செவ்வாய், 1 மார்ச், 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-42

                                                                        விராலிமலை
வயலூரில் அருணகிரிநாத சுவாமிகளுக்குக் காட்சி தந்த முருகப்பெருமான் விராலிமலைக்கு வா என்கிறார். எனவே அருணகிரிநாத சுவாமிகள் விராலிமலை செல்கின்றார். விராலிமலை எங்கே இருக்கின்றது என்று வழி தெரியாமல் அருணகிரிநாத சுவாமிகள் தவிக்கவே வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து அருணகிரிநாத சுவாமிகளுக்கு வழிகாட்டி அழைத்து வந்தார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் இந்த விராலிமலை. இந்த விராலிமலைத்தலத்தில் அருணகிரிநாத சுவாமிகளுக்கு அஷ்டமாசித்தியை முருகப்பெருமான் அருளியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு உன்னத தலத்தின் மீது அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத்திருப்புகழாகும்.
                                                     
மால் என்று சொல்லக் கூடிய மயக்கம், ஆசை, கோபம் ஆகியவை ஓயாமல் எல்லா நாளும் மாயாவிகார வழியே செல்கின்ற அடியேன் மகாபாவி, காளியாகிய இருட்டு போன்று தீயகுணம் உள்ளவன்தான் என்றாலும் நாதனே, இனிமேல் நீதான் எனக்கு மாதா, பிதா என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள். முருகப்பெருமானே, விராலிமலியில் இருப்பவரே அடியேன் நான்கு வேத நூல்களையும், 28 ஆகமங்கள் ஆகிய பிற நூல்களையும் படித்தது இல்லை. எனது வாழ்நாள் முழுவதும் வீணாகப் போய் விடாமல் முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கும் நிலையான ஞானோபதேசத்தை அருள வேண்டும் என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள்.  பாலனே, செங்குவளை மலரின் மீது பிரியம் உடையவனே,  நகைகளின் மீது சந்தனம்பூசிய அழகனே, பாதாளம், பூமியிரண்டுக்கும் ஆதாரமாய் உள்ளவனே, மீனினங்களும் தண்ணீரும் நிறைந்த மேற்கு வயலூரில் குடிகொண்டவனே,வேலனே, விராலிமலை வாழ்வே, சமூக வேதாள, பேய்கள், பூதகணங்கள் வணங்கும் இறைவனின் குமாரனே, வீரனே, கொடுமையான சூரனுக்குப் பகைவனே,செவ்வேளே, தேவர்களுக்குப்  பெருமாளே என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள். இதோ அந்த திருப்புகழ்.
விராலிமலை திருப்புகழ்
மாலாசை கோபம் ஓயாதென்னாளும் மாயாவிகார வழியே செல்
மாபாவி காளி தானேனு நாத மாதா பிதாவும் இனி நீயே
நாலான வேத நூலாகம் ஆதி நானோதினேனும் இலை வீணே
நாள் போய்விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே!
பாலா கலாரம் ஆமோத லேப பாடீர வாக அணி மீதே
பாதாள பூமி ஆதாரம் மீன பானீயம் மேலை வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக வேதாள பூத பதி சேயே
வீரா கடோர சூராரியே செவ்வேளே சுரேசர் பெருமாளே!
நன்றி:சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                      
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
                    ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                            சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக