திங்கள், 11 செப்டம்பர், 2017

தவத்திரு. இராமானந்த சுவாமிகளுக்கு கிடைத்த முருகன் காட்சி

கோவையில் கௌமார மடாலயம் ஸ்தாபித்தவர் தவத்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்கள். ஒரு முறை தவத்திரு. இராமானந்த சுவாமிகள் கனவில் அவர் வழிபடு கடவுள் தோன்றி திருச்செந்தூர் செல் என்று உரைக்க அடுத்த நாளே திருச்செந்தூர் சென்றுவிட்டார் சுவாமிகள். அங்கே சுவாமிகளுக்கு முன் பின் யாரையும் தெரியாது அந்த செந்தில் முருகனைத் தவிர. சுப்பையா எனும் நபர் வந்து சுவாமிகளுக்கு ஆலய தரிசனம் செய்வித்து தங்க இடம் கொடுத்து தாமும் அவருடன் தங்கினார். இரவில் உறக்கம் விழிக்க சுவாமிகள் கண் விழித்துப் பார்த்தவுடன் சுப்பையாவைக் காணவில்லை. பின் எங்கும் அவரைக் காண இயலவில்லை. என்னே அதிசயம் என்று சொல்லி சுவாமிகள் சில நாட்கள் திருச்செந்தூரிலேயே தங்கி இருந்தார்கள். ஒரு நாள் சுவாமிகள் தன்னை உலக மாயையில் இருந்து விடுபட வழி கூறுமாறு கேட்க முருகன் ஒரு சைவர் வடிவில் வந்து பதில் அளித்தார். தாங்கள் யார் என சுவாமிகள் கேட்க நான் எப்போதும் உன்னுடனேயே இருக்கின்றேன் என் பெயர் சுப்பையா பிள்ளை என்று கூறி மறைந்தார். மிகவும் மகிழ்ந்த சுவாமிகள் அன்று வந்ததும் இன்று வந்ததும் திருச்செந்தூர் முருகப்பெருமானே என்று மகிழ்ந்து திருச்செந்தூரை விட்டு அகலாமல் இன்னும் சில காலம் அங்கேயே இருந்தார்கள். சிலகாலம் கழித்து கோவையில் இருந்து உறவினர்கள் சுவாமிகளைத் தேடிக் கொண்டு திருச்செந்தூர் வந்து மீண்டும் சுவாமிகளை கோவைக்கு அழைத்துச் சென்றார்கள்.
இப்போதும் முருகப்பெருமான் இதுபோல் உண்மையான அடியார்களுக்கு பல திருவிளையாடல்களை நடத்தி வருகின்றார். அதற்கு குருவருள் தேவை. ஒரு குருவிற்கு உண்மையாகச் சேவை செய்தால் முருகன் தானாகவே நம்மை நோக்கி வந்து அதிசயங்கள் நடத்துவார். பக்தி செய்பவர்களை பாதை மாற்ற பலர் எப்போதும் முயற்சித்து வருவதாலும், ஊடகங்கள் பக்தர்களைத் தவறாக சித்தரிப்பதாலும், ஒரு சில போலிகள் செய்யும் தவறுகளாலும் பக்தர்களுக்கு சரியான பாதை புலப்படுவதில்லை. பக்குவம் வந்துவிட்டால் அந்த இறைவனே குருவாக வந்து ஆட்கொள்வார். ஆம் தவத்திரு. இராமானந்த சுவாமிகளுக்கு திருச்செந்தூரில் சுப்பையா வடிவில் முருகப்பெருமான் காட்சி கிடைத்த சில காலங்களிலேயே பழனியில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் உபதேசம் கிடைத்தது. அன்பான வாசகர்கள் முருகா எனும் நாமத்தையே சொல்லி உத்தூளமாய் நீரில் குழைக்காமல் திரு நீறு பூசி முருகனது உண்மை அடியார்களின் வரலாறுகளை உணர்ந்து தொடர்ந்து துதித்து வந்தால் ஒரு சற்குரு நாதர் கிடைப்பார் என்பது திண்ணம். தவத்திரு. இராமானந்த சுவாமிகளின் குரு பக்தி மற்றும் முருகன் அருளால்தான் அவர் 99 வயது வாழ்ந்தும் (சற்றேறக்குறைய 100 வயது) அவர் ஸ்தபித்த கௌமார மடம் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேராடி இருப்பதும் சுவாமிகளின் தவவலிமையால்தான். எங்கெங்கோ ஜீவ சமாதிகளைத் தேடி ஓடுபவர்கள் ஒரே ஒரு முறை கோவை கௌமார மடாலயத்தில் உள்ள தவத்திரு. இராமானந்த சுவாமிகள் அவர்களின் திருச்சமாதிக்கு வந்து தியானம் செய்து பாருங்கள் நடக்கும் அதிசயத்தை நீங்களே உணவீர்கள். அப்படி தியானம் செய்யும் முன் தற்போதைய சிரவையாதீனம் நான்காம் குரு மகா சந்நிதானம் தவத்திரு குமர குருபர சுவாமிகளின் சூரியன் போல் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் திருமேனி கண்டு அவரது சந்திரக் குளிர்ச்சி முகம் பார்த்து திருவடியை வணங்கி பின் திரு நீறு பூசி தியானம் செய்யுங்கள். குருவருளோடு திருவருள் கிட்டும். இது ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்கு சொல்ல வில்லை. அனுபவமே சிறந்த ஆசான். நன்றி!

கவிதை :
எங்கெங்கோ அருள்தேடி அலையும் மாந்தர்
எங்கும் புகழ்மலியும் கௌமார மடத்தில்
தங்கிதவம் பலசெய்த இராமானந்தரைக் காண்மீன்
மங்காத வாழ்வு மலருமே!

திருமேனி குருவினது சூரியப் பிரகாசம்
திருமுகம் குருவினது சந்திர காந்தம்
திருநீறு குருகையால் பெற்ற பின்னே
பெருநலனும் பெறுவீர் சத்தியமே!

வாய் வார்த்தை சொல்ல வில்லை
மெய்இது மெய்இது  என்பீர் காண்
பொய்யையே கண்டு பேதலித்ததாலே
மெய்யும் பொய்யெனத் தெரியுமே!

செந்திலில் சென்று சிலகாலம் தங்கி
கந்தனை சுப்பையா வடிவில் கண்டு
வந்தனை செய்து வழிபட்டு வந்தவரை
சிந்தனைசெய்ய வினை வருமோ?
                              -ஸ்ரீஸ்கந்த உபாசகர்

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                             
 இணையதளம்:  www.kaumaramutt.com
            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக