கௌமார குரு நாதர் வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அவர்கள் தமது நானிலைச் சதகம் எனும் நூலில் பாடிய பாடல் இது.
காசை ஒரு பொருளாக மதித்து
வீணே
கழிவுபடக்கூடாது கையில் உண்டேல்
தோசை வடை அன்னம்முதல் பலவும்
செய்து
துகளில்பஞ்ச வாத்தியமும் தொகுக்க லாமே
- நானிலைச்சதகம்
பணம் இருந்தால் தான் பெரிய
அளவில் பூஜை செய்ய முடியும் என்று நினைப்பவர்களுக்காக சுவாமிகள் இந்தப் பாடலைப் பாடி
உள்ளார்கள். காசை ஒரு பொருளாக மதித்து வீணாகச் செலவு செய்து பூஜை செய்யத் தேவையில்லை.
அதே சமயம் பணம் இருந்தால் தோசை, வடை, அன்னம் முதலிய நிவேதனப் பொருட்களோடு பஞ்சவாத்தியமும்
இசைத்துப் பூஜிக்கலாம் என்கின்றார்.
இங்கு இப்படிக் கூறிய சுவாமிகள்
தமது இன்னுமொரு நூலான கௌமார முறைமையில் பின்வருமாறு பாடி உள்ளார்கள்.
மானத்தால் பூசித்தல் உயர்ச்சி
என்றுஓர்
வாய்ப்பாடு இவ் உலகத்தில் வழங்கல் உண்டு
தான் அருந்தல் பொருந்தல்
அவ் வாறு செய்யத்
தக்கவர்க்கே அம்முறையாம் தன்னாற் செய்தற்கு
ஆன நிவேதனம்தூபம் தீபம் ஆதி
அகத்தினால் செய்தால்வஞ்சம் அன்றோ? முன்னோர்
ஏன் அறிந்த தெய்வத்தின் வடிவந்
தானும்
இயற்றிவழிபடச் சொன்னார்? எண்ணிடீரே
- கௌமார முறைமை
மானசீகமாகப் பூசை செய்தாலே
போதும் எனும் ஒரு வாய்ப்பாடு இந்த உலகில் உண்டுஆனால் உண்மையிலேயே அந்த நிலையில் இருப்பவர்கள்தான்
மானசீக பூஜை செய்ய வேண்டும். ஆனால் தன்னால் நிவேதனம் தூபம் தீபம் செய்யக்கூடிய நிலையில்
உள்ளவர்கள் மானசீகமாக பூசை செய்வது வஞ்சமாகும். முன்னோர்கள் ஏன் இப்படி வழிபாடுகளைச்
செய்யச் சொன்னார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று தமது கருத்துக்களை மிகத்
தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.
நாம் இந்த இரண்டு பாடல்களையும்
படித்துப் பொருள் உணர்ந்து உள்ளன்போடும் உண்மையோடும் இறைவனுக்கு நம்மால் முடிந்த தூபம்,
தீபம் அமுது படைத்து பூசிக்க வேண்டும். முடியாத பட்சத்தில்தான் மானசீக பூசை செய்ய வேண்டும்.
இது போன்று வண்ணச்சரபம் தண்டபாணி
சுவாமிகள் அவர்கள் தமது நூல்களில் ஏராளமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்கள். கோவை
கௌமார மடாலயத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள் இயற்றிய நூல்கள் ஓலைச்சுவடி
வடிவில் இன்னும் ஏராளமாக புத்தக வடிவு பெறாமல் இருக்கின்றது. சிரவையாதீனப் பெரும்புலவர்
ப.வெ. நாகராஜன் அவர்கள் சுவடியைப் படித்து
பொருளோடு புத்தகங்களாக எழுதி வருகின்றார்கள். சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள்
அவர்கள் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்களின் அனைத்து நூல்களும் உலகம் முழுவதும்
சென்று அதன் மூலம் பலர் பயன் பெற வேண்டும் என்று எப்போதும் சிந்தித்து வருகின்றார்கள்.
எனவே நம்மாலான சேவையைச் செய்து கௌமார நூல்களை அனைவெரும் அறிந்து கொள்ள முயற்சி எடுப்போம்.
முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகப்பெருமான் தமிழ் நூல்களை அனைவரும் அறியச்செய்ய
துணை நிற்பார் என்பது திண்ணம். அப்படி சேவை செய்பவர்கள் முருகனது அருளுக்குப் பாத்திரமாவார்கள்
என்பது நிச்சயம்.
கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்,
ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள்
அவர்கள்
படம்: கோவை சுந்தராபுரம் அருள்மிகு ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் சிரவையாதீனம் சுவாமிகள் அவர்கள்.
கவிதை:
கோபுரம்ஏறி புனிதநீர் ஊற்றும் புண்ணியமே!
கோபுரமெனெ உயர்ந்து நிற்கும் நான்காம்சந்நிதானமே!
கோபுரம்போல் உயரட்டும் கௌமார புகழ்!
கோபுரத்தை வணங்கிப் பணிந்து!!
-ஸ்ரீஸ்கந்த உபாசகர்
கௌமார மட இணையதளம்:
ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக