திருச்செங்கோடு எனும் சிறப்பான தலத்தை நோக்கி எங்கள் வாகனம்
விரைந்தது. எனக்கு திருச்செங்கோடு முறை சென்றாலும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்
தலம் அது. மனமானது திடீரெனெ கோவைக்கிழார் அவர்கள் எழுதிய கொங்கேழு தலங்கள் குறித்த
பாடலை நினைத்தது. இதோ அந்தப் பாடல்.
பாடல்:
”திருமுருகன் பூண்டியோடு
திருநல்அவி நாசி
திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள்
கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும்
கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!"”
காசி சுவாமிகள் ஏதும் பேசாமல் மௌனமாகவே இருந்தார்கள். அடியேன்
என்னுடன் வந்தவர்களுக்கு திருச்செங்கோடு தலத்தின் சிறப்புகளை விளக்கிக் கொண்டே
பயணம் செய்தேன். அதை இப்போது உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.திருச்செங்கோடு
அர்த்தநாரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும்.
மூலவர் அர்த்தநாரீஸ்வரர்,
தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி
அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக
தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இத் தலத்தின்
தீர்த்தம் தேவதீர்த்தம் தலமரமாக இலுப்பை மரம் உள்ளது. அர்த்தநாரீசுவரர் கோயில்
தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு மலையின் மீதுள்ளது. அடிவாரத்திலிருந்து
சுமார் 650 அடி உயரத்திலுள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதை 1200 படிகளைக் கொண்டுள்ளது. கிழமேற்கில் 262 அடி நீளமும் தென்வடலாக 201 அடி நீளமுடையது இக்கோயில். இதன் வடக்கு வாசல் இராஜகோபுரம் கிட்டத்தட்ட 84.5 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, தென் திசைகளிலும் இக்கோயிலுக்கு வாயில்களுண்டு. அவற்றுள் தென் திசை வாயிலுக்கு
மட்டும் சிறுகோபுரம் உள்ளது. செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீசுவரர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னிதிகள் கொண்டது இக்கோயில்.
மூலவர் அர்த்தநாரீசுவரர் சன்னிதி மேற்கு நோக்கியுள்ளது. ஆனால் சன்னிதிக்கு முன்
வாயில் இல்லை. மாறாக ஒன்பது துவாரங்கள் கொண்ட கல்லாலான பலகணி யுள்ளது.ஆமை மண்டபம்ஆமை
வடிவை மண்டபத்தின் கீழ்ப் பகுதியிலும் அர்த்தநாரீசுவரர் சன்னிதிப் பலகணியைப்
பின்புலத்திலும் காணலாம். அர்த்தநாரீசுவரர் சன்னிதியின் முன்மண்டத்தில் ஆமை
மண்டபம் ஒன்று உள்ளது. இக்கோயிலின் தூண்கள், மண்டபச் சுவர்களென அனைத்துப் பகுதிகளும் அழகிய
சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோயிலில்
செங்கோட்டு வேலவர் சன்னிதியும், அர்த்தநாரீசுவரர் சன்னிதிக்குத் தென்புறம் கிழக்கு
நோக்கிய நாரிகணபதி சன்னிதியும், தென்மேற்குப் பகுதியில் வெண்ணிற இலிங்கத்துடன்
நாகேசுவரர் சன்னிதியும், தென்புறத்தில் திருமகள், நிலமகள் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் சன்னிதியும்
உள்ளன. இத்தலத்தின் இறைவன் அர்த்த நாரீசுவரரை திருஞானசம்பந்தர் முதலாம்
திருமுறையின் 107 ஆவது திருப்பதிகத்திலும் திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116வது திருப்பதிகத்திலும் பாடியுள் ளார். இக்கோயிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டு
வேலவரை அருணகிரி நாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனுபூதியிலும்
பாடியுள்ளார்.
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், அருள்மிகு ஆதிகேசவபெருமாள் ஆலயம், அருள்மிகு செங்கோட்டுவேலவர் ஆலயம் ஆகிய
மும்மூர்த்திகளின் சன்னதிகளையும் தனிதனியாய் உடைய ஆலயமாக திருச்செங்கோடு கோவில்
அமைந்துள்ளது. தென்பகுதியில் கஜமுக பிள்ளையாரும், வடபகுதியில் ஆறுமுக சுவாமி
ஆலயமும் அமைந்துள்ளது. அந்த இடத்தில் இருந்து மலையின் முதல் படியானது
தொடங்குகிறது. இந்த இடத்தினை மலையடிவாரம் என்று அழைக்கின்றனர். அந்த படிகள் வழியாக
சென்றால் முதலில் செங்குந்தர் மண்டபத்தை அடையலாம். அதனை அடுத்து காளத்திசுவாமிகள்
மண்டபம் திருமுடியார் மண்டபம் மற்றும் தைலி மண்டபத்தையையும் அடையலாம். தைலி
மண்டபத்தில் மேற்குபுறத்தில் 7 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்ட நந்தி ஒன்று ராஜகோபுரத்தை
பார்த்தவண்ணம் உள்ளது. பசுவன் கோவில் என்று அழைக்கப்படும் இதன் பின் உள்ள பகுதியை
நாகமலை என்று அழைக்கின்றனர். இவ்விடத்தில் 60 அடி நீளத்தில் ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் மிக
பிரமாண்டமாய் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் தன்னை ஆபரணமாக சுமந்து
கொண்டுள்ள சிவனின் ஆவுடையார் உருவினை சுமந்து கொண்டுள்ள ஆதிசேஷனை நாகர் உருவில்
காணலாம் என்பதாகும். நீண்ட பெரிய பாறையிலேயே வடித்தெடுக்கப்பட்ட இந்நாகர் உருவமே
நாகர் மலையின் முதலிடமாகும். இன்றைக்கும் மக்கள் இந்த நாகர் சிலைக்கு குங்குமம், சிகப்பும் தூவிச் சூடம் ஏற்றி தீபாராதணை செய்கிறார்கள். சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் வைத்தும் வழிபடுகிறார்கள். பழங்காலத்தில் மக்கள் படி வழியாக
மட்டும் சென்று நாகதெய்வத்தை வழிபட்டார்கள் இன்று வாகன சாலை அமைத்து நடக்க
முடியாதவர்கள் வாகன பாதையில் வாகனத்தில் சென்று நாகர் பள்ளம் என்று அழைக்கப்படும்
பகுதி வரை சென்று நாக தெய்வத்தை வழிபடுகிறார்கள். இதன் இடதுபுறமுள்ள நாகம் கால
வேறுபாட்டால் இடி, மின்னல் தாக்குதல்களால் வெடிப்புகள் ஏற்பட்டு சிதைந்த நிலையில்
காணப்படுகிறது. இதனையடுத்து உள்ள சில
மண்டபங்களை கடந்து சென்றால் அறுபதாம் படி என்னும் `சத்தியப்படியினை' அடையலாம். இப்படியின் இறுதியில் முருகப்பெருமான் உள்ளார். ஒரே சீராக அறுபது
படிகளை உடைய இவ்விடம் சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இம்மலையில் உள்ள 1206 படிகளிலேயே இந்த 60 படிகள்தான் மிகவும் சிறப்பு வாய்ந்தத படியாகும். அன்றைய காலத்தில் கொடுத்தல்
வாங்கல் மற்றும் எண்ணற்ற தீர்க்க முடியாத வழக்குகளில் உண்மை நிலையை அறிய
இப்படியினை பயன்படுத்தினார்கள். இப்படியின் மீது நின்று சத்தியம் செய்து கூறும்
செய்திகளை சென்னை உச்சநீதிமன்றமே ஒப்புகொண்டதாக கூறுவார்கள். இதனையடுத்து பல
மண்டபங்களை கடந்து சென்றால் கம்பீர தோற்றத்துடன் வடக்கு நோக்கிய வண்ணம் உள்ள
ஐயங்கார பிள்ளையாரை வழிபடலாம் இங்கு 475 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட எழில்மிகு இராயர்
கோபுரத்தை காணலாம். இந்த ஆலயத்தினுள் நாகு, கேது உள்ளிட்ட நவகிரக நாயகர்கள் உள்ளனர். அறுபத்து
முன்று நாயன்மார்கள் திருஉருவ சிலைகள் உள்ளன. பஞ்சலிங்க மூர்த்திகளின் கோவில்கள்
உள்ளன. விசாலாட்சி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. கூத்தப்பெருமான் ஆலயம் உள்ளது. ஏழு
கன்னியர் கோவில் உள்ளது. சகஸ்ர லிங்கம் எனப்படும் ஆயிரலிங்கர் ஆலயம் உள்ளது.
தட்சிணாமூர்த்தி, சேட்டாதேவி, நாகர் ஆலயம், வைரவ தேவர், சூரிய தேவர், சித்தி விநாயகர் மற்றும் பல தெய்வங்களின் ஆலயங்கள் உள்ளது. நாகேஸ்வரர் ஆலயம்
சிறப்பான சிற்பக்கலையுடன் உள்ளது. மலையின் உச்சியில் வந்தீசுவரர் எனப்படும்
பாண்டீஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது. வீர ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. பின்வரும் திருப்பணி
மாலை பாடல் திருச்செங்கோட்டின் பெருமையைப் பறைசாற்றுகின்றது.
பாடல்:
குருக்கோடு நவமணியும் நவநிதியும் நவரசமும் கொழிக்குங்கோடு
தருக்கோடு சுருபியும் சிந்தாமணியும் தழைத்த தெய்வத்தான
மாமால்
இருக்கோடு பலகலைகளாகமங்கள் குரவோர்களிரைக்குங்கோடு
செருக்கோடு முமையரனைப் பிரியாம லினிதிருக்கும்
திருச்செங்கோடே!!
இந்த திருச்செங்கோட்டு வேலனைக் காண எனக்கு பிரம்மா
நாலாயிரம் கண் படைக்கவில்லையே என்று நமது
கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகள் அவர்கள் கந்தர் அலங்காரத்தில்
பாடியுள்ளார்கள். இதோ அந்தப் பாடல்
பாடல்:
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நலாயிரம் கண் படைத்திலனே இந்த நான்முகனே
இப்படி இந்த தலத்தின்
பெருமைகளைப் பேசிக்கொண்டே வழிபாடுகளை முடித்தோம். பின்பு சிறிது நேரம் காசி
சுவாமிகளுடன் அமர்ந்தோம். அப்போது சமய தீட்சையாகிய பஞ்சாட்சர மந்திர தீட்சை
அளிப்பதாக காசி சுவாமிகள் தெரிவித்தார்கள். உடனே எங்கள் அடியார்களில் ஒருவரை
அருகில் அழைத்து அமர்த்திக் கொண்டு அவரது இரு கண்களையும் மெதுவாக உள்ளுக்குள்
அழுத்தினார்கள் காசி சுவாமிகள் அவர்கள். சிறுகச் சிறுக கண்கள் இரண்டிற்குள்ளும்
காசி சுவாமிகளின் கைப் பெருவிரல்கள் இரண்டும் சென்று விட்டது. பஞ்சாட்சர
மந்திரத்தை உபதேசம் செய்து கொண்டே காசி சுவாமிகள் கொடுத்த இந்த தீட்சையில் தீட்சை
பெற்றுக் கொண்டிருந்த அந்த அடியவர் தனது கைகளை பட படவென அடித்துக் கொண்டு ஓம்
நமசிவய....ஓம் நமசிவய...என்று அலறித் துடித்தார். அவர் அலறுவதைப் பார்த்த நாங்கள்
சற்று கலங்கி விட்டோம். இப்போது மெதுவாக கை விரல்களைக் கண்களில் இருந்து
விடுவித்தார் காசி சுவாமிகள்....அந்த அடியாரின் கண்களிப் பார்க்கவே முடியவில்லை
அந்த அளவு இரத்தங்கள் கலங்கி அவருக்கு கண்களின் வெள்ளை விழிகளே தெரியவில்லை. அவர்
அப்படியே சிறு மயக்கமாக அமர்ந்து கொண்டார். அடுத்து வாருங்கள் என்று காசி
சுவாமிகள் கன்னடத்தில் அழைத்தார்கள். அடியேன் உட்பட ஒருவரும் தீட்சை பெறத்
தயாராகவில்லை. எல்லோரும் ஒரு அடி பின்னால் தள்ளி அமர்ந்தார்கள். பலத்த ஒலியுடன்
ஓம் நமசிவய.....என்று சொல்லிகொண்டே காசி சுவாமிகள் அவர்கள் என்னை அழைத்தார்கள்.
சரி நடப்பது நடக்கட்டும் என்று நானும் சென்று அவர் முன்பு அமர்ந்தேன். முன்பு அந்த
அடியாருக்கு தீட்சை கொடுத்தது போலவே எனக்கும் கொடுத்தார் காசி சுவாமிகள். கண்கள்
இரண்டும் இரத்தம் வருவது போல் சிவந்தது. கடுமையாக வலிக்கத் தொடங்கியது. ஆனாலும்
கண்களின் உள்ளே ஒளி வடிவில் இறைவன் காட்சி கொடுத்தார். அந்த காட்சி தீட்சை
எடுத்துக் கொண்ட அனைவருக்குமே கிடைத்தது. ஒரு வழியாக ஒரு சிலபேர்களுக்கு மட்டும்
தீட்சை கொடுத்தார் காசி சுவாமிகள் அவர்கள். அது முதல் கண்ணுக்குள்தான் தெய்வ
காட்சி கிட்டும் என்றும் கண்களில் சிறிது விபூதி வைத்துக் கொள் என்றும் உபதேசம்
செய்தார்கள் காசி சுவாமிகள். அன்று முதல் இன்று வரை நமது ஞானஸ்கந்தாஸ்ரம
அடியவர்கள் கண்களில் விபூதி வைத்துக் கொள்வதைக் காணலாம். அதன் பின்ணணி இதுதான்.
இப்படி காசி சுவாமிகள் அவர்களின் சந்திப்பால் அடியேனுக்கு சிவ மந்திர தீட்சையும்
ஸ்பரிச தீட்சையும் கிடைத்தது. இந்த திருச்செங்கோடு தலத்தின் படிகள் மற்றும்
பாதைகள் அமைக்க நமது கௌமார மடால்ய மூன்றாம் குரு மஹா சந்நிதானம், எனது குருநாதர்
தவத்திரு.குமர குருபர சுவாமிகளின் குருநாதர் தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகள்
அவர்கள் திருப்பணிக்கு உதவியுள்ளார்கள் என்பது பெருமைக்குறிய செய்தியாகும். இப்படி
சிவ தீட்சை கிடைத்த இடத்திலும் கூட கௌமார மடாலயத் தொடர்பு இருப்பது எனது முன்சென்ம
தொடர்பிற்கு ஆதாரமாக உள்ளது எனலாம். இப்படி அருணகிரிநாத சுவாமிகளுக்கும், கோவை
கௌமார மட்த்திற்கும் தொடர்புடைய இந்த திருச்செங்கோடு தலத்தில் சிவ தீட்சை கிடைத்து
பெரும் பாக்கியம். பின்பு காசி சுவாமிகள் எங்களிடம் இருந்து ஆசி கூறி விடைபெற்று
சென்றார்கள். நாங்கள் அனைவரும் மீண்டும் ஞானஸ்கந்தாஸ்ரமம் சென்று ஞானஸ்கந்த
மூர்த்தியை நன்றி உணர்ச்சியோடு வழிபட்டோம். கொங்கு ஏழு ஸ்தலங்களில் அவிநாசி.
திருமுருகன் பூண்டி, பவானி கூடுதுறை, திருச்செங்கோடு ஆகிய நான்கு தலங்களை தரிசனம்
செய்து விட்டோம். இதற்கு அடுத்து கொடுமுடி, வெஞ்சமாக்கூடல், கரூர் பசுபதீஸ்வரர்
கோவில் ஆகிய மூன்று தலங்களை தரிசிக்க வேண்டி இருந்தது. அதை ஒரு வாரம் கழித்து
மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழைமை அன்று தரிசிக்க ஆயத்தம் ஆனோம். அப்போது
முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்த படியே மீண்டும் ஒரு அதிசயம் நடந்தது.
படம்: காசிசுவாமிகளுடன் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் மற்றும் பக்தர்கள்
தொடரும்....
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!