டி குளமாக்கியும் குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்நானம் செய்யவும் தளவாய்ப்பட்டி கிராமம் நகரமாகவும் மற்றும் பிரம்ம உற்சவமும் தெற்ப உற்சவமும் நடைபெற வழி வகுத்தார்.
   தனது குருநாதரின் எண்ணப்படி தளவாய்ப்பட்டி மக்கள் தங்க ஆபரணங்களை விரும்பி கொடுக்கும்படி செய்து வேணுகோபால், ஆஞ்சநேயர் சிலைகளை சொர்ணத்தால் உருவாக்கினார். ஒவ்வொரு தை அமாவாசையன்று வேணுகோபால், ஆஞ்சநேயர் தங்க விக்ரகங்கள் தேரில் பவனி வருவதை தளவாய்பட்டி மக்கள் கண்டு களித்து வருகிறார்கள்.
   பொருள், புகழ், அருள் முதலிய ஐஸ்வர்யங்கள் நிறையப் பெற்றது தளவாய்ப்பட்டி.
   தங்கட்கு பெருநிதி கிடைக்க பெற்றதாக எண்ணி மகிழ்ந்து சுவாமிகளிடம் அடைக்கலம் புகுந்து உடல், பொருள், ஆவி மூன்றையும் அர்ப்பணித்து சேவை செய்து அவ்வூர் மக்கள் அனைவரும் இன்றும் ரதோற்சவம் நடத்தி அருள் பெருக்கி பொருள், புகழ் முதலியன பெற்று இன்புற்று வாழ்கின்றனர்.
   குருநாதர் அறிவுரைப்படி மாரிமுத்து சுவாமிகள் அறுபடை வீட்டில் மூன்றாம் படை வீடான பழநியம்பதி வந்து வரத்தாற்றங்கரையில் தியானம் மேற்கொண்டு தனது அடியார்களுக்கும் அடைக்கலம் தந்து உபதேசங்கள் வழங்கி 1934-ம் ஆண்டு புரட்டாசி திங்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பரிபூரணமானவர்கள்.
   அவரது சிஷ்யர்களில் ஒருவரான முத்துசாமி சுவாமிகள் முருகன்பால் குருநாதர் கொண்ட பற்றையும் பக்தியையும் பார் புகழ் செய்ய வேண்டும் என்பதற்காக அவரது சமாதியின் மீது முருகன் சிலையை நிறுவினார்கள்.
   போகர் உருவாக்கிய சிலை போல் முத்துசாமி சுவாமிகள் உருவாக்கிய சிலை உள்ளதை பார்த்து மக்கள் வியப்புறுகிறார்கள். சுவாமிகளின் பிரதம சீடரான வேலாயுத சுவாமிகளின் சமாதியும் அருகில் உள்ளது.
   சுவாமிகளின் சிஷ்யரான முத்துசாமி சுவாமிகள் மடத்தை போற்றி பரிபாலனம் செய்து வந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் குரு பூஜையை தளவாய்ப்பட்டி மற்றும் பழனியை சுற்றியுள்ள பகுதிகளில் மகேஸ்வர பூஜைக்கு வேண்டிய பொருட்களை பக்தர்களிடம் இருந்து வரவழைத்து அவரும் சில முக்கிய இடங்களுக்கு சென்று வசூல் செய்து சிறப்பாக நடத்தி குருவை போற்றி வந்தார்.
   அவருக்கு பின் ஆலோசனைக் குழு பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் மடாலயத்தை நிர்வகித்து வந்தது. அவ்வாலோசனைக் குழு 1981 – ஆம் ஆண்டு கோவை சிரவணபுரம் கௌமார மடாலயத்திடம் ஒப்படைத்தார்கள். தற்பொழுது பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் திருமடம் சிரவை ஆதினத்தின் கீழ் இயங்குகிறது.ஆதீன கர்த்தர் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் அவர்கள் ஓவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பட்டணம் சுவாமிகளுக்கு மிகச்சிறந்த முறையில் குரு பூஜையை நடத்தி வருகின்றார்கள். வருகின்ற புரட்டாசி ஆயில்யம் அன்று குரு பூஜையோடு குடமுழுக்கும் நடக்க இருக்கின்றது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
படம்: சென்ற புரட்டாசி ஆயில்யம் அன்று பட்டணம் சுவாமிகள் குரு பூஜை

                இணையதளம்: www.kaumaramutt.com

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

திங்கள், 11 செப்டம்பர், 2017

தவத்திரு. இராமானந்த சுவாமிகளுக்கு கிடைத்த முருகன் காட்சி

கோவையில் கௌமார மடாலயம் ஸ்தாபித்தவர் தவத்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்கள். ஒரு முறை தவத்திரு. இராமானந்த சுவாமிகள் கனவில் அவர் வழிபடு கடவுள் தோன்றி திருச்செந்தூர் செல் என்று உரைக்க அடுத்த நாளே திருச்செந்தூர் சென்றுவிட்டார் சுவாமிகள். அங்கே சுவாமிகளுக்கு முன் பின் யாரையும் தெரியாது அந்த செந்தில் முருகனைத் தவிர. சுப்பையா எனும் நபர் வந்து சுவாமிகளுக்கு ஆலய தரிசனம் செய்வித்து தங்க இடம் கொடுத்து தாமும் அவருடன் தங்கினார். இரவில் உறக்கம் விழிக்க சுவாமிகள் கண் விழித்துப் பார்த்தவுடன் சுப்பையாவைக் காணவில்லை. பின் எங்கும் அவரைக் காண இயலவில்லை. என்னே அதிசயம் என்று சொல்லி சுவாமிகள் சில நாட்கள் திருச்செந்தூரிலேயே தங்கி இருந்தார்கள். ஒரு நாள் சுவாமிகள் தன்னை உலக மாயையில் இருந்து விடுபட வழி கூறுமாறு கேட்க முருகன் ஒரு சைவர் வடிவில் வந்து பதில் அளித்தார். தாங்கள் யார் என சுவாமிகள் கேட்க நான் எப்போதும் உன்னுடனேயே இருக்கின்றேன் என் பெயர் சுப்பையா பிள்ளை என்று கூறி மறைந்தார். மிகவும் மகிழ்ந்த சுவாமிகள் அன்று வந்ததும் இன்று வந்ததும் திருச்செந்தூர் முருகப்பெருமானே என்று மகிழ்ந்து திருச்செந்தூரை விட்டு அகலாமல் இன்னும் சில காலம் அங்கேயே இருந்தார்கள். சிலகாலம் கழித்து கோவையில் இருந்து உறவினர்கள் சுவாமிகளைத் தேடிக் கொண்டு திருச்செந்தூர் வந்து மீண்டும் சுவாமிகளை கோவைக்கு அழைத்துச் சென்றார்கள்.
இப்போதும் முருகப்பெருமான் இதுபோல் உண்மையான அடியார்களுக்கு பல திருவிளையாடல்களை நடத்தி வருகின்றார். அதற்கு குருவருள் தேவை. ஒரு குருவிற்கு உண்மையாகச் சேவை செய்தால் முருகன் தானாகவே நம்மை நோக்கி வந்து அதிசயங்கள் நடத்துவார். பக்தி செய்பவர்களை பாதை மாற்ற பலர் எப்போதும் முயற்சித்து வருவதாலும், ஊடகங்கள் பக்தர்களைத் தவறாக சித்தரிப்பதாலும், ஒரு சில போலிகள் செய்யும் தவறுகளாலும் பக்தர்களுக்கு சரியான பாதை புலப்படுவதில்லை. பக்குவம் வந்துவிட்டால் அந்த இறைவனே குருவாக வந்து ஆட்கொள்வார். ஆம் தவத்திரு. இராமானந்த சுவாமிகளுக்கு திருச்செந்தூரில் சுப்பையா வடிவில் முருகப்பெருமான் காட்சி கிடைத்த சில காலங்களிலேயே பழனியில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் உபதேசம் கிடைத்தது. அன்பான வாசகர்கள் முருகா எனும் நாமத்தையே சொல்லி உத்தூளமாய் நீரில் குழைக்காமல் திரு நீறு பூசி முருகனது உண்மை அடியார்களின் வரலாறுகளை உணர்ந்து தொடர்ந்து துதித்து வந்தால் ஒரு சற்குரு நாதர் கிடைப்பார் என்பது திண்ணம். தவத்திரு. இராமானந்த சுவாமிகளின் குரு பக்தி மற்றும் முருகன் அருளால்தான் அவர் 99 வயது வாழ்ந்தும் (சற்றேறக்குறைய 100 வயது) அவர் ஸ்தபித்த கௌமார மடம் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேராடி இருப்பதும் சுவாமிகளின் தவவலிமையால்தான். எங்கெங்கோ ஜீவ சமாதிகளைத் தேடி ஓடுபவர்கள் ஒரே ஒரு முறை கோவை கௌமார மடாலயத்தில் உள்ள தவத்திரு. இராமானந்த சுவாமிகள் அவர்களின் திருச்சமாதிக்கு வந்து தியானம் செய்து பாருங்கள் நடக்கும் அதிசயத்தை நீங்களே உணவீர்கள். அப்படி தியானம் செய்யும் முன் தற்போதைய சிரவையாதீனம் நான்காம் குரு மகா சந்நிதானம் தவத்திரு குமர குருபர சுவாமிகளின் சூரியன் போல் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் திருமேனி கண்டு அவரது சந்திரக் குளிர்ச்சி முகம் பார்த்து திருவடியை வணங்கி பின் திரு நீறு பூசி தியானம் செய்யுங்கள். குருவருளோடு திருவருள் கிட்டும். இது ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்கு சொல்ல வில்லை. அனுபவமே சிறந்த ஆசான். நன்றி!

கவிதை :
எங்கெங்கோ அருள்தேடி அலையும் மாந்தர்
எங்கும் புகழ்மலியும் கௌமார மடத்தில்
தங்கிதவம் பலசெய்த இராமானந்தரைக் காண்மீன்
மங்காத வாழ்வு மலருமே!

திருமேனி குருவினது சூரியப் பிரகாசம்
திருமுகம் குருவினது சந்திர காந்தம்
திருநீறு குருகையால் பெற்ற பின்னே
பெருநலனும் பெறுவீர் சத்தியமே!

வாய் வார்த்தை சொல்ல வில்லை
மெய்இது மெய்இது  என்பீர் காண்
பொய்யையே கண்டு பேதலித்ததாலே
மெய்யும் பொய்யெனத் தெரியுமே!

செந்திலில் சென்று சிலகாலம் தங்கி
கந்தனை சுப்பையா வடிவில் கண்டு
வந்தனை செய்து வழிபட்டு வந்தவரை
சிந்தனைசெய்ய வினை வருமோ?
                              -ஸ்ரீஸ்கந்த உபாசகர்

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                             
 இணையதளம்:  www.kaumaramutt.com
            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

முருகா நீ வாராதிருக்க வழக்குண்டோ?

முருகன் பிள்ளைத்தமிழ்களுள் பகழிக்கூத்தர் அருளிய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழுக்கு என ஒரு தனிச் சிறப்பு உண்டு. வைணவராக இருந்த பகழிக்கூத்தர் முருகன் மீது பாடி தமது வயிற்று வலியை நீக்கிக் கொண்டது வரலாறு. பொதுவாக பாட்டுடைத்தலைவனாகிய முருகன் பேரில் பிள்ளைத்தமிழ் பாடப்படும். ஆனால் இந்த நூல் முருகன் இருக்கும் ஊரான திருச்செந்தூர் மீது பாடப்பட்டுள்ளது ஒரு சிறப்பாகும். இந்தப் பிள்ளைத்தமிழை யார் பாடினாலும் உடனே முருகன் அருள் ஏற்படுவது அனுபவம். எனவே தான் இன்னும் திருச்செந்தூர் கோவிலில் ஓதுவார்களால் பூசையின் முடிவில் திருப்புகழோடு சேர்த்து இந்த பிள்ளைத்தமிழும் பாடப்பட்டு வருகின்றது இன்னும் சிறப்பாகும். அதில் இருந்து ஒரு பாடலைப்  பார்ப்போம்.
பாடல்:
பேரா தரிக்கும் அடியவர் தம்
  பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும்
  பேரும் கொடுக்க வரும் பிள்ளைப்
  பெருமான் என்னும் பேராளா
சேரா நிருதர் குல காலா
  சேவற்கொடியாய்த் திருச்செந்தூர்த்
  தேவா தேவர் சிறைமீட்ட
  செல்வா என்று உன் திருமுகத்தைப்
பாரா மகிழ்ந்து முலைத்தாயர்
  பரவிப் புகழ்ந்து விருப்புடஅப்
  பா ! வா வா என்று உனைப் போற்றப்
  பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்
வாராதிருக்க வழக்குண்டோ?
  வடிவேல் முருகா வருகவே!
இந்தப்பாடலைப் படித்தாலே முருகப்பெருமான் வருவார். நிச்சயம் நமது வினைகளையெல்லாம் நீக்கி நலம் தருவார். வினையோட விடும் கதிர் வேலாகிய முருகனது அருள் கிடக்க உங்கள் வீட்டில் தினமும் முருகனது படத்தின் முன்பு விளக்கேற்றி மணம் மிகுந்த பத்தி வைத்து சிறிது மலரும் தன்னால் ஆன நிவேதனமும் வைத்து இந்தப்பாடலை மனமுருகி ஓதினால் முருகன் வாராதிருக்க வழக்குண்டோ? தமிழ்வழி குடமுழுக்குகளில் இந்தப்பாடலை ஓதி முருகனை திருக்குடத்தில் எழுந்தருளச் செய்வதைப் பார்க்கலாம். அருவமும் உருவமாகி எனும் கந்தபுராணப் பாடலோடு இந்த முருகன் வருகையையும் பாடி முருகனை எழுந்தருளச் செய்தால் பகழிக்கூத்தருக்கு முருகன் அருள் வழங்கியது போல் நமக்கும் நிச்சயம் அருள்புரிந்து காப்பான். பகழிக்கூத்தருக்கு வயிற்று வலியைத்தீர்த்தது இந்த தமிழ்ப்பாடல், ஆதிசங்கரர் நோயைத் தீர்த்தது திருச்செந்தூர் சுப்ரமண்ய புஜங்கம். பால தேவராய சுவாமிகளின் தீராத நோயைத்தீர்த்தது சஷ்டி கவசம். தமது ஐந்து வயது முதல் ஊமையாக இருந்த குமரகுருபரருக்கு திருச்செந்தூர் முருகன் பூவைக்காட்டி ஆட்கொண்டு கந்தர் கலிவெண்பா பாட வைத்தார். கோவையில் கௌமார மடாலயத்தை உருவாக்கிய திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்களுக்கு திருச்செந்தூர் முருகன் மனித வடிவில் காட்சி கொடுத்து அருள்செய்துள்ளார் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணித்திங்களில் திருச்செந்தூரில் நடக்கும் திருவிழாவிற்கு தவறாமல் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள். இப்படி தங்களுக்கு வரும் நோய்களையும் இன்னல்களையும் நமது பாரம்பரிய வழிபாடான முருக வழிபாட்டில் முருகன் மீது பாடியும், முருகனுக்கு காவடி எடுத்தும், முருகன் ஆலயத்தை நோக்கி பாத யாத்திரை சென்றும் தங்கள் தீராத வினையெல்லாம் தீர்த்துக் கொண்டார்கள் நம் முன்னோர்கள். அதுபோல் நாமும் நமது பாரம்பரிய வழிபாடான தமிழ்க்கடவுள் செவ்வேள் சேயோனை முருகனை மனதார இது போன்ற அருளாளர்களது பாடல்களை ஒவ்வொன்றாகப் பாடி அவன் அருளாளே அவன் தாள் வணங்குவோம். முருகனை உள்ளன்போடு பாடி அழைத்து அருள் பெற்ற அடியார்களின் அடிச்சுவட்டை நாமும் பின்பற்றி அவர்கள்போலவே முருகன் அருள் பெற்று ஆயுள் காலம் முழுவதும் இன்பம் பெற்று வாழ்வோம். முருகனை சிந்திதிக்கொண்டே இருந்தால் முருகன் வாராதிருக்க வழி உண்டோ?

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                        
              இணையதளம்:  www.kaumaramutt.com
           
              ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
                 சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

சனி, 9 செப்டம்பர், 2017

வாமன அவதாரத்தில் இறைவன் அளக்காமல் விட்ட இடம்

கௌமார குருநாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள் இயற்றிய தியானானுபூதி எனும் நூலில் உள்ள ஒரு பாடலைப் பார்ப்போம்.
பாடல்:
முக்கண்ணும் மான் மழுவும் பொருந்தும் ஈசன்
 முடியில் மயிற்பீலி அணி முகுந்தன்; ஐந்து
கைக்கணநாயகன், வேலும் தண்டும் தாங்கும்
 கரமுருகன், முலை முதிராக் கவுரி, கீழத்
திக்கு அதனில் எழுகதிர் ஆம் ஆறு மூர்த்தம்
 சிறந்தன என்று அறிவறிந்தோர் செப்பக் கேட்டேன்;
எக்கடவுட்கு எவர்உரிமை பூண்டுற்றாலும்
 எனக்கு அது சம்மதம்; முடிவில் ஏகம் தானே
                                       -தியானானுபூதி
மூன்று கண்ணும் மானும், மழுவும் பொருந்திய சிவபெருமான், தலை முடியில் மயில் பீலி அணிந்துள்ள முகுந்தனாகிய கண்ணபிரான், ஐந்து கைகளை உடைய கண நாயகன் கணபதி, வேலும் தண்டமும் ஏந்தியிருக்கும் முருகப்பெருமான், கௌரியாகிய அம்பிகை, கிழக்குத் திசையில் எழுகின்ற கதிராகிய சூரியன் ஆகிய ஆறு மூர்த்தங்களும் வழிபாட்டிற்கு சிறந்தன என்று அறிவறிந்தவர்கள் கூறக்கேட்டேன்.  இந்த ஆறு கடவுள்களில் எந்தக் கடவுளுக்கு எவர் உரிமை பூண்டாலும் அது எனக்கு சம்மதமே. எல்லாம் முடிவில் ஏகமாகிய ஒன்றுதான் என்பது இந்தப் பாடலின் பொருளாகும்.
திருவாமத்தூரில் உள்ள வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திருச்சமாதி இருக்கும் கௌமார மடத்திற்கு அடியேன் நேரில் சென்றிருந்த போது தற்போது மடத்தை நிர்வகித்து வரும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்களின் வழிப் பெயரன் அவர்கள் ஒரு சம்பவத்தைச் சொன்னார்கள். ஒருமுறை வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்களைக் காண ஒரு வைணவர் வந்தார். வந்தவர் உள்ளே முருகன் வழிபாடு நடப்பதைக் கண்டு உள்ளே வராமல் தயங்கி நின்றார். அடுத்த நிமிடமே அதை உணர்ந்து கொண்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள் அந்த வைணவரை உள்ளே வாருங்கள் என அழைக்க மீண்டும் அவர் தயங்கினார். ஏன் உங்க சாமி விஷ்னு வாமன அவதாரம் எடுத்த போது மூன்று அடியில் உலகையே அளந்தார். அப்படி அளக்கும் போது இந்த இடத்தை மட்டும் விட்டு விட்டு அளந்து விட்டாரோ என வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கேட்க தாம் நடந்து கொண்டதும் நினத்ததும் தவறு என்பதை உணர்ந்து வைணவர் மனம் மாறினார். இப்படி தமது உள்ளக் கருத்துக்களை இந்தப்பாடலில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் குறிப்பிடுகின்றார்கள்.
                                            
 அறு சமய வழிபாட்டையும் ஒரு சேர வழிபட்டு குருவே பரம் பொருள் எனும் கொள்கை நெறியைக் கடைபிடிப்பது கௌமார சமயம். கௌமாரம் என்றால் முருகக் கடவுளை பரம் பொருளாகப் பாவித்து வழிபடுவது என்று பொருள்படுமே அன்றி நமது சமயத்தின் ஏனைய தெய்வ வடிவங்களைப் புறக்கணிப்பது எனப் பொருள் கொள்ளக் கூடாது
  • ஞாயிறு-சூரியன்,திங்கள்-சிவன்,செவ்வாய்-அம்பிகை,புதன்-விஷ்னு,வியாழன்-கணபதி,வெள்ளி-முருகன்,சனி-சமயாதீதமாய் குரு வழிபாடு என மிகச்சிறந்த சமய, சமரச, சமயாதீத நெறிகளைக் கடைபிடிப்பது கௌமார சமயம். இந்த வகையில் சித்தி மகோற்கட வினாயகர் கோவில், தண்டபாணிக்கடவுள் கோவில்,அவினாசியப்பர் கோவில், கருணாம்பிகை கோவில்,பாண்டுரங்கப் பெருமாள் கோவில்,சூரியன் கோவில் என அறு சமயக்கடவுள்களுக்கும் கோவில் கௌமார மடாலயத்தில் உண்டு.
  • கௌமார நெறியின் முழு முதற் கடவுள் முருகப் பெருமான் என்பதால் கோவை கௌமார மடாலய கோவிலில் தண்டபாணிக்கடவுள் கோவில் நடு நாயகமாக விளங்க மற்ற ஐந்து சமயக் கடவுள் கோவில்களும் சுற்றிலும் இருக்கின்றது சிறப்பு.
  • வாரத்தில் உள்ள ஏழு நாட்களும் மேற்படி அறு சமயக் கோவில்களை வழிபட்டால் அது சமயம் எனப்படும்.
  • இந்த அறு சமயக் கடவுள்களிடம் எந்தவித பேதமும் பாராமல் வழிபடுவது சமரசம் எனப்படும்.
  • இந்த அறுசமயக் கடவுள் வழிபாட்டின் முதிர்ச்சியாக குருவே பரம்பொருள் என உணர்ந்து கௌமார நெறியான குரு நெறியைக் கொண்டு வழிபடுவது சமயாதீதம் எனப்படும்.
  • அந்த வகையில் கௌமார மடாலயத்தில் அறு சமய ஆறு நாள் வழிபாடு முடித்து ஏழாவது நாளுக்கு சனிக்கிழமைக்கு உரிய வழிபாடாகிய சமயாதீத நெறியான குருவே பரம்பொருள் எனும் வகையில் முதல் மூன்று சந்நிதானங்களின் சமாதி ஆலயங்கள் மடாலய சமாதி வளாகத்தில் இருக்கின்றன. இது சனிக்கிழைமை வழிபாட்டிற்கு சிறந்ததாகும்.
  • சமய,சமரச,சமயாதீதம் எனும் மூன்று முக்கிய கௌமாரக் கோட்பாடுகளை ஒட்டு மொத்தமாகக் கொண்டதே கோவை சிரவை கௌமார மடாலயம்.
  • இந்த கொள்கைகளை முருகப் பெருமானிடம் இருந்து அறிந்த முதல் அகச்சந்தான குருநாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
  • அகச்சந்தான குருநாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் உபதேசம் பெற்று கௌமார மடத்தை கோவையில் உருவாக்கியவர் சிரவை ஆதீன குரு முதல்வர் திருப்பெருந்திரு. இராமானனந்த சுவாமிகள் அவர்கள்.
கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
 இணையதளம்:  www.kaumaramutt.com
            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

1008 சக்திகள தீப விழா தினமலர் செய்தி

                                ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
 நன்றி: தினமலர்

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

பூசைக்கு ஆடம்பரம் தேவையா?

                                                     
கௌமார குரு நாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள் தமது   நானிலைச் சதகம் எனும் நூலில் பாடிய பாடல் இது.

காசை ஒரு பொருளாக மதித்து வீணே
  கழிவுபடக்கூடாது கையில் உண்டேல்
தோசை வடை அன்னம்முதல் பலவும் செய்து
  துகளில்பஞ்ச வாத்தியமும் தொகுக்க லாமே
-    நானிலைச்சதகம்
பணம் இருந்தால் தான் பெரிய அளவில் பூஜை செய்ய முடியும் என்று நினைப்பவர்களுக்காக சுவாமிகள் இந்தப் பாடலைப் பாடி உள்ளார்கள். காசை ஒரு பொருளாக மதித்து வீணாகச் செலவு செய்து பூஜை செய்யத் தேவையில்லை. அதே சமயம் பணம் இருந்தால் தோசை, வடை, அன்னம் முதலிய நிவேதனப் பொருட்களோடு பஞ்சவாத்தியமும் இசைத்துப் பூஜிக்கலாம் என்கின்றார்.
இங்கு இப்படிக் கூறிய சுவாமிகள் தமது இன்னுமொரு நூலான கௌமார முறைமையில் பின்வருமாறு பாடி உள்ளார்கள்.
மானத்தால் பூசித்தல் உயர்ச்சி என்றுஓர்
  வாய்ப்பாடு இவ் உலகத்தில் வழங்கல் உண்டு
தான் அருந்தல் பொருந்தல் அவ் வாறு செய்யத்
  தக்கவர்க்கே அம்முறையாம் தன்னாற் செய்தற்கு
ஆன நிவேதனம்தூபம் தீபம் ஆதி
  அகத்தினால் செய்தால்வஞ்சம் அன்றோ? முன்னோர்
ஏன் அறிந்த தெய்வத்தின் வடிவந் தானும்
  இயற்றிவழிபடச் சொன்னார்? எண்ணிடீரே
-    கௌமார முறைமை
மானசீகமாகப் பூசை செய்தாலே போதும் எனும் ஒரு வாய்ப்பாடு இந்த உலகில் உண்டுஆனால் உண்மையிலேயே அந்த நிலையில் இருப்பவர்கள்தான் மானசீக பூஜை செய்ய வேண்டும். ஆனால் தன்னால் நிவேதனம் தூபம் தீபம் செய்யக்கூடிய நிலையில் உள்ளவர்கள் மானசீகமாக பூசை செய்வது வஞ்சமாகும். முன்னோர்கள் ஏன் இப்படி வழிபாடுகளைச் செய்யச் சொன்னார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று தமது கருத்துக்களை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.
நாம் இந்த இரண்டு பாடல்களையும் படித்துப் பொருள் உணர்ந்து உள்ளன்போடும் உண்மையோடும் இறைவனுக்கு நம்மால் முடிந்த தூபம், தீபம் அமுது படைத்து பூசிக்க வேண்டும். முடியாத பட்சத்தில்தான் மானசீக பூசை செய்ய வேண்டும்.
இது போன்று வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள் தமது நூல்களில் ஏராளமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்கள். கோவை கௌமார மடாலயத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள் இயற்றிய நூல்கள் ஓலைச்சுவடி வடிவில் இன்னும் ஏராளமாக புத்தக வடிவு பெறாமல் இருக்கின்றது. சிரவையாதீனப் பெரும்புலவர் ப.வெ. நாகராஜன் அவர்கள் சுவடியைப்  படித்து பொருளோடு புத்தகங்களாக எழுதி வருகின்றார்கள். சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்களின் அனைத்து நூல்களும் உலகம் முழுவதும் சென்று அதன் மூலம் பலர் பயன் பெற வேண்டும் என்று எப்போதும் சிந்தித்து வருகின்றார்கள். எனவே நம்மாலான சேவையைச் செய்து கௌமார நூல்களை அனைவெரும் அறிந்து கொள்ள முயற்சி எடுப்போம். முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகப்பெருமான் தமிழ் நூல்களை அனைவரும் அறியச்செய்ய துணை நிற்பார் என்பது திண்ணம். அப்படி சேவை செய்பவர்கள் முருகனது அருளுக்குப் பாத்திரமாவார்கள் என்பது நிச்சயம்.

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்

படம்: கோவை சுந்தராபுரம் அருள்மிகு ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் சிரவையாதீனம் சுவாமிகள் அவர்கள்.
கவிதை:
கோபுரம்ஏறி புனிதநீர் ஊற்றும் புண்ணியமே!
கோபுரமெனெ உயர்ந்து நிற்கும்  நான்காம்சந்நிதானமே!
கோபுரம்போல் உயரட்டும் கௌமார புகழ்!
கோபுரத்தை வணங்கிப் பணிந்து!!
                               -ஸ்ரீஸ்கந்த உபாசகர்
கௌமார மட இணையதளம்:
                          www.kaumaramutt.com

            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!