ஞாயிறு, 8 நவம்பர், 2015

சிரவை ஆதினத்தின் ஹரித்துவார் புனிதப்பயணம்!


 சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் அவர்களுடைய  ஹரித்துவார் புனித பயணத்தின் சில  படங்கள்
கௌமாரப்பயணம் வாசகர்களுக்காக,






  ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

   சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!



வெள்ளி, 6 நவம்பர், 2015

தண்டபாணி சுவாமிகள் !





தண்டபாணி சுவாமிகள் (1839 - 1898தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். பலவிதச் சிறப்புகளுக்கு உரியவர். இவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என்றும் "திருப்புகழ்ச் சுவாமிகள்" என்று அழைக்கப்பட்டவர்.

வாழ்க்கைச் சுருக்கம் :-
சங்கரலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தண்டபாணி சுவாமிகள் திருநெல்வேலியில்செந்தில்நாயகம் பிள்ளை - பேச்சிமுத்து தம்பதியருக்கு 1839 ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தையின் நண்பரான சீதாராம நாயுடு என்பவரால் இவருக்கு முருகன் மீது பக்தி உருவாயிற்று. ஆரம்பக் கல்வியை முடித்த இவர், இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமைப் பெற்றார். எட்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார்.
அந்த வயதில், "பூமி காத்தாள்" என்ற அம்மனுக்கு அப்பெயர் எப்படி அமைந்தது என்ற காரணத்தைக் கூறி, பாடுதற்கு அரிய வெண்பாவில் அதைப் பாடினார். கவிதை பொழியும் இவருடைய ஆற்றலைக் கண்டு வியந்த சீதாராம நாயுடு இவருக்கு "ஓயா மாரி" என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். சங்கரலிங்கம், முருகனின் அடியவர் ஆனார். முருகன் புகழ் பாடினார். ஆகவே இவர் "முருகதாசர்" என்று அழைக்கப்பட்டார். இவர் முருகனின் திருப்புகழை விரும்பிப் பாடிக்கொண்டே இருந்ததால் "திருப்புகழ்ச் சுவாமிகள்" என்றும் சிறப்பிக்கப்பட்டார்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை திருநீறு பூசிக்கொண்டார். இடுப்பில் கல்லாடை அணிந்துகொண்டார். கையில் தண்டாயுதம் ஏந்திக் கொண்டார். இந்தக் கோலத்தில் விளங்கிய இவரை மக்கள் "தண்டபாணி சுவாமிகள்" என்று போற்றினார்கள். அகப்பொருளின் துறைகளை அமைத்துச் சந்த யாப்பில் “வண்ணம்” என்ற பெயரில் பாடல்களைப் பாடியதால் வண்ணச்சரபம் என்றும் அழைக்கப்பட்டார்.அவிநாசி முதல் வேளூர் வரையிலான 218 ஊர்களுக்கும், கேரளம் மற்றும் இலங்கைக்கும் இவர் சென்றுள்ளார்.
இயற்றிய நூல்கள் :-
தமிழைத் துதிக்கும் பின்வரும் நூல்கள் இயற்றினார்:
  • முத்தமிழ்ப் பாமாலை
  • தமிழ்த் துதிப் பதிகம்
  • தமிழலங்காரம்
இவற்றோடு, முசுகுந்த நாடகம், இசைக் கீர்த்தனைகளையும் படைத்தார். திருக்குறளின் அடியொற்றி வருக்கக் குறள் என்ற நூலை உருவாக்கினார். சத்தியவாசகம் என்ற உரைநடைச் சுவடியை எழுதினார்.ஆங்கிலியர் அந்தாதி என்ற நூலைப் பாடி அதன்மூலம் ஆங்கிலேயரைப் பலவாறு சாடினார்.
பாடல்கள் :-
இவர் இலட்சம் பாடல்களைப் பாடியுள்ளார்.
  • குருபர தத்துவம் என்ற பெயரில் தன் வரலாற்று நூலை எழுதினார். இது 1,240 விருத்தப்பாக்களால் ஆனது.
  • புலவர் புராணம் என்ற பெயரில் 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டதாகும்.
  • அருணகிரிநாதர் புராணம் என்ற பெயரில் அருணகிரிநாதர் வரலாற்றை எழுதினார்.
  • வைணவப் பெரியார்களான பெரியாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள் முதலியவர்களை உயர்வாகப் பாடியுள்ளார். பழந்தமிழ்ப் புலவர்கள் மற்றும் ஒளவையாரையும், திருவள்ளுவரையும் பலவாறு போற்றியுள்ளார்.

சொல்லாய்வு:-
தமிழ்ச்சொல் "புகல்" என்பது இந்தியில் "போல்" என்று மருவிவிட்டது என்றார். அதை, "புகல் எனும் சொல்லினைப் போல் எனச் சொல்லுதல் போல்இகல் இந்துத்தானியும் பலசொல செந்தமிழிற் கொண்டு இயம்புகின்றார்" என்று பாடினார்.

இலக்கண ஆய்வு:-
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற தமிழின் ஐந்திலக்கணத்தை விட புலமைக்கு இலக்கணம் கூறும் ஆறாம் இலக்கணத்தை இவர் கற்பித்தார்.
சிற்றிலக்கியங்களில் முன்னிலை நாட்டம், மஞ்சரி, ஆயிரம், முறைமை, விஜயம், நூல், சூத்திரம் என்ற புதுமை இலக்கிய வகைகளை வழங்கினார்.
இவர் பழகிய பெரியோர்கள்:-

புரட்சிக் கருத்துக்கள்:-
இல்லறத்தை மேன்மையுடையது என்றார். பெண்மையை உயர்த்திக் கூறி, பெண் உரிமைக்குக் குரல் கொடுத்த இவர், பெண்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெண் கல்வி மறுப்பவர்களை, "நாரியரும் கற்கை நலம் என்று உரைக்குநரைப் பாரில் இகழ்வார் பலர்" என்று கூறி மனம் வருந்தினார்.
கணவனை இழந்த பெண் மறுமணம் புரிந்து கொள்ளலாம் என்ற புரட்சிகரமான கருத்தைக் கூறியுள்ளார் தண்டபாணி சுவாமிகள்.
தண்டபாணி சுவாமிகள், இம்மண்ணை ஆங்கிலேயர் ஆண்டு வருவதைக் கண்டு, அந்நியர் ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுத்து,
"நிரைபடப் பசு அனந்தம் கொன்று தினும்
நீசர் குடை நிழலில் வெம்பித்
தரைமகள் அழும் துயர் சகிக்கிலேன்" என்று பாடினார்.

இறுதிக் காலம்:-
இறுதிக் காலத்தில் அரிசி உணவைத் தவிர்த்து பயறு உணவுகளை உட்கொண்டார். கடும் தவத்தால் இவரது உடலில் வெப்பம் மிகுதியாகி, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு 1898 ஆம் ஆண்டு இறந்தார்.

                சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள் 

இந்த அற்புதமான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்  பற்றிய வரலாற்றை அருளிய  சிரவைஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களை ஞானஸ்கந்தாசரமம் சார்பாகவும்,நமது குருநாதர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் சார்பாகவும் வாழ்த்தி வணங்குகிறோம்

                                      
                                       ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                           சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

அரிய புகைப்படம் !



கோவை கௌமார மடலாயம்,சிரவை ஆதினம் மூன்றாம் குருமஹா சந்நிதானம் தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்,திருமுருக  கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள்,முன்னால் முதலமைச்சர் எம்.பக்தவச்சலம் அவர்கள்,திருவலம்  சுவாமிகள் ஆகியோருடைய  இந்த அரிய புகைப்படத்தை கௌமார பயணம் வாசகர்களுக்காக  வெளியிடுகின்றோம்.





இந்த அறிய புகைப்படத்தை கொடுத்து அருளிய சிரவை ஆதினம் நான்காம் குருமஹா சந்நிதானம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் அவர்களை அந்தியூர் ஞானஸ்கந்தாசரமம் சார்பாகவும்,நமது குருநாதர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

                                           ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                           சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

வியாழன், 5 நவம்பர், 2015

கௌமார குரு தண்டபாணி சுவாமிகளின் உபதேசம் !



சமயம்,சமரசம்,சமயாதீதம் ! ! !



                             வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்


கௌமாரம் என்றால் முருகக் கடவுளை பரம் பொருளாகப் பாவித்து வழிபடுவது என்று பொருள்படுமே அன்றி நமது சமயத்தின் ஏனைய தெய்வ வடிவங்களைப் புறக்கணிப்பது எனப் பொருள் கொள்ளக் கூடாது.

ஆறெழுத்தின் பயன்

வைகொண்ட வேலன்றன் ஆறு எழுத்து ஓதின் மனம் குவியும்

பொய்கொண்ட மாயை எல்லாம் பொடி ஆகும்;புகழ்மலியும்;

கைகொண்ட மட்டும் கொடுத்துக் களிக்கும் கருணை உண்டால்;

மெய்கொண்ட சித்தி எட்டும் தனி வீடும் வெளிப்படுமே.



                   சிரவை ஆதீனம்.தவத்திரு.குமர குருபர சுவாமிகள்

                                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                           சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

புதன், 4 நவம்பர், 2015

சிரவாணமாபுரீஸ்வரர் திருக்கோவில் மண்டல பூஜை நிறைவு விழா !



மன்மத ஆண்டு 4.11.2015 அன்று  தவத்திரு சிரைவை ஆதினம் குமரகுருபரர் சுவாமிகள் பூர்வாசரம ஊரான சரவணம்பட்டி சிரவாணமாபுரீஸ்வரர்  திருக்கோவில் மண்டல பூஜை நிறைவு விழா  சண்டி வேள்வி பூஜையுடன் இனிதே நிறைவு பெற்றது.



 தவத்திரு சிரைவை ஆதினம் குமரகுருபரர் சுவாமிகள் சண்டி வேள்வி பூஜையில் .


நமது ஞானஸ்கந்தாஸ்ரமம் சார்பாகவும் நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வர சுவாமிகள் சார்பாகவும்,  நமது கௌமாரப் பயணம் இணையத்தின் சார்பாகவும் சிரவை ஆதீனத்தை வணங்கி மகிழ்கின்றோம்.


                         ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                               சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

ஆவுடையார் கோவில் பற்றிய அபூர்வ தகவல்களை அருளிய சிரவை ஆதீனம் !



சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களுடன் சாந்தி விஸ்வ நாதன் அவர்களும் நேற்று காலை புதுக்கோட்டை அருகில் உள்ள ஆவுடையார் கோவிலைத்தரிசனம் செய்தார்கள். கோவில் வழிகாட்டி ஒருவர் சிரவை ஆதீனம் முன்றாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு கஜ பூஜை சுந்தர
சுவாமிகளால் ஆவுடையார் கோவிலுக்குச் செய்யப்பட்ட திருப்பணி விவரங்களை தவத்திரு. குமர குருபர சுவாமிகளிடம் சொல்ல சுவாமிகள் மனம் மகிழ்ந்தார்கள்.

பொறியாளர் பொன்னுசாமி என்பவர் அந்த ஆலயத்தின் கலைச் சிற்பங்களைப் பார்த்து அசந்துபோனார்கள். ஒரு கல் எந்தவித ஆதரவும் இல்லாமல் அப்படியே சுழல்கிறது. அந்த தகவல்களையெல்லாம் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளிடம் சிரவை ஆதீனம் அவர்கள் தெரிவித்து மகிழ்ந்தார்கள். அந்த தகவல்களை அப்படியே நமது கௌமாரப்பயணம் வாசகர்களுக்கு இங்கு வெளியிடுகின்றோம்.

 

படம்: சிரவை ஆதீனம் முன்றாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்

திருப்பெருந்துறை திருக்கோயிலுக்கு நமது சிரவை ஆதீனம் மூன்றாம் குரு மஹா சந்நிதானம் கஜ பூஜை சுந்தர சுவாமிகள் சந்நிதானங்களுடன் ஐம்பது முறையும் அதன் பின்பு இருபத்து ஐந்து முறையும் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் சென்றுள்ளார்கள்.ஆண்டுதோறும் தேருக்கு ஆனி மாதம் மகம் அன்று சென்றுவருகின்றார்கள். கொடுக்கப்பட்டுள்ள ஒரு படத்தில்  இரு துளைகள் இருக்கும்.





அதுமரமா அல்லது கல்லா எனச் சோதிக்க வெள்ளைக்காரன் துப்பாக்கியால் சுட்ட துளையாகும்.கோயில் சிற்பங்களில் உள்ள வேலைப்பாடுகள் உடன் உள்ளது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு தூண்களுகளுக்கும் ஒரு உதிரித்தூண்களும் செய்து வைத்துள்னர்.திருப்பணி செய்த போது பூமிக்கடியில் அவைகள் கிடைத்தன.சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்க தங்க மண் கூடை தங்க மண்சட்டி ஆகியவைகளும் உள்ளது.அறுபது கிராமங்கள் அக்கோயிலுக்காக நிமந்தமாக உள்ளது.ஐம்பது ஆண்டுகள் ஓடாத தேரை மீண்டும் புதிப்பித்த சிறப்பு நமது சிரவை ஆதீனம் மூன்றாம் குரு மஹா சந்நிதானம் கஜ பூஜை சுந்தர சுவாமிகளுக்கு உண்டு.அத்தேரை அக்காலத்தில் பிரித்து வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சிகள் நடந்துள்ளது.பின் மக்களால் தடுக்கப்பட்டு பரமரிப்பு இன்றி இருந்தது.நூறாண்டுகள் திருப்பணிகள் இன்றி


இக்கோயில் இருந்தது நமது சிரவை ஆதீனம் மூன்றாம் குரு மஹா சந்நிதானம் கஜ பூஜை சுந்தர சுவாமிகள் முயற்சியில் இத்திருப்பணி நடந்தது. இன்னும் இப்பகுதியில் கோயில் கட்டுகின்றவர்கள் தங்களது ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் பொழுது இக்கோயில் கட்டுமாணத்தை தவிர்த்து பணிசெய்து கொடுப்பேன் என ஒப்பந்தம் செய்வார்கள்.அவ்வகையில் மிக உன்னதாமான கலைக்கோயில் ஆவுடையார் கோயில் திருப்பணி. இவ்விதம் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் தனது அனுபவத்தைப்
பகிர்ந்து கொண்டார்கள்.



இந்த தகவல்களை அருளிய சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களுக்கு நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் நன்றிகளைத் தெரிவித்து வணங்கி மகிழ்கின்றார்கள்.

                      ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                              சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

திங்கள், 2 நவம்பர், 2015

ஜீவ நாடி உரைத்த சஷ்டி விரதம்!



மன்மத ஆண்டு ஐப்பசி மாதம் 26ம் நாள் 12.11.2015 வியாழக்கிழமை முதல் கார்த்திகை மாதம் 2ம் தேதி 18.11.2015 புதன் கிழமை  வரை கந்த சஷ்டி விரதம் ஆரம்பிக்கின்றது. நமது குரு நாதரான ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் இன்று காலை ஜீவ நாடி படித்து  நமது கௌமாரப்பயணம் வாசகர்களுக்காக முறையாக சஷ்டி விரதம் இருக்கும் வழிமுறைகளைத் தெரிவித்துள்ளார். முருக பகதர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்
கொள்ளவும்.

1. தீபாவளிக்கு மறு நாள் வருகின்ற அமாவாஸை அன்று ஏதாவது ஒரு முருகன் அடியாரிடம் சென்று ஆசி வாங்கி காப்பு என்று சொல்லப்படும் கங்கணத்தை வலது கையில் கட்டிக் கொள்ளுங்கள்.

நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் அமாவாஸை அன்று இரவு நடக்கும்
பூஜையில்  நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் இந்த காப்பை கட்டி விடுவார்கள். அதே போல் கோவை கவுமார மடத்தில் உள்ள தண்டபாணிக் கோவிலில் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் தலைமையில் இந்த காப்பு கட்டுதல் நடக்கும். இது போன்ற வாய்ப்புகளைப் பக்தர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம்.



படம்: சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களுடன் நமது குரு நாதர் 


ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள்.

2. காப்பு கட்டிய பின்பு பிரதமை திதி முதல் விரதம் ஆரம்பம் ஆகின்றது. அதுமுதல் மதியம் ஒரு வேளை மட்டும் எளிய சைவ உணவை உட்கொண்டு மற்ற இரண்டு வேளைகளில் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். இது போல் பஞ்சமி திதி வரை விரதம் இருக்க வேண்டும். ஆறாவது நாளான சஷ்டி திதியில் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருந்து அன்று இரவு தூங்காமல் கண் விழித்து கந்தன் புகழையும் கந்தன் அடியார்கள் புகழையும் பாட வேண்டும்.

நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளின்
முதல் உபதேச குரு தவத்திரு வேலுச்சாமி சுவாமிகள் அவர்கள் கடந்த 50 ஆண்டு காலமாக வெள்ளிக்கிழைமை விரதம் இருப்பவர். அவர் ஒவ்வொரு வெள்ளியும் தூங்காமல் விழித்திருந்து வருகிறார்.


படம்: தவத்திரு வேலுச்சாமி சுவாமிகள் அவர்களுடன் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள்.



3. சஷ்டி அன்று மாலை திருச்செந்தூரில் நடக்கும் சூர சம்ஹார காட்சியை, அருகில் உள்ள முருகன் ஆலய சூர சம்ஹார காட்சியை அல்லது நமது கோவை கௌமார மடத்தில் நடக்கும் சூர சம்ஹார காட்சியை கண்ணினால் காண வேண்டும்.  நேரில் காண முடியாதவர்கள் தொலைக்காட்சியிலாவது காண வேண்டும். கண்ணினால் நல்ல காட்சியக் காணவே நாம் இந்த மண்ணில் பிறவி எடுத்துள்ளோம் என்று அடிக்கடி சிரவை ஆதீனம்
தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் பேசுவார்கள் என்று நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டு மகிழ்வார்கள்.




படம்: தவத்திரு ஓம் நமசிவய காசி வாசி சுவாமிகளுடன் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள்.

4. சஷ்டிக்கு அடுத்த நாள் முருகன் ஆலயங்களில் நடக்கும் திருக்கல்யாணக் காட்சியைக் காண வேண்டும். திருக்கல்யாணம் முடித்த பின்பு காப்பை அவிழ்த்துக் கொள்ளலாம்.

5. அதேபோல் பிரதமை முதல் திருக்கல்யாணம் வரைக்கும் தினசரி காலையில் கந்தர் கலி வெண்பா எனும் பாடலையும், மாலையில் சிரவை ஆதீனக் குரு முதல்வர் தவத்திரு ராமானந்த சுவாமிகள் பாடிய சண்முக மாலை எனும் பாடலையும் பாராயணம் செய்ய வேண்டும் என்று ஜீவ நாடி அருள் வாக்கில் விசேஷமாக வந்துள்ளது.

6. சஷ்டி விரதம் இருக்கும் இந்த நாட்களில் அதிக கோபம், அதிக பேச்சு அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் கந்தன் அடியவர்களின் குரு பீடங்களை அதிகம் தரிசனம் செய்ய வேண்டும். முருகன் நாமங்களை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். மந்திர உபதேசம் வாங்கியவர்கள் தனது குரு ஆசியைப் பெற்று இந்த நாட்களில் அதிகமாக ஜபம் செய்ய வேண்டும்.

கொங்கு நாட்டில் இருப்பவர்களுக்கு கவுமார மடத்தில் உள்ள முதல் மூன்று ஆதினங்களின் ஜீவ சமாதிக் கோவில்கள் வழிபாடு மிகவும் சிறப்பு. சென்னையில் இருப்பவர்களுக்கு திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதி பீடமும், திருபோரூர் சிதம்பர சுவாமிகள் திருச்சமாதி பீடமும் சிறப்பானவை. திண்டுக்கல் மாவட்டக்காரர்கள் பழநியில் உள்ள பட்டணம் சுவாமிகள்
பீடத்தில் வழிபடலாம். வேலூர் பகுதிக்காரர்களுக்கு வள்ளிமலையில் உள்ள வள்ளிமலை சுவாமிகள் சமாதி பீடம் சிறப்பு வாய்ந்ததாகும். இவை அனைத்துமே ஜீவ நாடியின் வாக்கு ஆகும்.

7. 100 ஆண்டுகளுக்கும் மேல் முருகனது மதமான கவுமாரத்தை கடைபிடிக்கும் குருபீடம் கோவை கவுமார மடமான சிரவை ஆதினம் மிகவும் சிறப்பானதாகும். நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களுக்கு இந்த கவுமார மடத்துடன் முன் ஜென்ம தொடர்பு உள்ளதாக திருவண்ணாமலை மீனாட்சி நாடி உரைத்திருப்பதால் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களுக்கு தற்போதுள்ள சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் மீதும், கவுமார மடத்தின் மீதும் அளவு கடந்த ஈடுபாடும், பற்றும், பக்தியும், அளவிலாத அன்பும் ஏற்பட்டுள்ளது.


படம்: திருவண்ணாமலை மீனாட்சி நாடி தவத்திரு. ஜோதி அக்பர் சுவாமிகள் அவர்கள் 

8.  நோய் வாய்ப்பட்டவர்களும், வயதானவர்களும், குழந்தைகளும் கடுமையான விரதம் இருக்கத்தேவையில்லை. பெண்கள் கணவணின் அனுமதியோடு விரதம் இருக்கலாம்.

9. இதில் எதுவுமே கடை பிடிக்க முடியாதவர்கள் முருகனின் புராணங்களியாவது படிக்கலாம் அல்லது முருகன் ஆலய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

10. வாழ் நாள் முழுதும் கொல்லாத, புலால் உண்ணாத விரதம் இருந்து வாழ்வில் ஒருமுறையேனும் கோவை கௌமார மடத்தையும் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகளை நேரில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களுடைய சீரிய உபதேசம் ஆகும்.

இந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் இந்த மண்ணில் கண்ட மனிதப் பிறவிக்கு ஒரு நற்செயல் செய்த புண்ணியம் கிடைக்கும்.  நமது கர்ம வினைகள் கரையும். கந்தன் திருவருள் கிட்டும்.

வாழ்க்கையில் பல அதிசய மாற்றங்கள் 100% ஏற்படும். குரு அருள் இல்லையேல் குமரன் அருள் இல்லை, குமரன் அருள் இல்லையேல் குரு அருள் இல்லை என்பது ஜீவ நாடி வாக்கு.

                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                              சிரவை ஆதினத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!