வியாழன், 3 மார்ச், 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-44

ஐயர்மலை எனும் இரத்னகிரி
பக்தியால் அடியேன் உன்னை பல காலங்களிலும் விடாமல் பற்றிக்கொண்டு உயர்வு பொருந்திய ஒப்புயர்வற்ற திருப்புகழைப் பாடி அடியேன் முக்தனாகுமாறு பெருவாழ்வில் முத்தியே சேர்ந்து உய்வதற்கு அருள்வாயே முருகா... உத்தமமான  நல்ல குணங்களைக் கொண்டுள்ள  இயல்புள்ளவர்களின் நண்பனே ஒப்புமை இல்லாத பெருமை பொருந்திய ரத்னகிரியில் வாசம் செய்பவனே வித்தகனே.... திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனே வெற்றிவேலாயுதப் பெருமாளே.... என்று திருச்சி மாவட்டம் குளித்தலை அருகில் இருக்கும் இரத்தினகிரி மீது நமது கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயாணத் திருப்புகழாகும். இந்த திருப்புகழில் பக்தியால் எப்போதுமே திருப்புகழைப் பாடிக்கொண்டே இருந்தால் முக்திக்கு வேறு செயல்கள் செய்யத்தேவையில்லை என்பது நமது கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகளின் சீரிய உபதேசம் ஆகும். எனவே திருப்புகழைக் கேளீர் தினம்.
இரத்தினகிரி திருப்புகழ்
பத்தியால் யானுனைப்  பலகாலும்
     பற்றியே மாதிருப் புகழ்பாடி
முத்தனா மாறெனைப்  பெருவாழ்வின்
     முத்தியே சேர்வதற்  கருள்வாயே
உத்தமா தானசற்  குணர்நேயா
     ஒப்பிலா மாமணிக்  கிரிவாசா
வித்தகா ஞானசத்  திநிபாதா
     வெற்றிவே லாயுதப் பெருமாளே.
                                          
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்

பார் போற்றும்  கௌமார மடத்தின்
சீர்மிகு  சிரவை நான்காம் சந்நிதானம்
தேர்தன்னை தன் கரத்தால் வடம்பிடிக்கும்
சீர்மிகு காட்சியென் சிந்தை நிறைந்ததே!!!!
                                                                   -ஸ்ரீஸ்கந்த உபாசகர்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
               ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!
                  சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக