கௌமார குருநாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள் இயற்றிய தியானானுபூதி எனும் நூலில் உள்ள ஒரு பாடலைப் பார்ப்போம்.
பாடல்:
முக்கண்ணும் மான் மழுவும்
பொருந்தும் ஈசன்
முடியில் மயிற்பீலி அணி முகுந்தன்; ஐந்து
கைக்கணநாயகன், வேலும் தண்டும்
தாங்கும்
கரமுருகன், முலை முதிராக் கவுரி, கீழத்
திக்கு அதனில் எழுகதிர் ஆம்
ஆறு மூர்த்தம்
சிறந்தன என்று அறிவறிந்தோர் செப்பக் கேட்டேன்;
எக்கடவுட்கு எவர்உரிமை பூண்டுற்றாலும்
எனக்கு அது சம்மதம்; முடிவில் ஏகம் தானே
-தியானானுபூதி
மூன்று கண்ணும் மானும், மழுவும்
பொருந்திய சிவபெருமான், தலை முடியில் மயில் பீலி அணிந்துள்ள முகுந்தனாகிய கண்ணபிரான்,
ஐந்து கைகளை உடைய கண நாயகன் கணபதி, வேலும் தண்டமும் ஏந்தியிருக்கும் முருகப்பெருமான்,
கௌரியாகிய அம்பிகை, கிழக்குத் திசையில் எழுகின்ற கதிராகிய சூரியன் ஆகிய ஆறு மூர்த்தங்களும்
வழிபாட்டிற்கு சிறந்தன என்று அறிவறிந்தவர்கள் கூறக்கேட்டேன். இந்த ஆறு கடவுள்களில் எந்தக் கடவுளுக்கு எவர் உரிமை
பூண்டாலும் அது எனக்கு சம்மதமே. எல்லாம் முடிவில் ஏகமாகிய ஒன்றுதான் என்பது இந்தப்
பாடலின் பொருளாகும்.
திருவாமத்தூரில் உள்ள வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் திருச்சமாதி இருக்கும் கௌமார மடத்திற்கு அடியேன் நேரில் சென்றிருந்த
போது தற்போது மடத்தை நிர்வகித்து வரும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்களின் வழிப்
பெயரன் அவர்கள் ஒரு சம்பவத்தைச் சொன்னார்கள். ஒருமுறை வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
அவர்களைக் காண ஒரு வைணவர் வந்தார். வந்தவர் உள்ளே முருகன் வழிபாடு நடப்பதைக் கண்டு
உள்ளே வராமல் தயங்கி நின்றார். அடுத்த நிமிடமே அதை உணர்ந்து கொண்ட வண்ணச்சரபம் தண்டபாணி
சுவாமிகள் அவர்கள் அந்த வைணவரை உள்ளே வாருங்கள் என அழைக்க மீண்டும் அவர் தயங்கினார்.
ஏன் உங்க சாமி விஷ்னு வாமன அவதாரம் எடுத்த போது மூன்று அடியில் உலகையே அளந்தார். அப்படி
அளக்கும் போது இந்த இடத்தை மட்டும் விட்டு விட்டு அளந்து விட்டாரோ என வண்ணச்சரபம் தண்டபாணி
சுவாமிகள் கேட்க தாம் நடந்து கொண்டதும் நினத்ததும் தவறு என்பதை உணர்ந்து வைணவர் மனம்
மாறினார். இப்படி தமது உள்ளக் கருத்துக்களை இந்தப்பாடலில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
குறிப்பிடுகின்றார்கள்.
அறு சமய வழிபாட்டையும் ஒரு சேர வழிபட்டு குருவே பரம் பொருள் எனும் கொள்கை நெறியைக் கடைபிடிப்பது கௌமார சமயம். கௌமாரம் என்றால் முருகக் கடவுளை பரம் பொருளாகப் பாவித்து வழிபடுவது
என்று பொருள்படுமே அன்றி நமது சமயத்தின் ஏனைய தெய்வ வடிவங்களைப் புறக்கணிப்பது எனப்
பொருள் கொள்ளக் கூடாது
- ஞாயிறு-சூரியன்,திங்கள்-சிவன்,செவ்வாய்-அம்பிகை,புதன்-விஷ்னு,வியாழன்-கணபதி,வெள்ளி-முருகன்,சனி-சமயாதீதமாய் குரு வழிபாடு என மிகச்சிறந்த சமய, சமரச, சமயாதீத நெறிகளைக் கடைபிடிப்பது கௌமார சமயம். இந்த வகையில் சித்தி மகோற்கட வினாயகர் கோவில், தண்டபாணிக்கடவுள் கோவில்,அவினாசியப்பர் கோவில், கருணாம்பிகை கோவில்,பாண்டுரங்கப் பெருமாள் கோவில்,சூரியன் கோவில் என அறு சமயக்கடவுள்களுக்கும் கோவில் கௌமார மடாலயத்தில் உண்டு.
- கௌமார நெறியின் முழு முதற் கடவுள் முருகப் பெருமான் என்பதால் கோவை
கௌமார மடாலய கோவிலில் தண்டபாணிக்கடவுள் கோவில் நடு நாயகமாக விளங்க மற்ற ஐந்து சமயக் கடவுள் கோவில்களும் சுற்றிலும் இருக்கின்றது சிறப்பு.
- வாரத்தில் உள்ள ஏழு நாட்களும் மேற்படி அறு சமயக் கோவில்களை வழிபட்டால் அது சமயம் எனப்படும்.
- இந்த அறு சமயக் கடவுள்களிடம் எந்தவித பேதமும் பாராமல் வழிபடுவது சமரசம் எனப்படும்.
- இந்த அறுசமயக் கடவுள் வழிபாட்டின் முதிர்ச்சியாக குருவே பரம்பொருள் என உணர்ந்து கௌமார நெறியான குரு நெறியைக் கொண்டு வழிபடுவது சமயாதீதம் எனப்படும்.
- அந்த வகையில் கௌமார மடாலயத்தில் அறு சமய ஆறு நாள் வழிபாடு முடித்து ஏழாவது நாளுக்கு சனிக்கிழமைக்கு உரிய வழிபாடாகிய சமயாதீத நெறியான குருவே பரம்பொருள் எனும் வகையில் முதல் மூன்று சந்நிதானங்களின் சமாதி ஆலயங்கள் மடாலய சமாதி வளாகத்தில் இருக்கின்றன. இது சனிக்கிழைமை வழிபாட்டிற்கு சிறந்ததாகும்.
- சமய,சமரச,சமயாதீதம் எனும் மூன்று முக்கிய கௌமாரக் கோட்பாடுகளை ஒட்டு மொத்தமாகக் கொண்டதே கோவை சிரவை கௌமார மடாலயம்.
- இந்த கொள்கைகளை முருகப் பெருமானிடம் இருந்து அறிந்த முதல் அகச்சந்தான குருநாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
- அகச்சந்தான குருநாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் உபதேசம் பெற்று கௌமார மடத்தை கோவையில் உருவாக்கியவர் சிரவை ஆதீன குரு முதல்வர் திருப்பெருந்திரு. இராமானனந்த சுவாமிகள் அவர்கள்.
கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்,
ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள்
அவர்கள்
ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக