புதன், 2 மார்ச், 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-43

.                                       
காலிலே அணிகின்ற தண்டையும்,  அதே போல் வெண்டையம் எனும் காலணியும், கிண்கிணி, சலங்கையும், குளிர்ச்சி பொருந்திய அருள் நிறைந்த கழல்களும், சிலம்புடன் கொஞ்சவே முருகா உன் தந்தையாகிய சிவபெருமானை அன்பாக  வலம்வந்து நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே,  மனம் ஒன்றுபட, கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், சூரனை அழித்த வேலும், பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், நிலவின் ஒளிகளும், என் கண்கள் குளிரும்படியாக என்றன்முன் சந்தியாவோ

                                               
தாமரையில் தோன்றியவன் பிரம்மாவின் உலகமும், அதனை உட்கொண்ட வெளியண்டங்களும், மகிழ்ச்சி பொங்கி எழ, முருகா நீ போர்க்களம் புகுந்த போதுபொன்மலை என்னும்படி அழகு சிறந்து எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று  தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவ பெருமானுன்  மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக  நீ கொண்ட நடனப் பாதங்கள்  திருச்செந்தூர் ஆகிய இந்தப் இடத்திலும், என் முன் கொஞ்சி நடனங் கொளும் கந்தவேளே 
                                                  
குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் மார்பை நுகர்கின்றவரே கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. என்று திருச்செந்தூரில் அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத்திருப்புகழாக மலர்கின்றது. திருச்செந்தூரில் அருணகிரிநாத சுவாமிகளுக்கு முருகப்பெருமான் நடன கோலத்தைக் காட்டி அருளியதாக இந்த திருப்புகழ் இயம்புகின்றது. எனவே முருகனை ஆவாஹனம் செய்யும் பூஜை நேரங்களில் இந்த திருப்புகழைப் பாடினால் நடனமாடிக் கொண்டே வந்து முருகப்பெருமான் நாம் ஆவாஹனம் செய்யும் கலசத்தில் அமர்வார் என்பது நிச்சயம்.
திருச்செந்தூர் திருப்புகழ்
தண்டையணி வெண்டையுங் கிண்கிணிச தங்கையுந்
     தண்கழல்சி லம்புடன்  கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
     சந்தொடம ணைந்துநின் றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
     கஞ்சமலர் செங்கையுஞ்  சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
     கண்குளிர என்றன்முன் சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
     பொங்கியெழ வெங்களங் கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
     புண்டரிகர் தந்தையுஞ்  சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
     கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
     கும்பமுநி கும்பிடுந் தம்பிரானே!!!!
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                               
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
                                  ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                              சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக