புதன், 13 செப்டம்பர், 2017

பழநி பட்டணம் சுவாமிகள் மகிமை

அவதாரம்                       பரிபூரணம்
கி.பி.4932                        கி.பி.4999
கி.பி.1831                        கி.பி.1898
சற்குரு நிருவான தேசிகர் சுவாமிகள்
ஸ்தலம்: தளவை மடம்
தளவாய்ப்பட்டி.
 ஸ்ரீ பட்டணம் சுவாமிகள் துதி
ஆதிமறை முடிவாலு மறிய வொண்ணா
அருளுருவே யடியவர்பவ நீக்க வேண்டி
ஓதரிய உலகமதில் உதித் தெழுந்த
வுத்தமனே மத்தனுளத் துணர்வே போற்றி
வாதமிடுஞ் சமய நெறிக் குள்ளலைந்த
வம்பனுக்குத் தத்துவமசி வகையோ டீந்த
மூதுணர்வே சின்மயமாய் விளங்கும் மாரி
முத்தனடி சிரமுளத்திற் போற்றி வாழ்வாம்.
பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் அவதார மகிமை
   சேலம் தளவாய்பட்டி நிருவாண தேசிகர் சுவாமிகளால்உன் வாயிலிருந்து சொற்கள் மாரி போல் பொழிந்து முத்துகளாகவே உதிர்கின்றனஎன்று கூறி பட்டணத்திலிருந்து வந்து கதா காலட்சேபம் செய்து கொண்டிருந்த சின்னசாமி தாஸ் என்பவரை மாரிமுத்து என்றழைக்க தமது 21-ம் வயதில் துறவு பூண்டு மக்களால் பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.
    குரு நிருவாண தேசிகனுக்கு தொண்டு புரிந்து ஒரு மண்டலம் மோன நிலையை சாதிக்க பாலாம்பிகையின் குண்டத்தின் முன்னிலையில் ஆசார நியமத்துடன் மௌனமாகவே யாகாதி கருமங்களை செய்து குரு நிருவாண தேசிகனின் சன்னதியில் அன்றடைந்த நிலையே நிலையாக கொண்டு ஒரு மண்டலம் பூர்த்தியாகும் முன் அம்பிகை தரிசனம் கிடைக்கப்பெற்று புளகாங்கிதத்துடன் நா தழு தழுத்த நிலையில் அம்பிகையின் மீது பாமாலை பாடினார். இந்த ஜெபமாலையை ஆசாரத்துடனும் ஆதரவுடனும் கற்று நலன் பெற்றவர்கள் அநேகர்.
   மகேஸ்வர பூஜைக்கு சாமான்கள் பெற அகமமதையுடைய ஏத்தாபூர் பார்ப்பனர் தெருவிற்கு சென்று நான்கு வர்ணாசிரமத்தை பற்றி பேசி நிஷாத்தாத்பர்யங்களை சாந்த முறையிலே விளக்கி ஹடயோகப்ரதீகள் போன்ற நூல்களில் காணாத அநேக அரிய பெரிய உன்னத உபர்நிதிகளை ஸ்வாமிகள் தம் திருவாக்கால் சரமாரியாக பொழிந்து அனைவரையும் சிறிது நேரம் அமைதியடைய செய்து பூஜைக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தையும் கொண்டு வந்து சேர்த்து அவ்வூர் மக்களை குரு நிருவாண தேசிகனிடம் சரணடைய செய்தார்.
   குருநாதர் ஆணைப்படி யாத்திரை செய்த பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் நிலைப்பாடி கிராமத்திற்கு சென்று மக்களிடம் யாத்திரை சென்று வந்ததை விளக்கி கூறி ஆசி வழங்கினார்.
   தலை மாணவரான மாரிமுத்து சுவாமிகள் நிஷ்டானு பாவத்தில் தேசிகன் நிருவிகற்ப சமாதி அடைவதை தெரிந்து சந்நிதானம் வந்து பூர்வீக அபிடேகங்கள் செய்து நிஷ்டையில் தன் குருநாதர் நிருவாண தேசிகரை அடக்கம் செய்தார்.
   தனது குருநாதரின் ஆணைப்படி மடத்தின் அருகில் உள்ள கிணற்றை பெரியதாக வெட்டி குளமாக்கியும் குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்நானம் செய்யவும் தளவாய்ப்பட்டி கிராமம் நகரமாகவும் மற்றும் பிரம்ம உற்சவமும் தெற்ப உற்சவமும் நடைபெற வழி வகுத்தார்.
   தனது குருநாதரின் எண்ணப்படி தளவாய்ப்பட்டி மக்கள் தங்க ஆபரணங்களை விரும்பி கொடுக்கும்படி செய்து வேணுகோபால், ஆஞ்சநேயர் சிலைகளை சொர்ணத்தால் உருவாக்கினார். ஒவ்வொரு தை அமாவாசையன்று வேணுகோபால், ஆஞ்சநேயர் தங்க விக்ரகங்கள் தேரில் பவனி வருவதை தளவாய்பட்டி மக்கள் கண்டு களித்து வருகிறார்கள்.
   பொருள், புகழ், அருள் முதலிய ஐஸ்வர்யங்கள் நிறையப் பெற்றது தளவாய்ப்பட்டி.
   தங்கட்கு பெருநிதி கிடைக்க பெற்றதாக எண்ணி மகிழ்ந்து சுவாமிகளிடம் அடைக்கலம் புகுந்து உடல், பொருள், ஆவி மூன்றையும் அர்ப்பணித்து சேவை செய்து அவ்வூர் மக்கள் அனைவரும் இன்றும் ரதோற்சவம் நடத்தி அருள் பெருக்கி பொருள், புகழ் முதலியன பெற்று இன்புற்று வாழ்கின்றனர்.
   குருநாதர் அறிவுரைப்படி மாரிமுத்து சுவாமிகள் அறுபடை வீட்டில் மூன்றாம் படை வீடான பழநியம்பதி வந்து வரத்தாற்றங்கரையில் தியானம் மேற்கொண்டு தனது அடியார்களுக்கும் அடைக்கலம் தந்து உபதேசங்கள் வழங்கி 1934-ம் ஆண்டு புரட்டாசி திங்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பரிபூரணமானவர்கள்.
   அவரது சிஷ்யர்களில் ஒருவரான முத்துசாமி சுவாமிகள் முருகன்பால் குருநாதர் கொண்ட பற்றையும் பக்தியையும் பார் புகழ் செய்ய வேண்டும் என்பதற்காக அவரது சமாதியின் மீது முருகன் சிலையை நிறுவினார்கள்.
   போகர் உருவாக்கிய சிலை போல் முத்துசாமி சுவாமிகள் உருவாக்கிய சிலை உள்ளதை பார்த்து மக்கள் வியப்புறுகிறார்கள். சுவாமிகளின் பிரதம சீடரான வேலாயுத சுவாமிகளின் சமாதியும் அருகில் உள்ளது.
   சுவாமிகளின் சிஷ்யரான முத்துசாமி சுவாமிகள் மடத்தை போற்றி பரிபாலனம் செய்து வந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் குரு பூஜையை தளவாய்ப்பட்டி மற்றும் பழனியை சுற்றியுள்ள பகுதிகளில் மகேஸ்வர பூஜைக்கு வேண்டிய பொருட்களை பக்தர்களிடம் இருந்து வரவழைத்து அவரும் சில முக்கிய இடங்களுக்கு சென்று வசூல் செய்து சிறப்பாக நடத்தி குருவை போற்றி வந்தார்.
   அவருக்கு பின் ஆலோசனைக் குழு பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் மடாலயத்தை நிர்வகித்து வந்தது. அவ்வாலோசனைக் குழு 1981 – ஆம் ஆண்டு கோவை சிரவணபுரம் கௌமார மடாலயத்திடம் ஒப்படைத்தார்கள். தற்பொழுது பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் திருமடம் சிரவை ஆதினத்தின் கீழ் இயங்குகிறது.ஆதீன கர்த்தர் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் அவர்கள் ஓவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பட்டணம் சுவாமிகளுக்கு மிகச்சிறந்த முறையில் குரு பூஜையை நடத்தி வருகின்றார்கள். வருகின்ற புரட்டாசி ஆயில்யம் அன்று குரு பூஜையோடு குடமுழுக்கும் நடக்க இருக்கின்றது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
படம்: சென்ற புரட்டாசி ஆயில்யம் அன்று பட்டணம் சுவாமிகள் குரு பூஜை

                இணையதளம்: www.kaumaramutt.com

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக