முருகன் பிள்ளைத்தமிழ்களுள் பகழிக்கூத்தர் அருளிய
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழுக்கு என ஒரு தனிச் சிறப்பு உண்டு. வைணவராக
இருந்த பகழிக்கூத்தர் முருகன் மீது பாடி தமது வயிற்று வலியை நீக்கிக் கொண்டது
வரலாறு. பொதுவாக பாட்டுடைத்தலைவனாகிய முருகன் பேரில் பிள்ளைத்தமிழ் பாடப்படும்.
ஆனால் இந்த நூல் முருகன் இருக்கும் ஊரான திருச்செந்தூர் மீது பாடப்பட்டுள்ளது ஒரு
சிறப்பாகும். இந்தப் பிள்ளைத்தமிழை யார் பாடினாலும் உடனே முருகன் அருள் ஏற்படுவது
அனுபவம். எனவே தான் இன்னும் திருச்செந்தூர் கோவிலில் ஓதுவார்களால் பூசையின்
முடிவில் திருப்புகழோடு சேர்த்து இந்த பிள்ளைத்தமிழும் பாடப்பட்டு வருகின்றது
இன்னும் சிறப்பாகும். அதில் இருந்து ஒரு பாடலைப்
பார்ப்போம்.
பாடல்:
பாடல்:
பேரா தரிக்கும் அடியவர் தம்
பிறப்பை
ஒழித்துப் பெருவாழ்வும்
பேரும்
கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான்
என்னும் பேராளா
சேரா நிருதர் குல காலா
சேவற்கொடியாய்த் திருச்செந்தூர்த்
தேவா
தேவர் சிறைமீட்ட
செல்வா
என்று உன் திருமுகத்தைப்
பாரா மகிழ்ந்து முலைத்தாயர்
பரவிப்
புகழ்ந்து விருப்புடஅப்
பா ! வா
வா என்று உனைப் போற்றப்
பரிந்து
மகிழ்ந்து வரவழைத்தால்
வாராதிருக்க வழக்குண்டோ?
வடிவேல்
முருகா வருகவே!
இந்தப்பாடலைப் படித்தாலே முருகப்பெருமான் வருவார்.
நிச்சயம் நமது வினைகளையெல்லாம் நீக்கி நலம் தருவார். வினையோட விடும் கதிர் வேலாகிய
முருகனது அருள் கிடக்க உங்கள் வீட்டில் தினமும் முருகனது படத்தின் முன்பு
விளக்கேற்றி மணம் மிகுந்த பத்தி வைத்து சிறிது மலரும் தன்னால் ஆன நிவேதனமும்
வைத்து இந்தப்பாடலை மனமுருகி ஓதினால் முருகன் வாராதிருக்க வழக்குண்டோ? தமிழ்வழி
குடமுழுக்குகளில் இந்தப்பாடலை ஓதி முருகனை திருக்குடத்தில் எழுந்தருளச் செய்வதைப்
பார்க்கலாம். அருவமும் உருவமாகி எனும் கந்தபுராணப் பாடலோடு இந்த முருகன் வருகையையும்
பாடி முருகனை எழுந்தருளச் செய்தால் பகழிக்கூத்தருக்கு முருகன் அருள் வழங்கியது
போல் நமக்கும் நிச்சயம் அருள்புரிந்து காப்பான். பகழிக்கூத்தருக்கு வயிற்று
வலியைத்தீர்த்தது இந்த தமிழ்ப்பாடல், ஆதிசங்கரர் நோயைத் தீர்த்தது திருச்செந்தூர் சுப்ரமண்ய
புஜங்கம். பால தேவராய சுவாமிகளின் தீராத நோயைத்தீர்த்தது சஷ்டி கவசம். தமது ஐந்து வயது முதல் ஊமையாக இருந்த குமரகுருபரருக்கு திருச்செந்தூர் முருகன் பூவைக்காட்டி ஆட்கொண்டு கந்தர் கலிவெண்பா பாட வைத்தார். கோவையில் கௌமார மடாலயத்தை உருவாக்கிய திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்களுக்கு திருச்செந்தூர் முருகன் மனித வடிவில் காட்சி கொடுத்து அருள்செய்துள்ளார் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணித்திங்களில் திருச்செந்தூரில் நடக்கும் திருவிழாவிற்கு தவறாமல் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள். இப்படி தங்களுக்கு வரும் நோய்களையும் இன்னல்களையும் நமது பாரம்பரிய வழிபாடான முருக
வழிபாட்டில் முருகன் மீது பாடியும், முருகனுக்கு காவடி எடுத்தும், முருகன் ஆலயத்தை
நோக்கி பாத யாத்திரை சென்றும் தங்கள் தீராத வினையெல்லாம் தீர்த்துக் கொண்டார்கள்
நம் முன்னோர்கள். அதுபோல் நாமும் நமது பாரம்பரிய வழிபாடான தமிழ்க்கடவுள் செவ்வேள்
சேயோனை முருகனை மனதார இது போன்ற அருளாளர்களது பாடல்களை ஒவ்வொன்றாகப் பாடி அவன்
அருளாளே அவன் தாள் வணங்குவோம். முருகனை உள்ளன்போடு பாடி அழைத்து அருள் பெற்ற
அடியார்களின் அடிச்சுவட்டை நாமும் பின்பற்றி அவர்கள்போலவே முருகன் அருள் பெற்று
ஆயுள் காலம் முழுவதும் இன்பம் பெற்று வாழ்வோம். முருகனை சிந்திதிக்கொண்டே
இருந்தால் முருகன் வாராதிருக்க வழி உண்டோ?
கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்,
ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள்
அவர்கள்
இணையதளம்:
www.kaumaramutt.com
ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக